Skip to content
Post Views: 4,178
தூறல் – 34
“நீங்க எல்லாரும் அதிர்ச்சியோட பாக்குற அளவுக்கு நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..? கல்யாணம் பண்ணினா ஒரு பொண்ணு புருஷன் வீட்டுக்கு போறதுதானே நம்ம சம்பிரதாயம். அதைத்தான் சொன்னேன். என்ன இருந்தாலும் இது அவர் உழைக்க வந்த ஊருதானே… எப்படி இருந்தாலும் அவரோட சொந்த மண்ணுக்கு போறதுதானே அவருக்கு ஆத்ம திருப்தி தரும். அதனால திரும்பவும் நாங்க இலங்கைக்கே போறோம்…”
Advertisement
“ஏய் அஞ்சலி… அவன் நினைக்காத விஷயத்தை நீ புதுசா சொல்லி அவனை குழப்பி விடாதே. அவன்தான் இங்கே வந்து செட்டில் ஆயிட்டானே. உனக்கு இலங்கை போய் பாக்கணும்னு ஆசையா இருந்தா சொல்லு… நாம எல்லாருமே சேர்ந்து குடும்பமா டூர் போயிட்டு வரலாம். புதுசா எதையும் யோசிக்காதே…”
அவள் தோளில் செல்லமாய் அடி போட்டு கூறினார் காமாட்சி.
Advertisement
Advertisement
“நான் தெளிவா முடிவெடுத்துதான் சொல்றேன் அக்கா… மனசளவுல வெறுத்து விரக்தி அடைஞ்சு மனம் போன போக்கில இங்கே வந்துட்டார். இந்த ஊர் அவருக்கு பொருந்தியும் போச்சு… இல்லைன்னு சொல்லல… ஆனா இனி இழந்த இடத்துக்கே திரும்பி போனாலும் ஒரு அழகான வாழ்க்கையோடதான் அங்கே போறார். அங்கே மட்டும்தான் அவர் முழுமையான குமரகுருவா இருக்க முடியும். காலம் முழுக்க எங்களுக்காக இங்கே அவரால இருந்திட முடியும். ஆனா உள்ளே அவரையும் மீறி ஒரு வெறுமை இருக்கும்… ஒரு ஏக்கம் இருக்கும்… இந்த மனுஷன் அதை எல்லாம் வெளிய சொல்லமாட்டார். அதுவுமில்லாம என் குரு அப்படி ஒன்னும் அடையாளம் இல்லாம அங்கீகாரம் இல்லாம இந்த இடத்தில இருக்க வேண்டாம். ஒரு மருமகனா மட்டும் வந்துட்டுப் போற அடையாளம் கிடைச்சா போதும். அவர் இடத்துல அவருக்கான முழு உரிமையோட அவர் வாழட்டும். அதுதான் அவருக்கு சந்தோஷம்… அவரைவிட எனக்கும் சந்தோஷம்…”
தெளிந்த வார்த்தைகளோடு பேசியவளை கொப்பளித்த காதலோடு பார்த்தான் குரு. அவனது ஆழ்மனதை துளைத்து உள்ளே நுழைந்து பார்த்ததைப் போன்று பேசுபவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொள்ள வேண்டும்போல் தோன்றியது. இதைத் தாண்டிய புரிதல் என்பது இணைகளுக்கு இடையே தோன்றிவிடுமா..?”
Advertisement
ராதாவோ மனம் குழைந்து அழுதேவிட்டார். தன்னவளையே விழி எடுக்காமல் காதலும் கனிவும் பொங்க பார்த்தபடி அமர்ந்திருந்தான் குரு.
