Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்Uncategorized

தூறலாய் நீ.. சாரலாய் நான்…31

தூறல் – 31
சாட்டையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த அருண் பெற்றோரின் வார்த்தைகளில் பேசவும் முடியாமல் பதில் சொல்லவும் முடியாமல் தலை கவிழ்ந்து கண்ணீரோடு நின்றிருந்தனர் கர்ணனும் லதாவும். எரிச்சலோடு அவர்களிடம் சென்றார் ராமலிங்கம். 


Advertisement

“நீங்க அழற மாதிரியோ தல குனிஞ்சு நிக்கிற மாதிரியோ இங்கே எதுவும் நடக்கல. உன் புள்ள வாழ்க்கைக்கு விமோச்சனம் கிடைச்சிருக்குன்னு நினைச்சு சந்தோஷப்படு கர்ணா… எல்லாத்தையும் நான் தெளிவா சொல்றேன்… எல்லாருக்குமே சொல்றேன்… ஆனா ஒரு பய இடையில வாய தொறக்கக் கூடாது. அம்புட்டுப் பேரும் அமைதியா இருந்தா சுமூகமா இந்த பிரச்சனையை பேசி முடிச்சிடலாம்… இல்லையா கலவரம்தான் பண்ணுவோம்னா நானே போலீஸை வரவழைச்சுக்கிறேன். என் தம்பி இதே மதுரை போலீஸ் ஸ்டேஷன்லதான் சப் இன்ஸ்பெக்டரா இருக்காய்ன். காமு… அவனுக்கு போன் போட்டு வரச் சொல்லு… ரொம்ப துள்ளுறாய்ங்க… கைய கால உடைக்கிறதை தவிர வேற வழியில்ல…” 
உரத்தக் குரலில் அவர் திடமாகக் கூற சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டிருந்த கூட்டம் ஓரளவு அமைதி அடைந்திருந்தது.

Advertisement

Advertisement

அனைத்தையும் ராமலிங்கமே பேசத் தொடங்கி இருந்தார். தெளிவாக அனைத்தையும் கூறியும் முடித்திருந்தார்.
“உன் புள்ள உசுர மட்டும் காப்பாத்தல… அவ வாழ்க்கைக்கே வழி கொடுத்துட்டாய்ன் இந்த குரு… இவனவிட நல்லவன இந்த உலகத்துல எந்த மூலையிலும் உன்னால தேடமுடியாது… தேடி பொறுக்கிக் கொண்டு போய் குடுத்தியே ஒரு பொறுக்கி குடும்பத்துக்கு… எங்க வந்து நிக்குது பாத்தியா..? இனிமேலாவது அந்தப் புள்ள விருப்பப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமா வாழட்டும்…”

