Skip to content
Post Views: 4,605
தீபனின் திருமண வேலைகள் கன ஜரூராக நடக்க வீட்டில் வேலை இருந்து கொண்டே இருந்தது நீரதிக்கு.
ஆழியனுக்குமே மர மில் வேலைகள் கழுத்தை நெரித்தது. பத்திரிக்கை வைக்கிறேன் என்று அமுதன் வெளியே அலைய, தேசிகனும் நெருங்கிய சொந்தங்களுக்கு பத்திரிக்கை வைக்க அலைந்தார். தீபனை மில்லிற்கு அனுப்ப மறுத்து விட்டார் பொன்னி.
Advertisement
“மாலை கழுத்தா இருக்கவனை வேலை செய்ய அனுப்பறதா…? அதுவும் மரமில்லுக்கு. அவன் ஃபர்னிச்சர் கடையில் இருப்பான். நீ அந்த வேலையை பாரு செல்வம்”என்று கூற ஆழியனுக்கு மறுத்து பேச இயலவில்லை.
Advertisement
Advertisement
மனைவியோடு நெருங்கியே பல நாட்கள் ஆகியிருந்தது. அவன் வரும் வேளையில் மகளும், மனைவியும் உறக்கத்தில் இருப்பர். இரவு தாமதம் ஆவதால் உணவை மில்லிற்கே எட்டு மணிக்கு எல்லாம் அனுப்பி விடுவாள் நீரதி. இருவரும் ஏற்கனவே அதிகம் பேசுவதில்லை இப்போது இன்னும் விலகல் அதிகம் ஆகிப் போனது.
இரவு வெகுநேரம் கழித்து வந்தவன் மனைவி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சத்தம் இல்லாமல் குளித்து விட்டு வந்தான் ஆழியன்.
Advertisement
வந்தவன் மனைவி அருகில் அமர்ந்து அந்த மெல்லிய வெளிச்சத்தில் தலைக் கோத, சிணுங்கி படுத்தாள் மனைவி. அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் தன் இடம் சென்று படுத்துக் கொண்டான்.
************
இரண்டு நாட்களில் முகூர்த்த கால் ஊன்றி விடலாம் என்று தேசிகன் கூறியிருக்க, அதற்கு தேவையான சாமான்கள் வாங்கவும் ஆழியன் தான் சென்று வந்தான்.
வழக்கம் போல பத்து மணிக்கு மேல் வரவும் மனைவி மகளின் உறக்கம் கண்டவன் சத்தமின்றி குளித்து விட்டு வந்து மனைவியை எழுப்பினான்.
“என்னங்க?”தூக்க கலக்கத்தில் கண்களைத் திறவாமல் நீரதி கேட்க
“வா ரதி!”என்றதும் திடுக்கிட்டு விழித்தாள் பெண். அவளையேப் பார்த்து நின்றவனிடம், “நாளைக்கு முகூர்த்த கால் போடணும்ல?”என்று மெல்லிய குரலில் சொல்லவும்
“தலைக்கு ஊத்திக்க தானே போற?”என்றவன் கீழே போர்வையை விரித்தான்.
“சுத்தமா!”எனும் போதே அவளை முறைத்து விட்டு “இருபது நாள் மேல ஆச்சு”என்றான் கடுப்பாக.
“அதுக்கில்லைங்க”என்றவளிடம் “அஞ்சு நிமிஷம் டி”என்றிட சப்பென்று ஆனது அவளுக்கு.
‘அதான் தெரியுமே!’ என்று மனதில் அலுத்தாலும் கணவனுக்கு இணங்கினாள் நீரதி. சத்தமின்றி ஒரு கூடல். அவனின் திருப்தியில் விழிகள் மூடியவளுக்கு,’ காலையில் எவ்வளவு வேலை இருக்குமோ?’ என்ற சஞ்சலத்தோடு அரைகுறை உறக்கத்தை தொடர்ந்தாள்.
அதிகாலையில் எழுந்து தலைக்கு ஊற்றி விட்டு விரித்த போர்வை எல்லாம் அலசி விட்டு காலை வேலைகளை துவங்கினாள்.
