Skip to content
Post Views: 1,517

அத்தியாயம் 15
ஐந்து வருடங்களுக்குப் பிறகு..
Advertisement
“அம்மா.. என்னோட ஒயிட் ஃபார்மல் ஷர்ட் எங்கம்மா..” என்று மேலே தன் அறையிலிருந்து கீழே சமையலறையில் இருக்கும் அம்மாவிற்கு கேட்க வேண்டும் என்று கத்தினாள் அதிதி.
“உன்னோட கப்போர்ட்ல தான் இருக்கும் பாரு அத்து..”என்று கீழிலிருந்து பதில் வந்தது.
Advertisement
“இங்க இல்லம்மா.. நீ அனியோட எடத்துல மாத்தி வச்சிருப்ப..எனக்கு லேட் ஆகுது நீ வந்து எடுத்துக்குடுமா..”
Advertisement
“தினமும் காலையில இதே வேலையாப்போச்சி.. அதைக்காணோம்..இதைக் காணோம்ன்னு அக்காவும் தம்பியும் என்னை மேல கீழ ஏத்தி எறக்கறதே தொழிலா பண்ணிட்டு இருக்கீங்க.. நான் என்ன சின்ன பொண்ணா குதிச்சி ஓடிவர்றதுக்கு..?” என்று அலுத்துக்கொண்டே வந்து சேர்ந்தார் அவளின் அம்மா சுதாஷினி.
“உன்னோட ஃபாலோவர்ஸ் எல்லாம் ‘யூ லுக் சோ யங் மேடம்’ன்னு கமெண்ட் போடுறாங்க.. நீ என்னம்மா இப்பவே வயசானமாதிரி பொலம்புற.. என் ஃப்ரண்ட்ஸே உன்ன என் அக்காவான்னு தான் கேக்குறாங்க”
“போதும்டீ நீ ஐஸ் வச்சது..” என்ற பேச்சினினூடே தேடியவர் ஐந்து வினாடிகளில் அவள் கேட்ட சட்டையை எடுத்துக்கொடுத்துவிட்டு..
Advertisement
“இப்ப மட்டும் எப்படி கிடைச்சது?ஒழுங்கா தேடனும் எல்லாத்துக்கும் சோம்பேறித்தனம்..” என்று கடிந்தார்.
அசடு வழிந்துவிட்டு..
“எப்படிமா உன் கண்ணுக்கு மட்டும் தெரியுது? இவ்ளோ நேரம் நானும் அங்க தான் தேடினேன்..” என்று வியந்தாள்.
“கெடைக்கனும்ன்னு நெனைச்சிட்டு தேடனும்..கொஞ்சம் எஃபர்ட் போடனும் அதை விட்டுட்டு என்னை கூகுல் சர்ச் மாதிரி யூஸ் பண்ணக்கூடாது..”
“அம்மா நான் தேடுனேன் மா.. அந்த சட்டை உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியனும்ன்னு ஒளிஞ்சிட்டு இருந்ததுன்னு நெனைக்கிறேன்..”
“இந்த வாய்க்கு ஒன்னும்குறைச்சல் இல்ல.. சரி சீக்கிரமா கிளம்பி வா.. இன்னிக்கு ஒரு சமையல் வீடியோ வேற எடுக்கனும் அதுக்கு ரெடி பண்ணனும் ஏகப்பட்ட வேலை இருக்கு.. ரெண்டு புள்ளைங்க இருக்காங்கன்னு தான் பேரு ஒன்னுகூட ஒரு ஹெல்ப்பும் பண்ணாதுங்க..” என்ற அவளது அம்மாவின் வழக்கமான புலம்பல் தேய்ந்து மறைந்தது..
எப்போதும் போல அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அதிதி தான் ஆபீஸுக்கு தயார் ஆவதில் கவனம் செலுத்தினாள். வழக்கம்போல் இல்லாமல் இன்று சற்று கூடிதல் சிரத்தை எடுத்துக்கொண்டாள்.
