Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…33

தூறல் – 33
“அப்பா அப்பா…” என்ற இடைவிடாத வார்த்தைகளோடு சவி அழுது கொண்டே இருக்க “ஒன்டும் இல்லடா தங்கம்… ஒன்டுமே இல்ல…” என்றபடி அவள் தலையோடு முதுகை வருடி மகளின் நடுக்கத்தை போக்கிக் கொண்டிருந்தான் குரு.


Advertisement

சிக்கி இருந்த பணம் மீண்டும் தங்களுக்கே வந்ததில் அந்த குடும்பத்தினருக்கு அப்படி ஒரு நிறைவு. ஆனாலும் அவளை அரவணைத்து காத்து ரட்சிக்க இப்படி ஒருவனா என்ற பொறாமையும் அந்த ஈன குடும்பத்திற்கு மொத்தமாக மனதில் முளைத்துதான் போனது. மூவரும் அருகருகே குடும்பமாக நின்று தங்களது பார்வையாலும் அரவணைப்பாலும் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டிருக்கும் காட்சியை அவர்களால் பார்க்க முடியவில்லை. 
“ஏன்டா அடுத்தவன் புள்ளைக்கு நீ அப்பன் ஆகணும்னு நினைக்கிற..? அப்போ நீ ஆம்பளை இல்லையா..? மருந்து வச்சு குழந்தையும் சேர்த்து மயக்கி வச்சுட்டியா..? அப்போ வேற ஒருத்தனுக்கு இவளை அனுப்பி அடுத்து பொறக்குற குழந்தைக்கும் உன்னோட இனிஷியலை குடுப்பியா..?” 

Advertisement

Advertisement

எப்படியும் குழந்தையை அவர்கள் கொடுக்கப் போவதும் இல்லை அவளும் அவர்களோடு வரப்போவதில்லை என்ற உண்மை தெரிந்து போனதால் வேண்டுமென்றே வார்த்தைகளால் வதைத்து ஆனவரை ஆத்திரத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்று விஷம் தடவிய வார்த்தைகளால் குருவை சல்லி சல்லியாய் உடைக்கும் நோக்கத்தில் அருணின் அப்பா மூர்த்தி வார்த்தைகளை விட, ஒற்றைக் கையால் தன் மகளை அழுத்தமாய் பிடித்திருந்தவன் மறு கையால் அங்கிருந்த மர நாற்காலியை ஆத்திரத்தோடு தூக்கி அவனை நோக்கி எறிய முற்பட வேகமாக அதனை அவன் கையில் இருந்து பிடுங்கி தூக்கிப் போட்டு இருந்தார் ராமலிங்கம். 
அவர் இடைப் புகுந்து தடுக்காமல் இருந்திருந்தால் மொத்த குடும்பமும் ரத்த காயங்களுடன்தான் விழுந்து கிடந்திருக்கும். 

Advertisement

சீச்சீ… இத்தனை கேவலமான மனிதர்களா இவர்கள் என்று சுற்றிலும் இருந்தவர்களே முகத்தை சுளிக்கும் அளவு அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரின் வார்த்தைகளும் அத்தனை அசூசையாய் இருந்தன. 
தன் மகளை அணைத்தபடியே அவர்களின் முன் வந்து நின்றான் குரு. தங்களையும் மீறி இரண்டு அடிகள் பின்னே நகர்ந்து நின்றது அந்த குடும்பம்.
“இப்படி எல்லாம் பேசினா என் குடும்பத்தை விட்டுக் கொடுத்துட்டு இங்கே இருந்து ஓடிப் போயிடுவேன்னு நினைச்சீங்களா..? இப்ப சொல்றேன்… இவங்க ரெண்டு பேரும் என்னோட சொத்து… எனக்கு மட்டுமே உரிமையான சொத்து… யாரும் பக்கத்துலகூட நெருங்க முடியாது…” 
அழுத்தமான குரலில் ஆழமாக கூறியவன் தள்ளி நின்றிருந்த அஞ்சலியின் கையைப் பிடித்து இழுத்து தன்னோடு நெருக்கி நிறுத்தி அவள் தோளில் அழுத்தமாக கை போட்டுக் கொண்டான். 
