Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 21

அத்தியாயம் 21 

காலையிலே மிகவும் பரபரப்பாக இருந்தது சௌந்தர் வீட்டில்.

“இந்தா ரம்யா இதைக் கொண்டு போய் சாமி ரூம்ல வை” என்று சுட சுட இருந்த சர்க்கரை பொங்கலை கொடுத்தார் மாலதி.



Advertisement

ரம்யாவும்  சென்று சாமி அறையில் வைத்தாள். அங்கே சௌந்தர் சாமி படங்களுக்கெல்லாம் பூ வைத்து தயார் செய்து கொண்டிருந்தார். சற்று நேரத்தில் முத்தாயியும் ஹிருதய்யும் வந்து விட்டனர்.

Advertisement

இன்று தான் முத்து தனியாக வாதாட இருக்கும் முதல் கேஸ். பொதுவாக பிராக்டிஸ் ஆரம்பித்து சில வருடங்களுக்கு ஜூனியர் வக்கீல்களை தனியே வாதாட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் முத்துவின் அசாதாரண திறமையை பார்த்து அவளை நம்பி இந்த கேசை கொடுத்திருந்தார் அவரது சீனியர். இன்று காலை பத்து மணிக்கு கோர்ட்டில் இருக்க வேண்டும் அதற்காகத்தான் கிளம்பி கொண்டிருக்கின்றனர்

Advertisement

“முத்து இன்னிக்கு கேஸும் சரி இனிமேல் நீ எடுக்க போற எல்லா கேஸ்களிலுயும் சரி, நீ தான் வெற்றி பெறணும்னு சாமியை நல்லா வேண்டிக்க” என்றார்  சௌந்தர்.

Advertisement

வழக்கம் போல் வாயாடாமல் முத்துவும் அமைதியாக கண் மூடி இறைவனை வேண்டிக் கொண்டாள். பிரேம், ரம்யா, மாலதி, ஹிருதய், முத்து அனைவரும் வேண்டிக்கொள்ள தீபாராராதனை காட்டினார் சௌந்தர்.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஹிருதய் முத்துவையும் அழைத்துக் கொண்டு இங்கே இவர்கள் வீட்டிற்கு வந்து விட்டான். கேஸ்  சம்பந்தமாக பிராக்டிஸ் செய்வதற்கு இங்கு இருந்தால் வசதி என்று கேட்காமலே புரிந்துகொண்டு அம்மா வீட்டிற்கு அழைத்து வந்த கணவன் மீது எப்பொழுதையும் போல அன்பு பொங்கியது பெண்ணுக்கு.

பின் இவர்கள் காலை உணவிற்கு அமர, புல்லட்டில் வந்து இறங்கினர் கந்தசாமி நித்யகல்யாணி இருவரும்.

நித்யகல்யாணி வரும் வழியில் மிரட்டி தான் அழைத்து வந்திருந்தார் தன் கணவனை,  “இங்க பாருங்க, எப்பவும் போல சண்டியராட்டம் உங்க புல்லட்டை முறுக்கிக்கிட்டு நிக்காதீங்க. முத்து அவ வீட்டுக்காரரோடு போகட்டும்” என்று.

பூம்பாவை, ஸ்ரீகாந்த், ஹாசினி மூவரும் காலையிலே அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

அனைவரும் தயாராகி வெளியே வரவும், நித்யகல்யாணி குடுகுடுவென ஓடி சென்று கந்தசாமியின் புல்லட் அருகில் நின்று கொண்டார்.

“ஏன் அப்பத்தா, நீயா வண்டிய ஓட்ட போற?” என்றாள் முத்து நக்கலாக

 

“இந்த வாயை எல்லாம் அங்க கோர்ட்ல காட்டு, இப்ப கிளம்பு” என்றார் அவரும் பதிலுக்கு.

“பாட்டி, நீங்க என்கூட கார்ல வாங்களேன் பாட்டி” என்றான் ஹிருதய்.

“ஏன், என் வீட்டுக்காரரோடு ஒரு நாள் நான் வரக்கூடாதா? ஒன்னு நீ போற இல்ல உன் பொண்டாட்டி போறா” என்றார் கடுப்பாக.

ஹிருதய் பாவமாக கந்தசாமி தாத்தாவை பார்த்தான்.

