Skip to content
Post Views: 2,282
அத்தியாயம் 22
ஞாயிற்றுக்கிழமை காலை முத்தாயியும், ஹிருதய்யும் வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் இறங்கி இருந்தார்கள். தோட்டக்காரரிடம் கூறி தோட்டத்தையும் ஒழுங்கு படுத்தி வைக்குமாறு கூறி இருந்தாள் முத்தாயி. அந்த வாரம் வெள்ளி கிழமை சுசீலாவின் வளைகாப்பிற்காக அனைவரும் வருகின்றார்கள்.
Advertisement
வளைகாப்பை இங்கே கிராமத்தில் பூம்பாவை வீட்டில் தான் ஏற்பாடு செய்கிறார்கள். “நம்ம வீட்ல தான்டா செய்யணும்” என்று மிருதுளா கூறியதற்கு, “அத்தை வீடும் என் வீடுதான்” என்று கூறி ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான்.
பிரசவத்திற்காக எப்படியும் ஊருக்கு தானே அழைத்துவர வேண்டும், வளைகாப்பையும் இங்கே செய்தால் எங்களுக்கு வசதி என்று சுசீலாவின் வீட்டில் கேட்டுக்கொண்டதால் இந்த ஏற்பாடு.
Advertisement
Advertisement
அதில் சுசீலாவிற்கு கொஞ்சம் வருத்தம் தான். ப்ரதமேஷ் தான் பரவாயில்ல, “நாமளும் அவங்களை புரிஞ்சுக்கணும் சுசி.. ரெண்டு பேருமே டாக்டர்ஸ்.. நாம போயிக்கலாம்” என்று கூறி அவளை சமாதானம் செய்திருந்தான்.
சென்னையில் இருந்து அனைவரும் வியாழன் அன்று தான் வந்து சேர்ந்தார்கள்.
Advertisement
முத்துவும் ஹிருதய்யும் அனைவரையும் வரவேற்று எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டார்கள். கந்தசாமி இவர்களுடனே நின்றுகொண்டார்.
முத்துவின் கண் பார்வையில் அனைத்தும் செய்தான் ஹிருதய்.
“ஏன் ஹனி, இங்க இவ்வளவு பேர் இருக்கும்போதே, முத்து நம்ம ஹிருதய்யை இப்படி வேலை வாங்குதே?” என்றார் ஸ்ரீகாந்த் கவலையாக பாவையிடம்.
“இதுல கவலை பட என்ன இருக்கு, அவன் முகத்தை பாருங்க. எப்படி மலர்ந்து இருக்கு.. அவன் ரொம்ப சந்தோசமா இருக்கான்.. அதை விட நிம்மதியா இருக்கான்..” என்றார் பாவை.
“நீ ஹனி.. இப்ப நீ நிம்மதியா சந்தோசமா இருக்கியா?” என்றார் கேள்வியாக.
“கண்டிப்பாங்க.. நீங்க நிறைய மாறி இருக்கீங்க.. நானும் நிறையவே மாறி இருக்கேன்.. அந்த முத்தாயி அம்மாச்சி அருளாலும், காந்தலட்சமி தாயார் ஆசியாலும் இனி நம்ம குடும்பம் நல்லாத்தான் இருக்கும்.”
கேசவனும் காதம்பரியும் வந்ததிலுருந்து, முத்து அவர்களை நொடிக்கொரு முறை சென்று என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு பார்த்து கொண்டாள்.
விழாவிற்கு மாலதி, சௌந்தர், நித்யகல்யாணி மூவரும் வந்தனர்.
சுசீலாவின் பெற்றோர்கள், சபை நிறைய சீர் கொண்டு வந்து இறக்கினார்கள். மதுரையில் இருந்து பாசக்கார குடும்பமும் வந்தது. கலகலப்பாக களைகட்டியது விழா.
நேரமானதும், சுசீலாவை அழைத்து வந்து ஊஞ்சலில் அமர வைத்தார்கள்.
ஊஞ்சலை பூவாலே அலங்காரம் செய்து இருந்தார்கள். பார்க்க அத்தனை அழகாக இருந்தது.
பச்சை பட்டுடுத்தி மேடிட்ட வயிறோடு தேவதையாக இருந்தாள் சுசீலா. உண்மையிலே சிவங்கரி, மிருதுளா, சுசீலா மூவருக்கும் நன்றாக ஒத்து போனது. சுசீக்கும் அவர்களை போலவே பட்டணத்து மோகம் அதிகம்.
