Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 24

அத்தியாயம் : 24

கண்களில் நீர் வழிய, பழைய நினைவுகளின் தாக்கத்தில் ஆனந்தவல்லி இருக்க, அவரது முகத்தில் ஓடும் உணர்வுகளைப் படித்தவாறே நின்றிருந்தாள் ஆனந்தி. அவர் அழுகையை அடக்க முடியாமல் மகனின் நினைவுகளில் மூழ்கியிருக்க, “பாட்டி அம்மா…” என்ற மெல்லிய குரல் அவரைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.

கண்களைத் துடைத்துக்கொண்டு மீண்டவர், ஒரு நிமிடம் திகைப்புடன் சுற்றிலும் பார்க்க, அவர் அருகில் சென்று தோளில் கை வைத்து லேசாக அழுத்தினாள் ஆனந்தி. “பாட்டி அம்மா! என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி நான் கூப்பிட கூப்பிடச் சத்தமே இல்லாம இருக்கீங்க? இப்போ உடம்புக்குப் பரவாயில்லையா?” என்று கனிவுடன் விசாரித்தாள்.

அவரோ இத்தனை நேரமாக மகனைப் பற்றியும், கடந்த கால நிகழ்வுகளின் பாதிப்பிலும் இருந்ததால், அவள் சொன்னதைக் கேட்டு கசந்த புன்னகையை உதிர்த்தார்.



Advertisement

“என்ன பாட்டி அம்மா?”

அவள் மீண்டும் கேட்க, “உன்னைப் போலவே இத்தனை அக்கறையா, அன்பா பேச எனக்குன்னு என் பெரிய மகனைத் தவிர யாருமில்லை. இவ்வளவு பெரிய வீட்டுல… என்னை உள்ளன்போடு கவனிக்க, உரிமையா அதட்ட, மனசுல இருக்கிறதை ஒளிவு மறைவு இல்லாம பகிர, என் மகனைப் போல வேறு யாரையும் நான் உணர்ந்ததே இல்லை.

​அப்படிப்பட்ட என் மகனும் இந்த வீட்டை விட்டுப் போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு. அவன்… அவனைப் பார்க்கணும், அவன்கிட்ட பேசணும், அவனோட வாரிசுகளைத் தூக்கி வச்சு கொஞ்சணும்னு ஆசையா இருக்கு! அவன் இப்போ எங்கே, எப்படி இருக்கான்னு எதுவுமே எனக்குத் தெரியல. ஆனாலும், எங்கேயாவது ஒரு இடத்துல என் மகன் நல்லா இருப்பான்னு மனசு சொல்லுது. இந்த உயிர் போறதுக்கு முன்னாடி, ஒரு நாளாவது அவனைப் பார்த்திடணும்னு ஆசைப்படுது. அதே சமயம், அவன் இங்க வர்றப்போ யாராவது ஏதாவது செஞ்சுடுவாங்களோன்னு பயமாவும் இருக்கு” எனத் தழுதழுத்த குரலில் சொன்னார்.

Advertisement

​அவள் அமைதியாக இருக்க, அவர் தொடர்ந்தார். “உன்னைப் பற்றி என் பேத்தி அபிநயா நிறைய பேசினா… உன்னைப் பார்க்கும்போதே எனக்குள் ஏதேதோ உணர்வுகள் தோணுச்சு. நீ என் மருமகளோட வயித்துல பிறந்த மாணிக்கமா இருக்கக் கூடாதா? இதே வீட்டுல எங்க எல்லாரோடவும் சேர்ந்து வாழும் பாக்கியம் எனக்குக் கிடைக்காதான்னு ஏங்காத நேரமில்லை. ஆனா, நீ என் மகனோட வாரிசா இருக்கக் கூடாதுன்னு இன்னொரு மனசு சொல்லுது. ஏன்னா, நீதான் அன்புவோட வாரிசுன்னு தெரிஞ்சா, இந்த வீட்டுல என்ன நடக்கும்னு தெரியாது. அதனாலதான் அம்மா, உன்னை நான் அந்த இடத்துல வச்சுப் பார்க்காம, பூபாலனோட விருந்தினரா மட்டுமே பார்க்கிறேன்” என்றார்.

