Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே…

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே… 1 , 2 , 3

“என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே…”

 

இந்த வார்த்தையை சொல்ல வேண்டும் என்று எண்ண வைக்கும் ஒரு உறவு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருக்கும்.

 



Advertisement

அப்படித்தான் ஆரம்பிக்கிறது நம் அர்ஜுனின் கதையும். அவன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒருவரிடம் சொல்ல நினைக்கும் வார்த்தை அதுதான்…

 

மனிதர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. நம் அருகில் இருக்கும் ஒருவரின் மதிப்பை நாம் உடனே உணர்வதில்லை. அவர்கள் நம்மை விட்டு விலகும் போது தான் அவர்களின் அருமை புரிகிறது…

Advertisement

 

Advertisement

அந்த உண்மையை புரிந்து கொள்ள நாம் எடுக்கும் நேரமே நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கிறது.

 

அந்த உண்மையை புரிந்து கொள்ள அர்ஜுன் எடுத்துக்கொண்ட நேரமும், அதனால் நடந்த மாற்றங்களுமே இந்தக் கதை…

Advertisement

 

என்னால் முடிந்த அளவு தினமும் ஒரு பாகத்தை பதிவு செய்வேன் நண்பர்களே…

 

சரி… கதைக்குள் போவோமா?

 

கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள்:

 

காளிதாஸ்

லட்சுமி இளவேந்தன்

அர்ஜுன்

தனியா

 

முருகன்

பிரியா

 

விட்டுச் செல்லாதே – 1

பச்சை புல்வெளியின் நடுவே வெள்ளை நிறத்தில் பிரமாண்டமாக நின்றிருந்த இரண்டு அடுக்கு மாளிகை அமைதியும் செழுமையும் கலந்த தோற்றத்தை கொடுத்தது. சிவப்பு கற்சில்லால் செய்யப்பட்ட கூரை, வளைந்த ஜன்னல்கள், மற்றும் மேல்தளத்தை சுற்றி இருந்த அழகான பால்கனி அந்த வீட்டுக்கு ராஜகீய அழகை கொடுத்தது.

 

முன்புறம் பரந்த தோட்டம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை — அந்த வீடு செல்வமும் சுகமும் நிறைந்த மாளிகை.

 

ஆனால் அந்த வீட்டின் உள்ளே வாழும் பிரியாவுக்கு அது அமைதியும் தனிமையும் நிரம்பி வழியும் ஒரு சிறை போல இருந்தது. இருப்பினும் அந்த சிறையை விட்டு வெளியே செல்ல அவளுக்கு மனம் இல்லை. காரணம் அர்ஜுன் மீது அவள் கொண்ட அதீத காதல்.

 

நேரம் பதினொன்று. அவன் வருகைக்காக என்றும் போல் காத்திருக்கிறாள் அவள். மாளிகையில் அர்ஜுன் வரும் வரை விளக்குகள் அணைக்கப்படுவதில்லை. மாளிகை பெரியதாக இருந்தாலும், அந்த வீட்டில் அர்ஜுன் மற்றும் பிரியா மட்டும் தான் இருக்கிறார்கள்.

 

தன் வேலைகளை முடித்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தவள் கண்களுக்கு சுவரில் தொங்கியிருந்த அவர்களின் திருமணப் புகைப்படம் என்றும் இல்லாமல்  இன்று ஏதோ சொல்ல வருவதுபோல் விளக்கின் வெளிச்சத்தில் மின்னியது. இன்னும் எத்தனை வருடம் இப்படி காத்திருக்க போகிறாய் என்று கேட்பது போல் உணர்ந்தாள்.

 

பிரமாண்டமாக நடந்த திருமணம் தான் ஆனால் நினைத்து புன்னகைக்கும் வகையில் எதுவும் நடக்கவில்லை. அர்ஜுன் முகத்தில் துளி அளவுகூட சந்தோஷம் இல்லை. பல ஆசைகளுடன் அவன் கரம் பிடிக்க நினைத்தாள் அவள்.

 

ஆனால் அந்நியர் போல தள்ளி நின்ற அர்ஜுனை பார்த்த அந்த நொடியே…

தன் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அவள் மனம் உணர்ந்துவிட்டது.

 

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்ற பழமொழியை மனதில் பதியவைத்துக் கொண்டு தான் தனது திருமண வாழ்க்கையை தொடங்கினாள் பிரியா.

