Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 11.1

“ஹேய்..  ஹேய். ஸ்வீட்டி ஓடாதே.. நில்லு.” என்று அவள் கையைப் பற்றி நிறுத்தினான் ஊட்டி.

“இல்ல.. நான் போறேன்..” என்றவளின் வார்த்தைகள் அவளுக்கே கேட்கவில்லை!

உள்ளுக்குள் ஆச்சர்யம் வேறு..!

தான் தானா இது?



Advertisement

இந்நேரம் வேற எவனாவது இருந்திருந்தால், சட்டையைக் கோர்த்து பிடித்திருப்பாள்!

கூட நின்ற மற்ற பையன்களுக்கு கூட ஆச்சர்யமே!

“நில்லு.. இந்தா என் சைக்கிளில் வீட்டுக்குப் போ.

Advertisement

நான் உன் சைக்கிளை பங்க்ச்சர் ஒட்டிக் கொண்டு வர்றேன்” என்று சொல்லி அவன் சைக்கிளை அவளிடம் கொடுத்தான்.

Advertisement

தயக்கத்துடன் அதை வாங்கிக் கொண்டவள் இனியாவை அதில் ஏற்றிக்கொண்டு சிட்டாக பறந்து சென்றாள் வீட்டுக்கு.

அவள் சைக்கிளை தள்ளிக் கொண்டு நண்பர்களுடன் சென்றான் ஊட்டி.

அவர்கள் காட்டிய ஒரு சைக்கிள் கடைக்கு சென்றவனை, அங்கிருந்த அதன் உரிமையாளர் ஒரு பெரியவர் வெளியே வந்து

Advertisement

“யாருப்பா நீ என்ன வேணும்?” என்று விசாரித்தார்.

“இவன் பூக்கடை முதலாளி ரெங்கசாமி தாத்தா பேரன்.

சென்னையில் இருந்து வந்திருக்கான். சைக்கிள் பஞ்சர் ஓட்டணும்” என்றார்கள் மற்றவர்கள்.

“ரெங்கசாமி அண்ணன் பேரனா?

யாரு மகள் பிள்ளை பேரனா? அவர் பொண்ணு கூட லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சே? அந்த பொண்ணோட மகனா?”

இது தான் இங்கே நிதர்சனம்!

ஸ்ரீமதி காதலித்து கல்யாணம் செய்து கொண்டாலும், புருசனோடு நல்லபடியாக நல்ல வசதியாக வாழ்வதால் இந்த அடையாளம்!

லவ் மேரேஜ்!

இதே ஸ்ரீமதி கஷ்டபட்டுக் கொண்டிருந்தால், லவ் பண்ணி “ஓடிப் போனவள்” என்று அடையாளம் காட்டப் பட்டிருப்பாள்!

“ஆமா தாத்தா” என்றான் ஊட்டியும் சிரித்துக் கொண்டே!

அதற்குள் ஸ்வீட்டியே அங்கு வந்து விட்டாள் திரும்பி.

அவள் வீட்டுக்கு போய்க் கொண்டிருந்த போது அவள் அப்பா எதிர்ப்பட்டு, இனியாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு விட்டு,

“நீ போய் அந்த தம்பி கூட இருந்து சைக்கிளை சரி பண்ணி வாங்கிட்டு வா” என்று சொல்லி அவள் கையில் பணத்தையும் கொடுத்து அனுப்பி விட்டிருந்தான்.

லீவுக்கு ஊருக்கு வந்திருக்கும் பையனை நாம கஷ்டப் படுத்தக்கூடாது என்று சொல்லியும்!

மவுனமாக அவளும் அந்த கடையில் வந்து நிற்க, ஊட்டி அவளைத் திரும்பி பார்த்து புன்னகைத்தான்.

“நான் வாங்கிட்டு வருவேன்ல.. நீ எதுக்கு வந்த?’ என்றபடி!

அவள் அப்போதும் ஒன்றும் சொல்லாது நின்று கொண்டிருந்தாள்.

“வாட் இஸ் யுவர் நேம்?” என்று ரேவந்த்தைக் கேட்டார் அந்த தாத்தா.

“ரேவந்த்” என்று சொன்னவன் அடுத்து ஆங்கிலத்தில் தன்னைப் பற்றி சொல்ல போக, அவனை நக்கலாக சிரித்து தடுத்தார்கள் நண்பர்கள்!

“அவருக்கு அதுக்கு மேல எல்லாம் தெரியாது. விடு” என்று காதில் கிசுகிசுத்தார்கள்.

“தாத்தா, இவன் ஊட்டி கான்வென்டில் படிக்கிறான்.

பாதி வெள்ளைக்காரன்  இவன்!

