Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே-13

    ஆழியன் மனைவி மகளோடு யாரை தங்க வைப்பது என்று யோசிக்க கிளம்புகிறேன் என்று கூறிய வளர்மதியை அமுதன் பேசிய பேச்சில் அவர் நீரதியுடன் தங்கினார். தங்க மட்டும் தான் செய்தார். மற்றபடி நீரதிக்கு உதவியது எல்லாம் அங்கிருந்த ஆயா ஒருவர் தான். ஆழியன் அவருக்கு கணிசமான பணம் கொடுத்து பார்த்துக் கொள்ள கூறினான்.

    மறுநாள் கிளம்பும் போதே நீரதியின் அண்ணி மருத்துவமனை வந்து விட்டாள்.



Advertisement

    “அண்ணி!!”என்று அழைத்த நீரதியின் குரலில் சொல்ல முடியாத ஆனந்தம்.

Advertisement

Advertisement

    “விடியற்காத்தால ஏர்போர்ட் வந்தேன். வீட்டில் பேக் வச்சுட்டு நேரா இங்க தான் வர்றேன் எப்படி என் சர்ப்ரைஸ்”என்று கண்சிமிட்ட நீரதி சிரித்தாள் கண்ணீருடன்.

    இரண்டு பிள்ளைகளோடு புகுந்த வீட்டில் நினைக்கும் போதே நெஞ்சில் நீர் வற்றியிருந்தது நீரதிக்கு. எல்லாவற்றிற்கும் யாரேனும் ஒருவரின் துணையை நாட வேண்டும். இங்கேயே வளர்மதி பட்டும் படாமல் இருக்கும் போது வீட்டில் கேட்கவே வேண்டாம். பேசாமல் ஹோம் நர்ஸ் ஏற்பாடு செய்யும் படி கூறி தன் வீட்டிற்கு தான் செல்லலாமா என்று கூட யோசித்திருந்தாள் நீரதி.

Advertisement

    ஆனால் அது எதுவும் தேவை இல்லை என்பது போல அவளின் அண்ணியே வந்து விட நேரே மருத்துவமனையில் இருந்து அண்ணன் வீட்டிற்கு குழந்தையுடன் பயணித்தாள்.

    “நல்லது நீயே வந்துட்ட. எத்தனை பேரை கவனிக்க ன்னு அலமலந்து போயிட்டேன் நான்”என்ற வளர்மதியிடம் “அப்புறம் என் நாத்தனாரை நான் கவனிக்காம… நான் பார்த்துக்கிறேன் சித்தி”என்று முடித்து விட்டாள் நீரதியின் அண்ணி ஜனனி. அனைவரும் வீட்டிற்கு கிளம்பி விட ஆழியன் பில் செட்டில் செய்து விட்டு அவர்களோடு பயணித்தான்.

    வீட்டில் இறக்கி விட்டு விட்டு அவர்களுக்கான உணவை வாங்கிக் கொண்டு வர ஆழியன் கிளம்பி இருக்க வளர்மதி சும்மா இருக்காமல் ஜனனியிடம் பேச்சுக் கொடுத்தார்.

    “ஏன் மா தீபு கல்யாணத்துக்கு ஒரு ஃபோன் கூட பண்ணலை நீயும் உன் புருஷனும்”என்று குற்றம் போல கூற

    “ஓஓஓ தீபுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா”என்று அவள் ஆச்சரியம் கொண்டதில் வளர்மதியே திகைத்தார்.

    “என்ன நீ இப்படி கேட்கிற. அவனுக்கு பிள்ளையே பிறந்திடுச்சு. ஏ நீரா என்ன உங்க அண்ணி”எனும் போதே இடையிட்ட ஜனனி

    “தீபுவுக்கு கல்யாணம் னு எங்க கிட்ட யாரும் சொல்லலை சித்தி அப்புறம் எப்படி எனக்கு தெரியும்”

