Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 10

“மை நேம் இஸ் காவேரி. லைக் ரிவர் காவேரி!” என்று சிறுமி ஷோபனா ஆங்கிலத்தில் பேசுவதை ஆனந்தமாக கண்டு கொண்டிருக்கும் மகாநதி பட பாட்டியை போலவே டிவியில் ஓடிக்கொண்டிருந்த அந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் மதுராம்பாள்.

“என்ன பார்க்கிற? அப்படியே உன் ஆசை பேத்தி ஸ்வீட்டி பேசுற மாதிரி இருக்கா?

ஆனா இந்த இங்க்லீஷ் எல்லாம் பத்தாது. அவ இன்னும் நிறைய படிக்கணும்.

நல்ல வேலைக்கு போகணும். அவ அப்பாவை உக்கார வச்ச மாதிரி இவளையும் உக்கார வச்சு அவ லைஃபை கெடுத்துடாதே!” என்றான் அவரது கடைசி மகன் சதீஷ்.



Advertisement

மதுராவின் சின்ன சித்தப்பா.

இஞ்சினியரிங் கடைசி வருட மாணவன்!

மதுராம்பாளுக்கு மூன்று மகன்கள்.

Advertisement

மூத்தவன் அருள்மொழி. இரண்டாமவன் செந்தில்.

Advertisement

மூன்றாமவன் சதீஷ்.

இதில் அருள்மொழி அன்னை பேச்சைத் தட்டாத வாயில்லா பூச்சி!

செந்தில் கெட்டவன் இல்லையென்றாலும் ஆள் பயங்கர சுயநலம் பிடித்தவன்!

Advertisement

தன் வரையில் எல்லாம் சரியாக இருந்து விட்டால் மற்ற எதையும் கண்டு கொள்ளாத ஆள்!

அவனுக்கு பிரச்சினை என்றால் மட்டுமே அவன் வாயைத் திறந்து பேசுவான்.

ஆனால் சதீஷ் அப்படி அல்ல. அவன் அம்மாவே தவறு செய்தாலும்,

“நீங்க பண்றது சரியில்லம்மா” என்று முகத்திற்கு நேரே சொல்லி விடுவான்.

அருள்மொழி தான் அப்படி என்றால், வரப் போகும் அண்ணியாவது கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஆளாக வரட்டும் என்று அவன் எண்ணியிருக்க, ஜாடிக்கேத்த மூடியாய் வானதி!

 அடுத்த வாயில்லா பூச்சி.

இவங்க எப்படியோ போய்த் தொலையட்டும். அடுத்த தலைமுறையாவது கொஞ்சம் தெளிவாக இருக்கட்டும் என்று நினைத்தால், இதோ இந்த ஸ்வீட்டி நல்லா படிக்கிறா.

அவளை டவுனுக்கு அனுப்பி இன்னும் நல்ல கல்விக் கொடுக்கலாம் என்றால் அவள் இப்போது படித்துக் கொண்டிருப்பதும் ரொம்பவும் சுமாரான தரமுள்ள ஒரு தனியார் பள்ளியில்!

“என்னடா இப்ப அவளுக்கு குறை வச்சுருக்கேன். அவளை என்ன கவர்மென்ட் பள்ளிக் கூடத்திலா சேர்த்து இருக்கேன்!

அவளை இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் தானே படிக்க வச்சுட்டு இருக்கேன்!”

“என்னத்த படிக்க வைக்கிற? அவ இப்ப படிக்கிற ஸ்கூலுக்கு பதில் கவர்மென்ட் ஸ்கூலில் படிச்சுட்டு இருந்தா கூட அட்லீஸ்ட் தமிழாவது நல்லா படிச்சுட்டு இருப்பா!

“இப்ப அவ படிக்கிற ஸ்கூல் பசங்க எல்லாம் ரெண்டும் கெட்டானா இருக்கு!

தமிழும் தெரியாம, இங்கிலிஷும் தெரியாம! சொன்னா கேக்குறியா?” சதீஷ் அலுத்துக் கொண்டான்.

உண்மை தான்!

அப்படி தான் இருந்தது அவள் படித்துக் கொண்டிருந்த அந்த பள்ளியின் தரம்!

