Skip to content
Post Views: 1,617

அத்தியாயம்-17
வசீகரன் இன்ஃபி டெக்கில் முதலீடு செய்வது உறுதியானது. ஆனால் கான்ட்ராக்ட் விவரங்கள் மற்ற விஷயங்கள், எல்லாம் அடுத்தடுத்த சந்திப்புகளில் தீர்மானிக்கப்படும் என்று முடிவானது.
முதலீட்டாளர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததைக்கொண்டாட அன்று மாலை அனைவருக்கும் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டலில் டின்னர் ஏற்பாடு செய்திருந்தான் விக்ரம்.
Advertisement
பெரிய பார்ட்டி ஹாலில் புஃபே முறை உணவு இருந்தது.ஒரு சிலர் அங்கே இருந்த உணவு வகைகளை ஆராய்ந்துகொண்டிருக்க, இன்னொரு புறம் காலேஜ் மாணவர்கள் எதோ கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்க, ஆட்டம் பாட்டம் என்று அமளி துமளியாக இருந்ததை ஆவலுடன் வேடிக்கைப் பார்த்தபடி ஒருசிலர் அந்தப்பக்கமாக குழுமியுருக்க,
இதில் எதிலும் நாட்டம் இல்லாமல் அதிதி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்.
அங்கே சற்று தள்ளி அமர்ந்திருந்த வசீகரனும் விக்ரமும் எதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
Advertisement
பார்க்க பார்க்க இருவரது உருவ ஒற்றுமையும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
Advertisement
ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்று கூட இல்லை உடன் பிறந்தவர்கள் என்றே கூறிவிடலாம் அப்படி இருந்தனர் இருவரும்.
இவள் தன்னை மறந்து அவர்கள் இருவரையே பார்த்திருக்க..
“அதி.. ட்ரை திஸ்..” என்று கையில் ஜூஸ் கிளாஸுடன் வந்து அவள் அருகில் அமர்ந்தான் ரிஷி..
Advertisement
அவள் அந்த பானத்தை சந்தேகமாக நோக்க..
“என்ன அப்படி பாக்குற..? வெறும் கொய்யா ஜூஸ்தான்மா.. நான் என்ன உனக்கு டிரக்ஸ் ஆ குடுக்க போறேன் இப்படி சந்தேகமா பாக்குற..?”
“அதில்ல சைடுல என்னமோ ரெட் கலர்ல தடவி இருக்கே அதான் கொஞ்சம் டவுட்டா இருக்கு..”
“அது வெறும் மொளகாத்தூளும் உப்பும்தான், இது ஸ்பைசி சில்லி ஜூஸ்.. குடிச்சிப்பாரு நல்லா இருக்கும்..”
அதிதி முன் அனுபவத்தினால் சற்று தயக்கத்துடனே பட்டும் படாமலும் கொஞ்சமாக அருந்தினாள். சட்டென்று காரம் உச்சிக்கு ஏற அதே சமயம் மிதமான இனிப்பும் நாவைத்தாக்க ஒரு புதுவகையாக சுவையுடன் அவளுக்கு பிடித்திருந்தது.
அவள் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு அதில் தெரிந்த மாற்றம் திருப்தியாக இருக்க.
“சொன்னேன்ல நல்லா இருக்கும்ன்னு..” என்று பெருமையடித்தான்.
“என்னமோ நீதான் இந்த ஜூஸையே கண்டுபுடிச்ச மாதிரி சீன் போடாத ரிஷி..” என்று கூறி சிரித்தாள் அதிதி.
“என்ன அதிதிக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பா இருக்கு.. நாங்கல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா..?” என்று இடைப்புகுந்தாள் ஜனனி..
ரிஷி அதிதியை இம்ப்ரெஸ் செய்ய தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதும் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அதிதி அவனிடம் சாதாரணமாக நடந்து கொள்வதும் ஆபீஸில் அனைவரும் அறிந்ததே..அதை வைத்து அவனைக் கிண்டல் கேலி செய்வதும் வழக்கமாக நடக்கும்.
