Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே-12

    தீபன் வீட்டிற்கு சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது. பவ்யாவுடனேயே தங்கி விட மூன்று நாட்கள் கடைக்கும் வராமல் இருக்க தேசிகன் பொங்கி விட்டார்.

    “என்ன நினைச்சுட்டு இருக்கான் அவன். வீட்டுக்கும் வரலை கடைக்கும் வராமல் இருந்தால் யார் தொழிலைப் பார்க்கிறது?”என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்க



Advertisement

    “எங்களை கேட்டா?,நாங்க என்ன செய்ய முடியும்?”என்ற வளர்மதி “அவன் பொண்டாட்டி முந்திய புடிச்சுக்கிட்டே திரியுறான்.அவ வீட்டாளுக என்னம்மோ ஓவியமா பேசுறாங்க”என்று நொடித்தார்.

Advertisement

    “அவனை…”என்று பல்லைக் கடித்த தேசிகன், தீபனுக்கே அழைத்து விட அவனோ இணைப்பைத் துண்டிக்க இன்னும் கோபமானார் தேசிகன்.

Advertisement

    “வரட்டும் பேசிக்கிறேன் எங்கிட்டவே ஆட்டங் காட்டுறானுவளா”என்று குதித்தவர் ஷோரூமிற்கு கிளம்பி விட்டார்.

Advertisement

    அவர் கிளம்பிச் சென்றதுமே பவ்யாவிற்கு அழைத்து விட்டார் வளர்மதி.

    தீபன் தான் கைபேசியை எடுத்தான்.

    “என்னம்மா?”என்ற சலிப்பான கேள்வியில் புருவம் சுருங்கிய வளர்மதியோ கடைக்கு வராதது பற்றி கேட்க

    “பவிக்கு ரொம்ப முடியலை மா. வாமிட் பண்ணிட்டே இருக்கா அதான் கூட இருக்கேன். ஏன் ரெண்டு நாள் முன்னாடி சொன்னேனே மறந்து போச்சா?”என்று கடுகடுக்க

    “அதுக்கு ஏன் டா அப்பா ஃபோனை எடுக்கலை நீ?”என்று அவனிடத்தில் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குக் கிளம்ப

    “டாக்டர் கிட்ட பேசிட்டு இருந்தேன் மா. அப்போ எப்படி எடுக்க முடியும்?”என்று கடுகடுத்தவன்,”ஒரு ரெண்டு நாள் கூட ஷோரூமை பார்த்துக்க மாட்டீங்களா?”என்றான் எரிச்சல் மிகுந்த குரலில்.

    மகனின் குரலில் இருந்த எரிச்சலையும் பவ்யாவின் செல்வ வளமையும் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிட்டு மகனின் பிடியை எந்த இடத்திலும் விட்டு விடக் கூடாது என்ற எண்ணம் தோன்ற வளர்மதியின் மனம் வேக வேகமாக அவசர திட்டம் ஒன்றை தீட்டியது. ‘தனக்கு சாதகமான விஷயங்கள் எதுவும் உண்டா?’ என்று யோசித்தவர், அதற்காக மருமகளை வீட்டிற்கு வர வைக்கும் யோசனையை செயல்படுத்த நினைத்தார். அதன்படியே தீபனிடமும் பேசியவர் இரண்டு நாட்களில் பவ்யாவை வரவழைத்ததோடு மட்டுமில்லாமல் ஒரு சமையல்காரையையும் தயார் செய்து வெளி வேலைகளுக்கும் ஆள் போட்டு இளைய மருமகளின் மனதை குளிர வைத்தார். நீரதிக்கு எதில் சந்தோஷமோ இல்லையோ மேல் வேலைக்கும், சமையலுக்கும் ஆள் போட்டது மிகவும் சந்தோஷம் ஆகிப்போனது. இனி கொஞ்சமாவது ஓய்வு எடுக்கலாமே என்ற எண்ணம் தலை தூக்க மகிழ்ச்சியில் திளைத்தாள் நீரதி.

    எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென ஒரு நாள் வளர்மதியின் அண்ணன் தன் மகனுக்கு வேலை எதுவும் தற்சமயம் இல்லாததால் குடும்பம் பிரிந்து கிடக்கிறது என்று தங்கையிடமும், தங்கை கணவரிடமும் மன்றாடி அவனை மில்லில் வேலை கொடுக்கும் படி செய்ய வைத்தார். தரங்கினியும் தன் பங்கிற்கு அமுதனிடம் பேசியதில் எல்லாம் கை கூடி வர தரங்கினியின் அண்ணன் சுபாஷ் மரம் மில்லிற்கு வேலை செய்ய கற்றுக் கொள்வதற்காக அங்கே வந்து தங்கினான். முதலில் அமுதனோடு அவனுக்கு உதவியாக செல்வதாக தான் பேச்சு இருந்தது. ஆனால் அவனுக்கு பயணம் செய்வதில் இருந்த ஒவ்வாமையும், சோம்பேறித்தனமும் இணைந்து கொண்டதில் வேறு வழியின்றி தேசிகன் இன்னொரு முடிவு எடுக்க நிர்பந்திக்கப்பட்டார். அது சுபாஷ் மரமில்லில் இருந்தபடி சூப்பர்வைஸ் செய்வது தான். அமுதனும் மர மில்லிலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட ஆழியனும் சம்மதித்தான். ஏனெனில் ஆழியன் அங்கே வேலை செய்பவர்களை கண்காணித்தபடி இருந்தாலும், தரமான மரங்கள் ஏதேனும் வந்தால் தானும் ஏதாவது மரப் பொருட்களை செய்வதில் மும்முரமாகி விடுவான். மரத்திலான கலைநயப் பொருட்கள் செய்வதில் அவனுக்கு இருந்த ஆர்வமும் இஷ்டமும் தன்னைப்போல் அதனை செய்ய வைக்கும்.

    கலைநயப் பொருட்கள் கண்காட்சியில் தானே காதலியாக நீரதி கிடைத்தாள். என்ன தான் மரமில்லில் அவன் இருந்தாலும் தனக்கென தனியாக ஒரு கலைக்கூடம் அல்லது மரத்திலான கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையாவது திறந்து விட வேண்டும் என்ற லட்சியமும், ஆசையும் அவனுக்கிருந்தது.

    அதைக் கொண்டே சுபாஷ் அங்கே மற்றவர்கள் வேலை செய்கிறார்களா இல்லையா என்று பார்ப்பதற்கு தானே இருக்கிறான். இருந்துவிட்டு போகட்டும். இங்கே பண பரிவர்த்தனை கூட நடப்பதில்லையே என்ற எண்ணத்தில் சரியென்று சம்மதித்திருந்தான் ஆழியன்.

    அவன் வேலை செய்தது எல்லாம் சரி தான் ஆனால் “இவ்வளவு பெரிய அத்தை வீடிருக்கையில் வெளியே தங்குவதா?” என்ற வளர்மதியின் கேள்வியில், மாடியில் நிலா தங்கும் அறை அவனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது.

    அசூசையோ சங்கடமோ இன்றி வலம் வந்தவனை வீட்டினரும் எதுவும் சொல்லவில்லை. மனைவி பிள்ளைகளை பார்க்க வாரம் ஒரு முறை விஜயம் செய்கிறான் சொந்த வீட்டிற்கு.

    அவன் அங்கே இருப்பதோ தங்குவதோ நீரதிக்கும் பவ்யாவிற்கும் பிரச்சினை இல்லை. ஆனால் அவனுக்கு பிடித்த சமையலை செய்ய வேண்டும் அவனுக்கென்று சூடாக கொடுக்க வேண்டும் இப்படி இத்தனை அவனுக்கென்று போனதில் பொறுமையின் சிகரம் நீரதியே கொந்தளித்துவிட்டாள்.

    “இதோப் பாருங்க அத்தை. என்னால சமையல் தான் செய்ய முடியும். அவர் வர்ற வரைக்கும் காத்திருந்து சூடா தோசை வார்க்கணும்னா அது முடியாது. அப்படி அவசியம் செய்யணும்னா நீங்களோ அல்லது தருவோ செய்ங்க. எவ்வளவு நேரம் கண் விழிச்சு நான் உட்கார்ந்து இருப்பேன்?”என்று சத்தமாகவே பேசிவிட்டாள்.

    “அவன் உனக்கும் அண்ணன் மாதிரி தான் அவனுக்கு செய்யக் கூடாதா?”என்றதில் இம்முறை பவ்யா கடுப்பாகி விட்டாள்.

