Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே -08

    ஆழியன் சத்தமிட்டதில் வளர்மதியே திடுக்கிட்டு பார்த்தார். கை தானாக கீழே இறங்க மகனை அதிர்வு மாறாமல் பார்த்தார் வளர்மதி.

    “இப்போ எதுக்கு மா கை ஓங்குனீங்க”என்றதும் “உன் பொண்டாட்டி எதிர்த்து பேசறா அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா”என்று அவரும் சத்தமிட



Advertisement

    “ரதி நீ உள்ள போ”என்றவன் “சமையலுக்கு ஆள் வச்சிருக்கோம் தானே அவங்க கிட்ட கேட்க வேண்டியது தானேம்மா. இல்லை இங்கே நீங்களாவது நிக்கணும் அவ போய் காபி போடுவா.ரெண்டுமே செய்யணும் னா எப்படி?”என்றான் கோபமாய்.

    “என்ன செல்வம் பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு”என்றவரைப் பார்த்து விட்டு ,”வந்தவங்களுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்புங்க”என்று நகர, தேசிகனோ”சொந்தக்காரங்க முன்னாடி சத்தம் போடாத வளரு .”என்று போய் விட வளர்மதிக்கு அத்தனை புகைச்சல் மனதில்.

Advertisement

Advertisement

    இங்கே நீரதிக்கோ வளர்மதி அடிக்க கை ஓங்கியதில் அழுகையே வந்து விட்டது. அறைக்குள் வந்து விட்டாள்.

Advertisement

    ‘இவர்களுக்கு இவ்வளவு செய்தும் என்ன பலனைக் கண்டோம் ஒன்றுமே இல்லையே, இதே போல தரங்கினியை இவர்களால் கை ஓங்கி விட முடியுமா இல்லை புது மருமகளைத் தான் கை நீட்டி விட முடியுமா? எனக்கு யாரும் இல்லை என்ற இளக்காரம் தானே இவர்களுக்கு.’

    “ரதி”என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தவனைக் கண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டு “இதோ காஃபி போடறேன்”என்றாள் வேகமாய் எழுந்து.

    “ப்ப்ச் உட்காரு நீ”என்று அதட்டியவன்,”செய்ய முடியாது னா செய்ய முடியலைனு சொல்ல வேண்டியது தானே ரதி ஏன் இப்படி சத்தமா?”என்றதும் அவனைத் தீர்க்கமாக பார்த்தவள் “ஓஓஓ சரி”என்றாள்.

    “ரதி”எனும் போதே “கேட்க ஆள் இல்லாதவளுக்கு வெட்டி வீராப்பு வேற வருது பாருங்களேன் இனி பேசலை”என்றாள்.

    “ப்ப்ச் ரதி”என்று அவன் பேசத் துவங்கும் போதே”அவங்க நம்ம மேரேஜுக்கு சம்மதிச்சதே பெருசு இதுல நான் அவங்களை எதிர்த்து வேற பேசிட்டேன் பாருங்க. உங்க அம்மா கிட்ட மன்னிப்பு கேட்கவா?”என்றாள் அவன் விழிகளைப் பார்த்தபடி.

    நீரதிக்கு வெறுப்பாக இருந்தது. அன்று எதுவும் பிடிக்கவில்லை அவளுக்கு ஏன் வாழ்கிறோம் இதெல்லாம் ஒரு வாழ்க்கை என அடிக்கடி யோசிக்கிறாள் இப்போது எல்லாம்.

    ஆசை ஆசையாய் திருமணம் செய்தது இதற்கு தானா என்ற எண்ணம் அவளுள். இப்படியே அடுப்படி, ஏச்சு பேச்சுக்கள், மனதினுள் ஒரு பொருமல் என்றே வாழ்க்கை போய்விடுமா என்று நினைத்தபடி நிற்க, ஆழியன் கதவைப் பூட்டி விட்டு சென்றதை கூட அவள் உணரவில்லை.

    மறு வீட்டுக்கு போனவர்கள் வந்ததும் தான் கதவைத் திறந்தான் ஆழியன்.

    பேசாமல் அமர்ந்து எங்கோ வெறித்தபடி அவளிருக்க “மறு வீட்டுக்கு போயிட்டு வந்துட்டாங்க வா”என்று கூப்பிட்டான் சற்று முன்னர் நடந்த நிகழ்வின் சுவடு இல்லாமல்.

    “ஹ்ம்ம்”என்றவள் முகம் கழுவ செல்ல தலையை கிறுகிறுத்து வந்தது.

