Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

43. தனுஜா செந்தில்குமார் - மண் கொடுத்த மாணிக்கம்

மண் கொடுத்த மாணிக்கம் – 18

அத்தியாயம் – 18
இதோ தடைகளைத் தாண்டி தனது மனம் கவர்ந்தவளை கவர வந்து விட்டான் லட்சுமணன்.பெண் எடுக்கி கட்டுதல் அதாவது மணப்பெண் அழைப்பு இனிதே தொடங்கியது.அண்ணாமலையைக் கொண்டு சிறு சல, சலப்பு இருந்தாலும், உறவுகள் லட்சுமணன் கொண்டு அதெல்லாம் பெரிதாக எடுத்து செல்ல வில்லை.மீனாளுக்கு உள்ளுக்குள் நெருஞ்சி முள்ளாக அண்ணாமலையின் பேச்சு இருந்தாலும்.
ஒரே மகன் அவனுக்குச் செய்யும் முதல் நல்ல காரியமென்று முயன்று தன்னைத் தெளிவு செய்து கொண்டாள்.அவள் இத்தனை வருட போராட்டம் தாயிக்கு நல்ல பிள்ளையாக இருந்து இருக்கும் மகன், இனி அடுத்தப் பரிமாணத்தைப் பார்க்க வேண்டும் அல்லவா.கணவனாய், முக்கியமாக நல்ல தகப்பனாக அவன் வென்று நிற்க வேண்டும் அல்லவா.


Advertisement

அதனை கண்டு பூரித்து மீனாள் மார் தட்ட வேண்டும் அல்லவா.அதுவே மீனாவின் வளர்ப்புக்குச் சாட்சி சொல்லும். மீனாள் ஆழ் மன எண்ணம் இது, யாருமே அறியா ரகசியம் என்று கூடச் சொல்லலாம்.பார் இப்படி வளர்க்க வேண்டும் மகனை என்று சொல்லாமல் சொல்லி நிற்க வேண்டும்.

Advertisement

வாழ்க்கை இழந்த ஒவ்வொரு பெண்ணும் யோசித்து நிற்கும் இடம் இது.அதில் மீனாள் வெகுவாக வெறிக் கொண்டு சாதித்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். சுயம் இழக்காமல்,பிறரிடம் கையேந்தி நிற்காமல்,உள்ளதை கொண்டு முன்னேறி அவர்கள் முன் நிற்க வேண்டும்.அதனை சத்தம் காட்டாமல் செய்து காட்டி விட்டாள் மீனாள்.

Advertisement

இதோ இன்று உள்ளம் பூரிக்க மகனை கண்களுக்குள் நிரப்பி நின்றாள் பேரிளம் பெண்.பெண் அழைக்க மாப்பிளை வீட்டாருடன் மாப்பிள்ளையும் சேர்ந்து வர.அவர்களை வரவேற்க மேல வாத்தியங்கள் கொண்டு அங்காளி, பங்காளிகளுடன் சென்று வரவேற்றார் வள்ளியப்பன்.