“நாங்க ரெண்டு பேருமே இப்போ ஒரு ஸ்கூல்ல ஒரு பொறுப்பான டீச்சர் வேலை பார்த்துட்டு இருக்கோம். அப்படியே விட்டுட்டு எல்லாம் போகமாட்டோம். இந்த அகாடமிக் இயர்ல அவர் வேலையை நிறைவா அவர் முடிக்கட்டும்… என் வேலையை நானும் முடிக்கிறேன்… அதுக்கு இடையில அங்கே என்னென்ன வேலை செய்யணுமோ அதையும் செஞ்சு முடிச்சுட்டு எல்லாத்தையும் தெளிவா பண்ணிட்டுதான் அங்கே போவோம். எப்படின்னாலும் சவி இலங்கையிலதான் அவ பள்ளிப் படிப்பை துவங்கப் போறா…”
ஒவ்வொன்றையும் தெளிவாக தனக்குள் திட்டமிட்டவள்போல் அச்சுப்பிசகாமல் பேசிக்கொண்டு இருந்தாள் அஞ்சலி. அவளைப் பெற்றவர்கள்தான் முகம் கன்றி ஒருவித வேதனையோடு அமர்ந்திருந்தனர். என்ன இருந்தாலும் மகளை வேறு ஒரு நாட்டிற்கு வேறு ஒரு பிரஜையாக அனுப்பி வைக்க வேண்டுமே.
ஆனால் அவள் தெளிவான முடிவில் இருக்கிறாள் என்பது புரிந்துபோனது. அவள் விஷயத்தில் தாங்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் தோல்வியை கொடுத்ததோடு அளவு கடந்த துயரத்தையும் கொடுத்து அவளை இந்த சிறு வயதிலேயே நிறைய அலைக்கழித்து விட்டது. அவளை காப்பாற்ற ஆபத்பாந்தவனாக தெய்வமே அனுப்பி வைத்த தனிப்பிறவி இந்த குரு. இவனோடு எங்கு வாழ்ந்தாலும் அவள் நிம்மதியாக வாழ்வாள் என்பது இவர்களுக்கு இந்த இரண்டு நாட்களில் தெளிவாக புரிந்துபோனது. இனி அவள் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்தில் அவர்களும்.
காமாட்சி, ராமலிங்கம் இருவரும்கூட முகம் வாடிப்போய்தான் அமர்ந்திருந்தனர். கண்கள் கலங்க குருவின் கரத்தை பற்றிக் கொண்டார் காமாட்சி.
“அப்போ எங்களை எல்லாம் விட்டுட்டு திரும்பவும் உன் ஊர் பக்கமே போகப்போற… அப்படித்தானே குரு…எங்களை எல்லாம் மறந்துடுவதானே…”
வேதனையோடு கேட்டவரின் கரத்தை இறுக்கமாய் பற்றி தன் விரல்களோடு விரல்களை கோர்த்துக் கொண்டான் குரு.
“என்னக்கா இப்படி சொல்றீங்க..? என் வாழ்க்கையில உங்க எல்லாருக்கும் முக்கிய பங்கு இருக்கு. ஊர் மாறிப் போனாலும் இடம் மாறி போனாலும் சொந்தபந்தம் விட்டுப் போயிடுமா..? நான் எடுக்காத முடிவுகளைகூட அஞ்சு எடுத்து வச்சிருக்கா. அப்படியே நாங்க அங்கே போனாலும் உங்களை மறந்துடுவோமா..? இங்கே வராமதான் போயிடுவோமா..? ஏன்க்கா நடக்காத ஒன்னைப்பத்தி எல்லாம் யோசிக்கிறீங்க…”
“ராதாக்காகிட்ட பேசினவரைக்கும் ஒரு விஷயம் சொன்னாங்களே… இலங்கையில கல்யாணம் பண்ணிட்டா மாப்பிள்ளை பசங்கதான் பொண்ணு வீட்டுக்கு போவாங்கலாமே…
“ஆமா…” என்று சிரித்தான் குரு.
“அப்புறம் என்ன..? நீ இங்கேதானே இருக்கணும்…”
“அவர் வழக்கப்படி வேணா அவர் இங்கே வந்து இருக்கட்டும். நான் நம்ம வழக்கப்படி இலங்கைக்கு போயிக்கிறேன்…”
குறும்போடு சொன்ன அஞ்சலியின் முதுகில் செல்லமாக அடித்தார் காமாட்சி.
