ஜீவ தாளம் : 17
அத்தியாயம் : 17
ஆனந்தின் பேச்சால் கணன்ற கோபத்துடன் தனது அறைக்குள் நுழைந்த ஆனந்தி, மின்னல் வேகத்தில் கைப்பேசியை எடுத்து நண்பன் கபிலனை அழைத்தாள். ஆரம்பத்திலிருந்தே எல்லாம் தெரிந்திருந்தும், தன்னை இங்கே கொண்டு வந்து இப்படி அவனிடம் மாட்டிவிட்டுவிட்டார்களே என்று நினைக்கையில் அவள் நெஞ்சிற்குள் சினம் எரிமலையாய்க் கொந்தளித்தது!
‘நான்கு வார்த்தை சூடாகக் கேட்டுவிட வேண்டும்!’ என்ற ஆத்திரத்தில் அவள் விடாமல் அழைப்பு விடுக்க… அதே சமயம், தன்னிடம் உண்மையை மறைத்து ஏமாற்றிவிட்டதாகக் கபிலன் மீது கடுப்பில் இருந்த ஆனந்தும் அவனுக்கு அழைப்பு விடுத்தான்!
ஒரே வீட்டின் இரு வேறு முனைகளிலிருந்து அவனுக்கு மாறி மாறி அழைப்பு விட… கைப்பேசியில் வந்த விடாத அழைப்புகளைக் கண்டதுமே கபிலனுக்குப் பொறி தட்டியது!
Advertisement
“ஐயோ!! இரண்டு எதிர்த்துருவங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனவா! இனி இவர்களுக்கு இடையில் சிக்கினால் தன்னை ஒரு வழியாக்கி விடுவார்களே!” என்ற அச்சத்தில், கைப்பேசியைச் சத்தமில்லாமல் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான்.
மீண்டும் மீண்டும் முயற்சித்தும் அவனைப் பிடிக்க முடியாத சலிப்பில், ‘இப்ப வேணா தப்பியோடலாம்…. ஆனா எந்த நேரமும் தப்பிக்க முடியாது! அப்ப உன்னைக் கவனிச்சுக்கிறேன்!’ என்று பல்லைக் கடித்தபடி முணுமுணுத்தவாறே வெளியே வந்த ஆனந்தி, அங்கே சிலையென நின்றிருந்த ஆனந்த் மீது பலமாக மோதிக்கொண்டாள்!
அவனது தீர்க்கமான பார்வை அவள் மீதே நிலைத்திருக்க, கீழே விழுந்துவிடாதபடி அவளது இடையைச் சுற்றி வளைத்திருந்தன அவன் கரங்கள்.
Advertisement
‘இவனுக்கு வேறு வேலையே இல்லையா? நிழலாய் ஏன் என்னைத் தொடர்கிறான்?’ முகம் கடுத்தாள் ஆனந்தி. முதலில் பார்த்தபோது வர்ணனைகளால் தன்னை மிரள வைத்தவன், பின் ஜவுளிக்கடையில் மோதியபோது விழிகளால் யுத்தம் நடத்தி, பார்ட்டி நேரம் கோபப்பட வைத்து, இப்போது அத்தை மகனாக, அதுவும் தன் தங்கையை மணக்கப் போகிறவனாக வந்து நிற்கிறான்!
Advertisement
வீட்டின் சூழல் கருதி, அலட்சியத்தால் அவனைத் தள்ளி நிறுத்த அவள் முயல… அவனோ அத்துமீறுவதையே குறியாகக் கொண்டிருக்கிறான். அவனது பிடியிலிருந்து விடுபட அவள் திமிற, அந்த அழுத்தத்தில் இன்னும் நெருக்கமாக அவன் மார்போடு வந்து மோதினாள். அவளது சிற்றிடையைச் சிறைபிடித்திருந்த அவனது விரல்கள், ‘விலக மாட்டோம்’ என அடம் பிடித்தன.
