Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 31

அன்பு – 30

“பேபி!!! வரியா ஒரு வாக் போய்ட்டு வரலாம்!!” என அங்கே வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த ஆதினியை மது அழைக்க,



Advertisement

குழந்தை அனுமதி வேண்டி தன் அன்னையின் முகம் நோக்கியது.

ஆனால் கவியோ, எதற்காக மது குழந்தையை அழைக்கிறாள் என்று தெரிந்ததால், ஒருவித பதட்டத்திலே இருக்க, குழந்தையின் பார்வையை கவனிக்கவில்லை.

Advertisement

Advertisement

“அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க!! நீ வா!!” என குழந்தையின் கைபற்றி எழுப்பிய மது,

“டென்ஷனாகாம இரு!! நான் பார்த்துக்கிறேன்!!” என கண்களாலேயே கவிக்கு தைரியம் வழங்கிவிட்டு குழந்தையுடன் கீழே அமைந்திருந்த பூங்காவிற்கு சென்றாள்.

Advertisement

சிறிது நேரம் குழந்தையை அங்கு விளையாட விட்டவள், அதன்பின்,

“போதும் பேபி!! ரொம்ப விளையாடிட்ட!! வா வந்து உட்காரு!!” என குழந்தையை தன்னருகில் அமர்த்திக்கொண்டு,

“பேபிக்கு ஸ்கூல்லாம் எப்படி போகுது??” என பொதுவாய் பேச்சுக்கொடுத்தாள்.

“ஓஹ் சூப்பரா போகுதே!!!” என குழந்தையும் உற்சாகமாக,

“வெரி குட்!! வெரி குட்!!!”

“பேபிக்கு ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் செட் ஆகிட்டாங்களா???”

“ம்ம்ம்!! நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க.. அதுல தீப்தியும், பவியும் தான் எனக்கு க்ளோஸ் பிரண்ட்ஸ்” என கண்களை விரித்து மகிழ்ச்சியுடன் குழந்தை பகிர்ந்து கொள்ள,

“சூப்பர்!! உன் பிரெண்ட் தீப்தி, அப்பறம் பவி, அவங்களையெல்லாம் டெய்லி யார் ஸ்கூல்ல ட்ராப் பண்ணுவா???” என கவி மெதுவாய் தூண்டில் போட,

சற்று யோசித்த குழந்தையும்,

“அவங்க அப்பா இல்லைன்னா அம்மா கூட தான் வருவாங்க!!” என்றது.

“ஓஹ் அப்படியா???”

“ஆமா பேபி டெய்லி யார் கூட ஸ்கூலுக்கு போறீங்க???” என்று கேட்க,

“இதுகூட தெரியாதா உங்களுக்கு??” என களுக்கிச் சிரித்த குழந்தை,

“பிரபு கூடத்தான்” என மதுவின் திட்டம் அறியாமல் சமத்தாய் பதிலளித்தது.

“ஓஹோ!!! பிரபு யாரு உனக்கு???” என மது கொக்கி போட,

நாடியில் ஒற்றை விரல் கொண்டு தட்டியபடி அழகாய் யோசித்த குழந்தை,

“ஹம்ம்ம்!!! பிரபுவா!!!! பிரபு வந்து… பிரபு என்னோட பிரெண்ட்!!” என்று பதிலைக் கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் அம்முவின் கண்கள் விரிந்தது.

“பிரெண்டா??? ம்ஹூம் இல்லையே!!! நல்லா யோசி!! பிரபு உங்க அம்மாவுக்குத் தான பிரெண்ட்!!” என நன்றாய் குழந்தையைக் குழப்பினாள் மது.

“எனக்கும் பிரபு பிரெண்ட் தான்!!!” என நான் சொல்வது தான் சரி என குழந்தை உதட்டைப் பிதுக்க,

“அச்சோ க்யூட்டி!!!” என அம்முவின் கன்னம் கிள்ளி கொஞ்சிக் கொண்ட மது,

“சரி உன் பிரெண்ட் தீப்தி, பவி அவங்களையெல்லாம் யாரு அடிக்கடி வெளிய கூட்டிட்டு போவா??”