இன்று ஆஃபீசில் ஒரு முக்கியமான நாள். அவர்களது நிறுவனம் அடுத்த நிலைக்கு போவதற்கான அடித்தளமாக அமையப்போகும் நாள்.
அதிதி நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போதே கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி ஆறுமாதம் இண்டர்ன்ஷிப் அப்புறம் பணி நிரந்தரம் என்று அவள் “இன்ஃபினிடி டெக்னாலஜி” இல் சேர்ந்து இரண்டு வருடம் ஆகிறது.
பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பெனிகளில் அவளுக்கு வேலை கிடைத்த போதும் அதையெல்லாம் தாண்டி ஆரம்பித்து வெறும் சில வருடங்கள் மட்டுமே ஆன இளம் கம்பெனியான “இன்ஃபினிட்டி டெக்னாலஜி”யை தேர்ந்தெடுக்க ஒரே காரணம் விக்ரமாதித்யா எனும் ஆளுமை..
அதிதி மூன்றாம் ஆண்டு படிக்கும்போது அவளது கல்லூரியில் ஒரு செமினாரில்தான் முதன் முதலில் விக்ரமாதித்யாவைப் பார்த்தாள்.
அந்த செமினாரில் சீஃப் கெஸ்ட்டாக வந்து சிறப்புரையாற்றினான்.
விக்ரமும் சிருஷ்டியின் முன்னால் மாணவன்தான். நடுத்தர குடும்பத்தில் பிறந்து இங்கு பேச்சிலர் டிகிரி படித்து பின் அமெரிக்கா சிலிகான்வேலியில் வேலைப்பார்த்து, அது பிடிக்காமல் பின் இந்தியாவுக்கே திரும்பிவந்து தன் சொந்த முயற்சியில் ஒரு ஏஐ(AI) தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து இயங்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருவதையும், தான் கடந்து வந்த பாதையையும் அவன் கூறியதைக்கேட்ட அதிதியின் கண்முன் ஒரு கனவுலகம் விரிந்தது.
அவனது கதை, அதை அவன் சொன்ன விதம், ஆங்கிலப்புலமை, தங்குதடையின்றி வந்து விழுந்த டைமிங் காமெடிகள் என்று அந்த கூட்டதையே அந்த அரைமணி நேரமும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆளுமை எல்லாம் பார்த்து வியந்து போனாள்.
தானும் இப்படி ஒரு கம்பெனி ஆரம்பித்து நடத்தவேண்டும் எனும் உத்வேகமே அவளுக்குப் பிறந்தது. அதுவரை படித்தோமா எதாவது ஒரு கம்பெனியில் சேர்ந்து நன்றாக சம்பாதித்தோமா என்பதற்கு மேல் அவள் எதுவும் யோசித்ததில்லை. ஆனால் விக்ரமின் பேச்சைக்கேட்டபின் முடிவில்லா சாத்தியங்கள் எவ்வளவோ இருக்கும் போது நான் ஏன் ஒரு வட்டத்துக்குள் என்னை சுருக்கிக்கொள்ளவேண்டும் என்று தோன்றத்தொடங்கியது.
அவளையறியாமலேயே விக்ரமாதித்யா அவளுக்கு ஒரு இன்ஸ்ப்ரேஷன் ஆகிவிட ஏஐ டூல்ஸ், டெக்னாலஜி என்று படித்து அறிவை வளர்த்துக்கொண்டாள்.
கேம்பஸ் இண்டர்வியூவில் அவனது கம்பெனியின் பெயரைப்பார்த்ததும் அதற்கு விண்ணப்பித்துவிட்டாள்.
அவளுக்கு வேலையும் கிடைத்துவிடவே…எதையும் யோசிக்காமல் சேர்ந்துவிட்டாள்.
கல்லூரி முடிந்ததும் இவர்கள் நண்பர்கள் குழுவும் கலைந்தது. ஷிவாங்கி வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாள்.சஞ்சய் மேல்படிப்பிற்காக சிங்கப்பூர் சென்றுவிட்டான். வர்ஷினிக்கும் விஷாலுக்கும் பெங்களூருவில் பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலைகிடைக்கவே அவர்கள் இருவரும் பெங்களூரு சென்றுவிட்டனர்.