    “என்ன யாரும் சொல்லலையா… என் வீட்டுக்காரர் தான் சொன்னாரே”என்றதில் “ஸ்ஸோ ஃபோன் வந்திருந்தா நான் தான் பேசி இருப்பேன் ஆனா எந்த ஃபோனும் இந்தியாவில் இருந்து வரலையே”என்று கிண்டலாக சிரித்தவள் “ஃபோன் பண்ணி இருப்போம் சித்தி ஆனா ஒரு பேச்சுக்கு கூட யாரும் எங்க கிட்ட சொல்லலையா அதான் பேசலை. அப்புறம் ஊருக்கு போன டைம் வந்தோமே அப்பவே பவி தீபு ரெண்டு பேரையும் பார்த்து விஷ் பண்ணி ட்ரீட் கூட வச்சோம். உங்க கிட்ட உங்க சின்ன மகன் சொல்லலையா.. அது உங்களுக்கு வயசு ஆகுது பாருங்க அதனால மறந்திருப்பீங்க. தீபன் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ண மறந்த மாதிரி”என்று சொல்லியே விட்டாள் ஜனனி.

    “ஹ்ஹான் ஆமாம் ஆமாம்”என்று அசட்டு சிரிப்பு சிரித்த வளர்மதியை நறுக்கென்று கொட்டினால் என்ன என்ற ஆத்திரம் ஜனனிக்குள்.

    “என்னவோம்மா வேலை கல்யாணம் னு இருந்ததில் மனுசன் மறந்திருப்பாரு. சரி அதை விடு மூணு மாசம் ஆரம்பிக்கவும் தானே கொண்டு வந்து விடுற… இல்லை லீவு ஒரு மாசமா…”என்று பேச்சை மாற்றியவர், “முப்பது முடியவும் கொண்டு வந்து விட்டுடு ஜனனி. நீயும் புருஷன் பிள்ளையை விட்டுட்டு எத்தனை நாளைக்கு இங்க இருப்ப. அங்கே நாங்க பாத்துக்கிறோம் என்ன நீரா?”என்றார் மருமகளிடம். அதில் நீ ஒரு மாதம் முடியவும் வந்து விட வேண்டும் என்ற குறிப்பு இருந்தது மறைமுகமாக

    “இல்லை சித்தி மூணு மாசம் முடிச்சு தான் அனுப்புவேன் போன தடவை ஸ்வருக்கு நான் இல்லை. அத்தை தான் இருந்தாங்க அதுவே எனக்கு பெரிய வருத்தம். இந்த தடவை என் நாத்தனார் நல்லா உடம்பு தேறின பிறகு தான் வருவா. இங்கே பக்கம் தானே நீங்க வந்துட்டு போங்க. அவரும் அடுத்த மாதத்தில் இந்தியா வந்திடுவார்”என்று உறுதியாய் கூற

    “சரி சரி எதுனாலும் செல்வத்துக்கிட்ட பேசுங்க”என்று வளர்மதி அதற்கு மேல் பேசவில்லை.

    ‘அவனை போடுற போட்டில் இவள் முப்பதாம் நாளே வந்திடப் போறா’என்று எண்ணிக் கொண்டார் வளர்.

    ஆழியன் உணவோடு வந்தவன் சிறிது நேரம் இருந்து விட்டு வளர்மதியை அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தான். மகள்களை விட்டு பிரிய மனமே இல்லை அவனுக்கு. நீரதியைப் பார்க்க மகளைப் பார்க்க என பூரித்துப் போனவனைக் கண்டு வளருக்கே வியப்பு தான்.

    வளர்மதி கிளம்பியதும் ஏதோ ஒரு சிசிடிவி கேமராவே கீழே விழுந்தது போல ஒரு ஆசுவாசம் நீரதியிடம்.

    “ஹப்பப்பா உன் மாமியாருக்கு முதுகுல கூட கண்ணுடி நீரு”என்று சிரித்தாள் ஜனனி.

    “ஏன் அண்ணி”என்றவளுக்குமே பொங்கியது சிரிப்பு.

பவ்யா அழைத்துப் பேசினாள். இருவரும் பிரசவ நேரத்தில் பட்ட பாட்டை சொல்லி சிரித்துக் கொண்டனர். குழந்தையை வீடியோவில் பார்த்தாள் பவ்யா. மருத்துவ மனையில் இருக்கும் போதே அவளின் வீட்டினர் வந்து பார்த்து விட்டு சென்றிருக்க பவ்யாவின் அம்மா ஒரு அன்னையென அறிவுரை சிலவற்றையும் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தனர்.

