Skip to content
Post Views: 1,876
அத்தியாயம் 19.1
பூம்பாவை, ஹிருதய் ஹாசினி ஏதாவது விருப்பப்பட்டால் கூட, உடனே நடத்தி கொடுப்பார் என்று கூற முடியாது. ஆனால் ப்ரதமேஷ் ஆசைப்பட்டால் அதை நடத்தி கொடுக்கும் வரை வேறு யோசிக்க மாட்டார்.
Advertisement
சுசீலா பற்றி உடனே பேச எண்ணி மாலதிக்கு அழைத்து பேசினார்.
“எங்க ப்ரதம்க்கு பொண்ணு பார்த்திட்டு இருக்கோம் இல்ல எம் ஸ்கொயர்”
Advertisement
Advertisement
“ஆமா பி ஸ்கொயர், உங்க மாமியார் கூட சொன்னாங்க, ஹிருதய்க்கு மாதிரி பட்டிக்காட்டு சம்பந்தமா இல்லாம சிட்டி பக்கமா பார்க்கிறதா சொன்னாங்க”
“அவங்களை விடு எம் ஸ்கொயர், நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல, எனக்கு ஹிருதய் வேற ப்ரதம் வேற இல்ல..”
Advertisement
“சரி, நேரா விஷயத்துக்கு வா..”
“அது வந்து, நாம உங்க அம்மா வீட்டுக்கு விருந்துக்கு போனப்ப ஒரு பொண்ணை பார்த்தேன். அதான் அந்த பொண்ணு சரியா வருமான்னு உங்கட்ட கேட்க போன் போட்டேன்”
“எங்க அம்மா வீட்லயா? யாரு? அண்ணன் பிள்ளைங்க எல்லாம் சின்ன பிள்ளைங்களாச்சே?”
“ஒரு பொண்ணு, சிவப்பா, அழகா இருந்துச்சு.. நம்ம முத்து கூட படிச்ச பொண்ணுன்னு நினைக்கிறேன்”
“ஓ, அதுவா.. எங்க சின்ன அண்ணியோட அக்கா பொண்ணு.. சுசீலா.. இங்க தஞ்சாவூர்ல தான் இருக்காங்க”
“நீ அவங்களுக்கு இப்ப கல்யாணம் செய்ற ஐடியா இருக்கா அப்படின்னு கேட்டு பார்க்கிறியா?”
“சரி.. நான் அண்ணிகிட்ட பேசிட்டு சொல்றேன்”
உடனே மாலதி அவரது அண்ணியிடம் பேசினார். அவரும் தன் அக்காவிடம் பேசி விட்டு,
“சுசியும் இப்ப தான் எம் ஏ முடிச்சிருக்கா.. நல்ல இடம்ன்னு நீ சொன்னா, பார்க்கலாம்னு அக்கா சொல்றாங்க” என்றார் மாலதியிடம்.
“சரி அண்ணி, நீங்க பொண்ணு போட்டோ ஜாதகம் எல்லாத்தையும் அனுப்பி வைங்க.. நானும் மாப்பிள்ளை வீட்ல பேசி மாப்பிள்ளை விவரம் எல்லாம் அனுப்பி வைக்கிறேன்” என்றார் மாலதி பதிலுக்கு.
பாவையிடம் விஷயத்தை கூறவும், “சரி, நான் பேசிட்டு சொல்றேன்” என்றார் மகிழ்ச்சியாக.
ப்ரதமேஷும் பாவையும் தீவிரமாக யோசித்து கொண்டிருந்தார்கள். எப்படி இந்த விஷயத்தை நகர்த்துவது என்று.
“இங்க பாரு டா, இரண்டு பிரச்சனை.. ஒன்னு பொண்ணு இந்த ஊர் பக்கம். இரண்டு நான் பேசுனா உங்க பாட்டி ஒத்துப்பாங்களா சொல்ல முடியாது”
“அதான் அத்தை, பொண்ணு வீட்ல இருந்தே நேரடியா பாட்டியை காண்டாக்ட் பண்ணா?”
“அவங்க எப்படி பண்ணுவாங்க? அவங்க இப்ப மாப்பிள்ளை பார்க்கவே இல்லையே? நீயும் கேட்டுட்டு தானே இருந்த?”