“அவங்க அப்பா தான்!!!”

“யாரு அவங்க ஸ்கூல் போக ரெடி ஆக ஹெல்ப் பண்ணுவா??”

“ம்ம்ம்!! அவங்க அப்பா தான்!!”

“அவங்களுக்கு உடம்பு சரி இல்லைனா, யாரு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் அவங்களை பார்த்துப்பா??”

“அவங்க அப்பா தான்!!!” என்று சொல்லிய குழந்தையின் குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே போக, மது என்ன சொல்ல வருகிறாள் என்பது லேசாய் குழந்தைக்கு புரிபடத் துவங்கியது.

ஆதினியின் முகத்தை வைத்தே, குழந்தை யோசிக்கத் தொடங்கிவிட்டாள் என்பதை உணர்ந்த மது,

“அப்போ பேபிக்கு இதெல்லாம் யாரு செய்யுறா???” என்று கேட்க,

மெல்லிய தயக்கத்துடன்,

“பிரபு!!!” என்றது.

“அப்போ பிரபு பேபிக்கு யாரு??” என எதிர்பார்ப்புடன் மது கேட்க,

“அப்பா…” என்று சொல்ல முடியாமல் தடுமாறிய ஆதினி,

“ஆனா எங்க அப்பா சாமிகிட்ட போயிட்டதா தாத்தா பாட்டி சொல்லிருக்காங்களே!!!” என்று குழப்பத்துடன் கேட்க,

‘ ரொம்ப விவரம் தான் ‘ என்று சிரித்துக்கொண்ட மது,

“ஆமா தான்!!! இத்தனை வருஷமா அப்பா இல்லாம பேபி ரொம்ப கஷ்ட பட்டீங்களாமே .. அதான் சாமி இனி பேபி அப்பா இல்லாம கஷ்டப்படக்கூடாதுன்னு உன் பிரபுவை உன்கிட்ட அனுப்பி வச்சிருக்காரு…  நீ பிரபுவை உன் அப்பாவா அக்செப்ட் பண்ணிக்கிறியா??” என எதிர்பார்ப்புடன் மது கேட்க,

குழந்தையின் முகம் இன்னும் யோசனையைத் தாங்கி தான் நின்றது.

‘ ஏதாவது பதில் சொல்றாளா பாரு?? அப்படியே அவங்க அம்மாவை மாதிரி அமுக்குணியா இருந்து மனுஷனை டென்ஷன் பண்றா!!’ என மது அலுத்துக்கொண்டு,

“என்ன பேபி?? அப்போ பிரபு உனக்கு வேண்டாமா?? அவனை இங்க இருந்து போக சொல்லிடவா??” என்று கேட்க,

அவசர அவசரமாக தலையை ஆட்டி மறுத்த குழந்தை,

“ம்ஹூம்!! பிரபு வேணும் எனக்கு.. போக எல்லாம் சொல்லாதீங்க!!!” என்றது.

அதில் உற்சாகமான மது,

“அப்போ பிரபுவை அப்பாவா அக்செப்ட் பண்ணிக்கிறியா?” என்று மீண்டும் முதலில் இருந்து வர,

“நான் பிரபுவை.. அப்பாவா அக்செப்ட் பண்ணலைனா, பிரபு இனி என்னை ஸ்கூல்ல வந்து விட மாட்டாங்களா??” என்று பாவமாய் சந்தேகம் கேட்டது குழந்தை.

“அப்படி இல்லை!! ஆனா நீ அப்பாவா ஏத்துக்கலைனா, அப்பறம் பிரபுக்கு வேற யாராவது ஆண்ட்டி கூட கல்யாணம் ஆகிடும்.. புது ஆண்ட்டி வந்துட்டா, அவங்க பிரபுவை உன்கூட சேர விடமாட்டாங்களே!!” என்று பயங்காட்டினாள் மது!!