அந்த பள்ளியின் ஆங்கில ஆசிரியன் அவனது நண்பன் சுகுமார்.

அவனிடமே ஒரு நாள் கேட்டே விட்டான் அவன்.

“ஏன்டா… இன்னும் கொஞ்சம் நல்ல குவாலிஃபைடு டீச்சர்சை ஹையர் பண்ணி இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணலாம் இல்ல உங்க ஸ்கூலில்?”

“நானும் கேட்டுருக்கேண்டா. ஆனா கரஸ்பாண்டன்ட் கிட்ட!

அவர் என்ன சொல்றாருன்னா, குவாலிஃபைடு டீச்சர்சை  கொண்டு வரணும்னா அதுக்கேத்த சாலரி கொடுக்க வேண்டியிருக்கும்!

இந்த கிராம வட்டாரத்தில் என்னால் நான் இப்ப வாங்கிட்டு இருக்கிற பீஸுக்கு அது கட்டுப்படியாகாது.

நான் வாங்குற பீசுக்கு தகுந்த க்வாலிட்டி தான் கொடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்.

நான் மட்டும் தான் இங்க இருக்கிற டீச்சர்களில் குவாலிஃபைடு டீச்சர்! நானும் வெளியே போனா நல்ல சாலரி கிடைக்கும்!

ஆனா எங்க  வயலை யார் பார்த்துப்பா? எனக்கு கோர் பிசினெஸ் விவசாயம் தான்!

படிச்ச படிப்பு வீணாக கூடாதுன்னு இந்த டீச்சர் வேலை!

அதனால என்னால முடிஞ்சது, உன் அண்ணன் பொண்ணு மாதிரி நல்லா படிக்கிற ஸ்டுடென்சை என்னால் முடிஞ்ச அளவு க்ரூம் பண்ணி விடுறேன்!

டெய்லி ஈவனிங் ஃப்ரீயா டுயுஷன் எடுக்கிறேன்!” என்று சொல்லி விட்டான் அந்த நண்பன்!

சதீஷால் ஒன்றும் செய்ய முடியவில்லை!

டவுனில் இருக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டியிருந்தால் மதுரா ஏழு ஏழரைக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்ப வேண்டும்!

அதற்குள் அவள் அம்மா அவளுக்கு இரு நேரத்துக்கும் சமைத்துக் கொடுக்க வேண்டும்!

அது மதுராம்பாள் வைத்திருக்கும் சில பழக்க வழக்கங்களால் அது சாத்தியம் ஆகாது.

ஏனென்றால் வானதிக்கு காலை நேர வேலைகள் அந்த வீட்டில் ஏராளம்!

தலை வாசல், புற வாசல் பெருக்கி சாணி தெளித்து, கோலமிட வேண்டும்!

கூடவே அவர்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் தீப்பாஞ்சி அம்மன் எனப்படும் கிராம தேவதை கோவில் வாசலையும் கூட்டி சுத்தம் செய்ய வேண்டும்.

வீட்டில் இரண்டு கறவை மாடுகள் வேறு இருந்தன!

மாட்டுப் பட்டியைக் கூட்டி சுத்தம் செய்து விட்டு, பின் குளித்து விட்டு தான் அடுப்படிக்கும் நுழையே முடியும் வானதியால்

இதில் அவர்கள் வீட்டிலேயே இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட இரண்டடி மதுரை வீரன் சிலை ஒன்றுக்கும்,

வெளியே இருக்கும் அம்மனுக்கும் தினமும் ஒரு கால பூஜை உண்டு.

வானதி தினமும் தலைக்கு குளித்து விட்டு சுத்த பத்தமாக சமைத்து கொடுக்க வேண்டும்!

அருள் வந்து அதை படைக்க வேண்டும்!

இதற்கு இடையில் தான் காலை உணவு தயாரிக்க வேண்டியிருக்கும்!

மதுரா காலை மட்டும் உணவு உண்டு விட்டு பள்ளி சென்று விடுவாள்.

மதியம் அருளிடமோ அல்லது வேறு யாராவது ஒருவரிடம் டிபன் பாக்சை கொடுத்து விடுவார் வானதி.

