Skip to content
Post Views: 1,579
அத்தியாயம் 15
“நான் அழுகை நின்னதும் போய்டுவேன். அப்ப தான் போவேன். நீங்க கிளம்புங்க!” என கேவலோடு அஞ்சலி சொல்ல,
Advertisement
“அஞ்சலி! இப்படி ரோட்ல நின்னு அழுதா தான் தப்பு. போய் எதுவா இருந்தாலும் வீட்டுல சொல்லு டா!” என பல்லவி சொல்லிவிட்டு அவள் கிளம்புவது போல் தெரியவில்லை என்றதும் லதாவிற்கு அழைக்கலாமா என்பது வரை யோசிக்க,
Advertisement
Advertisement
“இப்படியே போனா தான் பெரிய பிரச்சனை ஆகும். என் அப்பா ஸ்கூல்க்கு கூட அனுப்ப மாட்டாங்க. நான் இப்ப ஓகே தான்!” என கையில் இருந்த தண்ணீர் பாட்டில் மூலம் அவள் முகம் கழுவ, பல்லவி நகம் கடித்து நின்றாள்.
Advertisement
“வீட்டுல சொல்ல கூடாது சரி. என்கிட்ட சொல்லலாம்னா சொல்லேன்!” அவர்கள் குடும்பத்தில் பார்த்துக் கொள்ளட்டும் என இவ்வளவு நேரம் பொறுமையாய் நின்ற பல்லவி, அஞ்சலி வீட்டில் பேசவே போவதில்லை என்பதை போல முகம் கழுவி தன்னை அவள் நிதானப்படுத்த முயன்றதில் தன்னிடம் கூறுவாளா என யோசித்து கேட்டும் விட்டாள்.
சில நொடிகள் அஞ்சலி முகத்தை துடைத்துக் கொண்டு பல்லவியைப் பார்க்க,
“பெரிய பிரச்சனை எதுவுமா? ஏன் கேட்குறேன்னா வீட்டுல சொன்னா ஸ்கூல்க்கு அனுப்ப மாட்டாங்கனு பயப்படுற. ஆனா தனியா அழுற. அதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு” என்ற பல்லவி,
“வீட்டுக்கு தெரியவே வேண்டாம் பிரச்சனை சால்வ் ஆகிடுச்சுன்னா விட்டுடு. இல்லைனா என்னனு யாராவது ஒருத்தர் நீ நம்புறவங்ககிட்டயாச்சும் சொல்லு. பயந்து மறைச்சு நாளைக்கு பெரிய பிரச்சனை ஆக கூடாது பாரு!” என்று பல்லவி விளக்கம் கூறினாள்.
‘சரி தானே? இத்தோடு முடிந்து விடுமா?’ என அஞ்சலியின் கண்கள் முழுதும் அப்பட்டமான பயம் இப்பொழுது.
“ஸ்கூல் ஹால்ஃப் டேவா?” பல்லவி மணி பதினொன்றே ஆவதைக் கண்டு மீண்டும் கேட்க, இல்லை என்று தலையாட்டினாள் அஞ்சலி.
“ஓஹ்!” என்ற பல்லவிக்கு இதற்கு மேல் எப்படி கேட்பதென்றும் தெரியவில்லை.
“அண்ணி! ஸ்கூல் பக்கத்துல ஒரு பையன். நான் ஆட்டோல இருந்து இறங்கி ஸ்கூல் பக்கத்துல கடைக்கு போய்ட்டு திரும்பும் போது.. “ என்றவளுக்கு கண்ணீர் பொங்கி வழிய, பல்லவி அதிர்ந்து கலவரமாகி,
“என்ன ஆச்சு? எதாவது சொன்னானா? பயந்துட்டியா? யார் என்னனு தெரியுமா?” என தொடர்ந்து கேட்க,
“என்கிட்ட தப்பா பேசிட்டான் அண்ணி!” என்றவள் அழ,
“அஞ்சலி!” என அவளைப் பிடித்து கண்களை துடைத்து விட்டாள் பல்லவி.
“சரி அழாத. ஓகே ஒண்ணுமில்ல. இதுக்கா அழுற?” என ஒவ்வொரு வார்த்தைகளாய் சொல்லி பல்லவி அஞ்சலியை சமாதானப்படுத்தினாலும் உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது நெருப்பு.