    “அண்ணன் மாதிரி தான் அண்ணன் இல்லையே… என் அண்ணனா இருந்தாலும் என் புகுந்த வீட்டில் ரைட்ஸ் ஒரு லிமிட் தான். மாசமா இருக்கற நாங்க எதுக்கு இதை செய்யணும்?, அவசியம்னா அவங்க அவங்க சொந்தத்தை அவங்க அவங்களே கவனிச்சுக்க வேண்டியது தான்.”என்றாள் சுள்ளென.

    “நீ என்ன ம்மா”எனும் போதே வந்து விட்ட தேசிகன் “வளரு பேச்சைக் குறை. இந்தாம்மா தரு. இதெல்லாம் நீதான் பார்த்துக்கணும். பிள்ளைத்தாட்சி ரெண்டும் இதுக்காக கண்ணு முழிக்குங்களா?”என்றார் என்றும் இல்லாத திருநாளாக.

    அன்றிலிருந்து தரு அவள் அண்ணனுக்கு சமைத்து தந்திருப்பாள் என்று நினைத்தால் நாம் தான் ஜோக்கர் ஆவோம். தரங்கினி அப்படி ஒரு செயலை செய்யவே இல்லை என்பதும், ” இரவு உணவை ஆழியனோடு அங்கையே உண்டுவிட்டு வரும்படி சொல்லி விட்டேன் இனி இரண்டு கேரியர் கொடுத்து விடுங்கள்” என்று கூறி விட்டாள்.

    “அவர் இனிமே இங்கேயே எட்டு மணிக்கு எல்லாம் வந்து சாப்பிடறதா சொல்லிட்டாரு. இனி டிஃபன் தந்து விடத் தேவை இல்லை.”என்று கூறிய நீரதி ‘நீ உன் அண்ணனை பார்த்தால் பாரு இல்லாட்டி போ’என்ற ரீதியில் பார்த்து விட்டுச் சென்றாள்.

    “என்னத்தை இது ?”என்று புகார் படித்த தரங்கினியிடம் “புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்”என்று முணுமுணுத்து விட்டுச் சென்றார் அவர்.

    ********

    இந்த நிலையில் பவ்யாவை வளைகாப்பு போட்டு அழைத்துச் சென்றனர் அவள் வீட்டினர். அப்பத்தா அப்போதே கூறி விட்டார். நீரதிக்கும் சேர்த்தே செய்ய வேண்டும் என்று. இரண்டாம் பிரசவம் தானே என்று மறுத்த வளர்மதியிடம் “ஒரு பொண்ணுக்கு செய்யும் போது இன்னொண்ணுக்கு ஆசை வராதாத்தா… அதுவும் ஒரு வீட்டில் இருந்துகிட்டு நீ செய்யலைனா விடு எம்பேத்திக்கு செய்யும் போது அவளுக்கும் சேத்து செஞ்சுட்டு போறோம். இதுல என்ன இருக்கு”என்று முடித்துக் கொண்டார்.

    தரங்கினி வேறு,” இது மாதிரி எனக்கு எல்லாம் செய்யலை”என்றிருந்தாள் நொடிப்பாக.

    “அதை நீங்க உங்க அத்தை கிட்ட கேளுங்க”என்ற பவ்யா உனக்கையாக வடுமாங்காயை மென்று கொண்டிருந்தாள்.

    வளைகாப்பு சீரும் சிறப்புமாக நடைபெற நீரதியின் அண்ணன் அண்ணி வீடியோ காலில் வந்து வளைகாப்பை பார்த்தனர்.

    ‘பிரசவத்திற்கு எப்படியும் வந்து விடுகிறேன்’என்று நீரதியின் அண்ணி கூறி இருந்தாள்.

    ஆனால் அவள் வருவதற்குள் ஒன்பதாம் மாதம் முடிந்ததும் நீரதிக்கு வலி வந்து விடவே, அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர் தேசிகன் வீட்டினர். பவ்யா ஆண் குழந்தை பெற்று பிறந்தகத்தில் இருக்க, தரங்கினி பிள்ளைகளோடும் பொன்னியோடும் வீட்டில் இருக்க, மற்றவர்கள் எல்லாம் மருத்துவமனையில் இருந்தனர். அதிசயமாக கவிநிலா கூட கணவனோடு வந்துவிட்டிருந்தாள்.

    ஆழியன் மகளை மடியில் வைத்துக் கொண்டு பிரசவ அறையையே நொடிக்கு ஒரு தரம் பார்த்துக் கொண்டான்.