இந்த நடைமுறை எல்லாம் மதுராவை டவுனுக்கு அனுப்பி படிக்க வைப்பதை சாத்தியமாக வில்லை!

இந்த நடைமுறை தான் அருளின் படிப்பிற்கும் தடையானது!

“நீ காலேஜ் படிச்சு என்ன பண்ண போறே? நம்ம வயலை பார்த்துக்க இந்த படிப்பு போதும்” என்று சொல்லி ஆசையாக பிகாம் சேர்ந்த அருளை பேசி பேசியே தடுத்து விட்டார் மதுராம்பாள்!

“படிச்சா, படிச்ச படிப்புக்கு தக்க வேலைக்குப் போகணும்! நல்ல வேலைன்னா ஒரு வேளை வெளியூர் போற மாதிரி கூட இருக்கும்!

அப்புறம் நம்ம வயலை எல்லாம் யார் பார்த்துப்பா?

ஒன்னுக்கு ரெண்டு சாமிக்கு பூஜை போடணும் தினமும்! அதை யார் செய்வா?

அதுவுமில்லாம நம்ம சாமி உன்னை அப்படி வெளியூருக்கு எல்லாம் போகவும் விடாது, தடுத்து நிறுத்திடும்!” என்று பலவாறு பேசி நிறுத்ததி வைத்துக் கொண்ட அவரால், அடுத்த மகன் செந்திலை எல்லாம் தடுக்க முடியவில்லை!

“எனக்கு படிக்கணும். என்னால இந்த சேத்தில் எல்லாம் நின்னுட்டு இருக்க முடியாது” என்று சொல்லி படிப்பை முதுகலை வரை தொடர்ந்தவன், பின் சென்னைக்கும் பெங்களூர்க்கும் வேலைக்கு சென்றான்.

அவனை சாமி ஒன்றும் தடுக்கவே இல்லை!

அருளும் இதை அவன் அம்மாவிடம் கேட்கவும் இல்லை! வாயில்லா பூச்சி!

அடுத்து சில வருடங்களில், “போபாலில் வேலைக் கிடைச்சுருக்கு!” என்றான் ரொம்பவும் மகிழ்ச்சியாக!

“பெரிய சென்ட்ரல் கவர்மென்ட் கம்பெனிம்மா. இங்க இருக்கிற பெல்(BHEL) கம்பெனி மாதிரி!

 லைஃபில் செட்டில் ஆன மாதிரி தான்!

என் கூட என்னோட பிரன்ட் குமாரும் சேர்ந்திருக்கான். நாங்க ரெண்டு பேரும் அங்க ஒரு வீட்டைப் பார்த்து அட்வான்ஸ் கொடுத்திட்டோம்!” என்றான் தகவலாக மட்டும்!

மதுராம்பளுக்கு அதிர்ச்சி!

ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை!

“அப்போ.. அவ்வளவு தூரம் போய்டா, அம்மாவ பார்க்க வர மாட்டியாடா?”

“என்னம்மா அப்படி சொல்லிட்ட? ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் கண்டிப்பா வந்துடுவேன்” என்றான்.

ஆரம்பத்தில் வந்தான் தான்!

வரும் போது எல்லாம்  பெரிய பெரிய பைகளை தூக்கி வருவான்!

அவை எல்லாம் வீட்டினருக்கு வாங்கி வந்த பொருட்களாக இருக்காது!

அவ்வளவும் அழுக்குத் துணிகள்! துவைக்க எடுத்து வருவான்.

வானதி அவற்றை எல்லாம் துவைத்து கொடுத்தால், அருள் எடுத்துப் போய் அயர்ன் செய்து வாங்கி வருவான்.

பின் அவனை ஸ்ரீரங்கத்தில் ட்ரைன் ஏத்தி விட்டு வருவதும் இன்னொரு வேலை!

ஆனால் நாளடைவில் அதுவும் குறைந்தது.

“லீவ் இல்லம்மா. குமார் பேமிலி வந்திருந்தாங்க. அவங்களோட டூர் போயிட்டேன்!” என்று சில முறையும் வேறு சில காரணமாகவும் அவன் வருகை குறைந்தது.

வீட்டிற்கும் பணம் எதுவும் அனுப்புவதில்லை! மொத்தமும் அவன் சேமிப்பே!

