Skip to content
Post Views: 4,349
அன்பு – 24
“டேய் கவினு!!! இத்தனை நடந்திருக்கு!! என்கிட்ட ஒருநாளாச்சும் இதைப்பத்தி மூச்சுவிட்டியா நீ?? பிரபாக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டா ஒன்னுமில்லை ஒன்னுமில்லைன்னு சொல்லியே என்னை ஏமாத்திட்டல நீ?? போ!! என் கூட பேசாத!!!” என பிரபா – கவி காதல் கதையைக் கவின் மூலம் கேட்டறிந்து கொண்ட மது, இதை ஏன் என்னிடம் முன்னமே சொல்லவில்லை என கோபம் கொண்டாள்!!!
“ப்ச்!! மது!!! அது அவனோட பெர்சனல்.. அவனே சொல்லாம இருக்கப்போ நான் சொல்றது எப்படி நியாயமாகும்?? கொஞ்சமாச்சும் யோசிச்சு பேசு.. அண்ட் எனக்கே முழுசாத் தெரியலை.. அந்தப்பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு ஒரு போட்டோ தான் டிடெக்டிவ் மூலமா கிடைச்சுது.. நான் அப்போக்கூட வாடா போய் என்னன்னு கேட்டுட்டு வருவோம், உனக்கு இவ்வளவு அநியாயம் நடந்திருக்கு.. அவ மட்டும் சந்தோஷமா கல்யாணம் பண்ணிட்டு குழந்தை பெத்துப்பாளான்னு கேட்டேன்.. அவன் தான் பெரிய தியாகி மாதிரி, என் கவி எங்க இருந்தாலும் நல்லா இருந்தா போதும்னு சொல்லிட்டு இருந்துட்டான்…”
“அவன் பேச்சை அன்னைக்கு நான் கேட்டிருக்கக் கூடாது போல மது!!! அந்தப் பொண்ணைப் பிரிஞ்சு இவனும் இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு, அந்தப்பொண்ணும் அங்க சந்தோஷமா வாழ்ந்த மாதிரி தெரியலை.. ரெண்டு பேரையும் முன்னாடியே சேர்த்து வச்சிருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்..” என கவியை நேரில் கண்டதில் இருந்தே கவினுக்கு தோன்றிக் கொண்டே இருந்த விஷயத்தை மதுவிடம் பகிர்ந்தான்.
Advertisement
அதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்த மது,
“விடு கவினு!! நான் எதுக்கு இருக்கேன்.. நான் அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்.. எந்தக் கொம்பன் வந்து பிரிக்கிறான் இப்போன்னு பார்க்கலாம்!!” என இலகுவாகப் பேசி, கவினின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்தாள் மது.
“சரிங்க மேடம்!! அதெல்லாம் அப்பறம் தான்.. ஃபர்ஸ்ட் நம்ம பேபியை ஒழுங்கா பாருங்க.. டாக்டர் பிரஷர் பார்டர் பாயிண்ட்ல இருக்குன்னு சத்தம் போடுறாங்க.. ஒழுங்கா மைண்டை ரிலாக்ஸா வச்சு ஃப்ரீயா விடுங்க.. நான் இருக்கேன்.. எதுனாலும் பார்த்துக்கலாம்” என அவளைத் தோளோடு அணைத்தபடி கவின் கூற,
Advertisement
வாகாய் அவன் தோளில் சாய்ந்து கொண்ட மதுவும், “அதான் நீ வந்துட்ட தானா?? நான் ஃப்ரீ ஆகிடுவேன்.. ஆனா இனிமேல் உன் பிரஷர் கூடாம பார்த்துக்கோ..” என்று கேலிச்சிரிப்புடன் சொன்னவள், பல நாட்கள் கழித்து கிடைத்த தன் மன்னவனின் அண்மையில் நிம்மதியாக கண் மூடினாள்.
Advertisement
அவளின் நெற்றியில் ஆதுரமாக முத்தம் வைத்த கவினும், அவளைத் தன்னோடு இன்னும் நெருக்கிக்கொள்ள, இருவரின் மனமும், இணையின் ஸ்பரிசத்தில் இதமாய் இளைப்பாறியது!!
***
இங்கே கவியின் வாய்மொழியாக அனைத்தையும் கேட்டு அறிந்துகொண்ட பிரபஞ்சனிற்கு பித்துபிடித்த நிலை!!!