“ஆமா அதிதி தான் இன்னிக்கு ஸ்டார் பர்ஃபாமர்.. லாஸ்ட் மினிட்ல ஸ்டெப் இன் பண்ணி ப்ரெசெண்டேஷன சக்சஸ்ஃபுல்லா முடிச்சி நம்ம கம்பெனிக்கு எவ்ளோ பெரிய இன்வெஸ்மெண்ட்ட கொண்டு வந்திருக்கா.. அதனால அவ ஸ்பெஷல்தான்..” என்று மூச்சுவிடாமல் பேசினான்.
“போதும் போதும் தண்ணியக் குடி.. தண்ணியக்குடி..” என்று சமாதானம் செய்வது போல் காலை வாரினாள் லிடியா.
“அங்க பாரேன்.. நம்ம பாஸும் வசியும் ஒன்னா உக்காந்திருக்கறத பார்க்க எவ்ளோ கண்கொள்ளாக் காட்சியா இருக்கு.. சூரியனும் சந்திரனும் சேர்ந்தாப்புல பார்க்கற மாதிரி.. யாரைப் பார்கறதுன்னே தெரியல.. ரெண்டு கண்ணு பத்தல..” என்று கண்ணைவிரித்தாள் ஜனனி..
அவளின் வசி என்ற அழைப்பு அதிதிக்கு எரிச்சலூட்டியது.
“ஆனாலும் வசீகரன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகுதான் பியர்டு லுக்ல பாலிவுட் ஹீரோ மாதிரி இருக்காரு..” என்று லிடியா கண்களில் ஹார்ட்டின்விட
“என்ன இருந்தாலும் நம்ம பாஸை என்னால விட்டுக்குடுக்க முடியாது.. நோ பியர்ட் லுக்ல ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்காரு..” என்று ஜனனி இன்னொரு பக்கம் வழிய,
கேட்டுக்கொண்டிருந்த அதிதிக்கு உடலெல்லாம் எரிவது போல் இருந்தது..
அவள் எழுந்து போகலாம் என்று நினைத்த சமயம் பக்கத்தில் டீஜே லேட்டஸ்ட் ஹிட் பாடல் ஒன்றை போட எல்லோரது கவனமும் அந்த பக்கம் திரும்பியது..
“ஹே வாங்க ஹூக் ஸ்டெப் போடலாம்..” என்று மூவரும் கிளம்ப.. அதிதி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டு..
‘அப்பாடா’ என்ற பெருமூச்சுடன் புஃபே உணவை ஆராய சென்றாள்.
நிறைய உணவிருந்தும் எதை சாப்பிடவும் விருப்பம் வரவில்லை அவளுக்கு..
கொஞ்சம் ஜூஸும் கேக்கையும் மட்டும் தட்டில் வைத்துக்கொண்டு மூலையில் இருந்த டேபிளில் அமர்ந்தாள்.
அப்போது அவள் அருகில் வந்து அமர்ந்த வசீகரன் அவள் கையிலிருந்த ஜூஸை வாங்கி முகர்ந்து பார்த்தான்.
“என்ன பண்றீங்க..?” என்றாள் அதிதி கடுப்புடன்.
“இல்ல ஆரஞ்ச் ஜூஸ்ல ஓட்காவ கலந்து குடிச்ச மாதிரி.. இந்த ஜூஸ்ல டக்கீலாவ கலந்து அடிக்கிறியோன்னு பார்த்தேன்.”
அவள் அவனை எரித்துவிடுவது போல் பார்த்து..
“நான் இன்னும் அவ்ளோ ஏமாளியா ஒன்னும் இல்ல..” என்றாள்.
“அப்டியா..? இப்ப நீ சாப்ட்ட கேக்ல கூட ஒயின் மிக்ஸ் பண்ணி இருக்கு அதையும் தெரிஞ்சிதான் சாப்பிடுறியா..?” என்று அவன் கண்களை விரித்து கேட்க..
வாயில் வைத்த கேக்கை விழுங்குவதா இல்லை துப்புவதா என்று தெரியாமல் அவள் விழிக்க..
