Skip to content
Post Views: 5,226
ஆழியன் நீரதியிடம் தந்த பத்திரிக்கை டீப்பாயில் கிடந்தது. அதையே வியப்பு விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கிளம்பு ரதி போகலாம்”என்றான் ஒரு வரியில்.
Advertisement
“எங்க?”என்றாள் அவள்.
Advertisement
Advertisement
“ப்ப்ச் வீட்டுக்கு தான் பத்திரிக்கை தர வேண்டாமா??”என்று சலிப்பாக அவன் கேட்க
“என் பிரச்சினைக்கு எந்த முடிவும் இதுவரை கிடைக்கவில்லை”என்றாள் ஸ்திரமாக.
Advertisement
“என்னை நம்புடி ரதி!”
“இத்தனை நாளும் அதைத்தான் செய்தேன், செஞ்சுட்டு இருக்கேன் இனிமேலும் அதை செய்யணுமா வேண்டாமானு நீங்க தான் சொல்லணும்”என்றாள் நறுக்கென்று.
“ரதி!”என்றவனிடம் “நமக்கு கல்யாணம் பண்ணி வச்சதே பெருசு தான். இல்லாட்டியும் நாம ஓடிப் போயிருக்க மாட்டோம். காத்திருப்போம் இல்லை நீங்க என்னை கழட்டி விட்டு போயிருப்பீங்க. அது ரெண்டும் நடக்கலை கல்யாணம் நடந்திடுச்சு. அதுக்கு இன்னும் எத்தனை நாளைக்கு அதையே சொல்வீங்க… அதான் சொன்னாளே உங்க அருமை தங்கச்சி வெள்ளைத்தோலை காட்டி மயக்கிட்டேன்னு”என்றதும் விக்கித்துப் பார்த்தான் அவளை.
“ரதி….!!”
“அப்படி தான் சொன்னா உங்க தங்கச்சி. தோலைக் காட்டி மயக்கினேன்னு சொல்லி அடுத்த வார்த்தை என்ன சொன்னா தெரியுமா?”என்றதில் உடல் இறுகி நின்றவன் “நீ இரு வர வேண்டாம் நான் போறேன்”என்றான்.
நீரதிக்கு மனதே விட்டுப் போனது.
“போங்க”என்றவளுக்கு கண்ணே கலங்கி விட்டது.
அவன் கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருந்தது.
மரத்திலான கைவினைப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை திறப்பதற்கு தான் இத்தனை அலைச்சல் அவனுக்கு. ஊரில் இருந்து வந்த பிறகு அவளை அழைத்துச் சென்று கடையைக் காட்டினான். எல்லாம் தயாராக வைக்கப்பட்டு இருந்த கடையை திறப்பு விழா நடத்தி ஆரம்பிக்க வேண்டும் அதற்காக தான் இத்தனை அலைச்சலும் என்று சொல்லி இருக்க ‘என்னிடம் இதுவரைக்கும் ஏன் கூறவில்லை’என்று நீரதி வாய்விட்டு கேட்கவில்லை என்றாலும் அவளது பார்வை அதைத்தான் பறைசாற்றியது.
அதனை உணர்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “வருக்குட்டி நம்ம கடை எப்படி இருக்கு. அம்முக்கு பிடிச்சிருக்கா?”என்று மனைவியை பார்த்தபடியே கேட்க
“சூப்பரா இருக்கு டாடி. இந்த குதிரை பொம்மை நல்லா இருக்கு”என்று கைகளில் எடுத்துக் கொண்டு சிரித்த ஸ்வர்ணிகா “ம்மா பாருங்க அழகா இருக்கு. நம்ம கடை ம்மா”என்றாள் உற்சாகத்துடன்.
“ஹ்ம்ம், ஃபர்னிச்சர் ஷோரூம் மாதிரி இதுவும் உங்க தாத்தாவோட கடை வரு.”என்றாள் அப்போதும்.
அதற்கும் அவன் வாய் திறக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து பத்திரிக்கையை கொண்டு வந்து தந்து படித்து பார் என்று சைகை காட்ட அதில் இருந்ததென்னவோ SANS Antique shop என்று தான்.
