Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 11

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 11

நல்ல நாளில் கலாவிற்கும்,வீட்டில் பெரியவர்கள் பார்த்த மாப்பிள்ளையான செல்வராஜிற்கும் திருமணமானது.

இதுவும் பெண் கொடுத்து பெண் எடுத்த திருமணம்தான்.என்ன சற்று தொலைவில் அமைந்து விட்டது. என்னதான் சித்தப்பா கருப்பாக இருப்பதால் கங்காவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் லீவு விட்டால் சித்தி ஊருக்கு போறேன் என கிளம்பி விடுவாள்.

செல்வராஜும் அன்பை பொழிவதில் லேசுபட்ட ஆளில்லை.கலா வீட்டில் இருந்து யார் வந்தாலும் அன்பொழுக உபசரிப்பார்.சிவரானை போன்றே தனக்கும் தனி கொள்கைகளை வைத்துள்ள கண்ணியமான மனிதர்.



Advertisement

கங்கா ஊருக்கு வந்தால் சினிமாவிற்கு கூட்டிச் செல்வது, பொம்மை வாங்கி தருவது என அவளை தாங்கியே பார்த்துக் கொண்டார்.கங்காவும் அந்த கருப்பு மனிதரிடம் இருந்த வெள்ளை மனதை புரிந்து கொண்டாள்.

லீவு முடிந்து வீட்டிற்கு கிளம்பும் போது,சித்தி வீட்டில் இருந்த லேண்ட் லைன் எண்ணை மனப்பாடம் செய்து கொண்டு வந்துவிட்டாள்.இவர்கள் விடுமுறையில் செல்வது போக, கலாவும் வாரத்திற்கு இரண்டு முறையாவது ஏதாவது விஷேசத்தை காரணம் காட்டி அம்மா வீடு வந்து செல்வார்.

அவரவர்கள் வாழ்வு நல்ல முறையில் செழுமையாக போய்கொண்டிருந்தது சிவராமனும் தொழிலில் நல்ல வளர்ச்சி கண்டுவிட்டார். லட்சுமியின் மூனு பவுன் நகை போனதற்கு எவ்வளவோ வருந்தினார்.

Advertisement

அதற்கு ஈடு செய்யும் விதமாக இந்தமுறை ஆறு பவுன் நகை எடுத்து போட்டுவிட்டார். மாலை ஆறுமணிக்கு லட்சுமி தன் வீட்டுஜாதி மல்லியை அழகான மாலையாக தொடுத்து, ஆறுபவுன் நகையை எடுத்துக் கொண்டு தன் புகுந்த வீட்டு எல்லை காவல் தெய்வமான மாரியம்மன் கலுத்தில் அதை அணிவித்து பிறகு தன் கழுத்தில் வாங்கி மாட்டிக் கொண்டார்.

Advertisement

அந்த ஜாதிமல்லியின் மனத்தில், சிவராமன் தனக்காக எடுத்தி ஆறுபவுன் நகையில் அம்மன் ஜொலித்தை இன்றளவு நினைத்தாலும் லட்சுமிக்கு உடம்பு சிலிர்க்கும்.

அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கி சிலிர்த்திருந்தவரை, அம்மா!”பாப்பா இன்னும் தூங்காமதான் இருக்கா” என்ற கங்காவின் குரல் நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது. அதுவரை பேசிக் கொண்டிருந்த ரவியும் சிவராமனும் கங்கா, கெளசி பக்கம் கவனத்தை திருப்பினர்.

என்ன ஒய்யாரி, சிங்காரி ரெண்டு பேரும் இன்னமும் தூங்காம இருக்கீங்க என்றார் ரவி.எங்க வீட்டுக்கு போய் தூங்கிருவோம் மாமா என்றனர் இருவரும் ஒருசேர..

Advertisement

அதற்குள் ரவியின் மனைவி விஜயா, “நேரங்காலமா தூங்கி வீட்டு வேலை செஞ்சு பழகுனாதா என் பசங்களுக்கு உங்கள கட்டிக்குவேன்டி இல்லைனா நா அமெரிக்காவுல பொண்ணு எடுத்துக்குவே என சொல்ல இருவரும் களுக் எனச் சிரித்துக் கொண்டனர்.