“ஹே.. ச்சில்..சும்மா சொன்னேன். அது நார்மல் கேக் தான்.. சாப்டு..” என்று அவளை ஆசுவாசப்படுத்தினான்.
அவளுக்கு பொங்கிய கோபத்தில் அவன் முடியைப்பிடித்து உலுக்கவேண்டும் என்று எழுந்த உந்துதலை முயன்று அடக்கிக் கொண்டிருக்கையில்
“ஆமா கொஞ்சம் முன்னாடி உன் பக்கத்துல உக்காந்திருந்தானே யாரு அவன்?” என்று விசாரித்தான்.
“அதை ஏன் நீங்க கேக்குறீங்க?”
“இல்ல கவனிப்பெல்லாம் பலமா இருந்ததே அதான் ஒருவேளை பாய்ஃப்ரண்ட்டான்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு கேட்டேன்..”
“அதை ஏன் நீங்க தெரிஞ்சிக்கனும்..?”
“சும்மா ஒரு கியூரியாசிட்டிதான்..”
“என்னோட பர்சனல் விஷயத்துல நீங்க ஒன்னும் கியூரியஸ் ஆகவேண்டாம்..” என்றாள் வெடுக்கென்று..
“ஓ சாரி..பர்சனல் விஷயம்ல்ல.. புரியுது.. கேட்டிருக்க கூடாது என் தப்புதான்..” என்று அவன் அதுவரை இருந்த இலகுதன்மை போய் வேறு யாரோப்போல் சொல்லவும் அவளுக்கு திக்கென்றது.
‘ஒருவேளை நானும் ரிஷியும் டேட் பண்றோம்ன்னு நெனைச்சிக்குவானோ.. அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லிவிடலாமா..’ என்று மனதில் ஒரு தடுமாற்றம் தோன்றியது..
“ரிஷி என்னோட கோலீக் கம் ஃப்ரண்ட் அவ்ளோதான்..” என்று சாதாரணமாகக் கூறுவது போல் விளக்கம் கொடுத்தாள்.
‘மண்ணாங்கட்டி ஃப்ரண்டு.. அவன் கண்ணுலயே ஹார்ட்டின் விடுறான் அதுகூட தெரியல.. அவன்கிட்ட சிரிச்சி சிரிச்சு பேசுறா ஆனா என்கிட்ட மட்டும் உர்ருன்னு மூஞ்சிய காட்டுவா..’ என்று உள்ளுக்குள் புகைந்தவன்..
“ஐயோ நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் மேடம்.. நான் கேட்டது தான் தப்பு..” என்று அவன் இன்னும் ஒதுக்கத்துடன் பேசவும். அதிதிக்கு வலித்தது..
அவள் அவன் மீது எரிந்து விழுவதும் அதை அவன் பெரிதுபடுத்தாமல் கேலியும் கிண்டலுமாக அவளை சீண்டுவதையும் அவளால் பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் அவன் இப்படி அன்னியப்பட்டு போய் நிற்பதை ஏனோ அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயம் அவனை எப்படி சாதாரணமாக பேசவைப்பது என்றும் அவளுக்கு தெரியவில்லை.
அவள் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே ஆபத்பாந்தவனாக..
“இஃப் யூ டோண்ட் மைண்ட் மே ஐ ஜாயின் யூ..?” என்று கேட்டபடி அங்கே வந்து சேர்ந்தான் விக்ரம்..
வசீகரனிடம் அடுத்து என்ன சொல்லுவது என்று குழம்பிப்போய் இருந்தவளுக்கு அப்பாடா என்றிருந்தது..
“யப்பா.. உசிதமணி.. உக்காரு பெருசா பர்மிஷன்லாம் கேட்டுட்டு இருக்கான்..” என்றான் வசீகரன் அவன் முதுகில் லேசாக தட்டியபடி..அவன் முகம் இயல்புக்குத் திரும்பியிருந்தது.
“டேய் சும்மா இருடா.. என் ஸ்டாஃப் முன்னால என்னை இன்சல்ட் பண்ணாத..”
