Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 25

அத்தியாயம் : 25

‘புலி தன் காயத்தை நாவால் வருடுவது போல’ அவளது உள்ளமும் அவன் பேசிய வார்த்தைகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தன. இன்னும் சில நாட்களில் தான் இங்கிருந்து சென்றுவிட்டால், அவனது வாழ்க்கை எக்காரணத்தைக் கொண்டும் சிதைந்துவிடக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். தன்னிடம் அன்பாகவும் நம்பிக்கையாகவும் பழகும் தனது தங்கைக்கும் தான் துரோகம் செய்துவிட்டதாகத் தோன்றிவிடக் கூடாது.

அன்று ஒருநாள் அப்பா அன்புச்செல்வன், அம்மா அபிராமியை அழைத்துக்கொண்டு வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். அதனால் பிரதீபா காதல் தோல்வியிலும், விரும்பியவனை மணக்க முடியாத விரக்தியிலும் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அவர்களாவது உயிருக்கு உயிராகக் காதலித்துத் திருமணம் செய்ய ஆசைப்பட்டவர்கள். ஆனால், இங்கு அப்படி எதுவும் நடக்காதபோது, எதற்காக ஆனந்தின் பிடிவாதத்திற்குப் பணிய வேண்டும்? உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யக் கூடாது; வந்த வேலை முடிந்ததும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கிளம்பிச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்துதான் ஆனந்தை விட்டு விலகி நிற்கப் பார்க்கிறாள். அவனோ எதையும் புரிந்துகொள்ளாமல் அவளிடம் தர்க்கம் செய்கிறான்.

“உன்னை நான் இன்னைக்கு நேத்து பார்க்கல. எங்க வீட்டு உறவுப் பெண்ணாகவும் நீ எனக்கு அறிமுகமாகல. அப்புறம் ஏன் யாரோ ஒரு அந்நியரைப் போல விலகிப் போகப் பார்க்கிற? என் மனசுல என்ன இருக்குன்னு உனக்குத் தெரியலையா… இல்ல தெரிஞ்சும் தெரியாதது போல நடிக்கிறியா?” என்றான் ஆனந்த் ஏக்கத்துடன்.



Advertisement

“எனக்கு எதைப் பத்தியும் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை” என்று வெடுக்கென்று பதிலளித்தாள் ஆனந்தி.

அவளது ஒட்டாத பதிலில் மனம் வருந்தியவன், “ஏன் எப்பவும் இப்படித் தூக்கி எறிஞ்சு பேசுற? உன்னை நான் கட்டாயப்படுத்துறதா நினைக்கிறியா?” என்றான்.

“பின்ன?”

Advertisement

“ம்ஹூம்… ஆனந்தி! நமக்குள் ஏற்பட்ட இந்தப் பந்தம் இன்றோடு அழிந்து போவதும் இல்லை, நாளையுடன் முறிந்து போவதும் இல்லை. இது பல ஜென்மங்களைக் கடந்து நீண்டு செல்லப்போகும் உன்னதமான உறவு. நீயாக எதையும் போட்டு மனசைக் குழப்பிக்காதே!”

Advertisement

அவள் அப்போதும் இறுக்கத்துடனே இருக்க, “நீ இங்கே வந்த கொஞ்ச நாளிலேயே எல்லார் மனசுலயும் நிறைஞ்சுட்ட. எங்க அம்மா, அத்தைகள், மாமான்னு எல்லாரும் உன்னைத் தங்கள் வீட்டு வாரிசாவே நினைக்கிற அளவுக்கு உன் குணாதிசயங்கள் இருக்கு. எங்க பாட்டி முகத்துல இத்தனை வருஷம் கழிச்சு இப்பத்தான் சிரிப்பைப் பார்க்கிறேன். இப்படி அத்தனை பேரிடமும் பாரபட்சம் பார்க்காம பழகுற நீ, என்கிட்ட மட்டும் ஏன் இப்படிப் பாராமுகமா இருக்க?” என்று ஆதங்கத்துடன் வினவினான் ஆனந்த்.