“பார்த்தியா என் மேல டீச்சருக்கு அம்புட்டு லவ்வு இதயா” என்றார் வெட்கப்படுவது போல.

தலையில் அடித்து கொண்டு, “சௌந்து, நான் உங்க கூடவே வரேன். நீ வண்டிய எடு..” என்று சென்று மகனின் காரில் அமர்ந்து கொண்டார். 

“நாங்க ரெண்டு பேரும் அத்தான் வண்டியில் வரோம்” என்று ரம்யாவும் ப்ரேமும் ஹிருதய்யின் காரில் ஏறிக்கொள்ள, மாலதி சௌந்தர் வண்டியில் ஏறிக்கொண்டார்.

மனைவியின் ஆசையை புரிந்து கொண்டு, முத்துவை அவன் தான் தாத்தவுடனே  வருமாறு கூறி இருந்தான்.

இப்படியாக இவர்கள் கோர்ட்டுக்கு வந்து சேர்கையில், மதுரையில் இருந்து ஒரு கூட்டம் ஏற்கனவே அங்கே காத்து கொண்டிருந்தது.

“என்ன முத்து, இவைங்க எப்ப வந்தானுங்க?” என்றார் கந்தசாமி அதிர்ச்சியாக.

கையில் மாலையோடு காத்துக்கொண்டிருந்தவர்களை பார்த்து 

“என்னத்த அய்யா சொல்றது. ஒன்னும் பண்ண முடியாது.. இவங்க பாட்டு ஆர்வ கோளாறில் கையெல்லாம் தட்டி என் முதல் கேஸை கடைசி கேஸ்ஸா மாத்தாம இருந்தா சரிதான்”

வழக்கம் போல ஹிருதய் இவர்களின் பாசத்தில் மிரண்டு ப்ரேம் ரம்யாவுடன்  அமைதியாக நின்றுகொண்டான்.

அங்கே இருந்த போலீஸ், “இன்னிக்கு அப்படி என்னய்யா கேஸ்? எதுக்கு இவ்வளவு கூட்டம்?” என்று பேசிக்கொண்டார்கள்.

“இன்னிக்கு எல்லாம் சின்ன சின்ன நில தகராறு கேஸ் தான்.. அதுவும் யாரும் பெரிய ஆட்கள் எல்லாம் தலையிடற மாதிரி தெரியலையே”  

“அப்புறம் ஏன் கூட்டம் ன்னு விசாரிச்சுட்டு வாய்யா..”

அந்த அளவிற்கு ஆர்பாட்டமாக இருந்தது அங்கே.

“டீச்சரு .. டீச்சரு..”  என்று குரல் கொடுத்தார் கந்தசாமி.

நித்யகல்யாணி எட்டி பார்க்கவும், “உன்னை இல்ல, கணக்கு டீச்சர்” என்றதும் பல்லைக்கடித்து அவரை முறைத்து பார்த்தார்.

“என்ன மாமா?” என்றார் மாலதி.

“டீச்சரு, உங்க அப்பாவை எங்க காணும்?”

“அம்மா, அண்ணனுங்க, அண்ணிங்கன்னு இவ்வளவு பேர் வந்திருக்காங்க. எங்க அப்பாவை எதுக்கு கேட்குறீங்க. அப்பா வரலை” என்றார் சூடாக.

“அவர் இல்லைன்னா இந்த கும்பலை சமாளிக்கிறது கஷ்டமாச்சே?” என்றார் பேத்தியிடம். மெல்ல எல்லாம் இல்லை, உரக்கத் தான் கூறினார்.

மாலதி கணவரை பாசமாக பார்க்கவும், அவர் “முத்து நீ உள்ளே போம்மா.. நான் எல்லாரையும் கூட்டிட்டு வரேன்” என்று முதலில் முத்துவை உள்ளே அனுப்பினார்.

அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு உற்சாகமாகவே சென்றாள்.

முதலில் இத்தனை பேர் உள்ளே செல்ல முடியாது என்று கூறி விட்டனர். ஹிருதய் முன்தினமே வந்து குடும்பத்தார்கள் பார்ப்பதற்காக அனுமதி கடிதம் வாங்கி வைத்திருந்தான். அதை காட்டவும்,

“ஏன் சார் குடும்பம்னாலும் ஒரு நியாயம் வேணாமா சார்?” என்றார் அந்த காவலாளி பாவமாக.

