Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…24

தூறல் – 24
குரு ராமேஸ்வரம் வந்து நான்கு நாட்கள் ஓடிய வேகம் தெரியவில்லை. வீட்டை விட்டு எங்கும் வெளியேறவில்லை. சமைந்த குமரியைப் போல் வீட்டிற்குள்ளேயே அடைக்கலமாகி இருந்தான். தன் உயிரானவளையும் ஆசை மகளையும் சுற்றி வருவதே போதும் என்று தோன்றியது போலும். 


Advertisement

தன் குடும்பத்தோடு தனிமையில் இனிமையாக நேரத்தை கழிக்க வேண்டும் என்ற பேராவல் பீறிட்டுக் கிளம்பியதால் வீட்டை விட்டு அங்கும் இங்கும் அசையவில்லை. அவனது இரு கண்களாக மாறிப்போன இரு பெண்களும்கூட அவனை இங்கும் அங்கும் அசைய விடவில்லை என்பதும் மற்றொரு நிஜம். 
குறுகிய காலத்தில் அவன் உலகமே மாறிப் போய் இருக்கிறது. இனி அவன் வாழப் போகும் வாழ்க்கை அவர்களுக்காக மட்டுமே என்று இதயம் இடித்துக் கூறியதோ அடித்துக் கூறியதோ ஆழமாக அவர்களை தன் உள்ளத்தின் ஆழத்தில் பதித்துக் கொண்டான் குமரகுரு. 

Advertisement

Advertisement

தன் மருமகனின் மகிழ்ச்சி முகம் கண்டு நெக்குருகிப் போய் இருந்தார் ராதா. அவன் வாழ்விற்கு இப்படி ஒரு அர்த்தம் பிறக்கும் என்று அவரும் கனவில்கூட நினைக்கவில்லையே. கடவுளிடம் எத்தனையோ பிரார்த்தனைகள்… ஆனால் அவன் வாழ்வு வளம் பெறுமா என்ற பெரிய கேள்விக்குறி அவர் இதயத்தில் அடைப்பாக மாறி நின்று போய்தான் இருந்தது. இன்று அடைப்பை நீக்கிய கருவிபோல் அஞ்சலியும் சவியும் குருவின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல அவரின் வாழ்க்கைக்கும்கூட அர்த்தம் கொடுத்தது போல் உணர்கிறார். 
அஞ்சலிக்கும் பள்ளி விடுமுறை என்பதால் தன் மனம் கவர்ந்தவனுடன் முழுமையான நேரத்தை செலவிட முடிகிறது. அவள் வாழ்க்கையும் அத்தனை வசந்தமாக மாறிப் போயிருக்கிறது. அவள் ஆசைப்பட்டு ஏங்கிய, கிடைக்குமா என்று தவித்த, கிடைக்க வாய்ப்பே இல்லை என்று விரக்தியாய் யோசித்த அனைத்தும் அவள் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது. 

Advertisement

காதல் பார்வையும், காந்தப் பார்வையும், அக்கறையான வார்த்தைகளும், சின்ன சின்ன சில்மிஷங்களும், எல்லை மீறாத முத்தங்களுமாக அவளை முழுமையாய் தனக்குள் சுழட்டிப் போட்டு வைத்திருக்கிறான் அவள் நெட்டிலிங்க மரம். 
அவள் பார்த்து பார்த்து சமைக்கும் உணவை காதலோடு அவள் பரிமாற அதனை ரசித்து உண்பவனுக்கு வயிறோடு மனமும் நிறைந்து போகிறது. 
அன்றும் காலை உணவை முடித்து நடுக்கூடத்தில் மல்லாக்க படுத்துக் கொண்டு தன் மகளை மார்பில் போட்டு குழந்தைபோல் அவளோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தவனை பார்த்தபடியே காய்ந்த துணிகளை ஓரமாக அமர்ந்து மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
விழி அகற்றாமல் தன்னையே பார்ப்பவளை திரும்பிப் பார்த்தவன் “என்னடி… கண்ணுல அப்படியே பொறாமை பொங்கி வழியுற மாதிரி தெரியுது… நீயும் வா… வந்து படுத்துக்கோ… இடம் எல்லாம் தாராளமா இருக்கு…” என்று செல்லமாக கண்சிமிட்டி தன் நெஞ்சை தட்டிக் காட்டினான் குரு. 