வாழ்க்கையில் முதன் முதலாக அதிதியும் வர்ஷினியும் பிரியும்படி நேர்ந்தது.
“ஹே அதி.. நீ ஏன்டி ஊர் பேர் தெரியாத கம்பெனில சேருர.. சேலரியும் கம்மியாதான் தராங்க..நீயும் பெங்களூரு வாடி..” என்று கெஞ்சியவளிடம்.
“இல்ல வர்ஷ் எனக்கு சென்னைய விட்டு வர இஷ்டம் இல்லை.. அதோட இப்ப சம்பளம் கம்மின்னாலும் இந்த கம்பெனில எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தோணுது.” என்று கூறி மறுத்துவிட்டாள் அதிதி.
சொன்னது போலவே அதிதி நன்றாக பர்ஃபாம் செய்வதைப் பார்த்து அவளுக்கு ரெண்டு ஆண்டுகளில் சம்பளம் இருமடங்கானது. வீட்டில் இருந்து போய்வருவதால் அவளுக்கு பெரிதாக செலவும் ஒன்றும் இல்லை. நன்றாக சேமிக்க முடிந்தது.
அந்தபக்கம் வர்ஷினியோ..
“ஹேய் நீ ரொம்ப கிளவர் டீ. ஊர்லயே இருந்துட்ட.. என்னைப் பாரு..வாங்குற சம்பளத்துல பாதி வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே சரியாபோகுது. இதுக்கும்மேல ஷாப்பிங் அவுட்டிங்ன்னு போனா ஒன்னுமே கைலநிக்க மாட்டேங்குது ..”என்று புலப்பித்தீர்த்தாள்.
இப்படியாக அதிதி எடுத்த முடிவு அவளுக்கு சாதகமாகவே அமைந்தது.
இன்று அவர்களின் கம்பெனி விரிவாக்கத்திற்காக முதளீட்டாளர் மீட்டிங் நடக்கவிருந்தது. வரும் இன்வெஸ்டர்களுக்கு அவர்களது கம்பெனியின் இப்போதைய ப்ரோஜெட்டுகள், முன்னர் வெற்றிகரமாக முடித்த ப்ரோஜெட்டுகள், அவர்களின் நிதி நிலைமை, எதிர்காலத் விரிவாக்கத் திட்டங்கள் அதில் கிடைக்கப்போகும் லாபம், அதற்கு தேவைப்படும் நிதி என்று எல்லா அம்சங்களையும் இன்று ப்ரஸண்ட் செய்ய வேண்டும்.
அதிதி இந்த மீட்டிங்கிற்காக தன் முழு உழைப்பையும் போட்டிருந்தாள். எப்படியும் அவளது மேனேஜர் தான் ப்ரெசண்ட் செய்வார். ஆனாலும் தானும் அதில் பெரிய பங்காற்றியிருக்கும் ஆர்வம் அவளுக்கு.
இந்த இன்வெஸ்மெண்ட் மட்டும் கிடைத்து விட்டால் அவர்கள் நிறுவனம் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுவிடும். அது அவளுக்கும் வளர்ச்சியாகத்தான் அமையும்.
அதனால் அதிதி அன்று காலையிலிருந்து பரபரப்பாகவே இருந்தாள்.
தயாராகி கீழே வந்து தனது மொபைலைத் தேடியவள்..
“அம்மா…. அந்த எருமை மாடு சார்ஜ் போட்டிருந்த என் ஃபோனை கழட்டிவிட்டுட்டு போயிருக்கான்..” என்று ஆத்திரத்தில் உச்சஸ்தாயில் கத்தினாள்.
“சரி இருடி கத்தாத.. இந்தா பவர் பேங்க்.. இதுல சார்ஜ் போட்டுக்கோ..” என்று கூறி அவளை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார் அம்மா.
“ஈவ்னிங் இருக்கு அவனுக்கு..” என்று தனது தம்பியை மனதில் திட்டிக்கொண்டே கிளம்பினாள் அதிதி.