‘ம்ப்ச்… இவன்கிட்ட பேசினால் விவகாரம்னு தானே விலகிப் போறேன்! பின்பும் ஏன் இப்படிச் செய்கிறான்?’ என அவள் மௌனமாய் முறையிட, ‘நீ பேசும் வரை நானும் உன்னை விடப்போவதில்லை!’ என்பது போல அவன் மௌனச் சவால் விடுத்தான். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம் ஒருபுறம், அவன் விரல்களின் ஸ்பரிசத்தில் மலர வேண்டிய நாணத்தைத் தின்று தீர்க்கும் கோபம் மறுபுறம் என அவள் தவித்தாள்!
அவன் கைகளை விலக்கப் போராடியபடியே அவனைத் தள்ளிவிட முயல, “உன் நண்பனோட பேசி முடித்தாயிற்றா? அந்த எருமை மாடு என்ன சொன்னது?” என அவன் குரல் கணீரென்று ஒலித்தது.
Advertisement
”மரியாதையா கையை எடுங்க!” அடிக்குரலில் சீறினாள் ஆனந்தி.
”ஏன் எடுக்க வேண்டுமாம்? நான் ஒண்ணும் உன்னைப் புதுசா தொடலயே!” ஆனந்தின் குரலில் ஏளனமும் அதிகாரமும் கலந்திருந்தது.
அவள் திகைத்து விழித்திருக்க, அவன் தொடர்ந்தான். “உன்னை முதன்முதலா பார்த்தது ஞாபகம் இருக்கா? மஞ்சள் நிறப் புடவையில், தேவதை வம்சமா, அழகான ஓவியப் பெண்ணா… மலர்ந்த மலரோட வாசனையோட நின்னுட்டு இருந்தே! அந்தச் சின்னப் பிள்ளைங்க பூப் பறிக்க நீ உதவி செஞ்சப்போ, உன் மேல ஏற்பட்ட பொறாமையில் அந்த மரக்கிளைகள் உன்னை நிலைதடுமாற வச்சது! அப்போ நீ கீழே விழப்போனப்போ, இதே கைகளும் மார்பும்தானே உன்னைத் தாங்கிப் பிடிச்சது?”
பழைய நினைவுகளை அவன் அணு அணுவாக விவரிப்பதைக் கேட்டு அவளுக்கு மூச்சடைத்தது!
“அன்னைக்கு உன்னைத் தொட்டேன். அப்புறம், அந்த ஜவுளிக்கடையில அத்தனை பேருக்கும் முன்னாடி உன் கையைப் பிடிச்சு இழுத்துட்டு வந்தேன்… இப்போ என் வீட்டுக்குள்ளே உன்னைத் தொட எனக்கு யாருடைய அனுமதியாவது வேணுமா?”
அவளுக்குப் பேச வார்த்தைகள் மறந்து போயின.
“நீ அன்னைக்கு சவால் விட்டுப் போன நேரத்திலிருந்து இப்ப வரை நான் உன்னை மறக்கலை! செஞ்சதுக்குப் பிரதிபலனா உன்னைத் தேடினேன். நீயோ என் வீட்டிலேயே வந்து சிக்கிக்கிட்ட! இனி எனக்கு என்ன தயக்கம்?”
அவன் பேச்சு முரட்டுத்தனமாக இருந்தாலும், அவளைத் தழுவி அணைத்திருந்த விதத்தில் ஒரு ஆழமான நெருக்கம் இருந்தது. அவளது கண்கள் செருக, அவன் இன்னும் நெருங்கி வந்தான். அவளது காதோரம் அவன் மூச்சுக்காற்று சுடச் சுடப் பட்டது.
“நான் சொன்னா சொன்னதுதான்! கபிலனால் உன் விரல் நுனியைக் கூடத் தீண்ட முடியாது. முடிஞ்சா நீ போட்ட சவாலில் ஜெயித்துப் பார்!”
