ஜீவ தாளம் : 14
அத்தியாயம் : 14
ஆனந்தவல்லிக்கு வலது மூக்கு அரிப்பது போன்ற ஓர் உணர்வு. ‘யார் நம்மைத் திட்டுகிறார்கள்?’ என்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போதுதான் அந்த ஓவியத்தையே பார்த்தபடி இருந்த, அழகிய இளம்பெண் அவர் கண்ணில் பட்டாள்.
அவளையே பார்த்தவர், ‘யாராக இருக்கும் இந்தப் பெண்?’ என்று யோசிக்க, “நம்ம பூபாலன் அண்ணாவோட மருமகளாம்” என்று விபரம் சொன்னாள் இளவரசி.
‘ஓ! மருமகளா? ஆண்டவன் இந்தப் பெண்ணை அத்தனை அழகாகப் படைத்திருக்கிறானே!’ என்று மனதிற்குள் வியந்தவர், “உன் பெயர் என்னம்மா? அரசி… இவங்களுக்குச் சாப்பிட ஏதாச்சும் கொடுத்தியா?” என்று கனிவோடு கேட்டார்.
Advertisement
ஆனந்தவல்லி தன் மகளிடம் பேசிக்கொண்டிருக்க, ஆனந்திக்கோ உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது.
‘அரசியாம் அரசி! என் தாய் அமர்ந்து ஆள வேண்டிய இடத்தில் இருந்துட்டு இளவரசின்னு பெயர் சூட்டுவதா? இவங்ககிட்ட விருந்துண்ணவா நான் வந்திருக்கேன்?’ என்று சினந்தாள்.
பூபாலன் அவளது மனநிலையைப் புரிந்துகொண்டு அவள் அருகே சென்றார். “ஆனந்தி, நாம நினைப்பது நடக்கணும்னா கொஞ்சம் நிதானம் அவசியம். மனசுல எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை வெளியே காட்டாதே! நான் பேசி உன்னை இந்த வீட்டிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்கிறேன். மற்றதை அப்புறம் நீயே பார்த்துக்கோ” என்று மெதுவாகக் கிசுகிசுத்தார்.
அந்த வீட்டில் இருக்கவே முடியாது என்பது போல அவள் தலையசைக்க, “சொன்னால் புரிஞ்சுக்கோ ஆனந்தி! அமெரிக்காவுக்குத் திரும்ப இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. அதுவரைக்கும் இங்கே இருக்க முயற்சி பண்ணு. கிளம்புறப்போ பக்கத்திலுள்ள திருவனந்தபுரத்திலிருந்து நேரடியாகவே கிளம்பிடலாம்” என்று அறிவுறுத்தினார்.
Advertisement
“அங்கிள், இந்தப் பொம்பளைய பார்த்தாலே எனக்குக் கோபம் கோபமா வருது! கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம நடந்துட்டு எப்படி வசனம் பேசுது பாருங்க!” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் உரைத்தாள் ஆனந்தி.
Advertisement
பூபாலன் மெல்லச் சிரித்தவாறு, “அவங்க சும்மா ஒரு பொம்பளை இல்ல ஆனந்தி… உன் பாட்டி! உன் அப்பாவைப் பெத்த அம்மா…” என்று சொல்ல, சட்டென்று குறுக்கிட்டாள் ஆனந்தி.
“எங்க அப்பாவுக்கே அவங்க அம்மா இல்லையாம்… அப்புறம் எனக்கு மட்டும் எங்கிருந்து வந்தாங்க?” அவளது குரலில் ஆதங்கமும் அநீதி இழைக்கப்பட்ட கோபமும் ஒருசேர ஒலித்தது.
நிலைமையைப் புரிந்துகொண்ட பூபாலன், ஆறுதலாக அவள் தோள் தொட்டுத் தட்டிக்கொடுத்தார். “ஆனந்தி, நீ நினைச்சது நடக்கணும்னா கொஞ்சம் அமைதியா இரு. உன் கோபமும் வெறுப்பும் உன்னை அவர்களுக்கு அடையாளம் காட்டிடக் கூடாது. உன் பேச்சிலும் சரி, நடத்தையிலும் சரி… அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. உன்னைப் பார்க்காம அவர்களால் இருக்க முடியாதுங்கிற அளவுக்கு உன் நடவடிக்கைகள் இருக்கணும்!”
Advertisement
“அங்கிள்… நான் ஒண்ணும் அவங்களை லவ் பண்ண வரல!” என்று அவள் முகத்தைத் தூக்கி வைத்துச் சொல்ல, பூபாலன் சட்டென்று சிரித்துவிட்டார்.