நம்ம வீட்டுல ரெண்டு புள்ளைங்க இருக்கைலே எதுக்கு அமெரிக்காவுல பொண்ணு,இங்க பாரு சிவராமா எனக்கு ரெண்டும் பையன் உனக்கு ரெண்டும் புள்ளை சொந்தம் விட்டுப் போக கூடாது.இரண்டும் பெருசானா என் வீட்டுக்குதான் கொடுக்கனும் என இப்போதே சம்பந்தம் பேசினார் ரவி.

முதல்லே ரெண்டும் படிச்சு பெரிசாகட்டும்ப்பா அப்பறம் பாக்கலாம் என சிவராமன் முடித்தார்.இவர்கள் சம்மந்த பேச்சை கேட்ட விதி பெருங் குரலெடுத்துச் சிரித்துக் கொண்டது.

இன்னமும் தீபாவளிக்கு ஒருவாரமே இருந்த நிலையில் கங்கா இன்று தனது சித்திக்கு கிரீடிங் கார்டு வாங்கி வாழ்த்து எழுதி போஸ்ட் பாக்ஸில் போட்டாள்.

சித்தி வீட்டில் இருந்து மனப்பாடம் செய்து வந்த லேண்ட் லைன் எண்ணிற்கு எஸ்டிடி பூத்தில் இருந்து போன் பண்ணினாள். ஹாலோ சித்தி எப்ப ஊருக்கு வரே?
ஏய் இப்பதானே டி இங்கே வந்தே அடுத்த வாரம் தீபாவளிக்கு வரேன் என்றாள் கலா.

சரி உனக்கு கிரீடிங் கார்டு அனுப்பிருக்கே வந்த பத்திரமாக எடுத்து வை.ஊருக்கு வரும் போது சித்தப்பாவையும் கூட்டிட்டு வா. இரு எங்க அம்மா உங்கிட்ட பேசுதாமா தரேன் என போனை லட்சுமியிடம் தந்தாள்.

கலா நம்ம ரமேசுக்கும் நம்ம அம்மா தங்கச்சி புள்ள தனத்திற்கும் கல்யாணம் முடிவு செஞ்சு இருக்காங்க. தீபாவளி முடிஞ்சு வர வெள்ளிக் கிழமை நம்ம வீட்டுல அவங்க கைநனைக்கறாங்க,அப்போவே நாமளும் அங்கே போறோம் என்றார்.

ரொம்ப சந்தோசம் நா எங்க வீட்டுக்காரர் வந்ததும் சொல்றே.
சரி கலா தீபாவளிக்கு இரண்டுநாள் முன்னாடியே ஊருக்கு வந்துருங்கே என போனை வைத்து விட்டார் லட்சுமி.

தீபாவளிக்கு கங்கா கேட்ட பட்டுபாவடையும் நெத்திச்சூட்டியும், அக்காவை போலவே கெளசிக்கும்.. சிவராமனுக்கு வண்டியும் வாங்கிக் கொண்டனர். சொந்தங்கள் நிறைந்து இனிமையாக தீபாவளி முடிந்தது.

வீட்டிற்கு தேவையான அனைத்தும் சிவராமன் வாங்கி வந்துவிடுவார். ஏதாவது சிறு பொருட்கள் விட்டு போனால் மட்டுமே லட்சுமி எதிரில் இருக்கும் கடைக்கு சென்று வாங்குவார். அப்படி வாங்கி வர காசு கொடுக்கையில் மீதிப் பணத்தை எடுத்துக் கொண்டு பொய்கணக்கை கூறிவிடுவார் கணவரிடம்.

பொய்கணக்கை கூட தவறாக கூறி சிவராமனிடம் குட்டு வாங்குவது அவரது வழக்கம்.இன்று இரண்டு வெற்றிலை மூன்று பாக்கு சேர்ந்து இருபது ரூபாய் என கணக்கு சொல்ல வசமாக மாட்டிக் கொண்டார் சிவராமனிடம்.