 

தன் நம்பிக்கை வீணாகவில்லை என்பதுபோல், அவனிடம் காணப்பட்ட சில சிறு மாற்றங்களே அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தன. அவன் அவளுக்காக காட்டிய அந்தச் சிறு அக்கறை கூட…மெல்லிய புன்னகை அவள் உதட்டின் ஓரம் மலர்ந்தது.

 

வெளியே கேட்ட ஹாரன் சத்தம் அவளை நினைவுகளில் இருந்து நிஜத்திற்கு கொண்டுவந்தது.

நுழைவாயில் கதவுகள் திறக்கப்பட்டு, கார் மெதுவாக உள்ளே நுழைந்ததும் அதன் என்ஜின் அமைதியடைந்தது.

 

எப்போதும் போல அர்ஜுன் காரிலிருந்து வெளியே வந்தான்.

ஆனால் வழக்கமாக டயர்டாகவே இருக்கும் அவன் முகத்தில் இன்று ஒரு வித்தியாசம் இருந்தது…

சோர்வின் இடத்தில்,  ஒரு அமைதியான சந்தோஷம் மெல்ல தெரிந்தது.

 

அவன் முகத்தில் இருந்த அந்த மாற்றத்தை கவனித்த பிரியா மெதுவாக சிரித்தாள்.

 

“என்ன அர்ஜுன்… ஏதோ ரொம்ப ஹாப்பியா இருக்கிற மாதிரி தெரியுதே?

புது டீல் ஏதாவது ஓகே பண்ணிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே,

அவன் கையில் இருந்த பேக் மற்றும் பைல்களை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

 

“பசிக்குது பிரியா.. சாப்பிட்டு சொல்றேன் சரியா.. நான் பிரஷ் அப் ஆகிவரேன். நீ சாப்பாடு எடுத்து வை. ஃபர்ஸ்ட் சாப்பிடலாம்” என்றான் அர்ஜுன்.

 

“ம்ம்.. சரி அர்ஜுன்…” என்று சிரித்துக்கொண்டே அவளுக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல் சமையல் அறை சென்றால் பிரியா….

 

Tab 2

 

விட்டுச் செல்லாதே – 2

 

சமையல் அறைக்குள் சென்ற பிரியா, அர்ஜுனுக்கு பிடித்த உணவுகளை எடுத்துவைத்து மேசையை அமைத்தாள்.

 

ஏனோ அவன் சிறு புன்னகையை நினைத்தாலே அவள் இதயமும் மெதுவாக புன்னகைத்தது.

 

“ம்ம்… ம்ம்…” என்று அவளுக்கு பிடித்த பாடலை மெதுவாக முணுமுணுத்துக்கொண்டே வேலை செய்தாள்.

 

அர்ஜுனை நன்கு அறிந்தவள் அவள். அவன் அவ்வளவு எளிதில் தன் உணர்வுகளை வெளிக்காட்ட மாட்டான்.

 

அவனே மகிழ்ச்சியடையும் வகையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்றால் அது பெரிய விஷயமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள், தானும் அதில் ஒரு சிறிய இன்பத்தை கண்டாள்.

 

சில நிமிடங்களில் குளித்து வந்த அர்ஜுன், டைனிங் மேசையில் வந்து அமர்ந்தான்.

 

“சாப்பாடு ரெடி அர்ஜுன்…” என்று சொல்லிக்கொண்டே அவன் முன் தட்டில் உணவை பரிமாறினாள் பிரியா.

 

“வா… நீயும் உட்காரு. எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்டியே…” என்று கூறியவன் அவளுக்காகவும் ஒரு தட்டையை எடுத்து வைத்தான்.

 

“ஹம்… சரி…” என்று சொல்லிக்கொண்டே அவளும் அவன் எதிரே அமர்ந்தாள்.

 

இதோ… இதுதான் அவள் சொன்ன அந்த சிறு அக்கறை.

 

ஏனோ, அவனுடன் இருக்க இந்த சின்ன சின்ன வார்த்தைகளே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

 

சுவரில் தொங்கியிருந்த திருமணப் புகைப்படம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது போல ஒரு நொடி அதை கர்வத்துடன் பார்த்தாள்.

 

சில நிமிடங்களில் இருவரும் சாப்பிட்டு முடித்தனர். மீதமிருந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் சென்றாள் பிரியா.