“இதுதான் எங்க ஆனந்தி! எவ்வளவு சீரியஸான சூழலையும் தன் குறும்புப் பேச்சால் மாத்திடுவா. அப்படிப்பட்டவ சொந்தப் பாட்டி மேல கோபப்படுவாளா என்ன?”
“ஐஸ்… ஐஸ்… ஐஸ் பேபி!”
ஆனந்தி அவரைக் கிண்டலடிக்க, அவர் தன் நண்பனின் மகளின் உச்சியில் கைவைத்து, “கடவுள் உன்னை நல்லபடியா வைக்கட்டும்! இதே வீட்டுல நீ காலம் முழுக்க வாழும் பாக்கியத்தை அருளட்டும்! உங்க அப்பாவோட ஆசைகள் எதுவும் அர்த்தமில்லாம போகக்கூடாது” என்று மனதார வாழ்த்தினார்.
அவள் மௌனமாக இருக்க, இளவரசியிடம் பேசி முடித்துவிட்டு ஆனந்தவல்லி அவர்களை நோக்கித் திரும்பினார். இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டவர், “என்ன பூபாலன், உங்க மருமகள் உங்ககிட்ட மட்டும்தான் பேசுவாங்களா?” என்று கேட்டார்.
அவர் ஆனந்தியை விட்டு விலகி ஆனந்தவல்லியின் முகத்தைப் பார்த்தபடி இல்லை என்று தலையாட்டினார்.
“வந்த நேரத்துல இருந்து ஒரு வார்த்தை கூடப் பேசவே இல்லையே உங்க மருமகள்… அவங்க பேர் என்ன?” என்று கேட்க, “ஆனந்தி” என்றார் பூபாலன்.
அந்தப் பெயரைக் கேட்டதும் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து, “ஆனந்தியா?” என்றார்.
“ஆமாம்…”
அவருக்குள் ஏதோ பழைய நினைவுகள் வந்து சென்றன. “அம்மா… நம்ம பையன் வீட்டுக்கு வந்த பிறகு இந்தப் பெயரைச் சொல்லி கூப்பிட்டா நல்லா ஜாலியா இருக்கும்ல?” என்றாள் இளவரசி.
ஆனந்தவல்லி ஆமோதிப்பது போல் தலையசைக்க, ஆனந்தி ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்தாள்.
“என்னம்மா, நாங்க என்ன சொல்றோம்னு புரியலையா? எங்க மூத்த பேரனோட பேரு ஆனந்த்… ஜீவானந்தம்! இப்போ உன் பேரு ஆனந்தி, அவன் பேரும் ஆனந்த்… கூப்பிடுறப்போ ரெண்டு பேர்ல யாரைக் கூப்பிடுறோம்னு தெரியாம நீங்க ரெண்டு பேரும் முழிப்பீங்க இல்ல? அதைத்தான் என் மகள் சொல்றா!” என்றார் ஆனந்தவல்லி.
இப்போது உண்மையிலேயே முழிப்பது ஆனந்தியின் முறையானது. ‘அங்கிள்…’ என்பது போலப் பூபாலனைப் பார்த்து அவள் முறைக்க, அவர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார்!
“ஒரே வீட்டுல ரெண்டு பேரு பேர் பொருத்தத்தோட வரப்போறாங்க… அவங்க மனப்பொருத்தம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்!” என்று விளையாட்டாகச் சொல்லிச் சிரித்தார் ஆனந்தவல்லி.
அரசியால் தன் அம்மாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “அம்மா, நீங்க இப்படிப் பேசுறது என் கணவர் காதுக்குக் கிடைச்சா பெரிய பிரச்சினையாகிடும்!” என்று அடக்க முயன்றாள்.
“ஏன்?” என்று ஆனந்தவல்லி புரியாமல் கேட்க, மகள் அவர் காதோரம் ரகசியமாய்க் கிசுகிசுத்தாள்.
“என் மகன் ஆனந்துக்கு ஏற்கனவே அபிநயாவை பேசி முடிச்சாச்சு. அதுமட்டுமில்லாம, பூபாலன் அண்ணாவோட மருமகள் எந்த ஜாதி, என்ன மதம்னு நமக்குத் தெரியாது. சும்மா விளையாட்டுக்குப் பேசி அவங்க மனசுல ஆசையை வளர்த்துவிட்டா, அப்புறம் என் கணவருக்கு நான் தான் பதில் சொல்லணும். அவருக்கு இந்தக் காதல், கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதா?”