ஒரு வருடம் கழித்து,

“அம்மா குமார் தங்கச்சியை எனக்கு கொடுக்கிறேன்னு சொல்றாங்கம்மா. நீ என்ன சொல்ற? என்று கேட்டவன்,

“கல்யாணம் அவங்களே பார்த்துப்பாங்க. இங்க நாம சின்னதா ரிசப்ஷன் மட்டும் வச்சா போதும்!

அண்ணன் கல்யாணத்துக்கு செஞ்ச மாதிரி ரொம்பவெல்லாம் கிராண்டா வேண்டாம்.

சிம்பிளா பண்ணினா போதும். அண்ணன் கிட்ட நெல்லு வித்த காசு இருக்குல்ல?”

மகன் தன்னிடம் அனுமதி கோரவில்லை தகவல் தான் சொல்கிறான் என்று புரிந்தது!

ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் சொன்ன மாதிரியே செய்தார்.

அவன் மனைவி மாதமாக இருந்த போது மட்டும் டெலிவரிக்கு ஐந்து மாதங்களுக்கு முன் இங்கே கூட்டி வந்து விட்டிருந்தான்.

அங்கே அவன் மச்சான் மனைவியும் மாதமாக இருந்ததால்.

அப்போதும் கூட அவர் வானதியை தான் படுத்தி எடுத்திருந்தார்.

இத்தனைக்கும் அப்போதும் வானதி வயிற்றில் இனியா!

பார்த்து பார்த்து சமைத்துக் கொடுக்க சொல்லி கவனித்துக் கொண்டார்.

அப்போதும் சதீஸ் தான் திட்டினான்.

“அம்மா. அவங்களும் தான் கன்சீவா இருக்காங்க. ஏன் அவங்கள இப்படி படுத்தி எடுக்கிற?”

“டேய்.. அவ நம்ம வானதிடா. இங்க நம்ம கூடவே இருக்கிறவ. ஆனா தீபா அப்படி இல்ல. கொஞ்ச நாள் தான் இருப்பா. அப்புறம் எப்போ வந்து இவ்வளவு நாள் எல்லாம் இங்க இருக்க போறா? அதான்!”

“உங்கள எல்லாம் திருத்த முடியாது! அண்ணியையும் திருத்த முடியாது!” என்று திட்டி விட்டு சென்று விட்டான் அவன்.

இதோ ஆயிற்று ஐந்து வருடங்கள்!

அன்று போனவர்கள் அதன் பின் போனில் எப்போதாவது பேசுவதோடு சரி.

இடையில் ஒன்று இரண்டு முறை மதுராம்பாள் போபால் சென்று வந்தார் தான்!

ஆனால் அவருக்கு அங்கு ஒட்டவே இல்லை!

விருந்தாளி போன்ற எண்ணமே அங்கு இருந்தது!

மகன் வீடு என்ற உரிமை தோன்றவே இல்லை!

அப்படி தான் நடந்து கொண்டார்கள் அந்த வீட்டினரும்!

இப்போது இனியா பிறந்து ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் வானதி உண்டாகி இருக்கிறாள்.

முதல் இரண்டும் பெண்பிள்ளை ஆகி விட்டது. இதுவாவது ஆணா இருந்தா நல்லது என்று பெரும் எதிர்பார்ப்புடன் பாட்டி இருப்பது தெரியாமல் ஜனித்திருந்தாள் லக்கி!

மதுராம்பாளுக்கு பயங்கர ஏமாற்றம்!

அது வார்த்தையில் வெளிப்பட்டது!

யாரிடம்? அவர் ஆசை பேத்தி மதுராவிடம்!

தெருவில் வந்த வளையல், தோடு விற்கும் ஃபேன்சி ஸ்டோர் வண்டியை நிறுத்தி விட்டு மதுரா அப்பாயியிடம் பணம் கேட்டாள்.

“அப்பாயி.. சூப்பர் சூப்பரா வளையல் இருக்கு. புது டிசைன் கல்லு பொட்டு எல்லாம் இருக்கு அப்பாயி. காசு கொடு” என்று கேட்க,

அவளிடம் சுள்ளென்று விழுந்து வைத்தார் அவர்.