“இது ஒன்னும் உன் ஆஃபீஸ் இல்ல.. இங்கயாவது உன் முதலாளி கெத்தை விட்டுட்டு சகஜமா இரேன்..” என்று வசீகரன் அவனை வம்பிழுக்க..அதை கண்டுகொள்ளாமல் அதிதியிடம் திரும்பி..
“என்ன அதிதி.. இந்த பையன் ரொம்ப மொக்கை போடுறானா..?” என்று கேட்டான்..
“அப்படிலாம் இல்ல பாஸ்..”
“ம்ம்.. அதி ஒரு விஷயம்..இன்னும் ஃபார்மலா யாருக்கும் சொல்லல.. இன்ஃபார்மலா தெரிஞ்சிருக்கும்ன்னு நெனைக்கறேன்..வசி என்னோட சித்தி பையன், எங்க ரெண்டு பேரோட அம்மாக்களும் சிஸ்டர்ஸ்..எனக்கு இருக்கற ஒன் அண்ட் ஒன்லி கசின்.. ப்ரதர்..ப்ரோ… எல்லாம் இவன் தான்.” என்று அறிமுகப்படுத்தியவன் தொடர்ந்து..
“ஆனா ஒன்னு நான் அவனுக்கு சொந்தம் அப்படின்றதால எல்லாம் இவன் பணத்த தூக்கி கொடுத்துட மாட்டான்.. சரியான வியாபாரி.. லாபம் இல்லாம கை விரலை கூட அசைக்க மாட்டான்.. இது ப்யூர்லி நம்ம டேலெண்ட்க்கு கெடைச்ச அங்கீகாரம் தான்..” என்று சேர்த்து சொல்ல..
“டேய் அண்ணா.. என்னை எதோ கந்துவட்டிகாரன் மாதிரி பேசுற.. நான் கேட்டேனா உன்கிட்ட எனக்கு உன்னோட பிசினஸ் மாடல காட்டுன்னு.. நீதானே மீட்டிங்க்கு அரேஞ்ச் பண்ண..இப்ப என் மேல பழிய போடுற..?”
“அது எப்படி..? பர்சனல் லைஃப் வேற தொழில் வேற..ரெண்டையும் மிக்ஸ் பண்ணகூடாது. உண்மையாவே எங்க கம்பெனி வொர்த்ன்னு உனக்கு தோணுனா மட்டும் நாம கொலாபரேட் பண்ணப்போதும்..”
“இப்ப யாரு வியாபாரி மாதிரி பேசுறா.. நீதானே..? நீ இந்த ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கும் போதே அப்பா பணம் தரேன்னு சொன்னாரு நீதான் பெரிய இவன் மாதிரி ஈகோ பார்த்துட்டு வேணாம்னு சொல்லிட்டு லோன்காக அங்கயும் இங்கயுமா அலைஞ்ச..”
“அங்கிள் கேட்டதே எனக்கு போதும்… அவர் நல்ல மனச நான் அட்வாண்டேஜா எடுத்துக்க விரும்பல..”
“அப்போ இப்ப மட்டும் எப்படி ஒத்துக்கிட்ட..?இதுவும் ஒரு வகையில அப்பா பணம் தானே..”
“மொதல்ல சொந்தமா பிஸ்னஸ் ஆரம்பிக்கனும்னு நான் நினைச்சப்ப,இது எப்படி போகும் எந்த அளவுக்கு சக்சஸ் ஆகும்ன்னு எனக்கே தெரியாது.. ஒருவேளை தோத்துட்டா.. அங்கிள்க்கு பணத்த திருப்பிக்குடுக்க முடியாம போயிடும்..அதனால நம்ம உறவுக்குள்ள விரிசலோ மனக்கசப்போ வந்துட்டா என்னால என்னை மன்னிக்கவே முடியாது. எந்த காரணத்துகாகவும் நம்ம ரிலேஷன்ஷிப்ப இழக்க என்னால முடியாது வசி.. நீ எனக்கு அவ்ளோ முக்கியம்ன்னு உனக்கே தெரியும்..
