Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

68. சரண்யா கீதா - உளமாற உனதாகிறேன்

உளமாற உனதாகிறேன் – 1(1)

உளமாற உனதாகிறேன் – 1(1)

அத்தியாயம் – 01

வானெங்கும் இருள் சூழ்ந்து இரவினை பிரதிபலித்து கொண்டிருக்க…‌ அந்த வீடே வண்ண விளக்குகளால் மிளிர்ந்து கொண்டிருந்தது… கல்யாண வீடு என்பதை பறைசாற்றும் வகையில் அந்த இரவு வேளையிலும் வீட்டின் பின்பக்கம் பரபரப்பாக ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்க அந்த சத்ததையும் மீறி நமச்சிவாயத்தின் குரல் ஓங்கி ஒலித்தது.

“ஏம்ப்பா இன்னும் எவ்ளோ நேரம் தான் ஆகும்… எல்லாம் பந்திக்கு வர ஆரம்பிச்சிடுவாங்க… சீக்கிரம் செய்ங்கய்யா…  வெளியூர் ஆளுங்க சீக்கிரம் வேலையை முடிப்பிங்கன்னு பார்த்தா இப்படி இழுக்குறிங்களே” என்றபடி சத்தம் போட்டு கொண்டிருக்க…



Advertisement

“என்ன மாமா எப்படி இருக்கீங்க” என்றபடி அவ்விடம் வந்தான் பெருமாள்.

அவனை பார்த்ததும்  மகிழ்ந்தவர்… “வா மாப்பிள்ளை…. இதுதான் நீ வர நேரமா… நம்ம வூட்டு கல்யாணம் நீதான்யா அதை முன்னாடி நின்னு நடத்தனும் அதை விட்டுட்டு நாளைக்கு கல்யாணம்னா இன்னைக்கு வந்தா  எப்படி ”

“என்ன செய்றது மாமா நம்ம பொழப்பு அப்படி… இன்னைக்கு கூட கட்சி விஷயமா வெளியூர் யோயிட்டு இப்பதான் வரேன்…” என்றபடியே சமையல் செய்யும் ஆட்களை மேற்பார்வையிட்டான்….

Advertisement

“அதுசரி சாப்பாட்டுக்கு நம்ம முனியாண்டிக்கிட்ட தானே சொல்ல சொன்னேன்… பார்த்தா வெளியூர்காரங்ககிட்ட பேசி இருக்கிங்க போல” என்றவனின் குரலில் லேசாக காரம் இருந்ததோ…

Advertisement

“யார்க்கிட்ட சொன்னா என்ன மாப்பிள்ளை… முப்பது வருஷம் கழிச்சு இப்போ தான் சொந்த ஊருக்கு வர முடிஞ்சிருக்கு..‌. இதுல உள்ளூர்காரங்களை யாரை தெரிஞ்சிருக்கு..‌.நீங்களும் வேற ஊருல இல்ல… அதுதான் எனக்கு தெரிஞ்சவர் மூலமா வேற ஆளுங்ககிட்ட பேச வேண்டியதா போச்சு… இனி இங்கதான… சின்னக்குட்டிக்கு வேணும்ணா நீங்க சொல்றபடி செஞ்சுப்போம்” என்றதும் அதில் அமைதியடைந்தவன்…

“நீங்க சொல்றதும் சரிதான் மாமா‌… எங்க கல்யாணத்து அப்போ அத்தைக்கு முடியாம இருந்ததால வெளியூர்லே முடிக்க வேண்டியதா ஆகிப்போச்சு… இல்லைன்னா அப்போவே நம்மூர் பக்கம் ஒரு எட்டு வந்திருப்பிங்க…” என்ற பெருமாளுக்கு தானாக பெருமூச்சு ஒன்றை உதித்தார் நமச்சிவாயம்.

ஐம்பது வயதை கடந்திருந்த நமச்சிவாயம் திடகாத்திரமாக பார்க்க நன்றாகவே இருப்பார். சொந்த ஊர் தேனீ பக்கத்தில் பெரிய குளம். ஆனால் வேலை காரணமாக பல ஆண்டுகளாக வெளியூரிலே கழித்த அவர் தற்போது தான்  சொந்த ஊருக்கு வர வாய்ப்பு அமைந்தது.  அவரின் துணைவி வாசகி… இல்லத்தரசி…

Advertisement

பெருமாள் வேறு யாரும் அல்ல நமச்சிவாயத்தின் சொந்த அக்கா மகன். அவனுக்கு தான் தன் மூத்த மகள் பிரபாவதியை திருமண செய்து கொடுத்திருக்கிறார். பிரபா அமைதி என்றும் சொல்ல முடியாது… அடாவடி என்றும் சொல்ல முடியாது… இரண்டும் கலந்தவள்… ஆனால் அதற்காக பெருமாளிடம் வாங்கி கட்டிக் கொள்வது தனி கதை!