அவளது புது ஈவி(EV) ஸ்கூட்டர் சாலை நெரிசலில் சத்தமில்லாமல் கலந்தது.
அவளது வீட்டிலிருந்து ஆபீஸ் அரைமணி நேரம் பயண தூரத்தில் இருந்தது. ட்ராஃபிக் இருந்தால் கொஞ்சம் அதிக நேரம் பிடிக்கும்.
மனம் முழுவதும் அன்றைய நாள் நல்லபடியாக அமைய வேண்டும் என்ற எண்ணமே நிறைந்திருக்க, சிக்னலில் நின்றிருந்தவளின் பக்கத்தில் ஒரு பைக் வந்து நின்றது. இவள் எதேர்சையாக திரும்பிபார்க்க அந்த பைக்கை ஓட்டிவந்த இளைஞன் தன் ஹெல்மெட்டை கழட்டிவிட்டு தலைமுடியை சரி செய்து கொண்டிருந்தான். பார்ப்பதற்கு ரேமண்ட் மாடல் போல் இருந்தான்.
“பாக்க நல்லாதான் இருக்கான் ஆனா மூக்கு அவ்ளோ ஷார்ப் இல்ல,கண்ணுகூட சின்னதா இருக்கு…” என்று அவள் மனம் நினைக்கும்போதே மற்றொரு புறம் அழகிய கண்களுடன் கூடிய இன்னொரு முகம் மனத்திரையில் தோன்றியது.
அதிதி வசீகரனை மறந்துவிட்டாள் என்று இல்லை. ஆனால் நினைக்காமல் இருக்க பழகிக்கொண்டாள்.
முதல் சில மாதங்கள் வரை அவன் நினைவு அவளை அலைக்கழித்தது. இரவெல்லாம் கண்ணீரில் அவள் தலையணை நனைந்தது.
‘ஏன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போனான்..? தங்களுக்குள் அவள் உணர்ந்த பிணைப்பு முற்றிலும் அவளது கற்பனையா? அவனுக்கு கொஞ்சமும் அவள் நினைவில்லையா..?’என்று நினைத்து நினைத்துத் தவித்தாள்.
ஆனால் போகப்போக அவன் இல்லாத வெறுமையை மனம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. அவன் மேல் கொண்ட நேசமே வெறுப்பாக மாறியது.
அவன் நினைவு வரும் போதெல்லாம் அவன் சொல்லாமல் விட்டு போனதையே திரும்ப திரும்ப நினைத்து மனதை இரும்பாக்கினாள்..
தேவையில்லாத நினைவுகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு வைராக்கியத்துடன் படிப்பிலும், சுய முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தினாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் நினைவு மறைந்து இயல்பாகவே இருந்தாள். ஆனால் இப்போது போல எதிர்பாரா நேரத்தில் அவன் நினைவுவந்துவிடும் அப்போதெல்லாம் அதோடு சேர்ந்து அவள் அனுபவித்த வலிகளும் நினைவு வந்து அவள் உள்ளம் சோர்வடைய அந்த நாளே வீணாகிவிடும்.
“நோ இன்னிக்கு ஃபீல் பண்ற நாள் இல்ல..நான் உற்சாகமா இருக்கனும்..” என்று மனதை திடப்படுத்திக்கொண்டாள்.
அந்த பெரிய ஐடி வளாகத்தில் பத்தாவது மாடியில் இருந்தது இவர்கள் அலுவலகம்.
அதிதி உள்ளே நுழைந்தபோது எல்லாரும் பரபரப்பாக வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அதுகுள்ள எல்லாரும் வந்துட்டாங்களா? நான் தான் லேட்டா..” என்று நேரம் பார்த்தாள்,
அரை மணி நேரம் முன்னதாகத்தான் வந்திருந்தாள். நிம்மதி பெருமூச்சுடன் தன் இடத்திற்கு சென்றவளை
“அதி..” என்ற குரல் நிறுத்தியது.
அவளுடன் பணிபுரியும் லிடியா வேகமாக இவளிடம் வந்தாள்.