    “ப்பா அம்மா எங்கே”என்ற மகளின் கேள்விக்கு பதில் அளித்தவாறு தவிப்பும் கலக்கமுமாய் அமர்ந்திருந்தவனுக்கு நீரதி எப்போதடா வருவாள் என்றிருந்தது.

    அந்த பௌர்ணமி இரவில் நிலவென ஜனித்தாள் நீரதி ஆழியனின் செல்வமகள்.

    “வாழ்த்துக்கள் ண்ணே பொண்ணு பிறந்திருக்கா பாக்க பன்னீர் ரோஜா மாதிரி அப்படி ஒரு ரோஸு கலரு”என்று சிலாகித்தபடியே செவிலிப்பெண் பிள்ளையை யாரிடம் கொடுப்பதென்று தடுமாறி விழிக்க ஆழியனே மகளை வாஞ்சையுடன் பெற்றுக் கொண்டான்.

    “ரதி”என்று கேள்வியாக நிறுத்தியதில் “கொஞ்ச நேரம் ஆகும் ண்ணே”என்று பதில் சொல்லி விட்டு போனாள் அந்த பெண்.

    அவள் சென்றதும் “ம்மா”என்று மகளை முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய கொடுத்தவன் அன்னை முகம் காண அதில் பத்து வாட்ஸ் வெளிச்சம் கூட இல்லாமல் போன காரணம் புரியாமல் மகளை கைமாற்றினான் ஆழிச்செல்வன்.

    “உன்னை மாதிரியே இருக்காடா செல்வம்”என்று சிலாகித்த அமுதன் அன்னையிடம் இருந்து பிள்ளையை வாங்கிக் கொண்டான்.

   ஸ்வர்ணிகா “பெரிப்பா நான் பாக்குறேன்”என்றதில் அந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்து பிள்ளையைக் காட்டினான்.

    “நீராவுக்கு சாப்பிட குடுக்க சொல்வாங்க நீ போய் இளஞ்சூட்டுல பால் வாங்கிட்டு வா செல்வம்”என்ற வளர்மதி அங்கேயே அமர்ந்து கொண்டார்.

    அவன் சென்றதுமே “ஏன் மா ஒரு மாதிரி இருக்க?”என்று அமுதன் கேட்க

    “ஆம்பிளைப்பிள்ளைனு பார்த்தா ரெண்டாவதும் பொண்ணை பெத்து வச்சிருக்கா. ஹ்ம்ம் உன்னை மாதிரி அவன் குடுத்து வைக்கலடா அமுதா”என்றார் பெருமூச்செறிந்து.

    “இதுல என்ன குடுப்பனை வேண்டி கெடக்கு. ஆணோ பொண்ணோ நல்லபடியா பொறந்துச்சானு பாரும்மா இந்த காலத்திலையும் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு”என்று பொங்கிய கடுப்பை மறைத்துப் பேசினான் அமுதன்.

    “அதுக்கில்லைடா அமுதா”என்றவரைத் தடுத்தவன், “அதான் வீட்டுக்கு ரெண்டு பயலுக இருக்கானுகளே இனியும் பிறக்காமலா போயிரும். இல்லை என் மகனோ தீபன் மகனோ செய்யாம விட்ருவானுகளா… ஒண்ணுக்கு மூணு மகாலெட்சுமி வீட்டில் இருக்காங்கனு சந்தோஷப்படுவியா‌ ஏன் மா இந்த காலத்திலும் ஆணு பொண்ணுனு. எல்லா பிள்ளையும் ஒண்ணு தான்”என்று அன்றலர்ந்த அந்த சிறு மலரைக் கொஞ்சினான் அமுதன்.

    வளர்மதியைப் போல தேசிகன் பெரிதாய் எடுக்கவில்லை. வீட்டிற்கு மற்றுமொரு பிள்ளை என்று நினைத்ததோடு சரி. பிள்ளையை வாங்கிக் கொஞ்சினார் சிறிது நேரம் இருந்து விட்டு கடைக்குச் செல்ல வேண்டும் என்று கிளம்பி விட்டார்.

    வீட்டிற்கும் குழந்தை பிறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்போது நீரதியோடும் பிள்ளையோடும் யாராவது ஒரு பெண் இருக்க வேண்டும். வளர்மதி இருப்பார் என்று எதிர்பார்த்த ஆழியனுக்கு அவர் வீட்டிற்கு செல்கிறேன் என்றது பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

    …… தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!