Skip to content
Post Views: 2,036
“வீட்டுக்கு போனதும் என்ன ஆச்சு என்ன ரிசல்ட் வந்துச்சுன்னு கேட்பாங்க..! நீங்களே பதில் சொல்லிக்கோங்க..! நான் அவங்க கிட்ட பேசினா டென்ஷனாகும் சண்டைதான் வரும்..!”
“ம்ம்..!” என்பதோடு நிறுத்திக் கொண்டான் வாத்சல்யன்.
வீட்டுக்கு போன பிறகு ஆர்வத்தோடு ஓடி வந்து மங்கை கேட்கக்கூடிய கேள்விகளும்.. அதற்கு பதில் சொன்ன பிறகு உதடு சுழித்து சலிப்போடு அவள் சொல்லக்கூடிய வார்த்தைகளும் மனப்பாடமாய் மனக்கண் முன்பு வந்து போயின..
“பத்து வருஷமா ஒரே பதில்.. பிறக்கும், பிறக்காதுன்னு உடைச்சு சொல்லிட்டா.. நிம்மதியா அடுத்த வேலையை போய் பார்க்கலாமில்ல.. ஏன் இந்த டாக்டர்ங்க இப்படி இழுத்தடிக்கிறாங்க.. அவங்களுக்கு அந்த டெஸ்ட் இந்த சிகிச்சைன்னு எதையாவது இழுத்து விட்டு காசு சம்பாதிக்கணும்.. எல்லாம் நம்ம நேரம்.. ‘நம்ம குடும்பத்துல ஒரு குறையும் இருக்காது.. அதான் உன் இரண்டாவது புள்ள தங்கமாட்டம் ரெண்டு பிள்ளைகளை பெத்து தந்திருக்கானே.. இதுவரைக்கும் நம்ம வம்சத்துல பிள்ளை இல்லைன்னு கண்ண கசக்குன பொம்பளை எவளாச்சும் ஒருத்திய பாத்துருக்கியா நீ’ன்னு நேத்து எங்கக்கா சரஸ்வதி ஒரே அங்கலாய்ப்பு..”
Advertisement
“அப்ப நான்தான் பிரச்சனை.. எனக்குத்தான் குறைன்னு சொல்ல வரீங்க..?” ஒருவேளை லக்ஷ்மி இப்படி கேட்டு வந்தால்..
“அம்மா தாயே நான் உன்கிட்ட பேசலாம்மா..! ஏதோ என்னோட ஆதங்கம் மனசுல வச்சுக்க முடியல..! கொட்டித் தீர்க்கறேன்.. இல்லைனா ரத்த அழுத்தம் எகிறி நரம்பெல்லாம் வெடிச்சு போயிடும். மூத்த பிள்ளைக்கு துள்ளி விளையாட ஒரு வாரிசு இல்லைனா மனசு வெம்பி போகாதா..?”
“அம்மா என்ன பேச்சு இது..! நாக்குல நரம்பில்லாம..? வேதனை உங்களுக்கு மட்டுந்தானா எங்களுக்கு வருத்தம் இல்லை..? ஏன் இப்படி நொந்து போயிருக்கிறவங்களை குத்திக் கிளறி ரணமாக்கறீங்க..!”
Advertisement
“ஆமாடா இப்படியே சொல்லி என்னை அடக்கிடுங்க..! மனசு விட்டு புலம்ப கூட எனக்கு சுதந்திரமில்ல.. ஒரு நல்லது கெட்டதுக்கு போக முடியல.. உன் மூத்த பிள்ளைக்கு இன்னும் நல்லது நடக்கலையான்னு துக்கம் விசாரிக்கற மாதிரி கேட்கும் போது நெஞ்செல்லாம் அடைக்குது.”
Advertisement
“அப்ப எங்களுக்கு குழந்தை பிறக்கற வரைக்கும் எந்த விசேஷத்துக்கும் போகாதீங்க..!”
“அந்த பிராப்தம் உங்களுக்கு இருக்கா இல்லையானு தெரியலையே..!”
“நாங்க நம்பிக்கையோட இருக்கோம்.. எங்களுக்கு தைரியம் கொடுக்கலைனாலும் இப்படி பலவீனப்படுத்தாதீங்க..!” வாத்சல்யன் கோபப்படுவான்..