“குட் மார்னிங் லிடி..” என்றவளுக்கு பதில் வணக்கம் கூட சொல்லாமல்..
“அதி.. நீ வந்ததும் பாஸ் உடனே வந்து அவர பார்க்க சொன்னாரு..” என்றாள் பரபரப்பாக.
அவளது குரலில் இருந்த அவசரம் அவளை யோசிக்க வைத்தது.
“என்னவா இருக்கும் எதாவது பிரச்சனையா..?” என்று எண்ணம் எழவே விரைந்து தனது பாஸின் அறைக்கு சென்றாள்.
அவர்களது சின்ன நிறுவனம்தான் மொத்தமே 20பேர் தான் இருந்தனர். அந்த ஐயாயிரம் சதுர அடி இடத்தில்தான் அவர்கள் மொத்த ராஜாங்கமும்.
முதலாளிக்கு என்று தனியாக பெரிய அறை என்றெல்லாம் கிடையாது.
ஒரு கண்ணாடி கேபின் அதில் டேபிள் சேர் போக ஒரு சிறிய சோஃபா டீபாய் ஒரு கப்போர்ட் அவ்வளவுதான் அவனது அறை. ஆனால் அதுவே இன்றைய கால ரசனைக்கேற்ப அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
இன்ஃபினிட்டியில் பெரிதாக வேலைப்படி நிலைகள் எல்லாம் கிடையாது.
தனித்திறன் தேவைபடும் வேலைகளைத் தவிர பொதுவான வேலைகளை எல்லோரும் பகிர்ந்தே செய்தனர். அங்கே வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் அங்கே பிசினஸ் எப்படி நடக்கின்றது என்று ஓரளவுக்கு அறிமுகமேனும் இருக்கும். அதனால் வேலையைத்தாண்டி தொழிலைக் கற்றுக்கொள்வதற்கும் நிறைய வாய்ப்பிருந்தது.
பிசினஸ் கற்றுக்கொள்வதற்காகவே வேலைக்கு சேர்ந்த அதிதி விடுவாளா..?
இழுத்துப்போட்டுகொண்டு முடிந்தவரை எல்லா வேலையும் பார்ப்பாள். ஒரு நாள் மார்கெட்டிங்கில் வேலை பார்ப்பாள், ஒரு நாள் எச்ஆராக மாறுவாள், ஒருநாள் ரிசப்ஷனிஸ்ட்டாகக்கூட இருப்பாள். இவ்வளவு ஏன் அவர்களது பாஸ் விக்ரமாதித்யாவே சிலநாள் இரவு நீண்ட நேரம் கண்விழித்து வேலை பார்க்க நேரும் போது எல்லாருக்கும் காஃபி போட்டு கொண்டுவரும் வேலையைக்கூட செய்வான். சின்ன கம்பெனியாக இருந்ததால் எல்லாருக்குள்ளும் ஒரு நல்ல பாண்டிங் இருந்தது.
அதனால் தான் பாஸிடம் பேச வேண்டும் என்றதும் எந்தவித பயமோ தயக்கமோ இல்லாமல் நேராக விக்ரமின் கேபின் கதவை லேசாக தட்டிவிட்டு.
“யெஸ்..” என்ற குரல் அனுமதி தந்ததும் உள்ளே சென்று
“குட் மார்னிங் பாஸ்” என்று அவன் முன் சகஜமாக நின்றாள்.
விக்ரம் எனும் விக்ரமாதித்யா..
நல்ல உயரம் உடற்பயிற்சியில் இறுகியிருந்த உடல், செவ்வக வடிய சிறிய கண்ணாடி சட்டத்திற்கு பின் இருக்கும் கூரிய விழிகள், அலைஅலையாக தோள்வரை படர்ந்து பளபளத்த அடர்ந்த கேசம், அமெரிக்காவில் இருந்ததாலோ என்னவோ முகத்தை க்ளீன் ஷேவ் செய்திருந்தான், அதுவே அவனது அளவெடுத்த அங்கங்களை எடுப்பாகக் காட்டியது. தனது லேப்டாப்பில் எதோ வேலையில் மூழ்கியிருந்தவன்,
நிமிர்ந்து இவளைப் பார்க்க அந்தப் பார்வையில் இருந்த தீட்சண்யம் அவனது அறிவாற்றலை பறைசாற்றியது.
