Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

75. இந்த்ரவாணி - நாயகியின் நாயகன்

நாயகியின் நாயகன் – 1

‘தேவிகாபுரம்’ ஒரு சிற்றூர். பட்டு நெசவாளிகளின் வாழிடம். வீதிகள் முழுதும் வித விதமான பட்டுத் தொழிற் பெயர்கள் தாங்கிய பலகைகள் வரவேற்கும்‌. ஊரைச் சுற்றி நிலங்கள் பசுமை போர்த்தி கண்களுக்கு நிம்மதியளிக்கும். 

ஊருக்கு கிழக்கே குன்று. மலைப்படிக்கட்டுகள் தொடங்குமிடத்தில் கற்றளியின்( பெரிய கற்கோவில்) உள்ளே பிரம்ம நாயகி வீற்றிருக்க, மலையுச்சியில் கனகபுரீஸ்வரராக பெரிய நாயகர் வீற்றிருக்கிறார். 



Advertisement

மேலே உள்ள இறைவனின் முழுமுதல் சக்தியாக தேவி இருப்பதால் அவள் பெயராலேயே அந்த ஊர் ‘தேவிகாபுரம்’ என்றழைக்கப்படுகிறது.  

தேவிகாபுரத்தின் தேரடி வீதியில் கூடத்துடன் கூடிய பழைய ஓடுகளால் மூடப்பட்ட சிறிய வீடு. வீட்டை சுற்றி பட்டு நூல்கள் சாயமேற்றி சிறு சிறு கொட்டகைக்குள் காய வைக்கப்பட்டு இருந்தன. 

Advertisement

Advertisement

ஒரு ஓரத்தில் பந்தலிட்டு ஜாதி மல்லி, நித்ய மல்லி கொடிகளும், அருகிலேயே மைசூர் அடுக்கு மல்லி, பன்னீர் ரோஜா, செம்பருத்தி, சம்பங்கி செடிகள் வளர்க்கப்பட்டு இருந்ததால் இயற்கையாகவே வீடு முழுதுக்கும் நறுமணவாசம் வீசியது. 

உள்ளே நுழையும்போதே தறிகளின் சத்தம், தாள லயத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தன. 

Advertisement

மீட்டாத வீணையை போல் ஒரு ஓரத்தில் அமர்ந்து, அழகான மயில் கழுத்து நிற புடவையை மடிப்பு மாறாத விதத்தில் அழுத்தி மடித்து அட்டைப் பெட்டியில் வைத்தாள் ரதி. 

அட்டைப் பெட்டியின் மேல் ‘ரதி சில்க்ஸ்’ அழகான பெயர் மிளிர்ந்தது. 

நாளை முதல் அந்த பெயரும், அவளும் அடையாளமற்று போகப் போகிறார்கள் என்பதை உணர்ந்ததை போல் தூரத்து தெருவில் மணி பனிரெண்டை நெருங்கியதை உணர்த்தும் வகையில் சங்கொலி எழும்பியது. 

சட்டென நிமிர்ந்த அவளின் தாமரை கண்கள் கண்ணீரில் பூத்தன. 

அற்புதங்கள் எப்போதும் ஒரு நொடியில் நடக்கும் என்று அவளின் தாத்தா ‘சிவ தனுசு’ சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் அவளின் வாழ்க்கையில் இதுவரை அப்படியொரு விஷயம் நடக்க போவதற்கான எந்த அறிகுறியும் தென்பட்டதில்லை. 

ரதியின் குடும்பம் பாரம்பரியமாக துணி நெய்தலில் வழி வந்தது. 

விஸ்வம், மீனலோசினி ரதியின் பெற்றோர். தாத்தா சிவ தனுசு அந்த ஊர் பட்டுத் தொழிலின் சங்கத் தலைவராக இருந்தவர். 

அவர் பதவியில் இருந்த வரையிலும் ரதி இளவரசியை போல் வளர்ந்து வந்தாள். எட்டுக் கட்டு வீடு, ‘ரதி சில்க்ஸ்’ என்ற அடையாளத்துடன் இருந்தது. 