Advertisement
கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க, தன்னுடைய தேவதைப் பெண்ணிற்கு இத்தனை கொடுமைகளா என நினைத்துப் பார்க்கையிலே அவனின் நெஞ்சம் வெடிப்பதைப் போல் இருந்தது.
அவளின் கண்ணீருக்கு காரணமான அனைவரையும் அடித்துத் தீர்த்துவிடும் ஆத்திரம் பொங்க, அதற்கும் வாய்ப்பில்லாமல் போனதில் தன் கோபத்தை எல்லாம் கார் ஸ்டியரிங்கில் ஓங்கிக் குத்தி அவன் வெளிப்படுத்த,
அந்த திடீர் சப்தத்தில் குழந்தையை மார்போடு சேர்த்து அழுத்திய கவி,
“பிரபா!! என்ன பண்ற??” என்று சப்தம் போட்டாள்.
அப்போது தான் குழந்தையை கவனித்து தன்னைத்தானே திட்டிக்கொண்டவன்,
“சாரி.. சாரி கவி!! டூ மினிட்ஸ்!! வந்துடுறேன்!!!” என வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கதவைத் திறந்து இறங்கியவன்,
வெளியே வந்து நின்று, தன் தலையை இரு கைகளாலும் பற்றிக்கொண்டவன்,
“ஆஆஆ!!!!” என மனதின் பாரம் தாங்காமல் தொண்டை கிழிய கத்த,
அப்போதும் ஜெயசிம்மன் என்பவன் மீதிருந்த கோபம் துளியும் குறையாமல் போனதில்,
அங்கும் இங்கும் கோபத்தில் நிதானம் இல்லாமல் நடைபழகிக் கொண்டிருந்தான்.
என்ன செய்தும், அவன் கவிக்கு நடந்த அநீதியை அவனால் ஜீரணிக்க முடியாமல் போக,
“அவ அங்க அவ்வளவு கஷ்டப்பட்டப்போ, எதுவுமே தெரிஞ்சுக்காம நீ அவளை கஷ்டப்பட விட்டுட்டியே டா பிரபா!!! அவளுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சிருந்தாலும், அவ சந்தோஷமா இருக்காளா இல்லையான்னு நீ ஒரு தடவை போய் பார்த்திருக்கணும்!!!” என இறுதியில் அவன் மீதே குற்றம் சுமத்திக்கொண்டவன்,
“உன்னால தான்!!! உன்னோட கோழைத்தனத்துனால தான் கவியை இழந்து, அவளை இவ்வளவு கஷ்டப்பட விட்டிருக்க!!!” என அவன் மனசாட்சி அவனை கூண்டில் நிறுத்தி குற்றம் சுமத்த,
“ஆமா!! என்னால தான்!! என்னால தான்!!” என வெறி வந்தவன் போல, தன்னைத்தானே அடித்துக்கொள்ள ஆரம்பித்தவனைக் கண்டு பதறிய கவி,
அம்முவை சரியாக பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு பிரபஞ்சனிடம் சென்று,
“ப்ச்!! பிரபா!! என்ன பண்ற?? நிறுத்து!!!” என அவன் கைகளைப் பிடித்து தடுத்திருந்தாள்.
இவர்கள் சாலையோரம் நின்றதால், பெரிதாய் இவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்றாலும், சிலர் இவன் செய்த செயலைக்கண்டு வித்தியாசமாக அவனைப் பார்த்துவிட்டே கடந்திருந்தனர்.
அதைக் கண்டுகொண்ட கவி, மேலும் யார் கண்களுக்கும் காட்சிப்பொருளாக விரும்பாமல்,
“உள்ள வா ஃபர்ஸ்ட்!!!” என அவன் மீற முடியாதபடி கடுமையான குரலில் கட்டளை போல் சொல்லியவள் முன்னே நடக்க,
கவியின் பேச்சிற்கு கட்டுப்பட்டு பிரபஞ்சனும் அவளைப் பின்தொடர்ந்து மகிழுந்தில் ஏறினான்.
உள்ளே வந்ததும் இருவருக்குமிடையில் சற்று நேரம் மௌனமே ஆட்சி செய்ய,
அதை முதலில் கலைத்தது பிரபஞ்சன் தான்.
