Skip to content
Post Views: 2,033
அத்தியாயம் – 14
இன்றோடு சோமு என்ற அத்தியாயம் முடிந்து ஒரு மாத காலம் ஓடியே விட்டது.காரணம், காரியமற்ற ஒருவரது மரணம் அவரைச் சேர்ந்தவர்களை விட.அவரை விட்டு பிரிந்து நின்ற மீனாள், லட்சுவை தான் வாட்டி எடுத்தது.சோமு எத்தகைய சுயநலவாதி என்பதை அவரது செயலே காட்டி விட்டது.
இறப்பை அழைக்க எண்ணியவர் வள்ளியின் வாழ் நாள் முழுமைக்கும் யோசித்துச் செய்து விட்டு தான் போனார்.அவரது இறுதி காரியம் முடிந்த கையோடு வள்ளியை சோமுவின் உத்தரவின் படி அவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். அப்ப!..ப்பா!.. இந்த மனிதன் எத்தனை சுயநலம் மிக்கவன், இந்த செய்தியை அறிந்த வள்ளியப்பன்.‘செத்தும் கொடுத்தான் சாமி நல்ல வரத்தை’ என்று வாய் விட்டே புலம்பி கொண்டிருந்தார்.
Advertisement
மீனாள் இன்னும் வள்ளியப்பன்,கண்ணாத்தாள் வசமே விட்டுருந்தான் லட்சுமணன். இந்த ஒரு மாத காலத்தில் தொழில் தொடர்பாக அரியக்குடி வந்தாலும் வந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு, சரக்கை எடுத்து கொண்டு உடனே காரைக்குடிக்கு சென்று விடுவான்.
Advertisement
அவனது மௌனம் மற்றவர்களை மிகவும் பாதித்தது.சாலா அவன் முகம் பார்த்து நின்றாலும் ஓர், இரு வார்த்தைகள் பேசி விட்டு முகம் கூடப் பார்க்க மறுத்து செல்ல.எல்லார் மனமும் சிறு கலக்கத்தைச் சுமந்து நின்றது.மகனை பார்க்க, பார்க்க மீனவால் முடியவில்லை.
Advertisement
இன்று ஒரு முடிவுடன் இருந்தால், “மதனி அண்ணே வரட்டும் பேசுக நான் அங்கன போறேன்.லட்சு முகம் கொடுத்து கூடப் பேச மாட்டேங்குறாகப் பயந்து வருது என் இருப்பே அவுகளைக் கொண்டுதேன் மதனி”
Advertisement
“எனக்கு தெரியாதா மீனா, அவுகளும் தம்புடுவை பார்க்கத்தேன் போயி இருக்காக. நாளை மக்கா நாளு நீக கிளம்பலாம், அது வரை பொறுமை குடுக. நாளை அவுக வரட்டும் என்ன செய்தி தாரகன்னு பார்ப்போம். அப்போதேன் தம்புடு மனசு பிடிபடும்” என்றதும் இயலாமை போட்டி போட தன்னை நொந்து கொண்ட மீனாள்.
“அந்த மனுசனுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன் மதனி?” கண்ணாத்தாள் கண்களை பார்த்துக் கலங்கிய கண்களுடன் கேட்ட மீனாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லி விட முடியும் அமைதியாக அவளது கைகளைப் பற்றிக் கொண்டாள் கண்ணாத்தாள்.
” என் வாழ்க்கையும் நல்லாத்தேன் போச்சு மதனி. புள்ளைக்கு அஞ்சு வயசு வரை ஒரு மாற்றமே இல்லமாத்தேன் பழகி வச்சாக. ஒரு நாள் முழுக்க வூட்டுக்கே வராதவுக அடுத்த நாள் திடுதிப்புன்னு வள்ளியை இழுத்துகிட்டு வந்து நின்னாக.அப்போ ஒன்னுமே புரியல மதனி எனக்கு இனி இவளும் என்கூட இருப்பான்னு சொல்றாக நெஞ்சே அடைச்சு போச்சு மதனி.
கனால கூடக் காணாத ஒன்னு நெஜத்துல நடந்தா எப்படி இருக்கும் எனக்கு? நானும் மனுஷிதானே மதனி.அதையும் தாங்கி என் மகனுக்காக மீண்டு வந்தேன்.இப்போ செத்தும் என்னை அரிச்சு எடுத்தா என்ன செய்யிறது மதனி?”