புரியாமல் விழித்துப் பார்த்தவளிடம் ஸ்வர்ணிகா ஆழிச்செல்வன் நீரதி ஸ்வாதிகா ஃபர்ஸ்ட் லெட்டர் மட்டும் வர்ற மாதிரி வச்சிருக்கேன் கீழே பேரை பாரு என்று சுட்டிக் காட்ட அங்கே உரிமையாளர் நீரதி ஆழிச்செல்வன் என்று கோல்டன் கலரில் அவர்கள் பெயர் ஜொலித்தது.
“என் பேர்?!”என்று திகைத்ததையும் கண்டு கொள்ளாமல் “ஆழியோட திறமையை ஒருத்தி வெளி உலகத்திற்கு காட்ட சொன்னா, அதைத் தான் செஞ்சேன். அவ பேர்லயே செய்துட்டேன். அவளுக்கு தானே எல்லா உரிமையும்”என்றதில் தான் வியப்பாய் பத்திரிக்கையை பார்த்தபடி அவள் அமர்ந்து இருந்தது.
‘எல்லாம் சரி தான் இப்போது ஒரு வார்த்தை கூட நீ வந்து தான் ஆக வேண்டும் என்று சொல்லாமல் வர வேண்டாம் நீ இரு செல்பவனை என்ன செய்தால் தகும்?’ என்ற கோபம் துளிர்க்க, ‘போடா நீ ஒண்ணும் எனக்காக கேட்க வேணாம்’என்று பிடிவாதமாக இருந்து கொண்டாள்.
********
வளர்மதி வந்தவனை தீயென முறைக்க , தேசிகன் அமைதி காக்க, விஷயத்தை கையில் எடுத்தது என்னவோ பொன்னி தான்.
“என்னடா செல்வம் இது யாரு கிட்டயும் கலந்துக்காம ஓம்பாட்டுக்கு கடை வைக்கப் போறேன்னு பத்திரிக்கையை நீட்டுற? என்ன நினைச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ற நீ?”என்று அதட்ட
“இல்லையே ரொம்ப நாளா பேசிட்டு இருந்த விஷயம் தான் பாட்டி. அப்பா கிட்ட அண்ணன் கிட்ட எல்லாம் இந்த மாதிரி கடை வைக்கணும்னு சொல்லி இருக்கேனே?!”என்றான் நிதானமாக.
“அதுக்கு திடீர் னு வந்து உன் பேரில் ம்ஹூம் உன் பேர் கூட இல்லை உரிமை நீரதி னுல போட்டு இருக்கு. அவ பேரில் சொத்து வாங்கி இருக்க?”என்று நிலா கொந்தளிக்க
“மரியாதையா பேசு நிலா. அவ என் பொண்டாட்டி”என்றவன், “பொம்பளைப்பிள்ளை உனக்கு ஏன் சொத்து பத்தின பேச்சு அதான் உன்னை நகை போட்டு சீர் செஞ்சு கட்டிக் குடுத்தாச்சே. “என்றான் தந்தையை பார்த்தபடி.
“அவ ஏன் டா பேசக் கூடாது இந்த வீட்டு ராணி அவ . என் மகளுக்கு உரிமை இல்லைன்னு சொல்லுவியா நீ?”என்று வளர்மதி முந்திக் கொண்டு வர
“அச்சோ நான் அப்படி சொல்வேனாம்மா… கொஞ்ச நாள் முன்னாடி நீங்க பேசினது தான் பொம்பளைப் பிள்ளைக்கு சொத்துல என்ன உரிமை? நகையும் சீரும் மட்டும் தான்னு நீங்க பேசிக்கிட்டது தான் மா . நிலா பொண்ணு தானே?!, அப்போ இதில் அவ தலையிடக் கூடாது தானே?!”என்றவனை அமுதனே வியப்பாக பார்த்தான்.
“என்ன ண்ணா அப்படி பார்க்கிற…? எல்லாம் இவங்க பேசிக்கிட்டது தான். நீயும் தீபனும் ஆண் பிள்ளை பெத்து இருக்கீங்களாம், அதனால இந்த சொத்து உங்களுக்கு ரெண்டா பிரிச்சு தந்துட்டு என் பொண்ணுங்களுக்கு தேவையான நகையும் சீரும் செஞ்சு அதோட சொத்துல பங்கு எல்லாம் கேட்க கூடாதுன்னு எழுதி வாங்கணுமாம். எல்லாம் இவங்க பேசினது தான். அப்போ லாஜிக்படி நிலாவும் கேட்க கூடாது தானே?!”என்றான் நறுக்கென்று.