சிவதனுசுவின் மனைவி ரதிசுந்தரி. அவரின் பெயராலேயே அந்த வீடும், தறியும், கடையும், அழைக்கப்பட்டன. பேத்தியும் அந்த பெயராலேயே அழைக்கப்பட்டாள். 

ரதி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது, மீனா காச நோயால் பாதிக்கப்பட்டார்.. அதற்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்து, மெல்ல ஒவ்வொரு நோயாக அவரின் உடலில் குடிபுகுந்தன. மருத்துவ சிகிச்சைக்கு வேலூருக்கு மாதம் ஒரு முறை போய், வாரம் ஒரு முறை ஓட வேண்டியதாகியது.

விளைவாக கடை கைமாறியது. தறிகளின் வரிசை குறைந்தது. பத்து தறிகள் இருந்த இடம் நான்காக குறைந்தன.

மருமகளின் உடல் நிலை பெரியவர்களை மனம் குலைய வைக்க, அதுவே அவர்களின் இறுதி மூச்சு நிற்க காரணமாகியது. 

ரதிக்கு படிக்கும் போதே வீட்டில் ஒவ்வொரு இழப்பாக பார்த்து பார்த்து மனம் ரணமானது. ஆனாலும் அவளின் தாத்தாவிடம் சொன்ன சொல்லை காப்பாற்றினாள்.. ‘எது கைவிட்டாலும் படிப்பு உன்னை கைவிடாது. எந்த காரணம் கொண்டும் படிப்பை விட்டு விடாதே’ என்று மரணத்தறுவாயில் அவர் சொன்னபோது விடலை பெண்ணாக புரிந்தும், புரியாமலும் சத்தியம் செய்தாள். 

தாயை கடைசி வரை ஒரு பக்கம் கவனித்துக் கொண்டே, தந்தையுடன் தறியில் மீதி நேரத்தில் வேலை செய்தும், கல்லூரி படிப்பையும் முடித்து விட்டாள். 

இன்று இரண்டு தறிகளுடன், கழுத்தை நெரிக்கும் கடன் சுமையுடனும், தாயை இழந்த துக்கத்துடனும் அவளும், அவளின் தகப்பனும் அந்த சிறிய வீட்டில் ‘வாழ்ந்து கெட்டவர்கள்’ என்ற அடையாளத்துடன் வாழாமல் வாழ்ந்து வருகிறார்கள். 

நாளை என்பது வெறும் கனவாகவே போய்விடாதா என்ற அவளின் ஏக்கத்திற்கும், பயத்திற்கும் காரணம் ராமச்சந்திரன். ஐந்து  நாட்களுக்கு முன்னர் அவர், இவள் வாழ்க்கையில் போட்ட நங்கூரத்தில் வாழ்க்கை கப்பல் கரைத்தட்டி நின்றது. 

தேவிகாபுரத்தின் இன்றைய பட்டுச் சங்கத் தலைவர் தான் ‘ராமச்சந்திரன்’.  வட்டித் தொழிலிலும் கைத்தேர்ந்தவர். 

அவரின் வாடிக்கையாளர்களின் தொழில், அவரிடம் கடன் வாங்கிய பிறகு அவர் கைக்கே சென்று சேர்ந்து விடும். பல தறிகள் அப்படித்தான் அவருக்கு சொந்தமாயின. 

அவருக்கு இரண்டு மனைவிகள். அக்கா, தங்கையை திருமணம் செய்தவர். ஒரே வீட்டில் இருவரும் அவருடன் வாழ்கிறார்கள் என்ற பெருமையில் அவரின் மூக்கு விடைத்தே நிற்கும். தோளை நிமர்த்தி மீசையை நீவி விட்டு அவர் நடக்கையில் நடிகர் திலகத்தை ஒரு சாயலில் நினைவுப்படுத்துவார்.

மூத்தவரான கற்பகத்திற்கு குழந்தை இல்லாமல் போக, இளையவரான காஞ்சனாவை துணைவியாக்கி கொண்டார். 

காஞ்சனாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்ததும், அடுத்தடுத்த வருடத்தில்  கற்பகத்திற்கும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பிறந்தனர். 

மருதன், மாதவன், மாறன், மாதவி என்று நான்கு பிள்ளைகளுடன் அனைவரும் ஒரே குடும்பமாய் வசித்து வருகின்றனர்.

