Skip to content
Post Views: 987
“நான் அந்த குழந்தையோட அம்மாவான்னு கேட்கறான். என்னை பார்த்தா அப்படியா தெரியுது.. ஒருவேளை இந்த கனவு ரகசியம் அவனுக்கும் தெரிஞ்சிருக்குமா..! இல்ல நான் அந்த குழந்தையோட அம்மானு உணர்வுபூர்வமா புரிஞ்சு சொல்லியிருப்பானா..?” கண்ணாடி பார்த்தபடி லஷ்மி கேட்க..
கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து மடிக்கணினியின் விசைப்பலகையை தட்டியபடி..
“கண்டபடி கற்பனை பண்ணாத சந்தா..! அந்த ரோட்ல உன்னையும் குழந்தையையும் தவிர வேற யாரும் இல்லை.. அதனால அப்படி சொல்லி இருக்கலாம்..! அந்த இடத்தில தீப்தி தவிர வேற எந்த குழந்தை இருந்திருந்தாலும் அவன் அப்படித்தான் சொல்லிட்டு போயிருப்பான்.” வாத்சா இப்படி சொல்ல ஏமாற்றத்தில் உதடு சுழித்தாள் லஷ்மி.
“இருந்தாலும் அந்த குட்டிக்கு ரொம்பதான் திமிரு.! கைக்குள்ள அடங்காம எப்படி துள்ளுது. காப்பாத்த வர்றவங்களுக்கும் கடத்திட்டு போறவங்களுக்கும் வித்தியாசம் தெரியாதா..? பாருங்க எப்படி கிள்ளி வெச்சிடுச்சு..” பக்கத்தில் வந்து அமர்ந்தவள் மணிக்கட்டு பகுதியில் சிவந்து போயிருப்பதை அவனிடம் காட்ட.. மடிக்கணினியை கீழே வைத்துவிட்டு மிக ஆர்வமாக அந்த காயத்தை ஆராய்ந்து தொட்டு தடவினான் வாத்சல்யன்.
Advertisement
“பாப்பா கிள்ளிடுச்சா..!” அவனிடம் அக்கறையை விட ஆர்வம் அதிகமிருப்பதை உணர்ந்தாள் லஷ்மி.
அவன் கையைத் தட்டி விட்டு.. “அவ என்னை கிள்ளி விட்டுட்டான்னு சொல்றேன்.. நீங்க பாட்டுக்கு ரொம்ப கூலா.. பாப்பா கிள்ளிடுச்சான்னு கேக்கறீங்க.. மனசுக்குள்ள குளு குளுனு இருக்குதோ..!” அவள் கண்கள் சுருக்கி கோபமாக கேட்க.. சத்தமாக சிரித்தான் வாத்சல்யன்.
“அதில்லடி.. தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு எவ்வளவு கோபம் வருது பாரேன் அதுக்கு.. லஷ்மி.. நான் அவங்க அப்பா கிட்ட பேசட்டுமா..?”
Advertisement
“எதுக்கு..?” ஏனோ லஷ்மியின் கண்களில் சின்ன ஆவல் எட்டிப் பார்த்தது..
Advertisement
“இல்லடி பாப்பா அடிக்கடி ரோட்டுக்கு வந்து விளையாடறா..! இவங்க வீட்ல யாரும் கவனிக்கற மாதிரி தெரியல.. நாட்டுல என்னென்னமோ நடக்குது..! மனுஷ ரூபத்துல நடமாடற மிருகங்கள் குழந்தைகள்னு இருந்து கூட பாக்கறது இல்ல.. அதுவுமில்லாம.. இந்த மாதிரி கார் பைக்னு போற ரூட்ல.. பாப்பா குறுக்க வந்து.. என்று நிறுத்தியவன்.. எப்பவும் நாம காவலுக்கு நிக்க முடியாது இல்லையா..!” என படபடப்புடன் சொல்ல.. அவன் வார்த்தைகளின் உண்மை புரிந்தது அவளுக்கும்.