“இப்ப இதுல யாரையாவது நீ குடும்பத்துல ஒரு ஆள் இல்லைன்னு சொன்னேன்னு வை, அப்புறம் இங்கேயே வழக்கு பதிய வேண்டியதா போயிடும். கொஞ்சம் பார்த்து செய்” என்றார் கந்தசாமி அவரது நக்கல் பாணியில்.

“யாரும் சத்தம் எல்லாம் போட கூடாது” என்று மிரட்டியே காவலாளி இவர்களை உள்ளே அனுமதித்தார்.

முத்துவுடையது தான் முதல் கேஸ் அன்று.

கூட்டத்தை பார்த்து, ஜட்ஜ் ஏன் இவ்வளவு கூட்டம் என்று குழப்பமாக தான் அமர்ந்தார்.

அன்றைய வழக்கு என்னவென்றால், ஒரு குடும்பத்தில் மூன்று ஆண் பிள்ளைகள். சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களது தந்தை தனது மூன்று விவசாய நிலங்களையும் மூன்று மகன்களுக்குப் பிரித்து கொடுத்து இருந்தார்.

இப்பொழுது அதில் கடைசி மகன் காதல் கலப்பு மணம் செய்து கொண்டு விட்டான். அதில் குடும்பத்தார் அனைவருக்கும் கடுங்கோபம். அவனுக்கு கொடுத்த நிலத்தை திருப்பி கேட்டே இந்த வழக்கு.

முத்தாயி இளைய மகன் சார்பாக வழக்காடுகிறாள்.

“மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே.. இந்த சொத்து எனது கட்சி காரரின் சுய சம்பாத்தியம். அதனால் அவர் விருப்பப்படி அவர் யாருக்கு வேண்டுமானலும் கொடுக்கும் முழு உரிமை உள்ளது. குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்ததால் அவர் இளயமகனுக்கு இந்த நிலத்தை கொடுக்க விரும்பவில்லை. அதனால், இந்த நிலத்தை மீண்டும் என் கட்சி காரருக்கு கொடுத்துவிட்டு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்” என்று  தன் வாதத்தை முடித்தார் எதிர்க்கட்சி வக்கீல்.

அடுத்து முத்தாயி  தன்  வாதத்தை முன் வைத்தாள்.

“மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே, நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். இது இவருடைய சுய சம்பாத்தியம் தான் என்று. ஆனால் அவர் அதை அவர் சுயசிந்தனையோடு தானே எனது கட்சி காரர் பெயருக்கு மாற்றிக்கொடுத்திருந்தார். சட்டப்படி இப்பொழுது அந்த நிலம் எனது கட்சி காரர் பெயரில் உள்ளது. அதற்கான டாக்குமெண்ட்ஸ்” என்று அதை சமர்ப்பித்தாள்.

இரு வழக்கறிஞர்களும் மாறி மாறி தங்கள் வாதத்தை வைத்தனர்.

“வயதான பெற்றோர்கள் மனதை நோகடித்து, அவர்கள் சொத்தில் வாழ்வது சரி இல்லை. அதுவுமில்லாமல் பெற்றோர்களை கை  விட்டால், பெற்றோர்கள் சொத்தை திரும்ப பெறலாம் என்று சட்டம் உள்ளதே”

“என் கட்சி காரர் பெற்றோரின் பொறுப்பை தட்டி கழிக்கவே இல்லையே. அவர் அவங்களை பார்த்துக்க தயாராத்தான் இருக்கிறார்”

“அப்பா அம்மாவை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு பார்த்துகிறேன்னு சொன்னா ஆகுமா?”

“அவங்க ரெண்டு பேரும் மேஜர் சார். மனசுக்கு பிடிச்சவங்களை கல்யாணம் செய்துகிறது தப்புன்னு சட்டம் சொல்லலியே?”

“அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால அவர் தன் மனைவியுடன் தனியாவே வாழலாம்னு முடிவு செஞ்சிருக்காரு. இந்த இடத்தை திருப்பி கொடுத்திட்டா, அதை வித்து வர பணத்தை வச்சு அவங்க வழியை பார்த்துகிறதா சொல்றாங்க நீதிபதி அவர்களே..”