முகூர்த்த கால் போட அக்கம் பக்கத்தில் சிலரை மட்டும் அழைத்திருந்தனர். வீட்டில் நடக்கும் கடைசி திருமணம். மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்து அத்தனை ஆடம்பரம் தான் தீபன் திருமணத்தில். மற்றவர்களை விட கூடுதலாக செலவு செய்தனர் அவனுக்கு. அதிலும் தீபன் ஃபர்னிச்சர் கடையில் பொறுப்பெடுத்த பின்னர், வருமானம் சற்று கணிசமாக உயரவே தேசிகனுக்கு பெருமை பிடிபடவில்லை. அதற்காகவே தாராளமாக செலவு செய்தார். வீட்டில் இளையவன், செல்லப்பிள்ளை வேறு அவனுக்கு செய்வதில் யாரும் பெரிதாக நினைக்கவில்லை. மாறாக மகிழ்ச்சியே கொண்டனர். நிலா மட்டும் சற்று முகச் சுணக்கத்துடன்,” நாத்தனார் முறைக்கு எனக்கு நல்ல காஞ்சிபுரம் பட்டுப்புடவை தான் வேணும் மா, இல்லாட்டி பார்த்துக்கங்க” என்றிருந்தாள். மகள் கேட்டு பின் மறுப்பேது… காஞ்சிபுரத்திற்கு சென்று நேரடியாக பட்டுப்புடவை நெய்ய சொல்லி வாங்கி வந்தனர். திருமண புடவையும், நிலாவுக்கான புடவை மட்டுமே நெய்ய சொன்னது மற்ற பட்டுப்புடவை எல்லாம் அங்கிருந்தவற்றையே வாங்கிக் கொள்ள, அமுதன் மனைவிக்கு தனியே பணம் கொடுத்து நெய்து தரும்படி சொல்லி விட்டு வந்தான். நீரதியும் ஆழியனும் புடவை எடுக்க செல்லாததால் இது நடந்ததே தெரியாமல் இருந்து கொண்டனர். நீரதிக்கு புடவை எடுத்து வந்ததே பெரிய விஷயம் போல பேசிக் கொண்டிருந்த வளர்மதியிடம் அத்தனை மிடுக்கு.
**********
நீரதியின் காலை வேலைகள் துவங்கிட முதலில் தேநீரை கலக்கும் போதே வளர்மதி உள்ளே வந்து விட்டார்.
“விஷேஷத்திற்கு வருபவர்களுக்காக சிற்றுண்டி போல செய்”என்று வளர்மதி கூறவும், “என்னென்ன செய்யணும் னு நீங்களே சொல்லுங்க அத்தை”என்றாள் நீரதி.
“என்ன நீ கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது, இது தெரியலைன்ற”என்று அலுத்துக் கொண்டவர் “கேசரி, உளுந்தவடை, டீ, காபி அப்புறம் தேங்காய் சட்னி செய். வீட்டில் உள்ளவங்க சாப்பிட எப்போதும் போல டிஃபன் மட்டும் செய்யாமல், கூட கொஞ்சம் பொங்கல் பூரி கிழங்கு இதெல்லாம் பண்ணிடு. தருவையும் கூப்பிட்டுக்க. ஆனா அவளை காய் வெட்டி தர வெங்காயம் உரிக்க மட்டும் வச்சுக்க நீரா. உன் அளவுக்கு பக்குவம் வராது அவளுக்கு. “என்றார்.
“சரிங்கத்தை”என்றவளிடம் “நீன்னா வடையை சைஸ் மாறாம தட்டுவ, அவ ஏனோதானோ னு பண்ணுவா”என்று தரங்கினியை மட்டம் தட்டி அவளைப் பாராட்ட செய்ய வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள் நீரதி.
அவளுக்கு தெரியாதா வளர்மதியின் சூட்சுமம். மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டவள் வேலையை கவனித்தாள்.
தரங்கினி வெங்காயம் உரித்து கொடுத்து விட்டு பிள்ளை அழுகிறது என்று சென்றவள் மீண்டும் திரும்பி வரவே இல்லை.
வளர்மதி முணுமுணுத்துக் கொண்டே கொத்துமல்லி தழை பச்சை மிளகாயை அரிந்து கொடுத்தவர் கணவனின் அழைப்பில் விடுதலையான உணர்வுடன் வெளியேறி விட, அதன் பிறகு வந்த நிலாவோ கணவனுக்கு காஃபி வேண்டும் என்று வாங்கிக் கொண்டு கூடவே உளுந்தவடையைத் தூக்கிச் சென்றாள்.
வேலையை முடித்து வருவதற்குள் மணி எட்டாகி இருக்க, நல்ல நேரம் போய்விடும் என்று பொன்னி அனைவரையும் அழைத்தார்.