ஆனா இப்ப நிலைமையே வேற.. இந்த இன்வெஸ்மெண்ட்ல கண்டிப்பா ப்ராஃபிட் வரும்னு எனக்கு உறுதியா தெரியும், நீயும் புது வென்ச்சர்ல இன்வெஸ்ட் பண்ணனும்னு சொல்லிட்டே இருந்தியா..அதான் உன்ன உள்ள விட்டேன்..”
“அதானே நீ நெனைச்சததானே பண்ணுவ.. நான் சொல்றத எங்க கேக்கபோற..” என்று வசீகரன் குறைபட..
“அத விடுறா அங்கிள் எப்படி இருக்காரு சொல்லு..?” என்று பேச்சை மாற்றினான் விக்ரம்.
“அவருக்கென்ன பொறுப்பையெல்லாம் என்கிட்ட தள்ளிட்டு ஜாலியா இருக்காரு..”
“ஆமாண்டா.. நானும் பார்த்தேன் ரெண்டு பேரும் வெள்ளியங்கிரி மலையில ட்ரெக்கிங் போனீங்க போல ஸ்டேடஸ்ல போட்டிருந்தாரு. அங்கிள் யங் ஆகிட்டே போறாரே…பார்த்துடா உனக்கு காம்பெட்டிஷன் ஹெவியா ஆகிட போகுது..”
“அதை ஏன் கேக்குற.. ஒரு வீக்கெண்டு கூட விடமாட்டேங்குறாரு டா.. ட்ரெக்கிங் போலாம் சைக்கிளிங் போலாம்ன்னு படுத்துறாரு..” என்று புலம்ப இருவரும் சேர்ந்து சிரித்தனர். சிரிப்பினூடே
“சரி.. நீ எப்ப வீட்டுக்கு வர..நீ இல்லாமபோனா அம்மா என்னையே வீட்டுக்குள்ள விடமாட்டாங்க…” என்றான் விக்ரம்.
“ஒரு நாள் ரோட்டுல தான் தூங்கு இப்ப என்ன..?”
“அடப்பாவி அண்ணன் என்றும் பாராமல்..” என்று அவன் பாவனையுடன் கூற இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
“நான் நைட் ஃப்ளைட்லயே கெளம்புறேன் ண்ணா.. பெரியம்மாட்ட நெக்ஸ்ட் டைம் வரும் போது வரேன்ன்னு சொல்லிடு, இனிமே அடிக்கடி வரவேண்டியதா இருக்குமே..”
அதிதி எதோ தான் தேவையில்லாத ஆணி போல இருவருக்கும் இடையில் துருத்திக்கொண்டிருப்பதாக உணர்ந்தாள். பசங்க கூட இவ்வளவு பேசுவார்களா என்று ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.. இருவரும் இவள் இருப்பதையே மறந்துவிட்டு ஊர்கிழவிகள் போலக் கதையடிப்பதைப் பார்க்க ஒருபக்கம் வேடிக்கையாகவும் இருந்தது.
கூட்டதின் நடுவே இருந்தாலும் வசீகரன் யாருடனும் ஒட்டாமல் ஏனோ தனியாக இருப்பதாகத்தான் அவளுக்கு எப்போதும் தோன்றும்..
இப்போது விக்ரமிடம் போல கலகலப்பாக அவன் வேறு யாருடனும் பேசி அவள் பார்த்ததில்லை. விக்ரம் வசீகரன் உறவில் இருந்த நெருக்கத்தைப் பார்க்க அவளுக்கு மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருந்தது.
அதே சமயம் அவர்கள் சொந்த விஷயம், குடும்ப விஷயம் என்று பேசிக்கொண்டே போக, எப்படி சத்தம் காட்டாமல் கழன்று கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக அவள் இருப்பதை கவனித்த விக்ரம்..
“டேய் அதிதிய வச்சிகிட்டு நாம கதையளந்துட்டு இருக்கோம் பாரேன்.. சாரி அதி.. நாங்க பேச ஆராம்பிச்சா இப்படித்தான் சுத்தி இருக்கறவங்கள மறந்துடுவோம்..”
“இட்ஸ் ஓகே பாஸ்.. நானும் டைம் ஆச்சி கெளம்பலாமான்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன்..”
