Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 19.2

அத்தியாயம் 19.2

நேற்று ப்ரதமேஷும் ஸ்ரீகாந்தும் ஊருக்கு புறப்பட்ட பிறகு, கந்தாசாமியும் முத்துவும் தனியே சந்தித்து திட்டமிட்டனர். பிறகு முத்து அழைத்தது மிருதுளாக்கு தான்.



Advertisement

“என்ன பெரியம்மா நல்ல இருக்கீங்களா?”

“நல்லா இருக்கேன் முத்து, நீ தான் உங்க ஊருக்கு போனதும் எங்களை எல்லாம் மறந்துட்ட”

Advertisement

Advertisement

“மறந்தவங்க தான் போன் போடுவாங்களா சொல்லுங்க?”

“வக்கீல் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா சொல்லு”

Advertisement

“அதுக்குன்னு பேசாமலே இருந்தா நஷ்டம் நமக்கு தான் பெரியம்மா”

“என்ன சொல்ற முத்து, எனக்கு புரியலையே?”

“நீங்க என்ன இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க.. அதான் உங்களை எல்லாரும் ஏமாத்தறாங்க”

“என்னை யாரு டா ஏமாத்த போறாங்க?”

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் பெரியம்மா.. என்னை உங்க பொண்ணு மாதிரி நினைக்கிறதா சொன்னீங்க தானே.. அதான் உரிமையா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் “

“பொண்ணு மாதிரி எல்லாம் இல்லை, நீயும் எனக்கு பொண்ணு தான் சொல்லு”

“நம்ம ப்ரதம் ப்ரோ இருகாங்க இல்ல.. அவங்களை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு..”

“அவனுக்கு என்ன?”

“இங்க ஹிருதய்யும் அத்தையும் ஒரு வித குற்ற உணர்ச்சில இருக்காங்க.. என்னதான் இருந்தாலும் அவங்களுக்கு முன்ன எங்க கல்யாணம் ஆயிடுச்சு இல்ல..”

“அதனால என்ன.. சீக்கிரமா அவனுக்கும் முடிவாகிடும்”

“அதான் இப்ப கவலையே, எங்க கல்யாணம் முடிஞ்சே ஒரு வருஷம் கிட்ட ஆக போகுது. இன்னும் நீங்க பொண்ணு கூட பார்த்து முடிக்கலையே?”

“எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணும் தானே?”

“நேரம் காலம் எல்லாம் அதுவா வந்து நம்ம மடி மீது உட்காருமா சொல்லுங்க?”

“அம்மா பார்த்திட்டு தான் இருக்காங்க, முத்து”

“உங்க அம்மா பார்க்கிறது தான் தெரியுதே.. நீங்களே சொல்லுங்க அவங்க போடற கண்டிஷன்ல பொண்ணு கிடைக்கிற வாய்ப்பு இருக்கா.. இல்ல அப்படி ஒரு பொண்ணு தான் இருக்க முடியுமா? செஞ்சா தான் உண்டு..”

“——————-”

“எனக்கு என்னமோ அவங்களுக்கு ப்ரோ கல்யாணம் ஆகிறதுலயே இஷ்டம் இல்ல போல தெரியுது..”

“ச்ச ச்ச அப்படி எல்லாம் இல்ல..”

“நீங்களே யோசிங்க.. நான் சொல்ற விஷயத்துல உள்ள உண்மை புரியும். பாட்டி, ஒரு மாயை பலூன் உருவாக்கி அதுக்குள்ள உட்கார்ந்திட்டு பொண்ணு தேடறாங்க.. இப்படியே போச்சுன்னா ப்ரோ நிலைமை என்ன ஆகிறது. முதல்ல அந்த மாயை பலூனை உடைங்க”

“நீ சொல்றதும் சரி மாதிரி தான் இருக்கு”

“பாட்டி மேலே நான் தப்பு சொல்லலை. அவங்களை நிரூபிக்க, அழகா, அறிவா, மாடர்ன்னா, வசதியா, அடக்கமா, குடும்ப பாங்கா, நல்லா படிச்ச, வேலைக்கும் போற, இப்படி எல்லாம் சேர்த்து ஒரே பொண்ணு கிடைக்கணும்னு பார்க்கிறாங்க. இது சாத்தியமான்னு யோசிக்கலை… இதை சாதிக்கணும்னு நினைக்கிறாங்க.. “

“எப்படி முத்து சரியா சொல்ற?”

