Skip to content
Post Views: 5,875
தஞ்சை ஒரத்தநாட்டில் வசிந்துவந்தவர் செங்கமலம் ஒரே பேத்தி அன்புக்கரசி மட்டுமே அவருக்குக் கூடவே ஐந்து ஏக்கர் தென்னந்தோப்பும் ஒரு வீடும், வேலி இல்லாத பயிர் என்று விளையாடிப் பார்த்துவிட்டான் அந்த ஊர் கவுன்சிலர் மகன்.
Advertisement
வெறும் பதினாறு வயது சின்னப் பெண் “வீட்ல சொன்னன்னு வை உன்னையும் உன் அப்பத்தாவையும் உயிரோட எரிச்சிருவேன்” என்று மிரட்டியவனை நினைத்து நெஞ்சம் நடுங்கியது பெண்ணிற்கு வெளியில் சொல்லமுடியாமல் உடல் வலியையும் மன வலியையும் தாங்கி நாட்களைக் கடத்த கரு வளர்ந்துகொண்டிருந்தது அவளுள்.
Advertisement
Advertisement
தெரிந்தபிறகு என்ன செய்ய யாரிடம் நியாயம் கேட்க அப்படியும் கண்ணீரோடு அவன் வீடு சென்று பேத்தி வாழ்வுக்காக மன்றாடிய கிழவியை அவமதித்துத் தான் அனுப்பினர் அவன் ஆட்கள், செங்கமலம் சொல்லியதை உள்மனம் நம்பினாலும் அவருக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை அவரால் போராடவும் முடியவில்லை.
Advertisement
ஆண் பிள்ளையையும் பெற்றேடுத்து விட்டாள் அன்புக்கரசி, அவர்களுக்கான நியாயம் எங்கேயும் கிடைக்கவில்லை அவன் உத்தமனாகிப்போனான் இவள் வழி தவறியவள் ஆகிப்போனாள்.
பிள்ளையை அவளால் கொஞ்ச முடியவில்லை சீராட்ட முடியவில்லை பிள்ளையைப் பார்க்கப் பார்க்கத் தான் பட்ட வேதனைகளின் மிச்சமாக அவன் தெரிந்தான், அவள் சுமக்கும் அவப்பெயருக்கு காரணமானவனாக மகன் தெரிந்தான் அவனிடம் வெறுப்பு மட்டுமே அன்புக்கரசிக்கு.
செங்கமலம் தான் கொள்ளுப்பேரன் சிவபாலனை அரவணைத்துக்கொண்டார் அவர் அன்பில்தான் அந்தக் குழந்தை வாழ்ந்தது, அன்புக்கரசியின் பேரில் இருந்த தோப்பும் வீடுமே எப்படியாவது அன்புக்கரசியை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற வெறியை வளர்த்தது பலரிடம்.
பகல்களை எப்படியேனும் கடந்துவிட்டாலும் இரவுகள் அவர்களைப் பயமுறுத்தியது பயம் பயம் மட்டுமே, யாரும் அன்புக்கரசியை திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை அவர்கள் எண்ணம் வேறாக அல்லவா இருந்தது, நல்ல மனம் கொண்டவர்களும் தள்ளித் தான் நின்றார்களே தவிர துணை நிற்கவில்லை.
தனக்குப் பிறகு இவர்கள் நிலை என்ன என்று பயந்தார் செங்கமலம் பேத்திக்கு மாப்பிளைப்பார்க்க அந்த ஊர் பள்ளியின் தலைமை ஆசியர் உதவியை நாடினார், தலைமை ஆசியர் மகன் ராகவன் சுந்தரேசனின் நண்பன்.
அன்புக்கரசியின் நிலை தெரிந்த அவன் சுந்தரேசனிடம் எந்த விஷயத்தையும் மறைக்காமல் கூறி “உன் அக்கா பசங்களுக்கு அம்மா கிடைக்கும் சிவபாலனுக்கும் ஒரு குடும்பம் கிடைக்கும் ரொம்ப நல்ல பொண்ணு சுந்தர் வீட்ல அம்மாகிட்ட பேசிப்பாரு அவங்களுக்கு இப்போ பாதுகாப்பான ஒரு இடம் தேவை” என்று சொல்லியிருந்தான்.