ப்ளூடூத் ஸ்பீக்கர் வழியாக இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த பிரபஞ்சன், மதுவின் கூற்றில் பல்லைக் கடித்தான்.

“குழந்தைக்கிட்ட எப்படி பேச சொன்னா எப்படி பயங்காட்டுறாங்க பாருங்கண்ணா!! இதுக்குத்தான் நானே அம்முகிட்ட பேசுறேன்னு சொன்னேன்!!” என கவினிடம் குறை பாடினான் பிரபஞ்சன்.

“எனக்கு பயமா இருக்கு பிரபா!!” என்று கவி ஒரு பக்கம் மகளின் எதிர்வினையை நினைத்து பயந்து மருக,

“விடு கவி!! பேபிகிட்ட நான் பேசுறேன்.. அவ புரிஞ்சுப்பா!!” என்று அவளுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க, அதற்கு அவசியமே இல்லை என்பதைப் போல் அங்கே அம்மு தன் சம்மதத்தைக் கூறியிருந்தாள்.

இத்தனை மாதங்களாக பிரபஞ்சனுடன் நன்றாக ஒன்றிவிட்ட குழந்தைக்கு, அவன் தனக்கில்லை இனி என மது சொன்னது பெரும் பயத்தைக் கொடுத்திருக்க,

“இல்லை இல்லை!! எனக்கு பிரபு வேண்டும்… நான் அப்பாவா அக்செப்ட் பண்ணிக்கிறேன்!!” என பட்டென குழந்தை ஒப்புக்கொள்ள,

“தட்ஸ் மை கேர்ள்!!” என எடுத்த காரியத்தை வென்றுவிட்ட களிப்புடன் மது குழந்தையை அணைத்துக்கொண்டாள்.

கவின் கூட,

“பார்த்தியா!! மது எப்படி பேபியை கன்வின்ஸ் பண்ணிட்டா பாரு!! இதுக்குத்தான் மது வேணும்னு சொல்றது.. என்னடா பிரபா ஹேப்பி தானா??” என்று பெருமையாக கேட்டவன்,

“இப்போவாச்சும் சிரி மா.. அதான் உன் பொண்ணு ஒத்துக்கிட்டா தான??” என கவியிடமும் சொன்னான்.

அதற்கு பிரபாவும் கவியும் பேருக்கு புன்னகைத்து வைத்தாலும், குழந்தையிடம் தாங்கள்  ஒருமுறை விளக்கமாக பேச வேண்டும் என நினைத்துக்கொண்டனர்.

அதன்படி, சற்று நேரம் சென்று மதுவுடன் மேல வந்த ஆதினி, பிராபாவைக் கண்டு தயங்கி நிற்க,

அவன் முறைப்புடன் மதுவைத் தான் பார்த்து வைத்தான்.

“ஓய்!! என்ன முறைப்பு?? நியாயப்படி நீ இந்நேரம் எனக்கு தாங்க்ஸ் சொல்லணும்!! எவ்வளவு பெரிய பிரச்சனையை எவ்வளவு ஈசியா முடிச்சு வச்சிருக்கேன்” என்று அவள் பெருமை பேச,

“கிழிச்சிங்க!!” என்று கடுப்புடன் பதிலளித்த பிரபஞ்சன்,

அங்கே தன்னிடம் வரலாமா வேண்டாமா என தயக்கத்துடன் நின்றிருந்த குழந்தையை நெருங்கி,

“அம்மு!!! பிரபு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நம்ம வீட்டுக்கு போகலாமா??” என்று அவளிடம் அனுமதி வேண்ட,

அவனை நிமிர்ந்து பார்க்காமலே, சம்மதமாய் தலையசைத்தது குழந்தை.

பெருமூச்சுடன் குழந்தையை அள்ளிக்கொண்டவன், கவிக்கு கண்ணைக் காட்டிவிட்டு குழந்தையுடன் தன்னுடைய அபார்ட்மென்ட்டிற்குள் நுழைந்தான்.