எந்த ஊருலே ரெண்டு வெத்தலைக்கும் மூனு பாக்குக்கும் இருவது ரூபாய் கணக்கு போடராங்க என சத்தம் போட..

என்ன மாமா எங்க அக்காவை திட்டறே சவண்டு ரோடு வரைக்கும் கேக்குது என்றபடி உள்ளே வந்தான் ரமேஷ்.

அடடே நீயா.. நீ வேற திருப்பாச்சிலே அருவாளுக்கு ஆர்டர் கொடுத்தவனாச்சே.
உன் முன்னாடி நான் உங்க அக்காவை ஒன்னுஞ் சொல்லுல சாமி நீயே உங்க அக்கா கிட்ட கணக்கு கேட்டு சொல்லு என இருவரும் பஞ்சாயத்தை ரமேஷிடம் கூறினர்.

மாமா உங்களுக்கு தான் கணக்கு தெரிலே கூட்டி கழிச்சு பாருங்க எங்க அக்கா கணக்கு கரெக்ட்தான் என்றான்.

கங்கா,கெளசி இங்க வாங்க இப்ப உங்க மாமனும் அம்மாவும் கதை சொல்லுவாங்க கேளுங்க என இருவரையும் அழைத்தார்.

கங்கா அப்பாவின் பின்னாடி சென்று கழுத்தை கட்டிக் கொண்டாள்,கெளசி மடியில் அமர்ந்து கொண்டாள்.

இப்ப சொல்லு லட்சுமி உங்க அப்பன் உன்னைய எத்தனாவது வரைக்கும் படிக்க வெச்சான்?

எங்க வூட்டுல ஆறு உருப்படி,அது மட்டுமில்லாம என் தம்பிய பாத்துக்கனுனு பாதிலே என்ற படிப்பு முடிஞ்சுது, அப்படி இருந்தும் ரெண்டாவது வரைக்கும் படிச்சிருக்கே என்றார்.

சரி இப்ப நீ சொல்லுடா உங்க அப்பன் உன்னைய எத்தனாவது வரைக்கும் படிக்க வெச்சான்?

மாமா நான் அஞ்சாவது வரைக்கும் படிச்சிருக்கே..

கங்கா,கெளசி நல்லா கேட்டிங்களா?அக்கா படிப்ப தியாகம் பண்ணி ரெண்டாவது வரைக்கும் படிச்சு, தம்பிய அஞ்சாது வரைக்கும் படிக்க வெச்சுருக்கா..

உங்க பரம்பரை தியாகத்தை நம்ம ஊரு பெரிய கோயில் கல்வெட்டுல எழுதி வைங்க பின்னாடி வரவங்க படிச்சு தெரிஞ்சுகட்டும் என்றார் சிவராமன்.

மாமா எங்க அக்காவை சும்மா கொற சொல்லாதீங்க எங்க அக்கா படிகலனாலும் வீட்ட எப்படி நிர்வாகம் பண்ணது?

ஆமா ஆமா வெத்தல கணக்குலையே தெரிஞ்சுட்டே உங்க அக்கா நிர்வாகத்தை..

போ மாமா உங்க கல்யாணத்த அப்போ நீங்க எவ்வளோ ஒல்லியா இருந்தீங்க இப்ப பாருங்க எவ்வளோ கொழு கொழுனு ஆயிட்டீங்க எல்லா எங்க அக்கா வந்து உங்களுக்கு சமைச்சு போட்டுதா

எங்கையாச்சு அரச மரத்தடிலே போய் உட்காந்தராதீங்க அப்பறோம் புள்ளையாருனு உங்கள தூக்கிட்டு போய்ருவாங்க என்றான் ரமேஷ்.

இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தேனு வை அக்காலும் தம்பியும் என்னை வித்தாலும் வித்துபோடுவீங்க நான் கடை வரைக்கும் போய்ட்டு வரேன் என எழுந்து கொண்டார்.