Advertisement

பாட்டியின் பெருந்தன்மையான மனது பேத்திக்குப் புரிந்தது. அதே சமயம், இத்தனை தூரம் தன் தந்தை மீது பாசத்தைக் கொட்டி ஏக்கத்தால் வாடுபவர், இன்று அவர் உயிரோடு இல்லை என்பதை அறிந்தால் தாங்குவாரா என்ற கேள்வியும் அவளுக்குள் எழுந்தது. ‘இங்கிருந்து போகும் வரை தான் யார் என்பதை இவருக்கு மட்டுமல்ல, இந்த வீட்டில் உள்ள யாருக்குமே தெரிவிக்கக் கூடாது; யார் மனமும் வருத்தப்படும்படி நடக்கக் கூடாது’ என்று மனதிற்குள் உறுதியாக எண்ணிக் கொண்டாள்.

“உன்கிட்ட எனக்கு நிறைய பேசணும். ஆனா நீ இங்க வந்து ரொம்ப நேரம் ஆகுது. மத்தவங்க உன்னைத் தேடுவாங்க. போம்மா, போய் சாப்பிட்டு அப்புறமா வா” என்று அவர் சொன்னார்.

அவளும், “நீங்களும் எதையும் நினைச்சு மனசைப் போட்டு வருத்திக்காம, நேரத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு ஓய்வெடுங்க. நிச்சயம் உங்க ஆசைப்படி உங்க மகன் ஒரு நாள் உங்களைப் பார்க்க வருவார். அந்த நேரம் நீங்க இப்படி நலிந்து போய் இருந்தா அவரால் தாங்க முடியுமா?” என்று கேட்டாள். மகன் தன்னைப் பார்க்க வருவான் என்ற அந்த ஒரு வார்த்தையில், அவர் முகத்தில் அத்தனைப் பரவசம் மின்னியது.

Advertisement

“உண்மையைத்தான் சொல்றேன் பாட்டி அம்மா. இவ்வளவு பாசம் வச்சிருக்கும் உங்களைப் பிரிஞ்சு அவங்களாலும் இருக்க முடியாது. கூடிய சீக்கிரம் உங்களைப் பார்க்க வரலாம். அந்த நேரத்துல நீங்க இப்படி அழுதுட்டு, உடம்பு முடியாம இருந்தா அவரால் தாங்க முடியாது இல்லையா? கடவுளை மட்டும் நினையுங்க, உங்க கண்ணீர், கவலைகளை அவரிடமே ஒப்படைச்சிருங்க. எல்லாத்தையும் அவர் பார்த்துப்பார்.”

அவர் மௌனமாகத் தலையசைக்க, “தம்பிகள் மூணு பேரும் வந்திருப்பாங்க, நான் போய் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள் ஆனந்தி. அந்த நேரம் அவளைக் காணாமல் தேடிக்கொண்டு வந்த அபிநயா, “அக்கா, பாட்டி காலையில சாப்பிட்டாங்களா? இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு? நானும் போய் பார்த்துட்டு வரேன்” எனச் சொல்ல, “அவங்க சாப்பிட்டு முடிச்சுட்டு ஓய்வெடுக்குறாங்க. நீ முதல்ல சாப்பிட்டு அப்புறமா போய் பாரு” என்றாள் ஆனந்தி.

அவள் மறுபேச்சின்றி கூடவே வர, தம்பிகள் மூவரும் அவளைக் கண்டதும் ஓடி வந்து சுற்றிக்கொண்டனர். “இவ்வளவு நேரமா உங்களைக் காணோம்னு நாங்க வீடு முழுக்கத் தேடிட்டு வரோம். எங்க போயிருந்தீங்க?” என்று கேட்டார்கள்.

அவள் புன்னகையுடன், “நம்ம பாட்டியைப் பார்க்கப் போயிருந்தேன்” என்றாள்.

“பாட்டி சாப்பிட்டாங்களா? உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு?”

நகுலனை வாஞ்சையுடன் பார்த்தவள், “என்கிட்ட கேட்கறதுக்கு பதிலா, நீங்களே நேர்ல போய் விசாரிக்கலாமே!” என்றாள்…

​அவள் செல்லமாக முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சொன்னதைக் கேட்டு, மூன்று தம்பிகளும் சிரித்தார்கள். “அக்கா! பாட்டிக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போறதால, அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க. அதனாலதான் நாங்க அதிகமா அங்கே போகாம இங்கேயே இருப்போம். இனிமேல் நாங்க முன்னாடி மாதிரியே பாட்டிகிட்ட போய்ப் பேசுறோம். நீங்க எங்க மேல கோபப்படாம, முதல்ல சாப்பாட்டை எடுத்து வைங்க!” என அவர்கள் சமாதானமாகச் சொல்ல, ஆனந்தியின் விழிகள் விரிந்தன.