ராமச்சந்திரன், பெரிய மகனான மருதனுக்கு  எம்.எல்.ஏவின் பெண்ணை மணம் பேசி முடித்து வைத்து விட்டார். 

மாதவனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்கும் போதே, அவன் தந்தையிடம் ரதியை தான் விரும்புவதாக சொல்லி, ‘கட்டினால் ரதி, இல்லையென்றால் மதுவே கதி’ என்று நிஜத்தில் ஒத்திகை  நடத்தி காண்பித்தான். 

ராமச்சந்திரனுக்கு துளிக்கூட விருப்பமில்லை. ஒன்றும் இல்லாத இடத்தில் இருந்து பெண் எடுத்தால் தன் கௌரவம் என்னவாவது என்ற கவலை. 

செல்வாக்காகவே வளர்த்த பிள்ளைகளின் ஆசையை அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பே நடத்தி வைக்கும் தன் பாசத்தை சாக்காக வைத்து தனக்கே இன்று வேட்டு வைத்த மாதவனை பார்க்க, பார்க்க கோபத்தில் அவரின்  கண்கள் சிவந்தன..  

“என்னப்பா, தம்பியை பார்வையாலேயே இரண்டு துண்டா வெட்டிப் போடற மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க” மருதன் தந்தையின் அருகில் வந்தான். 

“மருதா, உன் தம்பிக்கு சொல்லி புரிய வைடா. நாம இருக்க இடம் என்ன, நாம போயி அந்த ஒன்னும் இல்லாதவன் வீட்ல பொண்ணெடுத்தா ஊரு நம்மள மதிக்குமா? சொன்னா கேட்கறானா, என் உயிரை வாங்குறதுக்குன்னே இருக்கான் “ அவரின் குரலை கேட்கும் போதே மருதனுக்கும் பாவமாகத் தான் இருந்தது. 

“பணம் இல்லன்னா என்னப்பா? ஒரு காலத்துல அவங்களும் நல்லா வாழ்ந்தவங்க தான? அவங்க தாத்தா இருந்த இடத்துல தான நீங்க இருக்கீங்க. தம்பி பிடிவாதம் தான் உங்களுக்கு தெரியும் இல்ல.. அவன் நெனைச்சா, நெனைச்சதை நடத்தி காமிக்காம இருக்க மாட்டானே. உங்க சொல்லை தட்டாம காப்பாத்தறதுக்கு தான் நானும், மாறனும் இருக்கிறோமே.. விட்டுப்பிடிங்க.. அந்த பொண்ணு பேருக்கு ஏத்த மாதிரி ரதி தான்..பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம்..” 

“அது சரி. நீயும் உன் தம்பிக்கு வக்காலத்து வாங்கத்தான் வருவேன்னு தெரியாம உன்ட்ட பேசினேன் பாரு.. என் மானத்தை வாங்கவே இந்த பையனை பெத்திருக்கா உங்கம்மா..எல்லாம் என் தலையெழுத்து” ராமமூர்த்தி மாடி கைப்பிடி சுவரில் ஓங்கி குத்தினார்.  அவரின் தங்க காப்பு, அவர் கையை பதம் பார்த்தது. 

“அப்பா பாத்துப்பா.. நான் வக்காலத்து வாங்கல.. தம்பியை நீங்க செல்லம் கொடுத்து வளத்தீங்களே தவிர, கண்டிச்சு வளர்க்கலை, அவனும் அப்படி இப்படின்னு  எல்லா தப்பையும் ஒரு கைப்பாத்துடலாம்னு உங்க செல்வாக்குல பழக்கமாக்கிக்கிட்டான். இப்ப அவனை கண்டிச்சா கேட்டுடவா போறான்..? அந்த பொண்ணு ரதி வந்தப்புறமா அவனை மாத்தறாளான்னு பாப்போம். நீங்க கவலைப்படாம இருங்க. நான் பார்த்துக்கறேன்” 

கை வலியோடு மன வலியும் அவரை அழுத்தியது. அதற்கு மருந்தாக, மருதனின் பேச்சு அவரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. 