“நான் சொன்னதா யார் கிட்டயும் சொல்லாதீங்க.. இன்னிக்கு நேருக்கு நேர்.. உங்க அம்மா கண்ணை பார்த்து.. கேள்வி கேளுங்க.. நீங்க கேட்கிற கேள்வியில தான் அவங்க நிதர்சனத்துக்கு வந்து சீக்கிரமா பொண்ண பார்க்கணும்”

“அவங்க மனசு வருத்தப்படும்”

“இது சுயநலம் பெரியம்மா.. நீங்க உங்க அம்மா மனசு நோகாம இருக்கணும்ங்கிறதுக்காக ப்ரோ கஷ்டப்படணுமா?”

“அவன் என் பையன், எனக்கு அவன் மேலே அக்கறை இல்லாமலா?”

“அப்ப, நீங்க உங்க அம்மாவை பார்க்காம, உங்களை ஒரு அம்மாவா பாருங்க..”

“சரி முத்து.. இதுக்கு நானே ஒரு முடிவு கட்டறேன்..”

அரை மணி நேரத்திற்கு பிறகு, கந்தசாமி மிருதுளாவிற்கு அழைத்து முத்து கூறிய விஷயங்களையே வேறு வேறு மாதிரி கூறி மிருதுளாவை நன்றாக தூண்டி விட்டார்.

—————-

அடுத்த அழைப்பு சிவங்கரிக்கு.

“கியூட்டி ம்மா? எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன்.. என்ன திடீர்ன்னு என் நியாபகம்?”

“அது என்ன இப்படி கேட்டுட்டீங்க கியூட்டி மா.. நான் உங்களை மறந்தா தானே? உங்களை மாதிரி குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கிறவங்கள இந்த காலத்துல பார்க்க முடியுமா சொல்லுங்க?”

“உனக்காச்சு என் அருமை தெரிஞ்சுதே?”

“தெரியாதவங்களுக்கு தெரியப்படுத்தணும் க்யூட்டிம்மா.. உங்க அருமை புரியாம உங்களையே குறை சொல்றாங்களே! அதை நினைச்சா தான் எனக்கு மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு”

“யாரு குறை சொல்றது? என்ன சொல்றாங்க?”

“அது ஒன்னுமில்லை.. நீங்க ப்ரோக்கு எவ்வளவு மெனக்கெட்டு பொண்ணு பார்த்திட்டு இருக்கீங்க..”

“ப்ச்ச்.. மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒன்னும் அமைய மாட்டேங்குது!”

“நீங்க எதிர் பார்க்கிற மாதிரி எங்க தாத்தா கூட ஒரு வரன் சொல்லிட்டு இருந்தாங்க..”

“அப்படியா? என் கிட்ட சொல்லலையே?”

“அத்தை தான், நீங்க ஒன்னும் சொல்லாதீங்க பெரியப்பா.. எங்க மாமியார் சபதம் போட்டிருக்காங்க.. அவங்களுக்கு எப்பவுமே நானும் நம்ம ஊரும் இளக்காரம் தான். அவங்க எப்படிபட்ட பொண்ணு பார்த்து அவங்க சபதத்தை நிறைவேற்றாங்கன்னு நான் பார்க்கணும்னு சொல்லிட்டாங்க..”

“அப்படியா சொன்னா பாவை?”

“அத கூட விடுங்க.. மிருதுளா பெரியம்மா மாமா கிட்ட சொல்லி இருக்காங்க, ‘அம்மா போக்கே சரி இல்லடா.. அவங்க ஈகோக்கு ப்ரதம் வாழ்க்கையை பணயம் வச்சிடுவாங்க போல. என் பையனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாண நடக்க விடுவாங்களான்னு தெரியல’ ன்னு”

“நிஜமாவா?”