​’இந்த வயதிலேயே எவ்வளவு பக்குவமாகப் பேசுகிறார்கள்!’ என வியந்தவள், இடுப்பில் கை வைத்துக்கொண்டு, “நான் இன்னும் ஒரு வாரத்துல இங்கிருந்து போயிடுவேன். அப்புறம் மறுபடியும் வருவேனா இல்லையான்னு தெரியாது. அந்த நேரத்துல சாப்பிட யாரைத் தேடிப் போவீங்க?” என அதட்டலாக வினவினாள்.

​நகுலன் முகம் வாடிவிட, “நீங்க எங்களை விட்டுப் போக வேண்டாம்கா… நாங்க சமத்தா நீங்க சொல்றதைக் கேட்டு நடப்போம்” என்றான்.

தம்பியின் கேசத்தை வருடிவிட்டவள், “அதான் உங்க அபி அக்கா இருக்காங்கல்ல! எப்பவும் போல அவங்க உங்களைக் கவனிச்சுப்பாங்க. வாங்க போய் சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்றாள்.

அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே ஆனந்த் அங்கு வர, நேற்றிரவு அவன் நடந்துகொண்ட விதத்தை நினைத்து, அவனது முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கடந்து சென்றாள் ஆனந்தி. அவளது அந்தச் செய்கையைக் கண்டு மெலிதாக நகைத்தான்.

​“அக்கா இன்னும் கொஞ்ச நாள்ல நம்மளை விட்டுப் போயிடுவாங்களாம் அத்தான். அப்புறம் அக்காவைப் பார்க்க என்ன செய்யறது? அக்கா நம்ம கூடவே கடைசி வரை இருக்க மாட்டாங்களா?” என்று நகுலன் கேட்டான்.

அவன் சிரித்த முகத்துடன், “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லடா. உங்க அக்கா இதே வீட்டுலதான் கடைசி வரை இருப்பாங்க. நீ கவலைப்படாம போய் சாப்பிடு” என்று ஆறுதலாகச் சொல்ல, “நிஜமாவா அத்தான்?” என்றான் நகுலன் ஆச்சரியத்துடன்.

“ம்ம்…” என்று உறுதியாகத் தலையசைத்தான் ஆனந்த்.

அவன் முகமெல்லாம் மலர, “தேங்க்ஸ் அத்தான்! நீங்களே நம்ம அக்காவைக் கட்டிக்கிட்டா, அவங்க காலம் பூராவும் நம்மளோடவே இருப்பாங்க. இப்படி ஒவ்வொரு தடவையும் அவங்க கிளம்பிடுவாங்களோன்னு நாங்க பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது” என்று உற்சாகமாகக் கூவினான். ஆனந்த் சிரித்துக்கொண்டே அவனது தோளில் கைபோட்டுத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

​ஆனந்தி, அவனைத் தவிர மற்ற அனைவரிடமும் இயல்பாகப் பேசியவாறு உணவு பரிமாறினாள். ஆனால், அவனது கண்களோ ஒரு நொடி கூட அவளை விட்டு அகல மறுத்தன. அவனது பார்வையின் வீச்சில் தன் உள்ளம் படபடப்பதை அவள் உணர்ந்தாள். அவன், அவள் வைத்த உணவை ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் ரசித்து உண்டு முடித்தான்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து செல்ல, ஆனந்த் மட்டும் அங்கேயே அமர்ந்திருந்தான். அவன் கைகளைத் தண்ணீரில் கழுவிவிட்டு, சற்றும் எதிர்பாராத விதமாக அவளது புடவை முந்தானையிலேயே துடைத்தான். அவள் அதிர்ச்சியில் அவனை முறைக்க, அந்த முந்தானையைப் பற்றித் தன் பக்கம் இழுத்தவன், அடுத்த நொடி அவளை அருகில் இருந்த அறைக்குள் தள்ளிச் சுவரோடு சாய்த்தான்.

​யாராவது பார்த்துவிடப் போகிறார்களே எனும் பயத்தில் அவள் திகைக்க, ஆனந்தின் கைகளோ அவளைச் சிறைபிடித்தன. அவள் கோபமாகப் பார்க்க, அவனது பார்வையோ காதலில் தவித்தது. அங்கிருந்து தப்பிக்க அவள் முயல, காளையவனின் இரு கரங்களும் காரிகையின் இருபுறமும் அரணாக அமைந்து, அவளை நகரவிடாமல் தடுத்தன.