தான் அனுபவிக்காததை எல்லாம் தன் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டுமென, ஆத்திரம் ஆத்திரமாக தான் சேர்த்து வைத்த பணம் அவரின் பிள்ளைகளின் வாழ்வில் கைவைக்கும் என்று அவருக்குத் தெரியவில்லை. 

மருதனின் மனைவி ரேணுகா, தன் இரு பிள்ளைகளுக்கும் தோட்டத்தில் விளையாட்டு காண்பித்துக் கொண்டே, உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். 

“ரேணு..” கணவனின் அழைப்பில் திரும்பியவளின் கண்களுக்கு அவனின் சோர்வான விழிகள் தான் தென்பட்டது. 

“என்ன ஆச்சு.. அப்பாட்ட பேசினதுக்கே டயர்டாகிட்டீங்களா?” 

“அவரை சமாதானப்படுத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். ஆனா அதை எப்படி செயல்படுத்தறதுன்னு யோசிச்சா தான் தலை சுத்துது” 

“மாதவன் பிரச்சினை தானே.. அவன் தான் பிடிவாதம் பிடிக்கறான்னா, நீங்களும் அவன் பேச்சுக்கு ஆடறீங்க. முதல்ல உங்க தம்பிக்கு அந்த பொண்ணு கரெக்டா இருக்குமா? அவளை பார்த்தாலே பாவமா இருக்கு. அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கும் இல்ல. அதை பத்தி யாரும் யோசிச்சதா தெரியல.. அது சரி… இந்த வீட்ல பொம்பளைங்க மனசை பத்திலாம் யோசிச்சிட்டாலும்?”

“ரேணு. நான் உன்னை கேட்காம எதாவது செஞ்சிருக்கனா? அப்பாவை பத்தி தான் உனக்கு தெரியுமே. அதுக்கு மேல தம்பி.. அவன் நினைச்சது நடக்கலன்னா அவன் என்ன பண்ணுவான்னு நாமதான் பாத்துட்டு இருக்கமே..அவனையும் ஒரு வழிக்கு கொண்டு வர, ஒரு பொண்ணு வந்தா நல்லா இருக்கும்னு தான் நானும் நினைக்கிறேன்.”

“உங்க தம்பி பஞ்சாயத்துக்குலாம் பதில் சொல்லியே உங்க வாழ்க்கைல பாதி போகுது. உங்கப்பா காசும் பாதி அதுக்கே போகுது. அவனுக்கு போய்..” 

“ஏம்மா… என்‌ பையனுக்கு என்ன குறைச்சல கண்டிட்ட.. இளம்பய அப்படி இப்படி தான் இருப்பான். அதுக்காக அவனுக்கு கல்யாணம் காட்சின்னு எதும் பண்ணாம இருக்க முடியுமா..? அவனுக்கு ஒரு வழி பொறந்தா தானே அடுத்த ரெண்டு பிள்ளைங்களுக்கு எதாவது செய்ய முடியும்.?” காஞ்சனா குரலின் அதட்டல் தோட்டத்துக்கே கேட்டது. 

“அத்தை. நான் குறையெல்லாம் சொல்லல. அந்த பொண்ணுக்காக கொஞ்சம் பாக்கலாமேன்னு தான் சொன்னேன். என்னமோ உங்க பிள்ளை கல்யாணத்துக்கு அப்புறமா ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தா சரிதான்.. எனக்கென்ன?” ரேணுகா சாப்பாட்டு கிண்ணத்தை நங்கென்று அருகில் இருந்த பெஞ்சில் வைத்தாள். 

“அந்த பொண்ணு நல்லா அழகா இருக்கா. எந்த ஊர்ல தேடினாலும் கிடைக்காத அழகு. அவளை என்‌ பையனுக்கு கட்டி வச்சா இந்த ஊரே பொறாமையில வேகும்” காஞ்சனா சொல்ல, 

“அவ என்னமோ ரதி தான். உங்க பையன் மன்மதனாச்சே? அதைதான் கொஞ்சம் யோசிங்கன்னு சொல்றேன்” ரேணு சமயம் பார்த்து காஞ்சனாவை இடிக்க, அவரின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. 