சட்டெனக் கண்கள் விரிய, உண்மையை உள்வாங்கினாள். அப்படியானால், பழிவாங்கவா இந்த நாடகம்? ஆத்திரத்தில் அவனைப் பிடித்துத் தள்ள முயல, மீண்டும் அவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள்.
“உன்னால் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது ஆனந்தி… முடிஞ்சா செய்து பாரேன்!” அவளது காதோரம் அவன் உதிர்த்த சவால், அந்த அறையின் அமைதியைக் கிழித்தது.
அவளது முகத்தில் படர்ந்திருந்த சினம், இப்போது கணன்று எரியும் நெருப்பாய் மாறியது! ‘சொந்த அத்தை மகனிடம் சாதாரணமாகப் பேச முடியாவிட்டாலும், இங்கிருக்கும் வரை வீண் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக போய் விடலாம்’ என்றுதான் அவள் பொறுமை காத்தாள். ஆனால், அவனோ அவளைப் பழிவாங்குவதையே குறியாகக் கொண்டு ஆடுகிறான்! இதற்கு மேலும் அவனுக்கு அடங்கிப்போவதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவள், அவனது இரும்புப்பிடியிலிருந்த தன் கைவிரல்களை ஆவேசமாகப் பற்றித் திமிறிக்கொண்டு விலகி நின்றாள்.
“மிஸ்டர் ஆனந்த்! இது உங்க வீடா இருக்கலாம்… ஆனா, நான் உங்களுக்கு அடிமையில்லை! என்னை இந்த வீட்டுல கொண்டு வந்துவிட்டது என் மாமா; எனக்கு அடைக்கலம் தந்திருப்பது உங்க குடும்பம். அவர்களை மீறி உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?” உதட்டில் ஏளனம் மின்னக் கேட்டாள் ஆனந்தி.
அவன் முகத்தில் மாறாத புன்னகையுடன், “ஏன் முடியாது? என்னை யார், என்ன செஞ்சுட முடியும்?” என அலட்சியமாக வினவ… “ஓஹோ! அவ்வளவு தைரியமா உங்களுக்கு?” என்று தன் இதழ்களை அலட்சியமாக வளைத்தாள் அவள்.
அந்த இதழ் வளைவில் ஒரு கணம் நிலைதடுமாறிய ஆனந்த், தன் கண்களை அவளிடமிருந்து அகற்ற முடியாமல் நின்றான்!
“இனிமேல் என்கிட்ட இப்படி வம்பு பண்ற வேலையை வச்சுக்காதீங்க! மீறினா, உங்க அம்மாவிடமே எல்லாத்தையும் சொல்லிடுவேன்!” காட்டமாக எச்சரித்துவிட்டு அங்கிருந்து விருட்டென்று நகர்ந்தாள்.
அவன் பின்னால் பலமாகச் சிரித்தபடி, “எங்க அம்மாவிடமா? தாராளமாப் போய்ச் சொல்லிப் பாரேன்!” என்று சவால் விட்டான்.
அவனிடமிருந்து ஒருவழியாகத் தப்பித்து வந்து, வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட முயன்றாள் ஆனந்தி. அதற்குள், “அக்கா!” என்ற பாசமான அழைப்புடன் அவளை நோக்கி ஓடி வந்தான் நகுலன்.
அவனைப் பார்த்த மாத்திரத்தில், அவளது உடன் பிறந்த தம்பி ஆதர்ஷின் நினைவு நெஞ்சைச் சுட்டது.
நகுலனுக்கும் ஆதர்ஷுக்கும் இடையே அத்தனை ஒற்றுமைகள்! உருவத்தில் மட்டுமல்ல, குணத்திலும் கூட. சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளுக்குள் இருக்கும் ரத்த பந்தத்தின் ஒற்றுமை என்றுதான் அவள் முதலில் நினைத்தாள். ஆனால், அவன் காட்டும் பாசத்திலும் கூட தன் தம்பியைப் போலவே இருப்பதை உணர்ந்தபோது, ஆனந்தியின் மனம் மெல்ல உருகித்தான் போனது.