“ஆமா.. இருக்கிற காசுக்கெல்லாம் இப்படி பித்தளை பாசின்னு வாங்கி அழிச்சிட்டின்னா அப்புறம்  உங்க மூணு பேத்தையும் எப்படி கரை சேர்ப்பான் உங்கப்பன்?

அவன் என்ன நோட்டு நோட்டா சம்பாரிக்கிறானா?

போடி அங்கிட்டு?” ஏமாற்றம் தாங்கிக் கொள்ள முடியாமல் அவளை விரட்டி விட்டார் அவர்.

“ஏன்.. நீ எங்கப்பாவை படிக்க விட்டியா? அன்னிக்கு கூட ஆடிட்டர் அங்கிள் ஃபீல் பண்ணினார்.

உங்கப்பன் நல்லா படிச்சான். அவன் இந்நேரம் நல்ல பொசிசனில் இருக்க வேண்டியவன் அப்படின்னு.

நீ மட்டும் அவர படிக்க விட்டுருந்தா, எங்கப்பாவும் நோட்டு நோட்டா சம்பாரிச்சுட்டு தான் இருந்திருப்பார்!

போ. நீ ஒண்ணும் எனக்கு காசு தர வேண்டாம்!

இனி உன்கிட்ட காசு கேட்டா என்னை என்னன்னு கேளு” என்று ரோசமாக சொல்லி விட்டு ஓடி விட்டாள் மதுரா.

அதன் பின் இரண்டு நாட்களாகியும் மதுரா அவரிடம் பேசவே இல்லை!

ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் இருந்தவர், சீக்கிரமே அவள் விலகலை கண்டு கொண்டு சமாதானம் செய்ய முற்பட்டார்.

மதுரா மசியவே இல்லை!

அவள் அப்பா சொல்லி, அம்மா சொல்லி, சித்தப்பா சொல்லி, அவள் டீச்சர் சுகுமார் அதட்டியும் கூட பேசவே இல்லை!

“மன்னிச்சுக்கோ.. அப்பாயி பாவம் இல்லை.. அன்னிக்கு ஏதோ புத்திக் கெட்டுப் போய் உன்னை திட்டிட்டேன்.

இந்த வச்சுக்கோ. பர்சோட வச்சுக்கோ. எல்லா காசையும் நீயே வச்சுக்கோ. அப்பாயி இனி உன்னை திட்ட மாட்டேன்” என்று மிகவும் கெஞ்சி கொஞ்சி தான் அவளை பேச வைக்க முடிந்தது அவரால்!

—–

சரக் சரக் என்று சாணியை அள்ளிப் போட்டு விட்டு மாட்டுக் கொட்டகையை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மதுரா.

சீக்கிரம் இத கிளீன் பண்ணிட்டு உள்ள போய்டணும்.

இல்லனா பக்கத்து வீட்டு மொட்டைமாடியில் காதில் வாக்மேன் சகிதம் அவன் வந்து விடுவான்!

அவன் பார்க்கும் போது நாம இப்படி சாணி கையோட இருக்க கூடாது!

சீக்கிரம் உள்ளே போய்டணும்!

அவன் நேத்து ராத்திரியே வந்து விட்டான். வாசலில் அவன் அப்பாவின் கார் இருந்தது.

மதி அத்தையின் குரலும் கேட்டது!

கோடை விடுமுறைக்கு வந்து விட்டான் இந்த வருடமும்!

அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு!

ஆனால் இப்படி இந்த கோலத்தில் இல்லை! உள்ளே போய் சீக்கிரம் குளித்து விட்டு, அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு போக வேண்டும்.

குட்டி தங்கச்சியை கொஞ்ச வேண்டும்!

இனியா கூட வர்றேன்னு சொல்லும். அதையும் குளிப்பாட்டி கூட்டிட்டு போகணும்!

“பெரிய பாப்பா.. அப்பாயி உன்னைக் கூப்பிடறாங்க” என்று அவளை அழைத்தாள் மணிமேகலை.

மணி அவர்களுக்கு தூரத்து சொந்தம்.

வயது முப்பதை தொட்டும் இன்னமும் அவள் பூப்படையவில்லை! ஏதோ ஹார்மோன் கோளாறு பிறந்ததில் இருந்தே!

