53 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:3,130
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம்: 53
.
“பேபி உனக்கு பிடிச்ச ரெட் கார்ல ரைட் போலாமா?”
Advertisement
‘வேண்டாம்’ என்பதாகக் குழந்தை தலையசைத்தாள்.
“பசிக்குதா? ஏதாவது சாப்பிடுறியா பேபி?”
“நேணா அப்பா”
Advertisement
‘முயல் குட்டியின் நடையில் துள்ளலும் இல்லை, எதையும் வாஞ்சையோடு பார்க்கும் கண்களில் பிரகாசமும் இல்லை… என்ன ஆனது என் மகளுக்கு?’ கௌதமனின் யோசனை மகளையே சுற்றி வந்தது.
Advertisement
காலையில் கண்விழித்ததும், “அம்மா நேணும்” என்றாள் மகள். வந்த நாளிலிருந்தே மகள் அன்னையைக் கேட்பதும், இவன் “போவோம்” என்பதும் வழமை தானே. அதையே இன்றும் செய்தான். ஆனால், இன்று, குட்டி கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டவில்லை மகள். புருவங்களைச் சுருக்கி கோலிக்குண்டு கண்களை உருட்டவில்லை. தொங்கிய முகத்தோடு சில மாதங்களாக மறந்திருந்த புசுபுசு நாய் பொம்மையின் மீது படுத்துக் கொண்டாள்.
மகளின் சிரிப்பையும் துள்ளலையும் எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என மகளை சென்னை நகரத்தின் நாற்பது ஏக்கர்களை விழுங்கி பிரமாண்டமாக எழுந்து நின்ற மாலிற்கு அழைத்து வந்தான். கண்களைப் பறிந்த பொம்மைகளைக் காட்டினான். வேண்டுமா எனக் கேட்டு வாங்கி கொடுத்த அனைத்தையும் வாங்கி கொண்ட மகளின் முகத்தில் எழுந்த சிரிப்பு அதிக நேரம் நிலைக்கவில்லை.
“என்ன பேபி, வயிறு வலிக்குதா?” என ஆரம்பித்து, மகளின் உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமாகக் காட்டி இது வலிக்கிறதா… அது வலிக்கிறதா எனக் கேட்டவனுக்கு, “இல்ல அப்பா” என்ற பதில் வந்தது. கௌதமனுக்கு தெரியவில்லை மகளின் உற்சாகத்தை எப்படி மீட்டுக் கொண்டு வருவதென்று.
கடை கடையாக ஏறி இறங்கி கௌதமன் களைத்துப் போனான். வயிற்றைக் கவனித்தே ஆகவேண்டும் என்றது அதிலிருந்து புறப்பட்டச் சத்தம்.
மாலில் இருந்த ஃபூட் கோர்ட் செல்லாது, அங்கிருந்த உணவகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தவர்களை, “கௌதம்” என்ற சத்தம் காற்றோடு வந்து சேர்ந்தது. கௌதமனுக்கு அழைப்பு காதில் விழுந்தாலும் கவனத்தில் பதியவில்லை. ஆனால் முதுகிற்குப் பின் கேட்ட, “யாழி பேபி” என்ற அழைப்பு கௌதமனின் நடையைத் தடைசெய்தது. அப்பாவின் கைபிடித்து நடந்த குழந்தை சட்டென நின்று திரும்பினாள்.
அப்பாவும் மகளுமாக, தாக்ஷாவின் கண்களை நிறைத்தனர். அவன் அடர் சிவப்பு டீஷர்ட் அணிந்திருக்க, மகள் குட்டி அடர் சிகப்பு ஷார்ட்ஸ் அணிந்திருந்தாள். ஆறு மாதப் பிரிவு கௌதமனை எந்த வித்திலும் பாதித்ததாகவே தெரியவில்லை. என்றும் போல் இன்றும் வசீகரித்தான். சிகப்பு புள்ளிகளை ஏந்தியிருந்த வெள்ளை பருத்தி சட்டையும், காதுகளுக்கு மேல் தூக்கிப் போடப்பட்டக் குடுமி கழுத்து வரை நீண்டிருக்க, ஈர ரோஜா இதழ்களும், மருண்ட பார்வையுமாகப் பார்க்கவே அத்தனை அழகாக இருந்தாள் கௌதமனின் குட்டி மகள். முன்பே யாழி ஒரு அழகு குழந்தை. சில மாதங்களாகவே அன்னையின் கவனிப்பில் மகளின் மினுமினுப்பு கூடியிருக்க, தாக்ஷாயின் கண்களை உண்மையிலுமே கௌதமனும், அவன் கங்காரு குட்டியும் நிறைத்தனர்.
தர்ஷனோடு வேலை செய்பவன் இப்படியான ஒரு சந்திப்பு நிகழும் என எதிர்பார்த்திருந்ததால், கௌதமன் புன்னகை முகமாக “ஹாய் தாக்ஷா, எப்படி இருக்க?” என்றான். அவர்களின் திருமண முறிவு அவனை ஒன்றுமே செய்யவில்லையா? “ஹாய் கௌதம்” என்றாள் புன்னகைக்க முயன்று. அழைத்தவள் அவள் தான். ஆனாலும் அவனைப் பார்க்க, பேச அவ்வளவு தயக்கமாக இருந்தது.
