Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-25

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு

மு.வ விளக்க உரை: எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

அதிகாலை நேரத்தின் அமைதி தொலைத்து மங்கல வாத்தியங்களின் ஓசைகளோடு களை கட்டியிருந்தது அந்த திருமண மண்டபம்.

மணமகன் அறையில் அதிரன் தயாராகி அமர்ந்திருக்க சாருகேஷும் அவினாஷும் அவனோடு புகைப்படமாய் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர்.



Advertisement

பத்தாததற்குத் தங்கை கணவர்கள் ஒரு புறம் அவனை கிடைத்தது சாக்கு என வைத்து செய்ய பொறுமையை இழந்து அமர்ந்திருந்தான் மணமகன்.

ஐயர் அழைத்ததில் விட்டால் போதுமென மணமேடைக்கு தயாராகியிருந்தான். பட்டு வேட்டிச் சட்டையில் கம்பீரமாய் வந்தமர்ந்தவன் ஐயர் கூறும் மந்திரங்களைக் கூறிய படியிருக்க அங்கு தேவாவிற்கோ பயம் கவலை பதட்டம் என உணர்வு குவியலாய் அமர்ந்திருந்தாள்.

யார் கூறும் சமாதானமும் அவளை தேற்றுவதாக இல்லை. அதே மனநிலையோடு தயாராகி முடித்தவள் வெளியே வந்த நேரம் அதிரன் தலையை மட்டும் அவள் புறம் திருப்பியிருந்தான்.

Advertisement

வெளிப்படையான சிரிப்பு இல்லை உண்மையில் சட்டென பார்த்தால் அவனுக்கு இதில் விருப்பமில்லையா என்று தான் தோன்றும் அப்படியான அந்த முகபாவனை ஒருத்திக்கு மட்டும் ஒட்டுமொத்த பலத்தையும் கொடுத்தது.

Advertisement

அவளின் மனம் அறிந்தவனாய் கண்களை மூடித் திறக்க அது மட்டுமே போதுமானதாய் இருந்தது தேவாவிற்கு. அவன் தேர்ந்தெடுத்த மயில் கழுத்து நிற பட்டுப் புடவையின் முந்தானையில் அவர்கள் இருவரின் முகமும் பதிக்கப் பட்டிருக்க காத்யாயினி மருமகளை தங்கத்தால் நிறைத்திருந்தார் என்று தான் கூற வேண்டும்.

தேவா எவ்வளவோ மறுத்தாலும் வந்தவர்களின் வாய்க்கு அவலாய் மாற வேண்டாம் என்று புரிய வைத்து அனைத்தையும் அணியச் செய்திருந்தார்.

அத்தனை மனக் கலவரங்களும் மறைந்து நிர்மலமான மனதோடு தன்னவனின் அருகில் அமர்ந்தவள் சடங்குகளில் கவனம் பதித்தாள்.

Advertisement

இருவருக்குள்ளும் எவ்வித பேச்சு வார்த்தையும் இல்லாமல் இணையின் அருகாமையை உணர்ந்த வண்ணம் நிமிடங்கள் கரைய குறித்த நேரத்தில் தேவ ரஞ்சனாவைத் தனது மனைவியாக்கி இருந்தான் அதிரன்.

இரு துளி கண்ணீர் தேவாவின் கன்னம் தொட குங்குமம் வைப்பதற்காக அவளை லேசாய் தன்புறம் இழுத்தவன்,

“வெல்கம் ஹோம் மை கேர்ள்..”, என்று கூறி நகர்ந்திருந்தான். இந்த நொடி தேவாவின் மனதில் மொத்தமாய் தன்னை நிலை நிறுத்தியிருந்தான் அதிரன்.

அதன் பின் அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் அவர்களை இழுத்துக் கொள்ள மெட்டி போடும் நேரம் இருவருக்குமே மனதிற்கு மிக நெருக்கமானதாய் இருந்தது.

காத்யாயினியின் முன் மணமக்கள் வந்து நிற்க அவர் முகத்திலிருந்த புன்னகை இருவருக்கும் திருப்தியாய் இருந்தது.