உள்ளே வந்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் குழந்தை அவனிடம் பேச முயற்சிக்காமல் ஏதோவொரு யோசனையிலே இருக்க, பிரபஞ்சனுக்கு அதற்கு மேல் தாங்கவில்லை.

“என்னாச்சு அம்மு?? என்மேல கோவமா??” என்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவாறு கேட்க,

இல்லை என்பதாய் தலையசைத்தாள் ஆதினி.

“பின்ன ஏன் பேபி இப்படி சோகமா இருக்கீங்க?? இது அம்முக்கு நல்லாவே இல்லை”

“மதும்மா ஒன்னு சொன்னாங்க!!!” என தயக்கத்துடன் குழந்தை இழுக்க,

“என்ன சொன்னாங்க உன் மதும்மா???” என குழந்தையின் நாடியைப் பற்றி ஆதுரமாக அவன் கேட்க,

“நீங்க எப்பவும் என்கூட இருப்பீங்களா???” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அடுத்த கேள்விக்கு தாவியிருந்தாள் ஆதினி.

மதுவின் கூற்றில் குழந்தை மிகவும் பயந்துவிட்டது என்று உணர்ந்த பிரபஞ்சன்,

“அம்முமாவை விட்டுட்டு இந்த பிரபு எங்க போவான்??? நீங்களே போன்னு சொன்னாக்கூட நான் போகவே மாட்டேன்.. என் அம்மு கூடவே தான் இருப்பேன்!!!” என்று அவன் உறுதி அளித்த பின்பு தான் குழந்தையின் முகம் சற்றே தெளிவடைய,

“பிராமிஸ்!!!” என இன்னும் நன்றாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி கையை நீட்டியது குழந்தை,

நீட்டிய அவளின் மலர்க்கரத்தைப் பற்றி அதில் மெலிதாய் முத்தம் பதித்த பிரபஞ்சன்,

“பிராமிஸ்!!! அம்மு கூடவே தான் பிரபு எப்பவும் இருப்பான்!!” என்றான் இன்னும் அழுத்தமாக.

அதில் குழந்தையின் முகத்தில் பளிச்சென ஒரு புன்னகை தோன்ற,

“இந்த மதும்மா என்னென்னமோ சொல்லி பயமுறுத்திட்டாங்க!!! இப்போ தான் அம்மு ஹேப்பி!!” என்று அழகாய் சிரித்தது குழந்தை.

மது பேசியது அனைத்தும் தெரிந்தாலும், குழந்தையின் மனநிலையை அறிய வேண்டி,

“என்ன சொன்னாங்க அப்படி உன் மதும்மா??” என்று பேச்சுகொடுத்து மீண்டும் அங்கு நடந்ததை ஆதினியின் வாய்மொழியாக அறிந்து கொண்ட பிரபஞ்சன்,

“அப்போ அம்முக்கு நான் அப்பாவா வரதுல இஷ்டம் இல்லையா??? அதான் சோகமா இருந்தீங்களா???” என கேட்டவன் பதைபதைக்கும் மனதுடன் குழந்தையின் பதிலுக்காகப் பார்த்திருக்க,

இரண்டு நிமிடங்கள் அவகாசம் எடுத்துக்கொண்ட குழந்தை,

“எனக்கு அப்பான்னாலே பிடிக்காதே.. எங்க அப்பா அம்மாவை ரொம்ப அடிப்பாரு.. திட்டிட்டே இருப்பாரு.. என்கிட்ட அவர் பேசின மாதிரி நியாபகமே இல்லை.. என்னைப் பார்த்தாலே முறைப்பாரு.. அப்பா இருந்த வரைக்கும் அம்மா அழுதுட்டே இருப்பாங்க!!” என தனக்கு நினைவிருந்தது பாதி, பொற்கொடியின் வாயிலாக ஜெயசிம்மனைப் பற்றி அறிந்தது மீதி என குழந்தை, தன் மனதில் இருந்ததைப் பகிர, பிரபஞ்சனுக்கு அவளை நினைத்து பாவமாய்  இருந்தது.