“பெரியவர்களை அழைத்து உங்கள் விருப்பம் என்ன?” என்று வினவினார் நீதிபதி.

“எங்களை எதிர்த்து கீழ் ஜாதி பொண்ணை கட்டிக்கிட்டது எங்களுக்கு விருப்பமில்லைங்க.. இந்த இடத்தை திருப்பி கொடுக்க சொல்லுங்க..”

“நான் இவங்களை சில கேள்விகள் கேட்க விரும்புறேன் நீதிபதி அவர்களே”

“அனுமதி வழங்கப்படுகிறது”

“அய்யா, உங்களுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைங்க..”

“மூனு பிள்ளைங்க.”

“இத்தனை வருஷமா யார் கூட இருக்கீங்க?”

“அவன் அந்த பொண்ணை கல்யாணம் செய்றதுக்கு முன்ன வரைக்கும், நானும் என் சம்சாரமும் சின்ன பையனும் ஒன்னா இருந்தோம்..”

“அப்ப, நீங்க தான் அவரை பார்த்துக்கிட்டீங்க?”

“ _____ ”

“பதில் சொல்லுங்க “

“உண்மையை சொல்லணும்னா அவன் தான் எங்களை பார்த்துக்கிட்டான்”

என்றார் அந்த பெரியவரின் மனைவி தயங்கிய குரலில்.

“மத்த பசங்க வீட்டுக்கு?”

“அவ்வளவா போக மாட்டோம்ங்க..”

“உங்களுக்கு வருமானம்?”

“இப்ப கேஸ் போட்டிருக்க நிலத்தில் விவசாயம் பார்க்கிறதுல இருந்து தான்..”

“அப்ப உங்க சின்ன பையன் தான் அவர் நிலத்தில இருந்து விவாசாயம் பார்த்து அவர் வருமானத்தை உங்களுக்கு கொடுத்திருக்காரு?”

“————”

“இப்ப அந்த நிலத்தை திரும்ப வாங்கி, நீங்க விவசாயம் பார்க்க போறீங்களா?”

“அப்ஜெக்ஷன் நீதிபதி அவர்களே, இது இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாதது நீதிபதி அவர்களே. அவர் என்ன வேணாலும் பண்ணுவாரு..”

“அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்.”

“நீங்க பதில் சொல்லுங்க அய்யா”

“பெரிய பசங்க ரெண்டு பேரும் அந்த நிலத்தை எடுத்துகிட்டு எங்களுக்கு ஒரு பங்கு காசு கொடுக்கிறதா சொன்னாங்க..”

“அப்ப சின்ன பையனுக்கு கொடுத்ததை திரும்ப உங்க மத்த பசங்களுக்கு கொடுக்க போறீங்க?”

“எனக்கு அந்த பிள்ளைய கட்டிக்கிட்டது பிடிக்கலை.. அம்புட்டுத்தேன்”

“ஓரளவுக்கு இந்த வழக்கின் பாதை தெரிந்துவிட்டது நீதிபதி அவர்களே. கடைசியாக நான் சில படங்களை காட்ட விரும்புகிறேன், அதுக்கு உங்க அனுமதி வேண்டும் நீதிபதி அவர்களே”

“அனுமதி வழங்கப்படுகிறது”

திரையில் செழிப்பாக இருந்த வயல் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சி அளித்தது.

“இது எந்த இடம்னு தெரியுதுங்களா பெரியவரே?”

“எங்க இடம் தான்.. அது மேலே தான் வழக்கு”

“அடுத்து இது என்ன இடம்னு தெரியுதா பாருங்க” என்று இரண்டு புகைப்படங்களை காட்டினாள்.

ஒன்றில் அடுக்கு மாடி கட்டிடம்.. 

மற்றொன்றில் ஒரு ரைஸ் மில்..

“பெரிய பசங்களோடது..”

“அவங்களுக்கு வயல் கொடுக்கலையா?”

“வயலாத்தான் கொடுத்தேன். அவங்க வசதிக்கு மாத்திக்கிட்டாங்க”

“உங்களுக்கு அதுல வருத்தமோ கோவமோ கிடையாதா?”