    பிறந்த வீட்டின் கவனிப்பும் அதில் கிடைக்கும் சுகமும் ஒரு பெண்ணிற்கு இயல்பையும் இலகுத்தன்மையையும் தருவது போல நீரதியும் உணர்ந்தாள்.

    அவளின் அண்ணன் அழைத்து பேசினான். ஒரு மாதத்தில் வந்து விடுவதாக உறுதியளித்தவன் சிறிது நேரம் பேசிவிட்டு வைக்க இரண்டு பெண்களும் கதை பேசத் துவங்கி விட்டனர்.

    எல்லாம் நலமாகவே செல்ல ஆழியனும் அவ்வப்போது வந்து பார்த்து விட்டுச் சென்றான். இரண்டு முறை தேசிகன் வளர்மதி அமுதன் மூவரும் வந்து விட்டுச் செல்ல அத்தனை இதமாய் உணர்ந்தாள் நீரதி.

    *********

    “அப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”என்று வந்து நின்ற ஆழியனை புருவம் சுருக்கிப் பார்த்த தேசிகன் சொல் என்பது போல சைகை காட்டினார்.

    “சுபாஷ மாமா இன்னும் எவ்வளவு நாளைக்கு மில்லுல இருப்பார்”என்று நேரடியாகவே கேட்க

    “இதென்ன கேள்வி செல்வம். இனி இங்கே தான் வேலை பார்க்கப் போறான். அவனுக்கு மில் வேலை புடிச்சுருக்குனு சொன்னானே “என்றார்.

    “ஆனா எனக்கு புடிக்கலை”என்று இப்போதும் நேரடியாக சொல்லி விட

    “காரணத்தை சொல்லாம என்ன இது‌ ஏன் புடிக்கலை”என்று தேசிகன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தான் சுபாஷ்.

    “அதை நான் சொல்றேன் மாமா”என்று உள்ளே வந்தவனை தீயென முறைத்த ஆழியன் “எங்க அப்பா கூட பேசறதை இதுவரைக்கும் ஒட்டுக் கேட்டீங்களா”என்று வள்ளென்று விழ

    “எனக்கு அந்த குறுக்கு புத்தி எல்லாம் கிடையாது. இன்னைக்கு நீ நடந்துகிட்ட விதத்தை வச்சு தான் எப்படியும் இங்கே பேசுவன்னு நான் உள்ளே வந்தேன். நினைச்ச மாதிரி தான் ஆகியிருக்கு”என்ற சுபாஷ் “அமுதன் மச்சான் எவ்வளவு கஷ்டப்பட்டு மரங்களை வாங்கிட்டு வர்றாரு. அதை வச்சு வீட்டு உபயோக சாமான் செய்யாம நல்ல மரத்தை எல்லாம் எடுத்து ஏதோ பொம்மை செய்றேன் பொட்டி செய்றேன்னு வீணாக்குனாரு. ஒரு வாரமா பாத்துட்டு தான் ஏன் இப்படி வீணாக்கற மச்சான் னு நான் கேட்டேன்”என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான் சுபாஷ்.

    “இவ்வளவு தானா நான் கூட என்னவோ நினைச்சு பயந்துட்டேன்.”என்ற தேசிகன் “சுபாஷ் செல்வம் எப்போதும் மரங்களை எடுக்கிறது தான். அவன் செய்ற பொம்மை எல்லாம் ஷோரூம் ல விற்க தான் செய்றான். நீ அதை நினைச்சு கவலைப்பட வேண்டாம்”என்றார்.

    “இருந்தாலும் மாமா எல்லாம் தரமான மரம்”என்று அவன் இழுக்க

    “அது தெரியாமல் நாங்க எடுக்கலை”என்று அடுத்ததாய் ஒரு சுள் வார்த்தை.