அவள் தன் மனவலியை அடக்கிக்கொண்டு நிற்க, அவளது நாடியைப் பற்றித் திருப்பித் தன் முகம் பார்க்கச் செய்தவன், “என்னைப் பார்! என் கண்கள் பொய் சொல்லுதா? ஏதோ பொழுதுபோக்கிற்காகவோ, உடல் ஆசைக்காகவோ பழகுவது போலவா என் பார்வை இருக்கு?” எனக் கேட்டான்.

​அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு, “உங்களுக்கும் அபிநயாவுக்கும் வீட்டுல கல்யாண ஏற்பாடு நடப்பது எனக்கும் தெரியும். பிறகு, எந்தத் தைரியத்துல என்கிட்ட இப்படிப் பழகுறீங்க? பெரிய வசதியான வீட்டு ஆண்களா இருந்தா, உங்க வீட்டுக்கு வர்ற பெண்களை எல்லாம் உங்க இச்சைக்குப் பயன்படுத்தலாம்னு நினைக்கிறீங்களா?” எனக் காரமாக வினவினாள்.

Advertisement

அவளது வார்த்தைகள் ஈட்டியாய் அவன் நெஞ்சில் பாய்ந்தன. அவனிடம் இருந்த மென்மை மெல்ல மறையத் தொடங்கியது. “அப்போ… அதுக்காகத்தான் நான் இப்படி நடப்பதா நினைக்கிறியா?”

“பின்னே? இன்னொருவரைத் திருமணம் செய்துக்க போகும் நீங்க என்கிட்டே இப்படி பழகினா வேறு என்ன நினைப்பது? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை கண்ணுக்கு லட்சணமா இருப்பதால், அவளைத் திருமணம் செய்துட்டு என்னை வச்சுக்கலாம்னு பார்க்கிறீங்களா? நீங்கதான் இந்த ஊரையே மிரட்டித் தன் காலடியில் வச்சிருக்கும் பெரிய மனுஷனின் வாரிசாயிற்றே! இந்த ஊர்க்காரர்களும், புதியதாக வருபவர்களும் உங்களுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார்களா? அப்படியே, நீங்க அதிகாரம் செய்வதா இருந்தாலும், நான் உங்க வீட்டுப் பிள்ளையும் இல்லை, இந்த ஊரைச் சேர்ந்தவளும் கிடையாது!” என்று முகத்தில் அடித்தாற்போல் சொன்னாள்.

அவன் முகம் சுண்டிப்போனது.

“இந்த ஊர்க்காரர்களைப் போல ஒரு கொத்தடிமை வாழ்க்கை வாழ என்னால முடியாது. உங்க வீட்டுல தங்கியிருப்பதால் தான் இப்படிப் பேசுறீங்கன்னா, இந்த நிமிடமே வீட்டை விட்டு வெளியேறவும் நான் தயங்கமாட்டேன்” என்றாள். 

அவன் முகத்தில் இருந்த இளக்கம் மறைந்து இறுக்கம் குடியேறியது. 

“எனக்கு உங்களைப் பிடிக்கல. உங்களை நான் கல்யாணம் செய்ய ஆசைப்படல. ஒருவேளை உங்க வீட்டுல உள்ளவர்களே சம்மதிச்சாலும், உங்களைக் கட்டிக்க எனக்கு விருப்பமில்லை. விருந்தாளியா வந்தவளை வீட்டுக்காரியா மாத்த நினைக்கிற உங்களைப் பார்த்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு. இன்னும் ஒரு வாரத்தில் நான் கிளம்பிடுவேன். போன பிறகு இங்கே வரப்போவதில்லைன்னு தெரிஞ்சும், இவ்வளவு கீழ்த்தரமா நீங்க நடப்பதைப் பார்த்தா எரிச்சலா இருக்கு. உங்க விரல் என் மேல் பட்டாலே உடம்பெல்லாம் நெருப்புப் பிடித்தது போல் எரியுது!” எனத் தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தாள்.