Advertisement

தெளிந்த குரலில் கூறிய ராமலிங்கம் அருண் குடும்பம் நிற்கும் பக்கம் திரும்பினார். 
“இந்தாப்பா ஏய்… அஞ்சலி கிளம்பியாச்சு… இன்னும் மூனு மணி நேரத்துல இங்க வந்துருவா… அவ எங்க எங்க கையெழுத்து போடணுமோ அம்புட்டு பத்திரத்தையும் கொண்டு வந்து வச்சிருங்க… போட்டு குடுத்துருவா. உங்க வீட்ல இருந்து சல்லிக் காசு அவளுக்கு வேணாம்… அவ வாங்கவும் மாட்டா… உங்க பையன் சம்பாதிச்ச காச நீங்களே வாயில போட்டு மென்னு தின்னுக்கங்க… இதுக்கு அப்புறம் அவ விஷயத்துல நீங்க யாரும் தலையிடக்கூடாது… தேவையில்லாத எதையும் பேசக்கூடாது…நான் சொன்ன அம்புட்டு கதையும் கேட்டீகள்ல… இது கதையில்ல… அம்புட்டும் நெசம்… அவள வாழவைக்க வேற ஒருத்தன் வந்தாச்சு. அவளையும் அவ புள்ளையையும் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவாய்ன். உங்க காச வாங்கிட்டு நீங்க போயிட்டே இருக்கலாம்… இப்ப எடத்த காலி பண்ணி பத்திரத்தோட மூனு மணி நேரம் கழிச்சு இங்க வாங்க… அம்புட்டு பைசலயும் முடிச்சுப்புடலாம்…”
ஓரளவு தன்மையாக அதேநேரம் கறாராகவும் அவர்களிடம் பேசி இருந்தார் ராமலிங்கம். 
“ராமண்ணா…”
குருவின் கடினமான அழைப்பில் ராமலிங்கத்தோடு அனைவருமே அவனிடம் திரும்பினர்.
“அஞ்சு இங்க வந்ததுக்கு அப்புறம் என்ன வேலை செய்யணுமோ அந்த வேலையை மட்டும்தான் செய்வா… அனாவசியமான வார்த்தைகள் யாராவது ஒருத்தர்… ஒருத்தர் வாயில இருந்து வெளியே வந்தாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன்… சொல்லி வைங்க…”
அர்ஜுன் தாஸின் அதிரடிக் குரலில் அருணுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது அவன் மட்டுமே அறிந்த நிஜம். ஆனாலும் முகத்தில் ஒருவித அலட்சியத்தை காட்டியபடிதான் நின்றிருந்தான்.
பின் தங்களுக்குள் ஏதேதோ முணுமுணு சலசலவென பேசிக் கொண்டவர்கள் மடமடவென வெளியேறி இருந்தனர். 
“விட்றா விட்றா… வருவாள்ல… நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேக்காம விடமாட்டேன்…” 
வாசல் கேட்டை தாண்டிச் சென்று நின்று உரக்க கத்திக் கொண்டே காரில் ஏறி இருந்தார் வசந்தி. எங்கே உள்ளே குரல் கொடுத்து உயர்ந்த மனிதன் பாய்ந்து விடுவானோ என்ற பயம் போலும்.
குருவின் வீட்டு வாசலில் நின்று ஆங்காங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நபர்களும் தங்களுக்குள் ஏதேதோ கிசுகிசுத்தபடி நகர்ந்து சென்றிருந்தனர்.
இன்னும்கூட கோபத்தின் சுவடு குறையாமல் கீழிதழை அழுத்தமாய் கடித்து இரு கைகளையும் இறுக்கிப் பிடித்து இருக்கையில் அமர்ந்திருந்தான் குரு. சலசலப்பு ஓய்ந்து அந்த வீட்டில் ஒருவித நிசப்தம் நிலவியது. அங்கு கர்ணன், லதா, இராமலிங்கம், காமாட்சி, குரு மட்டுமே இருந்தனர். 
இன்னும்கூட பேச்சை தொலைத்து அதே மௌன நிலையில்தான் நின்றிருந்தனர் கர்ணனும் லதாவும். இருக்கைகளை அவர்களின் அருகில் இழுத்துப் போட்டு இருவரையும் அமரச் செய்தார் காமாட்சி. 
ஓரளவு தன்னிலை அடைந்திருந்த குரு மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டு அவர்களை நிமிர்ந்து பார்த்தான். 