இவன் இங்கிலீஷ் உனக்கு புரியாது விடு” என்று அவருக்கு தெரியப்படுத்தவும், தமிழுக்கே திரும்பி வந்தார் அவர்!

“என்ன தான் வெள்ளைக்காரன் மாதிரி பேசினாலும், நீ பெரியவன் ஆனவுடன் உன் அப்பா மாதிரி நம்ம ஊர் பெண்ணைத் தான் கல்யாணம் செய்யணும் என்ன?” என்றார் தாத்தா, சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டியபடியே.

“எனக்கும் அது தான் ஆசை தாத்தா!

நிச்சயம் நான் பெரியவன் ஆனவுடன், இங்க இருக்கிற பொண்ணை தான் கட்டுவேன்” என்று மதுராவை சிரித்தபடியே அர்த்தமாக பார்த்தவன்,

“ஆனா எங்க.. உங்க ஊர் பொண்ணுங்க பேசவே காசு கேப்பாங்க போல!

வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசலன்னா, நான் எங்கே அவங்கள பார்த்து பேசி, கல்யாணம் பண்ண?” என்றான்.

ஒரு நிமிடம் அவள் முகத்தில் வெட்கத்தின் ரேகை வந்து போனது!

அதை ரேவந்த் கவனித்து விட்டான் என்று கண்டு கொண்டவள் டக்கென்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்.

“அப்போ உனக்கு முறைப் பொண்ணு இருக்காங்கன்னு சொல்லு!”

“ம்ம். இருக்காங்க.. சதா முறைக்கிற பொண்ணா இருக்காங்க அதான் என்ன பண்றதுன்னு தெரியல!”

தாத்தா ஏதோ சொல்ல போக, மதுரா இப்போது அவரிடம் கோபமாக ,

“தாத்தா கொஞ்சம் நிறுத்துறியா? என்ன பேச்சு இது? கல்யாணத்தைப் பத்தி பேசுற வயசா எங்களுக்கு?

இதுக்கு மேலே பேசுன, சதீஷ் சித்தப்பா கிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்க” என்று அவரை மிரட்டினாள் மதுரா!

“ஓ.. ஸ்வீட்டிக்கு கோபமாக பேசக் கூட தெரியுமா?” என்றான் ரேவந்த் அருகில் இருந்தவனிடம்.

“டேய்.. இது தான் அதோட ஒரிஜினல் வாய்ஸ்.

ஆனா என்னமோ தெரியல. உன்கிட்ட மட்டும் தான் பம்முது!” என்றான் நண்பர்களில் ஒருவன்.

“அது ஒண்ணுமில்லடா. இது நாள் வரைக்கும் இங்கிலீஷ் தெரியாத நம்ம கிட்ட பீட்டர் விட்டுகிட்டு இருந்துச்சு.

இப்ப அவளை விட நல்லா இங்கிலீஷ் பேசுற ஊட்டி வந்ததும் பம்முறா அவ்வளவு தான்!” என்றான் இன்னொருவன்.

“எனக்கென்னமோ அப்படி தெரியல” என்றான் ரேவந்த்.

அவன் மனதில் அவளின் முகத்தில் கண்ட முக சிவப்பும் வெக்கமும் நினைவில் வந்து போனது!

———

பத்து நாட்கள் கழித்து,

“அப்பாயி.. அப்பாயி” என்று அழைத்துக் கொண்டே ரேவந்த் வீட்டுக்குள் நுழைந்தாள் மதுரா.

ரேவந்த்தின் அம்மாச்சி சுந்தரவல்லியை அவள் அப்படி தான் அழைப்பாள்.

“வாம்மா..” என்று அழைத்தவாறு அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள் ஸ்ரீமதி.

“வாங்க அத்தை..” என்றாள் மதுரா.

“என்ன சொல்றா உன் குட்டி தங்கச்சி..” என்று சொல்லி அவளின் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள் ஸ்ரீமதி.

“ம்ம். நல்லா இருக்கா.. ரொம்ப குட்டியா அழகா!

அவளுக்கு இன்னிக்கு பேர் வைக்க போறோம். அய்யர் வந்திருவார். அதான் மாவிலை பறிக்க வந்தேன்” என்றாள்.

மதுராவின் வீட்டு மாமரம் தான்! ஆனால் ரேவந்த் வீட்டுப்பக்கமாக சாய்ந்திருக்கும். அவர்கள் வீட்டு மாடிக்கு சென்றால், சுலபமாக இலைகள் பறிக்க எட்டும்!

மதுராவின் கண்கள் ஊட்டியைத் தேடியது! ஆனால் அவனைக் காண வில்லை!