“ரொம்ப ரொம்ப சாரி கவி!!! நான்.. நான் இப்படி பண்ணிருக்கக் கூடாது!!! உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சபின்னாடி, அப்படியே விட்டிருக்கக் கூடாது.. அட்லீஸ்ட் நீ சந்தோஷமா இருக்கியா இல்லையான்னு கூட தெரிஞ்சுக்க நான் முயற்சியே எடுக்கலை!!! நான் நினைச்சிருந்தா அந்த நரகத்துல இருந்து உன்னை எப்போயோ காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்கலாம்.. ஆனா!!! நான்.. ” என சொல்ல முடியாமல் வேதனையில் மூச்சுமுட்ட திணறியவன்,
“என்னாலேயே என்னை மன்னிக்க முடியலை கவி!!! இங்க ரொம்ப வலிக்குது!!!” என தன் நெஞ்சைக் குத்திக்கொண்டு சொல்லியவனின் குரலில் தான் எத்தனை வேதனை!!!
மீண்டும் அவனுக்கு கண்கள் கலங்க, புறங்கையால் அதை துடைத்துக்கொண்டவனுக்கு, அதீத கோபத்தில் கண்கள் சிவந்து, உதடுகள் எல்லாம் நடுங்கியது.
கவிக்கோ, இத்தனைக்குப் பிறகும், தன்னால் அவன் உயிருக்கு போராடியதை எல்லாம் மறந்துவிட்டு, தனக்காக இத்தனை துடிக்கும் அவனின் தூய்மையான அன்பில் மெய் சிலிர்த்துப் போனது.
இவனின் மாசற்ற அன்பை அனுபவிக்க முடியாதபடி செய்த தன் விதியை எண்ணி மனதிற்குள் கதறிய கவிக்கு, இவனின் அன்பிற்கு நான் தகுதியில்லை எனும் குரல் மட்டும் உள்ளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்க, அதில் உண்டான வலியை தனக்குள்ளே போட்டு மறைத்தவள், ஒரு முடிவுடன்,
“பிரபா!! ஃபர்ஸ்ட் நார்மல் ஆகு!!! கண்ணைத்துடை!!” என்று அதட்டல் போட,
தன் கவியின் சொல்லிற்காக முயன்று தன்னை நிதானத்திற்கு கொண்டு வர போராடிய பிரபஞ்சன்,
கண்களை அழுந்தி துடைத்துவிட்டு,
“சொல்லு கவி!!!” என அவள் கண்களை எதிர்கொள்ள,
பட்டென பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்ட கவி,
“நடந்த எதுக்கும் நீ காரணமில்லை!!! அதை ஃபர்ஸ்ட் புரிஞ்சுக்கோ!!”
“இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம்!!” என கவி தொடங்கும் போதே, அதை மறுத்து ஏதோ சொல்ல வந்த பிரபாவை கைநீட்டித் தடுத்தவள்,
“நான் பேசி முடிச்சிக்கிறேன்!!!” என்றவள் தொடர்ந்து பேசலானாள்.
“நமக்கு நடந்த எல்லாத்துக்குமே என்னோட அவசரபுத்தி மட்டும் தான் காரணம் பிரபா!!! என் குடும்பத்தைப் பத்தி எங்க அம்மா ரொம்ப முன்னாடியே எச்சரிச்சாங்க… ஆனா அது எதையும் காதுல போட்டுக்காம, அப்படி என்ன செஞ்சிடுவாங்கன்னு ஒரு அசால்ட் எனக்கு.. அது!! அது தான் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு!!”
“நீ!! நீ உன் வாழ்க்கையில எப்படி வந்திருக்க வேண்டியவன் தெரியுமா?? உன்னையும் லவ் பண்ணு கல்யாணம் பண்ணுண்ணு டார்ச்சர் பண்ணி!!! ப்ச்!! என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு இப்போ!!”