“எப்படி இருக்கீங்க?” என அருகில் வந்தவளிடம், “ரெண்டு பேரும் நல்லா இருக்கோம். நீ?” எனக் கேட்டான் சம்பிரதாயத்திற்கு.
தலை உயர்த்தி, புன்னகைக்கும் அப்பாவையும், சிரித்த முகமாக நிற்கும் தாக்ஷாவையும் பார்த்து நின்ற குழந்தைக்குள் ஏதேதோ எண்ணம் ஓடுகிறது எனக் கௌதமனுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால், அவனும் தாக்ஷாவிடம் பேசி நின்றான்.
“யாழி பேபி எப்படி இருக்கீங்க?” என மகளின் உயரத்திற்கு தாக்ஷா முட்டியிட்டாள். ‘தாச்சா ஆந்தி’ எனத் துள்ளலாக அழைக்கும் குழந்தை இன்று தாக்ஷா அவள் அருகில் நெருங்கவும் தந்தையின் பின் சென்று, அவன் காலை கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்தாள்.
“பேபி… இங்க வாங்க” என மகளைக் கௌதமன் பிரிக்க முயல, மகள் இன்னும் இன்னும் அதிகமாக அவன் கால்களுக்கு இடைய புகுவதும் முகத்தை தாக்ஷாவிடம் இருந்து மறைப்பதுமாகவே நின்றாள்.
அம்மாவைக் காணாது தவிக்கும் குழந்தைக்கு அவளின் மனதை எப்படி அப்பாவிற்கு உணர்த்துவது? அழுதாள், அடம்பிடித்தாள், கோபப்பட்டாள்… பயன் எதுவும் இல்லை. தன் சத்தம் கேட்கப்படாது எனத் தோன்றிய குழந்தை தனக்குள் ஒடுங்கி நிற்பதைத் தகப்பன் உணரும் முன் தாக்ஷா வந்து நிற்கிறாள்.
இனி தாக்ஷா தான் தங்களோடு இருக்கப் போகிறாளா? அச்சோ அம்மாவைக் காணவே முடியாதா என நினைத்த மாத்திரத்தில் குழந்தையைப் பயம் கவ்விக் கொண்டது. “தாச்சா அம்மா நேணா” என்ற குழந்தையின் ஈனஸ்வரம் கௌதமனின் காதுகளில் வந்து சேரவில்லை என்றாலும் தாக்ஷாவிற்கு அந்த மெல்லிய சத்தம் நன்றாகவே கேட்டது.
‘உன் மகள் வேண்டாம். நீ மட்டும் போதும் கௌதம்’ என்ற வேளையில் தோன்றாத ஏதோ ஓர் உணர்வு, ‘தாக்ஷா அம்மாவாக வேண்டாம்’ எனக் குழந்தை கூறிய நிமிடம், தாக்ஷாயினியை பலமாகவே தாக்கியது.
தன் மகள் ஒருவரை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டாளே என நினைத்தவன், “பேபி… தாக்ஷா டா. மறந்துடீங்களா?” என மகளின் நினைவலைகளைக் கிளறும் முயற்சியில் இறங்கினான். தாக்ஷாவிற்கு கசந்த சிரிப்பு வந்து போனது.
தாக்ஷாயினியின் கைப்பேசி அதன் இருப்பை உணர்த்த, அதை எடுத்துப் பேசியவள், “அண்ணா போன்ல. டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுவீங்களாம். இங்க வரதா சொன்னாங்க.” என்றாள்.
“இங்கையா? என்னை பார்க்கவா?” என்றவன் நெற்றி சுருங்கி, புருவம் நெளிந்தது.
“செக்கண்ட் பிளோர்ல இருக்க கிட்ஸ் பிளே ஏரியா என்னோடையது. இங்க நல்ல கிரௌட். நல்லாவே பிசினஸ் போகுது. அதைக் காட்ட அண்ணாவ கூப்பிட்டிருந்தேன்… அப்படியே ஒரு பிசினஸ் டீலிங். அதுக்கு முன்ன மால்ல பார்க்கணும்ன்னு…” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, “ஹலோ கௌதமன்” என்ற சத்தம் இருவரின் கவனத்தையும் ஈர்த்தது.
“ஹாய் தர்ஷன்” என்றவனுக்கு, இது என்னடா சோதனை என்றிருந்தது.
“குட்டி ஏஞ்சலும் இங்க தான் இருக்காங்களா?” என்றவன் பார்வை ஒளிந்து நின்றிருந்த குட்டி அழகியின் மீது விழுந்தது.
அதுவரை அப்பாவை விடுவேனா எனக் கௌதமனின் கால்களைக் கட்டி நின்றிருந்தவள், தர்ஷனின் குரல் கேட்டு, கண்கள் மட்டும் வெளியே தெரியுமாறு மெல்லத் தலையைச் சாய்த்தாள். இவளைப் போலவே தன் தலையைச் சாய்த்து சின்னவளைப் பார்த்துக் கண்சிமிட்டிப் புன்னகைத்தான் தர்ஷன்.