“மாமா கூட, ‘அம்மா நம்ம மேலே நம்ம பசங்க மேல வச்சிருக்க பாசத்தை விட, அவங்களுக்கு எப்பவுமே அவங்க ஈகோ தான் முக்கியம்னு’ சொன்னதை என் காதால கேட்டேன் க்யூட்டிம்மா”

“—————–”

“நீங்க அப்படி இல்லைன்னு எனக்கு தெரியும். அதான் எனக்கு மனசு கேக்கல.. அதான் உங்க கிட்ட சொல்ல போன் போட்டேன்..”

“——————”

“க்யூட்டிம்மா, நான் சொன்னதா யார் கிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்”

“சொல்ல மாட்டேன் கவலை படாதே.. எனக்காக யோசிச்சு கூப்பிட்டு சொல்ற, உன்னை மாட்டி விட மாட்டேன்”

“பாருங்க.. உங்க மனசு எவ்வளவு தங்கம்.. எனக்காக இப்ப கூட யோசிக்கிறீங்க.. இதை புரிஞ்சுக்காம எல்லாரும் உங்களை போய் தப்பா நினைக்கிறாங்களே “

“யாரு என்ன சொன்னா என்ன? என்னை பத்தி எனக்கு தெரியும்”

“நல்லத்துக்கே காலம் இல்லை க்யூட்டிம்மா.. அத்தை, மாமா, பெரியம்மா யார் கேட்டாலும் இனி அமைதியா இருக்காதீங்க.. இந்த குடும்பத்துக்காக சுமை தாங்கியா நீங்க இருந்தது போதும்..”

“நீ உங்க தாத்தாவை என்கிட்டே பேச சொல்லு முத்து. அந்த பொண்ணு நல்ல இடம்னா நான் பேசுறேன். இவங்களை எல்லாம் நான் பார்த்துகிறேன், நீ டென்ஷன் ஆகாதே”

“சரி க்யூட்டிம்மா.. தாயும் பிள்ளையும்னாலும் வாயும் வயிறும் வேற.. அதனால இனிமேலாவது சுதாரிப்பா இருங்க, நான் வைக்கிறேன்” என்று வைத்து விட்டாள்.

சிறு பொறி தட்டினாலும் போர் வரும் அபாயத்தை உருவாக்கிவிட்டு, போர் ஆரம்பிக்க காத்து கொண்டிருந்தனர்.

போர் ஆரம்பமாகியது என்று தெரிந்ததுமே தாத்தாவும் பேத்தியும் எஸ்கேப்..

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல இவர்களது கலகமும் நன்மையில் முடியுமா?

அதன் விளைவே, மிருதுளா சிவங்கரி இருவருக்கும் இடையில் சண்டை..

இரவு இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவே இல்லை. அவர் அவர் சிந்தனையிலே சென்றது. மறு நாள் காலையும் ப்ரதமேஷ் தணிகாச்சலம் கிளம்பி செல்லும் வரை அமைதியாகவே சென்றது.

பிறகு தான் ஆரம்பித்தது.

“ஏன் ம்மா, போன வாரம் அந்த தரகர் ஒரு பொண்ணை பத்தி சொன்னதா சொன்னீங்களே, என்னாச்சு?’

“அது சரி வராதுன்னு வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்”

“ஏன்? என்ன பிரச்சனை?”

“அந்த பொண்ணு ரொம்ப குள்ளமா இருக்கு.. நம்ம ப்ரதமேஷ் இடுப்பு வரைக்கும் தான் வரும் போல”

“ஹெய்ட் எல்லாம் எப்படி பார்க்காமலே தெரியும்?”

“அதான் 4’ 9” ன்னு போட்டு இருந்தாங்களே! நம்ம ப்ரத்தம் 6‘ 2” “

“சரி.. காதம்பரி சித்தி சொன்ன வரன் என்னாச்சு?”

“இப்ப எதுக்கு இப்படி ஒன்னு ஒன்னா கேள்வி கேட்டுட்டு இருக்க?”

“நான் ப்ரதமை பெத்தவ.. எனக்கு அக்கறை இருக்காதா?”