மகள் சொல்வதும் உண்மைதான் என்று ஆனந்தவல்லிக்குத் தோன்றியது. சாதாரண விஷயத்தைக் கூட இத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளும் இந்த வீட்டில், எப்படித்தான் கலகலப்பாகப் பேச முடியும் என்று அவர் மனதிற்குள் சலித்துக்கொண்டார்.
ஆனால், இதைக் கேட்ட ஆனந்தியின் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. ‘காதலித்தால் பிடிக்காதா? இது ரொம்ப நல்லா இருக்கே! அப்போ இவர் மகன் வேற யாரையாவது விரும்புனா இவர்கள் என்ன செய்வார்களாம்? இந்த வீட்டு வாரிசு வேற ஜாதியைச் சேர்ந்தவங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா இவர்களால் என்ன செஞ்சுட முடியும்?’ என்று தனக்குள் கேள்வி எழுப்பிக் கொண்டாள். தன் அப்பாவை ஒதுக்கி வைத்த அந்தத் திமிரை எப்படி அடக்குவது என்று தவித்தவளுக்கு, இப்போது ஒரு வழி கிடைத்துவிட்டது. அவள் முகம் சட்டென்று ஒரு மலர்ச்சியோடு பிரகாசித்தது.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பூபாலனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. வரப்போகிறவன் யார் என்று அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், இவள் வில்லங்கத்தைத் தேடி எங்கும் போக வேண்டியதில்லை, அதுவே இவளைத் தேடி வரப்போகிறது என்று எண்ணிக் கொண்டார். ‘உன் அப்பாவால் காணாமல் போன காதல், அவர் மகளால் மறுபடியும் இந்த மாளிகைக்குள் வரப்போகிறது!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
சிறிது நேரப் பேச்சுக்குப் பிறகு அவர்கள் சாப்பிட அழைக்க, ஆனந்தி வர மறுத்துவிட்டு கிளம்பலாம் என்று பூபாலனிடம் ஜாடை காட்டினாள்.
“என்னம்மா, எங்க வீட்டுல சாப்பிட மாட்டியா? உன் அங்கிள் கிளம்புனதுக்கப்புறம் மலை சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரை எழுத நீ எங்க வீட்டுலதானே தங்கியிருக்கப் போற … அப்போ சாப்பிடாம என்ன செய்வியாம்?” என்று அரசி உரிமையோடு கேட்டாள்.
அத்தையின் அந்த வார்த்தைகள் ஆனந்தியின் முகத்தில் ஒளியைக் கூட்டின. அவர் இவ்வளவு இயல்பாகப் பேசுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. இந்த வீட்டுப் பெண்கள் எல்லோருமே சுமூகமாகப் பழகுபவர்களாகத்தான் தெரிகிறார்கள். ஆனால், அந்தப் பாட்டியைப் பார்த்தால் மட்டும் அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. ‘இங்க இருந்து கிளம்புவதற்குள் இந்தக் கிழவியின் திமிரை அடக்கிட்டுத்தான் போகணும்!’ என்று மனதிற்குள் ஒரு சபதமே எடுத்தாள்.
பூபாலன் இதையெல்லாம் கவனித்து உள்ளுக்குள் சிரித்துக்கொள்ள, ‘என்ன அங்கிள் சிரிப்பு?’ என்பது போல அவள் கண்ணாலேயே கேட்டாள். அவர் பதில் சொல்லாமல் அவளைச் சாப்பிட அழைத்துச் சென்றார். அந்தத் தருணத்தில், அம்பிகாவின் மகள் அபிநயா தன் அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.
சிற்றிடை அசைய, மெல்லிய பாதங்களைத் தூக்கி வைத்து நடந்து வந்துகொண்டிருந்த பெண்ணின் மீது பார்வையைப் பதித்தவளுக்கு, ‘அவள் யார்?’ என்று உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
பூபாலன், “அவள்தான் உன் மூத்த சித்தப்பாவின் மகள் அபிநயா” என்று மெல்லமாய்ச் சொல்லக் கேட்டு, தன் உடன்பிறவா சகோதரியைப் பாசமாக நோக்கினாள் ஆனந்தி.
அவளும் தன்னை ஒத்த வயதில் உள்ள புதிய நபரைக் கண்டதும் முகமலர அருகில் வந்தாள். ஆனந்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு, “உங்களை நான் சுபாவோடு சேர்ந்து ஊரைச் சுத்திப் பார்க்கப் போறப்போ பார்த்திருக்கேன்” என்றாள் மனதில் விகல்பம் ஏதும் இல்லாமல்.