மொத்தத்தில் ஆணழகன் என்றே கூறலாம். தனது இருபத்தெட்டு வயதில் சொந்த நிறுவனத்தை தொடங்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சக்சஸ்ஃபுல் யங் பிஸ்னஸ்மேன்.
விக்ரம் அதிதியைப் பார்த்ததும்..
“நாட் சோ குட் மார்னிங் அதி..சிட்..” என்றான். அவனது ஆங்கிலத்தில் மேற்கத்திய வாசம் வீசியது.
“என்னாச்சி பாஸ்..?” என்று கேட்டவாறு அமர்ந்தாள்.
“நம்ம இன்வெஸ்ட்டர்ஸ் ரெண்டு பேர் லாஸ்ட் மினிட்ல புல் அவுட் பண்ணிட்டாங்க..”
“வாட்..?” என்று அதிர்ந்தாள் அதிதி.
“அதுமட்டும் இல்ல.. ஒரு மெடிக்கல் எமர்ஜென்சினால பவித்ராவால இன்னிக்கு வரமுடியல..”
“ஐயோ பவி மேம்க்கு என்ன ஆச்சு..”
“பவிக்கு ஒன்னுமில்ல.. அவங்க அம்மாவுக்குதான் எதோ மெடிக்கல் எமர்ஜென்சியாம்.. சோ ஷி குட் நாட் கம்..”
“பவி மேம் வரலைன்னா ப்ரெசெண்டேஷன் யாரு பண்றது பாஸ்..?”
“நீதான்..”
“நானா..?”
“யெஸ்.. நீ பண்றியா..? அந்த ப்ரெசெண்டேஷன் ரெடி பண்ணதே நீதானே , நீ பண்ணாதான் நல்லாருக்கும், பவியும் அதான் சொன்னா..சோ நீயே பண்ணிடுறியா..?”
அதிதி திகைத்தாள். இந்த மாதிரி பெரிய லெவல் ப்ரெசெண்டேஷன் எல்லாம் அவள் செய்ததில்லை. அதுவும் கம்பெனியின் எதிர்காலமே இதில் அடங்கியிருப்பதால் தன்னால் எதுவும் சொதப்பிவிடுமோ என்று பயமாகவும் இருந்தது.
ஆனால் முதலாளியாக ‘செய்’ என்று கட்டளையிடாமல், ‘செய்ய முடியுமா..?’ என்று அவளது கருத்துக்கும் மதிப்பளித்து கேட்கும் போது மறுக்கவும் மனம் வரவில்லை.
“நான் பண்றேன் சார் ஆனா எதாவது சொதப்பிட்டா..?”
“டோண்ட் வொரி..ஐ வில் பி தேர்.. நான் ஹாண்டில் பண்ணிக்கறேன்..”என்று நம்பிக்கையூட்டினான் விக்ரம்.
“ஓகே சார்..நான் பண்றேன்..” என்றாள் குரலில் திடத்தை வரவழைத்து.
“குட்.. தட்ஸ் மை கேர்ள்.. நீ போய் பிரிபேர் பண்ணு..” என்றவனின் முகத்தில் நிம்மதி பரவியது.
சற்று சஞ்சலம் கொண்ட மனது கூட அவன் நிம்மதியை கண்டு சாந்தமடைந்தது.
விக்ரமிற்காக இதை நல்லபடியாக செய்தே ஆகவேண்டும் என்று தோன்றியது. அந்த அளவுக்கு அவள் அவனுக்கு கடமைப்பட்டிருப்பதாக நினைத்திருந்தாள்.
வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒருமுறை கிளையண்ட் மீட்டிங்கை மறந்து லேட்டாக வந்துவிட்டவளிடம் அந்த கிளையண்ட் கத்தத்தொடங்கிவிட்டார்.