அடுத்து நடுப்பெண் வெண்பா… அவளுக்கு தான் தற்போது திருமணம்… பி.டெக் முடித்து ஐடி கம்பெனியில் பணிபுரிந்து கொண்டு இருக்கிறாள்… அழுத்தம் நிறைந்தவள்… அதே சமயம் கொஞ்சம் சுயநலமும் உண்டு.

வெண்பாக்கு அடுத்து பிறந்தவள் தான் கண்ணுக்கினியாள். தற்போது சென்னையில் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டு இருக்கிறாள்‌. படபட பட்டாசு‌.  மனதில் தோன்றுவதை பட்டென்று போட்டு உடைப்பவள்…

பேசியபடியே இருவரும் வீட்டின் முன்புறத்திற்கு வந்துவிட்டனர்.  நமச்சிவாயத்தின் பார்வையோ நொடிக்கு ஒருமுறை வாசல்புறமே இருக்க அதை கண்டுக்கொண்டான் பெருமாள்.

“என்ன மாமா வெளியவே பார்த்திட்டு இருக்கிங்க… அம்மா காலையில நேரா மண்டபத்துக்கு வரேன்னு சொல்லிட்டாங்க… அவங்களுக்கு கால் வலி‌‌…‌ உட்கார்ந்தா நிக்க முடியறது இல்ல… நின்னா உட்கார  முடியறதில்ல… அதுதான் பிரபாக்கிட்ட சொல்லிவிட்டேனே சொல்லலயா அவ” என்று தன் அம்மாவை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறாரோ என்று நினைத்து கூறியவன் உள்அறையில் இருக்கும் தன் மனையாளையும் கத்திக் கூப்பிட்டான்.

“பிரபா… பிரபா… இங்க வா” என்றழைத்திட அதை கேட்டும் கேட்காதவாரு அமர்ந்திருந்தாள் பிரபாவதி.

“அம்மா… அப்பா உன்னை தான் கூப்பிடுறாரு” என்ற ஐந்து வயது மகள் ரோஜாவை தோளில் தட்டி அமைதிபடுத்தியவள் தீவிரமாக புடவையை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

“ஏய் பிரபா உன்னை தான்டி மாப்பிள்ளை கூப்பிடுறாரு காது கேட்குதா இல்லையா” என்ற தாய் வாசகிக்கு..‌‌.

“எல்லாம் கேட்குது கேட்குது… இப்ப தான் என் மகளை அமைதிபடுத்துனேன்… அடுத்து நீயா… நான் எப்புடி கேட்டும் கேட்காத மாதிரி இருக்கேன் நீயும் அப்படியே கண்டுக்காத… நானே எனக்கு இந்த மஞ்ச கலரு புடவை டிசைன் சரியில்லையேன்னு பீலிங்கல இருக்கேன்.‌‌.. ஏன்டி வெண்பா போன்ல பார்க்கும் போது டிசைன் பக்கவா இருந்துச்சு… இப்போ என்னடி அவ்ளோ லுக்கா இல்ல…” என்று வளவளத்து கொண்டிருக்க… அவளை தேடி பெருமாளே உள்ளறைக்கு வந்துவிட்டான்.

“எத்தனை முறை கூப்பிடுறேன் காது கேட்குதா இல்லையாடி… அப்படியே காது மேலே ஒன்னு விட்டா தெரியும்” என்று கை ஓங்கியபடி வந்த பெருமாளை கண்டு பயமாக கண்ணை மூடியவள்…

“என்னங்க என்னாச்சு நீங்க கூப்பிட்டதே கேட்கல… கேட்டிருந்தா பதில் கொடுக்காம இருந்திருப்பேனா… உங்க அம்மாவுக்கு வேற கால் வலியா… அதுனால  நம்ம வீட்டுல எல்லா வேலையும் முடிச்சிட்டு இப்போ கொஞ்ச முன்ன தாங்க வந்தேன்… சொல்லுங்க” என்று பவ்யமாய் பதில் அளித்திட மகளின் நடிப்பில் அசந்து தான் போனார் வாசகி.

“மாமாக்கிட்ட அம்மாக்கு கால் வலின்னு எதுவும் சொல்லலையா” என்றவனுக்கு அமைதியே பதிலாக கொடுத்திட…

“என்னடி கேட்டுக்கிட்டே இருக்கேன் வாயை மூடிட்டு இருக்க” என்றபடி கை ஓங்கிட…

“ஐயோ மாப்பிளை அதெல்லாம் பிரபா சொன்னா… இது அது இல்ல… அதுதான் நம்ம சின்னகுட்டி இருக்கா இல்ல அவளே பஸ்ஸில வந்திரேன்னு சொன்னா… ஆனா இன்னும் ஆளக்காணல” என்றிட புசுபுசுவென கோபம் பொங்கியது பெருமாளுக்கு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!