வழக்கமாக இவள் அவர்கள் வீட்டுக்குள் வந்தாலே அவனும் உள்ளே இருந்து வெளியே வந்து விடுவான்.

இவளும் ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டு அங்கு போக தான் செய்வாள்.

ரேவந்த்தின் மாமாவின் கடையில் தினசரி நியூஸ் பேப்பர்கள் வாங்குவார்கள்.

அவற்றுக்கு இலவச இணைப்பாக தரும் வாரமலர், சிறுவர் மலர், குடும்ப மலர், பக்தி மலர் இவற்றை மட்டும் வீட்டில் கொண்டு வந்து போடுவார்கள்.

அவற்றை வாங்கி படிப்பாள் வானதி! மதுராவும் சிறுவர்மலர் புத்தகம் வாங்கி படிப்பாள்.

அதை எடுக்க வரும் சாக்கில் அடிக்கடி அவனைக் காண அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போவாள் அவள்.

ஆனால் இன்னிக்கு எங்க காணோம்!

ஒருவேளை இன்னிக்கு ஊருக்கு போகப்போறானா?

அதுக்கு தான் மதி அத்தை ஊருக்கு வந்திருக்கோ!

ஆனா இன்னும் லீவு முடியலையே! அவளுக்குள் பதட்டம்!

அதோடே மாடிக்கு சென்றவள், அவளுக்கு எட்டிய ஒரு கிளையை இழுத்து மாவிலைகளை பறிக்க தொடங்கினாள்.

“நோ.. டாட். ஐ வோன்ட் கம்!” என்று அவன் அப்பாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்த ரேவந்தின் குரல் கேட்டு திடுக்கிட்டு, கையில் வலுவாக இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த கிளையை விட்டு விட்டாள் மதுரா!

 அது அவளையும் சேர்த்து இழுத்தது!

நிலை தடுமாறினாள் அவள். அவள் முன்கைகள் சுவரில் தேய்த்து லேசாக சிராய்ப்பு ஏற்பட்டது!

போனில் பேசிக் கொண்டே வந்து, அவளைப் பிடித்துக் கொண்டான் ஊட்டி!

அவள் நிதானம் ஆனவுடன் விட்டவன்,  அவளின் ஒரு கையை பிடித்து வைத்துக் கொண்டே தொடர்ந்து போனில் பேசினான்.

அவனின் அப்பா “உன் தங்கச்சி இங்கே சம்மர் கிளாஸ் போயிட்டு இருக்கா.

நீ என்னன்னா இப்படி ஊரை சுத்திகிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க” என்று அவனை சென்னைக்கு திரும்பி வர சொல்லிக் கொண்டிருக்க,

அவனோ மறுத்துக் கொண்டிருந்தான்.

தந்தை மகன் ஆங்கில உரையாடல்களை கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா.

அவன் அப்பாவிடம் பேசி முடித்தவன்,

“நான் பறிச்சு தர்றேன். நீ இரு” என்று சொல்லி இலைகளைப் பறித்தவன், அவள் கைகளைப் பார்த்து விட்டு,

“அச்சோ.. இப்படி ஆகிடுச்சே பார்த்து செய்ய மாட்டியா” என்று அவளை கீழே அழைத்து சென்றான்.

அவன் அம்மாவிடம் சொல்லி அவள் கைகளுக்கு ஆயின்மென்ட் போட்டு விட்டே அனுப்பினான்.

அன்று அவளின் சிறிய தங்கைக்கு தமிழ் இலக்கியா என்று பெயர் வைத்தார்கள்!

விழாவை,  வீட்டோடு சிக்கனமாக செய்தார்கள்! பக்கத்து வீட்டுக்கு மட்டுமே அழைப்பு!

ஸ்ரீமதியும் சுந்தரி பாட்டியும் ரேவந்த்தை அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

அய்யர், “தாய் மாமனை வர சொல்லுங்க” என்ற போது,

அப்படி யாரும் இல்லை என்று வீட்டினர் சொல்லி விட, ஸ்ரீமதி ரேவந்த்தை போக சொன்னார்.

ரேவந்த் தான் தாய் மாமன் இடத்தில் நின்று அய்யர் சொன்னவற்றை செய்தான்!

குழந்தையை கொஞ்ச நேரம் அவனும் மடியில் வைத்துக் கொஞ்சினான்.

“டேய்.. பார்த்துடா பார்த்து” என்று பதறினார் ஸ்ரீமதி!

“ஹேய்.. லக்கி குட்டியா நீங்க.. அழகா இருக்கீங்க.

ரொம்ப லக்கியா நீங்க” என்று சொல்லி தன் மடியில் இருந்த குழந்தையைக் கொஞ்சினான் ரேவந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!