Advertisement
இப்படியாக கடந்த சில ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகள் கசந்து போய் நெஞ்சு முழுக்க நிறைந்திருக்கிறது.
“பெத்துக்கிட்டாத்தான் குழந்தையா..? பேசாம சொந்தக்காரங்க குழந்தையை தன் குழந்தையா ஸ்விகாரம் எடுத்து கூட வளர்க்கலாமே..!” மங்கையும் வாத்சல்யன்.. முரளிக்கு இடையே பிறந்த ஒரே பெண் வாரிசுமான மித்ராவும் அடிக்கடி இப்படி இவர்கள் காதினில் விழும்படி பேசிக்கொள்வார்கள்.
வாரிசு இல்லாத சொத்து ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிள்ளைக்குதானே சொந்தமாகும்.
வாத்சல்யன் சந்தான லஷ்மி தம்பதியருக்கு ஒரு பக்கம் இது சரியெனத் தோன்றினாலும் இன்னொரு பக்கம்.. உறவுகளின் வாரிசுகளை தன் குழந்தைகளாக பாவிப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தன.
அளவு கடந்த பாசத்தை கொட்டலாம்.. ஆனால் கண்டிக்கக் கூடாது. பிள்ளைகள் அவர்கள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும். இவர்கள் சொற்படிதான் பிள்ளையை வளர்க்க வேண்டும். உரிமை முழுக்க பெற்றவர்களுக்கு..! வளர்க்கிறேன் என்ற பெயரில் குழந்தைகள் அவர்களிடம் இருக்கலாம். அவ்வளவே உரிமை.!
தன் பிள்ளை என்றால் கண்டிக்கலாம் செல்லம் கொடுக்கலாம்.. நம் இஷ்டப்படி அவர்களை வளர்த்து உருவாக்கலாம்.. இந்த விதிமுறைகள் எல்லாம் உற்றார் உறவுக்காரப் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் போது செல்லுபடியாகாது..
ஒரு காஸ்ட்லி பொம்மையை குழந்தையின் கையில் கொடுத்து பக்கத்திலேயே பெரியவர்கள் அமர்ந்து தொடாதே திருப்பாதே.. என அதட்டிக்கொண்டு மேற்பார்வை பார்ப்பதை போன்ற நிலை..
இப்படித்தான் மித்ரா தன் மகன் அரவிந்தை அண்ணன் அண்ணியின் பொறுப்பில் நாலு நாள் இங்கே விட்டுப் போக.. அவனோ செய்யாத சேட்டைகள் இல்லை.. வீட்டில் உடைக்காத பொருட்கள் இல்லை..
அம்மாவின் கண் பார்வையில் கொஞ்சம் அடங்கி இருப்பான். மித்ராவும் பிள்ளையை இவர்கள் கவனிப்பில் விட்டு ஊருக்கு போய்விட.. சந்தான லஷ்மிக்கு முழி பிதுங்கியது..
சொன்ன பேச்சு கேட்பதில்லை.. “பிள்ளையை எப்படி வளர்த்து வச்சிருக்கா பாரு.. சரியான குட்டிச்சாத்தான்..” என புவனா நாத்தனார் மீதான கோபத்தையும் சேர்த்து அரவிந்தை திட்டி தீர்ப்பாள்.
இந்த நிலையில் அரவிந்தன் புவனா பிள்ளைகளோடு விளையாடி சண்டை போட்டு.. வினோதினியை கீழே தள்ளிவிட..! அந்த நேரம் அங்கு வந்த சந்தான லக்ஷ்மி தவறு செய்த பிள்ளையை கண்டித்தாள்.
கடைசி வரை அரவிந்த் தன் பக்க பிழையை ஒத்துக் கொள்ளவே இல்லை.. வினோதினியிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதோடு மீண்டும் அவளை கன்னத்தில் அடித்துவிட.. சந்தான லஷ்மி கோபத்திலும் உரிமையிலும் அவனை முதுகில் பட்டென அறைந்தது பெரிய விவகாரமாய் போனது அந்த வீட்டில்.