“மீனா எதையும் எண்ணி வச்சு உடம்புக்கு திரும்ப இழுத்து வைக்காதீக. நமக்கு இன்னும் கடமை காத்து கிடக்கு.சும்மாவே தம்புடு முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு சுத்துறாக, திரும்ப நீக படுத்து வச்சா அவுக நிலைய எண்ணி வைக்கவே பயமா இருக்கு மீனா “
லட்சுமணன் கோபமும், அழுத்தமும் கண்ணாத்தாளுக்கு பெரும் பயத்தைக் கொடுத்தது.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு ஏற்ப.அமைதியாக இருந்த லட்சுமணனுக்குள் பெரும் சீற்றம் இருப்பதை எண்ணி அவளே பயந்து நின்றாள்.
தனது யோசனையில் இருந்தவளை கலைத்தது மீனாளின் பேச்சு,”மதனி ஒத்த பிள்ளை அதுவும் ஆண் பிள்ளைன்னு.ஆண் பிள்ளைதானேனு நான் அலட்சியம் காட்டி நிக்கல அண்ணி.ராவு தூக்கத்தைத் தொலைச்சு உழைச்சிருக்கேன்.
அவுக எண்ணம் வரும் போதெல்லாம் அழுது திரியிற மனசை கல்லா மாத்தி வச்சிக்கிட்டு சுத்தியிருக்கேன்.மனசுல வைராக்கியம் வச்சு என் பிள்ளையை வளர்த்தேன்.
லட்சுவையும் சும்மா சொல்ல கூடாது அண்ணி.எம்புள்ள என் முகம் பார்த்துத்தேன் நடக்கும். நான் சிரிச்சா சிரிக்கும், நான் அழுதா அழுகும் என் பேச்சுக்கு மறுத்து ஒரு வார்த்தை பேசுனது இல்லை.
சாப்பாடு தொடங்கிப் போடுற உடுப்பு வரை என்ன கொடுத்தாலும் வேணான்னு சொல்லலாம இரண்டு கையேந்தி வாங்கிக்கும்.அப்படி பட்ட புள்ளக்கு நான் எப்படிப் பட்ட வாழ்க்கைய அமைச்சு தரணும் சொல்லுக மதனி?,
ஆனா அவுக வாய் விட்டு கேட்டும் என்னால எதுவும் செய்ய முடியலையே.கல்யாண பேச்சை தொடங்கிய நாளுல இருந்து ஒன்னு, மாத்தி ஒன்னு ஏதாவது வம்பு பண்ணிகிட்டே கிடந்தா எப்படி? இத்தினி வருஷம், இவுக அத்தினி பெரும் சீமையில இருந்தாகளா? இல்ல கண்ணு குருடா போயி கிடந்தாகளா” அத்தனை கோபமாக பேசிய மீனாளை எண்ணி கவலை கொண்டு.
“மீனா அவுக குணம் கொண்டு பேசுனா பேசிட்டு போராக எல்லாமே சுயநலம் கொண்டே பேசுனா நம்ப என்ன செய்ய?”
“அது என்ன மதனி? அப்படி ஒரு சுயநலம்?”
“சுயநலத்தை விடப் பொண்ணுதானே அப்படிங்கிற இழப்பந்தேன் மீனா. இதே சோமு அண்ணே இடத்துல நீகளும்.உங்க இடத்துல அவுகளையும் வச்சு பார்த்தா இதே மாதிரி இவுக நியாயம் பேசி நிற்பாகளா?” சரியாகக் கேட்டால் கண்ணாத்தாள்.கணவன் செய்த துரோகம் போல் மனைவி செய்தால்.
இந்தச் சமூகம் இதே போல் இறப்புக்கு இறங்கி நிற்குமா? நியாயம் தான் பேச அந்த நாக்கு வருமா?
“பொல்லா பிறவு மதனி இந்தப் பெண் பிறவி?”
“அதைச சொல்லுக மீனா” இருவரும் தங்களது ஆற்றாமையைப் புலம்பி தீர்க்க. அங்கே லட்சுமணனிடம் போராடி கொண்டிருந்தான் வள்ளியப்பன், ஆனாலும் பெண்ணைப் பெற்றவன் நிலையை இப்படி ஆகக் கூடாது.
வள்ளியப்பன் கயிற்றில் மட்டும் தான் நடக்க வில்லை மற்ற படி பல, பல வித்தைகளை வாய் மூலம் மருமகனிடம் காட்டி கொண்டிருந்தார்.கடந்த அரைமணி நேரமாக லட்சு!, ஐயா!, ராஜா! என்று தாஜா செய்தும்.வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை லட்சுமணன், அத்தனை அழுத்தமாக இருந்தான்.