“வருத்தந்தேன்.. ஆனா அவங்க இஷ்டம்ன்னு விட்டுட்டேன்”

“உங்களுக்கு விவசாயம்னா என்ன? அது பத்தி உங்க கருத்து”

“அது நான் கும்பிடற சாமி போல.. “

“அப்ப நீங்க கும்பிடற சாமியவே மதிக்காம, அதை அழிச்சு அதுல கட்டடம் கட்டுன உங்க பெரிய பிள்ளைங்களை உங்களால மன்னிக்க முடியுது. ஆனா வேற ஜாதி பொண்ணை கட்டிக்கிட்ட ஒரே காரணத்துக்காக உங்க சின்ன பையனை மன்னிக்க முடியலை. அப்படித்தானே?

அப்ப கும்பிடற சாமியை விட ஜாதி பெருசுங்களா?”

பெரியவர் வாயடைத்து போய் விட்டார் முத்துவின் கேள்வியில்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முத்தாயியின் குடும்பம் பெருமையாக அவளை பார்த்து கொண்டிருந்தது.

அந்த இடத்தை ஒரு பேக்டரி கட்டுவதற்காக கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்கனவே நல்ல விலைக்கு பேசி முடித்திருந்தனர் பெரிய பிள்ளைகள்.

அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தாள்.

பெரியவருக்கே இது புது தகவல்.

“இது உங்களுக்கு தெரியுமா அய்யா? அந்த இடத்துல இந்த தொழிற்சாலை வந்துச்சுனா, அங்கே ஒரு புல் கூட இனி வளர வாய்ப்பில்லாமல் போயிடும்.

உங்களுக்கு பிடிக்காத பொண்ணை கல்யாணம் செஞ்சுதுக்காக  உங்களுக்கு பிடிச்ச விவசாயத்தை கொல்ல போறீங்களான்னு நீங்க தான் முடிவு செய்யணும் “ என்றாள் முத்து பெரியவரிடம்.

“நீதிபதி அவர்களே, இது எமோஷனல்லா  பேச டிவி சீரியல்லா? தீர்ப்பு சொல்ல நீங்க இருக்கும் போது எதிர் கட்சி வக்கீல் அம்மா அவங்களே தீர்ப்பு சொல்றாங்களே?”

“இப்ப என்னை கேள்வி கேட்கறது நீங்க தான் சார். விவசாய நிலங்களை சொந்த உபயோகத்திற்கு பயன் படுத்தியதற்காக மத்த இரண்டு மகன்கள் மீதும் வழக்கு பதியுமாறு இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.” என்று நீதிபதி கூறியதை கேட்ட இருவரும் அதிர்ந்து எழுந்து விட்டனர்.

வட்டிக்கு ஆசைப்பட்டு முதுலுக்கே நஷ்டம் ஆயிடுச்சே என்று விக்கித்து போயினர்.

“இந்த நிலத்தை இப்பொழுது உள்ளதை போல சிறிய மகனிடமே ஒப்படைக்கிறது. ஆனால் மாதந்தோறும் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை பெரியவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். மற்ற படி சேர்ந்து வாழ்வதும் தனி தனியே வாழ்வதும் அவரவர் விருப்பம் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது” 

“நன்றி நீதிபதி அவர்களே”

கோர்ட் வெளியே வந்ததும், வெடி வெடித்து கொண்டாடினார்கள் முத்தாயியின் மாமன்காரர்கள். முத்தாயியிக்கு மாலை வேறு அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அனைவருக்கும் மகிழ்ச்சியே!!!

முத்துவை கடுமையாக முறைத்து கொண்டு நின்றனர் அந்த பெரியவரின் பெரிய மகன்கள் இருவரும்.

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு முன்னே சென்று நின்றனர் பாசமுள்ள மாமன்காரர்கள்.

இவர்களது தோற்றத்தையும் அவர்கள் நின்ற விதத்தை பார்த்ததும், அவர்கள் ஓடியே போய் விட்டார்கள்.

“இப்ப புரியுதா எங்க அண்ணன்களின் அருமை” என்று நொடித்து கொண்டார் மாலதி கந்தசாமியை பார்த்து.

“ஆமா தெரியுதே அருமை பெருமை எல்லாம்.. நானும் இதயாவும் சொல்லாட்டி உங்களை எல்லாம் கோர்ட் உள்ளேயே விட்டிருக்க மாட்டாங்க..” 