குழந்தை தன்னை மறந்திருப்பாள் என்றவன் நினைப்பைப் பொய்யாக்கினாள் யாழினியாள். சட்டென கண்கள் ஒளிற, அப்பாவைப் பார்த்தாள் குழந்தை. ‘போ’ என்ற தலையசைப்பு வந்த அடுத்த நொடி ஓடிப் போன குழந்தையை தாக்ஷா மட்டும் அல்ல தர்ஷனுமே ஆச்சரியமாகப் பார்த்தான்.
யாழி ஓடி வர, அவளை நோக்கி வந்தவன் அவளை அப்படியே அள்ளி வாரிக் கொள்ள, “தல்சன் அங்கிள்… இது என் பிங்கி” என அவள் கரத்தில் இருந்த நாயைக் காட்டினாள் குழந்தை.
“என் பேரு வரைக்கும் ஞாபகம் வச்சிருக்கியா நீ?” என்றவனுக்கு ஆச்சரியம் ஏறிக் கொண்டே போனது. எதிர்பார்ப்போடே தன் முகத்தைப் பார்க்கும் குழந்தையின் முகத்தில் சிரிப்பு மிஸ்சிங் என்பதை அவன் உணராது இல்லை.
அன்று பார்த்த பட்டாம்பூச்சி இவளில்லையே… “ஏன் என் குட்டி ஏஞ்சல் சோகமா இருக்கீங்க? ரெட் பூ கிடைக்கலைன்னு சோகமா?” எனக் குழந்தையின் கண்களைப் பார்க்க, “தெளில” என்றாள் பிஞ்சு கையை விரித்து.
பல்வரிசை தெரியச் சிரிக்கும் அண்ணனையும், அவன் கரத்தில் ஒய்யாரமாக அமர்ந்து அவன் கருப்பு கண்ணாடியை எடுப்பதும் அவனுக்குப் போடுவதுமாக விளையாடும் யாழினியாளையும் மாறி மாறி பார்த்த தாக்ஷாயினிக்கு உள்ளுக்குள் ஏதோ சில்லு சில்லாக உடைந்தது உண்மை. கௌதமனை பற்றி அனைத்தையும் அறிந்த பின் தானே திருமணம் நிச்சயமானது… அப்படி இருக்க, அன்று எனக்குள் எந்தப் பிசாசு பூந்துக் கொண்டது? எல்லாவற்றையும் அழித்துவிட்டு புதிதாக ஆரம்பிக்க வழி உள்ளதா? தன் மனம் தவித்து நிற்பதை, தன்னை பற்றி எந்த எண்ணமும் இல்லாது நிற்கும் கௌதமனுக்கு எப்படித் தெரிவிப்பது?
அருகில் இருந்த மலரகம் அழைத்துச் சென்ற தர்ஷன், “எந்த பூ வேணும் யாழிக்கு?” எனக் கேட்டு, அவள் காட்டிய சிகப்பு ரோஜாவை கையில் கொடுத்தவன், சின்னதாக இருந்த மற்றொரு ரோஜா பூவை மகளின் குடுமியில் சொருகி விட்டான்.
கண்ணாடியில் தன் தலையில் இருக்கும் மலரைப் பார்த்த குழந்தை, “டேங்ஷ் அங்கிள்” என்றாள் மலர்ந்த முகத்தோடே.
“யாழி பாப்பாக்கு ஏதாவது வேணுமா? என்ன வேணுமோ சொல்லுங்க. எதுனாலும் உன் தர்ஷன் அங்கிள் வாங்கி தருவேன்” என்றான் தீர்மானமாக.
கூறியவன் முகத்தை பார்த்திருந்த குழந்தைக்கு என்ன தோன்றியதோ, அப்பாவை பார்த்தாள். தர்ஷன் கௌதமனை பார்க்க, “காலையில இருந்தே அப்படித் தான் இருக்கா. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்றான்.
“யாழிக்கு என்ன வேணும்?” என உணவுப் பட்டியலை சின்னவளிடம் காட்ட, அவள் என்ன கூறியிருப்பாள்? “கலாப்பா நேணும்” என்றாள் உதடு துடிக்க.
கண்டுகொண்டான் கௌதமன். ஆக… கன்றுக் குட்டி, அதன் பசுவைத் தேடுகிறது. விட்டால், அன்று போல் இன்றும் ஆரம்பித்துவிடுவாள் என்று எண்ணியவன், “பேபி” என அதட்டல் போட்டான்.
ஆன மட்டும் தந்தையை முறைத்த குட்டி மகள், கண்மூடி தன் பூடுலின் மீது தலை சாய்த்தாள்.
“என் செல்லம் இல்ல… குலாம் ஜாமுன் வாங்கி தரவா?” இறங்கி வந்தான் தந்தை.
“பசில… நேணா” எனக் கோபித்துக் கொண்டாள்.