​அவளைத் தீண்டாமலேயே அவளது உணர்வுகளைத் தூண்ட நினைத்தவன், “நேற்றைய மயக்கம் இன்னும் கூடத் தீர மாட்டேங்குது. எப்பவும் உன்னையே பார்த்துட்டு இருக்கணும் போல இருக்கு” எனக் கிசுகிசுப்பாகச் சொன்னான்.

அவள் அவதியுடன் நோக்க, “நேத்தெல்லாம் நான் தூங்கவே இல்லை தெரியுமா? சதா உன் ஞாபகம்… எப்ப விடியும், உன்னைப் பார்ப்போம்னு அவ்வளவு கஷ்டமா இருந்தது” என ஆனந்த் சொல்ல, அவளது முகம் அதிர்ச்சியில் உறைந்தது. அவனது இந்தத் திடீர் மாற்றமும், உதடுகளில் தவழ்ந்த புன்னகையும் அவளைச் செயலற்று நிற்கச் செய்தன.

அவளது இரு விழிகளையும் கூர்ந்து நோக்கியவன், “ஏதோ இங்கிருந்து போயிடப் போறதா சொன்னியாமே… அவ்வளவு சீக்கிரம் உன்னை அனுப்பிடுவதா நினைச்சியா? அப்படியே போறதா இருந்தாலும், இந்த ஆனந்தோட காதலை முழுவதுமா ஏற்று அனுபவிச்ச பிறகுதான் போக முடியும்” என்றான் அவள் மீதான எல்லை இல்லாத நேசத்தில்.

‘தன் தங்கையைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன், அவளது அக்காவான தன்னிடம் வந்து இப்படிப் பேசுகிறானே!’ என அவள் ஆதங்கப்பட, “என் மனசுல இருக்குற உணர்வுகளில் கொஞ்சமாவது உனக்குள்ள இல்லையா?” எனக் கேட்டான் ஆனந்த்.

துடிதுடிக்கும் தன் மார்பை இறுகப் பற்றிக்கொண்டு அவள் நகர முயல, “எங்கே என்னைக் காதலிச்சுடுவோமோன்னு உனக்குப் பயம். அதனாலதான் என்னைப் பார்க்க முடியாம இப்படித் திணறிட்டு இருக்க!” என்று அவளது மனதைப் படித்தவன் போலச் சொன்னான்.

“ப்ச்…” என்று அவள் சலிப்புடன் முகத்தை திருப்ப, “நீ இங்கிருந்து போறதுக்கு முன்னாடி, நானும் உன்னைக் காதலிச்சு, நீயும் என்னை உன் மனசுல முழுமையா நிறைக்கிற மாதிரி செய்வேன்” என்றவன், வெளியே தம்பிகள் அவளைத் தேடும் சத்தம் கேட்டு விலகி நின்றான். அடுத்த கணம் அவள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட, அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

‘இருக்குற பிரச்சனைகள் போதாதுன்னு இவன் வேறு வம்பிழுக்கிறானே!’ என்று சலித்துக்கொண்டாள் ஆனந்தி. இவனிடம் எதிர்த்துப் பேசப்போய், அந்தச் சத்தத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாராவது வந்து விடக்கூடாதே என்பதற்காகத்தான் அவள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறாள். அவனோ அதையே வாய்ப்பாக வைத்துக்கொண்டு அவளைச் சீண்டுகிறான். இனிமேல் தனியாக இவனிடம் அகப்படவே கூடாது என்று முடிவெடுத்தவள், நேராகப் பாட்டியின் அறைக்குள் சென்று தஞ்சம் புகுந்தாள்.

அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பது, அருகில் அமர்ந்து இன்முகத்தோடு பேசுவது, தம்பிகளை அங்கு வரவைத்து கதையடிப்பது, வீட்டுப் பெண்களுடன் சேர்ந்து சமையலில் மூழ்குவது, அமெரிக்காவில் செய்யப்படும் உணவுகளைச் செய்து அவர்களை அசத்துவது… என நேரத்தைச் செலவிட்டாள். ஆனந்தவல்லி அவளது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள் குறித்துக் கேட்டபோது, அவர்கள் சென்னையில் வசிப்பதாகவும், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் பொய்யுரைத்தாள்.