சுந்தரேசனின் மனதில் இப்பொழுது அதெல்லாம் இல்லை எப்படி தொழிலைக் காப்பாற்றுவது என்பதுதான் முன் நின்றது, நண்பன் சொன்னதற்காக அவனைக் காண நேரில் சென்றிருந்தான் அங்குச் சென்று பார்த்தபோதுதான் அவர்களுக்குத் தோப்பும் வீடும் இருப்பது தெரிந்தது புதிய வெளிச்சம் பரவியது அவனுள்.
பவுனுத்தாயை சம்மதிக்கவைக்க முடியவில்லை “என் பொண்ணு இருந்த இடத்துல இப்படி ஒருத்தியா உங்களை வளர்க்க தெரிஞ்ச எனக்கு என் பேரப்பசங்களை வளக்க தெரியாதா எவளும் என் வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது” என்று ஆடித் தீர்த்தார்.
எவ்வளவோ பொறுமையாக எடுத்துச் சொல்லியும் அவர் புரியாமல் பேசிக்கொண்டிருந்த எரிச்சலில் குரலை உயர்த்தினார் சுந்தரேசன் “சரி வேண்டாம் இப்போ போய்க் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன் கலக்கி உங்க கையாலேயே எல்லாருக்கும் குடுங்க குடிச்சிட்டு சாவலாம் இனிமே அது ஒண்ணுதான் வழி”.
“அடுத்தது நடுத்தெருவுக்குத்தான் போகப்போறோம் தொழிலையும் இந்தக் குடும்ப மானத்தையும் காப்பாத்த நான் நாயா அலையிறேன் அதெல்லாம் உங்களுக்குத் தெரியுதா” என்று கத்தினார்.
பவுனுத்தாயி கொஞ்சம் மிரண்டுவிட்டார் என்ன இப்படி பேசுகிறான் என்று கொஞ்சம் தன்னை நிலைப்படுத்தியவர் “சரிய்யா அதுக்கும் இந்தக் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்” என்றார் சரியாக.
“அவங்க பேர்ல அஞ்சு ஏக்கர் தோப்பு இருக்கு ஒரு வீடும் இருக்கு பிரச்சனை இல்லாத சொத்து, அவங்களுக்கு தேவை பாதுகாப்பு அத்தான் அவங்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டா அந்தத் தோப்பை வித்துக் கடனை அடைச்சு தொழிலைச் சரிகட்டிடலாம் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை நமக்குப் பாதுகாப்பான ஒரு வழக்கை அவங்களுக்கு ரெண்டு பக்கமும் நல்லதுதானே” என்றார் சுந்தரேசன்.
“என்னய்யா பேசுற… இது நம்பிக்கை துரோகம் அந்தச் சொத்து அந்தப் பையனுக்கு உரிமை பட்டது அவங்க சூழ்நிலையை நமக்குச் சாதகமா மாத்தி இப்படி செய்றது தப்பு பெரிய பாவம்” என்றார் ரங்கசாமி.
“வேற என்ன செய்யச் சொல்ரீங்க அத்தான் நீங்கதானே தொழிலைப் பாத்துக்கிட்டீங்க இப்போ நீங்களே சரி செய்ங்க நான் விலகிக்குறேன் எனக்காக மட்டுமா இந்தக் கஷ்டமெல்லாம் என் அக்கா பிள்ளைங்க ரெண்டு நிக்குதே அதுங்கள என்ன செய்ய” என்றவர்.
“அந்தப் பையனுக்கு ஏதாவது செய்யலாம் இனிமே இங்கதான இருக்க போறான் பாக்கலாம்” என்றார், ஒரு சதவீதம் கூடச் சம்மதம் இல்லை பவுனுதாயிக்கு ரங்கசாமி மனம் முழுதும் கலக்கம் சிவபாலன் அவர் மனதில் பெரும் பாரமாகி போனான்.