அவன் முகம் கடுமையைத் தத்தெடுத்தது. ஏற்கனவே ஒருமுறை அவளைக் காயப்படுத்தியதால் தான், இனி அவளை வருத்தக் கூடாது என இவ்வளவு தூரம் இறங்கி வந்து தன் காதலை யாசிக்கிறான். ஆனால் அவளோ, விடாமல் அவனைக் குதறி எடுப்பதிலேயே இருக்கவும் அவனது பொறுமை பறிபோனது.

அவளது தலைமுடியைப் பற்றித் திருப்பி, நேருக்கு நேராகத் தன் முகத்தைப் பார்க்க வைத்தான். அவனது விழிகளில் தகித்த அந்த அடக்கப்பட்ட கோபமும் அழுத்தமும் அவளை நிலைகுலையச் செய்தன. அவனிடமிருந்து விலகி ஓட முயன்றவள், தம்பி தங்கைகளை உதவிக்கு அழைக்க வாயெடுத்தாள். ஆனால் அதற்குள்ளாக, அவளது கரிய இரு விழிகளுக்குள் தஞ்சம் புகுந்தவன், பெண்ணவளின் செவ்விதழ்களில் தனது அழுத்தமான முத்தத்தைப் பதியச் செய்தான்!

அவள் அவனுக்கு அடங்க மறுக்க, பூங்கொடியைத் தழுவும் படர் கொடியாய் அவனது கரங்கள் அவளது இடையைச் சுற்றித் தன்னோடு இழுத்துக்கொண்டன. அவளைத் தன் வசப்படுத்த முயன்ற அந்த இறுக்கமான அணைப்பிலும், நீண்ட நேர முத்தத்திலும் அவள் சுவாசம் தடுமாறத் தொடங்கியது. அவளது தவிப்பை உணர்ந்தவன், மெல்லத் தன் முகத்தை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டான்.

ஆனந்தியால் இயல்பாக நிற்க முடியாமல் உடல் தள்ளாட, அவளைத் தன் மார்போடு அணைத்துத் தாங்கிக்கொண்டான் ஆனந்த். அவள் பெருமூச்சு விடுவதிலிருந்தே எந்த அளவு நிலைகுலைந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவனது வலது கரம் அவளது முதுகை இதமாக வருடிக்கொடுக்க, மெல்ல இயல்பு நிலைக்கு வந்தவளிடம், “இது நீ குடியிருக்கும் இடம். இதில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை. அதை உனக்குக் கூடிய சீக்கிரம் உணர வைக்கிறேன்” என்று கூறி, அவளது முகத்தைத் தன் மார்பில் அமிழ்த்திக் கொண்டான்.

அவனது மேனியில் தகித்த வெப்பம் அவளைச் சுட்டெரிப்பது போலிருந்தது. அவனது இதயத்துடிப்பு அவள் செவிகளில் மோதி, நாடி நரம்புகளை நர்த்தனம் ஆடச் செய்தது. மேனி எங்கும் நடுங்க, அவனது அந்த ஆழமான அணைப்பிலும், மென்மையான பேச்சிலும், அவனைச் சந்தித்த பழைய நினைவுகளிலும் அவள் முற்றிலும் நிலைதடுமாறிப் போனாள்.

ஆனந்தியின் உச்சியில் முத்தமிட்டவன், “உன்னைப் பார்த்த நொடியே நான் என்னை மறந்தேன். ஆனா, என் மனம் நோகும்படியான உன்னோட நடவடிக்கைகள் என்னையும் அப்படியே மாத்திருச்சு. அன்னைக்கு பார்ட்டி நாள்ல உன்னோட அசையாத பார்வையும், கம்பீரமா நிமிர்ந்து நின்ற தோரணையும், உலக அழகியே தோத்துப்போகும் விதமான அழகுடன் என்னையே பாத்திருந்த விதமும், உன் இரு விழியில் தெரிஞ்ச தீன ஸ்வரமும் என்னை அடியோடு மாத்திடுச்சு… அப்படி உனக்குள்ளே மூழ்கி இருந்தப்போ, நீ கபிலன் வீட்டாரிடம் காட்டிய இணக்கம், அவங்க உன்னை நடத்திய விதம்… உன்னை எனக்குள்ளேயே வச்சுக்கணும்ன்ற ஆசையை உருவாக்கியது.