“அதுக்கு தான் அத்தை ஒரு நம்பகமான ஆள் வேணும்”
“பேசாம பாட்டிகிட்ட உங்க மாமாவை பேச சொல்லுவோமா?”
“அவர் சொதப்பிடுவாரு அத்தை..”
“அதுவும் சரி தான், நம்ம ஹிருதய்ய பேச சொல்லுவோமா?”
“மாமாவாவது சொல்லி சொதப்புவாரு, இவன் சொல்லாமலே சொதப்புவான்”
“அப்ப முத்துவை கேட்டு பார்ப்போமா? இப்ப முத்துவை உங்க பாட்டிக்கும் பிடிச்சு இருக்கு இல்ல?”
அவன் பதில் சொல்லாமல் யோசனையாக பார்க்கவும்,
“ஏன் டா யோசிக்கிற?”
“நமக்கும் வேற ஆளு இல்ல.. நீயே முத்து கிட்ட கேட்டு பாரு அத்தை ப்ளீஸ்..”
சரி என்று ஒத்து கொண்டு பாவை முத்துவிடம் வந்தார்.
“தங்கம் என்னடா பண்ற?”
“பார் எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருக்கேன் அத்தை.. சொல்லுங்க?” என்று கையில் இருந்த புத்தத்தை கீழே வைத்து விட்டு பாவையை பார்த்தாள்.
வீட்டில் இவர்கள் முவரும் தான் இருந்தனர். ஸ்ரீகாந்த்தை தன் கடைக்கு அழைத்து சென்றிருந்தான் ஹிருதய். அவர்களுடன் ஹாசினி ரம்யாவுடன் விளையாடுவதற்காக சென்று விட்டாள்.
“அது வந்து.. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் தங்கம்”
“ஹெல்ப் உங்களுக்கா, இல்ல உங்க பிரியமான பிள்ளைக்கா?”
“எப்படி தங்கம் கண்டு பிடிச்ச? டேய் ப்ரத்தம், நீயும் வாடா.. தங்கம் கண்டுபிடுச்சிடுச்சு” என்று மருமகளிடம் ஆரம்பித்து, கதவிற்கு பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருந்த ப்ரதமிடம் முடித்திட்டார்.
“இந்த நல்லவங்க குடும்பத்த வச்சிக்கிட்டு என்ன செய்றதோ? இவங்க எல்லாம் நிஜமாலுமே அப்பாவியா, இல்ல நம்மளை பாவிகளா மாத்துறாங்களா?” என்று புலம்பி கொண்டே வந்தான் ப்ரதம்.
“என்ன ப்ரோ, சுசீ வீட்ல கல்யாணத்தை பத்தி பேசணுமா?” என்றாள் முத்து ப்ரதமேஷிடம்.
“ஏன் ப்ரோ, நான் ட்ரெயின்ல கேட்டப்ப பிடி கொடுக்காமலே வந்தீங்க..”
“ஒரு பொண்ணை பத்தி சும்மா கேட்டா, யாரா இருந்தாலும் டீடெயில்ஸ் சொல்லமுடியாது இல்ல?”
“ப்ரோ.. ஆனா நான் தப்பான எண்ணத்துல கேட்கலை” என்றான் வாடிய முகத்தோடு.
“நான் எப்ப உங்களை தப்பானவன்னு சொன்னேன்?”
பாவை இடை புகுந்து, மாலதியிடம் பேசியதை கூறினார்.
“நல்லதா போச்சு, ஜாதகத்தை அனுப்ப வேண்டியது தானே?”
“அதுக்கு தான் உன் ஹெல்ப் தங்கம்.. நீ பாட்டிகிட்ட பேசி எப்படியாவது ஒத்துக்க வைக்கணும். நான் சொன்னா வீம்புக்கு கேட்கவே மாட்டாங்க தங்கம்”
“ஹ்ம்ம் ..இவ்வளுவு தானே, நான் பார்த்துகிறேன்.. நீங்க போங்க” என்று கூறி விட்டு மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டாள்.