அவரது கரத்தைப் பிடித்துக் கொண்டவளாய் தேவா,

“இது மொத்தமும் உங்களால தான் மா. தேங்க்ஸ் தவிர என்ன சொல்றதுனு தெரியலை. ஆசீர்வாதம் பண்ணுங்க..”

“எப்பவும் இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க.”, என்றவரின் கண்களில் மெலிதான நீர்ப்படலம்.

அவினாஷ் தமக்கையின் அருகில் வந்து அப்படியே கழுத்தோடு கட்டிக் கொண்டு இறுக அணைத்து விலகி நின்றான்.

அதிரனிடம் தனது கரத்தை நீட்ட அதைப் பற்றி தன் பக்கவாட்டில் இழுத்தவன் தோளோடு அணைத்து புன்னகைத்தான்.

சாருகேஷ் இருவருக்கும் நடுவில் நின்று புகைப்படம் எடுக்க கயலும் காயத்ரியும் கூட அதில் இணைந்து கொண்டனர்.

விருந்தினர்கள் புகைப்படத்திற்காக வர ஆரம்பித்திருக்க அதிரன் தேவாவோடு கரம் கோர்த்திருந்தான்.

வெகு நாட்கள் கழித்துக் கிடைத்த இணையின் ஸ்பரிசம் வெளி உலகின் பரபரப்பை எல்லாம் தூர நிறுத்தியிருந்தது.

மதிய உணவிற்கு பின் வீட்டிற்கு கிளம்பியிருக்க நிம்மதியாய் காரில் பின் சாய்ந்து தேவாவின் கரத்தைப் பற்றிய படி விழி மூடியிருந்தான் அதிரன்.

தேவாவிற்கு பாதுகாப்பான கூடடைந்து விட்ட உணர்வின் காரணமோ என்னமோ சோர்வின்றி வெளியில் வேடிக்கை பார்த்த படி அமர்ந்து விட்டிருந்தாள்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு விழி திறந்தவன் அருகில் இருந்தவளைப் பார்த்த படி நிமிர்ந்து அமர்ந்தான்.

“நீங்க ஓகே தான?”

“ம்ம் இந்தக் கூட்டம் ஹோமம் எல்லாம் தான்.. நவ் ஓகே..”

எப்போதுமே ஒளிர்வுடனே இருக்கும் அவனின் அந்த கண்கள் இப்போது லேசான சோர்வுடன் இன்னும் ஈர்ப்பதாய் இருந்தது தேவாவிற்கு.

மெல்லிய புன்னகையோடு தன்னையே பார்த்திருந்தவனின் கண்களில் குறும்பு எட்டிப் பார்க்க தேவா மறுபுறம் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

“சைட் அடிச்சால் நான் எதுவும் சொல்ல மாட்டேன் திமிரழகி.”

“ரொம்ப தாராள மனசு தான்..”

“இல்லையா பின்ன?”

“அதி..”

“ம்ம்?”

“வந்தவங்க எல்லாரும் பேசுறதெல்லாம் உங்களுக்கும் தெரியும் தான?”

“ஆமா..”

“உங்களுக்கு அதெல்லாம் சரி தான்னு தோணலையா?”

“இந்த மாதிரி கல்யாணம் காதுகுத்துக்கு மட்டும் தான் ஸ்டேட்டஸ் முக்கியம்.

தினசரி வாழ்க்கைக்கு அதை விட நிறைய விஷயங்கள் முக்கியம்னு புரிஞ்சுகிட்டேன். அதனால எனக்கு அவங்க பேச்செல்லாம் சரினு தோணலை.”

“மாமியார் வீடோ பொண்டாட்டி வழி சொந்த பந்தமோ எதுவுமே இல்லையே கிட்டத்தட்ட ஒரு அநாதை மாதிரி தான நான்..”

“ஷ் ஏன் இவ்வளவு இமோஷனலா இருக்க நீ? யூ ஆர் மிஸர்ஸ் அதிரன் இப்போ. இது போதாதா உனக்கு.”

“உங்களுக்கு இந்த தேவ ரஞ்சனாவைத் தாண்டி எதுவுமே பெருசில்லையா?”