 

“பிரியா… எங்க அந்த பைல்ஸ்?”

 

“இங்க தான் இருக்கு அர்ஜுன். மேல ரூம்க்கு இன்னும் எடுத்துக்கிட்டு போகல… கொண்டு வரேன்… இரு…” என்று கூறியவள் அதை வைத்திருந்த அறைக்குள் சென்றாள்.

 

ஷெல்ஃபில் இருந்த பைல்ஸை எடுத்தவளுக்கு… காத்திருந்தது அவள் வாழ்வை முழுவதும் மாற்றப்போகும் ஒரு செய்தி என்று அவள் அறியவில்லை.

சொல்லி வைத்தது போல… ஒரு பழுப்பு நிற உறை கீழே வழுந்து அவள் காலடியில் விழுந்தது.

 

“என்ன இது…?” என்று எடுத்துப் பார்த்தாள்.

 

அந்த உறையில் இருந்த எழுத்துகள்… அவளை தலை சுற்ற வைத்தது.

அவள் கண்களை ஏமாற்றுகிறதோ என்று அவசரமாக உறையை திறந்து உள்ளிருந்த காகிதத்தை வெளியே எடுத்தாள்.

 

முதல் வரியில் இருந்த அந்த இரண்டு வார்த்தைகள்…

அவள் இதயத்தை ஒரு நொடிக்கு நிறுத்தியது.

 

“விவாகரத்து மனு…”

 

அதற்குக் கீழே இருந்த பெயர்களை பார்த்த அந்த நொடி…

அவள் கைகள் நடுங்கின.

 

அர்ஜுன்…

பிரியா…

 

ஆம்…

அது அவர்கள் இருவரின் பெயர் பதித்த விவாகரத்து பத்திரம்.

 

“இல்ல… இல்ல… இது… எப்படி??” என்று நம்பமுடியாமல் தவித்தாள் பிரியா.

 

அவள் எதிர்பார்த்த செய்தி இது இல்லை…

 

அவன் மகிழ்ச்சியின் காரணம் இதுதானோ என்ற கேள்வி தோன்றிய நொடியே, அவள் கண்கள் மெதுவாக கண்ணீரால் மங்கின.

 

அவள் விரல்கள் அந்த எழுத்துகளை மெதுவாக தடவின… அப்போதே அதை கிழித்து எறியவேண்டும் என்று தோன்றியது.

 

ஆனால் அந்த காகிதத்தை கிழித்தால் என்ன மாறப் போகிறது… அதை கொண்டு வந்தவன் மனதில் அப்படி ஒரு எண்ணம் வந்த பிறகு என்று நினைத்தவளின் இதயம் உடையும் வலியை உணர்ந்தாள்.

 

ஏனோ, அந்த ஒரு காகிதம்…

 

அவள் இதுவரை தன் உயிர்போல் காத்து வந்த திருமணத்தை மட்டும் அல்ல…

அவள் முட்டாள் தனமாக நம்பியிருந்த காதலையும் உடைத்துவிட்டது.

 

“பிரியா…” என்று அர்ஜுன் கூப்பிட, கையில் இருந்த காகிதத்தை மீண்டும் உறையில் வைத்துவிட்டு ஆயிரம் குழப்பங்களுடன் அர்ஜுன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

 

“என்னாச்சி? ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்டுக்கொண்டே கையில் இருந்த பைல்ஸை வாங்கிக்கொண்டான்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்… எப்படி அவனிடம் கேட்பது என்று புரியாமல்… கண்ணீரை மறைத்துக்கொண்டு நின்றவளின் கண்கள் சிவந்திருந்தது.

 

“அது… அது…” என்று தொண்டை வரை வந்த வார்த்தைகள் நாவின் முன் வர மறுத்தது.

 

“ஹே… ஹே… ரிலாக்ஸாக இரு. ஏன் கண்ணு எல்லாம் சிவந்து இருக்கு? தூசி எதுனா விழுந்திடிச்சா?” என்று கேட்டுக்கொண்டே அவளின் கண்களில் தூசியை ஊதி எடுக்க முயன்றான்.

 

ஆனால்…

 

அவன் கையை தவிர்க்கும் விதமாக ஒரு அடி பின் நகர்ந்தாள் பிரியா.