“நீங்க என்னைப்பத்தி என்ன மாதிரி யோசிக்கிறீங்க என்டு எனக்கு தெரியாது. உங்ககிட்ட எல்லாத்தையும் மறைச்சிடணும் என்டு நான் நினைக்கல. சந்தர்ப்பத்துக்காகதான் காத்திருந்தேன்… என்னைப்பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது… என்னோட கடந்த காலத்தைப் பத்தியும் நீங்க தெரிஞ்சுக்கணும்…” என்று ஆரம்பித்தவன் தனது முந்தைய வாழ்க்கையை பற்றி முழுமையாக விளக்கியிருந்தான். 
“நான் இலங்கை அகதிதான்… தமிழ்நாட்டில் ஒன்ட வந்தவன்தான். ஆனா ஒரு உறுதியை மட்டும் உங்களுக்கு கொடுக்க முடியும். காலம் முழுக்க அஞ்சு, சவி ரெண்டு பேரையும் கண்கலங்காம வச்சு காப்பாத்தக்கூடிய தைரியமும் திறமையும் எனக்கு இருக்கு. அது இங்கே இருந்தாலும் சரி… எங்கே இருந்தாலும் சரி… அவங்களை சந்தோஷமா நிம்மதியா என்னால வச்சுக்க முடியும். காசு, பணம் அடையாளம், அங்கீகாரம் இதெல்லாம் கண்டிப்பா ரொம்ப ரொம்ப தேவையான ஒன்டுதான்… எனக்கு தெரியும்… இங்கே என்னால எந்தளவு அடையாளத்தோட வாழ முடியுமோ அந்த அடையாளத்தோட என் குடும்பத்துக்கு தேவையான நிம்மதியை கொடுத்து காலம் முழுக்க அவங்களை கஷ்டமே இல்லாம பாத்துக்க முடியும். அந்த ஒரு நம்பிக்கையை என்னால உங்களுக்கு கொடுக்க முடியும்…” 
தெளிவாக நிதானமாக பேசியவனை அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தனர் இருவரும். 
“இந்த நேரத்துல இன்னொரு உறுதிமொழியையும் கொடுக்கிறேன்… சவி என் பொண்ணு… அவ மனசு முழுக்க நான்தான் அப்பாவா நிறைஞ்சு இருக்கேன். அந்த நிறைவை, அந்த எண்ணத்தை எந்த காலத்திலும் மாத்தமாட்டேன்… யாரையும் மாத்தவும் விடமாட்டேன். இனி அவங்க ரெண்டு பேரும்தான் என்னோட உலகம்…
என்னோட எதிர்காலம்… என்னோட வாழ்க்கை… எல்லாமே. உங்க கண்ணை விட்டு மறைஞ்சு போனவளை உங்க கண்ணுக்கே காட்டாம அவளுக்கு தாலி கட்டி எங்களோட வாழ்க்கையை எங்கே வேணாலும் என்னால ஆரம்பிச்சிருக்க முடியும். ஆனா அதுல எனக்கு உடன்பாடு இல்ல. நான்தான் என்னோட உறவுகளை இழந்துட்டேன்… ஆனா அஞ்சலிக்கு நீங்க இருக்கீங்க… இது ஒற்றை வார்த்தையில முடிஞ்சு போற உறவு கிடையாது. இப்போ அவ கோபத்தில இருக்கா… ஆனா என்னைக்கா இருந்தாலும் அப்பா அம்மா என்கிற உறவு ரொம்ப ரொம்ப அவசியமான ஒன்டு. உங்க ஆசிர்வாதத்தோட எங்க வாழ்க்கை ஆரம்பிக்கணும் என்டுதான் இத்தனை நாட்களை தள்ளிப் போட்டு வச்சிருக்கேன்…” 
நேருக்கு நேர் பார்த்து நிமிர்வாக ஆளுமையாக பேசியவனை மெச்சுதலாக பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தனர் ராமலிங்கமும் காமாட்சியும். அஞ்சலியை பெற்றவர்களுக்கோ பேச வார்த்தைகளை தேடவே முடியவில்லை. என்ன பேசுவது..? 
எங்கேனும் ஒருபுறம் தங்கள் மகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்குத்தானே அவர்களும் வந்திருந்தனர். ஆனால் அருகிலேயே ஒருவன் அவளுக்கும் அவள் மகளுக்கும் அனைத்துமாகி நிற்பான் என்று நினைத்தும் பார்க்கவில்லையே. 
இதோ அனைத்தையும் தெளிவாக கூறிவிட்டான். ராமலிங்கம், காமாட்சி போன்ற நிறைந்த நல்ல மனம் படைத்த மனிதர்கள் அவனைப் போன்ற ஒருவன் இனி எங்கும் இல்லை என்று அவன்மேல் இப்படி ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்கின்றனர். எதிரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவனின் கண்களில் தெரிந்த தீட்சண்யமும் தெளிவும் அவர்கள் இதயத்தை இலகுவாக்கின.