    “அதைத்தான் சொல்றேன். தரமான மரத்தை எல்லாம் இந்த மாதிரி பொம்மையும் பொட்டியும் செஞ்சா கட்டில் கதவு ஜன்னலுக்கு எல்லாம் என்ன செய்வீங்க. அமுதன் எவ்வளவு சிரமப்பட்டு அந்த மரத்தை எல்லாம் கொண்டு வர்றாரு தெரியுமா”என்று அதற்கும் பேசினான் சுபாஷ்.

    அந்த கேள்வி எல்லாம் அவனுக்கே அபத்தமாய் தோன்றாமல் போனது தான் ஆச்சரியம் .

    “சுபாஷு, அதை நாங்க பார்த்துக்கிறோம். செல்வம் என் கிட்ட சொல்லிட்டு தான் மரத்தை எடுப்பான் அதே மாதிரி அவன் செஞ்ச எந்த பொருளும் இதுவரைக்கும் சோடை போனதா சரித்திரம் கிடையாது.இங்க விக்கிற கட்டில் அலமாரி மாதிரி அவன் செய்ற பொருளும் கணிசமான வருமானத்தை தந்துட்டு தான் இருக்கு. இத்தனை வருஷம் தொழில் பண்றோம் இதை யோசிக்க மாட்டோமா.”என்றவர் “நீ பேசாமல் நாளையில் இருந்து கடைக்கு போயிடேன். தீபனுக்கு உதவியா இருக்கும்”என்றவர் அவனை ஷோரூமிற்கு அனுப்பி விட்டுத் தான் மறு வேலை பார்த்தார் தேசிகன்.

    அத்தோடு ஆழியன் சுபாஷின் பிணக்குகள் ஓரம் கட்டி வைக்கப்பட வளர்மதி நீரதியை வெகுவிரைவில் அழைத்து வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்க அவனோ “மூணு மாசத்துல தான் விடுவேன்னு ஜனனி சொல்லிட்டாங்க ம்மா”என்று முடித்துக் கொண்டான்.

    “என்னவோ மொதோ பிரசவம் மாதிரி பண்றா”என்ற முணுமுணுப்போடு எங்கேயோ கிளம்பிக் கொண்டிருக்க கேள்வியாக அவரைப் பார்த்தான்.

    “பேரனுக்கு தடுப்பூசி போட்டதுல கால் வீங்கி காய்ச்சல் வந்திடுச்சாம் அதான் பார்க்க கிளம்பிட்டேன் அப்பாவும் வர்றாரு”என்றார் அவன் பார்வையை உணர்ந்தவராய்.

    “ஓஓஓ”என்றவன் சாப்பிட அமர்ந்து தானே பரிமாறிக் கொள்ள அந்த நேரத்தில் வந்த சுபாஷிற்கு தரங்கினி உணவை எடுத்து வைத்தாள்.

    “தரு சூடா முறுகலா நெய் தோசை ஒண்ணும் முட்டை தோசை ஒண்ணும் போடுடா”என்ற சுபாஷ் இட்லிக்கு மேல் தெப்பமாய் சாம்பாரை ஊற்றிக் கொண்டிருந்தான்.

    “இதோண்ணே”என்று சமையற்கட்டை நோக்கி நடந்தவளையும் அவளின் அண்ணனையும் பார்த்த ஆழியன் எதுவும் பேசாமல் எழுந்து கொண்டான்.

    “இரு மச்சான் முட்டை தோசை சாப்பிடலாம்”என்ற சுபாஷிடம்”நைப்பா தின்னு தின்னு உடம்பை வளத்தா வேலை செய்யும் போது அது வளையாது மச்சான் அதான் நாங்க எல்லாம் டயட்ல இருக்கறது. நீங்க சாப்பிடுங்க”என்று நக்கலாய் சொல்லி விட்டு செல்ல சுபாஷின் முகம் போன போக்கில் அங்கிருந்த சமையல் செய்யும் பெண்ணுக்கு அப்படி ஒரு சிரிப்பு பாவம் அதை அடக்க வெகு சிரமம் கொண்டாள் அவள்.

    உண்டு முடித்து ஷோரூம் கிளம்பியவன் இரண்டு நாட்களிலேயே தீபனோடு பிரச்சினை என்று தேசிகன் முன்பு வந்து நின்றிருந்தான்.

    ….. தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!