தாய் போன் செய்த நேரத்தில் அரவிந்த்.. பெரியம்மா தன்னை கொடுமைப்படுத்துவதை போல.. தேம்பித் தேம்பி அழுததில்.. அடுத்த பேருந்தை பிடித்து ஊர் வந்து சேர்ந்தாள் மித்ரா.
“அவ எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்.. ஆளாளுக்கு போட்டு அடிக்கத்தான் பிள்ளை பெத்து வச்சிருக்கேனா..? சின்ன குழந்தைங்க அப்படித்தான் இருப்பாங்க அதுக்காக கை நீட்டி அடிக்கலாமா..! உங்கள நம்பி என் பிள்ளையை இங்க விட்டுட்டு போனேன் பாருங்க என்னை சொல்லணும்.!” புவனா வாய் திறக்கவே இல்லை. மித்ரா வாயில் விழுந்து மீள முடியாது என்ற பயம்.
“என்ன நம்பி பிள்ளைய விட்டா அவன் தப்பு செஞ்சா நான் கேட்கத்தான் செய்வேன். பொம்பள பிள்ளையை அடிக்கறது என்ன பழக்கம். இந்த சின்ன வயசுலயே பெண்களை எப்படி மரியாதையாக நடத்தணும்னு சொல்லி கொடுக்க வேண்டியது நம்ம கடமை இல்லையா..! சில விஷயங்களை கண்டிச்சு சொன்னாத்தான் மனசுல பதியும். ஒரே பிள்ளையின்னு ஓவரா செல்லம் கொடுத்து வளர்த்தா அதையே அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு.. அவன் இன்னும் நிறைய தப்பு செய்ய வாய்ப்பு இருக்குது பிடிவாதம் அதிகமாகும். வீட்ல யாராவது ஒருத்தர்கிட்ட குழந்தைகளுக்கு பயம் இருக்கணும்.” என்றாள் லஷ்மி.
“என் புள்ளையை எப்படி வளர்க்கணும்னு நீங்க கிளாஸ் எடுக்க வேண்டாம். பிள்ளை வளர்ப்பு பத்தி உங்களுக்கு என்ன தெரியும். பெரிய அனுபவஸ்தி மாதிரி பேசறீங்க.. புள்ள குட்டி பெத்தவங்களுக்குத்தான் குழந்தையோட அருமை தெரியும். வர வர உங்க மனசு வறண்டும் போச்சு.”
கடப்பாரையை பழுக்க காய்ச்சி நெஞ்சில் இறக்கியது போலிருந்தது அந்த வார்த்தை.
மங்கைக்கு மகள் இப்படி ஒரு வார்த்தையை முகத்திற்கு நேரே சொன்னது கஷ்டமாகத்தான் இருந்தது.. முதுகுக்குப் பின்னால் ஆயிரம் பேசியிருக்கிறார்கள்.. இலைமறை காய் மறையாக பட்டும் படாமலும் பேசும்போதே மகன் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருவானே.. ! புவனா பேசி வைத்ததன் விளைவாக இனி வீட்டில் பூகம்பம் வெடிக்க போகிறதோ..! யாருக்கு பரிந்து பேசுவதென தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார் அவர். ஆனாலும் என் பேரனை அடிக்க இவ யாரு என்ற கோபம் மங்கையின் அடி நெஞ்சிலும் ஆழ முளைத்திருந்தது.
“என்னமோ பண்ணுங்க எப்படியோ போங்க..! இனிமே நான் எதுலயும் தலையிட மாட்டேன்.! குழந்தைகளை கொண்டு வந்து என் பொறுப்புல விடாதீங்க..!” மூக்குநுனி சிவக்க கோபத்தில் கத்திவிட்டு போனாலும்.. அறைக்குள் வந்ததும் கதவை சாத்திவிட்டு நெஞ்சு வெடிக்க கதறி அழுததில் வாத்சல்யன் பயந்து போனான்.
“நான் போய் என்னன்னு கேட்கறேன்.. எப்படி அவ அப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம்..! உன்னைச் சொன்னா என்னையும் சேர்த்து அவமானப் படுத்தற மாதிரி.. இதை அப்படியே விட முடியாது சந்தா..!” என கையை உருவிக்கொண்டு கதவை திறக்கப் போனவனை.. காலில் விழாத குறையாக கெஞ்சி சமாதானப்படுத்தினாள் லஷ்மி.