ஆனந்தி சிரித்ததும், “அந்த ஊரை நல்லா சுத்திப் பார்த்துட்டீங்களா? இனிமேல் எங்க ஊர்லயும் சுத்திப் பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கு. நாம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம், சரியா?” என்று அவளுடன் ஒரு நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்ளப் பார்த்தாள் அபிநயா.
மாளிகையில் தனியாக வசித்து வரும் பெண், வேறு யாரிடமும் அதிகமாக நட்பு பாராட்டத் தெரியாதவள், வீட்டின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப வளர்ந்து வருவதால், தன்னை ஒத்த வயதில் உள்ள பெண்ணைக் கண்டதும் அவ்வாறு பேசுவதாக ஆனந்தி நினைத்துக்கொண்டாள்.
“கண்டிப்பா செய்யலாம்!”
அந்த ஒரு வார்த்தையில் அவளது முகம் மலர்ந்துவிட்டது. ஆனந்தியின் வயதைக் கேட்டவள், “நீங்க என்னை விடவும் மூத்தவளா தெரியுறீங்க. அப்போ உங்களைப் பெயர் சொல்லி கூப்பிட முடியாது. ‘அக்கா’ன்னு கூப்பிடட்டுமா?” என்றாள். அந்த வார்த்தையில் ஆனந்திக்குக் கண்கள் கலங்கிவிட்டன!
இதுவரை தனது குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதிக ஒட்டுதல் இல்லாமல் வளர்ந்து வந்த ஆனந்திக்கு, தங்கை உறவில் உள்ள அபிநயா ‘அக்கா’ என்று அழைக்கட்டுமா எனக் கேட்டதும் மனதிற்குள் இனம் புரியாத வேதனை படர்ந்தது. ‘இத்தனை உறவுகளையும் கூடவே இருந்து அனுபவித்து, ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டியவர்களை, எப்படித் தண்டித்துவிட்டார்கள்?’ என்று குமுறினாள்.
என்னதான் இயல்பாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் சீறிக் கொண்டு இருக்கும் உணர்வுகளை அவளால் அடக்க முடியவில்லை.
“நீங்களும் என்னை ‘ஆனந்தி’ன்னே கூப்பிடலாம். நான் என்னோட வேலை முடிஞ்சதும் இங்கிருந்து கிளம்பிடுவேனே… பிறகு எதுக்காக உறவுமுறை சொல்லிக் கூப்பிடப் பார்க்கணும்?”
“அதெல்லாம் இல்லை. நீங்க என்னை விட வயசுல மூத்தவராகவும், அனுபவத்தில் பெரியவராகவும், படிப்பில் உயர்ந்தவராகவும் தெரிவதால் அக்கான்னு மரியாதையா கூப்பிடுவதுதான் சரியா இருக்கும். நான் அப்படி கூப்பிடுவது உங்களுக்குப் பிடிக்கலயா?”
“அதெல்லாம் இல்லை!”
அவள் சமாளிப்பாகக் கூற, “பிறகும் என்ன? ஒருவேளை ‘அக்கா, அக்கா!’ன்னு கூப்பிடுவதால் உங்களுக்கு என்னை விட அதிக வயது இருப்பதா எல்லாரும் நினைச்சிடுவாங்களோ?” என்று கிண்டலாகக் கேட்க, தங்கையின் வார்த்தையில் உள்ள குறும்பு புரிந்து ஆனந்தி சிரித்துவிட்டாள்.
“நீங்க சிரிக்குறப்போ ரொம்ப அழகா இருக்கீங்க. ஆனா, உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு! நீங்க எந்தக் காலேஜ்ல படிச்சீங்க? இதுக்கு முன் நாம எப்பவாவது சந்திச்சிருக்கோமா?” என்று சந்தேகத்துடன் கேட்க, திடுக்கிட்டு விழித்தாள் ஆனந்தி!
இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு, “நான் இந்த ஊருக்கு இதுவரை வந்ததில்லை. இங்குள்ள யாரையும் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. முதல் முறையா இப்பதான் பூபாலன் அங்கிளோடு வந்திருக்கேன். ஒரே ஜாடையில் ஏழு பேர் இருப்பதா கேள்விப்பட்டிருக்கேன்! அதேபோல என்னை ஒத்த சாயலில் யாரையாவது நீங்க பார்த்திருக்கலாம்” என்று சாதாரணமாகச் சொன்னாள்.