    சட்டென சுதாரிப்பாய் சுவற்றைப் பிடித்துக் கொள்ளவும் “என்ன ரதி?”என்று பாய்ந்து பிடித்து விட்டான் அவளை. முகம் அத்தனை சோர்வாய் இருக்க ஆழியனுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு தோன்ற “ரெஸ்ட் எடுக்கறியா?”என கேட்டதும்

    “இல்லை வர்றேன்”என்று முகம் கழுவி விட்டு வந்தாள்.

    பவ்யா மெலிதாய் புன்னகைத்தாள் நீரதியைக் கண்டு.

    “பாப்பாவுக்கு எப்படி இருக்குக்கா”என்று அவள் வந்ததும் நினைவாக கேட்க

   நீரதிக்கு உண்மைக்கும் ஆச்சரியம் தான் பவ்யா கேட்டதில்

    “ஹ்ம்ம் பரவாயில்லை பவி தூங்கிட்டு இருக்கா”என்று பதிலிறுக்க “சரிக்கா”என்று தலையாட்ட

    “பவி குளிச்சிட்டு ரெடி ஆக சொல்றாங்க வா”என்று நிலா அழைத்ததில் பவ்யாவின் முகம் சட்டென்று சுருங்கியது. நீரதி எப்போதும் போல இருந்தாள்.

    “சரி போய் ரெடி ஆகு பவி நான் நைட் சாப்பாடு பரிமாறணும்”என்று சமையலறைப் பக்கம் செல்ல பவ்யா நிலாவோடு சென்று விட்டாள்.

    ஆழியன் தம்பி மனைவியின் முக மாற்றம் நிலாவின் அழைப்பு எல்லாம் கவனித்தவன் தன் வேலையில் மூழ்கிப் போனான்.

    திருமண பரபரப்பில் மரமில் வேலைகள் ஷோரூமின் கணக்கு வழக்குகள் என்று கவனிக்கப்படாமல் இருக்க அதனை பார்த்துக் கொண்டிருந்தான்.

    கணக்கு வழக்குகளை ஆடிட்டர் வசம் ஒப்படைக்க அடுத்து வரும் லாபத்தை எதில் போடலாம் தொழிலை என்ன மேம்பாடு செய்யலாம் என்று எல்லா யோசனைகளும் ஆழியன் கொடுப்பது தான்.

    என்ன தான் தீபன் ஃபர்னிச்சர் கடையில் திறமையாக நிர்வாகம் செய்தாலும் கடை வைக்கும் யோசனை ஆழியனுடையது தான்.

    தேசி ஃபர்னிச்சர்ஸ் விருதுநகர் தென்காசி என்று இரண்டு மாவட்டங்களிலும் பிரபலமான ஃபர்னிச்சர் கடை. அதுவும் தென்காசியில் தான் தேசி ஃபர்னிச்சர்ஸ்க்கு அத்தனை வரவேற்பு. நவநாகரீக டிசைன்களில் இருந்து பழமை மாறாத டிசைன்கள் வரை எந்த விதத்தில் மரத்திலானா ஃபர்னிச்சர் கேட்டாலும் கிடைக்கும். வாடிக்கையாளர் கேட்கும் டிசைனில் செய்து தருவது தான் இங்கு விஷயமே. ஆழியன் கைதேர்ந்த டிசைனர் என்றால் அமுதன் மரங்களை தரம் பிரித்து வாங்குவதில் வல்லவன் அதே போல தீபனுமே வாடிக்கையாளரிடம் பேசி அந்த பொருளை விற்பதில் தேர்ந்தவன் மூன்று மகன்களும் தொழிலில் சிறந்து விளங்க தேசிகன் அங்கே முதன்மையான வியாபாரி ஆனார். வீட்டில் தான் மருமகள்களிடம் பாரபட்சம் மறைமுகமாக இருக்கும் ஆனால் வெளியே தேசிகனின் பிள்ளைகள் ஒற்றுமையில் ராம லக்ஷ்மணர்கள் என்று தான் பெயர். இல்லாவிடில் பல ஃபர்னிச்சர் கடைகள் இருக்கும் இடத்தில் தனித்துவமாக விளங்க முடியுமா என்ன.

    **********

    தேசிகன் வீட்டின் இளைய வாரிசு தன் திருமண வாழ்வின் முதல் படியில் காலடி எடுத்து வைக்க தன் பிள்ளைகள் அனைவரும் குடும்ப வாழ்வில் செட்டிலாகி விட்டதே சிலாகிப்பாய் பேசிக் கொண்டிருந்தார் வளர்மதி.