செங்கமலம் சந்தோஷமாகவே தோப்பை விற்று கொடுத்தார் வீட்டை மட்டும் சிவபாலன் பெயருக்கு மாற்றியவர் “அவங்க தாத்தா கட்டின வீடு அவனுக்குன்னு அது மட்டும் இருக்கட்டுமே” என்றார் கெஞ்சலாக அதன் பிறகு அதைப் பற்றிய பேச்சில்லை எளிமையாகக் குடும்ப ஆட்கள் மட்டும் நிற்க வீட்டின் பூஜையறையில் வைத்து அன்புக்கரசிக்கு தாலி கட்டினார் ரங்கசாமி.
கவிதா பவுனுத்தாயின் வளர்ப்பு சில சமயம் அன்புக்கரசியிடம் நன்றாகப் பேசுவாள் பல சமயம் சித்தி என்று தள்ளி நிறுத்துவாள், கதிரேசன் விவரம் தெரியாத வயது என்பதால் அன்புவை தாயாகவே ஏற்றுக்கொண்டான்.
சிவபாலனுக்கு கொடுக்காத அன்பையும் அரவணைப்பையும் கதிருக்கு வாரிக்கொடுத்தார் அன்புக்கரசி, அந்த வயதிலே சிவபாலன் அனைத்தையும் புரிந்துகொண்டவனாக நடந்துகொண்டான் ரங்கசாமி அவனை முழு மனதாக ஏற்றுக்கொண்டு அன்பாகத்தான் நடத்தினார் அவன் தன் எல்லையைக் கண்டுகொண்டான்.
கவிதா அவனிடம் வெறுப்பு காட்டவில்லை காரணம் அந்த வீட்டில் அவனுக்கு யாருமே முக்கியத்துவம் தரவில்லை என்பது அவள் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்ததே அவளும் அவள் தம்பியும்தான் அந்த வீட்டின் வாரிசுகள் என்பது தெளிவாக அவளுக்குப் பெரும் நிம்மதி.
அவளை “அக்கா” என்று ஒருமுறை அவன் அழைத்தபோது “மொற தவறி பொறந்தவன் என் பேத்தியை முறை வெச்சு கூப்பிடுற அளவுக்கு ஆயிடுச்சோ இதுக்குதான் கண்டதையும் வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு சொன்னேன்” என்று பவுனுதாயி பேசிவிட பெரிதாகக் காயப்பட்டு போனான்.
முதல்முறை மகனை எண்ணி கண்ணீர் சிந்தினார் அன்புக்கரசி அவனின் தவறு என்ன என்று முதல் முறை மனம் கலங்கினார், மடி தாங்கி ஆறுதல் சொல்ல மகன் அவரை நெருங்க விடவில்லை.
ரங்கசாமியை மரியாதை நிமித்தம் அய்யா என்றே அழைத்தான், சுந்தரேசன் சுயநலமாகச் செய்திருந்தாலும் செங்கமலம் சொன்னதுபோலத் தாய்க்கு ஒரு வாழ்வு அவரால் தானே சாத்தியப்பட்டது என்ற எண்ணம் அவன் மனதில் அதோடு அவன் “மாமா” என்று அழைக்கவில்லை என்றால் சுந்தரேசன் அவனிடம் பேசவே மாட்டார்.
செங்கமலம் சிவபாலனை உடனேயெல்லாம் அந்த வீட்டுக்கு அனுப்பிவிடவில்லை முதலில் அன்புக்கரசியை புகுந்த வீடு அனுப்பினார் இடையில் இரண்டு நாட்கள் மட்டும் சிவபாலனை அங்கு விடுவார் மீண்டும் அழைத்துவந்துவிடுவார்.
“வயசான காலத்துல தனியா கிடக்கிறேன் அவன் இருக்கட்டும் என்கூட” என்றுவிட்டார் அவனுக்கு இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை புரியவைத்தார்.