விழா மிகவும் சிறப்பாக நடந்தது. மாலதியும் நித்யகல்யாணியும் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று பாவை, “என்ன எம் ஸ்கொயர் பார்த்தியா என் மருமகளை.. எப்பயுமே நீங்க ரெண்டு பேரும் தங்கத்தை குறையாவே சொல்லுவீங்களே, எப்படி இந்த விழாவை சிறப்பா பண்ணி முடிச்சிருக்கா பாருங்க” என்றார் பெருமையாக.
உண்மையில் பெண்ணின் இந்த பாங்கில் மாலதிக்கும் நித்யகல்யாணிக்கும் மனதிற்கு அவ்வளவு நிறைவாக இருந்தது.
ஆனாலும் கெத்தை விடாமல்,
“ஆமா ஆமா, போனவாரம் மட்டும் அய்யாவும் பேத்தியும் நாலு பஞ்சாயத்தை இழுத்து விட்டிருக்காங்க..” என்று நொடித்து கொண்டார் நித்யகல்யாணி.
“அவங்க பஞ்சாயத்தை பத்தி எதுக்கு அத்தை ஆரம்பிக்கிறீங்க? அதை சொல்லிதான் மாளுமா?” என்றார் மாலதி.
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.. நீ போம்மா பாவை” என்று வந்து ஆஜார் ஆனார் கந்தசாமி.
ரெண்டு டீச்சர் முறைப்பையும் பெற்றுக்கொண்டு,
“இப்படி எப்பவும் போல முறைச்சு பார்த்தாத்தேன் நம்ம வீட்டு டீச்சருங்க மாதிரி இருக்கு. நானும் ரொம்ப நேரமா பார்க்கிறேன், முத்துவையே சும்மா சும்மா பாசமா பார்த்து வைக்கிறீங்க? சந்தேகமா இருக்கா இல்லையா?”என்று மேலும் அவர்களை வெறுப்பேற்றிவிட்டே அங்கே இருந்து நகர்ந்தார்.
வளைகாப்பு நல்ல படியாக முடியவும், பாவையின் ஆசைக்காக முதலில் குடும்பமாக காந்தலட்சுமி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். பின், முத்தாயி அம்மாச்சி கோவிலுக்கும் சென்று பூஜை செய்து வழிபட்டனர்.
சுசீலாவை அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டு மற்றவர்கள் சென்னைக்கு திரும்பி விட்டார்கள்.
———–
திங்கள் முதல் மீண்டும் இயல்பு வாழ்விற்கு திரும்பினார்கள் முத்துவும் ஹிருதய்யும்.
காலையிலே கந்தசாமியுடன் வயலிற்கு சென்று விட்டான் ஹிருதய்.
தக்காளியின் விளைச்சல் இந்த முறை அமோகமாக இருந்தது. ஆனால், விலையை மிகவும் குறைத்து கேட்டனர் வியாபாரிகள். ஒரு மூட்டையே பத்து ரூபாய் எனவும், கடுப்பின் உச்சியில் இருந்தனர் விவசாயிகள்.
“இதுக்கு நம்ம தக்காளியை கொண்டு போய் ஆத்துலே வீசிடலாம் அய்யா.. காய் பறிக்கிற கூலி கூட வராது போலவே” என்றார் ஒரு அம்மா வருத்தமாக.
இதே போல முன்பு ஒருமுறை ஹிருதய்யும் செய்திகளை பார்த்த நியாபகம் வந்தது.
“எல்லாரும் கோவப்படாம என்ன செய்யலாம்னு யோசிப்போம்” என்றான் ஹிருதய் பொறுமையாகவே.
சில மாதங்களுக்கு முன்பாக முள்ளங்கியையும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்டிருக்க, அதை அறுவடையை செய்யவில்லை. அப்படியே விட்டு விட்டனர் மண்ணுக்கு உரமாக.
“நிச்சயம் வியாபாரிகள் கொடுக்கும் பணத்திற்கு கொடுப்பது நஷ்டம். தக்காளியை அதிக நாள் வைத்திருக்கவும் முடியாது.. என்ன செய்ய இதயா” என்றார் கந்தசாமியும் விரக்தியாக.