திருச்சியில் பிரபல பெண்கள் கல்லூரியின் ஹாஸ்டல் மெஸ்ஸில் உதவியாளராக அங்கேயே தங்கி வேலை செய்கிறாள்.

தற்போது காலேஜ் விடுமுறை விட்டு மெஸ்சை மூடி விட்டதால் ஊருக்கு வந்தவள், வானதிக்கு பிரசவம் ஆகியிருப்பதால் மதுராம்பாளுக்கு உதவிக்காக அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

“இதோ வர்றேன் அத்தை” என்று தன்னை சுத்தம் செய்து கொண்டு உள்ளே போனாள்.

அங்கே ஹாலில் தன் நண்பர்களுடன் நின்று மதுராம்பாளோடு பேசிக் கொண்டிருந்தான் ஊட்டி!

அது தான் அவன் நண்பர்கள் அழைக்கும் அவனது செல்லப் பெயர்!

அவனைக் கண்டதும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது அவளுக்கு!

வார்த்தையில் சொல்ல முடியாத சொல்லத் தெரியாத பரவசம்!

ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா!

“ஏய்.. சீட்டி (ஸ்வீட்டி)! இந்தா சுந்தரியோட பேரன் வந்திருக்கான். நம்ம தோப்புல பம்பு செட்டுல குளிக்கனுமாம்! அதான் வந்திருக்காங்க.

இதுக்கு ஏம்பா என் கிட்ட கேட்டுகிட்டு இருக்கீங்கன்னு சொன்னதுக்கு, உங்க அனுமதியில்லா அங்க போக கூடாதுன்னு சொல்லுது இந்த பிள்ளை!

நல்லா வளர்த்துருக்கா பாரு மதி, அவ புள்ளைய!” அவன் கன்னத்தை வழித்துக் கொஞ்சியவர்,

“நீ ஏண்டி வேலிப்படலுக்கு பூட்டு போட்டு விட்டுருக்கியாம்! அத ஏண்டி பூட்டி வச்சுருக்க? சாவிய கொடுடி..” என்றார்.

“இல்ல பெரியம்மா, போன வாரம் யாரோ ரெண்டு பேர் பம்பு செட் பக்கத்துல உக்கார்ந்து தண்ணி அடிச்சுருக்காங்க.

அடிச்சுபிட்டு அங்கேயே பாட்டிலை உடைச்சும் போட்டுட்டு போயிருக்காங்க போதையில!

நான் குளிக்க போனப்ப என் காலில் குத்திடுச்சு! அதான் பெரிய பாப்பா பூட்டி வச்சுருக்கு” என்றாள் மணி உள்ளே இருந்து!

மவுனமாக ஆணியில் இருந்த சாவியைக் கொண்டு வந்து கொடுத்தாள் மதுரா.

சாவியை வாங்கிக் கொண்டு அவளைப் பார்த்து புன்னகை செய்து விட்டு “தாங்க்ஸ்” என்று சொல்லி சென்றான் ஊட்டி!

நாமளும் தோப்புக்கு போகலாமா என்று எழுந்த ஆசையைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு உள்ளே போனாள் மதுரா!

“டேய்.. இந்த ஸ்வீட்டி புள்ள.. உன்னைப் பார்த்தா தாண்டா. அப்படியே பம்முது!

இதே நாம் போய் சாவிய கேட்டிருந்தா போடா தர முடியாதுன்னு சொல்லியிருக்கும்!

அது மட்டுமில்ல.

 நம்ம கிட்ட நமக்கு இங்கிலீஷ் வராதுன்னு சுகுமார் சார் டுயுசன்ல எப்படி எல்லாம் இங்கிலிஷ்ல பேசி நம்மள மாட்டி வைக்கும்!

இதே ஊட்டி முன்னாடி அவளை பேச சொல்லேன் பார்ப்போம்! வாயே திறக்க மாட்டா!”

“ஏண்டா.. அவளை இப்படி திட்டுறீங்க? அவ நைஸ் கேர்ள்! வெரி காம் அண்ட் கொயட் கேர்ள்!”

“எது அவ அமைதியான பொண்ணா? அவ எல்லாம் வாய திறந்தா போதும்! ஏழு ஊருக்கு கேக்கும்!