“நான் உன்னையவே பெத்தவ”

“விதண்டாவாதம் பேசாதீங்க ம்மா”

“நீ தான் வில்லங்கமா பேசிட்டு இருக்க.. நான் நல்ல இடமா தான் தேடிட்டு இருக்கேன்”

“நல்ல இடம் தேடறது சரி தான்.. ஆனா நீங்க பெரிய ஆளுன்னு நிரூபிக்க தான் பார்க்கிறீங்க.. உண்மையில ப்ரதமுக்கு என்ன தேவைன்னு யோசிக்கலை”

“என்னை பார்த்து சொல்ல எப்படி மிருது உனக்கு மனசு வருது. நான் உன்னையும் ஸ்ரீயையும் வேறு வேறா நடத்தி இருக்கேனா? எனக்கு பையன் பொண்ணு எல்லாமே ஒன்னு தான். மூனு பேர பிள்ளைகளையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன்”

இருவருக்குமே வாய் அதிகம். மனதை காயப்படுத்துவது போல பேசுவது சுபாவமும் கூட. என்ன ஒன்னு இதுவரை மற்றவர்களை, குறிப்பாக பூம்பாவையை தான் நோகடிப்பார்கள். இன்று தாயும் மகளும் ஒருவருக்கு ஒருவர் மல்லுக்கு நின்று சண்டை வளர்ந்த்து.

கோபத்தில் மிருதுளா சில பொருட்களை எடுத்து கீழே வீசவும், எனக்கு வீச தெரியாதான்னு சிவங்கரியும் எடுத்து வீசவும், வீடே அமளி துமளி ஆனது.

மாலை வேலை முடித்து வந்து பார்த்த தணிகாச்சலம் துணுக்குற்று உடனே ஸ்ரீகாந்த்திற்கும் ப்ரதமேஷுக்கும் அழைத்து விஷயத்தை கூறிவிட்டார்.

———————

வந்து பார்த்த ஸ்ரீகாந்த்திற்கும் ப்ரதமேஷிற்கும் ஒன்றும் புரியவில்லை.

“என்னாச்சு ம்மா?” என்று தான் ஆரம்பித்தார் ஸ்ரீகாந்த்.

“ஏதாவது பேசினீனா பாரு, இனி நான் யார் கிட்டயும் பேசறதா இல்ல? ப்ரதமேஷுக்கு கல்யாணத்தை முடிச்சதும் அப்புறமா யாரா இருந்தாலும் பேசுங்க..” என்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.

“என்ன மிருது? எதுக்கு அம்மாக்கூட பிரச்சனை?” என்று தமக்கையிடம் கேட்கவும்,

“இப்ப இங்க யாரும் பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் இல்ல.. ஏன் ஒரு அம்மாவா என் பையனுக்காக நான் பேச கூடாதா? உன் பொண்டாட்டி என்னமோ அவ பிள்ளை மாதிரி அக்கறை காட்றதும், அம்மா அவங்களுக்குத்தான் அவன் மேலே முழு உரிமைன்னு நிக்குறதும், அப்ப நான் யாரு இவனுக்கு ?” என்று கொந்தளித்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

ஸ்ரீகாந்த் என்ன செய்ய என்று பாவமாக முழிக்கவும்,

“மாமா நீங்க பீல் பண்ற அளவுக்கு ஒன்னுமில்லை.. ரெண்டு பேரும் வீட்டை யார் சுத்தம் செய்யறதுன்னு உள்ளே போயிருப்பாங்க” என்றான் நிதானமாக.

பின் இவர்கள் மூவரும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்து முடித்தனர்.

“சாப்பிடுவதற்கு ஒன்னும் செஞ்ச மாதிரி தெரியலையே ப்ரதம்?” என்றார் தணிகாச்சலம்.

“வாங்க நாம மூனு பேரும் போய் வெளியே சாப்பிட்டுட்டு இவர்களுக்கும் இட்லி வாங்கிட்டு வந்துடலாம்” என்றார் ஸ்ரீகாந்த்.

சரி என்று இவர்கள் கிளம்புகையில், ப்ரதம் போனிற்கு மெசேஜ் வந்தது.

யார் என்று எடுத்து பார்த்தால்,

“காலையில சாப்பிட்டது, இட்லி எல்லாம் பத்தாது எனக்கு பிரியாணி” என்று சிவங்கரி தான் மெசேஜ் அனுப்பி இருந்தார்.