“இதென்ன புதுசா அப்பா?!”என்று அமுதன் தேசிகன் பக்கம் திரும்ப அவரோ ஆழியனைப் பார்த்து “அப்போ நாங்க பேசிக்கிட்டதை ஒட்டு கேட்டு இருக்க”என்றார் எரிச்சலாக.
“ப்ப்ச், நோ ப்பா அந்த பழக்கம் எல்லாம் உங்க பொண்ணு நிலாவுக்கு சொந்தமானது. எனக்கு இல்லை. ஏதேச்சையாக உங்க கிட்ட கணக்கு ஒப்படைக்க வரலாமேனு நினைச்சு வந்தேன் அப்போ நீங்க மூணு பேரும் பேசினதை கேட்டு அப்படியே நெஞ்சு நிறைஞ்சு போயிட்டேன்”என்றவனிடம் நிலா சண்டைக்கு நின்றாள்.
“நான் என்ன ஒட்டுக் கேட்டேன் எப்போ கேட்டேன்?”என்றவளை பாராமலேயே “நீ மறந்திருப்ப நிலா. அப்போ உனக்கு வயசு பதினேழு இருக்கும். நானும் என் வொய்ஃபும் சினிமாக்கு போகலாம்னு முடிவு செஞ்சதை அம்மா கிட்ட மறு ஒலிபரப்பு செஞ்சியே அதெல்லாம் ஞாபகம் இருக்காது உனக்கு. பட் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எனக்கு நல்லா ஞாபகம் இருக்கே. அது மட்டுமா இன்னும் நிறைய இருக்கே”குரலில் பிசிறில்லாமல் பேசியவனை அதிர்ந்து தான் பார்த்தனர்.
“என்னம்மா இப்படி பார்க்கறீங்க இப்போ நிலா வயசு பொண்ணு இல்லையே. கல்யாணம் ஆகியிருச்சு எல்லாம் தெரிஞ்ச பொண்ணு தான் மா. அவளையேக் கேளுங்களேன் சொல்லுவா”என்றான்.
“ஓஓஓ ! இதெல்லாம் பேசு சண்டை போடுன்னு உன் பொண்டாட்டி சொல்லி குடுத்து இங்கே அனுப்பிச்சாளா?!”என்று வளர்மதி துவங்க நக்கலாய் சிரித்தவனோ”அவ்வளவு திறமை அவளுக்கு இருந்தா இங்கே சொகுசா தரு அண்ணி மாதிரி ல்ல இருந்திருப்பா சமையல்கட்டே கதின்னு கிடந்திருக்க மாட்டாளே”என்றதும் அமுதனுக்கே கோபம் வந்து விட்டது.
“டேய் என்னடா என் பொண்டாட்டி வேலை செய்யலைனு சொல்றியா?”என்று அமுதன் எகிற
“ப்ப்ச், நான் எப்போ அப்படி சொன்னேன். நீயே கவனிச்சு பாரேன் ரதி இருந்த வரைக்கும் இங்கே சமைக்க ஆள் வந்தாங்களா என்ன இல்லை மேல் வேலைக்கு தான் ஆள் வந்தாங்களா ஆனா இப்போ வெளியே வேலைக்கு ரெண்டு பேர் சமைக்க ஒரு ஆளு இருக்காங்களா இல்லையா” என்று எதிர் கேள்வி கேட்டான்.
அமுதன் அமைதியாக தரங்கினியோ”என்னவோ நாங்க வேலையே செய்யாத மாதிரி பேசுற செல்வம். சமைச்சு கிண்டி இறக்கினா போதுமா அதுக்கு அரிஞ்சது புடிச்சதுனு யார் செஞ்சா நாங்க தானே செஞ்சோம்”என்றாள் முறைப்பாக
“ஆஹான்”என்றவன் தோரணையே புதிது தான் அனைவருக்கும்.