அவளோ ஒரு சிறு புன்னகைகூட சிந்தாமல் அமைதியாக அவனையே ஆழ்ந்து பார்த்தபடி அமர்ந்திருக்க “என்னாச்சுடி..? இங்கே வா…” அக்கறையான குரலோடு தனது நீண்ட கையை அவளை நோக்கி நீட்ட அவன் விரல் பற்றி கொண்டு நகர்ந்து அருகில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி. 
“சாரி…” 
திடீரென அவள் கேட்ட மன்னிப்பில் ஒன்றும் புரியாமல் தலையை தூக்கி அவளை பார்த்தவன் எழுந்து அமர்ந்து கொண்டான். அவள் ஏதோ சங்கடத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது. சுவற்றின் ஓரத்தில் இருந்த சவியின் விளையாட்டு பொருட்களில் ஒன்றை கையில் எடுத்தான். வெவ்வேறு வடிவங்களில் கலைந்து கிடக்கும் பிளாஸ்டிக் சதுரங்களை ஒன்றிணைத்து உருவமாக மாற்றும் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு அது. அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் யானையின் உருவத்தை சரியாக கண்டுபிடித்து ஒன்றிணைக்க வேண்டும். 
“அம்மு… இதை எப்படி விளையாடணும்னு நேத்து அப்பா உன்கிட்ட சொல்லிக் கொடுத்தேன்ல. இதே மாதிரி யானையை கரெக்டா செட் பண்ணி முடிச்சேன்னா இன்டைக்கு சாயந்திரம் நீ நான் அம்மா மூனு பேரும் ஐஸ்கிரீம் சாப்பிட போகலாம்… ஓகேவா…” 
மகளிடம் குனிந்து கூற மகிழ்ச்சியில் கண்கள் விரித்தவள் “நிஜமாவாப்பா…? ஐஸ்கிரீம் வாங்கி தருவீங்களா..?” ஆர்வமாக கேட்டாள். 
“கண்டிப்பா… ரெண்டு ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன்…” 
சொன்னவன் மகளின் கன்னத்தில் முத்தமிட மகிழ்ச்சியோடு குதித்துக் கொண்டு அனைத்தையும் அள்ளிக் கொண்டு சுவற்றின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள் சவி. 
அவள் கவனம் முழுக்க விளையாட்டில் பதிந்து போனதை உறுதி செய்து அஞ்சலியிடம் திரும்பினான். 
“சம்பந்தமில்லாம இப்ப எதுக்குடி மன்னிப்பு கேட்டுட்டு இருக்க..? உன் மனசு எதை போட்டு குடைஞ்சுட்டு இருக்கு… ம்ம்…”
மெல்லிய குரலில் கேட்டு மென்மையாய் அவள் தலை வருடினான். 
“ஆரம்பத்துல ஒருமுறை இதே மாதிரி மதுரையில உங்க வீட்ல சவியை இப்படித்தான் உங்க நெஞ்சில போட்டு விளையாடிட்டு இருந்தீங்க. அப்போ உங்களை கண்டபடி பேசி பாப்பாவை உங்ககிட்ட இருந்து புடுங்கிட்டுப் போனேன். அப்போ நான் கேட்ட வார்த்தைகள் எல்லாம் ரொம்பவே கடுமையான வார்த்தைகள். அது உங்களை எவ்வளவு பாதிச்சிருக்கும்னு எனக்கு தெரியும். ஆனாலும் எனக்குள்ள இருந்த கோபத்தில அப்படியெல்லாம் பேசிட்டேன்… அதுக்குதான் இப்போ மன்னிப்பு கேட்டேன்…” 
வேதனையோடு சொன்னவளை பார்த்து பற்கள் தெரியாமல் புன்னகைத்தான் குரு. 
“எப்பவோ நடந்ததை இப்ப யோசிச்சுட்டு ஃபீல் பண்றியா..? செல்லக் கிறுக்கிதான்டி நீ..?” சொன்னவன் செல்லமாக அவள் மூக்கை பிடித்து இழுத்தான். 