Advertisement

“வாக! வாக மருமகனே! எல்லாரும் வாக!” என்று முறைப்படி அழைக்க.எல்லாரும் லட்சுமணனை மரியாதையுடன் அழைத்து வந்து கூடத்தில் நிறுத்தினர்.முன்னையே பரிசம் போட்டதால் திருமணத்திற்கு முதல் நாள் பெண் அழைப்பு வைத்து கொண்டனர் போலும்.
“கண்ணாத்தா!
“பெரியம்மா!”
“சாலாவ மாமன் பொண்டாட்டிய விட்டு அழைச்சிட்டு வர சொல்லுக மாப்பிள்ளையை கண்டுக்கிட்டு போகட்டும் என்று சொல்ல இன்னொரு உறவினர் உள்ள பெரிய பெண்ணோ.
“மதனி எல்லாம் பார்த்த மாப்பிள்ளைதேன் இன்னும் என்னத்த பார்க்க” அவர் என்னமோ விளையாட்டாகத் தான் சொன்னார். இதனை கேட்ட கண்ணாத்தாளுக்கு தான் முகம் சுருங்கி போனது.இந்தப் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த லட்சுமணன் வழமையான அதே புன்னகையுடன் அந்த பெண்மணியை அழைத்தான்.
“பெரியாத்தா!” லட்சு அவரை உரிமையாக அழைத்ததும் முகம் கொள்ளச் சிரிப்புடன்.
“ஆஹான்! சொல்லுக அப்பாவே”
“இத்தினி நாளு என்னை அவுக மீனா அயித்த மகனா, ஒரு தோழனா பார்த்திருப்பாக. இப்போதேன் உரிமைக்காரனா பார்க்க போராக அதுனால முதல் முதல பார்க்குற கணக்குதேன்”
“அடிசக்கை இப்படி ஒன்னு இருக்கா?”
“ரொம்ப மெனக்கெட்டுல பொண்ணைப் புடிச்சிருக்கேன் பெரியாத்தா”
“இது வேறையா?”
“ஹ்ம்ம்! சங்கதி தெரியாத?” விளையாட்டு போல் சிரிப்புடன் பேச்சு இருவரும்.
“இல்லையே!” இவர்கள் விளையாட்டாக வழக்கடித்துக் கொண்டிருக்கும் போதே.கண்ணாத்தாள் தம்பி மனைவி சாலாவை அழைத்து வந்து லட்சுமணனுக்கு முன்னிலை நிறுத்தி வைக்க.
“பொண்ணு வந்திருச்சு” இன்னொரு பெண்மணி.
“மாப்பிள்ளையை நிக்க வச்சிகல இப்போ பொண்ணு கொஞ்ச நேரம் நிக்கட்டும்” என்ற பெண்மணி மீண்டும் லட்சுமணனை பார்த்து நீக சங்கதி சொல்லுக அப்பாவே இனி பொண்ணு நமக்குத்தேன் காலம் முழுக்க பார்த்துக்கிடலாம்”
“பொண்ணு என்னைக் கட்ட மாட்டேன்னு சொல்லிட்டாக” என்றதும் வாய் பிளந்து நின்றாள் அந்தப் பெரியவள். லட்சுமணன் குறும்பு சிரிப்புடன் சிறு கள்ளம் கலந்து சாலாவை பார்த்தான்.
மாம்பழ நிறத்தில் பட்டுத்தி வைரத்தில் தோடு, அட்டிகை, ஒரு ஜோடி வளையல் என்று எளிமையான அலங்காரத்தில் அப்படித் தான் நின்றாள் சாலா.கண்ணை உறுத்தாமல் அதே நிறம் சுண்டி இழுக்கும் கவர்ச்சி கொண்ட அழகில் இருந்தவளை பார்த்துக் கொண்டே பேச்சை வளர்த்தான் லட்சு.
“இது என்ன புது கதை? தங்கை சிலை கணக்கா இருக்காக,மாப்பிள்ளை படிப்பை பார்த்தும் எப்படி சொல்லலாம் “
“ஆமா பெரியாத்தா கச்ச கட்டி, தலைகீழா நின்னு, தண்டல் எடுத்து இத்தினி தூரம் வந்திருக்கேன்.எங்க அயித்தக்கு யாரும் ஒரு வார்த்தை தாழ்வா அவுக மகளைப் பேச கூடாதுன்னு எண்ணம்.எனக்கு இத்தினி பெரிய தங்கத்தை விட்டுற கூடாதுன்னு எண்ணம்.காரைக்குடிக்கும் அரியகுடிக்கும் நடந்தே செருப்பு தேஞ்சு போச்சு” பாதி மெய்யும், பாதிப் பொய்யுமாகக் குறும்பு செய்து,அதே நேரம் நான் தான் வம்பாகப் பெண் கேட்டேன் என்று சபையில் வள்ளியப்பன், கண்ணாத்தாள் இருவரையும் உயர்த்தி வைத்தான் லட்சுமணன்.