போகும்போது,” உங்க அக்கா கறிசோறு ஆக்கி வெச்சுருக்கா நல்லா சாப்பிட்டுட்டு நேரங்காலமா வூடு போய் சேரு” என மச்சினனிடம் நக்கல் பேசி கிளம்பிவிட்டார் சிவராமன்.

அவர் கிளம்பியதும் லட்சுமி வாடா தம்பி சாப்பிடலாம் என தட்டை எடுக்க போக, ஜாதி மல்லி மரத்தின் அருகில் லட்சுமியை அழைத்து வந்தான் ரமேஷ்.

என்னடா விஷயம்?

லட்சுமி நான் என்கூட வேலை செய்றே “சத்யா”ங்கற புள்ளைய நாளைக்கு கல்யாணம் பண்ண போறேன் என்றான்.

என்னடா சொல்றே தனத்தை கட்டலானு வீட்டுல எல்லாரும் பேசிட்டு இருக்காங்க இப்ப நீ வந்து இப்படி சொல்லறே.

இல்ல நாங்க ரெண்டு வருஷம் பேசிட்டு இருக்கோம்,நம்ம வீட்டுல சொன்னா ஒத்துக்க மாட்டாங்க. அந்த புள்ள வீட்டுல சம்மதிச்சுட்டாங்க.

உனக்கு நம்ம வீட்டு ஆளுங்கள பத்திதா தெரியுமே.எப்படியும் கல்யாணத்திற்கு ஒத்துக்க மாட்டாங்க அதுனால நா அங்கே போய் கல்யாணம் பண்ணிக்க போறேன்.

லட்சுமிக்கு ஒரே அதிர்ச்சி.ஆனாலும் தம்பி ஆசைப்பட்டு விட்டானே என சம்மதித்தார்.சரி டெய்லர் கடை போன் நெம்பர் தரே எனக்கு அப்பப்போ கூப்பிடு இங்க என்ன நடக்குதுனு நானும் சொல்றே என சதித்திட்டம் தீட்டினர் இருவரும்.

பின் கங்கா கெளசியுடன் அமர்ந்து உணவு உண்டுவிட்டு கல்யாணம் செய்ய கிளம்பி விட்டான் ரமேஷ்

அடுத்த நாள் காலை லட்சுமி போன் என டெய்லர் கடையில் இருந்து அழைப்பு வர, சிவராமன் வீட்டில் இல்லாததை உறுதி படுத்திக் கொண்டு சென்றார் லட்சுமி.

நல்லபடியாக திருமணம் முடிந்து விட்டதாக ரமேஷ் கூற சந்தோசமாக மணமக்களை வாழ்த்தினார் லட்சுமி.

இரவு எட்டு மணி சிவராமன் வேலை முடிந்து வந்தவர் எதுவும் பேசாது விட்டத்தை யோசனையோடு பார்த்திருந்தார்.

அப்படி என்ன யோசனை?என லட்சுமி கேட்க,இப்பதா உங்க ரவி அண்ணனை பார்த்துட்டு வரேன்.

உன்றே தம்பியை காணமாமா.. மேட்டுபாளையத்துல இருந்து வெள்ளிக் கிழமை கைநனைக்க வராங்க இவன் எங்க போனான்?

கடைசியா நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனவன் போனவன்தான் போல. உன்கிட்ட எதாச்சும் சொல்லிட்டு போனானா?

எச்சிலை விழுங்கிய படியே,என்ன சொல்றே என்ற தம்பியே காணமா?பொய் சொல்லாதே. எது எதுலே விளையாடறதுனு உனக்கு வெவஸ்தை இல்லாம போச்சு

ஆமா உன்ற தம்பிய காணோம்னு நா உன்கிட்ட விளையாடிட்டு இருக்கே. இன்னும் ரெண்டு நாளுளே மேட்டுபாளைத்துக்காரங்க இங்க வரப் போறாங்க,இவன் வேற எங்க போனானனு தெரிலேனு நானே பொலம்பிட்டு இருக்கறே என்றார்.