“இப்ப நீ சொன்னதெல்லாம் அடுத்து நாம பார்க்க வேண்டியது. முதல்ல உங்க கல்யாணத்தை முடிக்கணும். இப்பவே நம்ம தெருவுல கசமுசன்னு கண்டபடி பேசிட்டு இருக்காங்க. நம்ம ஊரு ஜனங்க பேசுறதைப் பத்தி சொல்லவா வேணும்..? இனியும் தாமதம் பண்ணாம உடனடியா கல்யாணத்துக்கு உண்டான ஏற்பாட்டை பண்ணிரணும். நீங்க என்னண்ணே சொல்றீங்க..?” என்று கர்ணனிடம் திரும்பி கேட்டார் காமாட்சி.
“காலையில கபிலன் வந்துருவான் மா… பேசி முடிவு பண்ணிடலாம்…”
உண்டு முடித்து இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.
குருவின் வீடு நெருங்கியிருக்க லதாவின் தோளிலேயே உறங்கி இருந்த சவியை தன் தோளுக்கு மாற்றிக் கொண்டாள் அஞ்சலி.
“ஏம்மா..? நம்ம வீட்டுக்கு வரலையா..?”
“என் குரு கைப்பிடிச்சு அவர் பொண்டாட்டியாதான் இனி அந்த வீட்டுக்குள்ள காலடி வைப்பேம்மா. என்னை தப்பா நினைச்சுக்காதீங்க. நானும் ராதாம்மாவும் இங்கேயே தங்கிப்போம்…”
அதற்குமேல் அங்கு நிற்காமல் அவள் வேகமாக வீட்டிற்குள் சென்றிருக்க முகம் கன்றி சிறுத்து நின்றிருந்த பெரியவர்கள் இருவரையும் சங்கடமாக திரும்பிப் பார்த்தான் குரு.
“அ..அது… அ..அவளை நீங்க ஒன்னும் தப்பா…”
அடுத்து அவன் கூறும் முன் “எதுவும் நினைக்கலேங்க தம்பி… இந்த இடத்துல அவ உணர்த்திட்டுப் போனது உங்க கண்ணியத்தையும், நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க நேசத்தையும், உங்கமேல அவ வச்சிருக்கிற நம்பிக்கையையும்தான். நாங்க தேர்ந்தெடுத்து கொடுத்த வாழ்க்கை அவளை பாழும் குழியில தள்ளிடுச்சு. உள்ளே புதைஞ்சு போயிடாம அவளை காப்பாத்தி உங்க தோள்ல சுமக்குறீங்க. இந்த சந்தோஷமே எங்களுக்கு போதும்… நீங்க போய் படுங்க…”
நிறைவாக கூறிய கர்ணன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றிருக்க ராதாவோடு தன் வீட்டிற்குள் நுழைந்தான் குரு.
இதற்குள் மகளை அறைக்குள் படுக்க வைத்து கூடத்தில் தனக்கும் ராதாவிற்கும் படுக்கையை விரித்திருந்தாள் அஞ்சலி.
மகளை அணைத்தபடி படுத்துக் கொண்டவனுக்கு உறக்கம் தழுவவே இல்லை. உடல் முழுக்க சிலிர்த்துக் கொண்டே இருந்தது. அன்றைய நாள் அவனவள் அவனுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தையும் அவன்மேல் கொண்டுள்ள நேசத்தையும் அவனுக்காக ஒவ்வொன்றையும் யோசிப்பதையும் நினைக்க நினைக்க சிலிர்ப்பு அடங்கவே இல்லை. அவள் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது. அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது… தோளில் புதைந்து கண்மூடிக் கொள்ள வேண்டும்போல் தோன்றியது.
அவனை முழுமையாய் சமன்படுத்தி நிமிர்ந்து நிற்க வைக்கும் அன்பின் அட்சய பாத்திரமாய் அவன் அஞ்சலி… அவன் செல்லக் கிறுக்கி.
அறையை விட்டு எழுந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தான்.
கூடத்தில் இரவு விளக்கு மட்டும் மெல்லியதாய் ஒளிர்ந்து கொண்டிருக்க ராதாவின் மெலிதான குரட்டை ஓசை அவர் அயர்ந்து உறங்கியதை கூறி இருந்தது. அருகில் படுத்திருந்த அஞ்சலியோ போனை பார்த்தபடி படுத்திருந்தாள். அவளும் உறங்காமல் இருக்கிறாள் என்பதில் அவன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை.