இவர்கள் இருவரும் அங்கேயே தயங்கி நிற்கவும்,
“இந்த முத்துவை நம்பினார் கை விட படார்.. கிளம்புங்க.. இனி நான் பார்த்துகிறேன்” என்றாள் இருவரையும் பார்த்து.
————
மறு நாள் ரம்யாவின் பிறந்த நாள். இவர்கள் அனைவரையும் அழைத்திருந்தார்கள் சௌந்தரும் மாலதியும்.
முத்து மதியமே அங்கே சென்று விட்டாள் அம்மாவிற்கு உதவுவதற்காக.
ஹாசினியும் முத்துவுடன் இணைந்து கொண்டாள்.
“அக்கா.. அக்கா..” என்று ரம்யா முத்துவின் பின்னே சுற்றிக்கொண்டிருந்தாள்.
அம்மாவிற்கு உதவுகிறேன் என்று வந்தவள், ஹாசினி, ரம்யாவையும் உடன் வைத்து கொண்டாள். மூவரும் நன்றாக அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள்.
“அப்புறம் ரம்யா, அந்த சுசீலா இங்கதான் இருக்காளா? நீ அவளை பார்த்தியா?”
“பார்த்தேன் க்கா.. போன வாரம் கோவிலுக்கு வந்திருந்தாங்க.. உன்னைக்கூட கேட்டதா சொல்ல சொன்னாங்க..”
“அப்புறம் நீ ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல?”
“மறந்துட்டேன்.. அவங்களை தான் உனக்கு பிடிக்காது இல்ல..”
“அதான் நான் சமாதானம் ஆகிட்டேன்ல..”
“சரி, அவ போன் நம்பர் ஏதாவது இருக்கா?”
“இல்லையே? ஆனா அவங்க தம்பி நம்ம ப்ரேம் கூட தான் படிச்சான். ப்ரேம் கிட்ட கேட்டா தெரியும்..”
“அது சுத்தி வளைக்கிற வேலை.. வேற என்ன செய்யலாம்?” என்று முத்து யோசித்தாள்.
விழா முடிந்ததும் ஸ்ரீகாந்த்தும் ப்ரதமேஷும் இங்கே இருந்தே சென்னை புறப்படுகிறார்கள்.
விழாவிற்கு கந்தசாமி நித்யகல்யாணியும் வந்திருந்தார்கள்.
“என்ன முத்து, ஊருக்கு வந்தும் இந்த அப்பத்தாவை வந்து பார்க்கல நீ?”
“உங்களுக்கு என்னை பார்க்கணும்னா எங்க வீட்டுக்கு வந்திருக்கணும்.. எங்க அய்யான்னா ரயில்வே ஸ்டேஷன்கே வந்து கூப்பிட்டு போனாரா இல்லயா?”
“உக்கும்.. ரொம்பத்தான்..”
பேச்சும் சிரிப்புமாக விழா நன்றாக நடந்தது.
ப்ரதமேஷை தனியாக அழைத்து,”ப்ரோ உங்களுக்கு லவ் மேரேஜ் வேணுமா அரேஞ்ட் மேரேஜ் வேணுமா?” என்றாள் சீரியஸ்சாக.
“மேரேஜ் ஆனா போதும் ப்ரோ.. லவ் பண்ணி அப்புறம் மேரேஜ்னா லேட் ஆகும்ல.. பேசாம முதல்ல கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிடுங்க, நான் அப்புறமா லவ் பண்ணிக்கிறேன்…ஆனா பொண்ணு மட்டும் சுசீலா தான்”
“அட பாவி!”
“உங்களை தான் நம்பி இருக்கேன் ப்ரோ”
“சரிதான்.. தைரியமா கிளம்புங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்று அவனுக்கு தைரியம் அளித்து விடை குடுத்தாள்.
பாவையிடம் மாலதி, “ஜாதகம் கொண்டு வந்தியா?” என்று கேட்டார்.