“எல்லாம் சரிதான்..! ஆனா நாம சொல்றதை அவங்க சரியான விதத்துல புரிஞ்சுக்கணுமே.. இந்த காலத்து பெத்தவங்களுக்கு குழந்தைகள் விஷயத்துல அறிவுரை சொன்னாலே பிடிக்கிறதில்ல..! எங்க பிள்ளைகளை எப்படி வளர்க்கனும்னு எங்களுக்கு தெரியும்னு திமிரா பேசிட்டு போயிட்டே இருக்காங்க.. நம்ம புவனா.. மித்ரா விஷயத்துலதான் பார்த்தோமே..!”
“இருந்தாலும் சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையா..?”
Advertisement
“சரிங்க..! உடனே போய் பொட்டுன்னு ஆரம்பிக்காதீங்க.. இந்த ஆள் எப்படி என்னன்னு பார்த்து பழகணும். முகத்திலறைஞ்ச மாதிரி ஏதாவது பேசிட்டா நமக்கு கஷ்டமா போயிடும்.”
“என்ன வேணாலும் பேசிட்டு போகட்டும். இவங்க அஜாக்கிரதையினால தீப்தி பாப்பாவுக்கு எந்த ஆபத்தும் வந்துரக்கூடாது..! சொல்ல வேண்டியதை சொல்லிடுவோம்.”
“இந்த குட்டி பொண்ண எவ்வளவு தான் தள்ளி வச்சாலும் திரும்பத் திரும்ப நம்மகிட்ட வந்து ஓட்டிக்கறாளே..! என்ன விஷயமா இருக்கும்..?” லஷ்மியின் கேள்விக்கு புருவங்களை உயர்த்தினான் வாத்சல்யன்.
‘அதில்லங்க..! அவளை பத்தி நினைக்கவே கூடாதுன்னு முடிவெடுத்து உறுதியாக இருக்க முடியல. ஏதாவது ஏதோ ஒரு வழியில் நமக்குள்ள வந்துடறா.!”
“பக்கத்து வீட்டு குழந்தைங்கற வாஞ்சையோட அவகிட்ட பழகுனா போதும்.!” வாத்சல்யனின் குரலில் மாற்றம் தெரிந்தது.
“அப்படித்தான்..! வேறென்ன? பின்ன அவங்க வீட்டு குழந்தையை நம்ம பிள்ளையாவா நினைக்க முடியும். அது ரொம்ப திமிர் பிடிச்ச வாண்டு.. நமக்கெல்லாம் செட்டே ஆகாது. நான் மட்டும் அந்த குட்டியோட அம்மாவா இருந்திருந்தேன்..? அது பண்ணுற வால்தனத்துக்கு பட்டு பட்டுன்னு அடிச்சிடுவேன்.”
“அதானே கோபத்தில் உன்னை மிஞ்ச ஆள் உண்டா..? எனக்கே உன்னை பார்த்தா கொஞ்சம் பயந்தான். இத்தனை வருஷத்துல நான் அடி வாங்காம இருக்கறதே கடவுள் புண்ணியத்துல பெரிய சாதனை தெரியுமா..?”
“அடேங்கப்பா..! நீங்க ரொம்ப அப்பாவிதான். அப்படியே வாயில விரலை வெச்சா கூட கடிக்க தெரியாது.. சின்ன குழந்தை..”
“இல்லையா பின்ன? உனக்கு நான் குழந்தைதான.. ஆனா முன்ன மாதிரி இப்பல்லாம் என்னை நெஞ்சுல போட்டு தாலாட்டறதே இல்லையே..?”
“போதும் போதும் பேச்சு திசை மாறுது இத்தோட நிறுத்திக்குவோம்.”
“சந்தா..!” அவன் குரலில் மென்மை கலந்து ஒரு மாற்றம் தெரிய.. ஏறெடுத்து பார்த்தாள் அவள்.
“உன்னை இப்படி சந்தோஷமா பார்த்து எவ்வளவு நாளாச்சு..! இப்படியே இருடி.! எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நீ நீயா இரு.!”
“பயமா இருக்கு வாத்சா..! யாராவது ஏதாவது பேசி காயப்படுத்திடுவாங்களோன்னு உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு.. மனசை எப்பவும் கல்லா வச்சிருக்க முடியல.!”
“துக்கமும் துயரமும் அடுத்தவங்க வார்த்தைகளை நாம் உள்ளே ஏத்திக்கிட்டாதான். இவங்க இப்படித்தான்னு கண்டுக்காம கடந்து போயிட்டே இருக்கணும். நாம எந்த தப்பும் பண்ணல. அப்புறம் எதுக்காக கலங்கணும்.”