‘அம்மாடி… நண்டு சைஸ்ல இருந்துட்டு இவளுக்கு வர கோபத்த பாரேன்’ என நினைத்தது தாக்ஷாவே தான்.
அப்பா மகள் அலப்பறைகளை ரசனையோடே பார்த்து அமர்ந்திருந்த தர்ஷன், அவளுக்கு என்ன பிடிக்கும் எனக் கௌதமனிடம் கேட்டு, “உனக்கும் எனக்கும் ஃபிஷ் ஃபிங்கர்ஸ் சரியா?” என ஒருவழியாகச் சின்னவளின் தலை அசைப்பை வாங்கினான்.
அடுத்தடுத்து அவள் கேட்டதை ஆர்டர் கொடுத்து, அதை முதலாவதாக வரவைத்து குழந்தையின் முன் வைத்தான் தர்ஷன். மகளின் முகத்தில் சிரிப்பைப் பார்த்தே ஆகவேண்டும் என்றிருந்தது அவனுக்கு.
“தர்ஷன் அங்கிள் என்ன செய்தா யாழி பேபி சிரிப்பீங்க? என்ன வேணுமோ கேளுங்க யாழிமா… அங்கிள் வாங்கி தரேன்” என்றவனையும் அப்பாவையும் மாறி மாறி பார்த்தாள் குழந்தை. இந்த நாள் வரை அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்த அப்பா செய்யாததை இவன் செய்வானோ?
இவனிடம் கேட்டால் கிடைக்கும் எனக் குழந்தை நினைத்தாளோ இல்லை, கேட்டுத் தான் பார்ப்போமே என நினைத்தாளோ… “ஆலி பேபிக்கு அம்மா நேணும்” என்றவள் கீழ் உதடு பிதுங்கி, கண்களில் நீர் கோர்த்தது.
கௌதமனிடம் பெருமூச்சு வந்து போனது. மகளின் இந்த ஓய்ந்த தோற்றத்திற்குக் காரணம் யசோ. யசோவிடம் இவன் விருப்பத்தைக் கோடு போட்டுக் காட்டியாயிற்று. ஆனால்… அவள் பதில் ஏதும் கூறவில்லை. இயக்குநர் டைபாய்டு காய்ச்சல் எனப் படுத்திருப்பதால், திருச்சிக்குச் செல்வதில் எந்த அவசரமும் காட்டவில்லை கௌதமன். யசோ மௌனம் கலைய இவன் காத்திருக்க, மகள் அன்னைக்காக ஏங்கித் தவிக்கிறாள். இது எங்குக் கொண்டு விடுமோ எனக் கௌதமன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.
“அம்மா வேணுமா?” எனத் தனக்குள் கேட்டுக் கொண்ட தர்ஷன் எப்படி உணர்ந்தான் என்றே அவனுக்குப் புரியவில்லை. மனம் சொல்லொண்ணா வருத்தம் கொண்டது. தன் அருகில் அமர்ந்திருந்த தங்கையைப் பார்த்தான். அளவில்லா கோபம் மூண்டது. ‘கௌதமன் வேண்டாம் என்றால், கவினை மணந்து கொள்’ என அன்னை கூறியதற்கு, தன்னால் கௌதமனை கடக்க முடியவில்லை, என்றவள் “நீ கௌதம்கிட்ட பேசறியா அண்ணா?” எனக் கேட்டது தான் விந்தையிலும் விந்தை.
தன் இருக்கையிலிருந்து எழுந்து தர்ஷன் பக்கம் சென்ற யாழி, “அம்மாட்ட கூட்டி போலுவிங்களா அங்கிள்?” என தர்ஷனின் முகத்தைப் பார்க்க, கௌதமனுக்கு தாள முடியவில்லை. தன் மகள் தன்னை விடுத்து அவள் தேவைக்காக வேறு ஒருவன் முன் நிற்பதா?
“பேபி வா” என்று தகப்பன் அழைத்த அடுத்த நொடி அப்பாவின் மடியில் அமர்ந்திருந்தாள் யாழி. மகளை மார்போடு அணைத்து உச்சி முகர்ந்தவன், “இப்போ அம்மாகிட்ட பேசு. ஒன் டைம் தூங்கி முழிச்சதும், அம்மாவ பார்க்க போலாம். பிராமிஸ்” என்றான் நெற்றியில் ஆழ முத்தம் ஒன்றைப் பதித்து.
இவன் என்ன பேசுகிறான் என தர்ஷன் பார்த்துக் கொண்டிருக்கும் போது, கைப்பேசியை எடுத்து யசோவிற்கு அழைத்த கௌதமன், யாழிடம் கைப்பேசியைக் கொடுத்தான்.
அந்தப் பக்கம், யசோவின் மடியில் ஆர்வமாக அமர்ந்து திரையைப் பார்த்துக் கொண்டிருந்தான் சர்வேஷ்.
“அம்மா… ஆலி பேபி வந்துகேன். சல்வேஷ்… அம்மா மலில இலுக்கியா சல்வேஷ்? நானுக்கு அப்பா மலில இலுக்கேன்” என்ற குழந்தையிடம் அப்படி ஒரு குதூகலம்.