தனக்கு தந்தை என்ற ஒருவன் இருந்தும் இல்லாத நிலை. கிட்டத்தட்ட ஆதினிக்கும் அதே நிலை தான் என நினைக்கும் போது, அவனால் குழந்தையின் வலியை எளிதாய் உணர முடிந்தது.

“ஆனா எனக்கு பிரபுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்!!! பிரபு என்மேல ரொம்ப பாசமா இருக்கீங்க.. என்னை சிரிக்க வைக்கிறீங்க.. ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறீங்க.. என்கூட விளையாடுறீங்க.. எல்லாமே பண்றீங்க.. இங்க வந்த பின்னாடி தான் நானும் அம்மாவும் ஹேப்பியா இருக்கோம்.. அப்போ எனக்கு ரொம்ப பிடிச்ச பிரபுவை, பிடிக்கவே பிடிக்காத அப்பான்னு கூப்பிட சொன்னாங்க மதும்மா.. அதான் எனக்கு என்ன பண்ணன்னே தெரியலை.. நான் உங்களை அப்பான்னு கூப்பிடலைன்னா வேற ஆண்ட்டி வந்து உங்களை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்களாம்.. அப்படி எல்லாம் நடக்காது தான??? எனக்கு என் பிரபு வேணும்!!! நான் வேணும்னா அப்பான்னு கூப்பிடுறேன்.. என்கூடவே இருங்க!!!” என எங்கே தன்னைவிட்டுச் சென்றுவிடுவானோ என பரிதவிப்புடன் குழந்தை கேட்க,

பிரபஞ்சன் குழந்தையின் அன்பைக் கண்டு பேச்சிழந்து போய் சமைந்துவிட்டான்.

இத்தனை அன்புக்கு தான் தகுதியானவன்தானா என ஆனந்த மிகுதியில் கண்கள் கலங்க அவன் அப்படியே குழந்தையை தன்னுள் அணைத்திருக்க,

அவன் கண்களின் ஈரம் உணர்ந்து,

“பிரபு!!! அழாதீங்க!! நான் உங்களை அப்பான்னே கூப்பிடுறேன்!!” என குழந்தை சமாதானம் செய்ய,

வாசலில் நின்று இவை அனைத்தையும் பார்த்திருந்த கவிக்கும் கண்கள் உடைப்பெடுத்தது!!

“இல்லை!! இல்லை டா அம்மு!! நான் அழலை!!! நீ என்னை பிரபுன்னே கூப்பிடு!! எனக்கு அது போதும்.. அது மட்டும் போதும்!!!” என்றவன் குழந்தையின் அன்பைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தான்

“நிஜமா ஓகே வா??” என மீண்டும் குழந்தை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்க,

பட்டென புன்னகைத்தவன், “அழகு அம்மு நீ!!!” என கொஞ்சிக்கொண்டவன்,

அங்கே கதவில் சாய்ந்தபடி தங்களையே பார்த்திருந்த கவியை அருகில் வரும்படி அழைக்க,

குழந்தையின் பார்வையும் தன் அன்னையிடம் சென்றது.

கவியும் வந்து பிரபாவின் அருகில் மண்டியிட்டு குழந்தையைப் பார்த்தவாறு அமர, ஆதினி தன் முன்னிருந்த இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

பிரபஞ்சன் அதற்கு மேலும் தாமதிக்காமல் நேராக விஷயத்திற்கு வந்தான்.

“அம்மு!! நீ நான் அப்பறம் கவிம்மா எல்லாரும் ஒன்னா இருக்கலாமா.??” என்று அதிகரித்த இதயத்துடிப்புடன் ஆதினியிடம் அவன் கேட்க,

“இப்போவே ஒன்னா தான இருக்கோம்??” என சந்தேகம் கேட்டது சின்னச்சிட்டு.