இழுத்து மூச்சு விட்டாள் சந்தான லஷ்மி.. “அப்படித்தான் நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்க வேண்டியதா இருக்கு.”
“இப்படி கிட்ட வா..!” என இரு கைகளை நீட்டிக்கொள்ள.. அவனுக்குள் வந்து சரணடைந்தாள் லஷ்மி.
“என்னப்பா..!”
“இப்படியே கொஞ்ச நேரம் இருக்கலாம்..! நாம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு எவ்வளவு நாளாச்சு..!”
“யோவ்..!”
“நீ பெருசா நினைச்சு கவலைப்படற அந்த விஷயம் கூட எனக்கு குறையா தெரியல.! ஆனா அதைப் பததியே யோசிச்சு யோசிச்சு உன்னையும் வருத்திகிட்டு என்னையும் தள்ளி வைச்சு கஷ்டப்படுத்தற பாரு..! அதைத்தான் என்னால தாங்கவே முடியல.”
“வாத்சா..!”
“நீதான் என்னோட சந்தோஷம்.. எனக்கு வேற எதுவும் முக்கியமில்ல.. ப்ளீஸ் எனக்கு நிம்மதியை கொடு லஷ்மி..!” அவள் தோள்களைத் தழுவி இறுக அணைத்துக் கொண்டான்.
“வாத்து..!”
“ஏய்.. என்னடி சைடு கேப்ல வாத்துங்கற..!”
“ஆமா வாத்து மடையனை வேற எப்படி கூப்பிட முடியும்.?”
“மடையனா..?”
“இல்லையா பின்ன..? உங்களை விட்டு நான் மட்டும் எங்க போகப்போறேன். கொஞ்சம் மூட் அவுட்.. எல்லாம் சரியான பிறகு உங்ககிட்டதான் ஓடி வருவேன். இது தெரியாம தேவையில்லாம டென்ஷன் ஆகற வாத்து நீ..!”
“வாத்து சொல்லாதடி..!”
“நூறு முறை சொல்லுவேன்.. வாத்து.. வாத்து.. வா..” அதற்கு மேல் பேச முடியாதபடிக்கு சட்டென கீழே சாய்த்து அவள் இதழ்களை இறுக பற்றிக் கொண்டான் வாத்சல்யன். முதலில் திமிறி.. மீண்டும் மீண்டும் அவனை வெறுப்பேற்றுவதற்காக அந்த வார்த்தையை சொல்ல முயன்று.. ஒரு கட்டத்தில் அப்படி ஒரு வார்த்தை இருப்பதையே மறந்து போகுமளவு அவள் தருணங்களையெல்லாம் அழகாக மாற்றி தனதாக்கிக் கொண்டான் அவன்.
லஷ்மியின் தந்தை வழி பாட்டி இறந்து விட்டதாக தகவல் வரவே வாத்சல்யனும் லஷ்மியும் புறப்பட்டு ஊருக்கு சென்றிருந்தனர்.
சொந்த ஊரில் இறுதி காரியம் என்பதால்.. சின்ன வயதில் பார்த்தவர்கள் தெரிந்தவர் அறிந்தவர் என அத்தனை பேரும் ஒரே கேள்வியை கேட்டு அவளை நோகடித்தனர்.
காரியம் முடிந்த கையோடு திரும்பி வந்திருக்கலாம். இன்னும் ரெண்டு நாள் இருங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு.. என அவள் தந்தை சொன்னதை தவிர்க்க முடியாமல் அங்கே இருக்க வேண்டியதாய் போயிற்று.
பாட்டியின் நகைகள் உடைமைகளை பங்கு போடுவதற்காக வாரிசுகள் பேரன் பேட்டி என அனைவரும் அங்கே ஒன்று கூடியிருந்தனர்.
யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும நவநீதம்மாள் ஒரு காகிதத்தில் வரிசைவாரியாக எழுதி வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறார். கோழி கிறுக்கலான அவர் கையெழுத்தை புரிந்து கொள்வதற்கே சில மணி நேரங்கள் எடுத்தது..