“கெளம்புறியா..எப்படி போற..? ட்ராப் அரேஞ்ச் பண்ணவா?”
“இல்ல பாஸ் நான் என் வண்டிலதான் வந்தேன்..”
“ஆல்ரைட்.. பார்த்து போ.. ரீச் ஆகிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு..”
“ஷூயர் பாஸ்..”
“ஆ.. அதி..சொல்ல மறந்துட்டேன்.. லிங்கா மெஷினரீஸோட இனிமே நீதான் கோஆர்டினேட் பண்ணனும்..”
“பாஸ் நான் எப்படி..? பவி மேம்தானே இத டீல் பண்ணனும்..” என்று அவள் தயங்க..
“பவி கிட்ட நான் பேசிக்கிறேன்..மார்னிங் மீட்டிங்ல இதை நான் அட்ரெஸ் பண்ணிடுறேன். அப்புறம் அவங்க ஃபேக்டரிக்கு கூட ஐடி சப்போர்ட் வேணும்னு கேட்டிருக்காங்க..எப்படியும் கோயம்புத்தூருக்கு ப்ளாண்ட் விசிட் போக வேண்டி இருக்கும், நெக்ஸ்ட் வீக் போற மாதிரி ப்ளான் பண்ணிக்கோ..”
அவன் பேச பேச எதோ பெரிய பொறுப்பை தன் தலையில் சுமத்துவது போல் பாரம் கூடிக்கொண்டே போக .. அவள் அனிச்சையாக திரும்பி வசீகரனைப் பார்த்தாள்.
அவன் முகம் சாதாரணமாகத் தெரிந்தாலும் கண்களில் மின்னிய குறும்பு..
இது இவன் பார்த்த வேலைதான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.
“என்ன அதி பெரிய ரெஸ்பான்சிபிலிட்டியா இருக்குன்னு தோணுதா?”
“யெஸ் பாஸ்..கொஞ்சம்..”
“என்னோட இன்ஸ்டிங்க்ட்ட(instinct) நான் நம்புறேன்.. சோ நீயும் நம்பு.. யூ கேன் டூ இட்…” என்று அவளுக்கு திடமூட்ட முயல
“என்னண்ணா.. வேட்டையாடு விளையாடுல கமல் சொல்ற ராகவன்ஸ் இன்ஸ்டிங்க்ட் மாதிரி சொல்ற.. ?”என்று இடையிட்ட வசீகரனை
“நீ சும்மா இருடா..” என்று அடக்கிவிட்டு
“நீ கெளம்பு அதி.. சேஃபா போ..” என்றான் விக்ரம்.
அவள் கிளம்ப எத்தனித்த போது..
“எக்ஸ்கியூஸ்மீ .. இனிமே நாம அடிக்கடி காண்டாக்ட் பண்ணிக்க வேண்டி இருக்கும்..உங்க நம்பர் குடுங்களேன் நான் சேவ் பண்ணிக்கறேன்..உங்க ஆஃபீஸ் நம்பர் குடுத்தா போதும்”
என்று சேர்த்து சொன்னான்.
விக்ரமும் எதுவும் கூறாமல் இருக்க வேறு வழியின்றி தன் அலுவலக எண்ணை கொடுத்தாள்.
“நான் மிஸ்டு கால் தரேன் சேவ் பண்ணிக்கோங்க..” என்று தன் எண்ணிலிருந்து அழைத்தான்.
அதிதியின் மொபைல் ஒலித்தது.
“பரவால்லையே ரிங் போகுது..” என்று குத்திக்காட்டியவன்..
“சேவ் பண்ணிக்கோங்க.. தெரியாம ப்ளாக் பண்ணிடபோறீங்க..” என்று உதட்டை காதுவரை விரித்து சிரித்தான்.
விக்ரமின் முன்னால் அவனை முறைக்கக்கூட முடியாமல் பேசாமல் அவன் எண்ணை “டெவில்😈” (devil) என்று சேவ் செய்து வைத்தாள்.
அந்தப்பக்கம் அவனோ அவள் பெயரை “பூக்கீ 🎀” (pookie) என்று மாற்றியிருந்தான்.
error: Content is protected !!