வள்ளியப்பன் நெகிழ்ந்து, கண்ணாத்தாளுக்குக் கண்களே கலங்கி விட்டது.சாலாவோ குனிந்த வாக்கில் கண்ணீர் விட்டால் ஏனோ இக்கணம் உணர்வுகள் அடங்க மறுத்து பொங்கி வைத்தது அரிவைக்கு.
“அட அப்பாவே சரியான ஆளா இருக்கீகளே பேச்சு வாக்குல சங்கதி படிச்சிடீக. முரண்டி நின்ன எங்க பேத்தி சரினு சொல்ல இந்த வெல்ல பேச்சுத்தேன் காரணமோ?” என்று அப்பெண் மணி வாய் விட்டு சிரிக்க அவனும் அழகாகச் சிரித்து வைத்தான்.
அதன் பின் சடங்குகள் தொடர.சாலாவுக்கு அருகில் நின்ற தங்கை முறை பெண், “அத்தானை பாரு சாலா” என்றதும் மெல்ல லட்சுமணன் கண்களைப் பார்த்தாள் சாலா.அவளது கண்கள் கலங்கி நிற்கவும் யோசனையாகத் தனது புருவத்தைச் சுருக்கியவன்.அத்தனை பேர் நிற்பதை கூடக் கருத்தில் கொள்ளாமல், “என்ன?” என்று வர.
கொஞ்சமாகப் பதறி, “ இல்ல கொஞ்சமா அழுகை வந்துச்சு” என்றவள் பேச்சில் கொஞ்சம் தெளிந்தவன்.இரு பக்கமும் தலையை ஆட்டி வைத்து அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்.அடுத்து சீர் பரப்ப நின்று பொதுப் படைப்பு வைத்தனர்.ஏற்கனவே இரு வீட்டாரும் வீட்டுப் படைப்பை முடித்து விட்டனர்.படைப்பு வீடு என்பது பெண் வீட்டு முன்னோர்கள், அந்தப் பக்கம் ஆண் வீட்டு முன்னோர்கள் அவரவர் வீட்டில் அங்காளி,பங்காளி சேர்ந்து சாமி கும்பிடுவது.
பொதுப் படைப்பு என்பது கூட்டுப் பிராத்தனை அனைவரும் கண் மூடி அந்தச் சடங்கை செய்ய.சுப்ரமணியன்,சுந்தரம்,சின்னப்பன் அவர்களது மனைவி என்று பெரியோர்கள் லட்சுமணனுக்காக எடுத்து கட்டி நின்றனர்.
அடுத்த நிகழ்வாகப் பெண்ணின் தாத்தன் முறை,மாமன் முறை,பெரியப்பா சித்தப்பா என்று அனைவரும் ஆசி வழங்கி பெண்ணுக்கு சீர் பரப்பி வைத்தனர்.வெள்ளி பூஜை பாத்திரங்கள் தொடங்கி வெண்கலம் வரை அவரவர் வசதி கொண்டு எண்ணிக்கை என்று வைத்துக் கொள்வார்கள் போலும்.
வள்ளியப்பனும், கண்ணாத்தாளும் அவர்களால் முடிந்ததைச் சிறப்பாகவே செய்தனர்.கொஞ்சமாக நொடித்து நின்றாலும் சிக்கனமாக இருந்து உழைத்து அந்தச் சேமிப்பு அதுவும் போக கண்ணாத்தாள் சீதனமாகக் கொண்டு வந்ததைப் புதுப்பித்து இரண்டையும் சேர்த்து வெகு சிறப்பாகவே மகளுக்குச் சீர் செய்தனர்.
அனைத்தும் முடிந்து பந்தி தொடங்கியது, மீனாள் கொஞ்சமாக நடந்தாலும் இன்னும் முழுதாகக் கால்கள் நடக்க வரவில்லை என்பதால்.அமர்ந்து கொண்டே மேற்பார்வை பார்த்து அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்தாள்.விடிந்தால் திருமணம் என்ற நிலையில் இரவு மூன்று மணியில் இருந்து திருமண வேலைகளைத் தொடங்க வேண்டும் என்பதால் வள்ளியப்பனும், கண்ணாத்தாளும் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு சுற்றினார்.
லட்சுமணனை சாப்பிட அழைக்கப் பேருக்கு அமர்ந்து எழுந்து விட்டான்.அதன் பின் பந்தி முடியவே இரவு பத்து மணி நெருங்கி விட்டது.முக்கிய உறவுகளுக்கு அடுத்தக் கட்டமாகப் படுக்க வசதி செய்து கொண்டிருந்தனர் சாலாவின் பெற்றோர்கள்.ஒரு வழியாக அனைத்தும் முடிய சற்று ஓய்வாகத் திண்ணையில் அமர்ந்து நாளை விடியலை பற்றி பேசி கொண்டிருந்தவர்களை நெருங்கிய மணி என்ற வேலையாள்,