“ப்ச்.. எதுக்கு இதெல்லாம்..! நமக்கு எதுவும் வேண்டாம் சந்தா. எதுவானாலும் அவங்களையே பங்கு போட்டு எடுத்துக்க சொல்லு..! நாம கிளம்பலாம்” என்றான் வாத்சல்யன். ஏதேனும் பிரச்சனை என தொடங்கி மனைவியின் மனதை காயப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் அவனுக்கு.
“இந்த மாதிரி அவங்களுக்கு உரிமை பட்டதையெல்லாம் பங்கு போட்டு கொடுக்கறது பணத்துக்காகவோ பேராசைக்காகவோ இல்ல.. ஒவ்வொரு வாரிசுக்கும் அவங்க கொடுக்கற முக்கியத்துவம்.. உரிமை.. அந்த வாரிசு மேல அவங்க வச்சிருக்கற பாசம்.. அதுதான் இங்க மேட்டர்..
ஆச்சி இறந்து போனாலும் அவங்க ஞாபகார்த்தமா அந்த உடமைப்பட்ட பொருட்கள் ஒவ்வொரு வீட்லயும் நினைவு சின்னமா கெத்தா கம்பீரமா இருக்கும்ல..” என்றாள் லஷ்மி.
எழுதி வைத்ததெல்லாம் படிக்கப்பட்டது..
நகைகள் உடைமைகள்.. வீடு நிலம் சொத்து என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் அனைத்து வாரிசுகளுக்கும் சம பங்காக எழுதி வைத்திருந்தார் அந்த முதியவள். சந்தான லஷ்மியை தவிர அத்தனை பெயர்களும் அந்த காகிதத்திலிருந்து படிக்கப்பட்டது.
அவரவருக்கான பங்கை அறிவித்து முடிக்க அனைவர் முகத்திலும் ஏக திருப்தி.
“என்னப்பா.. நம்ம சந்தா பேர் இல்லையா..! நல்லா பாருங்க..!” யாரோ ஒரு வயது முதிர்ந்த பெண்மணி சொல்ல.. அந்த காகிதத்தை திருப்பி பார்த்துவிட்டு.. “எல்லா பேரும் இருக்கு. சந்தா பேர் இல்லையே!” என்றார் காகிதத்தை வாசித்த நபர்.
சந்தான லஷ்மிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. பணத்துக்கும் நகைக்கும் ஆசைப்பட்டு அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை..
நானும் இந்த வீட்டு வாரிசு என பறைசாற்றும் அந்த உரிமையும் தகுதியும் தனக்கில்லாமல் போய்விட்டதா..!
“என்ன? சந்தான லஷ்மிக்கு ஒன்னுமே தரலையா?”
“வாரிசு இல்லாத புருஷன் பொஞ்சாதிக்கு பொருளையும் சொத்தையும் கொடுத்து ஏன் வீணாக்கணும்..! குழந்தை குட்டியுமா வாழறவங்களுக்கு தந்தாலாவது பயன்படுமேன்னு ஆச்சி நெனச்சிருப்பாங்க..” கும்பலில் ஒரு குரல்.
லஷ்மி பற்களை கடித்துக் கொண்டு கண்களை மூடி அமைதியாக நின்றிருந்தாள்.
“சந்தா வா.. போகலாம்..!” அவள் தோள் பற்றி அணைத்துக் கொண்டு நடந்தான் வாத்சல்யன்.
மற்றவர்களுக்கு இது வருத்தத்தை தந்தாலும் இதயம் கனத்து அமைதியாக நிற்க லஷ்மியை பெற்றவளால் இயலவில்லை.
“என்ன அநியாயம் இது.. குழந்தை இல்லன்னா என் பொண்ணுக்கு இந்த வீட்டு சொத்து சுகத்தை அனுபவிக்க உரிமை இல்லைன்னு ஆகிப் போயிடுமா..! இப்ப குழந்தை இல்ல.. இனிமே பொறக்கலாம் இல்லையா..! எல்லாருக்கும் நல்லது செஞ்சிட்டு என் பிள்ளைக்கு மட்டும் அநியாயம் பண்ணிட்டு போய்ட்டாங்களே..! பெத்த வயிறு பத்தி எரியுது..!” என்று கண்ணீரோடு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் சந்தான லஷ்மியின் தாய் நீலவேணி..