“உங்க அம்மாவுக்குப் பாதுகாப்பு தேவை அவளுக்கு வயசிருக்கு ஒரு வாழ்க்கை தேவை, அவளுக்கு உன்மேல பாசம் இல்லாம இல்ல அவ பட்ட கஷ்டங்கள் அவளை அப்படி நடக்க வெச்சிருக்கு நீ இல்லாம தனியா இருக்குற நாள் உன்னை அவ தேடுவா அவளே கூப்பிடுவா அப்படி அவ கூப்பிடாம போனாலும் நான் உன்னைப் பாத்துக்குறேன் சாமி நீ என்கூடவே இருந்துக்கோ” என்பதோடு அவனுக்கு வாழ்க்கை பாடத்தையும் போதித்தார்.
“தைரியமா இருக்கணும் உடம்புல வலு இருக்கும்போது யார்கிட்டயும் கையேந்தி நிக்க கூடாது, உன்னை நம்பு ஒருவேளை சோறுன்னாலும் உழைச்சு சாப்பிடு அடுத்தவனை எதிர்பாக்காத அந்த வீட்டு ஆட்கள் மேல கோபம் வேண்டாம்”.
“இன்னைக்கு நானே ராத்திரில நிம்மதியா தூங்குறேன்னா அதுக்கு காரணம் உன் அம்மா அங்க பாதுகாப்பா இருக்கான்ற நினைப்புதான் அவ புருஷன் அவங்க வீட்டு ஆளுங்கன்னு நிக்குறத பாக்க சந்தோஷமா இருக்கு”.
“நாளைக்கே எனக்கு ஏதாவது ஆயிட்டாலும் உனக்குன்னு யாரவது வேணும் நீ அங்க போய்டணும் பிடிக்காத பல விஷயம் நடக்கலாம் பொறுத்து போய்டு சாமி” என்று அவனுக்கு நிறைய சொல்லிக்கொண்டேயிருந்தார்.
அவனுடைய பத்து வயதில் செங்கமலமும் தவறிவிட மொத்தமாக அன்புக்கரசியுடன் வந்துவிட்டான், மகனைக் கவனிக்க தொடங்கினார் அன்பு அவனிடம் நெருங்க நினைத்தார் ஆனால் மகன் வெகுதூரம் மனதளவில் விலகி நின்றான்.
அவன் வந்து சேர்ந்த ஆறாம் மாதம் அன்புக்குக்கரசி ஒரு பெண்பிள்ளையை பெற்றேடுத்தார் சிவபாலனின் தங்கை சித்ரா, பவுனுத்தாயி அவ்வளவு சீக்கிரம் அன்புக்கரசியை ஏற்றுக்கொள்ளவில்லை வருடங்கள் செல்லச் செல்லத் தன்னை கொஞ்சமாக மாற்றிக்கொண்டார்.
சித்ராவுக்கும் கதிரேசனுக்கும் சிவபாலன் என்றால் மிகப் பிடித்தமே சுந்தரேசன் சிவபாலனை தன்னோடு சேர்த்துக்கொண்டார் தொழில்பற்றி மெல்ல மெல்ல அவனுக்குக் கற்றுக்கொடுத்தார்.
“உனக்கு நான் செஞ்சது அநியாயம் எனக்கே தெரியுது வேற வழி தெரியல எனக்கு, ஆனா உன்னை விட்ர மாட்டேன் பாலா கண்டிப்பா ஏதாவது செய்றேண்டா” என்று அடிக்கடி சொல்லுவார் கேட்டுக்கொள்வான்.
சிறுவயது முதலே தனிமையை பழகியவன் என்பதால் வேறு எதிலும் அவன் நாட்டம் போகவில்லை கற்றுக்கொடுக்கும் அனைத்தையும் உடனே கற்றுக்கொண்டான் தனிமையில் அனைத்தையும் அலசி ஆராய்வான் பள்ளிக்குச் சென்றுவந்த பிறகு மில்லில் இல்லையேல் பாக்ட்ரியில் வேலை செய்வான் சம்பளம் வாங்கிக்கொள்வான்.