அவரது கையைப் பற்றி மெல்ல வெளியே அழைத்து வந்து, அனைவர் முன்பும் அமரச் செய்தாள். அவர்களுடன் இணைந்து பேசிச் சிரிக்க வைத்து, அவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க முயன்றாள். முன்பு உடல்நலம் குன்றியிருந்தபோது வாங்கியிருந்த அந்த உருள் வடிவ நாற்காலியில் அவரை இருத்தி, வீட்டின் பின்புறம் உள்ள தோட்டப் பகுதிகளையும் சுற்றிக் காட்டினாள்.

“பாட்டி அம்மா! ஒரே அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா ரத்த ஓட்டம் தடைபட்டு, அப்புறம் நீங்களா எழுந்து நடமாட முடியாத நிலை வந்துடும். தினமும் கொஞ்ச நேரமாவது வராண்டாவில் நடைப்பயிற்சி செய்யறது உங்க உடம்புக்கு ரொம்ப நல்லது” என்று அன்போடு உபதேசம் செய்தாள்.

“உங்க மனசுல இருக்கிற பாரங்களை என்கிட்ட சொன்னா, அதுக்கேத்த மாதிரி என்னால் முடிஞ்ச உதவிகளை நான் செய்வேன்” என்று அவருக்கு நம்பிக்கையூட்டினாள்.

“நாளைக்கு ஒருநாள் அப்பா இங்கே வர்றப்போ, நீங்க ஓடிப்போய் அவரோட பேசவும், சிரிக்கவும், உங்க கையால சமைச்சுப் பரிமாறவும் உடம்புல தெம்பு வேண்டாமா?” என்று, நடக்காத ஒன்றைக் கூறி அவரது மனதைத் தேற்றினாள்.

“நான்… என்னோட சமையல்… அம்மா, அப்பா, தம்பி…” என்று தன் அமெரிக்க வாழ்க்கையைச் சென்னை வாழ்க்கை போல மாற்றிப் பேசி அவரைச் சிரிக்க வைத்தாள். அவரது முகத்தில் தெரிந்த புன்னகையைக் கண்டு மனதிற்குள் பூரிப்படைந்தாள்.

அவள் மனதில் ஒரு திட்டம் இருந்தது. அதைச் செயல்படுத்திவிட்டு இங்கிருந்து கிளம்பிவிட நினைத்தாள் ஆனந்தி. பூபாலன், அன்புச்செல்வனின் வாழ்க்கையில் நடந்த சிலவற்றைத் தவிர மற்ற அனைத்தையும் சொல்லியிருந்தார். அதுபோல பாட்டியிடம் பேசும்போதும் சில விஷயங்களை அவளால் அறிய முடிந்தது.

​தான் இங்கிருந்து செல்வதற்கு முன்னால், எல்லோரையும் பழையபடி மாற்றிவிட வேண்டும் என உறுதி பூண்டாள். ‘அப்பா ஒருநாள் வருவார்’ என்ற நம்பிக்கையைப் பாட்டியின் மனதில் விதைத்துவிட்டால், அந்த எண்ணமே அவரை உயிர்ப்புடன் வாழ வைக்கும் என்று நம்பினாள்.

​தங்கை மற்றும் தம்பிகளை அவரிடம் பழக வைத்தால், தான் சென்ற பிறகும் அவர்களின் அக்கறையான வார்த்தைகள் அவரை மீட்டுக் கொண்டு வர உதவும் என்பதால், தம்பிகளை அவரோடு பேசவும், அவர் அருகிலேயே அமர்ந்து படிக்கவும் செய்தாள்.

​தனக்கென இத்தனை உறவுகள் இருந்தும், உரிமையுடன் பழக முடியாமல் பல நேரம் மனம் வெம்பினாள். இவர்களைப் பார்க்காமல் இனி வரும் நாட்களை எப்படிக் கடத்தப் போகிறோம்? என்று எண்ணி எண்ணிக் கண்ணீரில் மூழ்கினாள்.

ஆனந்தின் காலடி ஓசை கேட்டாலே அந்த இடத்தை விட்டு ஓடினாள். அப்படியும் அவன், தம்பிகளிடம் சொல்லி அவளை வெளியே அழைத்துச் சென்றபோது, அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் இருந்தாள். ‘முடியாது’ என்று சொல்லியும் கேட்காமல், பிடித்து இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்களே என்று அவள் ஆதங்கப்பட, “அத்தான்! உங்களைப் பார்த்தாலே எங்க அக்கா பயந்து ஓடுறாங்க. நீங்க அந்த அளவுக்கு அவங்களை என்ன செஞ்சு வச்சிருக்கீங்க?” என்று கேட்டான் நகுலன்.