“மே பி நாளைக்கு வரப் போற அவளோட குழந்தைகள் வேணா பெருசா படலாம்.”, என்றவன் கரத்தில் அடித்தவளாய் தலை குனிந்துக் கொண்டாள்.

“எந்த குழப்பமும் வேண்டாம். இத்தனை நாள் உன்கிட்ட இருந்த அதிரன் தான் இனியும் இருப்பான். எந்த சூழ்நிலையும் என்னை மாத்தாது. சரியா?”

“ஐ லவ் யூ அதி..”, என்றவளின் ஆழ்குரல் அதிரனுக்கு அத்தனைப் பிடித்தது.

வீட்டிற்கு வந்து பெண்கள் தேவாவை அழைத்துச் செல்ல அதிரன் வந்தவர்களில் பெரியவர்களிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

“என்ன அதிரா உன் கல்யாணத்தை தான் ஊரே ஆவலா எதிர் பார்த்துட்டு இருந்தது. சீர் செனத்தியோட வரிசையில நின்னவனை எல்லாம் ஏமாத்திப் புட்டியே ப்பா..”

“…”

“ஒரே புண்ணியம் நம்ம சனமா போச்சு. அதுவுமில்லைனால் இன்னும் கஸ்டம்..”

“…”

“பெரியப்பா எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும். அந்த புள்ளை எந்த சென்மத்தில் பண்ண புண்ணியமோ நம்ம நஞ்சுண்டான் குடும்பத்துக்கு வர்ற யோகம் இருந்துருக்கு.”

“…”

“அதைச் சொல்லு என்கிட்டேயே எத்தனை பொண்ணைப் பெத்தவங்க சம்மந்தம் பேச கேட்டாக தெரியுமா. நம்ம காத்யாயினி தான் இப்போதைக்கு வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டா.”

“ஆமா தாத்தா நீங்க சொன்ன பல பொண்ணுங்க இப்போ டிவோர்ஸ் ஆகி அடுத்த கல்யாணத்துக்கு பார்த்துட்டு இருக்காங்களாமே.”, என்ற அதிரன் பொறுமையாய் தன் சட்டை கை பட்டனை அவிழ்த்த படி அவரை ஏறிட்டான்.

“அந்த கோயம்புத்தூர் பெரிய குடும்பம் அதான் நமக்கு அடுத்த பெரிய பணக்காரங்க அவங்க பொண்ணு கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல பிறந்த வீட்டுக்கு வந்துடுச்சாம்.

என்னனு கேட்டால் புருஷனோடயும் அவன் குடும்பத்தோடயும் ஒத்து போகலையாம். இத்தனைக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தது அவங்களை விட பெரிய இடம் தான்.”

“!!”

“என்ன பண்றது தாத்தா இந்த மாதிரி நீங்க எல்லாம் ஒண்ணு கூடும் போது பெருமை பீத்திக்குறதுக்கும் ஊர் மெச்ச கோடி கோடியா செலவு பண்ணி கல்யாணம் பண்றதுக்கும் பணம் தேவையா தான் இருக்கு.”

“..”

“ஆனால் இப்போ அந்த பொண்ணு வாழ்க்கையில் பிரச்சனைனால் யாரு அனுபவிக்குறது. சொந்தகாரங்க யாரும் வந்து எட்டி கூட பார்க்கலைனு பொண்ணைப் பெத்தவரு புலம்புறாரு.”

“…”

“என்னவோ போங்க எல்லா கல்யாணத்திலேயும் எல்லாரும் பேச எதோ ஒரு விஷயம் கிடைச்சுறது.

பேசிட்டு போயிடுறாங்க. இல்ல தாத்தா..”, என்றவன் மெலிதாய் சிரித்து அங்கிருந்து எழுந்துச் சென்றிருந்தான்.

உள்ளே நடந்தவனின் கண்களில் இருந்த கோவம் காத்யாயினிக்குத் தெளிவாய் புரிந்தது.