“பெரியவங்க நாலயும் யோசிச்சுதான் பண்ணுவாங்க அதை யாரும் குறை சொல்ல முடியாது..! பத்து வருஷமா ஒன்னும் இல்ல.. இனிதான் அதிசயமா புள்ள பிறந்து துள்ளி விளையாட போகுதாக்கும்.. இதெல்லாம் பாட்டிமா அவங்களா சம்பாதிச்ச சொத்துதான..? யாருக்கு என்ன கொடுக்கணும்னு முடிவு பண்றது நவநீதம்மாவோட சொந்த விருப்பம். அதை யாரும் தப்புன்னு சொல்ல முடியாது. கடைசி பொண்ணுக்கு கொடுக்கலைன்னாலும் மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் பாரபட்சமில்லாம எல்லாத்தையும் சம பங்கா பிரிச்சிருக்காங்க..! அத நினைச்சு சந்தோஷப்படுங்க..”
முத்துலஷ்மியின் கணவன் குறுக்கிட்டு பேச..
“என்ன எல்லாரையும் பேச விட்டு வேடிக்கை பாக்கறீங்களா.. நாங்க தான் அப்பவே ஊருக்கு கிளம்பறோம்னு சொன்னோமே.. எதுக்காக இருக்க வச்சு அசிங்க படுத்தறீங்க.. இது வேணும் அது வேணும்னு நாங்க வாய் திறந்து ஏதாச்சும் கேட்டோமா..! ஏன் தேவையில்லாம எங்களை நோகடிக்கனும்.. எழவு வீட்ல எதுவும் பேசிட கூடாதுன்னு பாக்கறேன்..” வாத்சல்யன் கோபத்தில் வெடித்து கத்த.. முத்து லஷ்மியின் கணவன் பதிலுக்கு பேச.. அவனுக்குப் பரிந்து கொண்டு இன்னொரு சகலையும் துணைக்கு வர..
பெற்றவர்களோ ஒரு இரண்டு பக்கமும் மாப்பிள்ளைகளை அடக்க முடியாமல் தவிக்க.. அந்த இடமே போர்க்களமானது.
“இங்க பாரு சந்தா.. உன் புருஷன கூப்பிட்டு கிளம்பு.. ஆச்சி எது செஞ்சிருக்கோ அதை சரியாத்தான் செஞ்சிருக்கு. இதுக்கு மேல பேச ஒன்னுமில்லை. உனக்கு வேணும்னா எல்லாத்தையும் அள்ளி போட்டுக்கோ. தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க..!” சகோதரி வந்து நேருக்கு நேர் முகம் பார்த்து சொல்ல.. உடைந்த இதயத்தோடு சிதறி வடிந்த ரத்தம் கண்ணீராக வெளியேற..
“வாங்க வாத்சா போகலாம்..” என கணவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் லஷ்மி.
“காரில் போகும்போது..!
கனவை நனவாக்கலாம் வாத்சா..” என்றாள் இறுகிய குரலில்.
தொடரும்.
error: Content is protected !!
இந்த பாட்டிக்கு கொழுப்ப பாரு, சாகும் போது கூட இந்த பொண்ணோட மனசை நோகடிச்சிட்டு செத்திருக்கு 😌😌
யாருக்கு வேணுமாம் இந்த நகையும், பணமும் ஏதோ ஒரு உபயோகமான பொருளை கொடுத்திருக்கலாமே இந்த கிழவி,
கனவை நிறைவேற்ற வாத்சா ஒத்துக்குவாரா?🤔🤔
Suthi irukkaravangalae mukaal vaasi prachanaiya udhi perusakuvanga
Indha kodumai yellam yennanu solla
Santha n vatsa 🙏🙏🙏🙏🙏🙏
வெளி ஆளுங்க தான் இப்படி ன்னா சொந்தமும் இப்படி தான் பா இருக்கு செத்துப்போன கிழவி மொதக்கொண்டு 😏😏😏
சாந்தா என்ன சொல்ற ன்னு தெரிஞ்சு தான் சொல்றியா 😬😬😬
நீ செத்து சொத்து கிடைக்கலன்னு யாரு கிளவி அழுதா அவங்கள எதுக்கு டா இப்படி கூப்பிட்டு வச்சி மனச உடைக்கிறாங்க ச்சே கூட பிறந்த உங்களுக்கு கூட அவ வலி தெரியல என்ன சொந்தமோ😡😡😡