“ஆனாலும் நான் அப்படி சொன்னப்போ நீங்க எவ்வளவு துடிச்சுப் போயிருப்பீங்க..?” 
சங்கடத்தோடு சொன்னவளின் விரல்களை மென்மையாய் பற்றி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான் குரு. 
“உண்மைதான்… ரொம்ப ரொம்ப துடிச்சுதான் போனேன். அவ்வளவு வலிச்சது… கண்ணெல்லாம்கூட கலங்கிடுச்சு… ‘சவி’ அந்த பேர் என்னை முழுசா அவ பக்கம் இழுத்தது. இந்த சங்கவிக்குள்ள நான் சைந்தவியை பார்த்தேன். என்னையும் அறியாம இவமேல அப்படி ஒரு ஒட்டுதல். அவகூட விளையாண்ட ஞாபகத்துல இவகூட அவ்வளவு ஆசையா விளையாடினேன். நீ அந்த வார்த்தை சொன்னப்போ நெஞ்சுல ஈட்டியை சொருகின மாதிரி அவ்வளவு வலிச்சது. உன்மேல நிறைய கோபம் வந்தது. ஆனா உன்னை சுத்தி இருந்த ஆம்பளைங்க எல்லாம் உனக்கு கொடுத்த காயம்தான் உன்னை அப்படி எல்லாம் பேச வச்சிருக்கும்னு அதுக்கப்புறம் புரிஞ்சுக்கிட்டேன் அஞ்சு…” 
“உண்மைதான் குரு… ஏனோ கடவுள் என்னை சுத்தி இருந்த ஆண்களை சரியானவங்களா கொடுக்கவே இல்ல. என்னோட தோழி ஒருத்தி… ரொம்ப நெருக்கமான தோழி… அவளும் மதுரைதான்… ஒன்னாதான் படிச்சோம்… அவளும் ஒரு ஸ்கூல்ல டீச்சராதான் வேலை பார்த்தா… உள்ளூரிலேயே கல்யாணம் பண்ணி அவ புருஷனுக்கும் அங்கேதான் வேலை. அவளுக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்த குழந்தைக்கு ஒரு ரெண்டு வயசு இருக்கும். ரெண்டு பேருமே வேலைக்கு போறதால அவ அம்மா வீட்டுல விட்டுட்டு போயிடுவா. சாயந்திரம் வேலை முடிஞ்சு வந்து குழந்தையை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவா. இப்படி இருக்கும்போது திடீர்னு குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கு. குழந்தையும் ஏதோ மிரண்டு போன மாதிரியே இருந்திருக்கா. சாதாரண காய்ச்சல்தானேன்னு கையில இருக்கிற டானிக் கொடுத்து அடுத்த நாள் காய்ச்சலும் சரியாயிடுச்சு. மறுபடியும் வழக்கம்போல அம்மா வீட்ல விட்டுட்டு இவ வேலைக்கு போறதும் வர்றதுமா இருக்க குழந்தைக்கு அடிக்கடி உடம்பு முடியாம போய் ஒரு கட்டத்துல இனிமே அம்மாயி வீட்டுக்கு நான் போகலேன்னு சொல்லி அந்த குழந்தை அழுதிருக்கு. அதோட குழந்தையை குளிச்சு விடும்போது அங்கங்கே சில காயங்களையும் அவ பார்த்திருக்கா…” 
அடுத்து சொல்ல முடியாமல் குரல் விக்கினாள் அஞ்சலி. அவள் பேசுவதை அமைதியாக உள்வாங்கியபடி அமர்ந்திருந்தான் குரு.
“கா..காயம்னா பல் தடம் பட்ட மாதிரி அவ மார்புப் பகுதியில வயித்து பகுதியில அப்புறம்… அப்புறம்…”  
மேற்கொண்டு பேசாமல் அவள் கண்ணீரை சிந்த அவள் சொல்ல வந்ததை புரிந்து கொண்டவன் அவளை பட்டென இழுத்து நெஞ்சில் சாய்த்து கொண்டான்.
நெஞ்சம் கனன்று கொதித்தது… அவள் சொல்ல வந்த விஷயத்தின் முழு சாராம்சமும் அவனுக்கு புரிந்துபோனது. பச்சை குழந்தையை… பால் மனம் மாறாத சின்னஞ்சிறு சிசுவை… இப்படியா..? ‌யார்.? 