​கபிலனுக்கு கல்யாணம் செய்யப் பொண்ணு பாத்து வச்சிருப்பதா அவனோட ஆபீஸ்ல வேலை பார்த்த நபர் ஒருத்தர் என்கிட்ட சொல்லியிருந்தார். நான் அதைப் பத்திக் கேட்டப்போ அவனும் மறுக்கலை. அது நீயா இருப்பியோன்ற சந்தேகத்துல என் நண்பன்கிட்ட நான் பேசினதைக் கேட்டு, கோபத்துல நீ விழிகளால் சவாலிட்டுப் போன… அன்னைல இருந்து இன்னைக்கு வரை நீ தான் என் மனசுல சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்க. உன்னைப் பிரிஞ்சு என்னால வாழ முடியாது. யாருக்காகவும் உன்னை விட்டுக்கொடுக்கவும் முடியாது. இந்த ஆனந்தோட வாழ்க்கையை அழகாக மாத்த வந்த தேவதை நீ!” எனச் சொல்லி, அவளிடம் இருந்த தன் மீதான எதிர்மறை எண்ணங்களைக் களைய முயன்றான்.

அவள் வாயடைத்துப் போய் நிற்க, “என் இதயத்தின் ஜீவ தாளம் நீயென உணர்ந்த நொடியே, உனது நினைவுகளின் லயத்தில் என்னை முழுமையாய் தொலைத்துவிட்டேன்!” என்றான்.

​இது மட்டுமே அவன் காதலை முழுவதுமாக உணர்த்துவதற்குப் போதுமானதாக இருக்க, அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. அந்த அமைதியிலும் அவனது விழிகள் அவள் மீது கொண்ட நேசத்தையே அப்பட்டமாகப் பறைசாற்றின.

அவன் சொன்னதை உள்வாங்கவே அவளுக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன. அதன் பிறகு நடந்த யாவும் இயந்திரத்தனமாகவே இருந்தன. அங்கிருந்து வீடு திரும்பியவள், அவனது பேச்சின் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் அறைக்குள் தவிப்புடன் முடங்கிக் கிடக்கிறாள்.

‘எதனால் அவனுக்கு என் மீது இத்தனை நேசம் வந்தது! நான் யார் என்ற உண்மையை அறிந்தால் அவனால் தாங்க முடியுமா? அல்லது தனது குடும்பத்தை ஏமாற்றிச் சென்றவனின் வாரிசு எனத் தெரிந்து என்னைத் துரத்தி அடிப்பானா!’ எனும் கேள்வி அவள் மனதில் மீண்டும் மீண்டும் வட்டமிட்டது.

அவளுக்கு அந்த வீட்டில் இருக்கும் ஆசையே போயிருந்தது. எந்த நேரம் என்ன நடக்குமோ எனும் பயம் மனம் முழுவதும் வியாபித்தது! ஆனந்தின் மனதில் இருப்பதை வீட்டில் உள்ளவர்கள் அறிந்தால் தன்னைத் தவறாக நினைத்து விடுவார்களோ, முன்பொரு நாள் நடந்த சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்து விடுமோ எனக் கிலி பிடித்து ஆட்டியது.

அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வந்து, வீட்டில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த நிம்மதியும் தன்னால் பறிபோய்விடக் கூடாதே எனும் பதற்றம் உருவானது!