சேமிக்க கற்றான் எதில் முதலீடு செய்தால் லாபம் அதிகம் என்பதை பற்றியெல்லாம் பெரியவர்கள் பேசுவதை கவனித்து கற்றுக்கொண்டான் காலம் யாருக்கும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது.
மகள் மேகலைக்கு செய்ததை போலவே பேத்தி கவிதாவுக்கு பதினேழு வயது ஆனதும் திருமணத்தைப் பற்றிப் பேச்சைத் தொடங்கிவிட்டார் பவுனுத்தாயி, சுந்தரேசனிடம் கவிதாவை மணந்துகொள்ள சொல்லிக் கேட்க அவர் மறுத்தார்.
“அவ படிக்கட்டும் நாலு வர்ஷம் போகட்டும் நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டிவைக்கலாம்” என்றார் அவர், பாட்டி சொல்லிச் சொல்லி மாமனைதான் கட்ட போகிறோம் என்று மனதில் ஆசையை வளர்த்திருந்த கவிதாவும் பிடிவாதம் செய்தாள்.
இவர் மறுக்க அது பிறகு மிரட்டலானது “மருந்து குடிச்சுடுவேன்” என்று கவிதா கலவரம் செய்ய விருப்பமே இல்லாமல் அக்கா மகளை மணந்துகொண்டார்.
இந்த முறை கவிதா சுந்தரேசன் ஜாதகத்தை அத்தனை முறை அலசி ஆராய்ந்தார் பவுனுத்தாயி பொருத்தம் இருக்கிறது நன்றாக இருப்பார்கள் என்றுதான் சொன்னார்கள் என்றாலும் அணைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்தார்.
திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருந்தது கவிதா சுந்தரேசனுக்கு சௌமியா என்ற மகளும் பிறந்திருந்தாள், முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததுமே பவுனுத்தாயை பயம் பிடித்துக்கொண்டது ஒரு பக்கம் பேத்தி மறுபக்கம் மகன் பயத்தோடுதான் நாட்களைக் கடத்தினார்.
தனக்கும் முதலில் பெண் பிள்ளை மகளுக்கும் பெண் இப்பொழுது பேத்திக்கும் முதலில் பெண் பிள்ளை மீண்டும் ஒரு இழப்பு நிகழுமோ என்று மனம் பதறியது.
சிவபாலன் பதினேழு வயதில் கொஞ்சம் முரட்டுத்தனத்தோடு வளர்ந்து நின்றான், சுந்தரேசன் தொழில் விஷயம் என்று அடிக்கடி வெளியூர் பயணம் செல்லத் தொடங்கினார் இங்கே அனைத்தும் மெல்ல மெல்ல சிவபாலன் பொறுப்புக்கு வந்துகொண்டிருந்தது.
அந்த முறை வெளியூர் செல்லும்முன் பாலனை அழைத்து அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார் சுந்தரேசன் “என்ன மாமா” என்றவனிடம் “உன்கிட்டயிருந்து எடுத்துகிட்ட சொத்துக்கு என்னால இந்த ஜென்மத்துல ஈடு செய்ய முடியுமா தெரியல இது சின்னப் பங்கு உனக்குச் சேர வேண்டியது உன்னோடது” என்று கொடுத்துச்சென்றார்.
அவனிடமிருந்து எடுத்ததில் கால் வாசிகூட இல்லை என்றாலும் அது அவனுக்குப் பெரியது பத்திரப்படுத்திக்கொண்டான், அந்த முறை வெளியூர் சென்றவர் உடல் மட்டுமே வெள்ளைத்துணி போர்த்தி வந்தது என்னவோ கதையெல்லாம் சொன்னார்கள் இன்றுவரைக்கூட முழுதாகப் புரியவில்லை.