“நீ சொன்னாலும் , சொல்லாங்காட்டியும் ரதிக்கு ஏத்த மன்மதன் தான் என் மவன்.” காஞ்சனா சொல்லி முடிப்பதற்குள், 

“ஆமா அழகா இருந்தா போதுமா..? கையில் தம்பிடி காசு இல்லாத தரித்தரத்த இல்ல கட்டி வைக்க சொல்றான். அதுக்கு இந்த பீத்த பெருமை‌. உன் பையனை அக்ரி காலேஜ்ல படிக்க வச்சேனே அந்த படிப்புக்கு மரியாதை கொடுத்து, உர வியாபாரத்தை பாத்துக்கறானா?  எருமை மாதிரி ஊர் திரியதானே போறான், சரி அப்படித்தான் போறானே, நான் சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணான்னா நீ பெருமையா அவனை பத்தி சொல்லிக்கலாம். கருமம்.. கருமம். அந்த ஒன்னுமத்த விஸ்வத்துக்கு சரிசமமா போய் என்னை நிக்க சொல்றான்” ராமச்சந்திரன் தலையில் அடித்துக் கொண்டு சென்றார். 

மூவரும் அவர் சென்ற திசையையே பார்க்க, மருதன் ஒரு முடிவெடுத்தாக வேண்டும் என்ற உறுதியோடு உள்ளே சென்றான். 

அடுத்த நாள் காலையிலேயே, மருதன் விஸ்வத்தின் வீட்டில் நின்றான்.

வந்த விஷயத்தை சொல்லியதும் விஸ்வமும், ரதியும் ஒரு சேர அதிர்ந்தனர். 

“தம்பி.. நாங்க இருக்க நிலையில உங்க வீட்டோட‌ சம்பந்தம் பண்ற தகுதி இருக்கான்னு தெரியல. அதுவுமில்லாம ரதி கல்யாணத்துக்குன்னு நான் இன்னும் எதுவும் சேர்க்கல. திடுதிப்புன்னு கல்யாணம்னு சொன்னா, என்னால என்ன செய்ய முடியும்? அதுக்கும் நான் உங்கப்பாக்கிட்ட தான் கடன் வாங்கனும்.” 

“இங்க பாருங்க.. அதுக்கெல்லாம் நீங்க கவலைப்பட வேணாம். உங்க சம்மதத்தை கேட்கத்தான் நான் வந்தேன். உங்களுக்கு ஓகேன்னா அடுத்த வேலைகளை ஆரம்பிச்சிடலாம்.” 

“தம்பி. எனக்கு எந்த கருத்தும் சொல்லத் தெரியல. ரதிக்கு விருப்பம்னா நான் என்ன சொல்லப் போறேன்..?” 

அப்பா நிச்சயம் இதற்கு மறுப்பு தெரிவிப்பார் என்று நினைத்த ரதிக்கு, அதிர்ச்சி  தான் தொண்டையை அடைத்தது. 

“அப்புறம்‌ என்ன  ரதி?. என் தம்பி உன்னை ரொம்ப விரும்பறான். அவன் விருப்பத்தை அப்பா நிறைவேத்தனும்னு நினைக்கிறார். உனக்கு ஓகே வா..” 

தரையில் பதில் தேடினாள் ரதி.

“மெளனத்தை சம்மதம்னு எடுத்துக்கலாமா?” மருதன் கேட்க, 

சட்டென்று இல்லையென்று  தலையை அசைத்தாள் ரதி. அவளுக்கு மாதவனின் பல அவதாரங்கள் தெரியும் என்பதால் தன் வாழ்க்கைக்கு தானும் பதில் சொல்லவில்லை என்றால் தலைகீழாக, நீரில்லாத கிணற்றில் குதித்த கதைதான் என்று தைரியமாக தலையை இடம் வலமென்று அசைத்து விட்டாள். 

“இல்ல புரியல.. வாயை திறந்து எதுனாலும் தைரியமா பேசு ரதி.” மருதன் தணிந்து பேசினான். 