“அக்கா! இந்த வேட்டி இடுப்புல நிக்கவே மாட்டேங்குதுக்கா!” என்று சலிப்புடன் தன் இடுப்பை இறுகப் பற்றிக்கொண்டு நகுலன் நிற்க, ஆனந்தி மெல்லச் சிரித்தாள்.
“உனக்குக் கட்டத் தெரியலன்னா அப்புறம் எதுக்கு இவ்வளவு அடம் பிடிக்கிற? பேசாம பேண்ட், ஷர்ட் போட்டுட்டு வர வேண்டியதுதானே!”
“அச்சச்சோ அக்கா! அம்மா சொல்லியும் கேட்காம நான்தான் வேட்டி கட்டணும்னு அடம் பிடிச்சேன்!” அவன் சிணுங்க, அவள் மெல்லிய புன்னகையுடன் அவன் அருகில் அமர்ந்தாள்…
கலைந்திருந்த வேட்டியைச் சீராக மடித்துக் கட்டி, சட்டையின் பொத்தான்களை நேர்த்தியாகப் போட்டுவிட்டவள், அங்கிருந்த சீப்பை எடுத்து அவனது கேசத்தை அழகாக வாரிவிட்டாள். முகத்திலிருந்த எண்ணெய் பிசுபிசுப்பை வெண்ணிறத் துண்டால் துடைத்துச் சுத்தம் செய்து, லேசாகப் பவுடர் பூசி, சந்தனப் பொட்டையும் நெற்றியில் வைத்தாள்.
இப்போது நகுலனின் முகம் நிலவெனப் பொலிந்தது! புன்னகையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “சோ ஸ்வீட் அக்கா! எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க எப்பவும் என்கூடவே இருந்துடுறீங்களா?” என்று ஆசையோடு கேட்டான்.
“உன்கூடவே இருந்தா என் வீட்டுக்குப் போக வேண்டாமா? அங்கே என்னைத் தேடுவாங்க இல்லையா!”
“தேடுறவங்களை இங்கே வந்து பார்க்கச் சொல்லிடலாம்… உங்களைப் பார்க்காம என்னால இருக்க முடியாது அக்கா!” அவன் சொன்ன அந்தச் சொல்லில் அவளது நாசி விடைக்க, கண்களில் நீர் அரும்பியது.
அவன் தயாராகி நிற்பதைக் கண்ட கண்ணனும் ஓடி வந்து தன் கையில் இருந்த உடைகளை நீட்டினான். புன்னகையுடன் அவனையும் தயார் செய்துவிட, சிவா ஏற்கனவே தயாராகியிருந்தான். அவர்களின் அருகில் வந்த அபிநயா, “நீங்க எப்பவும் இந்தப் பசங்களையே பார்த்துட்டு இருக்கீங்க… என்னையும் கொஞ்சம் சரி செய்து விடுங்க!” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
“ஒரு புடவை கூட ஒழுங்கா கட்டத் தெரியலை… இதுல இவ பேசுவதைப் பார்!” என்று நகுலன் சீண்ட, “அடிங்க…” என்று துரத்தினாள் அபிநயா. அவர்கள் மூவரும் அவளைப் பார்த்துக் கேலி செய்தபடி அங்கிருந்து நகர… இவை அனைத்தையும் தூரத்திலிருந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த். அவனது பார்வையில் ஏதோ ஒரு மாற்றம்!
சற்று நேரத்தில் அபிநயாவுடன் அவள் உணவருந்தும் அறைக்கு வர, அபியின் தோற்றமே மாறியிருந்தது! அதைக் கண்டு அவள் அம்மா அம்பிகா வியப்பில் ஆழ்ந்திருக்க… ஆனந்தி மெல்ல அவள் அருகில் சென்று, நீளமாக வைக்கப்பட்டிருந்த புடவை முந்தானையைச் சீர் செய்து, கலைந்திருந்த மடிப்புகளையும் நேர்த்தியாகச் சரி செய்தாள்.