“உண்மைதான்! நானும் இப்படி நிறைய பேரைப் பார்த்திருக்கேன். கொஞ்சமே மாற்றமா இருந்தாலும் முன்பின் பழக்கம் இல்லாத நபர்கள் ஒரே ஜாடையில் இருப்பது இறைவனின் படைப்பில் உள்ள ஒற்றுமை!” என்றாள் அபிநயா.
“அப்படியா? நீங்களும் இப்ப என்னைப் பார்த்ததும் சொல்றதைக் கேட்குறப்போ, யார் அப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு! எங்கேயாவது பார்த்தா சொல்றீங்களா?”
“ஏது… நானா?”
இருவரும் மனம் விட்டுப் பேசுவதும் சிரிப்பதுமாய் நடந்து வர, பூபாலனுக்கு ஆனந்தியைப் பற்றிய கவலை கொஞ்சமாய்த் தீர்ந்து போனது. தாங்கள் இங்கிருந்து சென்ற பிறகு, அபிநயா ஆனந்திக்கு நிச்சயம் சகோதரியாய் இருந்து தோள்கொடுப்பாள் என்று நம்பிக்கை பிறந்தது. அதுபோல ஆனந்தவல்லியும் நிச்சயமாகத் தங்களை நம்பி வந்திருக்கும் பெண்ணை நிராசையுடன் அனுப்பி வைத்துவிட மாட்டார். ராஜேந்திரனின் மூர்க்கத்தனம் வெளியே தெரியுமே தவிர, சொந்த மாமியாரிடம் காட்ட மாட்டார் என்பதும் அவர் அறிந்தது. ஆக, கவலை இல்லாமல் இங்கிருந்து சென்னைக்குச் செல்லலாம் என்று மகிழ்ந்தார்.
அதுபோல, எப்போதும் புத்தகமும் கையுமாக அறைக்குள் அடங்கிக் கிடக்கும் தன் மகள், இன்று சிரித்த முகமாக வருவதைக் கண்டதும் அம்பிகாவிற்கு ஆனந்தியைப் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போனது. எப்படியாவது தன் கணவரிடம் பேசி, அந்தப் பெண்ணைத் தங்கள் வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும் என்று அவர் மனதிற்குள் உறுதியாக எண்ணிக் கொண்டார்.
அனைவரும் சாப்பாட்டு மேஜையில் சென்று அமர்ந்தனர். அந்த நேரம் இன்னும் இரண்டு மூன்று புதிய நபர்கள் வருகை தர, அவர்கள் யார் யார் என்று அபிநயா ஆனந்திக்கு அறிமுகப்படுத்திக் கொடுத்தாள்.
அபிநயாவின் தம்பியும், இளைய சித்தப்பாவின் இரண்டு வாரிசுகளும் வருவது கண்டு அவள் உள்ளம் பூரித்தது. ‘எத்தனை உறவினர்கள் எனக்கென இருந்திருக்காங்க! இவர்களோடு சேர்ந்து ஒரு சந்தோஷமான கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ முடியாமல் போயிற்றே!’ என்று அவள் உள்ளம் ஏங்கியது.
வேலைக்காரப் பெண்களை அங்கிருந்து போகச் சொல்லிவிட்டு, அம்பிகாவும் ஜானகியும் உணவு பரிமாற, அபிநயா மற்றும் தனது சகோதர சகோதரிகளின் அருகில் அமர்ந்து உணவை உட்கொள்ளத் தொடங்கினாள் ஆனந்தி.
உணவை முடித்த பின்னர் மறுபடியும் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, ராஜேந்திரன் அழைத்ததால் பூபாலன் அவரைப் பார்ப்பதற்கு அலுவலக அறைக்குச் சென்றார்.
அங்கிருந்து கிளம்பும்போது அபிநயாவுடன் ஒரு நல்ல அழகிய நட்பு உருவாகி இருந்தது. அங்குள்ள சின்னப் பிள்ளைகளின் பேச்சு, தம்பி ஆதர்ஷை நிமிடத்திற்கு நிமிடம் ஞாபகப்படுத்தியது. கண்களில் நீர் நிரம்ப அவள் முகம் கவலையில் மூழ்கி இருக்க, “ஆனந்தி, உங்க அப்பா வீட்டுக்கு வந்து இருந்தியே… அங்குள்ளவர்களை உனக்குப் பிடிச்சிருக்கா? நாங்க போன பிறகு எந்தக் கவலையும் இல்லாம உன்னால அங்க இருக்க முடியும் இல்லையா?” என்று விசாரித்தார் பூபாலன்.