“வள்ளி அண்ணே!”
“சொல்லுக மணி”
“லட்சுமணன் ஐயா பின் பக்கம் இருக்குற வூட்டுக்கு வர சொன்னாரு” என்றதும் கண்ணாத்தாள் கணவனைப் பார்த்து,
“அங்கன எதுக்குப் போனாக?”
“தெரியல” என்று முனகிய வள்ளியப்பன் மணியைப் பார்த்து.
“நீக போக நான் பார்த்துக்கிடுறேன்” என்று அவனை அனுப்பி வைக்க அதற்குள் சாலா வள்ளியப்பனை நெருங்கி.
“ஐயா!”
“என்னம்மா?”.
“அவுக பின் வூட்டுக்கு கூப்புடுறாக”
“ஏன்?”
“தெரியல அயித்தயும் அங்கனதேன் இருக்காக” என்றதும் சிறு பதட்டம் வந்தது அனைவருக்கும்.
“சாலாப்பா?” அழைப்பிலே மனைவியின் கலக்கம் படித்தவர் போல.
“என்னான்னு கேப்போம் அதுக்குள்ள பயந்துக்க வேணாம் கண்ணு ” என்றவர் எழுந்து கொண்டு நீக முன்னுக்குப் போக. நான் உள்ளுக்கு ஒரு எட்டு பார்த்துப்புட்டு வாரேன் என்ன?” என்றவர் உள்ளே செல்ல.
கண்ணாத்தாளும்,சாலாவும் என்னவாக இருக்கும் என்று தங்களுக்குள் பேசி கொண்டே பின் பக்கம் விரைந்தனர்.
பின் வீட்டு வாசல் வரை சென்று விட்டு இரு பெண்களும் வள்ளியப்பனுக்காக நிற்க.அவரும் வந்து விட்டார், “என்ன இங்கன? உள்ளுக்குப் போக வேண்டியது தானே?”என்றவர் உள்ளுக்குள் நுழைய.
“நீக வந்ததேன் சரியா இருக்கும் அதேன்” என்று பேசி கொண்டே உள்ளே வர. அங்கே கூடத்தில் இவர்களுக்காக உணவை எடுத்து வைத்துக் கொண்டு காத்திருந்தனர் மீனாளும்,லட்சுவும்.
தாய், மகனும் அப்படி ஒரு பேச்சும் சிரிப்புமாக இருக்க.இவர்கள் அரவம் கேட்டு பார்த்தவன் வள்ளியப்பனை கண்டு,”மாமா!, அயித்த! ” அழைப்பில் அத்தனை உற்சாகம் வாக! என்றவன் தனது அருகில் உள்ள இடத்தைக் காட்ட.மெல்லிய புன்னகையுடன் அவனுடன் அமர்ந்து கொண்டார் வள்ளியப்பன்.
எதுவுமே பேசாமல் நால்வருக்கும் உணவை வைத்துக் கையில் கொடுத்தவன்.தனக்கும் எடுத்துக் கொண்டு வெகு இயல்பாகச் சாலாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.
மருத்துவன் அல்லவா ஒவ்வொரு செயலிலும் அன்பை மயக்க மருந்தாகக் கரைத்து நேரடியாக நெஞ்சுக்குள் செலுத்தி கொண்டிருந்தான்.ஏற்கனவே அவன் பித்தில் திணறிக் கொண்டிருந்த வள்ளியப்பன்.லட்சுமணன் இந்தச் செயலில் அடியோடு வீழ்ந்து தான் போனார்.
சாலாவை சொல்லவே வேண்டாம் அவன் மேல் அத்தனை போதையாக நின்றாள் அரிவை.கண்ணாத்தாள் தான் மயக்கத்தைக் கண்ணில் காட்டாமல் தடுமாறிக் கொண்டு இருந்தாள்.அவளையும் வீழ்த்தும் பொருட்டுப் பேச்சை தொடங்கினான் இந்த கள்ளன் மருத்துவன்.
“அயித்த!”
“என்ன லட்சு?”
“என்கூட வரத பத்தி என்ன முடிவு?” என்றதும் ஐயோ என்று முனகியவாறு வள்ளியப்பன் மனைவியைப் பார்க்க அவளோ கணவனிடம் மறுப்பாகத் தலையை ஆட்டி லட்சுவை கண் காட்டினாள்.
“அது வந்து லட்சு இப்போ கல்யாணம் முடியட்டும் இந்த விஷியத்தைக் கொஞ்சம் ஆற போட்டுட்டு பேசுவோம்”
“இல்ல மாமா அது சரி வராது ஒரு வாரம் தாரேன் அதுவும் சாமானை ஏறக்கட்டி வச்சுட்டு வர”