தூக்கிக் கட்டப்பட்டிருந்த கூந்தலைப் பிரித்துவிட்டு, தளரத் தளரப் பின்னலிட்டு, அதில் நறுமணம் வீசும் மல்லிகைச் சரத்தைச் சூட்டி அழகுபடுத்தினாள். நெற்றியில் இருந்த பெரிய அளவிலான பொட்டையும் மாற்றிவிட்டு, முகத்திற்கு எடுப்பாக ஒரு பொட்டை வைத்துத் திலகமிட்டு, கண்ணாடியில் முகம் பார்க்கச் செய்தாள்.
தன்னுடைய புதிய தோற்றத்தைக் கண்டு, “ஓ…” என்று அம்பிகா ஆச்சரியத்தில் சத்தமிட… “அத்தான் பார்த்தா உடனே அபிநயாவுக்கு அடுத்த தம்பியோ, தங்கையோ ஏற்பாடு செஞ்சுடுவார்!” என்று ஜானகி கிண்டலாகப் பரிகசித்தாள். அம்பிகா வெட்கத்தில் சிவந்து போவதைக் கண்டு, அங்கிருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்!
அடுத்து ஜானகி, இளவரசி இருவருக்கும் அதேபோல அலங்காரங்களைச் செய்துவிட, பேரன்பின் மிகுதியில் அந்தப் பெண்கள் மூவரும் ஆனந்தியை அப்படியே அணைத்துக்கொண்டனர்! அந்தத் தாய்மையின் கதகதப்பில் அவளது கண்களில் ததும்பிய கண்ணீர், அவர்களின் புடவை முந்தானையில் முத்தாய் உதிர்ந்தது. நெகிழ்வான அந்தக் காட்சியைக் கண்ட அபிநயா, தன் முகத்தில் மாறாத புன்னகையோடு நின்றாள்.
அவர்களுடன் உணவு அறைக்குச் சென்றதும், சிறுவர்கள் மூவரும் தங்களுக்குத் தேவையானவற்றை அவளிடமே உரிமையுடன் கேட்க, ஆனந்தியும் அவர்களுக்குப் பரிமாறத் தொடங்கினாள்.
“உன்னை எங்க எல்லோருக்குமே பிடிச்சிருக்கு ஆனந்தி! நீ எங்கும் போகாம எங்களோடு இங்கேயே இருந்துடு” என்று வாஞ்சையோடு சொன்னாள் அம்பிகா.
“ஆமாம்மா… உன்னைப் பார்த்த பிறகுதான் இந்தப் பசங்க முகத்திலும் இவ்வளவு சந்தோஷம் தெரியுது. ‘அக்கா… அக்கா…’ன்னு உயிரையே விடுறாங்க. ‘அக்காவை விடாம நம்மோடு வச்சுக்கலாம்; அக்கா ரொம்ப அழகா, அன்பாகப் பழகுறாங்க’ன்னு எப்பவும் உன்னைப் பற்றியேதான் பேசுறாங்க” என்றார் ஜானகி நெகிழ்ச்சியுடன்.
இளவரசியும் தன் பங்கிற்கு, “ஆனந்தியிடம் இருக்கும் அடக்கமும் அன்பும் அவளுக்குப் பல உயர்வுகளைப் பெற்றுத் தரும்! பார்த்த முதல் நிமிஷமே எனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிருந்தது. ஏனோ அவளை வேறொரு பெண்ணா நினைக்கவே தோணலை; நம்மில் ஒருத்தியா, நம்ம வீட்டுப் பெண்ணாத்தான் பார்க்கிறேன்!” என்றாள்.