கொஞ்சம் அழுகை மட்டுப்பட்டு அவள் சமாதானமாக, “யார்னு தெரியுமா அஞ்சலி? முன்னாடி பார்த்திருக்கியா? வேற எதாவது பேசினானா?” ஏன் ஒவ்வொரு வார்த்தைகளாய் கேட்டு வாங்கினாள்.
“ரெண்டு மூனு நேரம் என் முன்னாடி வந்து நின்னு ஒரு மாதிரி பார்த்திருக்கான். ரொம்ப பயமா இருக்கும். யார் என்னனு தெரியாது. அதுக்கு பயந்தே ஆட்டோவை ஸ்கூல் வாசல்ல தான் நிற்க சொல்லுவேன். இறங்கினதும் உள்ள போய்டுவேன்!” என ஏங்கிக் கொண்டு அவள் சொல்ல,
“ஏன் வீட்டுல சொல்லல?” என்றபடி அவளோடு வீட்டிற்கு நடந்தாள் பல்லவியும்.
“அப்பாக்கு ரொம்ப கோவம் வரும். அம்மாவை தான் எதுக்கெடுத்தாலும் திட்டுவாங்க. இதை சொன்னா என்னையும் எதாவது சொல்லிடுவாங்களோன்னு சொல்லல. இன்னைக்கு…. “ என்றவள் மீண்டும் அழப் பார்க்க,
“இவனெல்லாம் ஒரு ஆளுன்னு அழறியா? அடி வாங்குவ என்கிட்ட!” என்று கண்டிப்பான குரலில் பல்லவி சொல்லவும் அழுகை குறைந்து பல்லவியைக் கண்டாள் அஞ்சலி.
“ரோட்ல போறவன் வர்றவனுக்கெல்லாம் நீ நேரம் குடுக்குற? அவ்வளவு நேரம் இருக்கா உனக்கு?. இவனை மாதிரி ஆளுங்களை இப்படி விடறது தான் தப்பு! நீ முதல் நாளே ஒரு ஸ்டெப் எடுத்து வச்சிருக்கணும் அவனை முறைச்சு.. அடுத்தடுத்த நாள் அது கண்டின்யூ ஆனா அடுத்து எப்படி மூவ் பண்றதுன்னு யோசிக்கணும்” பல்லவி தன் கோபத்தை அடக்கி பல்லைக் கடித்து சொல்ல,
“மாட்டேன் மாட்டேன்! நான் வீட்டுல சொல்ல மாட்டேன். என் அப்பாவை உங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா என்னை தான் திட்டுவாங்க. ஸ்கூல் கூட அனுப்புவாங்களோ இல்லையோ!” என புலம்பலாய் அத்தனை வார்த்தைகள் அஞ்சலியிடம் இருந்து வர, அந்த சிறு பெண்ணின் பயமும் புரிந்து கொள்ள முடிந்தது பல்லவிக்கு.
“சரி! உன் பக்கம் எந்த எதிர்வினையும் வரலைனு அவன் அட்வான்டேஜ் எடுத்து நாளைக்கு வந்தா?” என்று கேட்க, அஞ்சலி உடலில் ஒரு அதிர்வு.
“அதை யோசிக்கணுமே அஞ்சலி! உன்னை பயமுறுத்த சொல்லல!” என்றாள் பல்லவி.
“எனக்கு பயமா இருக்கு. நாளைக்கு வந்தா? ஸ்கூல்ல சொல்லலாமா? இல்ல வீட்டுக்கு தான் அவங்க இன்ஃபார்ம் பண்ணுவாங்க. வீட்டுல…” என்று பயத்தில் யோசிக்கவே முடியவில்லை அஞ்சலிக்கு.
“சரி ஒண்ணுமில்ல. நாம பார்த்துக்கலாம். வந்தவன் இனி அந்த பக்கமே வர யோசிக்கணும். பார்க்கலாம்!” பல்லவி சொல்ல,
“அப்போ நீங்க வர்றிங்களா நாளைக்கு?” என்றவள் கண்களில் அத்தனை வெளிச்சம் வழி கிடைத்ததைப் போல.