என்ன தோன்றியதோ தன்னிச்சையாக தலையை திருப்பி அவன் அறையை பார்த்தாள். அறையின் நிலையில் சாய்ந்தபடி அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் குரு.
எழுந்து அமர்ந்தவள் “தூங்கலையா..?” என்றாள் மெல்லிய குரலில்.
“இருட்டுல இவ்ளோ ப்ரைட்னெஸ் வச்சு போன் பாக்கக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா…” என்றான் அவனுமே தணிந்த குரலில்.
“தூக்கம் வரல…” சிரிப்போடு கூறினாள்.
இரு கைகளையும் விரித்து இங்கே வா என்று கண்மூடித் திறந்தான் அவள் கண்ணாளன்.
அது காமத்திற்கான அழைப்பல்ல… காதலோடு கூடிய அழைப்பு…காதலை மட்டுமே பிரதிபலிக்கும் அழைப்பு.
சிரித்தபடியே எழுந்து சென்றவள் விரிந்திருந்த அவன் கைகளுக்குள் தன்னை அடக்கிக் கொண்டாள். இருவருக்குமே அந்த அணைப்பு தேவையான ஒன்றாகத்தான் இருந்தது. இருவருமே ஒருவரை ஒருவர் மனதளவில் தேடினர் என்பதை அந்த அணைப்பின் இறுக்கம் காட்டியது.
“உன்னை அன்பாலயே கொல்றதா சொன்ன… உண்மைல நீதான்டி ஒவ்வொரு நிமிஷமும் உன்னோட அபரிமிதமான அன்பால நேசத்தால என்னை கொன்னுட்டே இருக்க… மூச்சு முட்டுது அஞ்சு…”
கரகரத்த குரலில் கூறியவன் அவள் கழுத்து வளைவில் முகத்தை அழுத்திக் கொண்டான்.
“கொஞ்சநேரம் பின்வாசல்ல போய் உட்காரலாமா..?”
ஆசையாக கேட்டவளிடம் சரி என்று சிரித்தவன் அவள் தோளில் கை போட்டபடி பின்வாசல் கதவை திறந்து அந்தப் படியிலேயே அவளோடு இணைந்து அமர்ந்து கொண்டான்.
இரவு நேர குளுமையான காற்று இதமாக அவர்களை வருடிச் சென்றது. அவன் தோளில் அவள் சாய்ந்து கொள்ள அவள் தோளில் அவன் அணைவாக கை போட்டுக் கொண்டான்.
“ஏகப்பட்ட முடிவுகள் எடுத்து வச்சிருக்கீங்க மேடம்… இலங்கையை பத்தி உங்களுக்கு தலை தெரியுமா..? வால் தெரியுமா..?”
நமுட்டுச் சிரிப்போடு கூறியவனை தலை நிமிர்த்திப் பார்த்தவள் “என்ன தெரிஞ்சுக்கணுமோ அதை தெளிவா தெரிஞ்சுக்கிட்டேன்…” என்றாள் உதட்டை சுழித்து.
“அப்படி என்ன தெரிஞ்சுக்கிட்டாளாம் என் செல்லக் கிறுக்கி..?”
அவளை நேரே அமர்த்தி அவள் இரு தோள்களிலும் தன் இரு கைகளை கோர்த்து அவள் முகத்தோடு முகம் பார்த்து கேட்டான்.