கபிலனைத் தொடர்பு கொண்டு தன் மனதில் இருப்பதைச் சொல்லிப் புலம்பினாள். அவன் என்ன சொன்னாலும் கேட்காமல் நிம்மதி இழந்து தவித்தாள். செல்வாவிற்குச் செய்தி வழியாக இங்கு நடப்பதைக் கூறிவிட்டு, அமெரிக்காவிற்குச் சென்றுவிட விரும்புவதாகத் தெரிவித்தாள்.
அத்தை ஜெயலட்சுமி மற்றும் அவரது மகள் சுபாவின் கேள்விகளுக்குப் பதிலளித்தாள். வெளியே இருந்து யாராவது அழைத்தாலும், அந்த அறையை விட்டு வெளியே வருவதற்கும் பயப்பட்டாள். 

வீட்டில் நிலவும் குழப்பங்கள் மட்டுமே அவள் மனதைச் சூழ்ந்திருந்ததால், ஆனந்தின் காதலோ மற்றவர்களின் வார்த்தைகளோ அவள் மனதில் பதியவில்லை! இரவு நேரம் தம்பிகள் வந்து அழைத்தபோது, செல்ல விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்களுக்காகவே வந்தாள்; தம்பிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து, அவர்கள் உறங்கும் வரை கூடவே இருந்துவிட்டுத் திரும்பினாள். ஆனந்தியின் பாராமுகம் ரணமாகத் தைத்தாலும், தான் அப்படி நடந்து கொண்டதால் தான் இப்படி இருக்கிறாளோ என்று நினைத்து, மீண்டும் ஒருமுறை தன் மனதில் இருப்பதை தெளிவுபடுத்த அவன் முயற்சிக்க… அப்போதும் அவனைத் தவிர்த்து விலகிச் செல்ல முயன்றாள் ஆனந்தி.

“என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டியாடி? உன் மேல நான் வச்சிருக்கும் நேசத்தில் என்ன குற்றம் குறையைக் கண்டாய்? இந்த வசதியா? நான் இருக்குற இடமா?” என்று ஆற்றாமையுடன் வினவியும் அவள் திரும்பிப் பார்க்காமல் இருக்க, “ஏண்டி! இப்படி இரும்புக் கோட்டையா உன் நெஞ்சத்தை எப்பவும் இறுக்கமா வச்சிருக்கே? அதை உடைத்தெரிஞ்சு உள்ளே வர எனக்குத் தெரியாதா? இல்லை நீ விலகிப் போவதால் உன்னை விட்டு சென்றிடுவேன்னு நினைச்சியா? என் மனசு வலிக்குதுடி!” என்று அவன் தவிப்புடன் கூற, கலங்கிய கண்களை அவனிடம் காட்டாமல் தனது அறைக்குள் புகுந்து கொண்டாள் ஆனந்தி. தன் பேச்சைச் சிறிதும் செவிமடுக்காமல் செல்லும் அவளது பிடிவாதத்தில் மனம் நொந்துபோய் நின்றான் ஆனந்த்.

இரவு உறக்கம் தொலைந்து போக, எப்போதடா விடியும் என்று காத்திருந்த ஆனந்தி, அதிகாலையிலேயே எழுந்து தயாராகிப் பாட்டியின் அறைக்குள் வந்துவிட்டாள். ஆனந்த் பேசிய வார்த்தைகளின் தாக்கம் இன்னும் அவள் நெஞ்சில் நிலைத்திருக்க, அதிலிருந்து மீள முடியாமல் தவித்தவள்… தன் தந்தையைப் பற்றிய நினைவுகளில் மனதைத் திசைதிருப்ப எண்ணினாள். பாட்டியின் அருகில் அமர்ந்து, அப்பா அன்புச்செல்வன் இருந்த நாட்களில் நடந்தவை குறித்தும், அவரது கல்லூரி வாழ்க்கை மற்றும் சிறுவயதுச் சம்பவங்களைக் கேட்டறிந்தாள். அவள் முகத்தில் அதுவரை குறைந்திருந்த உற்சாகம், மெல்ல மீண்டு வந்து ஒட்டிக்கொண்டது.