“என் ஒருத்தியோட பிடிவாதம்!! எங்க கொண்டு வந்து நிறுத்தியிருச்சுல!!! நீ எவ்வளவு சொன்ன, இந்த வயசுல கல்யாணம் பண்றது எல்லாம் தப்புன்னு.. அதுக்கு அப்பறம் தான் பிரச்சனையே இருக்குன்னு அவ்வளவு எடுத்து சொன்ன நீ!! ஆனா இந்த மரமண்டைக்கு அப்போ எதுவுமே மண்டையில ஏறல!!” என தலையில் தட்டிக் கொண்டவள்,
“உனக்கு நடந்த அநியாயத்துக்கு முழுக்க முழுக்க நான் மட்டும் தான் காரணம் பிரபா!!!.. அதுக்கு மன்னிப்பு கேட்க கூட எனக்கு அறுகதை இல்லை.. முடிஞ்சா என்னை மன்னிச்சிடு” என மீண்டும் அன்றைய நினைவுக்கே சென்றவளுக்கு, இன்றும் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபஞ்சனின் முகம் கண்முன் தோன்றி வதைக்க, கண்களைத் தாண்டி வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்ட கவி மேலும் தொடர்ந்தாள்.
அவள் மனதில் அழுத்திக்கொண்டிருக்கும் அனைத்தையும் கொட்டிவிடட்டும் என்பது போல், அவளைத் தடுக்காமல் பிரபஞ்சன் பொறுமையாய் அவள் பேசுவதைக் கேட்டிருந்தான்.
“உனக்கு.. உனக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்துச்சுன்னா!!! என்னை என்னாலேயே மன்னிச்சிருக்க முடிஞ்சிருக்காது பிரபா!!! “
“என்ன நடந்துச்சு!! யாரு?? எதுக்காக்க உன்னை அடிச்சாங்க?? எதுவுமே தெரியாம எவ்வளவு வலி நீ அனுபவிச்சிருப்ப!! அது எல்லாத்துக்கும் நான் தான் காரணம்!!! அந்த குற்ற உணர்ச்சியே என்னை நித்தம் நித்தம் கொல்லுது பிரபா!!” என வலியுடன் மொழிந்தவள்,
“ஒருவேளை!!! ஒருவேளை.. நீ இன்னைக்கு இந்த நிலைமைக்கு வரலைன்னா நான் இந்த குற்ற உணர்ச்சில செத்தே போயிருப்பேன்.. நல்லவேளை அந்தக்கடவுள் இந்த ஒரு விஷயத்துலயாச்சும் நல்லது பண்ணி எனக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்திட்டாரு” என சிறிதான ஆசுவாசப் பெருமூச்சுடன் பேசியவள்,
“நீ என்ன நினைப்புல இருக்கன்னு எனக்குத் தெரியும்.. ஆனா அது நடக்காது பிரபா!!! உன் வாழ்க்கையில என்னோட சேப்டர் எப்போவோ முடிஞ்சிருச்சு.. முடிஞ்ச ஒன்னை நீ தொடர நினைக்காத.. வேஸ்ட் ஆஃப் டைம் தான் உனக்கு.. என் மனசுல இப்போ என் பொண்ணு மட்டும் தான் இருக்கா!!! வேற எதுவும் இல்லை.. இனிமேல் இருக்கவும் இருக்காது.. எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் பண்றதுனா, பிளீஸ் எல்லாத்தையும் மறந்துட்டு உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ… இந்த குற்ற உணர்ச்சியில இருந்து எனக்கு விடுதலை கொடு பிரபா!!! பிளீஸ்!!!” என கையெடுத்து கும்பிட்டு கண்ணீர்விட்ட கவியை, உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்திருந்தான் பிரபஞ்சன்.
அவன் முகத்தில் இதுவரை இருந்த உணர்வுகள் மாறி, அங்கே அழுத்தம் வந்து குடியேறியிருக்க, இந்த பிரபஞ்சன் அவளுக்கு முற்றிலும் புதிது!!
“என்ன பிரபா?? எதுவும் சொல்ல மாட்டேங்குற???”
“பேசி முடிச்சிட்டியா???” என அவளை அழுத்தமாக பார்த்தவாறு கைகளைக் கட்டிக்கொண்டு பிரபா கேட்க,
அவனின் முகத்தை வைத்து என்ன நினைக்கிறான் என அனுமானிக்க முடியாத கவியும், பேசிவிட்டதாய் தலையசைக்க,
“அப்போ கிளம்பலாம் வா!!” என காரை எடுக்கப் போனான் அவன்.