அத்தையும் சித்திகளும் பொழிந்த பாசத்தில் ஆனந்தியின் கண்கள் பனித்தன. தம்பிகள் வேறு போட்டி போட்டுக்கொண்டு அவளைப் புகழ்ந்து தள்ள, நெகிழ்ச்சியில் அவளுக்குத் தொண்டை அடைத்தது. வார்த்தைகள் வராமல் மௌனமாக நின்றாள். இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அபிநயாவிற்கு, ஆனந்தி தன் பெரியப்பாவின் மகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும், குடும்பத்தில் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை அறிந்தவள் என்பதால், தன் சந்தேகத்தை அவள் யாரிடமும் வெளிப்படுத்தாமல் அமைதி காத்தாள்.
“எனக்கும் சாப்பாடு கிடைக்குமா?”
குரல் கேட்டுத் திரும்பியவர்கள், அங்கே நின்ற ஆனந்தைக் கண்டு மொத்தமாகச் சிரித்துவிட்டனர். அவன் குழப்பத்துடன் “என்ன விஷயம்?” என்பது போலப் பார்க்க, ஆனந்தி இங்கே வந்த முதல் நாளில் நடந்த அமளிதுமளிகளை நினைவு கூர்ந்து அனைவரும் உரக்கச் சிரித்தனர். அவனது தீர்க்கமான பார்வை அவள் முகத்தில் படிய, அந்தப் பார்வையின் வீச்சில் நிலைகுலைந்தவள், கூச்சத்தில் அங்கிருந்து நகர முற்பட்டாள்.
ஆனால் தம்பிகளோ விடவில்லை! “அக்கா நீங்களே பரிமாறுங்க. வயிறு பசிக்குது” என்று அன்புக் கட்டளையிட, அவர்களின் ஆசையை நிராகரிக்க முடியாமல் காலை உணவைத் தொடர்ந்து பரிமாறத் தொடங்கினாள். ஆண்கள் மூவரும் கீழே வருவதைக் கண்ட அவர்களின் மனைவிகள் மூவரும் அங்கு நோக்கிச் செல்ல, இப்போது மற்றவர்களைக் கவனிக்கும் பொறுப்பு ஆனந்தியிடமே வந்து சேர்ந்தது.
ஒவ்வொருவரின் தேவையையும் விருப்பத்தையும் உணர்ந்து அவள் இதமாகப் பரிமாற, ஆனந்த்தோ தன் முன்னே இருந்த தட்டையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“அக்கா! நம்ம அத்தானுக்கும் வைங்க அக்கா… அத்தான் வேலை பார்க்கிறேங்கிற பேர்ல சரியா சாப்பிடறதே கிடையாது! இங்கே இருங்கன்னு சொன்னாலும் கேக்கறதில்லை. லீவுக்கு வரும்போதாவது அவர் வயிறாரச் சாப்பிடட்டும்!”
நகுலனின் பேச்சு எப்போதுமே ரசனையாக இருக்கும். அபிநயாவின் தம்பியை விட இவனிடம் பக்குவம் அதிகம் என்று ஏற்கனவே ஆனந்தி பலமுறை நினைத்ததுண்டு. அவனைப் பாசத்துடன் பார்த்தவள், வேறு வழியின்றி ஆனந்தின் அருகில் சென்று அவன் தட்டில் பதார்த்தங்களை வைக்கத் தொடங்கினாள். அவனது கண்கள் தன்னைக் கூர்மையாக அளவெடுப்பதைக் கண்டும், மேனி நடுங்க… அங்கிருந்து விலகிச் செல்ல முடியாமல் ஒருவிதத் தவிப்புடன் நின்றாள் ஆனந்தி!