“ஓகே அதெல்லாம் விடுங்க எதையும் சொல்லி பேசி புரிய வச்சு அதுக்கு எனக்கு நேரம் இல்லை. சொந்த முயற்சியில் ஒரு விஷயத்தில் இறங்கி இருக்கேன் பிறந்ததில் இருந்து இது என் குடும்பம் இந்த குடும்பத்தோட ஒற்றுமைக்கு என்னால எந்த விதத்திலும் பங்கம் வந்திடக் கூடாதுன்னு என்னால முடிஞ்ச முயற்சி எல்லாம் செஞ்சேன். அதை கடைசி வரைக்கும் செய்ய முடியாம போனதில் வருத்தம் தான். எனனை பெத்தவங்க கூடப் பிறந்தவங்க இருக்காங்கன்ற நம்பிக்கையில் பத்திரிக்கை கொண்டு வந்திருக்கேன் நல்ல மனசோட வந்து வாழ்த்துங்க”என்று தேசிகனிடம் பத்திரிக்கையை நீட்டினான்.
“இப்போ இதுக்கு என்ன அவசியம் வந்துச்சு செல்வம் நம்ம கடையில் தானே வித்தோம் தனியா எதுக்கு செய்யணும் உனக்கு இன்னொரு பிராஞ்ச் ஸ்டார்ட் பண்ணனும்னா கூட பண்ணி தந்திருப்பேனே இதுக்கு என்ன அவசியம் இதுல ஷேல் ஆகுமா முதலில்”தன்மையாகவே கேட்டார் தேசிகன்.
“அவசியம் தான் ப்பா. அவசியம் வந்திடுச்சே… மில் அமுதன் அண்ணன் பெயரில் இருக்காம். ஸோ அவர் மச்சான் என் கிட்ட இந்த அதிகாரம் பண்ற வேலை வச்சுக்காதன்னு கறாரா சொன்னார். ஷோரூம் கூட தீபன் பேருக்கு எழுதிட்டீங்களாமே… அதுவும் தகவல் வந்தது. நான் ரெண்டு பொண்ணுங்க பெத்து வச்சிருக்கறதால அவங்களுக்கு நகையும் சீரும் தந்தா வேலை முடிஞ்ஞதுன்னு நீங்க சொன்னது தான். தாத்தா சொத்து பேரன் பேத்திக்கு ஐம் சாரி பேரன்களுக்குனு நீங்க முடிவு எடுத்தாச்சு. அதில் நான் தலையிட முடியாது எல்லாம் உங்க சுய உழைப்பு. நீங்க யாருக்கு வேண்டுமானாலும் தரலாம்.
ஆனா என் பொண்ணுங்களுக்கு நான் என் சுய உழைப்பை தரணுமே வெறும் நகையும் சீரும் தர்றதுக்கு என் மனசாட்சி இடம் தரலை. ஸோ இந்த கடை உங்களை மாதிரி பெரிய சொத்தா தர முடியாட்டியும் என்னால முடிஞ்சது நான் தருவேன்.”என்றான் அழுத்தமாக.
“டேய் நிலாவுக்கே நாங்க நகை தானடா தந்தோம் வேற என்ன செய்றோம் இப்ப பேத்திகளுக்கும் அதே தான் நிலஞ்சனாவுக்கு ஒரு மாதிரியும் ஸ்வருக்கு ஒரு மாதிரியும் தர நினைக்கலையே நாங்க. உன் அண்ணன் தம்பிங்க உங்களை கைவிட்ருவாங்களா என்ன”என்று பொன்னி முந்திக் கொண்டு வர
“பாட்டி நான் அதில் தலையிடவே இல்லை நீங்க தர்றது தராதது எல்லாம் உங்க விருப்பம். இது என் விருப்பம் என் உழைப்பு என் மகள்களுக்கு. இவ்வளவு பேச வேண்டாம் தனியா கடை வைக்கிறேன் திறப்பு விழாவுக்கு வந்திடுங்க”என்று தீர்மானமாக முடித்து கொண்டான் பேச்சை.
நிலா வேகமாய் “அப்போ எங்க வீட்டுக்கு முறையா பத்திரிக்கை வைக்கணும் ல. ரெண்டு நாளில் விசேஷம் வச்சுட்டு சவடாலா பத்திரிக்கை தருவியா நீ”என்று கேட்க
அவள் பக்கம் ஆக்ரோஷமாய் திரும்பியவன் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு”எனக்கு யார் நீ உன் வீட்டுக்கு நான் ஏன் பத்திரிக்கை வைக்கணும்”என்று வெடுக்கென்று கேட்டு விட்டான்.
“செல்வம்”என்று பெரியவர்கள் அதிர்ந்து அதட்ட அதைக் கேட்கும் மனநிலையில் ஆழியன் இல்லை.
…… தொடரும்
error: Content is protected !!