இரண்டு நாட்களாவே இந்த பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.
“எனக்கு ஒரு யோசனை.. கண்டிப்பா இதுல லாபம் கிடைக்கும், ஆனால் உடனடியா கிடைக்காது.. நீங்க ஆத்துல தூக்கி போடறதுக்கு பதில் என்னை நம்பி இதை செய்ங்க” என்றான் ஹிருதய்.
“என்ன செய்யணும்..”
“இந்த தக்காளியை நாம வத்தல் போடணும்..”
“வத்தலா? தக்காளி வச்சு யாருப்பா போடுவாங்க?” என்றார் பொன்னம்மா.
“இல்ல ஆத்தா, நாம பக்குவமாக பதப்படுத்தினா அது தங்கம் மாதிரி.. வெளி நாடுகளில் கூட அதை வாங்குவாங்க.. என்ன கொஞ்சம் மெனக்கெடனும்..”
“விளக்கமா சொல்லு இதயா” என்றார் கந்தசாமி. அனைவரும் இப்பொழுது ஊன்றி கவனிக்க தொடங்கினார்கள்.
அனைவரின் கவனமும் ஹிருதய்யிடமே..
“இதை சன் ட்ரைட் டொமேட்டோன்னு சொல்லுவாங்க.. அதாவது வெய்யிலில் காய வைத்த தக்காளி தான்.. தக்காளி எல்லாம் கழுவி, துடைத்து, நாலாவோ எட்டாவோ நறுக்கி, உப்பு சேர்த்து வெய்யில காய வைக்கணும்.. நம்ம ஊர் வெயிலுக்கு சீக்கிரமே காய்ஞ்சிடும் இல்லையா? அது வரை தூசி இல்லாமல் பக்குவமா திருப்பி விட்டு காய வைக்கணும்.
அதை வத்தல்னு தானே சொல்லுவீங்க..”
“ஆமா அப்பு.. அதுக்கு மெனக்கெடனுமே?”
“அதான் நானும் சொல்றேன்.. அப்படி செஞ்சீங்கன்னா ஒரு கிலோ வத்தலை ஆயிரம் ரூவாய் வரைக்கும் விக்க முடியும்.. கொஞ்ச வத்தலை மெஷின்ல கொடுத்து பொடிச்சும் பாக்கெட் போடலாம்.”
“நீங்க தரமா செஞ்சு கொடுத்தீங்கனா வித்து கொடுக்கிறது என் பொறுப்பு ” என்றான்.
அக்கம் பக்கத்து கிராமத்தில் இருந்தும் தக்காளிகளை கந்தசாமியும் ஹிருதய்யும் சென்று நியாயமான விலை கொடுத்து வாங்கிகொண்டார்கள்.
கிராமத்தில் உள்ள பெரிய மொட்டை மாடிகளை எல்லாம் பிடித்து கொண்டு, அதற்காக ஒரு குழுவை ஏற்பாடு செய்தனர்.
“யோவ்.. தக்காளியை காய போடறேன்னு தக்காளி மாறி இருக்கிற பொண்டாட்டிய காய போடற நீ” என்று முத்து ஹிருதய்யை கடுப்படித்தாள்.
“ஏற்கனவே காய்ஞ்ச கருவாடு மாதிரி தான் இருப்பீரு.. இப்ப தக்காளியோடு சேர்ந்து இன்னும் காய்ஞ்சு போக போறீரு.. பார்த்துக்கோங்க” என்று நொடித்துக்கொண்டார் நித்யகல்யாணி கந்தசாமியிடம்.
ஏனென்றால், ஹிருதய்யும் கந்தசாமியும் அதில் முழு மூச்சாக இறங்கி இருந்தார்கள்.
மூன்று மாதத்தில், தக்காளி வத்தல், தக்காளி பொடி என்று அனைத்தும் தயாராகி, பேக்கிங் வரை முடிந்து விட்டது.
நினைத்ததை விடவே விரைவாக வியாபாரம் ஆனது. அனைத்தும் ஆன்லைனிலேயே, இரண்டே நாட்களில் அவுட் ஆஃப் ஸ்டாக் என்று வந்துவிட்டது.
கிடைத்த லாபத்தை பார்த்ததும் விவசாயிகளின் மனமும் வயிறும் குளிர்ந்து தான் போனது.