“அதில்லைடா!!! ஒன்னானா இங்க நம்ம வீட்டுல.. எல்லா நேரமும் ஒன்னா இருக்கலாமா??” என தெளிவாய் விளக்கினான் பிரபா.

“ஐய் ஜாலி!! இருக்கலாம்.. இப்போவே என்னோட பேக் எல்லாம் போயி நான் எடுத்துட்டு வரட்டா??” என குழந்தை உற்சாகத்துடன் இறங்கி ஓட முற்பட,

அவளின் கைபிடித்து தடுத்த பிரபஞ்சன்,

“அப்படி ஒன்னா இருக்கணும்னா நான் உன்னோட கவிம்மாவை மேரேஜ் பண்ணிக்கணும்னு காட் சொல்லிருக்காரு!!! நான் கவிம்மாவை மேரேஜ் பண்ணிக்கவா???” என்று பட்டென கேட்டுவிட்டாலும், குழந்தை என்ன நினைப்பாளோ என்ன பதில் சொல்லுவாளோ என்று கவிக்கும் பிரபஞ்சனிற்கும் பயத்தில் இதயம் வெளியே வந்து துடித்தது.

ஆனால் ஆதினியோ அவர்களின் பயம் அவசியமற்றது என்பது போல்,

“அதுக்கென்ன சீக்கிரமே பண்ணிக்கோங்க.. ஆனா எனக்கு மேரேஜ்க்கு ஏஞ்சல் டிரஸ் வாங்கித் தரணும்!!” என்று உடனடியாக சம்மதித்து டீல் வேறு பேச,

கவியும் பிரபஞ்சனும் இவள் புரிந்து தான் பேசுகிறாளா என்று புரியாமல் குழம்பித் தவித்தனர்.

“அம்மு!! மேரேஜ்னா என்னன்னு தெரியும் தான??” என கவி சந்தேகமாகக் கேட்க,

“ஓஹ் தெரியுமே.. போன வீக் பார்த்த மூவில கூட அந்த மீசை வச்ச அங்கிள் , அந்த ஆன்ட்டி கழுத்துல ஒரு ரோப் கட்டினார்ல.. அதுக்கப்பறம் ரெண்டு பேரும் ஒரே வீட்டுல ஹேப்பியா இருப்பாங்க.. அதுமாதிரி நீங்களும் பிரபுவும் மேரேஜ் பண்ணிக்கிட்டா நாம எல்லாம் ஒன்னா ஜாலியா இருக்கலாம் மா.. நீங்க மேரேஜ் பண்ணிக்கோங்க” என தனக்குத் தெரிந்த வகையில் விளக்கி மீண்டும் அவர்களின் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியது குழந்தை.

இருந்தாலும் மீண்டும் பலமுறை குழந்தையிடம் மாறி மாறி சம்மதம் கேட்டு, அவள் முழுமனதோடு தான் இதற்கு சம்மதித்தாள் என்று அறிந்த பின்பு தான் கவி மற்றும் பிரபாவின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியே தோன்றியது.

அதிலும் கவி, ஆதினியை நினைத்தே பிரபாவை பிரிந்துவிட பல முறை யோசித்திருக்க, அவளின் பயமெல்லாம் அவசியமற்றது என்பது போல் மிகவும் உற்சாகத்துடன் அவர்களின் உறவை இயல்பாய் ஏற்றுக் கொண்டது குழந்தை!!!

பிறகென்ன!!!  அந்த பெரிய மனுஷியே சம்மதித்த பின் பிறகென்ன தாமதம்!!! அடுத்து டும் டும் கல்யாணம் தான்!!!!

“தன்னைப் பெற்றவர்கள் தர மறுத்த அங்கீகாரத்தை

தான் பெற்ற மகள் கொடுத்திருக்க, 

காலங்கள் கடந்து அவர்களுக்கு காதல் கைகூடியது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!