அந்த அருணை பார்க்கும் போதெல்லாம் இதயத்தில் படபடப்பும் பரிதவிப்பும்தானே இயல்பாகவே எழும். எப்படியேனும் மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று ஒரு மனம் எண்ணித் தவித்தாலும் இன்னொரு மனம் அவனிடம் காலம் முழுக்க மகள் வாடி வதங்கி வீணாய் போய் விடுவாளோ என்ற பேரச்சமும் பெரும் வேதனையும் இதயம் முழுக்க நிரம்பித்தானே கிடந்தது. 
இந்த நொடி அத்தனை அச்சமும் விலகிய உணர்வு. 
இதயத்தில் அடைப்புகள் அனைத்தும் விலகிப் போன உணர்வு.
அவர்களையும் மீறி அவர்களது மனம் தெளிந்துபோய் இருந்தது… 
நிம்மதிப் பெருங்காற்று தென்றலாய் இதயம் முழுக்க வருடிக் கொண்டிருந்தது.
காமாட்சி ராமலிங்கத்திடம் கண் ஜாடை செய்து ஏதோ கூற தலையசைத்து வெளியே சென்றவர் சில நிமிடங்களில் அனைவருக்கும் உணவு வாங்கி வந்திருந்தார். குரு உட்பட மற்றவர்களையும் வற்புறுத்தி அமர வைத்து உண்ணவும் வைத்திருந்தார். 
“கர்ணா… தேனிக்காரய்ங்க தெளிவா வந்துருவாய்ங்க… நம்ம தரப்புல என் தம்பியை வேணா இங்க வரச் சொல்லட்டுமா..? தேவையில்லாம சத்தம் கொடுத்தாய்ங்கன்னா தட்டி வைக்கிறதுக்கு ஒரு ஆள் இங்க வேணும்…” 
ராமலிங்கத்தின் வார்த்தைக்கு வேண்டாம் என்று தலையசைத்தார் கர்ணன். 
“தேவையில்ல ராமு… எவனும் இனி எதுவும் பேச முடியாது… இனி எவனாவது பேசட்டும்… அதுக்கப்புறம் நான் பார்த்துக்கிறேன். நானும் லதாவும் கபிலனுக்கு போன் போட்டு எல்லாத்தையும் ஒரு வார்த்தை சொல்லிடுறோம்… என்ன இருந்தாலும் கூடப் பிறந்தவன் இல்லையா..?” 
சொன்னவர் இதழ்களில் ஓர் கசந்த புன்னகைதான் இறுதியாக மின்னியது. 
கணவனும் மனைவியும் மகனுக்கு அழைத்து விபரங்களை கூற தங்களின் வீட்டிற்கு சென்றிருந்தனர். 
தனக்கு இருபுறமும் அமர்ந்திருந்த ராமலிங்கம் காமாட்சி இருவரின் கைகளையும் உரிமையோடு பற்றிக் கொண்டான் குரு. 
“ராமேஸ்வரத்தில இருந்தப்போ பரசுராமன்னு ஒரு நண்பனை தவிர பெரிய பழக்கத்தை நான் ஏற்படுத்திக்கல. எனக்கு ரொம்ப நெருக்கமான நல்ல நண்பன் அவன். அதுக்கப்புறம் இங்கே உங்களை மாதிரி அருமையான மக்களோட உறவும் எனக்கு கிடைச்சிருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்காக நீங்க பேசுனது எனக்கு அவ்வளவு பெரிய பலத்தை கொடுத்தது. உங்க ரெண்டு பேரையும் எத்தனை காலமானாலும் மறக்கவே மாட்டேன்…” 
நெகிழ்வோடு சொன்னவனின் கன்னத்தில் செல்லமாக தட்டினார் ராமலிங்கம். 
“ஒரு மனுசனோட செத்த நேரம் பேசினா அவன் எப்படிப்பட்டவன்னு ஆராய்ஞ்சு கண்டுபிடிச்சிடுவேன் குரு. உன்ன பார்த்த முதல்நாள்ல இருந்து உன்மேல நல்ல அபிப்பிராயம்தான் வந்தது. உன்கூட பழகப் பழக உன்னப்பத்தி ஒவ்வொரு விஷயங்களும் தெரியத் தெரிய உன்மேல பிரியமும் அன்பும் அதிகம்தான் ஆச்சு. அஞ்சலிக்கு உன்னை தவிர வேற ஒருத்தனோ உனக்கு அஞ்சலியை தாண்டி வேற ஒரு பொண்ணோ சரியான இணையா இனி அமைஞ்சிட முடியாது. இனி உங்க வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும்… சந்தோஷமா வாழ்வீங்க…” 
ஆழ்மனதில் இருந்து கூறியவரை அழுத்தமாக அணைத்துக் கொண்டான் குரு.
மகனிடம் பேசி முடித்து மீண்டும் குருவின் வீட்டிற்கே வந்திருந்தனர் கர்ணனும் லதாவும். 
“கபிலன் ராத்திரி பிளைட்ல கிளம்பறானாம்…நாளைக்கு வந்துருவாய்ன்…”
கர்ணன் கூற சுரத்தே இன்றி தலையை மட்டும் ஆட்டிக் கொண்டார் ராமலிங்கம்.