பொருளின் தரத்தினால், பல்லாயிரக்கணக்கில் ஆர்டர்கள் குமிந்தது. தனியாக அதற்காக ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தான் ஹிருதய்.
இதற்கிடையில் ப்ரதமேஷ் சுசீலாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து இரண்டு மாதத்திலே சுசீலா சென்னைக்கு சென்றுவிட்டாள். பேரனை பல அலப்பறைகளோடு சிவங்கரியும் மிருதுளாவும் பார்த்துக்கொள்கிறார்கள்.
முத்துவை நம்பி சில கேஸ்களை கொடுத்திருந்தார் சீனியர். அப்படி விவசாயிகளின் கடன் தள்ளுபடி வழக்குகள் சிலவற்றை நடத்தி அதில் வெற்றியும் கண்டாள்.
அதன் பிறகு, கொஞ்சம் பெரிய அளவிலான கேஸ்களையும் கொடுக்க ஆரம்பித்தார்.
சிறந்த வழக்கறிஞராக அறியப்பட்டாள். கோர்ட்டில் வக்கீலாக இருந்தாலும், அய்யாவுடன் சேர்ந்து சில பல பஞ்சாயத்துகளை பார்ப்பதே அவளுக்கு பிடித்தமான ஒன்று.
திருமணம் ஆகி மூன்று வருடங்கள் நிறைவடைந்தது.
ஹிருதய்யின் தொழில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்தது என்றே சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் ஹிருதய்யினால் தனியாக தொழில்களை கவனிக்க முடியவில்லை. அதனால் ஸ்ரீகாந்த்தும் வேலையை விட்டுவிட்டு மகனுடன் இணைந்து கொண்டார்.
அவர் சென்னையில் இருந்து ஆன்லைன் மார்கெட்டிங்யை கையில் எடுத்து கொண்டார்.
கேசவனை நிரந்தரமாக ஒரு போஸ்டிங் கொடுத்து சேர்த்துக்கொண்டார்கள். வரவு செலவுகள், இன்கம் டாக்ஸ் என்று அனைத்தும் அவரது பொறுப்பில். தணிகாச்சலம் பார்த்த கொண்டிருந்த கடையை முறைப்படி அவர் பெயருக்கே மாற்றி கொடுத்திருந்தான் ஹிருதய்.
ப்ரேம் இன்ஜினியரிங் முடித்து ஹிருதய்யின் ஆலோசனை படி எம்பிஏ படித்து கொண்டிருக்கிறான்.
ரம்யா அவள் அப்பாவை பின்பற்றி சிவில் என்ஜினியரிங் சேர்ந்து, விரும்பி படிக்கிறாள்.
————-
முத்தாயி ஒரு வழக்கில் மிகவும் தீவிரமாக இருந்தாள். இரண்டு தங்கைகள் சேர்ந்து ஒரு அண்ணன் மீது சொத்து கேட்டு வழக்கு பதிந்திருந்தார்கள்.
அதில் ஒரு தங்கையுனுடைய மாமியார் மாலதியின் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்.
அவர் மாலதியிடம் “என்ன மேம், உங்க பொண்ணு என்னமோ பெரிய வக்கீல்ன்னு சொன்னீங்க? பொண்ணுங்களுக்காக நியாயமான குரல் கொடுப்பாங்கன்னு பார்த்தா, பெண் பிள்ளைகளுக்கு சொத்து கொடுக்க கூடாதுன்னு இல்ல வாதாட போகுது” என்று ஏகத்திற்கும் பேசி மாலதியை டென்ஷன் செய்திருந்தார்.
சில அரைவேக்காடுகள் அதை கேட்டு புரளி வேறு பேசினார்கள்.
உண்மையில் மாலதிக்கு அது என்ன கேஸ் என்று விவரம் தெரிந்திருக்கவில்லை ஆனால் மகள் ஒரு விஷயத்தில் இறங்கி இருக்கிறாள் என்றால் அதில் நிச்சயம் நியாயம் இருக்கும் என்று நம்பினார்
முத்து வாதாடினாலே வெற்றி என்கிற அளவிற்கு அவளுக்கு நல்ல பெயர் இருந்தது. அதனாலே அவளை இந்த கேஸில் இருந்து வாபஸ் வாங்க செய்ய இப்படி மாலதி மூலம் அனுகினார்கள் அந்த தங்கைகள்.