“எப்போ வருவ யாலி? பாப்பா விளையாடாம தூங்கிட்டே இருக்கா. நீ இல்லாம போர் அடிக்குது யாலி” என்ற சர்வேஷின் முகம் சோக கீதம் வாசித்தது.
“ஒன் டைம் தூணி எழுந்து வலேன் சல்வேஷ்.” என்றதும் அவன் முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு. அவன் யாலி… யாலி என ஒரு பக்கம் பிதற்ற, இவள் சல்வேஷ்… சல்வேஷ் என மிழற்றுவதுமாகப் பார்க்கவே அத்தனை ரசனையாக இருந்தது.
இதற்கு இடையே, “தல்சன் அங்கிள்… சல்வேஷ் இஷ் மை பெண்ட்” எனப் பெருமை பீற்றலும் வந்து போனது.
“நான் அப்போவே டோனட் சாப்பிலுறேன் சல்வேஷ். உனக்கும் கொண்டு வலவா? அம்மாக்கு என்ன நேணும்?” என மிழற்றிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்க்கப் பார்க்க தர்ஷனுக்கு திகட்டவில்லை. இவ்வளவு நேரமாக தர்ஷன் பார்க்க ஆசைப்பட்ட மலர்ந்த முகம்.
சென்ற நிமிடம் வரை மகள் இறுக்கிப் பிடித்திருந்த பிங்கி மேசையின் ஓர் ஓரமாகப் படுத்திருந்தது. குழந்தையின் இறுக்கத்தைத் தளர்த்தியது யார்? சர்வேஷா? இல்லை அவனை மடியில் வைத்திருப்பவளா?
தர்ஷனின் பார்வை குழந்தை மீதிருந்து நகர்ந்து கௌதம் மீது நிலைத்தது. கௌதமனின் கவனம் முழுவதும் கைப்பேசியில் இருந்தது. இவ்வளவு நேரம் இவர்களோடு அவன் சிரித்துப் பேசிய போது இல்லாத ஒரு பாவம். புன்முறுவலில் ரசனை கலந்த பாவம். வசீகரித்தான் கௌதமன்.
தென்றல் வீசும் திசைக்கு ஆடிக் கொடுக்கும் கொடி மலர் போல் மகளின் மிழற்றலும் சர்வேஷின் தலை ஆடுவதைச் சிரிப்போடு பார்த்து அமர்ந்திருந்தவன் பார்வை சர்வேஷோடு நிற்கவில்லை என்றது அவன் முகத்தில் பூத்திருந்த ஆசை பார்வை.
“சார்?” என உணவு பொருட்களோடு வந்து நின்றான் பணியாள்.
பிள்ளைகள் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேசிக் கொண்டிருக்க, பெரியவர்கள் கவனம் உணவின் பக்கம் சென்றது.
“ஷூட்டிங் எப்படி போகுது கௌதமன்?” தர்ஷன் பேச்சை ஆரம்பித்தான்.
என்னென்று கூறுவது? ஹீரோவிற்கு வைரஸ் காய்ச்சல் என்றதால் படப் பிடிப்பு நான்கு நாள்களுக்கு ஒத்தி வைத்திருக்க, இப்பொழுது இயக்குநர் சாரருக்கு டைப்பாயிடாம். படப்பிடிப்பு இழுவையில் இருப்பதை எப்படிக் கூறுவான்?
“ட்வெண்டி பர்செண்ட் ஷூட் இருக்கு. ரொம்ப முக்கியமான கட்டம், சோ டைரக்டருக்கு வெயிட்டிங். அப்பறம் போஸ்ட் பிரொடஷன் போயிடலாம்” என்றவன் சற்று நேரம் படப்பிடிப்பைப் பற்றிப் பேசினான்.
பேச்சு, சினிமாவில் ஆரம்பித்து தர்ஷனின் தொழில் எனப் பலதையும் சுற்றி வந்தது. இவர்கள் பேச்சின் இடையே ‘கார்’ என்ற வார்த்தை வந்ததும், அது யாழியின் காதில் விழ, “தல்சன் அங்கிள் கால் நேணுமா?” எனக் கேட்டு, “அப்பா கால் தாங்க” எனக் கௌதமன் கால்சட்டையில் வைத்திருந்த குட்டி ஹாட் வீல்ஸ் பொம்மை கார்கள் இரண்டையும் கையில் வாங்கினாள்.
“ஒன் சல்வேஷுக்கு… சலியா?” என முதலாவதாகவே தெளிவுபடுத்தி, “லெட் கால் நேணுமா?” எனக் கேட்டு, அவனுக்குக் குட்டி ஃபெராரியை பரிசாகக் கொடுத்தாள். “அலுவ வேணா தல்ச்சன் அங்கிள். கால் வச்சுக்கோங்க,” என ஆறுதல் வார்த்தை கூறியவள், அவள் வேலை முடிந்தது என்பது போல், “சல்வேஷ்… உனக்கு ஒன் கால் வாங்கி இலுக்கேன். உனக்கு தலேன் சலியா?” எனத் தோழனோடு கதை பேசச் சென்றாள்.