 

அர்ஜுன் அவளின் அந்த செயலை புரியாமல் நின்றான்.

 

நான்கு ஆண்டு திருமண வாழ்க்கையில்…

 

தான் தான் அவளின் உலகம் என்று வாழும் பிரியா, அவனை விட்டு ஒரு அடி பின் நகர்ந்தது அவனுக்கு முற்றிலும் புதிதாக இருந்தது.

 

அந்த ஒரு அடிதான்…

அவன் வாழ்க்கையில் இருந்து அவள் விலக எடுத்த முதல் அடி என்பதை அவர்கள் அப்போது அறியவில்லை.

 

Tab 3

 

விட்டுச் செல்லாதே – 3

 

அவனை விட்டு ஒரு அடி தள்ளி நின்ற பிரியாவை பார்த்தவன், தான் செய்ய இருந்த செயலை உணர்ந்தான்.

 

“ச்ச்… நான் பாட்டுக்கு ஏதோ நினைப்புல..” என்று சொல்லிக்கொண்டே உயர்த்திய கையை கீழே இறக்கி அவளிடம் இருந்து சற்றே விலகி நின்றான்.

 

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, சுப முகூர்த்தத்தில் தன் கழுத்தில் தாலி கட்டிய கணவன் சொல்லும் வார்த்தையை கேட்டவளுக்கு, உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய புன்னகை தான் தோன்றியது.

 

ஆம், நான்கு வருடங்கள் ஆன பின்பும்… இது தான் அவன் வாழ்வில் அவளுக்கான இடம். இத்தனை நாட்கள் அவன் தூரத்தை பொருட்படுத்தாதவளுக்கு, இன்று அந்த தூரம் அவளுக்கு அவளற்ற வலியை கொடுத்தது.

 

எதுவும் பேசாமல் தன்னை பார்த்துக்கொண்டு இருந்த பிரியாவை கவனித்த அர்ஜுன், “என்ன? உடம்பு எதுவும் சரியில்லையா? இவ்வளவு நேரம் நல்லா தான இருந்த…” என்று குழப்பத்துடன் கேட்டான்.

 

அவன் குரல் நிதானமாக இருந்தாலும், அவன் மனதில் சொல்லமுடியாத ஒரு விதமான உணர்வு எழுந்தது.

 

அதன் காரணத்தை உணர்ந்தவன் மெதுவாக தனது கையில் இருந்த பைல்ஸை ஒரு முறை பார்த்தான்.

 

அது அவனிடம் இருந்து பிரியா வாங்கியபோது எப்படி இருந்ததோ, அப்படியே இருந்ததை கண்டவன்…

தன்னை அறியாமலே பிடித்து வைத்திருந்த மூச்சை மெதுவாக விட்டான்.

 

“ஒண்ணும் இல்ல…” என்று சொல்ல துணிந்தவளின் வார்த்தைகள்,

இறுதியில் மௌனமாகவே பதிலளித்தது.

 

காரணம்… அவன் கேள்வியில் இருந்த அந்த அக்கறை. அது அவளின் உடைந்த இதயத்தை மேலும் பிசைந்தது.

 

எதை நினைத்து இத்தனை நாட்கள் அந்த வீட்டில் தெரிந்தே தன்னை சிறைவைத்தாளோ…

அது பொய்யாகி விட்டது என்று அவள் உணர்ந்த தருணம் அது.

 

“பிரியா… என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா? கேட்டுட்டே இருக்கேன்… அப்படியே நின்னா என்ன அர்த்தம்?” என்று மீண்டும் கேட்டான் அர்ஜுன்.

 

பிரச்சனை… அந்த வார்த்தை அவள் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. ஆம், பிரச்சனை தான்.

 

ஆனால் அந்த பிரச்சனைக்கு காரணமானவனிடம் அதை வாய்விட்டு கேட்கும் மனவலிமை இப்போது அவளிடம் இல்லை.

 

கேட்டாலும்… அவன் சொல்லப் போகும் பதிலை ஏற்றுக்கொள்ளும் துணிவும் இல்லை இப்போது.

 

இதயத்தின் வலியை பொறுத்துக்கொண்டு மௌனத்தை உடைத்தாள் பிரியா.

 

“ஏதோ ஹாப்பி நியூஸ்னு சொன்னியே… என்ன அது?” என்று தன்னால் முடிந்த அளவு குரலை மென்மையாக வைத்துக்கொண்டு கேட்டாள்.