அவர்களது கலகலப்பான பேச்சையும் சிரிப்பையும் கேட்டவாறே உள்ளே வந்தான் ஆனந்த். அவன் நுழைந்ததும் ஆனந்தி சட்டென வாயை மூடிக்கொண்டாள். அவனது பார்வை ஒரு நிமிடம் அவள் முகத்திலேயே நிலைத்திருக்க, ‘என்னை மட்டும் காயப்படுத்திட்டு, இப்படிச் சிரிச்சுப் பேசிட்டு இருக்க உன்னால் எப்படி முடியுது?’ என்று அவன் கண்கள் கேட்டன. அவன் முன்பு இருக்கச் சங்கோசப்பட்டு அங்கிருந்து எழுந்தாள் ஆனந்தி.

“என் பேரன் ரொம்ப நல்லவன். நீ பயப்படும் அளவுக்கு மோசமானவன் கிடையாது. இப்படி உட்காருமா” என்ற பாட்டியின் வார்த்தையை தட்ட முடியாமல் அவள் மறுபடியும் நாற்காலியில் அமர, அவளைப் பார்த்துக்கொண்டே, பாட்டியின் மடியில் தலை சாய்ந்து அவரது வலது கையைப் பற்றிக் கன்னத்தோடு வைத்துக் கொண்டான் ஆனந்த்.

“என்னப்பா… சாப்டியா?”

“இல்லை பாட்டிம்மா.”

“ஏன்?”

“பசிக்கலை.”

“ஓ!”

“இப்படி விடுமுறைக்கு எப்போதாவது வர்றப்போ தானே வயிறாரச் சாப்பிட முடியும்! அப்பவும் பசிக்கலன்னு பட்டினி கிடந்தா என்ன அர்த்தம்?”

“பாட்டிம்மா… மனசெல்லாம் ஏனோ வெறுப்பா இருக்கு.”

“என்ன ஆச்சுப்பா?”

“மாமா அந்த நாள்ல அப்படி ஒரு தப்பு செய்யாம இருந்திருந்தா, இப்போ இவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்திருக்காது இல்லையா? ஒரே ஒரு மனுஷனோட சுயநலமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது ரெண்டு ஊர் மக்கள். அவரோ இதைப் பத்தித் துளிக்கூடக் கவலைப்படாம எங்கேயோ ஒரு இடத்துல தன் குடும்பத்தோட நிம்மதியா இருக்கார். அப்படி இருந்தும் உங்களால எப்படி அவரை நினைச்சுச் சந்தோஷப்பட முடியுது?

​இத்தனை வருஷம் கடந்தும் அந்தப் பழைய கசப்பான சம்பவங்களை மறக்க முடியலையே! நம்ம தாத்தா கடுமையா நடந்துகிட்டப்போ, நீங்களாவது மாமாகிட்ட எடுத்துச் சொல்லியிருக்கலாம்ல? அப்படிச் சொல்லியிருந்தா இந்த அளவுக்குப் பாதிப்புகள் வந்திருக்காது இல்லையா?”

நேற்று ஆனந்தியிடம் பேசியதன் தாக்கம் இரவு முழுவதும் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அத்துடன், பாட்டியும் மாமாவைப் பற்றிப் பெருமிதமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டதால்தான் அப்படி கூறினான். அவனுக்கும் அன்று நடந்த உண்மையான சம்பவங்கள் தெரியாது. இளவரசி சொன்னதோ அல்லது மற்றவர்கள் பேசிய வார்த்தைகளோதான், இப்படி நடந்திருக்கும் என்கிற யூகத்தை அவனுக்குள் வரவழைத்திருந்தது.

அவர் அமைதியாக இருப்பதைக் கண்டதும், “என்ன பாட்டியம்மா எதுவுமே சொல்லாம இருக்கீங்க?” என்றான்.

“காதலிப்பது தப்பு என்கிறாயா?” 