    “செல்வத்தை தவிர மத்த மூணும் எம்பேச்சை கேட்டு நல்ல நெலைமைக்கு வந்திடுச்சு. இவன் தான் எதிலயும் ஒட்டாம நின்னுட்டான் த்தை. வந்தது ஒரு ஆம்பளைப் பிள்ளை பெத்து தந்திருக்கலாம் அதுவும் இல்லை. இந்தா வரு பொறந்து அப்புடி இப்படினு ஏழு வயசு ஆகிப் போச்சு அடுத்த வாரிசு னு ஒண்ணை கண்ணுல காட்ட மாட்டா போலருக்கு. இதே நம்ம தரு நிலா எல்லாம் பாருங்க அம்சமா ஆணொன்னு பொண்ணு ஒண்ணு பெத்துக்கிட்டாங்க”என்று நொடிப்பாய் பேசி முடிக்க கணக்கு வழக்கு புத்தகத்தோடு வந்த ஆழியன் கதவைத் தட்டி அதனை எல்லாம் தந்தையிடம் கொடுத்து விட்டு அமைதியாக வெளியேறினான்.

    “பேசுனதை கேட்டானோ என்னவோ அவன் மொகமே கொஞ்ச நாளா சரியில்லை வளரு.”என்ற பொன்னி “ஏன்டா தேசி வேபாரத்துல எதுவும் சடவா”என்றார் மகனிடம்.

    “சடவா அதெல்லாம் இல்லம்மா என்ன ஒரே இடத்துலயா பாக்குறானுக பெரியவன் மரம் வாங்கப் போறான் செல்வம் தான் கட்டில் செய்ய புடிக்க மில்லுல உள்ளவங்கள வேலை வாங்கனு இருக்கான் சின்னவன் தான் கடையிலேயே இருக்கானே பெறகென்ன சடவு. லாப நட்டத்த தான் நான் பாக்குறேனே”என்ற தேசிகன் “இந்த கல்யாண பரபரப்பு முடியட்டும் என்ன ஏதுன்னு கேட்கிறேன் மா”என்றார்.

    பொன்னியோ “எதுவா இருந்தாலும் கேட்டுக்க தேசி நாளைக்கு நம்மாலன்னு ஒரு பிரச்சினை வந்திடக் கூடாது”என்றவர் “அது மாதிரி நீயும் வளரு கொஞ்சமாச்சும் தருவை வேலை வாங்கி பழகு. மூணாவது மருமவளும் வந்தாச்சு உனக்கு.‌ நீராவா இருக்கப் போய் எதுவும் காட்டிக்கிடலை இந்த புதுக்குட்டி எப்படி னு நமக்கு தெரியாது. பாத்துக்க”என்றார் எச்சரிக்கையாக

    “ஏன் த்தை தரு என்ன வேலை பார்க்காமலா இருக்கா… ஏதோ ரெண்டு தடவை கத்தி வச்சு பிள்ளை பெத்துடவும் அவளை அலுங்காம வச்சுக்கிறேன் இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவ வேலையை அவளே பாத்துக்குவா”என்று அண்ணன் மகளை விட்டுக் கொடுக்காமல் அவர் பேச

    “என்னவோ மனசுல பட்டதை சொன்னேன்.”என்றவர் “ஆமா தேசி கேட்க நெனைச்சேன் நீரா அண்ணன் ஃபோனுகீனு பண்ணானா… இந்த கல்யாணம் பத்தி சொன்னியா”என்று வினவ

    “அட ஏன் மா நான் சுத்தமா மறந்து போயிட்டேன். செல்வமும் கேட்டான் தான். மறந்துட்டேன்னா சொல்ல முடியும் கல்யாணத்துக்கு கூப்பிட்டேன்னு முடிச்சுட்டேன். அதை விடு கேட்டா சமாளிக்கலாம் என்ன கிட்டக்க இருந்தவங்க கிட்டயா சொல்லாம விட்டோம்”என்றார் தேசிகன்.

    “செரித்தான். இருந்தாலும் ஒரு வார்த்தை கூப்பிட்டு சொல்லி இருக்கலாம் ல நாளைய பின்ன தெரிஞ்சா சங்கடமா போகும். செரி விடு நடந்ததை மாத்தவா முடியும்”என்று சொல்லி அமைதியானார் அவர்.

    “நீ தூங்கு ம்மா நாங்க போய் படுக்கிறோம் அசந்து வருது”என்று எழுந்து கொள்ள வளர்மதியும் எழுந்தார்.

    “ஹ்ம்ம் ஹ்ம்ம் காலையில் நேரமே கோவிலுக்கு கிளம்புங்க கெடா வெட்டி வர சரியா இருக்கும்”என்று அவர்களை அனுப்பி வைத்த பொன்னி சிறிது நேரம் விழிக்கவும் உறங்கவுமாக இருந்து பின் நன்றாக உறங்கிப் போனார்.