“வேண்டாம் விட்ருங்க..! பிரச்சனை பெருசாகும். நாம சொல்றதை புரிஞ்சுக்க மாட்டாங்க.. நீங்க ஏதாவது பேச போய் மித்ரா கோவப்பட்டு, நான் இனிமே இந்த வீட்ல காலெடுத்து வைக்க மாட்டேன்னு சொன்னா.. உங்க அம்மாவும் அப்பாவும் நான் என்னவோ இந்த வீட்டு பொண்ணுக்கு பெரிய அநீதி இழைச்சிட்டதா.. என்னை பார்க்கும் போதெல்லாம் கருவி கொட்டுவாங்க..! எனக்கு நிம்மதி முக்கியம் வாத்சா..! என்னால இந்த பிரஷரை ஃபேஸ் பண்ண முடியாது.. ப்ளீஸ் விட்டுடுங்க.. ரெண்டு நாள் கத்திட்டு அடங்கி போய்டுவாங்க. எனக்காக வாத்சா..!” அவன் நெஞ்சில் சாய்ந்து அழுத போது மென்மையாக தலையை வருடி கொடுத்து கலங்கிய விழிகளும் கவலை தோய்ந்த முகமுமாய் மனைவியை தேற்றினான் வாத்சல்யன்.
ஆனால் தங்கை மீது அவனுக்கிருந்த பெருத்த கோபத்தால், அவளோடு முகம் கொடுத்து பேசுவதை கணிசமாக குறைத்திருந்தான். முன்பு போல் அரட்டை அடித்து விளையாடுவதில்லை.. அவள் பிள்ளையை கடைக்கு அழைத்துப் போய் வேண்டியதை வாங்கித் தருவதில்லை. தன் கடமையை மட்டும் செய்து மேலோட்டமாக பேருக்கு பழகி வந்தான் அவ்வளவுதான்.
“பாருமா..! இந்த அண்ணி என்ன பத்தி என்னென்னவோ சொல்லிக் கொடுத்து அண்ணனை பேசவிடாம பண்ணிடுச்சு.” மித்ரா மூக்கை சிந்தி அம்மாவிடம் அழுதாள்.
“விடுடி.. அவங்கள பார்க்காத.. அம்மாவும் அப்பாவும் எப்பவும் உன் பக்கம்தான் நிப்போம். எப்பவும் போல இந்த வீட்டுக்கு நீ வந்து போயிட்டு இரு.. யாரும் உன்னை எதுவும் கேட்க முடியாது..!” என ஒவ்வொரு முறையும் மகளை சமாதானப்படுத்துவாள் மங்கை..
“முன்ன மாதிரி உங்க தங்கைகிட்ட நீங்க அவ்வளவா பேசறதே இல்லையே..! அன்னிக்கு நடந்த பிரச்சனைதான் காரணமா..! நீங்க எப்பவும் போல பழையபடி இருங்க வாத்சா.! இல்லைனா அதுக்கும் என்னைத்தான் குறை சொல்லுவாங்க.!” லஷ்மி கேட்டபோது
“அப்படியெல்லாம் இல்லையே! நான் நார்மலாத்தான் பேசறேன்.. உங்க கண்ணுக்கு அப்படி தெரிஞ்சா நான் என்ன செய்ய முடியும்..!” என மழுப்பி அந்த உரையாடலை ஸ்கிப் செய்துவிட்டான் வாத்சல்யன்.
புவனா முரளி குழந்தைகளை பொருத்தவரை ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.. சந்தான லஷ்மி பிள்ளைகளிடம் அதிகம் பாசம் காட்டி.. குழந்தைகள் அம்மாவையும் பெரியம்மாவையும் ஒப்பிட்டு.. “பெரியம்மா உன்னை மாதிரி இல்ல.. ரொம்ப நல்லவங்க..! அது வாங்கி தராங்க..! இது சொல்லி தராங்க..!” என்று ஒப்பிட்டு பேச ஆரம்பித்த பிறகுதான் பிரச்சனையே தொடங்கியது.