“யார்..? எப்படி அவ பாட்டி கவனிக்காம போனாங்க..?” 
இதயம் கொந்தளித்தாலும் குரலை மென்மையாக்கி அவள் தலை வருடியபடியே கேட்டான். 
“பக்கத்து வீட்ல ஒரு 50 வயசு இருக்கும் அந்த ஆளுக்கு… பொண்டாட்டி இல்ல…பையன் காலேஜ் படிக்கிறான். என் பிரண்டோட அம்மாவும் அவசரமா ஏதாவது வேலை இருக்கும்போதோ கடைக்கு போகும்போதோ அந்த ஆள்கிட்ட பாப்பாவை விட்டுட்டு போயிருக்காங்க. இவனும் ரொம்ப நல்லவன் மாதிரி அவங்களுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி பாப்பாவை நானே பார்த்துக்கிறேன்னு அடிக்கடி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருக்கான்… அ..அப்போதான்…” 
“பொறுக்கி ராஸ்கல்… விஷயம் தெரிஞ்சு அவனை சும்மாவா விட்டாங்க..?” வெறியோடு பற்களை நறநறத்தான் குரு. 
காயத்தைப் பார்த்து சந்தேகப்பட்டு என் ஃப்ரண்ட் பாப்பாகிட்ட விசாரிக்கும்போது அந்த பிள்ளைக்கு என்ன சொல்ல தெரியும்..? அந்த ஆள் அவகிட்ட நடந்துக்கிட்டதை அவளுக்கு தெரிஞ்ச வகையில சொல்லி இருக்கா. துடிச்சுப் போயிட்டா… இதைவிட கொடுமை அவ அப்பாவை பார்த்தாலே பயத்துல அந்த புள்ள ஒதுங்க ஆரம்பிச்சிட்டா. இனி வளர்ற காலத்துல புள்ள மனசளவுல ரொம்ப பாதிப்பாயிடுவான்னு தெரிஞ்சு இந்த பிரச்சினையை பெருசாக்கினா புள்ள பேர்வரைக்கும் நாறிடும்னு பயந்து இந்த ஊரே வேண்டாம்னு ரெண்டு பேரும் அந்த பையனோட சொந்த ஊருக்கே போயிட்டாங்க…பிள்ளையைப் பார்த்துக்கறதுக்காக அவ வேலையையும் ரிசைன் பண்ணிட்டா…” 
“அந்த பொறுக்கி நாயை சும்மா விட்டுட்டு போனாங்களா..?” 
“ஆத்திரம் தீர அடிச்சு நொறுக்கிட்டுதான் போனார் அவ புருஷன். குழந்தையை காட்டி என்கிட்ட அவ அழுதப்போ என் மனசே இத்து போயிடுச்சு குரு. என் வாழ்க்கையில கையாலாகாத அப்பா, சுயநலமான அண்ணன், வேஷம் போட்டு வாழ்ந்த அந்த கொஞ்சநாள் புருஷன், அம்மாவா நினைக்க வேண்டியவளை காசுக்காக வேற மாதிரி நினைச்ச அவன் தம்பி, அப்புறம் அந்த காமக் கொடூரன், இப்படி என் பார்வையில் பட்ட ஆம்பளைங்க எல்லாருமே எனக்குள்ள வெறுப்பை ஏற்படுத்தி வெச்சிருந்தாங்க. அதனாலதான் அன்னைக்கு நான் அப்படி பேசிட்டேன்…” 
குரல் கமற கூறியவள் வேதனையோடு அவனை நிமிர்ந்து பார்க்க அவள் நெற்றியில் மென்மையாய் முத்தம் பதித்தான் குரு. 
“இனி பழசு எதையும் உன் மனசுல போட்டு குழப்பிக்க கூடாது… சரியா..? அதை எல்லாம் நீ கடந்து வந்துட்ட… இப்ப உன் கண்ணுல மனசுல முழுக்க முழுக்க நான் மட்டும்தான் இருக்கணும். ஒரு நல்ல ஆம்பள எப்படி இருப்பான்னு இனி வர்ற நாட்கள்ல உனக்கு நான் காட்டுவேன்…” அவள் கன்னத்தில் தவழ்ந்த முடியை காதோரம் ஒதுக்கியபடியே மென்மையாக கூறினான்.