யாரும் கொடுக்காமலே பொறுப்புகள் சிவபாலனிடம் வந்து சேர்ந்தது, அதுவும் உயிர் பிரியும் கடைசி தருவாயில் “எனக்குப் பாலன் தான் கொல்லி போடணும்” என்று சுந்தரேசன் ரங்கசாமியிடம் கேட்டிருக்க அந்த வீட்டில் அவன் முக்கியமானவனாக மாறினான்.
கவிதா மொத்தமாக ஒடுங்கிப்போனாள் பவுனுதாயி பல நாட்கள் படுக்கையில் தான் கிடந்தார், இரண்டு வருடங்கள் கடந்து ரங்கசாமியை பவுனுதாயிடம் பேசவைத்தான் சிவபாலன், வெறும் இருபத்தியிரண்டு வயது பெண் அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறதே என்று யோசித்தான் சௌமியாவை நாமே பாத்துக்கலாம் என்று சொல்லியிருந்தான்.
பவுனுத்தாயிக்கு எங்கிருந்துதான் அத்தனை சக்தி வந்ததோ “என் பேத்தியை வேற வீட்டுக்கு அனுப்பிட்டு ஒன்னும் தெரியாத என் பேரனை ஏமாத்தி சொத்தெல்லாம் பிடுங்க பாக்குறானா அவன், இவன் என்ன என் கொள்ளுப் தேதியைப் பாக்குறது இந்தச் சொத்துல பாதி அவளுக்கு உரிமை பட்டது” என்று மருமகனிடம் ஆடித் தீர்த்தார்.
ரங்காசாமி சொல்லியே விட்டார் “பிடிக்கலைன்னா விடுங்க அத்த அதுக்காக நாக்குல நரம்பில்லாம பேசாதீங்க அவன் இல்லன்னா இன்னைக்கு நீங்கக் கணக்கு பாக்குற இந்தச் சொத்து எதுவுமே நம்மகிட்ட இருந்திருக்காது, அவன் பிடுங்க பாக்கல நாமதான் அவன்கிட்டயிருந்து பிடுங்கி நம்மள காப்பாத்திக்கிட்டோம் அவன் தான் எல்லாத்தயும் பாத்து கட்டி காப்பாத்திட்டும் வரான்” என்று கோபமாகவே சொல்லிச் சென்றார்.
அவனுக்கும் கேட்கவே செய்தது, கவிதாவும் முடியவே முடியாது என்று நின்று விடச் சிவபாலன் ஒதுங்கிக்கொண்டான்.
தொழில் சம்மந்தமான விஷயங்களில் மட்டுமே அவன் முடிவுகள் நின்றது, வீட்டில் பவுனுத்தாயி எடுப்பதே முடிவு சிவபாலனை அதிகம் பகைத்து கொள்ளாமல் என்றால் அவனை வீட்டில் உரிமையாக உணரவும் விடாமல் நடந்துகொண்டார் பவுனுத்தாயி.
இந்தத் தொழில் முறை முன்னுரிமை நிலை கூடக் கதிர் தலையெடுக்கும் வரைதான் என்பதை சிவபாலன் கணித்துவைத்திருந்தான் ஆகாயால் அவன் எப்பொழுதும் கவனத்தோடே இருந்தான், அவன் எதிர்பார்க்காதது கதிரின் காதலும் பவுனுத்தாயின் திருமணம்பற்றிய முடிவும்… கேட்டபோது சிறு அதிர்ச்சிதான் என்றாலும் உடனே மீண்டுவிட்டான்.
கதிரேசன்தான் இதில் மொத்தமாகக் குழம்பி போனான் அண்ணன் திருமணம் பேசச் சொன்ன பெண்ணைத் தான் விரும்புவது தெரிந்தால் வீட்டில் கலவரம் வெடிக்கும் என்று அவன் நினைக்க இங்கே இவனுடைய திருமணத்தைப் பேசி முடித்திருக்கிறார்கள் அதுவும் அண்ணனுக்கு முன்னே தன் திருமணம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
error: Content is protected !!