மாலதியை குறைத்து இடை போட்டுவிட்டனர்.
“அது என்ன கேஸ் முத்து?” என்று மகளுக்கு அழைத்து விவரம் கேட்டார்.
வேண்டும் என்றே இந்த ஒரு கேஸை பற்றி மட்டும் கூறாமல், அவள் பார்த்துக்கொண்டிருந்த மற்ற அனைத்து கேஸ்களின் விளக்கத்தையும் கொடுக்க ஆரம்பிக்கவும்,
“இனி உன் வேலையை பத்தி கேட்டேனா பாரு?” என்று போனை வைத்து விட்டார்.
ஆனாலும் அந்த கேஸ் நடக்கும் அன்று, பெர்மிஷன் போட்டு இவர்கள் பள்ளியில் இருந்த எட்டு ஆசிரியர்களை அழைத்து கொண்டு வந்திருந்தார் மாலதி.
அங்கே இருந்த போலீஸ்காரர் பக்கத்தில் இருந்தவரிடம், “என்னய்யா இன்னிக்கு அந்த முத்தாயி லாயர் கேஸ் ஆ? இந்த பொண்ணு வந்தா மட்டும், ஏதோ சினிமாவை பார்க்க வர மாதிரி ஆளுங்க வந்துட்டே இருப்பாங்களே” என்றார் சிரித்துக்கொண்டே.
“ஆமா, ஆனா நிஜமாலுமே அந்த பொண்ணு பேசுனா கேட்டுகிட்டே இருக்கணும் போலத்தான் இருக்கும்” என்றார் பக்கத்தில் இருந்தவர்.
முதலில் தங்கைகள் சார்பாக வாதாட வந்த பெண் வக்கீல்,
“மேடம் இந்த சமூகத்தில் பெண்ணுரிமைக்காக பல வருடங்களாக போராடி சொத்துரிமை பெற்றிருக்கிறோம். அப்படி இருக்கிற நிலையிலே பெண்ணுக்கு சொத்து கொடுக்க கூடாது என்று ஒரு பெண்ணே வாதாட வந்திருக்கிறது மனதிற்கு வேதனை அளிக்கிறது” என்று தான் தன் வாதத்தை தொடங்கினார்.
“ஏம்மா, நாம என்ன பெண்ணுரிமை பட ஷூட்டிங்குக்கா வந்திருக்கோம்.. நேரடியா பாயிண்ட்டுக்கு வாங்க” என்றார் நீதிபதி.
இந்த வழக்கிலே கேஸ் போட்டிருக்கிற வீடு தாரணி, வேணி, சதீஷ் இவங்க மூணு பேரோட அப்பாவன ரங்கன் என்றவர் பெயரில் இருக்கு. அவர் காணாமல் போய் பதினைந்து வருஷம் ஆகுது. இப்ப இந்த வீட்டை சதீஷ் விக்கணும்னு பார்க்கிறாரு. அதுல மூனுல ஒரு பங்கு தான் ஒவ்வொருத்தருக்கும் சேர வேண்டும். இது தான் சட்டப்படியும் தர்மப்படியும் ஒரே வழி. சிக்கலே இல்லாதது இந்த வழக்கு நீதிபதி அவர்களே. அதனால மூன்று பிள்ளைகளுக்கும் சமபங்கு உரிமை இருக்கிறது என்று தீர்ப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தனது வாதத்தை முடித்தார்.
அடுத்ததாக வந்த முத்தாயி, “நீதிபதி அவர்களே, ரங்கன் என்பவர் கடன் தொல்லையினால் ஓடி போனவர். அப்பொழுது எனது கட்சி காரர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தவர்.
தங்கைகள் இருவரும் சிறியவர்கள். அவர்களுக்காக மேலே படிப்பை தொடராமல் வேலைக்கு சென்று, இரு தங்கைகளையும் டிகிரி வரை படிக்க வைத்திருக்கிறார். இப்பொழுது இருவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்.
அதற்கான செலவு கணக்குகள் இதில் இருக்கு.
அடுத்ததாக, இரண்டு தங்கைக்களுக்கும் நன்றாக படித்து வேலையில் உள்ள மாப்பிள்ளைகளை பார்த்து கல்யாணம் செய்து வைத்திருக்கிறார். அதற்கான செலவு கணக்கும் இதில் இருக்கு.