நடப்பது புரியாது தர்ஷன் கையில் இருந்த குட்டி காரை வேடிக்கை பார்க்க, “நீங்க அந்த லிமிடெட் எடிஷன் கார மிஸ் பண்ணிட்டதா சொன்னத கேட்டிருப்பா போல… அதுதான் அவளுக்கும் அவ ஃப்ரெண்டுக்கும் வாங்கி வச்சிருந்த கார்ல ஒண்ண உங்களுக்குக் கொடுத்திருக்கா” என தர்ஷனுக்கு விளக்கினான் கௌதமன்.
“ஓஹ்…” என்ற தர்ஷன் நெகிழ்ந்து போனான். ஒரு குழந்தையால் தனக்கென வாங்கி வைத்திருப்பதை மனம் உவந்து கொடுக்க முடியுமா என்ன? இந்தக் குட்டி யாழியால் முடிகிறதே. ‘இவளையா நீ வேண்டாம் என்றாய்’ எனத் தங்கையைப் பார்த்த பார்வையில் பரிதாபமே மண்டி கிடந்தது.
மண்டையை குடைந்து கொண்டிருந்த கேள்வியை அதற்கு மேல் அடக்கி வைக்காது, “என்ன இந்தப் பக்கம்?” எனக் கேட்டான் கௌதமன்.
சுற்றி வளைக்காது தர்ஷன், “இந்த மால் விலைக்கு வர போகுதுன்னு நம்பகமான சோர்ஸ்ல இருந்து இன்ஃபர்மேஷன் வந்துது. ஒரு தரம் நேர்ல பார்த்துட்டு, வாங்கிறதா வேண்டாமான்னு முடிவு பண்ண வந்தேன்” என்றான்.
“வாட்? யார் சொத்த யார் விக்கிறது?” எனக் கோபத்தில் முணுமுணுத்தவன், “சொத்த பத்தி விசாரிக்கலையா?” எனத் தர்ஷனை கூர்ந்து பார்த்தான்.
“இன்னும் அந்த அளவுக்கு டீப்பா இறங்கல” என்றவன் முகம் கேள்வியைப் பூசிக் கொண்டது. கௌதமன் ஏதேனும் கூறுவான் என இவன் பார்க்க, அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
“என்ன கௌதமன்? இந்த மால் பத்தி நான் தெரிஞ்சுக்க வேண்டியது ஏதாவது இருக்கா?” என்ற தர்ஷனிடம் எதையும் மறைக்கத் தோன்றவில்லை கௌதமனுக்கு.
“நாலரை வருஷம் முன்ன ஒரு ஆக்சிடென்ட்… அதுல படுத்த படுக்கை ஆகிட்டேன்” என ஆரம்பித்து, அவனுக்கு நடந்த அறுவைசிகிச்சையின் விபரம் தவிர்த்து மற்றதை மேலோட்டமாக கூறினான்.
“இந்த மால் உங்க அப்பா, வாசுதேவனுக்கு சொந்தமானதா? பேப்பர்ஸ் எல்லாம் எப்படி மிஸ்டர் ஜெகநாதன் கையில?” எனக் கேட்டவனுக்கு உண்மையிலுமே அதிர்ச்சி தான்.
“படுத்த படுக்கையாகிட்டேன். ஒரு கொசு கடிச்சா கூட யாராவது வந்து தான் அத அடிக்கணும். அன்னைக்கு அது தான் என் நிலை. நாள் ஆக ஆக, நிலம மோசம் ஆக ஆரம்பிச்சுது. பிழைக்க வழி இல்லன்னு சொல்லிட்டாங்க. மகன் கடைசி காலத்த நோக்கி போயிட்டு இருக்கும் போது, எந்த அப்பா சுய உணர்வோடு இருப்பார்?
இடிஞ்சு போய் நின்ன அம்மாவும் அப்பாவும் நானே கதின்னு இருந்துட்டாங்க. அந்த நேரம், பெரிய பட்ஜட் படம், இந்த மால் கட்டிட வேல, என்னோட மெடிக்கல் எக்ஸ்பென்சுன்னு கோடி கோடியா செலவாகிட்டு இருந்துது. அந்த கணக்கு வழக்கு எல்லாம் அம்மோவோட சொந்த அண்ணா, ஜெகன் கைக்கு மாறிச்சு.
செலவு ஒரு அளவ தாண்டி போக, அவர் கேட்ட பத்திரத்தை எல்லாம் லாக்கர்ல இருந்து கேள்வியே கேக்காம அம்மா எடுத்துக் கொடுத்ததும், கேட்ட இடத்துல எல்லாம் அப்பா கையெழுத்து போட்டதும், அவர் மேல இருந்த நம்பிக்கையில.