“அது ஒரு சின்ன சிக்கல். அதான் முத்து கிட்ட சொல்லி இருக்கேன்”
“ஏன்டி.. அவளை எதுக்கு உள்ளாரா இழுத்து விட்ட.. ஆட்டத்தையே கிளைச்சாலும் கிளைச்சிடுவா… இதுல எங்க மாமாவையும் கூட்டு சேர்த்துட்டா அம்புட்டுதேன்”
“சும்மா சொல்லாத மாலு, தங்கம் அப்படி எல்லாம் இல்ல”
“அந்த தங்கத்தை பெத்தவளே நான் தான்டி.. உனக்கு பட்டாதான் தெரியும்.. என்னமோ செய்”
மாலதி தேவை இல்லாமல் அதிகமாக பயப்படுபவதாகவே தோன்றியது பூம்பாவைக்கு, மறு நாள் ஸ்ரீகாந்த் பதற்றமாக போன் செய்யும் வரை.
“ஹனி, இங்க அம்மாவுக்கும் மிருதுளாக்கும் ஒரே சண்டையாம். இப்பதான் அத்தான் போன் பண்ணாங்க. நான் ஆபிஸ்ல இருந்து அங்க தான் போய்ட்டு இருக்கேன்”
“என்னங்க சொல்றீங்க? அவங்க ரெண்டு பேரும் அப்படி சண்டை எல்லாம் போட்டுக்க மாட்டாங்களே?”
“நானும் அதை தான் சொன்னேன்.. எதுக்கு அத்தான் சண்டைன்னு கேட்டேன்.. “
“எதுக்காம்?”
“நேத்து நம்ம முத்து மிருதுளாகிட்ட பேசி இருக்கு. அதுக்கு அப்புறமாவே மிருதுளா யோசனையாவே இருந்திருக்கா..”
“முத்துவா?”
“என்ன பேசுச்சுன்னு தெரியலை.. இவர் கடையில இருந்து வீட்டுக்கு போய் பார்த்தப்ப, வீடு பூரா சாமான் இறைஞ்சு கிடந்திருக்கு, அம்மா ஒரு பக்கம் அழுதிட்டு இருக்காங்களாம். மிருதுளா ஒரு பக்கம் அழுதிட்டு இருக்காளாம். என்னன்னு கேட்டா ரெண்டு பேரும் வாயே திறக்க மாட்டேங்கறாங்களாம்”
“அச்சோ.. ப்ரதம் எங்கே? “
“அவனும் இப்ப தான் ஆபிஸில் இருந்து வந்துட்டு இருக்கான்.. நீ முத்து கிட்ட என்ன பேசுச்சுன்னு கேட்டுட்டு எனக்கு போன் பண்ணு “
பாவையும் அவசரமாக முத்துவிடம் சென்று, “மிருதுளா கிட்ட என்னம்மா பேசுன?” என்று கேட்கவும்,
ரஜினி ஸ்டைலில் கூலிங் கிளாஸை எடுத்து போட்டுக்கொண்டே, “உண்மையை சொன்னேன்” என்று கூறினாள்.
அவள் கூறியது அவ்வளவு அழகாக இருந்தது. ஹிருதய் ஆசையாக மனைவியின் ஸ்டைல்லை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.
“என்னது? உண்மையை சொன்னியா?” என்று பாவை முழித்து நிற்கையிலே, வெளியே கந்தசாமியின் புல்லட் சத்தம் கேட்டது.
“நானும் அய்யாவும் வெளிய கிளம்பறோம் அத்தை.. வந்து பேசிக்கலாம் வரட்டா” என்று அவருக்கு ஒரு சல்யூட்டை வைத்து விட்டு ஓடி சென்று கந்தசாமியுடன் பறந்து விட்டாள்.
செல்லும் அவளையே சைட் அடித்து விட்டு, நிதானமாக திரும்பி,
“என்னம்மா ஆச்சு?” என்றான்.
“போடா.. என்னாச்சுன்னு இப்ப கேளு.. உன் பொண்ண்டாட்டிகிட்ட கேட்க வேண்டியது தானே?”
“அவ தான் போயிட்டாளே? என்ன விஷயம் ம்மா?”
பாவையும் நடந்ததை கூறவும்,
“நல்ல ஆளை பார்த்தீங்க நீங்களும் ப்ரதமும்” என்றான் நக்கலாக.
‘என்ன ஏழரையை கூட்டி வைத்திருக்கிறாளோ?’ பக்கென்று இருந்தது அவனுக்கு.
————
error: Content is protected !!