அவன் வாய்விட்டுச் சிரித்தபடி, “செய்யலாம்னுதான் பார்க்கிறேன்… அவதான் பக்கத்துலேயே போக விடமாட்டேங்குறாளே!” என, தம்பிகள் மூவரும் சத்தமாகச் சிரித்தனர்.

​“உங்களுக்குச் சாமர்த்தியம் போதாது அத்தான். என்கூடப் படிக்கிற பையன் கூட எவ்வளவு அழகா சக மாணவியிடம் லவ் லெட்டர் கொடுத்து அந்தப் பொண்ணு கூடச் சுத்தறான் தெரியுமா? நீங்களும் இருக்கீங்களே!” எனச் சிவனேஷ் வார, “அடிங்க…” என்று சொல்லியவாறு கீழே கிடந்த குச்சியை ஆனந்த் குனிந்து கையில் எடுக்கவும், மூவரும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டனர்.

அப்படியும் அபிநயாவை விட்டு விலகாமல் இருந்த ஆனந்தியின் அருகில் சென்றவன், “வீட்டுக்குக் கொண்டு போகத் தேவையான ஆப்பிள், திராட்சை எல்லாம் தோட்டக்காரர்கிட்ட சொல்லிப் பையில ஏத்திடச் சொல்லுங்க. அப்புறம், ஒருநாள் இங்க இருக்குற மலைக் கோயிலை சுத்திப் பார்க்கப் போகலாம்” என்று ஆசை காட்டினான்.

அபிநயா உடனே ‘சரி’ எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட, ஆனந்தி அங்கிருந்து தப்பிப்பதற்குள் ஆனந்தின் வலுவான கைப்பிடிக்குள் சிக்கிக்கொண்டாள்.

“விடுங்க… நான் போகணும்!”

​“எங்க போகணும்? நான்தான் இங்கேயே இருக்கேனே?”

​“முன்னப் பின்ன தெரியாத பெண் மேல கை வச்சுப் பேசுறதும், அவகிட்ட ஏதோ அதிக உரிமை இருக்குற மாதிரி நடக்குறதும் தப்பு இல்லையா?”

​“நீ முன்னப் பின்ன தெரியாத பொண்ணும் இல்ல; உன்னை நான் இப்போதான் முதல் முறையா பார்க்கறேன்னும் இல்ல!”

​அவள் அவனை முறைத்துப் பார்த்தவாறே, “எனக்குத்தான் பிடிக்கலையே! அப்புறம் எதுக்காக இப்படி வந்து வழியை மறிக்கணும்? பார்க்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சம் கூட நினைக்க மாட்டீங்களா?” என்று வெடித்தாள்.

அவளது வார்த்தைகள் அவனுக்கு ஏதோ ஒன்றை உணர வைக்க, குரலைத் தாழ்த்தி, “உன்கிட்ட நான் பேசணும்… ஆனந்தி” என்றான்.

அவளோ, “அவசியமில்லை!” என்று சொல்லிவிட்டு வெடுக்கென விலகிச் செல்ல, அவளது பூங்கரத்தைப் பற்றிச் சுண்டி இழுத்ததில், அந்த வேகத்தில் அவன் மார்பின் மீது வந்து பூமாலையாக விழுந்தாள் ஆனந்தி.

​அவனது செயல்கள் அவளுக்குள் கோபத்தை ஏற்படுத்த, அவனைத் தள்ளிவிட்டு விலக முயன்றாள். “என் சண்டிராணிக்கு என்ன கோபம்? நானும் பேசணும்னு அப்போலேர்ந்து முயற்சி பண்றேன்… ஒரு நிமிஷம் கூட உன்னைத் தனியா பார்க்க முடியலையே?” என்று கேட்டான்.

​“உங்ககிட்ட பேச எனக்கு எதுவுமே இல்லை.”

அவள் வெடுக்கென்று சொன்னதும், “ஏன் இல்லாம? அன்னைக்கு மாலையில் நடந்த பார்ட்டியில் கண்களால் என்கிட்ட நிறையப் பேசினாயே! மறுபடியும் அதே மாதிரி பேசணும்ங்கிற ஆசையில்தான் உன் பின்னாடியே வந்துட்டு இருக்கேன். நீதான் எல்லாம் தெரிஞ்சும் தெரியாதது போல நடிக்கிற” என அழுத்தமாகச் சொன்னான்.

​அவள் தன் முகத்தில் ஓடும் உணர்ச்சிகளை மறைத்தபடி சிலையாக நின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!