 

அதுவரை கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தவன், இப்போது பதில் சொல்ல சில நொடிகள் யோசித்தான்.

 

வீடு வரையிலும் கொண்டு வந்த செய்தியை அவளிடம் சொல்ல அவன் ஏன் தயங்குகிறான் என்று பிரியா எண்ணினாள்.

 

சில நொடிகள் அவன் முகத்தை பார்த்தவள், தன் மனதில் எழுந்த கேள்வியை அடக்க முடியாமல்,

“ஏன் அர்ஜுன்… நான் அதை தெரிஞ்சிக்க கூடாதா?” என்று மெதுவாக கேட்டாள்.

 

“ஹே… அப்படி இல்ல. சொல்ற அளவுக்கு அது ஒன்னும் அவ்ளோ முக்கியமான விஷயம் இல்ல…” என்று தொடங்கியவன் மீண்டும் ஒரு நொடி நின்றான்.

 

“அது மட்டும் இல்லாம… நான் ஒன்னும் ஹப்பியாலாம் இல்ல. ஜஸ்ட் ஒரு பழைய ஃப்ரெண்டா பார்த்தேன்… அவ்ளோ தான். நீயே எதையாவது யோசிச்சிட்டு இருக்காத,” என்று சொல்லி முடித்தான்.

 

“ஃப்ரெண்டா??” என்று அவளின் குரலில் சந்தேகம் தெளிவாக இருந்தது.

 

“ஆமா, ஆமா… ஃப்ரெண்டு தான். அதுவும் உனக்கும் நல்லா தெரிஞ்சவங்க தான்.

ஆமா… என்ன இன்னைக்கு மேடம் ஒரே கேள்வியா கேக்குறீங்க?

அப்புறம், உனக்கு என்ன ஆச்சுன்னு நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லல…” என்று அவளை கிண்டல் செய்வது போல, உதட்டில் ஒரு சிறிய புன்னகையுடன் கேட்டான் அர்ஜுன்.

 

அந்த புன்னகையை பார்த்த நொடி அவள் தன்னையே மறந்தாள்.

ஆம்… அத்துணை அழகு அவன்.

 

ஆண்மகனுக்கு தேவையான அத்தனை அழகையும் கடவுள் அவனுக்கு அள்ளி கொடுத்துவிட்டானோ என்று கேள்விக் கேட்கும் அளவிற்கு  அழகு அவன்.

 

ஆனால் அந்த புன்னகையின் பின்னால் மறைந்திருந்த உண்மையை நினைத்தவளின் மனம் மீண்டும் கனத்தது.

 

“யார் அது?” என்று மீண்டும் கேட்டாள் பிரியா.

 

அவள் முகம் வாடி இருப்பதின் காரணம் அறியாதவன், மேலும் அவளை சிரமப்படுத்த விரும்பாமல்,

“நேரம் வரும் போது சொல்றேன். இப்போ போய் தூங்கலாமா… எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… நாளைக்கு ஆபீஸ்ல வேற ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு,” என்று சொல்லி சமாளித்தான்.

 

இவன் போடும் புதிர்களை புரியாதவள், மேலும் அவனிடம் எதையும் கேட்டு பதில் பெற முடியாது என்று உணர்ந்தாள்.

 

ஆம்… அதுவே அவன் குணம்.

எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளிப்படையாக சொல்லாதவன்.

 

ஆயிரம் குழப்பங்களுடன் தன்னை பார்த்துக்கொண்டு இருந்தவளிடம்,

“சரி பிரியா… நீ போய் தூங்கு. எனக்கு ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு.

அப்புறம், உனக்கு பீவர் போல இருக்கு. மாத்திரை ஒண்ணு போட்டு தூங்கு. இல்லன்னா மார்னிங் ஆபீஸ் போகும் போது ஹாஸ்பிடல் போயிட்டு போகலாம்,” என்றான் அர்ஜுன்.

 

அவன் கொண்டு வந்த விவாகரத்து பத்திரத்துக்கும், அவன் எப்போதும் காட்டும் இந்த அக்கறைக்கும் இடையில் எது உண்மை என்று புரியாமல்,

“ஹம்…” என்று மட்டும் பதில் அளித்தாள் அவள்.

2 thoughts on “என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே… 1 , 2 , 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!