“இல்ல..எனக்கு இப்போ… இந்த.. இல்ல கல்யாணம் வேணாம்..” அப்பாவை அடிக்கண்ணால் பார்த்தபடி சொன்னாள். அவர் பெருமூச்சொன்றை விட அதற்கு பதில் என்ன என்று எந்த அகராதியில் தேடுவதென்று யோசித்தாள். அதே சமயம் மருதனின் முகத்தில் தெரிந்த அத்தனை முக பாவனைகளையும் கவனிக்கத் தவறவில்லை. 

“ரதி.. நிச்சயம் என் தம்பியை பத்தி நீ நல்லவிதமா கேள்விப்பட்டு இருக்கப் போறதில்ல. ஆனா அவன் விளையாட்டுத்தனமா இருப்பான். சின்ன சின்ன கலாட்டா பண்ணிட்டே இருப்பான். அப்படியே சின்ன வயசில் இருந்து செல்லமா வளர்ந்துட்டான். அவனை நம்பி ஒரு பெரிய உரக்கடையை வச்சு தந்திருக்கார் அப்பா. கல்யாணம் பண்ணா ஒரு பொறுப்புன்னு வரும்னு வீட்லயும் எல்லாரும் பிரியப்படறாங்க. நானும் நம்பறேன். நீ கல்யாணம் வேணாம்னு சொல்ல வேற ஏதாவது காரணம் இருக்கா?” 

“இல்ல. அம்மா இறந்து ஒரு வருஷம் கூட ஆகல. அப்பாவும் தனியா இங்க தறியை பாத்துக்கறார். கொஞ்சம் கடனெல்லாம் அடையட்டும், அப்புறமா நான் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்னு இருந்தேன்” 

“இவ்வளவு தானே. கெட்டது நடந்த வீட்டில் ஒரு நல்லது நடக்கனும்னு சொல்வாங்க. கடனை பத்தியெல்லாம் நீ கவலைப்படாதே. நீ மருமகளா வந்தப்புறம் அப்பா கடனை வசூலிப்பார்னா நினைக்கிற?. உங்கப்பாவையும், உங்க தறியையும் நல்லபடியா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. வேணும்னா அவரும் நம்ம வீட்லயே வந்து கூட இருக்கட்டும். இப்ப சொல்லு.. உனக்கு சம்மதமா?” 

“இல்ல இப்ப கல்யாணத்துக்கு நான்..” 

“ரதி.. நீ என்னை பத்தி கவலைப்படாத. இது நல்ல சம்பந்தம். தம்பி சொல்றதை கேளு. கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லு.” விஸ்வம் இடைமறித்து பேசவும் தர்மசங்கடமாக 

நெளிந்தாள் ரதி. 

“சரி.. அவசரம் வேண்டாம். நாளைக்கு கூட நல்லதா யோசிச்சு சொல்லு. நான் போய்ட்டு நாளைக்கு வரேன்.” என்று மருதன் கிளம்பினான். 

அவன் கிளம்பியதும், “அப்பா.. என்னப்பா அவங்க கேட்டதும் நீங்க அவ்ளோ அவசரமா தலையை ஆட்டறீங்க. ஏன்ப்பா நான் உங்களுக்கு சுமையா போய்ட்டனா? சீக்கிரமா என்னை வீட்டை விட்டு அனுப்பனும்னு நினைக்கிறீங்களா ப்பா?” கண்களில் நீர் ததும்ப அவள் கேட்டதும் விஸ்வம் பதறி விட்டார். 

“அம்மாடி. நான் போய் அப்படி நினைப்பனாம்மா. நீ இளவரசி மாதிரி வளர்ந்தவ. எங்க போறாத காலம் கடனை வாங்கி, உன்னை இந்த தறியில் வேலை செய்ய வச்சிட்டேன். நான் வாங்கின கடனை அடைச்சு, உனக்கு நகை நட்டு சேர்த்து, கல்யாண செலவுக்கு பணம் சேர்த்து எப்போம்மா ஒருத்தன் கையில் ஒப்படைக்கறது? அம்மான்னு ஒருத்தி இருந்தா கூட தைரியமா நான் இருப்பேன். அவளும் தான் நம்மளை கைவிட்டு போய்ட்டாளே.. மடியில் கனத்தை வச்சிட்டு பயப்படாம இருக்க முடியுமாம்மா?” 