அதற்குள் அக்கம் பக்கத்தினரும் வந்து விட முகூர்த்த கால் போடப்பட்டது. அரக்க பறக்க ஓடி வந்தாள் நீரதி. சாமி கும்பிட்டதும் கணவன் அழைக்க அங்கே சென்று விட்டவள் முகம் கழுவி வரலாம் என்று குளியலறை புகுந்தாள்.
சற்று நேரத்தில் தரங்கினியும் ,நிலாவும் நீரதி செய்து வைத்திருந்த உணவுகளை பரிமாறினர்.
அவள் வருவதற்குள் மற்றவர்களுக்கு பரிமாறி விட வளர்மதியோ ” நாலு பூரி போட்டதுக்கு வேர்த்துடுச்சா உனக்கு. சீக்கிரம் வா நீரா, எல்லாரும் வந்து எவ்வளவு நேரம் ஆகுது?”என்று அதட்ட
“உட்காரு நீரா சாப்பிடலாம்”என்றாள் தரங்கினி.
மறுபேச்சு பேசாமல் அமர்ந்து கொண்டாள் நீரதி . காலையில் இருந்து வேலை செய்ததில் களைப்பு இருக்க குளித்து விட்டு வந்த பிறகு தான் பசி தெரிந்தது.
“கேசரி பொங்கல் எல்லாம் சூப்பர் நீரு!”என்று வந்த பெண் ஒருவர் பாராட்ட, வளர்மதி தரங்கினியும் சேர்ந்து தான் செய்தாள் என்று சொல்ல வருவதற்குள் மற்றொரு பெண் “நீரா செஞ்சான்னு எப்படி கரெக்டா சொல்ற?”என்று வினவ
“பக்கத்தில் தானே இருக்கேன். எனக்கு தெரியாதா நீரா கைப்பக்குவம். எனக்கு எது செஞ்சாலும் பொன்னி அம்மாச்சி கூப்பிட்டு தராம இருக்க மாட்டாங்களே”என்றாள் அந்த பெண் பெருமிதமாக.
பொன்னியும் அவளோடு இணைந்து கொண்டு “ஏதாவது பலகாரம் செஞ்சா, செய்யும் போதே எங்க நீரு கிட்ட நான் சொல்லிடுவேனே பத்மாக்கு தந்திடுன்னு. பத்மா மட்டும் என்ன அடிக்கடி ஏதாவது செஞ்சா கொண்டு வந்து தருவாளே!!”என்றிருந்தார்.
வளர்மதியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் போக, அனைவரும் சாப்பாட்டை பாராட்டி விட்டு தான் கிளம்பினர்.
“தனியாவா செஞ்ச நீரு?”என்றதும்
“இல்லையே, அத்தை தரு எல்லாம் ஹெல்ப் பண்ணாங்க எல்லாரும் சேர்ந்து தான் செஞ்சோம்”என்று முடித்துக் கொண்டவளைக் கண்டு வளர்மதிக்கு ஒரு திருப்தி.
‘ சிண்டு முடியன்னே வருவாளுக வந்தா வந்த வேலையை மட்டும் பாக்காம’ என்று மனதில் பொடுபொடுத்தபடி நின்றார்.
“நீ என்ன இன்னும் இங்கே இருக்க செல்வம்? மில்லுக்கு கிளம்பலையா? கிளம்பு நேரம் ஆகுது பார்”என்று தேசிகன் பரபரக்க
“கிளம்பிட்டேன் ப்பா”என்ற ஆழியன் உணவருந்தாமல் கிளம்ப
“ஏங்க சாப்பிடாமல்…!”என்று நிறுத்தினாள் நீரதி.
“லாரி லோட் ஏத்திட்டு வருது ரதி, நேரம் வேற ஆச்சு, நீ யார் கிட்டயாவது குடுத்து விடு”பரபரப்பாக கிளம்பி விட்டான் அவன்.
மனதே ஆறவில்லை அவளுக்கு,’ இரண்டு நிமிடம் உண்டு விட்டு போனால் என்ன ஆகிவிடும் முன்பே சொல்லி இருந்தால் கூட எடுத்து வைத்திருப்பேனே?’ என்று புழுங்கிய மனதை அடக்கிக் கொண்டு அவனுக்கான உணவை பேக் செய்தாள்.
தீபனை அழைத்து மில்லில் உணவைக் கொடுக்குமாறு சொல்ல, பொன்னியோ “இன்னைக்கு போய் அவனை அனுப்பற, அதெல்லாம் வேண்டாம் செல்வம் யாரையாச்சும் அனுப்புவான் அவங்கட்ட தந்து விடு”என்றார் அசட்டையாக.