அது மட்டுமில்லாமல், ஓடிப்போன அப்பாவின் கடன்களை தனி ஒரு ஆளாக அடைத்தும் உள்ளார். அதற்கான கணக்கும் இதில் இருக்கு.
அவருக்கு இன்றைய நிலவரப்படி இரண்டு லட்சம் கடன் இருக்கிறது. இரண்டு தங்கைகளுக்கு பிரசவம், தாய் மாமன் சீர் இது எல்லாம் தான் இந்த கடனுக்கான முக்கிய காரணம். அதற்கான கணக்குகள் இதில் உள்ளது.” என்று அனைத்தையும் சமர்ப்பித்தாள்.
“அப்ஜெக்ஷன் நீதிபதி அவர்களே..
பிள்ளைகளை படிக்க வைத்தது, திருமணம் செய்து வைத்தது, பிரசவம் பார்த்தது எல்லாம் செலவு கணக்கில் கொண்டு வர முடியுமா நீதிபதி அவர்களே”
“ஓவர் ரூல்ட்”
அண்ணன் இவ்வளவு கணக்கு வைத்திருப்பார் என்று தங்கைகள் நினைக்க வில்லை. அவர்கள் இருவருக்கும் வேர்க்க ஆரம்பித்தது.
“பெற்ற பெண் பிள்ளைகளின் பொறுப்புகளையே சுமையாக நினைக்கும் பெற்றோர்களே இருக்கிற காலத்தில், தங்கைகளை தன் பிள்ளைகளாக வளர்த்த அண்ணனின் நிலைமை இது தானா?
இப்பொழுது இருக்கிற வீட்டோட மதிப்பு பதினைந்து லட்சம். இது வரை எனது கட்சி காரர் செய்த செலவுகள் கணக்கு, பத்து லட்சத்துக்கு பக்கம் வருகிறது.
குடும்பத்துக்காக தன் படிப்பை விட்டு, தன் வாழ்நாளின் பதினைந்து வருடங்களை அர்ப்பணித்து இருக்கிற மனிதருக்கு.. தன்னலமற்று உழைத்தவருக்கு நியாயமாக இந்த வீடு முழுவதும் சேர வேண்டும். இருந்தாலும்
வீட்டை விற்று கடனை அடைத்து மீதம் உள்ள பணத்தை மூன்று பங்காக பிரித்து கொள்வோம் என்று கூறி இருக்கிறார்.
ஆனால் இவர்களோ, வீட்டை விற்ற பணத்தை மூன்றாக பிரித்து கொடுத்துவிட்டு, பின் அவனது பங்கில் இருந்து கடனை அடைக்குமாறு கூறி உள்ளனர். இது எப்படி நியாயம் ஆகும்?”
நீதிபதி அந்த தங்கை இருவரையும் அழைத்து, முத்தாயி கூறுவது உண்மையா என்று வினவினார்.
“அண்ணன் எங்களுக்கு நிறைய செஞ்சிருக்கு.. ஆனால் இவ்வளவு என்று எங்களுக்கு கணக்கு தெரியாது. கணக்கு பார்த்துதான் செஞ்சதும்னு தெரியாது. அண்ணன் சொல்ற மாதிரி கடனை கட்டிட்டு மிச்சத்தை கொடுத்தா போதும்” என்றனர் இருவரும்.
கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்குமே கடுப்பாக இருந்தது அவர்களது பேச்சு.
வக்கீல் இரண்டு பேரும் அவங்க வாதத்தை நிறைவு செய்யலாம் என்றார் நீதிபதி.
“எனது கட்சிகாரர்கள் இருவரும் பெருந்தன்மையாக அவரது கடன் பணத்தை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பணத்தை கொடுத்தால் போதும் என்று விட்டுக்கொடுக்கிறார்கள் நீதிபதி அவர்களே. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிடலாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எதிர் கட்சி வழக்கறிஞர் அவரது வாதத்தை நிறைவு செய்தார்.
“இந்த வழக்கின் தொடக்கத்தில் எதிர் கட்சி வழக்கறிஞர் கூறியதை நான் முழுவதுமாக ஏற்கிறேன் நீதிபதி அவர்களே. அதாவது பெண்ணுரிமை, சொத்துரிமை இது எல்லாம் எவ்வளவு முக்கியம் என்பதை. அதே போல இன்னொன்னும் முக்கியம். அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பத்தில் எவ்வளவு உரிமை இருக்கோ அதே போல கடமையும் இருக்கு.