பார்த்த மூவருக்கும் சிரிப்பு தான் வந்தது.

மீண்டும் மெசேஜ் சத்தம்…

இப்பொழுது, “எனக்கு பட்டர் நான் பெப்பர் சிக்கன்” என்று மிருதுளா அனுப்பி இருந்தார்.

மூவரும் தலையில் அடித்து கொண்டு கிளம்பினார்கள்.

அன்று இருவரும் மேலே யாரும் பேசாமல் உணவை முடித்து விட்டு படுத்துவிட்டனர்.

—————

மறு நாள் காலையிலே கந்தசாமி சிவங்கரிக்கு அழைத்தார்.

“இங்க பாரு ம்மா தங்கச்சி, எங்க சொந்தகார பொண்ணுக்கு உங்க பேரனை கேட்குறாங்க. நம்ம முத்து தான் உங்க கிட்ட சொல்ல சொல்லுச்சு… “

“சொல்லுங்க அண்ணா” என்றார் மரியாதையாக.

கந்தசாமிக்கு சிரிப்பு வரும் போல இருந்தது. அதை மறைத்து கொண்டே,

“பொண்ணு சென்னையில தான் படிச்சுது. அதுக்கு கிராமம் பக்கம் பிடிக்கலன்னு, சிட்டி மாப்பிள்ளை தான் கேக்குது.. உங்களை மதுரையில எங்க சம்பந்தி வீட்ல பார்த்திருப்பாங்க போல..”

“நல்லது அண்ணா.. எனக்கு பொண்ணு விவரம் அனுப்புங்களேன்”

“நான் என்ன யோசிச்சேனா, நீங்க அந்த பொண்ணை ஒரு தடவை சந்திச்சு நேர்ல பேசி பாருங்களேன். ஏனா நிறைய இடம் நீங்க ஜாதகம் பார்த்து தட்டி போகுதுன்னு முத்து சொல்லுச்சு. அதனால இந்த தடவை நீங்க முதல்ல நேர்ல சந்திச்சு பேசி பாருங்களேன்?”

“அதுவும் சரிதான்.. நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்னு கேட்டு சொல்லுங்க”

சிவங்கரியின் வழியிலே போனார்கள் முத்துவும் கந்தசாமியும்.

“இப்ப அந்த பொண்ணுகிட்ட எப்படி பேசுறது?”

“அதை நான் பார்த்துகிறேன் அய்யா..” என்று கூறி, சுசீலாவிற்கு அழைத்து பேசினாள்.

மாலதியின் டாக்டர் அண்ணனிடம் பேசி நம்பர் வாங்கி இருந்தார்கள்.

சிறிது நேரம் பொதுவாக பேச்சு கொடுத்துவிட்டு பின்,

“சுசீ உனக்கு என்னை பிடிக்கும்ன்னு சொல்லி இருக்க, ஆனா எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா” என்றாள் முத்து சீரியசாக.

“நிஜமாலுமே பிடிக்குமா?”

“அதான், நான் வாக்கப்பட்ட குடும்பத்துலயே நீயும் வாக்கப்படணும்னு நான் ஆசை படறேன்”

“ உன் புருஷனுக்கு ஒரு தங்கச்சி மட்டும் தானே?”

“அவர் கூட பிறக்காத அண்ணன், அவர் அத்தை பையன் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு தான் பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க. எனக்கு உன் நியாபகம் தான் வந்தது. ”

 “————-”

“என்ன சுசீ ஒன்னும் பேச மாட்டிங்கிற?”

“உனக்கு வேணும்னா என்னை பத்தி தெரியாம இருக்கலாம்.. ஆனா எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்.. அதனால் உண்மையை சொல்லு .. என்ன விஷயம்? நீ உண்மையை சொன்னா நானும் நல்ல பதிலாவே சொல்றேன்”

முத்து சிரித்து கொண்டே அனைத்தையும் சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

“அப்ப அந்த அப்பாடக்கருக்கு என்னை பிடிச்சிருக்கு.. இருந்தாலும் அரேஞ்டு மேரேஜ் மாதிரி ஏற்பாடு செய்யணும்.. அதானே?”