நான் செத்து போயிடுவேன்னு அந்த ஆள் நினைச்சிருக்கணும். நானே இல்லாம போயிட்டா, அப்பாவும் அம்மாவும் இந்தப் பணத்தைப் பத்தி எல்லாம் யோசிக்க மாட்டாங்கன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு. அவர் கெட்ட நேரம், நான் பிழைச்சுட்டேன். எனக்கு சரியானதும் அப்பா கணக்க பார்த்தா, தெரிஞ்சது எல்லாம் நம்பிக்கை துரோகம் மட்டுமே.
யார் யாருக்கு எவ்வளவு போச்சோ… 450 கோடிய முழுங்கின படத்த வெளில வரவிடல அந்தாளு. இந்த மால் கட்டுமானத்துல அவ்வளவு ஊழல். இதுக்கு கொஞ்சம் கூட குறையாத மெடிக்கல் எக்ஸ்பென்ஸ் கணக்கு. உலகம் பூரா இருந்த பெரிய பெரிய டாக்டர்ஸ் வந்து போனதுக்கு காட்டின ஃபிளைட் எக்ஸ்பென்சுக்கு நாங்க ஒரு லக்ஷூரி பிரைவேட் ஜெட் வாங்கி இருக்கலாம். அவங்க எங்க தங்கினாங்களோ தெரியல… ஆனா ஸ்டே, ஃபூட்ன்னு எல்லா ரசீதும் ஐடிசி சோளான்னு, செவன் ஸ்டார் ஹோட்டல்ல பாயின்ட் பண்ணிச்சு. கூட பிறந்த பிறப்ப ஏமாத்துறோம்ன்னு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமா… எப்படி? ப்ச்!
ஆயிரம் கோடியில இப்போ மிஞ்சினது எல்லாம்… ப்ச்!” என்றவனுக்குள் எரிமலை வெடிக்கத் தயாராக இருந்தது.
“தேங்கி நிக்கிற படம் ரிலீஸ் ஆனா போதும்… அந்த ஆள ஒரு கை பார்த்திடுவேன்” என்றவன், “இந்த மால்… எங்க அப்பா, அம்மாக்காக கட்டுன அவரோட காதல் பரிசு. அப்படி எல்லாம் அந்தாள்ட்ட ஏமாந்து கொடுக்க முடியாது” என்றான் தீர்மானமாக.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த தர்ஷனிடமே, “நம்பினவங்க கழுத்த அறுத்த அந்த துரோகிய அப்படியே விடலாம தர்ஷன்?” எனக் கேட்டவனுக்குப் பதிலாக ‘கூடாது’ என்ற தலையசைப்பைக் கொடுத்தான் தர்ஷன்.
கௌதமன் வாழ்வில் ‘நம்ப வைத்துக் கழுத்தறுத்த லிஸ்டில் தாங்களும் அடக்கம்’ என்ற உண்மை தர்ஷன் முகத்தில் ஓங்கி அறைந்தது. அன்று யாழிக்கு நடந்ததையும், அன்று குழந்தை இருந்த கோலத்தையும், சிசிடிவி பதிவிலிருந்து பார்த்தானே. அந்த இருட்டில், பயத்தில் திக்கு தெரியா பூமியில், அழுதுகொண்டே தந்தையைத் தேடி ஓடின குழந்தை கண் முன் வந்து போனாள். அன்று யாழிக்கு ஏதேனும் ஆகி இருந்தால்?
மனம் கனக்க, தங்கையைப் பார்த்தான். இவளுக்காக எந்த முகத்தைக் கொண்டு கௌதமனிடம் பேசுவான்? இன்றுமே, யாழியை தாக்ஷா திரும்பிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இவளால் என்றுமே யாழினியாளுக்கு அன்னையாக இருக்கவே முடியாது.
குட்டி மகளைப் பார்த்தான். அவள் சிரிக்கச் சிரிக்கக் கதை பேசிக் கொண்டிருந்தாள். எதையோ முடிவு செய்தவனாக, “இந்த ஷூட் முடியட்டும் கௌதமன், நீங்க சென்னைக்கு வந்ததும் என்னன்னு பார்ப்போம்” என்றான்.
கௌதமனுக்குள் ஆச்சரியமும் கேள்வியும். உலகில் எதுவுமே இலவசம் இல்லையே. இதற்கு ஈடாக எதைக் கேட்கப் போகிறான் எனப் பார்த்தான் கௌதமன்.
“சல்வேஷ்… பூ பாத்தியா? தல்சன் அங்கிள் தந்தாங்க. இவங்க தான் என்னோட தல்சன் அங்கிள்” இவனைப் பார்த்து அத்தனை பற்களையும் காட்டிய யாழியைப் பார்த்தவன், “நம்ம ஃப்ரெண்ஷிப்புக்கான முதல் படின்னு வச்சுப்போம்… என் ஃப்ரெண்சிஷிப் வேண்டாம்ன்னா… சின்ன பரிகாரம்ன்னு வச்சுப்போம்” என்றான் தர்ஷன் புன்னகை தவழ.
பேச்சு ஓய்ந்தது. அவரவருக்குப் பிடித்த இனிப்பு வந்தது. மூளை யோசனையில் இருந்தாலும், கையும் வாயும் அதன் வேலையைச் செய்தன.