“இதுதான் ப்ரோஃபஷனலிசமா..? புது கம்பெனிக்கு வாய்ப்பு குடுக்கலாம்ன்னு பார்த்தா இவ்ளோ பொறுப்பில்லாம இருக்கீங்க..இந்த வாய்ப்புக்காக வெளிய எவ்வளவு பேர் காத்துட்டு இருக்காங்க தெரியுமா.. டைமோட வேல்யூ தெரியாதவங்க கூட என்னால பிஸ்னஸ் பண்ணமுடியாது..இப்பவே உங்க ப்ரோஜெக்ட்ட கேன்சல் பண்றேன்..” என்று வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்க..
அதிதி செய்வதறியாமல் கண்ணீர் மல்க தலை குனிந்து நின்றாள்.. அப்போது விக்ரம் அங்கே வந்து அவளை வெளியே போக சொல்லிவிட்டு.. கிளையண்ட்டிடம் மன்னிப்புக்கேட்டு சமாதானம் செய்ய முயன்றான். ஆனாலும் அவர் ப்ரோஜெக்டை கேன்செல் செய்துவிட்டு சென்றுவிட அதிதி நிலை குலைந்து போனாள்.
அவ்வளவுதான்..எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் அவளை நம்பி கொடுத்தால் ஒரு மீட்டிங்கிற்கு கூட நேரத்திற்கு வராமல் இப்படி கம்பெனிக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டாளே..இனி இங்கே எனக்கு வேலையில்லை. கண்ட கனவெல்லாம் மண்ணாய் போச்சி..இனி வேறு எங்கும் வேலை கிடைக்குமோ என்னவோ..என்று மனம் சோர்ந்தவள் விக்ரமிடம் சென்று.
“சாரி சார்..”என்றுவிட்டு வேலையைவிட்டு வெளியேற தயாராக தலை குனிந்து நின்றாள்.
“மிஸ்டேக் எல்லாரும் பண்றது தான். ஆனா அதை திரும்ப நடக்காம பாத்துக்கறதுல தான் அவங்க கேரக்ட்டர் இருக்கு.. சோ இனிமே இப்படி பண்ணாத…” என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டான்.
அவளைக்கடிந்து ஒரு வார்த்தை பேசவில்லை. குரலை உயர்த்தவில்லை, ஆனால் அவள் இனி ஜென்மத்திற்கும் லேட்டாக வரக்கூடாது என்ற பாடத்தை மட்டும் கற்றுத் தந்துவிட்டான்.
இப்படிபட்டவனுக்காக நிச்சயம் இந்த ப்ரசெண்டேஷனை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும் என்று உறுதிபூண்டாள் அதிதி.
நேரம் ஆக ஆக அதிதிக்கு உள்ளுக்குள் பதைப்பாகவே இருந்தது.
மூன்று முதளீட்டாளர்களில் இருவர் பின் வாங்கிவிட, தற்போது “லிங்கா மெஷினரீஸ்..” என்ற ஒரு நிறுவனத்திலிருந்து மட்டுமே வந்திருந்தனர்.
“வந்துட்டாங்க .. வந்துட்டாங்க..” என்று எல்லாரும் பரபரப்படைய..
அதிதியின் கையில் பூங்கொத்தைத் திணித்து வரவேற்புக்கு போகும்படி யாரோ சொல்ல.. இவள் அவசரமாக வாயிலை நோக்கிப்போனாள்.
இருவர் மட்டுமே வந்திருக்க வந்தவர்களை வரவேற்ற விக்ரம் நடுத்தர வயதில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தான்..
பக்கத்தில் நின்ற அந்த இன்னொருவனை தலையுயர்த்திப் பார்த்த அதிதி உறைந்து நின்றுவிட்டாள்.
அவளை ஊடுருவி பார்த்தபடி அந்த இடத்தையே தன் உயரத்தால் குறுக்கிக்கொண்டு அவனுக்கே உரிய வசீகரத்துடன் நின்றிருந்தான் வசீகரன்.
error: Content is protected !!