“ஏதோ ஒரு கோபத்தில்.. பேசாம நான் பெரியம்மாவுக்கே குழந்தையா பிறந்திருக்கலாம்..” என வினோதினி உளறி வைத்த போது அடி பின்னி விட்டாள்.
சந்தான லஷ்மி பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைத்து அவர்களை தன்னிடமிருந்து பிரிப்பதாக நினைத்தாள் புவனா.
அதிலிருந்து பிள்ளைகளை வைத்து எப்போதும் சண்டைதான். அவள் கண் பட்டுதான் இளையவனுக்கு டைபாய்டு வந்தது. அவள் வயிற்றெரிச்சல் தான்.. மூத்தவள் நடக்கும்போது கால் தவறி கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டாள். இப்படி ஜாடை மடையாக ஏகப்பட்ட பேச்சுக்கள். புவனாவின் நோக்கம் புரிந்து.. சந்தான லஷ்மி மெல்ல மெல்ல பிள்ளைகளிடமிருந்து விலகிக் கொண்ட பிறகுதான் இந்த சச்சரவு படி படியாக குறைந்து நின்று போனது.
“என்ன இவனுக்கு புதுசா பெல்ட்டெல்லாம் மாட்டி விட்டுருக்காங்க..” கண்ணாடியை இறக்கி ஒரு தெரு நாயை கண்டு ஆச்சரியப்பட்டு கேட்டாள் லஷ்மி.
“ஆமா..! இப்பதான் கார்ப்பரேஷன் வண்டி வந்து எல்லா நாய்களையும் பிடிச்சிட்டு போகுதே!.. அதான் யாராவது இவரை காப்பாத்த வேண்டி பெல்ட் கட்டி விட்டிருப்பாங்க..”
“ஆள் கொஞ்சம் குண்டாகிட்டான் போலயே..!”
“ம்ம்..! டீக்கடைக்கு வர்றவங்க பிஸ்கட் வாங்கி போட்டு, சார் இப்ப நல்ல ஊட்டமாகத்தான் தெரியறார்..” என சிரித்தான் வாத்சல்யன்.
இவ்வளவுதான் இருவருக்கான சண்டை.. போயே போச்சு..! சம்பந்தமில்லாத ஒரு டாபிக்கை எடுத்து பேச ஆரம்பித்தால் போதும். பிணக்குகள்.. கோபங்களை ஒத்தி வைத்து விட்டு இன்னொருவர் உரையாடலோடு இணைந்து கொள்வது அவர்களுக்குள் பழக்கம். அடுத்த ஒரு மணி நேரத்தில் எதற்கு சண்டை போட்டோம் என்பதை இருவருக்கும் மறந்து போகும்.
பொதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் காரில் கண்ணாடியை இறக்கி சந்தான லஷ்மி தன்னை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததும், நீண்ட நாட்கள் பழகிய பாவனையில்.. வாலை சுழட்டிக்கொண்டு சிறிது தூரம் அவர்கள் காரை பின் தொடர்ந்த நாய் பிறகு மீண்டும் தனியாக எதாஸ்தானத்திற்கு வந்து சேர்ந்தது..
வீட்டுக்கு வந்த பிறகு வழக்கம் போல.. சாரதா இருவரது முகத்தையும் கூர்ந்து பார்த்தபடி ஆவலாக அவர்கள் சொல்லும் பதிலுக்காக காத்திருக்க.. லஷ்மி நிற்காமல் மாடிப்படியேறி சென்றாள்.
பரிசோதனை முடிவு என்னவென சொல்லாமலேயே தெரிந்து போயிற்று அவருக்கு. அதற்கு மேல் கேட்க என்ன இருக்கிறது..! முகம் சோர்ந்து ஏமாற்றத்தில் உதட்டை சுழிக்க..
“தலை வலிக்குதும்மா..! நான் மேல போறேன். எங்களுக்கு சாப்பாடு வேண்டாம்.. வேணும்னா ஆர்டர் பண்ணிக்கறோம்.” என்று விட்டு படியேறி சென்ற மகனை கவலையோடு வெறித்து பார்த்தாள் மங்கை.