“இந்த நிமிஷத்துல இருந்து இவ அஞ்சலி குமரகுரு…” தலையை திருப்பி அவளை நோக்கி காட்டியவன் “இவ சங்கவி குமரகுரு…” தலையை தன் தோளில் ப
சாய்ந்திருக்கும் மகளை நோக்கி திருப்பிக் காட்டி “இதுல எந்த மாற்றமும் இனி என்னைக்கும் நடக்கப் போறது இல்ல. புரிஞ்சுதா..? எங்களோட பதிவு திருமணத்துக்கான சான்றிதழ் சீக்கிரமே உங்க கைக்கு வந்து சேரும்…” கரகரத்த அவன் குரலில் கடுமையாக கூறியவன் இருமாப்போடு புருவத்தை ஏற்றி இறக்கினான். 
அவன் நின்றிருந்த தோரணையும் முகத்தில் காட்டிய பாவனையும் அனைவரையும் அசரடிக்க ஆத்திரம் பிடித்த கூட்டம் வெறுப்போடு அவர்களை பார்த்து வேறு வழியின்றி அங்கிருந்து விறுவிறுவென வெளியேறிச் சென்றிருந்தது.
மழையடித்து ஓய்ந்ததுபோல் அந்த இடமே நிசப்தமாகி இருந்தது. தந்தையின் கழுத்தை இறுக்கி அணைத்திருந்த சவி மருந்துக்கும்கூட தலையை நிமிர்த்தவே இல்லை. அவனிடம் இருந்து தன்னை யாரேனும் பிரித்து விடுவார்களோ என்ற அச்சம்தான் அதிகமாக தெரிந்தது. அவனும் அவளை இறுக்கி அணைத்தபடியே தனது அறைக்குள் நுழைந்து கொண்டான். 
ராதாவை மற்ற அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தாள் அஞ்சலி. அங்கு நடந்த கலவரத்தில் அவரது முகமும் கன்றிப் போய்தான் இருந்தது. அவரது தோளில் இதமாக கை வைத்தார் காமாட்சி. 
“வெசனப்படாதீக… எல்லா பிரச்சனையும் முடிஞ்சு போயிருச்சு… இனி சீக்கிரமே ரெண்டு பேருக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணி வைப்போம்…” மெல்லிய குரலில் கூற அதிராத புன்னகையோடு தலையாட்டிக் கொண்டார் ராதா.
“அஞ்சலி… ராதாக்காவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்… நீயும் குருவும் பிள்ளையை எடுத்துட்டு அப்புறமா அங்கே வாங்க…” 
உரிமையாக கூறிய காமாட்சி ராதாவின் கைப்பிடித்து அதே உரிமையோடு அழைத்துக் கொண்டு ராமலிங்கத்தோடு அங்கிருந்து சென்றிருந்தார். 
“அஞ்சலிம்மா… உன் அண்ணன் காலையில வந்துடுவான்…”
கர்ணனின் குரலுக்கு பெரிதான முகபாவத்தை அவள் காட்டிக் கொள்ளவில்லை. அமைதியாக தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.
“நம்ம வீட்டுக்கு வரலையா..?” ஆதங்கத்தோடு கேட்டார் லதா.
“அப்புறமா வரேன்…” 
இறுகிய முகத்தோடு கூறியவள் பின்வாசலை நோக்கிச் சென்றிருக்க நீண்ட பெருமூச்சுவிட்டு அவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
தண்ணீர் குழாயை திருகி முகத்தை அடித்து கழுவி தன்னை சற்று நிதானத்திற்கு கொண்டு வந்தவள் புடவை முந்தானையால் முகத்தை துடைத்தபடியே மீண்டும் உள்ளே சென்றாள். 
அறைக்குள் எட்டிப் பார்த்தாள். தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி கண்மூடி படுத்திருந்தனர். சவி உறங்கி இருந்தாள்… ஆனால் தன்னவன் உறங்காமல் வெறுமனே கண்களை மூடி இருக்கிறான் என்பது இவளுக்கு தெரிந்தது. 
வந்தவர்கள் ஆத்திரம் தீர வார்த்தைகளை கொட்டிச் சென்றிருக்கிறார்களே… வலிக்காமல் இருக்குமா..? இவளுக்கும் நிறைய வலிக்கிறதே. விடுதலை கிடைத்துவிட்டதுதான்… ஆனால் அந்த வார்த்தைகள் கொடுத்த வலி..?