“அப்பா… ஆலி பேபி குலாப் ஜாமூன் சாப்பில போலேன். ஃபோன பிலிங்க” எனக் கைப்பேசியை அப்பாவிடம் கொடுத்த யாழி, உயரம் போதாது, அப்பாவின் மடிக்குத் தாவினாள்.
வாயிலிருந்து ஜீரா ஒழுக, “அம்மா, குலாப் ஜாமூன் டேஷ்டியா இலுக்கு. சல்வேஷ்… ஒன் டைம் தூணி எழுந்து வலும் போது உனக்கு, பாப்பாக்கு, அம்மாக்கு எல்லாக்கும் வாங்கி வலேன். சலியா?” மகள் மழலையில் பேச, கைப்பேசி திரையில் தெரிந்தவளோடு நயன மொழி பேசிக் கொண்டிருந்தான் கௌதமன்.
“நாளைக்கு வர்றீங்களா?” எனக் கேட்ட யசோவின் முகத்திலும் மலர்ச்சி.
“வரணுமா?” என இவன் கேட்க, அவள் முறைத்தாள். அது எப்படி… கோபம் இல்லாமல் முறைக்க முடியுமா என்ன? பல்லுக்குள் இதழைக் கடித்துப் பிடித்துச் சிரிக்கும் கண்களைச் சுருக்கிப் பிடித்தால்… முடியும்.
நீ எப்படி வேண்டுமென்றாலும் என்னைப் பார்… ஆனால் எனக்கு உன் பதில் வேண்டும் என இவன் பார்த்தான். “ம்ப்ச்…” அலுத்துக் கொண்டவள் இதழை விடுவிக்க, இருவர் முகத்திலும் புன்னகை அரும்பி, விரிந்தது.
“லன்ச் செய்து வைக்கவா? இல்ல… டின்னரா?” என அவள் கேட்க, அவன் முகத்தில் அதே வாடா புன்னகை.
‘நீ தான் சொல்லேன்’ என்ற அவன் புன்னகைக்கு, “லன்ச் ரெடி பண்ணி வைக்கிறேன். தனியா வராதீங்க. டிரைவர கூட்டிட்டு வாங்க. குழந்தைக்கு வழியில எதையும் வாங்கி தராதீங்க. வீட்டுல இருந்தே சேன்விச், இட்டிலி, லெமன் ஜூஸ், மோர் மாதிரி எடுத்து வச்சுக்கோங்க. நேரத்துக்கு கிளம்பிடுங்க.” என்றவள் தொனியில் அவர்களை காணும் ஆர்வம் கொட்டி கிடந்தது.
சர்வேஷ் மட்டும் அல்ல… கௌதமனும் மலர் கொத்து தான்… யசோ எனும் தென்றலின் திசைக்குத் தலையசைக்கும் மலர்க் கொத்து.
உணவகத்தின் தொலைக்காட்சி திரையில் நடிகர் விஜயும், நடிகை சமந்தாவும் பாடலுக்கு நடித்துக் கொண்டிருந்தனர். திரையின் மீதிருந்த பார்வையை எதிரில் இருந்த கௌதம் மீது செலுத்தினாள் தாக்ஷா. அவனோடு பழகின காலகட்டத்தில் அவனிடம் பார்த்திராத முகபாவத்தின் அர்த்தத்தை அவள் புரிந்து கொள்ள முயன்றாள்.
“அப்பாவும், நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சா தான் வீட்டுக்கு வருவேன்னு சொல்லிட்டு மாமா வீட்டுல டேரா போட்டுட்டு இருக்கார். அப்பாவ வரச் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” பதில் தெரிந்தே ஆர்வப் பார்வை பார்த்தாள் யசோ.
எதிரில் இருவரை வைத்துக் கொண்டு என்ன பேசுவான்?
கைப்பேசி திரையில், புன்னகையை அடக்க முடியாது துடிக்கும் உதடுகள் இரண்டின் மீதிருந்து பார்வையை அகற்ற முடியாதவனாக பிடரியை தேய்த்துக் கொண்டவனைப் பார்த்து அமர்ந்திருந்த தர்ஷன், அவன் முகத்தைத் திருப்பாது, “தட் டிரெயின் லெஃப்ட் தி ஸ்டேஷன்” எனத் தங்கைக்கான பதிலைக் கொடுத்தான்.
“என்ன அண்ணா?”
தங்கையைத் திரும்பிப் பார்த்தவன், “ஹீ மூவ்ட் ஆன் தாக்ஷா” என்றான், நீண்ட பெருமூச்சோடே.
‘நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்… அழகாய் உடைத்தேன், நீயே அர்த்தம்’ தொலைக்காட்சிப் பெட்டி பாடிக் கொண்டிருந்தது. கௌதமனும் யசோவும் அந்த உணர்வை முகத்தில் காட்டி அமர்ந்திருந்தனர்.
கௌதமன் மனது இன்பத்தின் கொள்ளவை தாண்டியதால், வெடித்து இன்பத் துகள்களை உடல் முழுவதையும் பரப்பியது.