“ஏற்கனவே நிறைய உணர்த்திட்டீங்க… நானும்கூட ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேன்… கடவுள் உங்களை எங்க வாழ்க்கையில கொண்டு வந்து நிறுத்திட்டாரே…” 
உரிமையாய் அவன் நெஞ்சில் சாய்ந்து அவனது செதுக்கப்பட்ட தாடியை வருடிக் கொடுத்தபடியே கூறினாள் அஞ்சலி. 
“இப்ப நீ சொன்னது எனக்கும்கூட பொருந்தும் அஞ்சு… கடவுளுக்கு தெரியும்… யார் யாரை எங்கெங்கே சேர்க்கணும் எப்போ சேர்க்கணும்னு… நம்ம விஷயத்தில அப்படித்தான் நடந்திருக்கு…” 
அவளை முதுகோடு சேர்த்து தன்னோடு இறுக்கி அணைத்தபடி கூறியவன் அவள் உச்சியில் நாடியை அழுத்தமாக குற்றிக் கொண்டான். 
“அப்பா… சேர்த்து முடிச்சுட்டேன்…” 
அவன் செல்ல மகளின் மழலைக் குரல் பக்கவாட்டில் இருந்து கேட்க வேகமாக அவளை விட்டு விலகிக் கொண்டான் குரு. 
என்ன இருந்தாலும் மகளின் முன் தன்னவளோடு நெருக்கமாக இணக்கமாக இருப்பது பிழை என்று அவனது படித்த மனம் இடித்துரைப்பதால் மகளின் முன்னிலையில் அவளை விட்டு விலகித்தான் இருப்பான். இப்போது அவள் பேசியவற்றை கேட்டு அவளுக்கு அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்று தோன்றியது. 
தவழ்ந்தபடியே மகளிடம் சென்றவன் அவள் அழகாக சேர்த்து வைத்த யானை கோர்வையை பார்த்து அவளை தூக்கி இரு கன்னங்களிலும் முத்தமிட்டான்.
“ஐஸ்கிரீம்… ஐஸ்கிரீம்…” 
இரு கைகளையும் தூக்கிக்கொண்டு அவன் மடியிலேயே குதித்தாள் சவி.
“சாயந்தரம் கண்டிப்பா போகலாம்… ஓகே… இப்போ நீ சாப்பிட்டுட்டு நல்லா தூங்கி எந்திரிக்கணும்…” 
மகிழ்வோடு தலையாட்டிக் கொண்ட மகள் தந்தையின் கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டாள். 
பிஞ்சு மனதில் பிறந்ததில் இருந்தே தந்தையின்மேல் ஏக்கம் தொற்றிக் கொண்டு இருந்ததோ என்னவோ… யாரை பார்த்து தெரிந்து கொண்டாளோ..? எங்கிருந்து அப்படி ஒரு ஏக்கம் இதயத்தின் ஆழத்தில் புதைந்து போனதோ..? குருவை பார்த்த முதல் பார்வையிலேயே எங்கிருந்தோ ஒட்டிக் கொண்டு வந்த பாசம் அவளை அவனிடம் இழுத்துச் சென்றிருந்தது. 
அவனது சிரிப்பு, அணைப்பு, அக்கறை, அன்பு என்று அவனைப் பார்த்த முதல்நாள் முதலே அவனோடு மொத்தமாக ஒன்றிப் போய்தானே கிடந்தாள். இவன்தான் உன் தந்தை என்று பக்கத்து வீட்டு சசி தெரிந்தோ தெரியாமலோ ஒருநாள் கூறிய விஷயம் அவர்களது வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிட்டதே.
இனி இந்த சவிக்கு தந்தையை பிரிந்து வாழத் தெரியாது… 
அவள் தந்தைக்கு அவள் இல்லாமல் வாழ முடியாது… 
அவன் செல்லக் கிறுக்கிக்கு அவர்கள் இருவரும் இல்லாமல் உலகில் வேறொன்றும் கிடையாது.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!