“லட்சு இப்படிப் பேசாம கிடந்தா நான் என்ன செய்றது? சடங்கு செய்ய மாட்டேன்னு சொல்லிடீக அத்தோட பேச்சு நின்னு போச்சு.பின்னுக்கு என்ன இத்தினி கோபம்.நீக வாய் திறந்து பேசாம உங்க மனசுல உள்ளதை பார்க்க முடியாது லட்சு?”
அதுவரை அமைதியாக இருந்தவன் வள்ளியப்பன் பேச்சில் வெடுக்கென அவன் புறம் திரும்பி,”சொல்லுக என்ன சொன்னீக மாமா?” அவன் திரும்பிய தோரணையில் திகைத்தவர். மேலும் அவன் நேருக்கு நேர் நின்று கேட்கவும் ஒரு நொடி எடுத்துத் தன்னைச் சமாளித்துக் கொண்டு.
“உங்க மனசுல உள்ளதை சொல்லுகன்னு சொன்னேன்”
“எல்லாமே சொல்றேன் செய்வீகளா?” என்றவனைப் பாவம் போல் பார்த்தார் வள்ளியப்பன்.சத்தியமாக இந்த நொடி லட்சுமணனை சமாளிக்க கொஞ்சம் திணறி தான் போனார் மனிதர்.கூடவே லட்சுவை பற்றி மகளின் கணிப்பை மனதுக்குள் மெச்சி கொண்டார்.கிளப்பும் போதே சாலா தயங்கி தான் தந்தையிடம் லட்சுமணன் மனநிலையை கொடி காட்டி வைத்தாள்.
“சொல்லுக மாமா? நான் என்ன சொன்னாலும் செய்வீகளா?”
“லட்சு என்னைச் சங்கடப்படுத்தாதீக சில நேரம் நம்ப ஊரோட ஒத்துப் போகத் தானே வேணும்”
“என்ன ஒத்து போகனும் மாமா? சொல்ற செய்தி நியாயமா இருந்தா நானே சொல் பேச்சுக் கேட்டிருப்பேன். அவுக பேசி வைக்கிறது எந்த வகையில வருதுன்னு சொல்லுக?” இதற்கு அவர் என்ன பதிலை தந்து விட முடியும் அமைதியாகி போனார் வள்ளியப்பன்.
“ஆத்தா என்ன தப்பு செஞ்சாக? ஒரு பொண்ணை அத்தினி உறவு முன் வச்சு உறுதி கொடுத்துதேன் கை புடிச்சாக.அவுகளுக்கு ஒரு இரக்கம் வரும் போது அன்னைக்குச் சாட்சியா நின்னவுக, அத்தினி பேரும் கூடி நின்னு ஆத்தாளுக்கு வக்காளத்து வாங்கிருக்கணும் தானே.
பொண்ணுக்கு பொண்ணே எதிரினு கேள்வி பட்டிருக்கேன், ஆனா அன்னைக்குத்தேன் நேருல பாத்தேன் மாமா.பெரியம்மா, சித்தி, அத்தை பெரியாத்தா, அப்புச்சினு, அம்மூச்சின்னு ஒரு கூட்டமே கிடக்கு.
இத்தினி பேர் இருந்தும் என் ஆத்தா பக்கம் பேசி நிற்க முடியல பாருக.என்னத்த அவுக செஞ்சாகன்னு நாங்க சடங்கு செய்ய? காசு பணத்தை விடுக மாமா நான் எத்தினி தொலைவுல இருக்கேன்.
எங்களைப் பத்தி தெரியாமையா இருந்திருக்கும்.என் பட்டப்படிப்பு முழுக்க அவுக வூட்டுப் பக்கந்தேன் படிச்சேன் ஒரு நாதி என்னை வந்து எட்டி பாக்கலை மாமா.இப்பேற்பட்ட உறவுகளுக்குச் சபைக மரியாதையைக் கொடுத்து நின்னதே பெருசு” எண்ணெயில் போட்ட கடுகாகப் பொரிந்து தள்ளி விட்டான் லட்சுமணன்.
அவனிடம் இத்தனை நீளமான பேச்சையும், கோபத்தையும் வள்ளியப்பன் கண்டதே இல்லை.கேட்கும் ஒரு கேள்விக்கும் வள்ளியப்பனிடம் பதில் இல்லை.அவருக்கும் லட்சுமணன் மனநிலை புரியாதான் செய்தது இருந்தும் அவர் இதில் இனி பேச முடியாது.