“ஷ்!! பிரபா!! எங்க வரணும்?? நான் தான் தெளிவா சொன்னனே!! இது ஒத்துவராது!! என்னை கொண்டு போய் ரயில்வே ஸ்டேஷன்ல விடு!!! என் கூட வேலை பார்த்தவங்களோட அக்கா மும்பையில இருக்காங்க.. நான் அங்க போய் ஏதாவது வேலை தேடிக்கிறேன்.. நீ உன் வாழ்க்கையைப் பாரு!!” என இதுதான் என் முடிவு என்பதைப் போல் கவி சொல்ல,
“மதுவைப் பார்த்துக்கிறேன்னு ஒரு வருஷ அக்ரிமென்ட்ல சைன் பண்ணியிருக்க நீ?? அது நினைவிருக்கா உனக்கு???” என கவியைக் கண்டதும் இலகும் மனதை இறுக்கிப் பிடித்து கடுமையான குரலில் பிரபா கேட்க,
இப்படியும் கூட பிரபாவால் பேச முடியுமா என்ன? என ஆச்சர்யமாக பார்த்திருந்த கவி,
“நான் மது அக்கா கிட்ட பேசிக்கிறேன்.. பிளீஸ் என்னை இங்கேயே கூட இறக்கி விட்டுடு.. நான் போய்க்கிறேன்.. இனிமேலும் நம்ம பக்கத்துல பக்கத்துல இருக்கது சரி வராது!!!”
அவளை ஆழமாய் பார்த்தவன், இறும்பாகி விட்ட மனதுடன்,
“அப்போ உன் கழுத்துல இருக்க அந்தத் தாலியை கழட்டி வச்சிட்டு நீ எங்க வேணும்னாலும் போ!!!!” என்று உறுதியாகக் கூற,
அதிர்ச்சியில் கவிக்கு கண்கள் விரிய, தன்னையும் அறியாமல் கழுத்தில் கிடந்த அந்தத்தாலியை இறுக்கப் பற்றியிருந்தாள் பெண்.
அதைக்கண்ட பிரபாவின் இதழ்களுக்குள் இதமாய் ஒரு புன்னகை பூக்க,
“இதோ பாரு கவி!!! நீ சொன்ன மாதிரி, உனக்காக, நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் தாலி கட்டினேன் உன் கழுத்துல!!! அப்போ நிஜமா உன்மேல காதல் எல்லாம் இல்லை!!! ஆனா அப்போவே உன்னைப் பிரிஞ்சுடக் கூடாதுன்னு தான் தாலியே கட்டினேன்.. ஆனா இப்போ!!! என் நெஞ்சு முழுக்க நீதான் நிறைஞ்சு இருக்க!!!! எனக்கு காதல் இல்லாதப்போவே உன்னை பிரியமுடியாம தவிச்சவன் நான்.. இப்போ விட்டுடுவேன்னு நினைச்சியா?? பிடிச்ச ஒண்ணு கிடைக்க எவ்வளவு பிடிவாதம் வேணும்னாலும் பிடிக்கலாம்னு எனக்கு பிடிச்ச பொண்ணு சொல்லிருக்கா!! அதனால!!!” என மடை திறந்த வெள்ளம் போல் பேசிக்கொண்டே வந்தவன், ஒரு நொடி நிறுத்தி, கவியின் கண்களோடு கண்கள் நோக்கி,
“உன்னை இனி நான் சாகுற வரைக்கும் விடுறதா ஐடியா இல்லை!!! அதுனால பேசாம என்கூட வா!! அதைவிட்டா உனக்கு வேற ஆப்ஷனே இல்லை!!!” என கவி அதிர்ந்து நிற்பதையும் பொருட்படுத்தாமல், மகிழுந்தை அவர்களை வீட்டை நோக்கி விரட்டினான்.
பிரபாவின் அதிரடியில் சமைந்து போய் அமர்ந்திருந்த கவிக்குத் தெரியவில்லை, இந்த முறை யாருக்காகவும், எதற்காகவும் தன் காதலியையும் காதலையும் அந்தக் காதல் கிறுக்கன் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று!!!
“தொலைந்த இன்பம் தேடி வந்து கையில் சேர்ந்தால்,
கெட்டியாக இதயத்தில் பூட்டி பத்திரப்படுத்திக் கொள்ளத் துடிக்குமாம் மனது!!!”
error: Content is protected !!