“கண்டிப்பா வர்றேன்!” என்றாள் பல்லவி.
“வீட்டுல சொல்ல மாட்டிங்க தானே?” என்று அஞ்சலி அவள் கைபிடித்து கேட்க, அந்த கைகள் நடுக்கம் உணர்ந்து இரு கைகளாலும் அவளைப் பற்றிக் கொண்டு,
“ஒண்ணுமில்ல அஞ்சலி. விடு. பயப்படாத!” என தைரியம் சொல்லி வீட்டிற்குள் வர, அஞ்சலி தன் அறை நோக்கி சென்றுவிட்டாள்.
அவள் அறைக்குள் சென்று மறையும் வரை பார்த்து நின்று விட்டு லதாவின் அறைக்கு பல்லவி வர, லதாவோடு கீர்த்திஸ்வரன், லாவண்யா நின்றிருந்தனர்.
“ஹ்ம்! இவங்க இதை ஒரு பிரச்சனைனு வருஷகணக்கா தீர்ப்பு எழுதுறாங்க!” என அசட்டையாய் அவர்களை பார்த்து வைத்த பல்லவி பார்வையைக் கண்டு லாவண்யா முறைக்க,
“உள்ள வா பல்லவி! எப்ப வந்த?” என்றார் லதா.
“நான் ஹால்ல இருக்கேன் லதாம்மா!” பல்லவி சொல்ல, கீர்த்திஸ்வரன் கடமையே என நின்றிருந்தான்.
“நீ புக்ஸ் வாங்க போறதா தானே மார்னிங் கால் பண்ணின? வர்றேன்னு சொல்லலையே!” லதா பல்லவியிடம் கேட்க,
“இப்ப அதுவா முக்கியம்? நான் பேசினது உங்க காதுல விழுந்துச்சா இல்லையா?” என லாவண்யா லதாவிடம் கேட்க,
“ப்ச்!” என குரல் மட்டும் வந்தது கோபமான கோபமாய் ஈஸ்வரிடம் இருந்து.
“நான் ஈஸ்வர் சார்கிட்ட தான் பேசணும். வெயிட் பண்றேன்!” என அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் வேகமாய் பல்லவி.
“இப்ப கூட நான் இங்க நிக்குறேன். அந்த வேலைக்காரிக்கு போய் நீங்க எல்லாரும் இம்போர்ட்டண்ட்ஸ் குடுக்குறிங்க” லதா மற்றும் கீர்த்திஸ்வரன் பார்வை பல்லவியிடம் சென்றதை வைத்து லாவண்யா சொல்ல,
“லாவண்யா உனக்கு எத்தனை முறை தான் சொல்றது? அவ வேலை பாக்குறவ இல்ல. என் நாத்தனார் பொண்ணு” லதா தான் கொஞ்சம் கண்டிப்பாக கூறினார்.
எவ்வளவு தான் தடவிக் கொடுக்க முடியும்? மூன்று மாதங்கள் தான் ஆகிறது இப்போது திருமணம் வேண்டாம் இரண்டு வருடங்கள் போகட்டும் என ஈஸ்வர் சொல்லி. அதற்குள் அவளே வந்து நிக்கிறாள் அவள் கல்யாணத்தைப் பற்றி பேச என்று.
“பார்த்திங்களா பார்த்திங்களா? இப்ப தான் அவகிட்ட சிரிச்சுகிட்டே பேசினீங்க. இப்ப என்கிட்ட கோவப்படுறீங்க!” லாவண்யா சொல்ல, ஆயாசமாய் மகனைப் பார்த்தார் லதா.
எனக்கென்ன என்பதை போல நின்றான் அவனும் கண்டுகொள்ளாமல்.
“நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல லாவண்யா. இப்படி அடிக்கடி வந்து கேட்டா ஈஸ்வர்க்கும் தேவையில்லாத டென்ஷன் தான். அதான் வேண்டாம்னு சொல்றானே. விட வேண்டியது தானே! ரெண்டு வருஷம் எல்லாம் சீக்கரமே போய்டும். நீயும் இப்படி வந்து போய் இருக்கலாம்” கொஞ்சம் காரமாய் தான் கூறினார் லதா.