என்றே தம்பி மேலே உனக்கு இவ்ளோ பாசமா?

உன்ற தம்பிமேலே எல்லாம் பாசமில்லே நாளைக்கு பொண்ணு வூட்டு காரங்க முன்னாடி உங்க அப்பனல்ல தலைகுனிஞ்சு நிக்கணும் என்றார்.

அதை நினைத்து லட்சுமியும் வருத்தப்பட்டார்.

கங்கா,கெளசி உங்க மாமே உங்ககிட்ட எதாச்சு சொல்லிட்டு போனானா?

இருமகள்களும் ஆட்காட்டி விரலை தாவரத்தில் வைத்து யோசித்தனர்.

பின் கெளசி அப்பா எனக்கு எதுமே தெரிலேப்பா என்றாள்.

நீ அன்னைக்கு எலும்புக்கறி கடிக்கறதுலே கவனமா இருந்துருப்பே, கங்கா நீ நல்லா யோசிச்சு சொல்லு என்றார்.

எனக்கு எதும் ஞாபகம் வரலேப்பா ஆனா அம்மாவும் மாமாவும் ரொம்ப நேரம் நம்ம ஜாதிப் பூச்செடி கீழே நின்னு பேசிட்டு இருந்தாங்கப்பா என்றாள்.

திருட்டுக்கொமுரி எப்படி போட்டுக் கொடுக்கறா பாரு, உங்க அப்பன் இல்லாத அப்போ உனக்கு இருக்கு என மனதில் கருவிக் கொண்டார்.

என்ன பேசுனீங்க ரெண்டு பேரும்?

கொழம்பு நல்லா இருக்கு ஒரு சம்படத்துல ஊத்தி குடு னு கேட்டா, நா மாமனுக்கு பத்தாதுடா இன்னொரு நாள் வெச்சி கொடுக்கறேனு சொன்னே அவ்வளவுதான் என்றார் லட்சுமி.

உன்ற தம்பி கொழம்பு கேட்டான், நீ மாமனுக்கு பத்தாதுனு சொன்னே இத நான் நம்பனும். எனக்கு நீ யாருன்னும் தெரியும் உன்ற தம்பி யாருன்னும் தெரியும்

ரெண்டு பேரும் சேர்ந்து என்ன சதித்திட்டம் போட்டீங்கனு என்ற ஜாதிப் பூச்செடிக்குதான் வெளிச்சம் என்றார்.

நாங்க என்ன சதித்திட்டம் போட்டோம்.நீ வேணுனா உன்ற ஜாதிப் பூச்செடிகிட்ட கேளு நீ வெச்ச செடி உனக்கு விசுவாசமாதானே இருக்கும்..

நானே என்ற தம்பி பத்தரமா திரும்பி வந்தா பண்ணாரிக்கு பூமுடி கொடுக்கறேனு வேண்டிட்டு இருக்கே என்றார் லட்சுமி.

உனக்கு இருக்கறதே நாலு முடி அதையும் உன்ற வீட்டுல நடக்கற ஒவ்வொரு பிரச்சனைக்கும் பூமுடி கொடுத்தே.அந்த பண்ணாரி அம்மனே இறங்கி வந்து வேண்டானு சொல்லிட்டு போயிரும் என்றார்.

என்னமோ லட்சுமி, பூசணிக்காயை எவ்வளவு நாள்தான் சோத்துல மறைக்க முடியும்.ஒருநாள் உண்மை வெளிவந்து தானே ஆகனும்.

அப்ப இருக்கு உனக்கும் உன்ற தம்பிக்கும் என்றார். இருவரும் சிறிய பூசணிக்காயை மறந்து இருந்தால் பரவா இல்லை.பெரிய பூசணிக்காயை அல்லவா மறைத்து இருக்கின்றனர்.
விடிந்ததும் பூசணிக்காய் வெளியே வந்துவிட்டது.
–தலைவன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!