இவ்வளவு சொல்கிறார்களே, இவர்களின் அம்மா திருமதி லட்சமி அவர்கள் மூன்று ஆண்டுகளாக வாதம் வந்து படுக்கையில் இருக்கிறார். வேலைக்கு செல்வதால் தங்களால் பார்த்து கொள்ள இயலாது என்று இருவருமே ஒதுங்கி கொண்டார்கள். அவரை பார்த்து கொள்வதும் சதிஷ் தான்.
சட்டத்துக்கு முன் ஆண் என்ன பெண் என்ன? ஒரு நல்ல மகனாக, பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல், தங்கைகளை கரை சேர்த்து, அப்பாவின் கடன்களையும் அடைத்து, இன்று வரை தாயையும் கவனித்து கொள்ளும் ஒரு நேர்மையான மனிதனுக்காக தான் இந்த வழக்கு. நல்லவனாக இருந்தால் ஏமாளியாக நடத்துவார்களா? அதுவுமில்லாமல் இது பரம்பரை சொத்தும் கிடையாது. இவர்களின் அப்பா என்கிறவர் கடன் வாங்கி, அந்த கடனையும் அடைக்காமல் சென்றவரால் வாங்கப்பட்ட வீடு. அப்படி பார்த்தால் அந்த கடனை அடைத்தவர் எனது கட்சி காரர் தான். பின் இந்த சொத்தில் எப்படி இவர்களுக்கு பங்கு கொடுக்க முடியும்.
இந்த வீடு , தனக்காக என்று இப்பொழுது கூட யோசிக்காத இந்த மனிதருக்கே செல்ல வேண்டும்.
அது மட்டுமில்லாமல், தாயின் பொறுப்பையும் இந்த பெண்கள் ஏற்க வேண்டும். அவருக்கு ஆகும் மருத்துவ செலவுகளில் மூன்றில் ஒரு பங்கை இருவரும் கொடுக்க வேண்டும். அதுவுமில்லாமல், நல்ல பெண்ணாய் பார்த்து அண்ணனுக்கு கல்யாணம் செய்யும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இதை எனது கட்சிகாரர் கேட்கவில்லை தான். ஆனால், இது சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் நீதிபதி அவர்களே. ஒரு தன்னலமற்ற அண்ணனுக்கு செய்யும் கடமையும் பொறுப்பும் பெண்பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் இங்கே ஒரு ஆணின் உணர்வுகளும், அவனது உயர்ந்து உள்ளமும் நசுங்கிவிடக்கூடாது என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் வாதத்தை முடித்தாள் முத்தாயி.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கு தொடரப்பட்டுள்ள அந்த வீட்டின் உரிமைகள் முழுவதுமாக சதீஷ்க்கே வழங்கப்படுகின்றன என்று இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
“அதுவுமில்லாமல், வழக்கறிஞர் பரிந்துரைத்தபடி, அம்மாவின் பொறுப்பை மூன்று பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கவேண்டும்” என்று கட்டளை இடுகிறது.
“இனியாவது நிதர்சனத்தை புரிந்துகொண்டு தன் வாழ்வை பார்க்குமாறு சதீஷிற்கு அறிவுரை வழங்குகிறது” என்று தனது தீர்ப்பை வழங்கினார் நீதிபதி.
தொங்கிப்போன முகத்தோடு அமர்ந்திருந்தார் மாலதியிடம் பேசிய அந்த தங்கையின் மாமியார்.
மற்ற ஆசிரியர்கள் அனைவரும் மாலதியிடம் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். முத்தாயியிடமும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துவிட்டே புறப்பட்டனர்.
வீட்டிற்கு சென்று மகளின் பெருமையை வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார் மாலதி சௌந்தரிடம்.
“இதை அவகிட்ட நேரடியா சொன்னா சந்தோச படுவா தானே மாலு?”
“எதுக்கு, என் தலை மேலே ஏறி உட்காரவா? போங்க போங்க போய் வேலை வெட்டிய பாருங்க” என்று எழுந்து சென்றுவிட்டார்.
——————————-l
error: Content is protected !!