தன்னருகில் நின்று பரிமாறும்போது பதற்றத்தில் நடுங்கும் அவளது தோற்றத்தைக் கண்டவனுக்குள், மெல்லிய சலசலப்பு உருவானது. ஏற்கனவே அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்த நிலையில், இங்கே அவளது நற்குணங்களைக் கண்ட பிறகு அது இன்னும் அதிகமானது. வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வது, தம்பிகளிடம் காட்டும் அதீத பாசம், அம்மா மற்றும் அத்தைகளுடன் அவள் காட்டும் இணக்கம்… இவை அனைத்தும் ஆனந்திற்குள் ஒருவிதத் திருப்தியை ஏற்படுத்தின.
‘என்கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு கோபக்காரியா நடக்கிறாள்?’ என்று யோசித்தவனுக்கு, அறிமுகமில்லாத ஓர் ஆடவனின் நெருக்கத்திற்கும் பேச்சுக்கும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அச்சப்படுவது நியாயம்தானே! அவளும் அப்படித்தான் எதிர்வினை ஆற்றியிருக்கிறாள் என்று அவன் மனம் இப்போது அவளுக்குச் சாதகமாகச் சமாதானம் சொல்லத் தொடங்கியது. ஒருவேளை அவளைப் பிடிக்கத் தொடங்கிவிட்டதால், அவன் மனமே அவளை நியாயப்படுத்துகிறதோ என்னவோ!
அவள் தட்டில் வைத்த உணவுப் பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும், ஒரு துளி கூட மிச்சம் வைக்காமல் ரசித்து உண்டான் ஆனந்த். அபிநயாவும் மற்றவர்களும் தங்களுக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கி உண்ண, ஆனந்தோ அவளிடமிருந்து தனக்கு வேண்டியவற்றை உரிமையோடு கேட்டுப் பெற்றுக்கொண்டான்.
அனைவரும் உண்டு முடித்ததும், பாட்டி ஆனந்தவல்லிக்கு உணவு எடுத்துச் செல்லப் பணியாளர் ஒருவர் வந்தார். பாட்டிக்கு என்ன பிடிக்கும், எப்படிப் பரிமாற வேண்டும் என்று தெரியாததால் ஆனந்தி சற்று விலகி நின்றுகொள்ள, பாட்டிக்கான உணவு அவர் அறைக்குச் சென்றது.
அவள் அதைப் பார்த்தவாறு நிற்க, “பாட்டிக்கு மூட்டுவலி இருக்கிறதுனால, ரொம்ப அவசரத் தேவை இருந்தா ஒழிய வெளியே அவ்வளவா நடந்து வர மாட்டாங்க!” என்று விளக்கினாள் அபிநயா.
ஆனந்தி தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர முயல, உண்டு முடித்திருந்த வீட்டு ஆண்கள் மூவரும் எழுந்து சென்றதும், இளவரசி “ஆனந்தி!” என்று அவளைப் பார்த்து அழைத்தாள்.
அப்போது கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஆனந்த், தன்னைத்தான் அழைப்பதாக தவறாக நினைத்து, “என்னம்மா… கூப்பிட்டீர்களா?” என்று கேட்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் ஏககாலத்தில் சிரிக்கத் தொடங்கினர்!
“ஏன் எல்லாரும் சிரிக்கிறீங்க? அம்மா தானே கூப்பிட்டாங்க?” என்று அவன் புரியாமல் கேட்க… “நான் ஆனந்தியைத்தான் சாப்பிடக் கூப்பிட்டேன்! நீ உன்னைக் கூப்பிட்டதா நினைச்சுக்கிட்டு வந்துட்டே!” என்றாள் இளவரசி கிண்டலாக.
விஷயம் புரிந்ததும் ஆனந்தின் உதடுகளில் மெல்லிய புன்னகை மலர்ந்தது! அவர்கள் மூவரும் சிரிப்பதைக் கண்டு ஆனந்திக்கு ஒருவித சங்கடமாக இருந்தது. அவனோ, அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவளுக்கு எதிரிலேயே அமர்ந்துவிட… அவன் முன்னிலையில் இயல்பாக அமர்ந்து உண்ண முடியாமல் தவித்தாள் ஆனந்தி!