“உக்கும் “

பிறகு அனைவரையும் அங்கேயே பக்கத்தில் உள்ள உணவகத்திற்கு அழைத்து சென்றனர்.

உணவு முடித்துக்கொண்டு மீண்டும் முத்துவிற்கு வாழ்த்து கூறி விடைபெற்றனர் மதுரை குரூப்.

“முத்து, இந்த கேஸ்க்கு உனக்கு வர காசை விட பத்து மடங்கு செலவாயிடுச்சு இப்ப” என்றார் கந்தசாமி கவலையாக ஹோட்டல் பில்லை கட்டிக்கொண்டே.

“பாவம் தாத்தா, மாலை, பட்டாசு  எல்லாம் வாங்கிட்டு நமக்காக தானே வந்தாங்க.. நான் காசு கொடுக்கிறேன்” என்று முன் வந்தான் ஹிருதய்.

“விடுங்க தயா, அது எல்லாம் அய்யா பார்த்துப்பாங்க” என்றாள் முத்து சிரித்துக்கொண்டே.

“இந்த சில்லறை கேஸ் எல்லாம் இனி எடுக்காத முத்து, நாம ரெண்டு நிமிஷத்துல முடிக்கிற பஞ்சாயத்துக்கு எவ்வளவு அக்கப்போரு” என்றார் கந்தாசாமி பேத்தியிடம் மீண்டும்.

“நீங்க வாங்க அத்தான், நாம கிளம்புவோம். அய்யாவுக்கும் பேத்திக்கும் நாம் நிக்கிறது எல்லாம் தெரியாது” என்று ஹிருதய்யை இழுத்து சென்றான் ப்ரேம்

“நானும் அதான் அய்யா முதல்ல யோசிச்சேன்.. ஆனா நானும் வக்கீல் தான்னு நிரூபிக்க இப்படி ஒரு பத்து கேஸ் எடுக்கணும். அப்புறமா தான் பெரிய கேஸ் கொடுப்பாங்க”

“அட கொடுமையே? சரி சரி பார்த்துப்போம் விடு.”

பேசிக்கொண்டே இருவரும் புல்லட்டில் வீட்டிற்கு வந்தனர்.

கோர்ட்டில் நடந்ததை எல்லாம் ரம்யா ஹாசினியிடம் தெரியப்படுத்தினாள் 

பிறகு ஹாசினி மூலம் சென்னையில் ஒலிபரப்பப்பட்டது.

ப்ரதமேஷுக்கும் சுசீலாவிற்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது. இப்பொழுது சுசீலா மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். 

இரவு அனைவரும் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.இரவு உணவையும் அங்கேயே முடித்து விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பினார்கள் முத்துவும் ஹிருதய்யும்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவியை இறுக்கி அனைத்துக் கொண்டான்.

“வாழ்த்துக்கள் என் செல்ல பொண்டாட்டியே” என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

“உன்னை பிடிக்க எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கே” என்றான் கொஞ்சம் வருத்தமாக.

“நானும் தான், நேரம் ஆக ஆக எப்படா வீட்டுக்கு வருவோம்னு ஆயிடுச்சு” என்று கூறிக்கொண்டே சலுகையாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“உங்களுக்கு உப்பு மூட்டை தூக்க தெரியுமா” என்றாள் தீடீரென்று.

“சின்ன பசங்களை முதுகுல தூக்கிறதா?”

“ஏன் என்னை எல்லாம் தூக்க மாட்டிங்களா?”

அவன் திரு திரு என முழிக்கவும்,

“முயற்சி செஞ்சு தான் பாருங்களேன்..” என்றாள் கொஞ்சலாக.

“கண்டிப்பா தூக்கணுமா முத்து” என்றான் கவலையாக.

“எனக்கு நீங்க அப்படி என்னை தூக்கணும்னு ரொம்ப நாளா ஆசை, ப்ளீஸ்” என்றாள் கண்கள் சுருக்கி கெஞ்சலாக.

அதன் அழகில் மயங்கி இவனும் தூக்கினான்.

“ஹேய்ய்… அப்படியே ஊஞ்சல் கிட்ட போங்க.. அப்புறம் இறக்கி விட்டுடுங்க..” என்றாள் மகிழ்ச்சியாக.

இரண்டு எட்டு தான் எடுத்து வைத்திருப்பான்.