“ஏன்ப்பா. கல்யாணம் தான் ஒரு பொண்ணுக்கு பாதுகாப்புன்னு நினைக்கிறீங்களாப்பா? எனக்கு இருபத்தி இரண்டு வயசுதான் ஆகுது. கொஞ்ச நாள்ல இந்த கடனை அடைச்சிட்டு இன்னும் இரண்டு தறி போட்டா, நாமளும் பழைய மாதிரி ஆகிடுவோம்ப்பா. அப்புறமா நகை, பணம்னு சேர்த்துக்கலாம். எதுக்கு இந்த அவசர கல்யாணம்..?” 

“ரதி.. பேச வேணா நல்லா இருக்கும்மா இதெல்லாம். கடனை அடைக்கவே ரொம்ப வருஷம் ஆகும்.. அதுவுமில்லாம முன்ன மாதிரி நிலைமை இப்போ இல்ல. பட்டுக்கு ஃபேமஸான ஊர்களை தேடி வாங்குன காலம் போய், இப்ப பெரிய பெரிய கடைகள்ல தான் மக்களும் வாங்க விருப்பப்படறாங்க.. எத்தனை பேர் லாபம் இல்லாம வந்த விலைக்கு தறியை வித்துட்டு வேற பொழப்ப பாக்கப் போயிட்டாங்க. இது நல்ல நேரம் போல.. பெரிய இடத்துல இருந்து உன்னை பொண் கேட்டு அவங்களே வந்து நிக்கிறாங்க. அந்த தம்பி சொன்ன மாதிரி மாதவன் தம்பி விளையாட்டு பிள்ளை தான். ஆனா படிச்சவன், தொழில் ஒன்னு கையில் இருக்கு, பார்க்கவும் அப்படி ஒரு அழகு.‌ கல்யாணம் ஆனா எல்லாம் மாறிடும் மா.. என்னால் நினைச்சு கூட பார்க்க முடியாத சம்பந்தம்மா.. என்னை பத்தி யோசிக்காத நீ. உன் வாழ்க்கைய பாரு. சரின்னு சொல்லும்மா.” 

விஸ்வம் சொல்ல சொல்ல, ரதிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே மாதவனை பார்த்திருக்கிறாள். பணத்திமிர் தாண்டவமாடும் அவன் பேச்சிலும், செய்கையிலும். அதுவுமில்லாமல் அவளுடன்  படித்த அத்தனை பெண்களிடமும் வம்பு வளர்த்திருக்கிறான். காதலிக்கிறேன் என்று சொல்லி இவள் பின்னும் சுற்றியிருக்கிறான். திரும்பிக் கூட பார்க்காத ரதியை திரும்பி திரும்பி பார்த்தபடி வண்டி ஓட்டி கீழே விழுந்தும் வாரியிருக்கிறான். அவன்‌ மேல் என்றுமே விருப்பமும் வந்ததில்லை, வெறுப்பும் வந்ததில்லை. எப்பொழுதும் அவள் மனம் முழுதும் படிப்பும், அவள் அம்மாவும் தான். அதனாலேயே அவனை கண்டுக் கொண்டதும் இல்லை. 

ஆனால் இப்பொழுது எப்படி இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்வது என்பதற்கு  தான் அவளுள் ஒரு சதுரங்க ஆட்டமே நடைப்பெற்றது‌. அவளே வியூகம் அமைத்தாள், அவளே சிக்கிக் கொண்டாள், அவளே வெற்றிப் பெற்றாள், அவளே தோற்றும் போனாள். இரு தரப்புமே அவளாக நின்று அவள் மனசாட்சியோடு மோதிக் கொண்டாள். விதியின் கையில் அவளின் தலைவிதி சிக்கியிருப்பது அவளுக்கு தெரியவில்லை. நூல் அதன் கையில், இவள் வெறும் பொம்மை தானே. எப்படியெல்லாம் அதன் ஆட்டம் இருக்குமோ அதற்கு ஏற்ப ரதி ஆடித் தானே ஆக வேண்டும். 

One thought on “நாயகியின் நாயகன் – 1

  • Ancemma joseph

    நல்ல ஆரம்பம்…all the best

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!