சொன்னபடி இரவு உணவுக்காக இருவருமே கீழே இறங்கி வரவில்லை. ஒன்றாக அமர்ந்து Ottயில் புதிதாக ரிலீசான படத்தை பார்த்தனர். ஆர்டர் செய்த உணவு வந்ததும் வாத்சல்யன் அதை போய் வாங்கி வர.. இரவு உணவை முடித்துக் கொண்டு.. ஒருவரை ஒருவர் அணைத்தபடி அமைதியாக படுத்திருந்தனர்.
மயிலிறகாய் வருடும் ஆறுதல் வார்த்தைகளோ..! கண்டிப்பா நமக்கு குழந்தை பிறக்கும்.. என்ற நம்பிக்கை வாசகங்களோ அங்கு தேவைப்படவில்லை.. உடம்பை இறுக்கி எலும்பை உடைக்கும்படியான அந்த வலிமையான அணைப்பு மட்டுமே சந்தான லஷ்மிக்கு போதுமானதாய் இருந்தது.
எப்போது உறங்கினாளோ தெரியவில்லை.
ஆனால் மீண்டும் அந்த கனவு..
அவள் திடுக்கிட்டு விழிக்கும் போது விடிந்திருந்தது.
கனவு தந்த தாக்கத்தில் அதிர்ந்து போய் எழுந்தமர அவள் பக்கத்தில்.. நெற்றியை தேய்த்தபடி குழப்பத்தோடு அமர்ந்திருந்தான் வாத்சல்யன்.
தொடரும்.
error: Content is protected !!
சராசரியாக ஒரு குடும்பத்தில் அதுவும் கூட்டு குடும்பத்தில் நடக்கும் யதார்த்தமான சூழ்நிலையில் கதை நகர்வு ரொம்ப அருமையா இருக்கு 👌🏼👌🏼👌🏼
சாந்தா நினைச்சா தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு பாவம் அவளும் இன்னும் என்னென்ன வார்த்தைகளை தான் கேட்க வேண்டுமோ 😔😔😔
இந்த கணவன் மனைவி ரெண்டு பேரோட புரிதல் அந்நியோன்யம் அடடா எவ்வளவு அழகா இருக்கு 🤗🤗🤗
அப்படி என்ன தான் கனவு சஸ்பென்ஸ் தாங்க முடியல 😳😳😳
நாக்குல நரம்பு இல்லாம பேசி காயப்படுத்து துங்க . இந்த புவனா மித்ரா எல்லாம் என்ன ஜென்மங்களோ.என்ன கனவா இருக்கும் 🤔🤔. ரொம்ப சஸ்பென்ஸா இருக்கு. கதை அருமையா கொண்டு போறீங்க writer Ji
Nanathanar
Oragathi
Ellarumae pannara velaidhan
Kuzhandhaiya poruppa ah valakanum. Namba solli kodukalanaa veliya ah dhan solli kodupanga
Athai dhan ah
Periyama ah dhannah
Seiya urmai illaiya ah
Kuzhandhainga sollaradha vechi periyavangadhan thappu nu sollalam ah😟😟😟😟😟😟😟😟😟
Rendu. Perumae adhae kannava ah
சொந்த பந்தங்கள், கூட்டு குடும்பம் என்றாலே ஏச்சுக்கும், பேச்சுக்கும்,சண்ட சச்சரவுகளுக்கும் பஞ்சமே இருக்காது😌😌
நாத்தனார் என்கிறது நல்லா இருந்தாலே குத்தல் பேசும் 😪,இதுல குழந்தை இல்லைங்கிற விஷயத்தை வச்சு குதர்க்கம் பேச சொல்லவா வேண்டும்
அப்படி என்ன கனவா இருக்கும் இருவருக்கும்😇😇
இந்த நிலைமையில அடுத்தவங்க குழந்தையை கொஞ்சுறதுக்கே பயமா இருக்கும்.இதுல கண்டிப்பு🥺குழந்தை ஏதாவது தப்பு பண்ணினாலும் கூட, அதை அவங்ககிட்டயே குழந்தை இப்படி பண்ணிட்டானு சொன்னாலும். நம்மலதான் காயப்படுத்துவாங்க…