“அய்யோ அம்மா” என்று கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டான். அவன் மேலே அவளும் கவிழ்ந்து விழுந்து வைத்தாள்.

கீழே விழுந்ததில் இடுப்பு சுளுக்கி விட்டது ஹிருதய்க்கு.

தட்டி தடுமாறி முத்து முதலில் எழுந்து பின் அவனை எழுப்ப முயற்சித்தாள்.

“முடியலை முத்து வலிக்குது..”

என்ன செய்வது என்று ஒரு நிமிடம் முத்துவிற்கே புரியவில்லை.

“தயா.. நான் வேணா உங்களை உப்பு மூட்டை தூக்கிட்டு போகவா” என்றாள் கணவனிடம் பம்மிக்கொண்டே.

“பேசாம போயிடு அரிசி மூட்டை” என்றான் ஹிருதய் கடுப்பாக.

“என்னது அரிசி மூட்டையா?”

“பின்ன , நீ என்ன உப்பு மூட்டை மாதிரியா இருக்க? சரியான அரிசி மூட்டை”

என்றான் வலி தாங்காமல். 

வேறு வழி இல்லாமல் கந்தசாமிக்கு அழைத்து விஷயத்தை கூறினாள் முத்து.

“சரி சரி நான் வரேன்..” 

பின் கந்தசாமி வந்ததும் இருவரும் சேர்ந்து அவனை கைத்தாங்கலாக தூக்கி காரில் ஏற்றி, கார்மேகம் தாத்தாவிடம் அழைத்து சென்றனர்.

தாத்தா எண்ணை வைத்து வலித்து விட்டு சுளுக்கை எடுத்து விட்டார். அரைமணி நேரம் அங்கேயே ஓய்வாக இருந்துவிட்டு கிளம்புமாறு கூறினார்.

மாணிக்கவல்லி பாட்டி தான் முத்துவை முறைத்துக்கொண்டிருந்தார்.

“அய்யா, கிழவி டீச்சர் கிட்ட போட்டு கொடுத்திடும் போலயே?”

“நாம ஏதாவது சொன்னா வீம்புக்குன்னே போட்டு கொடுத்திடும்.. நீ இதயாகிட்ட பக்குவமா சொல்ல சொல்லு” என்றார் அவர் பதிலுக்கு.

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ஹிருதய்க்கு சிரிப்பு வந்து விட்டது. ரெண்டும் கேடிங்க என்று நினைத்துக்கொண்டு, 

“பாட்டி, வீட்ல அத்தை, பாட்டிகிட்ட எல்லாம் சொல்லாதீங்க, எனக்கு சங்கோஜமா  இருக்கு” என்று கூறினான்.

“இதுல என்ன கண்ணு இருக்கு.. நாங்க சொல்ல மாட்டோம்.. நீ சங்கடப்படாதே” என்றார் கார்மேகம் அவனை பார்த்து வாஞ்சையாக.

“உக்கும், இந்த புள்ளய பார்த்து கத்துக்கோங்க.. அவன் பொண்டாட்டிய காப்பாத்த அப்படி சொல்றான்” என்று கணவரிடம் நொடித்துக் கொண்டார் பாட்டி.

“அது எனக்குத் தெரியதாக்கும். நீ உடனே உன் பொண்ணுக்கு போன் போட்டு ஒன்னும் சொல்ல வேண்டாம் புரியுதா? சின்னஞ் சிறுசுங்கன்னு கண்டும் காணாமலும் இருக்க மாட்டீங்களே” என்றார் தாத்தாவும் பதிலுக்கு.

எப்பொழுதையும் போல முத்தாயியும் கந்தசாமியும் ஹிருதய்யையே கண்ணெடுக்கமால் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

முத்து வானளவு  காதலோடு.. கந்தசாமி கடலளவு பாசத்தோடு..

அதை பார்த்துக்கொண்டிருந்த பாட்டி வேகமாக உள்ளே சென்று ஒரு கை கல் உப்பை கொண்டு வந்து ஹிருதய்க்கு சுத்தி போட்டார்.

“பிள்ளைகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பனங்கற்கண்டு பால் கொண்டு வா மாணிக்கம்” என்றார் கார்மேகம் தாத்தா.

பின் மூவரும் பாட்டி கொடுத்த பாலை அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!