நெருக்கிப் பிடித்து நேரமும் ஓடியிருக்க வீட்டின் முன் ஆட்டோ வந்து நின்றது. ராதா, அஞ்சலி இருவருமே ஆட்டோவில் இருந்து இறங்க ராதாவின் கையில்தான் இருந்தாள் சவி. 
பதட்டத்தோடு விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தாள் அஞ்சலி. அவள் கண்கள் முழுக்க குருவின் மீதுதான்… அங்கே அமர்ந்திருந்த தன்னை பெற்றவர்களை திரும்பியும் பார்த்திருக்கவில்லை. அவர்கள்தான் விழிகள் கசிய அவளை பார்த்தபடி இருந்தனர். 
இத்தனை மாதங்கள் கழித்து வருபவள் பாசத்தின் பிடியிலாவது கண்களை சற்றேனும் அவர்கள் பக்கம் திருப்பி இருக்க வேண்டுமே… மனம் முழுக்க வெறுமையும் வெறுப்பும் விரவிக் கிடந்தவளுக்கு அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற பேராவல் மனதுக்குள் அடங்கிப் போயிருந்தது போலும். அவள் விழிகள் முழுக்க அவளவனின் தோற்றத்தின் மீதுதான். 
விரைந்து நடை போட்டு வந்தவள் குருவினை நெருங்கி அவசரமாக அவனை மேலிருந்து கீழாக ஆராய்ந்தாள். 
“அடிச்சானா..? சொல்லுங்க… அந்த நாய் உங்கள அடிச்சானாமே..?”
உரிமைக்குரலில் சத்தமாக கேட்டவளிடம் புன்னகையைத்தான் பதிலாகத் தந்தான் குரு. 
“சீலிங்கை முட்டுற அளவுக்கு வளர்ந்து நிக்கிறீங்களே… அவன் கைய ஒடிச்சு கரி அடுப்புல போட முடியலையா உங்களால..? அவன் குடுத்தா நீங்க வாங்கிட்டு நின்னீங்களா..?” 
தன்னவன் தான் வெறுக்கும் ஒருவனிடம் அடி வாங்கினானே என்ற ஆத்திரத்தில் அவன்மேல் கொண்ட நேசத்தை கோபமாக மாற்றி உதிர்த்துக் கொண்டிருந்தவளை காமாட்சியும் ராமலிங்கமும்கூட சிரிப்போடுதான் பார்த்தனர்.
“ஏய் அஞ்சலி… இந்தா புள்ள… இங்காரு…” சிரிப்போடு அழைத்த காமாட்சியிடம் திரும்பினாள் அஞ்சலி. 
“அந்தப் பய ஒத்த அடி அடிச்சுப்புட்டாய்னு சொன்னதுக்கு இம்புட்டு கொந்தளிக்கிறியே… உன்னப்பத்தி அசிங்கமா பேசினான்னு மூக்குல தக்காளி சட்னியை ஊத்தில்ல அனுப்பி இருக்கு குரு… இனிமே மூனு ஓட்டை வழியா அவன் மூச்சு விடணும் தெரியுமா..? அந்த மூக்குல எக்ஸ்ட்ராவா இன்னொரு ஓட்டையை போட்டாச்சு. இன்னும் செத்த நேரத்துல வருவாய்ன் பாரு… பாதி மூஞ்சிக்கு கட்டு போட்டுக்கிட்டுதான் இனி அவன் வரணும்…” 
இதனைக் கேட்டு ராமலிங்கம் சத்தமிட்டே சிரித்திருக்க இவனும் அவனை அடித்தான் என்பது தெரிந்து நிம்மதியாக மூச்சுவிட்டு தன்னவனை நிறைவாகப் பார்த்தாள் அஞ்சலி. 
இதற்குள் ராதாவின் கையில் இருந்த சவி “அப்பா…” என்றபடி குருவிடம் வேகமாகப் பாய்ந்திருந்தாள். அருகில் இருந்த தாத்தா பாட்டியைகூட அவள் கவனித்திருக்கவில்லை.
மகளை இறுக்கி அணைத்து கன்னங்களில் அவன் ஆசை முத்தமிட அவளும் ஆசையோடு அவன் கழுத்தோடு கட்டிக் கொண்டு அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டு அவன் தோளில் சாய்ந்து கொள்ள இந்த பாசப் பரிமாணத்தை விழிகள் நிறைத்து பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு நெஞ்சம் நிறைந்து நெகிழ்ந்து போனது. 
வேஷ பூச்சுக்களற்ற நிஜமான நேசம்…
அடுத்தவரின் முன்னிலையில் அலங்காரமாய் வெளிப்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத ஆழ்மன அன்பு. 
நிறைந்து புன்னகைத்த அஞ்சலி விழிகளை திருப்பி தன்னை பெற்றவர்களை பார்த்தாள். 
அந்த பார்வையில் ஒரு நிமிர்வும் செருக்கும் நிறைந்து நின்றது. 
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!