எப்படியும் அமெரிக்காவிற்குச் சென்றால் திரும்பி வரப்போவதில்லை, அதுவரை அவர்களுடன் இருந்துவிட்டுப் போகலாம் என்பது ஆனந்தியின் எண்ணமாக இருந்தது. அதையே அவரிடம் சொல்ல, “நீ மனசு வச்சா நிரந்தரமா அந்த வீட்டுல இருக்கலாம்” என்றார் அவர்.
பூபாலன் என்ன சொல்ல வருகிறார் என்று அவளுக்குப் புரிந்ததால், ‘முடியாது’ என்பது போலத் தீர்க்கமாகத் தலையாட்டினாள். ஒரேடியாகச் சொன்னால் இவள் கேட்க மாட்டாள், போகப் போகத் தன்னாலே மனமாற்றம் அடைவாள் என்று தெரிந்ததால் அவரும் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.
பாரதியும் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து, அங்கு நடந்தவை பற்றிக் கேட்டு அறிந்தார். “நடந்ததை நினைத்து உன்னைப் போட்டு வருத்திக்காம, இனிமேல் நடக்கப் போவதாவது நல்லவிதமா இருக்கட்டும். உனக்குன்னு எவ்ளோ பெரிய குடும்பம் இருக்கு பாத்தியா? அவர்கள் ஒருபோதும் உன்னையும் ஆதர்ஷையும் கைவிட மாட்டார்கள். கவலைப்படாம இரு! இத்தனை வருஷத்தையும் கடத்திய இறைவன் இனிவரும் நாளையும் சுபமா நடத்தித் தருவார்.”
அவள் அமைதியாகத் தலையசைக்க, “கபிலனால் அங்கே தனியா இருந்து எல்லாத்தையும் செய்ய முடியலன்னு சொல்லிட்டு இருக்கான். நாங்க சென்னைக்குக் கிளம்பலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். நீ உன் சாதனங்கள் எல்லாம் எடுத்து ரெடி பண்ணி வச்சுட்டு, மாமா கூடச் சேர்ந்து அங்க போயி சந்தோஷமா இரு. ஒரு சிறு விட்டுக்கொடுப்பு, பிரிந்து போன உறவுகளை நம்மோடு சேர்த்து வைப்பதா இருந்தா, அனுசரணையா நடந்து கொஞ்சம் தாழ்ந்து போவதில் தப்பில்லை. உங்க அம்மா இப்போ உயிரோடு இருந்திருந்தா நான் சொல்றதைத்தான் சொல்லுவாங்க. மத்தபடி உன் வாழ்க்கை, உன் லட்சியம்… அதுல யாரும் தலையிடப் போறதில்லை. கவனமா நடந்துக்கோமா.
வீட்டுல உள்ளவர்களின் மனம் நோகுமாறு எப்பவுமே பேசாதே! நீ இங்கிருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றாலும், உன்னை யாரும் மறக்க முடியாத அளவுக்கு உன் நடத்தைகள் இருக்கணும். நீ அவர்களோடு முழு நேரமும் இருக்கும் ஆசையை, உன் பேச்சும் நடந்து கொள்ளும் விதமுமே ஏற்படுத்தணும். அப்பதான் உன் அப்பாவின் ஆத்மாவும், அம்மாவின் ஆத்மாவும் சாந்தியடையும். இவ்வளவு பெரிய வீட்டுல உரிமையுள்ள வாரிசா வளர வேண்டிய ஆதர்ஷ், மீண்டும் இதே வீட்டுக்கு வந்து வாழணுமா? இல்லை, கண்காணாத இடத்திலேயே கடைசி வரை தங்கணுமா? அதையும் நீதான் முடிவு செய்யணும்” என்றார் பாரதி.
ஆனந்தி அனைத்தையும் கேட்டு அமைதியாகவே இருந்தாலும், அவள் கண்களில் அன்புச்செல்வனின் முகமும், அவரது ஏக்கம் ததும்பிய மனதும், நிராசையாகிப்போன கனவுகளும் வந்து நின்றன. ஒரு முடிவுக்கு வந்தவளாக, அவர்கள் கிளம்பும்போது தன்னை அந்த வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கேட்டுக்கொண்டாள். அந்த வார்த்தைகள் பூபாலனின் மனதிற்குள் பாலை வார்த்தது.