“என்ன மாமா பேச்சை காணல?”
“எனக்கு இதுல என்ன சொல்றதுன்னே தெரியல உங்க அயித்த உறவு வாய்க்கு பயந்து வைக்கிறாக. ஒரு அம்மாவா அவுக எண்ணமும் சரித்தேன். உறவே வேணான்னு போன உறவுக்கு உசரம் உங்களை வாட்டி எடுக்குறது சரியில்லை அந்த வகையில நீகளும் சரித்தேன்.
இப்போ என் நிலை மத்தளத்துக்குச் சமம்.நான் இரண்டு பக்கமும் இடி வாங்கனும்” என்றவர் நிலையும் புரிய.சில பல நிமிடங்கள் மௌனம் கொண்டவன் பிறகு தீர்க்கமாக வள்ளியப்பனை பார்த்து.
சின்னப்ப தாத்தா, சுப்பிரமணி அப்புச்சி, சுந்தரம் அப்புச்சி மூணு பேரை பார்க்க ஏற்பாடு பண்ணுக மாமா நான் பேசுகிறேன்.குறிச்ச தேதில கல்யாணம் பண்ணிடலாம்.அயித்த கிட்ட எதுவும் இப்போ சொல்ல வேணாம்.பேசி முடிவு பண்ணிட்டு அவுகளையே விட்டு பேச வைப்போம்.
நான் பேசி முடிகிற வரை நீகளும் இதுக்குள்ள வர வேணாம்.கை காட்டி விட்டு எட்டி நின்னுக்கோங்க மாமா” என்றவனை பார்த்து தலையைப் பலமாக ஆட்டியவர் கொஞ்சமாகத் தயங்கி,
“நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை இருந்தும் உரிமை இருக்குங்கிற நம்பிக்கையில சொல்றேன். பெரியவுக கிட்டு பார்த்து பேசுக என்னைக்கு இருந்தாலும் என் பொண்ணு உங்களுக்குத்தேன்” அதுவரை கோபமாகக் கிடந்தவன் வள்ளியப்பன் வார்த்தையில் உயிர் கொண்டு வழமையான புன்னகையுடன்.
“ஆஹான்! பின்ன என் மாமன் பொண்ணு எனக்குத்தேன். அவரே கொடுக்கலனாலும் எடுக்க யோசிக்கவே மாட்டேன்” என்றவன் பேச்சில் ஆச்சிரியம் கொண்ட அதிர்ச்சியில் லட்சுமணனை பார்க்க.அவரது பாவனையில் பக்கெனச் சிரித்தான் லட்சுமணன்.லட்சுமணன் சிரிப்பில் வள்ளியப்பன் முகமும் மலர்ந்து நின்றது.
இவர்களது கணக்கு இப்படி இருக்க. அங்கே அண்ணாமலை வேறு ஒரு கணக்கில் நின்றார்.லட்சுமணன் வாய் பேச்சை அவர் செயல் படுத்திக் கொண்டிருந்தார்.ஆம் லட்சுமணன் பேச எண்ணி வைத்திருக்கும் அத்தனை பெரியவர்களிடமும். இவர் பேரனை மீட்டுக் கொடுக்கப் பேசி கொண்டிருந்தார்.
கண் முன் நடந்தவை அனைத்தும் அனர்த்தம் என்று தெரிந்தும் சுயத்தை விட்டு கொடுக்க முடியாமல் மேலும், மேலும் இவர்களைப் படுத்திக் கொண்டிருந்தார் அண்ணாமலை செட்டியார்.தனித்து வாழும் பெண்ணின் நிலை. அதுவும் கணவன் இருந்தும் இந்தச் சமூகத்தில் அவள் போராடும் அவளின் வலியை அவர் இன்னும் உணரவில்லை இனியும் உணர போவதில்லை.
அது என்னவோ அண்ணாமலை போன்ற மனிதர்கள் வாதம் செய்ய முடிவு செய்துவிட்டால் எதிரில் இருப்பர்வர்கள் நியாயமோ, உணர்வோ தெரிவதில்லை அவர்களது ஒரே எண்ணம் தான்,தன் வலி,தன் வாதம் என்றே பேசுவார்கள்.அவர்களைப் பொறுத்த மட்டில் நாணயத்திற்கு ஒரே பக்கம் தான் போலும்.
error: Content is protected !!