“முல்லைத்தீவு உங்க அம்மாவோட ஊர்… அதாவது உங்க அப்பா உங்க அம்மாவை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் புலம்பெயர்ந்த ஊர். உங்க அப்பாவோட சொந்த ஊர் கிளிநொச்சி. அங்கே அவருக்கு சொந்த வீடு நிலம் எல்லாமே இன்னும் இருக்கு. ராதா அம்மாவுக்கு சீதனமா கொடுத்த நிலமும் அங்கேதான் இருக்கு. நீங்களும் முல்லை தீவிலேயே செட்டில் ஆயிட்டதால கிளிநொச்சியில இருக்கிற உங்க நிலம் வீடு இது எல்லாம் ராதாம்மாவோட நெருக்கமான சொந்தக்காரங்க வசம் இருக்கு. ராதாம்மாவும் அவங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப முடியாம போனதுக்கு அப்புறம் உங்க கூடவே வந்துட்டாங்க. அவங்களுக்கும் குழந்தை இல்லாதனால அவங்க வாழ்க்கையும் உங்க கூடவே கடந்திருச்சு. அப்புறம் ஏதேதோ நடந்து நீங்களும் ராதாம்மாவும் தமிழ்நாடு வந்துட்டீங்க. முல்லை தீவுல உங்களோட சொந்த இடம் எல்லாம் பாதி அழிஞ்சு போயிடுச்சு. திரும்ப அங்கே போய் பழுது பார்த்து புதுப்பிச்சு வாழறதை காட்டிலும் கிளிநொச்சியில இருக்கிற உங்க சொந்த இடத்துக்குப் போய் இன்னொரு புது வாழ்க்கையை நம்மால தொடங்க முடியும். பல வலிகள் அங்கே உங்களுக்கு தாக்காமலும் இருக்கும். உங்களுக்கான எல்லாமும் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி அத்தனையும் விட்டுட்டு இங்கே வந்து இருக்கணும்னு அவசியம் இல்ல குரு. அதனால நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க, நான், சவிக்குட்டி, ராதாம்மா எல்லாரும் கிளிநொச்சிக்கே போயிடலாம். அங்கே என் குரு புது மனுஷனா சந்தோசமா அவர் குடும்பத்தோட அவர் வாழ்க்கையை தொடங்குவார். இதுல எல்லாருக்குமே பெரிய நிறைவு கிடைக்கும்…”
பேசி முடித்தவள் அவன் முகத்தையே பார்க்க அவனோ விழிகள் அலைப்புற அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நிலவொளியின் வெளிச்சத்தில் அவன் முகத்தில் மின்னி மறையும் மெல்லிய உணர்வுகளையும் அவளால் உணர முடிந்தது.
“என்னாச்சு..? ஏன் அமைதி ஆயிட்டீங்க..? நான் சொன்ன விஷயங்கள் சாத்தியம்தானே…”
அமைதியைக் கலைத்தான்… பேசினான்… வார்த்தைகளால் அல்ல… முத்தங்களால்…
அவள் முகம் முழுக்க இடைவிடாத முத்தங்களை பதித்தவன் “நீ… நீ… எ..என் தேவதைடி… எ..என் வரம்… நான்… நான்… நான் புண்ணியம் பண்ணி இருக்கேனா..? எனக்கும் வாழக்கூடிய தகுதி வந்துடுச்சா..? பொணமாதானடி இருந்தேன்… எனக்குள்ள எப்படி உயிர்மூச்சை கொடுத்த..? அழுகிப்போன நிலையில இருக்கிற ஒரு சவம் அழகான சிலையா மாற முடியுமா..? என் வாழ்க்கையை மொத்தமா மாத்தி வடிவமைக்க வரமா கிடைச்சவளாடி நீ..?”
உணர்ச்சி பொங்கப் பேசியவன் உடல் நடுங்க அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். மென்மையான சிரிப்போடு அவன் முதுகை வருடினாள் அஞ்சலி.
“நீங்க சொன்ன வார்த்தைகள் எல்லாம் எனக்கும் பொருந்தும்தானே. நானும்கூட அப்படித்தானே குரு இருந்தேன். பழைய வலிகளை எல்லாம் மறந்திடுவோம். இனி வரப்போற வாழ்க்கையை சந்தோஷமா வாழ்வோம்…”
அவன் வாழ்க்கையை புதுப்பித்தவளாக மட்டுமல்ல… இனி வரும் நாட்களில் வழிகாட்டியாகவும் அவள்தான் இருக்கப் போகிறாள் என்று உணர்ந்து இன்பமாக சிரித்தான் குமரகுரு.
(தொடரும்)
error: Content is protected !!