“தப்புன்னு நான் சொல்ல வரல. வீட்டுல அவருக்குப் பெண் பார்த்துக் கல்யாண ஏற்பாடு அத்தனையும் செஞ்ச பிறகும், சொந்த அப்பா, அம்மா, கூடப்பிறந்த தம்பிகள்னு எதையுமே நினைச்சுப் பார்க்காம விட்டுட்டுப் போனதுதான் தப்பு! அவர் மட்டும் அன்னைக்கு கொஞ்சம் நிதானமா நடந்திருந்தா, இன்னைக்கு இத்தனை விபரீதங்கள் வந்திருக்காது” என ஆணித்தரமாகச் சொன்னான் ஆனந்த்.

ஆனந்தவல்லி பேரனிடம் கடுமையாகப் பேசிவிடக் கூடாது என்று தன்னை அடக்கிக் கொள்ள முயன்றார். அதுபோல ஆனந்தியும் தனது அப்பாவை பற்றி இப்படி எல்லாம் பேசும் அவன் முன்பு எதையும் சொல்லிவிடக்கூடாது என்று தனது வாயை இறுக மூடிக்கொண்டாள்.

“நீங்கதான் ‘மகன், மகன்!’னு வாய் ஓயாம சொல்லிட்டு அவர் நினைப்பாவே இருக்கீங்க. அவருக்கும் அந்த எண்ணம் இருந்திருந்தா, ஒரு நாளாவது உங்களைப் பார்க்க வந்திருக்க மாட்டாரா? தாத்தாவோட சொந்த சம்பாத்தியத்துல ஆரம்பிச்ச தொழிற்சாலையையும் அப்படியே கைவிட்டு, வீட்டுக்கும் உண்மையா நடக்காம, ரெண்டு ஊர்லயும் இத்தனை பிரச்சனைகள் வரக் காரணமே அவர்தானே! அப்படி இருந்தும் ஏன் அவரையே வல்லவர், நல்லவர்னு உயர்வா பேசிட்டு இருக்கீங்க?”

தன் மகனைப் பற்றி அவன் தவறாகப் பேசியதை ஆனந்தவல்லியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

“ஏன் ஆனந்த், ஒருவேளை நீ யாரையாவது விரும்பினா என்ன செய்வ?”

“நான் அவளைத் திருமணம் செஞ்சு அவளோடு வாழத்தான் ஆசைப்படுவேன். அதுக்காக வீட்டுல உள்ளவர்களை விட்டுட்டு கண் காணாத தேசத்திற்கு ஓட மாட்டேன்.”

“ஓ! ஒருவேளை அவர்களால் உன் மனைவிக்கும் உனக்கும் ஆபத்து வர்றதா இருந்தா என்ன செய்வ? ‘வெட்டிக் கொல்லட்டும், பரவாயில்லை’னு அவளை அவங்க முன்னே கொண்டு போய் ஒப்படைப்பியா?”

அவன் அவரது முகத்தையே பார்த்தான். பாட்டி என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் எழுந்து அமர்ந்தான்.

“சொல்லு! உயிருக்கு உயிரா விரும்பி அவளையே கல்யாணம் செஞ்சு கூடவே வாழணும்னு ஆசைப்படும் நீ, அவளை உங்க அப்பாவாகவே இருந்தாலும் கொடுமைப்படுத்தட்டும், சித்ரவதை செய்யட்டும், அவள் குடும்பத்தை துன்புறுத்தட்டும்னு உன்னால் அமைதியா இருக்க முடியுமா?” என்று கேட்டார்.

​பாட்டியின் வார்த்தைகளில் அவன் திகைப்புடன் பார்க்க, “உனக்கு அபிநயாவை வீட்டுல பேசியிருக்காங்க. அப்ப அவளை வேண்டாம்னு மறுத்து தானே உன் காதலியை மணக்க முடியும். இல்லை ரெண்டு பேரையும் திருமணம் செய்து யாருக்கும் தெரியாம திரை மறைவில் ஒரு வாழ்க்கை நடத்துவியா?” என்றார்.