“அவர் வேலை பார்க்கிற மும்முரத்தில் மறந்து இருப்பார் பாட்டி, யாராவது கொண்டு போய் தந்தா பரவாயில்லை”என்று கூறவும்
“ப்ப்ச் பசிச்சா அங்கே ஏதாவது வாங்கி சாப்ட்டுப்பான் நீரா. நீ மத்யான சமையலுக்கு வேலையை பாரு. நிலா வேற மூணு மணிக்கு கிளம்பணும்னு சொல்லிட்டு இருந்தா”என்ற வளர்மதியை ஆற்றாமையாக பார்த்து விட்டு “நானே தந்துட்டு வர்றேன் அத்தை. வந்து சமைக்கிறேன், இல்லாட்டா தருவை இன்னைக்கு ஒரு நாள் பார்க்க சொல்லுங்க”என்று நடக்க
“என்ன சொன்ன…?பிள்ளைய வச்சுட்டு அவ சமைக்கணுமா..? ஒரு நேரம் கடையில் சாப்பிட மாட்டானா செல்வம், என்ன ரொம்ப பேசற நீ?”என்று அதட்ட
“விதவிதமா சமைச்சு வச்சிருக்கேன் அவர் கடையில் சாப்பிடணுமாத்தை?. அரை மணி நேரத்தில் வந்திடுவேன் வந்ததும் சமைக்கிறேன். தருவே தான் பிள்ளைய பார்க்கணுமா? இங்கே இத்தனை பேர் இருக்கீங்க தானே? யாரோ ஒருவர் வச்சிருந்தா சமைக்க போறாங்க”என்றவள், வாசலைத் தாண்டி செல்லப் போக, அமுதன் வந்தான்.
“என்னம்மா நீரா எங்கே போகணும்?”என்று கேட்க
“அவருக்கு சாப்பாடு மாமா”என்று சொல்லவுமே “சாப்பிடாம கிளம்பிட்டானா அவன். சரி குடு நான் குடுத்துடுறேன் நீ ஏன் அலையற?”என்று இயல்பாய் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டான். தரங்கினி முகம் தான் சுருங்கிப் போனது. வீட்டிற்குள் கூட வராமல் ஓடுகிறான் என்ற வருத்தம் அவளிடம்.
“அதான் கொண்டு போயாச்சே, நீ போய் வேலையை பாரு நீரா. நிலாவுக்கு அப்படியே அந்த தக்காளி ஊறுகாயும் செஞ்சுடு எடுத்துட்டு போக கேட்டா”என்றார் வளர்மதி.
மனதில் அத்தனை ஆதங்கம் பொங்கியது நீரதிக்கு. ஆனாலும் பேச முடியாதே ஆதங்கத்தை வெளிக்காட்ட முடியாதே
மனதில் இழையோடிய வேதனையை அடக்கியபடி மதியத்திற்கு அரிசி பருப்பு எல்லாம் ஊறப் போட்டு விட்டு,’ யாரோ உரியுங்கள்’ என்று வெங்காயத்தை தூக்கி வந்து பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் வைத்து விட்டாள்.
“இவ்வளவு வெங்காயம் உரிக்கணுமா நீரு?”என்று தரங்கினி கேட்க
“வறுவல் பொரியல் னு எல்லாத்திலும் போடணுமே தரு. அதுக்கு தான் இன்னும் தக்காளி ஊறுகாய்க்கு பூண்டு வேற உரிக்கணும் எடுத்துட்டு வர்றேன்”என்றவளிடம் “நீயும் சேர்ந்து உரி வா. நிறைய இருக்கே”என வளர்மதி அழைக்க
“அப்போ வெளி அடுப்பை பத்த வச்சு உலை ஏத்துங்கத்தை. நான் பருப்பை வேகப் போட்டுட்டு வந்திடுறேன். ஒரு அடுப்பில் உருளைக்கிழங்கு வேக போடணும். அப்புறம் “எனும் போதே “சரி சரி போய் பூண்டை கொண்டு வா”என்றிருந்தார்.
பின்னே வெளியில் வெயிலில் நின்று யார் விறகடுப்பை பார்க்க? அதற்கு உள்ளே சொகுசாக பூண்டு வெங்காயம் உரிப்பதே மேலல்லவா..?
நீரதி நமட்டுச் சிரிப்புடன் மகளை கவனிக்க சென்று விட்டாள்.
…… தொடரும்
error: Content is protected !!