அவன் அருகில் சென்று அமர்ந்தவள் மென்மையாக அவனது திரண்ட புஜத்தில் கை வைத்தாள். கண்களை மூடிய நிலையிலேயே பட்டென புரண்டு அவளது மடியில் தலைவைத்து படுத்திருந்தான் குரு.
தனக்காகத்தானே கண்டவர்களிடம் தேவையற்ற வலி கொடுக்கும் வார்த்தைகளை வாங்கிக் கொண்டான் என்று நினைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் வடிந்தது. இரண்டு சொட்டுக்கள் அவன் கழுத்திலும் விழுந்திருக்க ஒற்றை கையால் அவள் இடுப்பை இன்னும் இறுக்கி அணைத்து மறு கையை மட்டும் உயர்த்தி அவள் கண்ணீரைத் துடைத்திருந்தான். ஆனால் முகத்தை இன்னும் அவள் மடியோடுதான் புதைத்திருந்தான்.
இவள் உணர்வு அவனுக்கு புரியும்… அவன் மனக்குமுறல் இவளுக்கு புரியும்… உள்ளார்ந்த நேசம் என்பது இதுதானே.
அவன் பிடரி முடியில் விரல் கோர்த்து மென்மையாக வருடிக் கொடுத்தாள்.
“அந்தப் பரதேசி நாயிக பேசினதை எல்லாம் மனசுல போட்டு அழுத்திக்காதீங்க…”
ஆறுதல் சொன்னவளுக்கே ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியத்தில் அவள் குரல் மொத்தமாக தழுதழுத்திருந்தது.
மெல்ல அவளிடம் இருந்து விலகி தலையை நேராக்கி மல்லாந்து படுத்துக் கொண்டான் குரு. அந்த முகத்தில் வலி அப்பட்டமாய் தெரிந்தது. ஆனாலும் முயன்று புன்னகைத்து மென்மையாக அவள் கன்னங்களை வருடினான்.
மெல்ல விழிகளை திருப்பி அருகில் படுத்திருக்கும் தன் மகளை பார்த்தான். கனிவு பொங்கிய அந்த விழிகளில் சொல்ல முடியாத உணர்வுகள். தன்னிச்சையாய் அவன் விரல்கள் காற்றுக்கு சிலுப்பியபடி பறந்து கொண்டிருந்த அவளது தலைமுடியை ஒதுக்கி சரி செய்தன.
“குரு…”
பதில் பேசாமல் மீண்டும் விழிகளை அவள் முகத்தில் பதித்தான்.
“தெருவுல போற கண்ட நாயும் சொன்னதால மட்டும் இவ உங்க பிள்ளை இல்லைன்னு ஆயிடுமா..?”
அமைதியாக அவள் விரல்களைப் பற்றி தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டான் குரு.
“நாளைக்கே மீனாட்சி அம்மன் கோயில்ல வச்சு நம்ம கல்யாணத்தை முடிச்சுட்டு நம்ம நாட்டுக்கே திரும்பி போயிடலாமா..? நீங்க நான் நம்ம குழந்தை இப்படி நமக்கான வாழ்க்கையை நிம்மதியா சந்தோஷமா வாழுவோம் சரியா..?”
அவள் வெளிப்படுத்திய ஒவ்வொரு வார்த்தையிலும் அவள் அவன்மேல் காட்டிய நேசத்தையும் அக்கறையையும் உணர்ந்து கொண்டவன் அழகாய் புன்னகைத்து பிடரியோடு அவளைப் பிடித்து தன் முகத்தின் அருகே இழுத்தவன் அவள் நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றி எடுத்தான்.
“உன்னோட நடத்தையை பத்தி அவங்க எல்லாரும் பேசினதைதான்டி என்னால தாங்கவே முடியல. உன் அப்பாவும் ராமு அண்ணாவும் என்னை தடுக்காம இருந்திருந்தா நிச்சயமா என் நிதானம் எல்லாம் தவறி மூன்டு பேரையும் கொலை பண்ணி போட்டிருப்பேன்…”
“விடுங்க… அவங்களை தொட்டா நமக்குதான் பாவம் சேரும்… எப்படிப்பட்ட ஒரு குடும்பத்துல என் வீட்டு ஆளுக ஏற்கனவே என்னை தள்ளிவிட்டது பத்தாதுன்னு திரும்பவும் தள்ளிவிட பார்த்தாங்கன்னு பார்த்தீங்களா..? அம்மா அப்பான்னு இவங்களோட இழைய எனக்கு எப்படி மனசு வரும்..? இந்த லட்சணத்தில நாளைக்கு காலைல என் அண்ணன் வேற வர்றானாம்..? எத்தனை சீர் தட்டை தூக்கிட்டு வரப் போறான்னு தெரியல…”
விரத்தியாய் சொன்னவளின் இதழ்கள் வேதனையாய் வளைந்தன.