​அவன் வார்த்தைகள் வராமல் தடுமாற, “என்னையும் என் மகனையும் இத்தனை நேரம் குற்றம் சொன்னியே… எங்க நிலைமையில் இருந்து உன்னை நினைச்சுப் பார். அப்போதாவது அன்றைய நிலவரம் உனக்குத் தெரியவரும்” என்றார் ஆனந்தவல்லி.

பாட்டி கேள்விகளைத் தன் பக்கமே திருப்பிவிடுவார் என்று எதிர்பார்க்காத ஆனந்த், சொல்லொணாக் குழப்பத்தில் ஆழ்ந்தான்.

‘எனக்குத் தெரியாம இங்கு ஏதேனும் நடந்துடுச்சா? அம்மா என்கிட்ட பொய் சொன்னாரா? அப்படியின்னா, அன்றைய நாளில் என்னதான் நடந்தது?’ என்று அவன் மூளையைக் கசக்கிப் பிழிய, “அன்னைக்கு உன் அம்மாவும் அப்பாவும் மட்டும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போயிருந்தா, இத்தனைப் பிரச்சனைகள் வந்திருக்க வாய்ப்பே இல்லை. என் மகன் என்னை விட்டுப் பிரிஞ்சு போயிருக்கவும் மாட்டான். ஆனா, எதுவுமே தெரியாம நீ எங்களையே தப்பா பேசுறியே!” என்று ஆற்றாமையுடன் கூறினார்.

அந்த வார்த்தைகள் அவனைத் திகைப்படையச் செய்தன. பாட்டி என்ன சொல்ல வருகிறார்? மாமா அன்புச்செல்வன் வீட்டை விட்டு வெளியேறியதற்குத் தன் அப்பாவும் அம்மாவும் தான் காரணமா? அவனது மௌனத்தைத் கிழித்துக்கொண்டு ஆனந்தவல்லியின் வார்த்தைகள் அனலாகத் தெறித்தன.

​“நீயே ஒரு பெண்ணை விரும்பி, அவளையே கல்யாணம் செஞ்சுட்டு வந்து இதே வீட்டுல வசிப்பதா இவ்வளவு துணிச்சலா சொல்றப்ப, என் மகன் மட்டும் அப்படி நினைக்க மாட்டானா? என் மகன் என்ன கோழைன்னு நினைச்சியா? இவ்வளவு பெரிய வீடு, வசதி இருந்தும் நீ இங்க இருக்கப் பிடிக்காம சென்னையில தனியா தொழில் செய்யற… அந்த நேரத்துல உனக்கு ஏதாவது பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டா உன்னைத் துரத்தி விட்டுருவாங்களா? இல்லை அந்தப் பெண்ணைத் துரத்தி அடிக்கப் பார்ப்பாங்களா? வேணும்னா உங்க அம்மாவிடம் கேட்டுப்பாரேன்!” என்றவர் மூச்சிரைக்கத் தொடர்ந்தார்.

“வேண்டாம்… வேறொரு ஜாதியைச் சார்ந்த பெண்ணை விரும்புறதா மட்டும் உன் அப்பாகிட்ட போய் சொல்லிப் பாரு, அப்பத்தான் ராஜேந்திரனின் உண்மையான முகம் உனக்குத் தெரியும். என் மகனை இன்னைக்கு இல்லாமலாக்கி, என்னை உயிரற்ற ஜடமா நடமாட வச்சதுல பெரும் பங்கு உன் அப்பாவுக்குத்தானே உண்டு!” என்று அவர் கூற, அவன் பதில் சொல்லத் தெரியாமல் அப்படியே உறைந்து போய் நின்றான்.

பேரனின் நிலை சங்கடப்படுத்தினாலும், உண்மையை மறைத்து பொய்மை நிறைந்த உலகத்தை வலம் வரும் தன் மகளையும் மருமகனையும் இதற்கு மேலும் விடக்கூடாது என்று துணிந்தவர், அன்று நடந்த சம்பவங்களை எதையும் மறைக்காமல் அவன் முன்னே கொட்டித் தீர்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!