    *********

    பவ்யாவின் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்த தீபனுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. திருமணத்திற்கு முன் நிறைய பேசி இருந்தாலும் இருவருக்குமான தனிமையில் இருவருமே பேசத் தயங்கினர்.

    “வீடு பிடிச்சி இருக்கா பவி”என்று பேச்சைத் துவக்க

    “ஹ்ம்ம் நல்லா இருக்கு.”என்றவளுக்கு அடுத்து எதைப் பேச என்று தெரியாமல் விழிக்க மூச்சை இழுத்து விட்டவன் “நீ சின்ன பொண்ணு இல்லை. ஹோப் யூ அன்டர்ஸ்டாண்ட்…ஷல் வீ”என்றதிலும் அவன் பார்வையின் வீச்சிலும் தன்னிச்சையாக தலையாட்டியவள் தீபனின் அணைப்பில் இருந்தாள்.

    திருமணம் முடிந்த மறுநாள் காலை அதற்குரிய பரபரப்பிற்கு மிச்சம் இல்லாமல் விடிந்திருக்க குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு பரபரப்பில் இருந்தனர்.

    “நிலா பொண்ணு மாப்ளையோட கோவிலுக்கு போயிட்டு வாங்க நீயும் மாப்ளையும்.”என்ற பொன்னியிடம் “பாட்டி நாங்க”என்று வந்து நின்றாள் தரங்கினி.

    “நீ புள்ளைய வச்சுட்டு போக வேணாம். அமுதன் கூட போயிட்டு வரட்டும்”என்ற பொன்னியிடம் மறுத்து பேச வந்த வளர்மதி ஏனோ வாய் திறக்கவில்லை. தரங்கினி பொன்னியை முறைத்துக் கொண்டு அமர்ந்திருக்க பவ்யா தீபனோடு வெளியே வந்தாள்.

    “ரெண்டு பேரும் சாமி கும்பிட்டு வாங்க”என்று வளர்மதி அனுப்பி வைத்தார் மனநிறைவுடன். மகனின் முகத்தில் இருந்த பூரிப்பிற்கான மனநிறைவு அது.

    இருவரும் பூஜையறையில் விளக்கேற்றி விட்டு வரும் போதே நிலா வந்து அமர நீரதி அனைவருக்கும் காஃபியோடு வந்தாள்.

    “குட் மார்னிங் பவி”என்று நிலா சொல்லவும் பவ்யாவின் முகம் நேற்று போல இன்றும் சுருங்கியது.

    “நீ காஃபி குடிப்பியா பவ்யா. இல்லை டீ ஹார்லிக்ஸ் அது மாதிரியா”என்று நீரதி கேட்க

    “காஃபி எடுத்துப்பேன் க்கா தேங்க்ஸ் அக்கா”என்று எடுத்துக் கொண்டவள் தீபனிடம் கொடுத்து விட்டு தானும் எடுத்துக் கொண்டாள்.

    “தீபு வாழ்வு தான் உனக்கு”என்று கிண்டலடித்த நிலாவை எதுவும் கூறாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தனர் வீட்டினர்.

    பவ்யா காஃபியை அருந்தியபடியே “ஹான் நிலா. நீங்க உங்க அண்ணாவை கிண்டல் பண்றது எல்லாம் ஓகே. பட் என் முன்னாடி அவரை அண்ணான்னு சொல்லி பழகுங்க. என் வீட்டு ஆளுங்க முன்னாடி அவரை பேர் சொல்லி கூப்பிட்டா அவருக்கு ரெஸ்பெக்ட் குறைஞ்ச மாதிரி ஆகிடும். எங்க வீட்டில் மூத்தவங்க இளையவங்க மரியாதை தந்து பேசறது ரொம்ப முக்கியம்”என்றாள் சிரித்துக்கொண்டே.

    அனைவரும் பவ்யாவை அதிர்ந்து பார்க்க அவளோ சாவகாசமாய்”என்ன பாட்டி நான் சொல்றது சரி தானே…வயசுக்கு மூத்தவங்களை அவங்க அவங்க உறவு சொல்லி கூப்பிடுறது தானே முறை.”என்றவள் “அப்புறம் நிலா உங்க அண்ணனோட வொய்ப் உங்களுக்கு அண்ணி முறை வேணும். விருந்துக்கு வந்தவங்க முன்னாடி என்னை பேர் சொல்லி கூப்பிட்டு வச்சுடாதீங்க எங்க அப்பத்தா யார் என்னன்னு பார்க்காம வாய் மேலயே ஒண்ணு வச்சுடுவாங்க”என்றவளை குடும்பமே திகைப்புடன் பார்த்திருந்தது.

    ….. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!