“பெரியப்பா இந்தப் பேச்சை விடுங்களேன். என்ன இருந்தாலும் இப்போ தேவா எங்க வீட்டு பொண்ணு. இன்னமும் எதையாவது இப்படி பேசுறது எனக்கு சரியா படலை.”, என்றவர் அனைவருக்கும் பொதுவாய் கூறியிருந்தார்.

மாடிக்கு வந்த காயத்ரி கீழே நடந்ததை எல்லாம் கயல்விழியிடமும் தேவாவிடமும் கூறிட தேவா யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

“நீங்க ஒண்ணும் வருத்தப்படாதீங்க அண்ணி. அண்ணா இவ்வளவு பொறுமையா பேசினதே பெரிய விஷயம்.”

“ம்ம் உங்க அண்ணா தானே.. உள்ளுக்குள்ளே கொலைவெறியில் இருப்பார்.”, என்றவள் தனது கைப்பேசியை எடுத்துக் கொள்ள காயத்ரியும் கயல்விழியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

தனது கரத்தை புகைப்படம் எடுத்து அவனுக்கு அனுப்பி விட்டு பதிலுக்காக காத்திருந்தாள்.

அதைப் பார்த்தவனின் முகத்தில் சிறு புன்னகை அந்த மருதாணியும் வளையல்களும் உள்ளுக்குள் ஏதோ செய்தது ஆணவனை.

“ஒண்ணும் வேண்டாம் போ டி..”

“ஏனாம்?”

“இப்படி போட்டோ எல்லாம் தேவையில்ல. நிஜம் பக்கத்து ரூமில் இருக்கும் போது நிழல் எதுக்கு?”

“கோவமா இருப்பீங்களேனு அனுப்பினால் சார் வேற மோட்ல இருக்கீங்க!”

“இந்தக் கையைப் பார்த்த அப்பறம் வேற மோட் தானா வருது டி ரஞ்சு..”

“வரும்.. வரும்.. இப்போ நீங்க ஓகே தான?”

“இல்லைனு சொன்னா?”

“ஒரு பாட்டு அனுப்பலாம்னு நினைக்குறேன்.”

“உன் செலெக்ஷன் பயங்கரமா இருக்குமே.. அனுப்பு பார்க்கலாம்..”, என்றதில் தேவாவின் முகம் சிவக்க காயத்ரியும் கயல்விழியும் கண்டும் காணாமல் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

“எவ்வளவு நேரம்? அனுப்பு டி..”, என்ற மெசெஜைப் படித்த வண்ணம் வீடியோவை அனுப்பி விட்டிருந்தாள் தேவா.

கத்தியின்றி
ரத்தமின்றி வெறும்
கண்ணால் கொலை
செய்வாய் இவள் ராணி
கோட்டை இளவரசி
உனக்கென்ன வேண்டும்

“சொன்னேனே எங்கே இருந்து எடுக்குற இந்த பாட்டெல்லாம்..”

“..”

“எனக்கென்ன வேணும்னு சொல்றேன் கேட்குறியா?”

“ஐயோ உங்க தங்கச்சிங்க பக்கத்தில் இருக்காங்க. ஆளை விடுங்க..”, என்றவள் கைப்பேசியை அவசரமாய் கீழே வைத்ததில் இருவரும் அவளைப் பார்த்து வெளிப்படையாகவே சிரித்திருந்தனர்.

“அண்ணி நீங்க சொன்னப்போ கூட நம்பலை. ஆனால் இப்போ..”, என்றதில் கயல்விழியின் வாயை வேகமாய் மூடியிருந்தாள் தேவா.

“எங்க வாயை மூடலாம் ஆனால் உங்க முகம் தெளிவா காட்டிக் கொடுத்துருச்சே..”, என்ற காயத்ரியும் கயல்விழியும் தேவாவின் கரங்களைப் பற்றிக் கொண்டனர்.

“என்ன அண்ணி?”, என்ற தேவா இருவரையும் கேள்வியாய் பார்க்க புன்னகை முகமாய் காயத்ரி அவளிடம்,

“எங்களுக்கு என்னவோ நீங்க எங்க எல்லாரோட ஹோம்னு தோணுது.”, என்றதில் தேவாவிடம் நிறைவான புன்னகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!