“யாரும் எதுவும் நமக்கு குடுக்க வேணாம்டி… என் குடும்பத்தை சந்தோசமா வச்சு காப்பாத்துற திறமை எனக்கு இருக்கு… அந்த நம்பிக்கையை மட்டும் அவங்க எல்லாரும் எனக்கு கொடுத்தா போதும்…”
இவர்கள் பேசிக் கொண்டிருக்க அஞ்சலியின் கைப்பேசிக்கு அழைத்திருந்தார் காமாட்சி. அவள் எடுத்துப் பேச இந்த சத்தத்தில் கண் விழித்திருந்தாள் சவி. மெல்லிய புன்னகையோடு தவழ்ந்து வந்தவள் தன் தந்தையின் நெஞ்சின் மீது ஏறி படுத்துக் கொண்டாள்.
அவள் மடியில் அவன்…
அவன் நெஞ்சின்மீது அவர்களது குட்டி தேவதை…
நேசம் நிறைந்த அவர்களது குட்டி உலகம் அத்தனை அழகியலோடு காட்சி தந்தது.
“காமாட்சி அக்கா நம்ம எல்லாருக்கும் சமையல் பண்ணி வச்சுட்டாங்களாம்… நம்மளை வர சொல்றாங்க…” 
தன் மகளின் உச்சியில் முத்தமிட்டபடி படுத்திருந்தவனிடம் கூறியவள் குனிந்து அவனது உச்சியில் முத்தமிட்டிருந்தாள்.
“உன் வீட்டுக்கு போகலையா..?”
அவள் விரல் பிடித்து தனது இதழில் உரசியபடியே கேட்டான்.
“அப்ப இந்த வீடு யாரோடதாம்..?” எரிச்சலோடு கேட்டாள்.
“ராமு அண்ணாவோடது… என்னோடதுன்னு சொன்னா அடிச்சு பத்தி விட்ருவார்…” என்று சிரித்தவன் மகளையும் தூக்கிக் கொண்டு எழுந்து கொள்ள மூவரும் கிளம்பி காமாட்சியின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
அவர்கள் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் கர்ணனும் லதாவும் அங்கே வந்திருந்தனர். மகள் தங்கள் வீட்டிற்கு வர மாட்டாள் என்று தோன்றியதோ என்னவோ காமாட்சி அழைத்தவுடன் அவர்களும் அங்கே வந்திருந்தனர். 
கள்ளம் கபடமற்றுப் பேசும் காமாட்சியுடன் எளிதாகவே இணக்கமாகி இருந்தார் ராதா. 
“குரு… உன்னோட பேச்சுல பெரிய வித்தியாசம் கண்டுபிடிக்கவே முடியல… எங்கள மாதிரியேதான் பேசுற. ஆனா உன் அத்தை பேசுறதை கேட்க கேட்க காது இனிச்சுக் கெடக்கிற மாதிரி இருக்கு. அவுக தமிழ் அம்புட்டு அழகு…” என்று சிரித்தார் காமாட்சி. 
“அத்தையோட தமிழும் இந்த ஊருக்குத் தகுந்த மாதிரி நிறைய மாறிடுச்சுக்கா… மாத்த முடியாத சில வார்த்தைகளை கேட்டதுக்கே இப்படி சொல்றீங்க…” என்று தானும் சிரித்துக் கொண்டான் குரு.
அனைவருக்கும் உணவினை எடுத்து வைத்து பரிமாற அமர்ந்து கொண்டார் காமாட்சி.
“எதுக்கு காமாட்சி இழுத்துப் போட்டு இத்தனை பேத்துக்கும் நீ ஒருத்தியே செஞ்ச..? என்னையும் செய்ய வேணாம்னு சொல்லிட்ட…”
செல்லமாக சலித்துக் கொண்டபடியே அவரோடு இணைந்து மற்றவர்களுக்கு தானும் உணவு பரிமாறினார் லதா. கணவன் மனைவி இருவரது கண்களிலும் முகத்திலும் ஒரு தனி தெளிவு தெரிந்தது. 