எங்க ஸ்கூலுக்கு வந்து பாரு! அவ எவ்வளோ பெரிய டெரர் பீசுன்னு! டெய்லி அசெம்பிளில அவ தான் திருக்குறள் சொல்லுவா! அங்க சொல்றது இங்க உன் வீடு வரைக்கும் கேக்கும்!

அது என்னமோ தெரியல உன்னைப் பார்த்தா தான் பம்முறா!”

அவர்களுக்குள் பேசிக் கொண்டே கலைந்து சென்றார்கள்.

அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவள் பின் குளித்து விட்டு அவள் அம்மாவுக்கு தேவையான மாற்று உடைகள் காலை உணவை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில்  இருக்கும் அவள் அம்மாவைக் காண சைக்கிளில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு சைக்கிளை கிளப்பினாள் மதுரா.

பின்னால் கேரியரில் வந்து அமர்ந்து கொண்டு அவள் வயிற்றைக் கட்டிக் கொண்டு அமர்ந்தாள் ஆறு வயது இனியா!

வானதி அவள் பெற்றோருக்கு காலம் கடந்து பிறந்த ஒரே பெண்!

அதனால் தான் மதுராம்பாளின் கூட்டுக் குடும்பத்திற்கு ஆசையாக கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள்.

அவள் அப்பா வானதிக்கு திருமணம் செய்து கொடுத்த அடுத்த வருடம் இறந்து விட்டார்.

அம்மாவோ இனியா பிறந்து இரு வருடங்களில் இறந்து விட்டார்.

எனவே பிறந்த வீட்டில் யாரும் இல்லை அவள் பிள்ளைப்பேற்றைப் பார்க்க!

அதனால் இனியாவோடு போதும் என்றே இருந்தவர்களுக்கு ஐந்து வருடங்கள் சென்று மீண்டும் ஆண் குழந்தை ஆசை வர மீண்டும் கர்ப்பம் ஆகியிருந்தாள் வானதி!

மதுராம்பாளுக்கு அதே ஆசை!

“நான் பார்த்துக்கிறேன். கூட மணிய வைச்சுக்குவோம்” என்று கூட சொல்லியிருந்தார் அவர்!

ஆனால் எதுவும் நம் கையில் இல்லையே!

அடுத்தும் பெண் குழந்தை!

எனவே அவர் முதல் நாள் சென்று பார்த்ததோடு சரி. பின்னர் போகவில்லை! மதுராவிடம் உணவு மட்டுமே கொடுத்து விடுவார்!

மதியம் அருள் போய் சாப்பாடு கொடுத்து விட்டு பார்த்து விட்டு வருவான்.

அங்கு வேலை செய்யும் நர்ஸ்கள் சிலரின் உதவியோடு தனியாகவே சமாளித்தாள் வானதியும்!

கூடவே குடும்ப கட்டுப்பாடும் செய்து இருந்ததால் மேலும் சில நாட்கள் அவள் ஆசுபத்திரியில் இருக்க வேண்டியிருந்தது!

அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, குட்டிப்பாப்பாவை கொஞ்சி விட்டு, முதல் நாள் கொண்டு போயிருந்த உணவுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் மதுரா!

ஊர் எல்லைக்குள் வரும் போது சைக்கிளின் முன் டயர் பஞ்சராகி விட்டது!

தள்ளிக் கொண்டே வந்த போது எதிரில் நண்பர்கள் குழுவோடு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான் ஊட்டி!

அய்யோ.. இவன் முன்னாடியா இப்படி சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வரணும்? என்று அவளுள் கொஞ்சம் பதட்டம்!

“ஹேய்.. ஸ்வீட்டி என்னாச்சு?” என்றவாறு அவள் அருகில் வந்தான் அவன்.

அங்கேயே நிற்கலாமா? அல்லது சைக்கிளைப் போட்டு விட்டு ஓடலாமா என்று நினைத்தவள், ரெண்டாவதை செய்ய நினைத்து இனியா கையை வலுவாக பிடித்துக் கொண்டு ஓடப் பார்க்க, அவள் கையைப் பற்றி தடுத்தான் ஊட்டி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!