இதையே பலவிதமாய் சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லையே. இமை இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டாள் என ஒவ்வொரு முறையும் இவர்கள் நினைத்தால் கொஞ்சமும் அப்படி நினைக்காமல் வந்து நின்று இப்படி பேசுபவளை நினைத்து தலை சுற்றியது லதாவிற்கு.
“நான் ஏன் இப்படி வந்து போய் இருக்கணும்? எல்லாம் என் நேரம். நான் என்ன சொன்னாலும் கேட்குற என் அப்பாவெ கல்யாண விஷயத்துல இப்ப என் பேச்சை கேட்கல. ஈஸ்வர் அப்பாவும் இப்பலாம் என்னை கண்டுக்கவே மாட்டறாங்க. அதனால தான் உங்களை தேடி வந்தேன்!” என்றாள் லாவண்யா.
”இதெல்லாம் பெரியவங்க எடுக்க வேண்டிய முடிவு லாவண்யா. நீ சொல்ற உன்னோட ட்ரீம் வெடிங்காக அவன் ட்ரீம்மை எப்படி பாழாக்க முடியும்? நீ எவ்வளவு கேட்டாலும் ஈஸ்வரை இதுல யாரும் கட்டாயப்படுத்த விரும்ப மாட்டாங்க!” என்று கறாராய் கூறிய அன்னையை கொஞ்சம் புன்னகையை அதக்கி தான் கண்டான் கீர்த்திஸ்வரன்.
“நீங்க என்னை புரிஞ்சிப்பிங்கனு நம்பி வந்தேன்!” லாவண்யா முகம் சுருக்கி சொல்ல,
“எல்லாரும் எல்லாரையும் புரிஞ்சிக்குறாங்களா என்ன? எல்லாம் சரியாகும். இப்ப கிளம்பு டா!” என நேராகவே சொல்லிவிட்டார் லதா.
என்னவோ பல்லவியை பார்த்து பேச தான் அவருக்கு அத்தனை ஆசை. இப்படி லாவண்யாவை வைத்துக் கொண்டு பேச முடியாமல் அவர் அனுப்பப் பார்க்க,
“போறேன். ஆனா வருவேன். நான் சொன்னதை நீங்களும் யோசிங்க!” என்று சொல்லிவிட்டு தான் சென்றாள் லாவண்யா.
“ம்மா!” என லாவண்யா சென்றதும் அன்னையை ஈஸ்வர் அணைத்துக் கொள்ள,
“நீயுமா டா!” என்றாலும் புன்னகையுடன் தட்டிக் கொடுத்து ஹாலுக்கு வந்தார் லதா.
“பல்லவி!” என்று அழைக்கவும் தீவிர சிந்தனையில் இருந்தவள் எழுந்து கொள்ள,
“ஏதோ பேசணும் சொன்னியே!” என்றது லதா.
“சரியா போச்சு. நான் உங்ககிட்ட பேசணும் சொல்லல. சார்கிட்ட தான் பேசணும் சொன்னேன்!” என்றவள் முறைப்பில்,
“அதென்ன ரகசியம் எனக்கு தெரியாம உங்க சார்கிட்ட?” லதா கேட்க, ஈஸ்வரும் அவளை தான் கண்டான்.
“எனக்கு காசு தர்றது சார் தானே?” பல்லவி கேட்க,
“அம்மாகிட்ட வாங்கிக்கோனு தான் சொல்லிருக்கேனே உன்கிட்ட?” என்றவனை நினைத்து அவள் தலையில் கைவைக்க,
“இப்ப என்ன அவன்கிட்ட நீ பேசணும். நான் கூட இருக்க கூடாதா?” லதா கேட்க, நொடியும் யோசிக்காமல் ஆமா என்றிருந்தாள் பல்லவி.
“டேய் பேசு டா. நான் போறேன்!” என்று சொல்லி லதா சமையலறைக்கு காபி கேட்டு நகர,
“லதாம்மா ஒட்டு கேட்கவெல்லாம் கூடாது!” என்று சொல்லி அவர் தலை மறையும் வரை அமைதியாய் நின்றாள்.
error: Content is protected !!