“நாளைக்கு குரு முறையா உங்க வீட்டு மருமகன் ஆனதுக்கப்புறம் உங்க வீட்ல விருந்து போடுங்க… நாங்களும் சேர்ந்து வந்து சாப்பிடுறோம்…அஞ்சலி கழுத்துல தாலி கட்டாம எங்க குரு உங்க வீட்ல வந்து சாப்பிட மாட்டானாக்கும்…”
காமாட்சியின் உரிமையான அந்த பேச்சில் குரு ராதா இருவருமே அகமகிழ்ந்து போயினர். தங்களுக்கும்கூட அழகிய உறவுகள் கூடுதலாக கிடைத்துவிட்டதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி.
பேசியபடியே உணவு உண்ணத் தொடங்கினர் அனைவரும். காமாட்சிதான் ரசிக்கும்படியாகவே பேசிக் கொண்டிருந்தார்.
“அந்த காலத்துல எங்க தாத்தாவும்கூட சிலோனுக்கு போய்தேன் கொள்ளக்காசு சம்பாரிச்சிட்டு வந்தாராம். கொழும்புல ஒரு ஐஸ் ஃபாக்டரில வேலைக்கு இருந்து நிறைய சம்பாரிச்சாராம். அப்போ அங்க போர் வந்ததால எல்லாத்தையும் போட்டது போட்டபடி விட்டுட்டு திரும்பவும் தமிழ்நாட்டுக்கே ஓடி வந்துட்டாக. ஆனா சேர்த்து வச்ச பணத்தை மூட்டை மூட்டையா கொண்டு வந்தாக. அதை வச்சுத்தான் இங்க நிறைய தொழில் ஸ்தாபனங்கள் எல்லாம் ஆரம்பிச்சாக. வீடு வாகனம் இப்படி எல்லாமே… அதுலயும் எங்க தாத்தா ஆரம்பிச்ச ஹோட்டல் எங்க ஊர்ல ரொம்ப பிரபலம். ஹோட்டலுக்கு கூட ஞாபகார்த்தமா சிலோன் ஹோட்டல்னு பேர் வச்சாக தெரியுமா..? என்னையே நானு சிலோன் ஹோட்டல் கடைக்காரவுக பேத்தின்னு சொல்லித்தேன் அறிமுகப்படுத்திக்குவேன்…” பெருமை பொங்க கூறினார் காமாட்சி.
“உன் தாத்தா கூட்டம் மூட்டை மூட்டையா கொண்டு வந்ததை உன் அப்பன் கூட்டம் ஓட்டை வழியா ஊதி விட்டதையும் சேர்த்து சொல்லு… சொல்லுடி என் சிலோன் ஹோட்டல்காரி… இந்த மொட்ட பெருமை மட்டும்தானே மிச்சமா நிக்குது… உன்ன கட்டிக்கிட்டதுக்கு அந்த ஹோட்டல்ல இருந்த கல்லாப்பெட்டியில காசு போட்டு வைச்ச இந்த கிண்ணி மட்டும்தான் மிச்சமா எனக்கு கிடைச்சது…” 
நக்கலாக சொன்ன ராமலிங்கம் காரச் சட்னி வைத்திருந்த ஒரு குட்டிக் கிண்ணத்தை தூக்கி அனைவரிடமும் சுற்றிக் சுற்றி காட்ட குபீரென சிரித்திருந்தனர் அனைவரும்.
தன் கையில் இருந்த தோசை கரண்டியை திருப்பி தன் கணவனை அடித்தவர் “என்னை வாரி விடலேன்னா உங்களுக்கு ரவைக்கு தூக்கம் வராதே…” என்று கூறி உதட்டை சுழித்துக் கொண்டவர்,
“குரு ஒரு நாளைக்கு எங்களையும் சிலோன் பக்கம் கூட்டிட்டு போ…” என்று சிரித்தார்.
அவன் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்ட அஞ்சலி “கண்டிப்பா எல்லாரையும் கூட்டிட்டு போவோம்க்கா… ஏன்னா எங்க கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க அங்கேதானே இருக்கப் போறோம்…”
திட்டவட்டமாக கூறியவளை அனைவருமே அதிர்ந்து பார்க்க குருவும்கூட அவளை குழப்பத்தோடு பார்க்க அவளோ அவனை ஆழ்ந்த அர்த்தத்தோடு பார்த்தாள்.
(தொடரும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!