“நீ ரொம்ப நேரடியா சொல்ற.. விஷயம் என்னவோ அதான்.. ஆனா…”

“ஆனாவும் வேணாம் ஆவன்னாவும் வேணாம். இப்ப உன் பிளானை சொல்லு”

“உனக்கு மாப்பிள்ளை போட்டோ வேணா அனுப்பவா?”

“தேவை இல்ல, அங்க மதுரையில பார்த்தப்பவே எனக்கு சந்தேகமா தான் இருந்துச்சு.. என்னயவே குறுகுறுன்னு பார்த்த மாதிரி இருந்துச்சு. அந்த நெட்டையா சிவப்பா உன் தம்பி ப்ரேம் கூடவே இருந்த ஆள் தானே?

வாலண்டீயரா வந்து எனக்கு உதவி செய்ய ட்ரை பண்ணி உன் கிட்ட பல்ப் வாங்கினவரு தானே?

பார்க்க ஆளு ஓகே தான். நீ சொல்றதை வச்சு பார்த்தா, நல்ல குடும்பம், நல்ல வேலை எல்லாம் ஓகே தான்.. என்ன நேரடியா என்கிட்டே சொல்லி இருக்கலாம்னு மட்டும் தோணுது”

“அடுத்து என்ன பிளான்னா நீ போய் எங்க க்யூட்டிம்மா வை நாளைக்கு சென்னைல மீட் பண்ற?”

“ஏன் முத்து, கல்யாணத்துக்காக பாட்டியை முதல்ல கரெக்ட் பண்ற ஒரே ஆளு நானாத் தான் இருப்பேன்..”

“ஹீ ஹீ..”

“சரி, எங்க மீட் பண்றது? திடீர்ன்னு சொன்னா இங்க சாரி எல்லாம் இருக்காதே? நானே இரண்டு நாள்ல ஊருக்கு கிளம்ப எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கேன்”

“காரியத்தையே கெடுத்த நீ. சாரி எல்லாம் எங்க க்யூட்டிம்மாக்கு பிடிக்காது. அவங்க எதிர்பார்க்கிறது, நல்லா ஜாலியா மாடர்ன்னா ஒரு ஆளைத்தான்”

“முத்து உண்மையை சொல்லு.. இதுல ஏதாவது உள் குத்து இருக்கா.. உன்னை நம்பி போலாம்ல..”

“உனக்கு சந்தேகமா இருந்தா விட்டுடு சுசீ..”,

சுசீலாவின் பேச்சில் இருந்தே முத்துவிற்கு புரிந்து விட்டது, சுசீக்கும் இந்த சம்பந்தத்துல ஈடுபாடு என்று. அதனாலே ரூட்டை மாற்றிவிட்டாள்.

“அதானே, நீயாவது இறங்கி வர்றதாவது.. சரி நாளைக்கு எங்கே போறதுன்னு சொல்லு.. மிச்சத்தை நான் பார்த்துகிறேன்..”

கந்தசாமி முத்துவின் திட்டப்படி இருவரையும் ஒரு தீம் பார்க்கில் சந்திக்குமாறு ஏற்பாடு செய்தனர்.

விஷயம் அறிந்து ப்ரதம் முத்துவிற்கு அழைத்து,

“ப்ரோ, என்ன ப்ரோ நீங்க, பாட்டியோட என் ஆளை அவுட்டிங் அனுப்புறீங்க.. என்னை கூட சேர்த்து விட்ருக்கலாம் இல்ல?” என்றான் சோகமாக.

“அது வந்து ப்ரோ, நமக்கு பசிச்சா நாம தான் சாப்பிடணும்.. நீங்க பக்கத்துக்கு இலைக்கு பாயசம் கேட்டீங்க… அதனால பாயசம் கியூட்டிம்மாக்கு போயாச்சு “

“ப்ரோ…”

“இனி ஒன்னும் செய்ய முடியாது ப்ரோ.. அரேஞ்டு மேரேஜ் தான் உங்களுக்கு.. பாய்“ என்று அழைப்பை கட் செய்துவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!