“தம்புடு இதுல பிடிவாதம் வேணாம் அங்கன வந்தா நல்ல இருக்காது உங்களுக்குச் சில சமயம் நடப்பு புரிய மாட்டேங்குது”
“எல்லாம் புரியுது அயித்த இவன் கூட நாங்க வந்து இருக்கனுமா? எங்க உழைப்புல நாங்க இருந்துக்குவோம். அவன் வந்த நிலை என்ன? இப்போ பண்ணுற அதிகாரம் என்ன? கடைசி வரை யாரு நிழலும் தேவையில்லை.இந்த எண்ணமும், உங்க கவுரவமும்தேன் உங்களை மறுக்கச் சொல்லுது அப்படித்தானே” என்றதும் அதிர்ந்து திருத் திருவென முழித்த கண்ணாத்தாள் கணவனைப் பார்க்க.
‘பேச்சு எங்கன போகுதுன்னே தெரியலையே? காரியம் சாதிக்காம விட மாட்டாக அது தெரியாம இவுக என்னைப் பார்த்து வச்சா நான் என்ன செய்யுறது.கண்ணு உன்னைத் துண்டுராக வாய்யை திறந்து வைக்காதீக’ இதனை வாய் விட்டு சொல்ல முடியாமல்.மனைவியை மனத்துக்குளே எச்சரித்துக் கொண்டிருந்தார் வள்ளியப்பன்.
“என்ன பேச்சு இது? அப்படி எண்ணி வச்சா பொண்ணைக் கொடுப்போமா?”
“அதுவே நம்பிக்கை இல்லாமதேன் தாரீக முழு மனசு இன்னும் வரலையே அப்படி வந்திருந்தா ஒன்னு, ஒன்னுக்கும் நான் கெஞ்சிகிட்டு கிடப்பேனா”
“என்ன இது மீனா?” என்று அவள் துணையை நாட.
“மதனி என்ன இழுக்காதீக மாமி, மருமகன் இடையில நான் வரல”
“சாலா?” மகளை அழைக்க தாயின் நிலை உணர்ந்து.
“அது!” என்று தொடங்கியவளை
“உங்களுக்கும் அந்த எண்ணம் தானே இன்னும் என்னை ஒட்டி வச்சு பார்க்க மனசு வரல” என்றதும் அவனைப் பற்றி நன்கு அறிந்தவள் வாய்யை இறுக்க மூடி கொண்டாள் அந்த அளவுக்கு அன்றைய லட்சுவின் செயல் அவளைப் பயம் காட்டி வைத்தது போலும்.
மகளும், தாயும் ஒருவரை, ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொள்ள மீனாள் உதட்டை மடக்கி சிரிப்பை அடக்கினால்.மகன் இத்தனை நாள் இந்தக் குறும்புகளை எங்கு ஒழித்து வைத்திருந்தான் என்று தான் தெரியவில்லை மீனாள் எண்ணி கொண்டிருக்கும் போதே.
“அப்போ சரி உங்க இஷ்டம் என்றவன் கல்யாணம் முடிஞ்சு நாலு நாள் இங்கன இருக்கலாம் சாலா மீதம் மூணு நாள் அங்கன” பதறிய வள்ளியப்பன்.
“மருத்துவம் வேலை கிடக்கு, தொழில் கிடக்கு இங்கன இருந்து என்ன செய்யப் போறீக?”
“அது போயிட்டு போகுது உங்களுக்கு ஒரே பொண்ணு”
“நீங்களும் ஒரு பையந்தேன்” என்ற மாமியாரை புன்னகையுடன் பார்த்தவன்.
“ஆத்தாளும் வந்துருவாக”
“இது என்ன வேலை?” என்று மாமியாரும் மருமகனும் கிட்டத்தட்ட ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் மாறி, மாறி பேச்சை தொடர.மற்ற மூவரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.வெகு நேரம் நீடித்த வார்த்தை போரில் வழமை வாகை சூடி நின்றான் லட்சுமணன்.
வெகுவாக களைத்து நின்றவள், “இப்போ என்ன தம்புடு உங்க கூட இருக்கனும் அதானே?”
“ஹ்ம்ம்!”
“உங்க ஆசுபத்திரி பக்கத்து அறையை ஏற்பாடு பண்ணுக” மெல்லிய குரலில் சொல்ல. வள்ளியப்பன் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தார் வைத்தியன் பார்த்து வைத்தியம் சரியாக தான் வேலை செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!