Skip to content
Post Views: 3,625

அத்தியாயம் 1
“அன்பின் விசித்திரங்களில் ஒன்று, அது திடீரென்று திரண்டு ஒரு சிறு பொதியென உருவெடுக்கும்! பொழிய வேண்டுமெனில் பொழிந்தே ஆகத் தோன்றும்! அது ஒரு பிடிவாத மேகம் !”
தென் தமிழகத்தின் கடற்கரையோர மண்டபம் என்னும் கிராமம். கடலின் உப்பு மணமும், தென்றல் காற்றின் மென்மையும் அந்த ஊரின் ஒவ்வொரு மூலையும் நிரப்பியிருந்தது. அந்த அழகான டூப்ளக்ஸ் வீட்டின் முன்புறம் முல்லைப்பூ கொடி பரவி இருக்க, காம்பவுண்ட் சுவரின் ஓரத்தில் இளஞ்சிவப்பு காகிதப்பூ மரம் பின்னிக் கிடந்தது. காற்று வீசும் போது, அதன் மெல்லிய இதழ்கள் மெதுவாக அதிர்ந்து, சுவரின் மீது நிழல் விளையாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தன.
Advertisement
மாலையின் மென்மையான ஒளியில் வீட்டு வாசலில் உள்ள இரும்புக் கிரில் கதவின் அருகில் அவள், ஆதிரை, நின்றிருந்தாள்.
மெரூன் நிற சிறு பொட்டு, வகிட்டில் குங்கும தீற்றல், நல்ல அடர்த்தியில் புருவம், காதுகளில் ஆண்டிக் வகையறாவில் சிறு மணிகள் தொங்கும் ஒரு ஸ்டட் , லினன் காட்டனில் புடவை, முழங்கை வரை அதற்கேற்றார் போல் கலம்காரி சட்டை, முகத்தில் மென்மையான ஒளி என மங்களகரமான ஒரு இந்த தலைமுறை தாய் ஆதிரை. அவளின் பார்வை தெருவின் முடிவை நோக்கி இருந்தது. காற்றில் ஒரு சிறிய பதட்டமும், அதனுடன் கலந்த பெருமிதமும் இருந்தது.
சிறிது தொலைவில் ஒரு கார் வந்து நின்றது. அந்த ஓசையை கேட்டு ஆதிரை யின் இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட கதவும் திறக்க, பள்ளி உடையில் சோர்வும் சந்தோஷமும் கலந்த முகத்துடன் ஒரு சிறுமி வெளியே இறங்கினாள். அவள் இன்று திருச்சியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் நடைபெற்ற இடைநிலைப் பள்ளி போட்டிகளில் கலந்து கொண்டு வந்திருந்தாள்.
Advertisement
அவளுடன் வந்த ஆசிரியர், குழந்தையை மெதுவாக வழிநடத்தி கொண்டு வந்து தாயின் அருகில் நிறுத்தினார். ஒரு நிமிடம் தாயை நோக்கி நம்பிக்கையூட்டும் புன்னகையுடன் தலைஅசைத்து, “நன்றாக செய்தாள்” என்று சொல்லும் பார்வையை விட்டார். பிறகு அமைதியாக திரும்பிச் சென்று காரில் ஏறி புறப்பட்டார்.
Advertisement
களைத்து துவண்டு இறங்கிய அந்த பட்டாம்பூச்சி ஆதிரையின் மகள் கண்மணி. கரு கருவென இரு பின்னல்,துறுதுறு கோலி குண்டு கண்கள்,
சிரிப்பில் குழந்தைத்தனம் மலரும், எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுமி அவள்.
“அம்மா.. எப்படி ம்மா இருக்க ?” என்றவாறே நுழைந்தாள் கண்மணி..
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டா… சொல்லு, எப்படி இருந்துச்சு எல்லாம்…?”
Advertisement
“ம்மா… பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வந்துட்டேன்! நீ சொன்ன அந்த விவேகானந்தர் quoteல(மேற்கோள்ல) தான் ஆரம்பிச்சேன்… எல்லாரும் ரொம்ப பாராட்டினாங்க. ஆனா கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு தான் மா…”
கண்மணிக்கு அப்படியே தாயின் ஜாடை. அவள் நடக்கும் விதத்திலும், பேசும் இனிமையிலும் கூட தாயின் நிழல் தெரிந்தது.
அடர் சிவப்பும் நீலமும் கட்டங்களாக ஒரு காலர் வைத்த சட்டையும் ஊன்றி கவனித்தால் பாவாடை என்று கூறமுடியாதபடி ப்ரில்கள் நிறைந்த ஒரு ட்ரவுசருமாய் இந்த கால பள்ளி சீருடைகளின் நேர்த்தியே தனி தான் எனும்படியான ஒரு உடை. இன்னும் சொல்லப்போனால் அந்த ட்ரவுசர் பாவாடையே தற்கால சமூகத்தின் சாதக பாதகங்களின் ஒரு குறியீடாக கொள்ளலாம் போலும்.
அவள் காலுறைகளை கழற்றியவாறே “அம்மா இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா ?இன்னிக்கு போயட்ரி competition(கவிதை போட்டி)நடந்ததில்ல, அதில ஒரு பையன் ரொம்ப நல்லா கவிதை சொன்னான் மா” என்றாள்.
கவிதை என்றதுமே சிறு கீற்று மின்னலென ஆதிரைக்குள் வேறு ஒரு ஆதிரை வந்து போனாள். ஒரு நிமிடம் ஆற்றுப்பட்டது போல பின் அமர்த்தலாய் கேட்டாள் “அப்படி என்ன வாசிச்சான் சொல்லு பார்ப்போம்””நல்லார்ந்ததுமா எல்லாமே குட்டி குட்டியா கேள்விகள் மாதிரி ..ரொம்ப பிடிச்சிச்சு மா.. லைக் ?” விடாது கொக்கி போட்டாள் ஆதிரை. லைக் …
மரம்…..?
நிழல் தரும் உயிர்!
சூரியன்…?
விடியலில் வரும் தீ!
நிசப்தம் …?
தற்பொழிவை
அசைபோடுகிற குழாய்ச்சொட்டு!
ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என்னவோ ரத்தமெல்லாம் வற்றி வடிந்து விட்டது போல வெளுத்து போய் தரை கீழ் நிலம் நழுவிய உணர்வில் அப்படியே அமர்ந்தாள் ஆதிரை.
இந்த வரிகள் …இதை தான் தன் கைப்பட எழுதிய தினங்கள்…. கண்முன் வந்து போயின..தட்டாமாலை சுற்றியது போல ஒரு இருபது ஆண்டுகள் பின்னோக்கி கூட்டி போனது சுழல்.
2006 ஜூன் மாதம் ….அவள் ஆராய்ச்சி கல்விக்கென புகழ்பெற்ற புதுவை பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அந்த நாட்கள் …….
வந்து சேர்ந்து ஒரு ஒரு வாரம் இருக்கும். கிராமத்து பெண்ணுக்கு அந்த நகரத்து சூழலும் அந்த பெரிய ஏக்கர் பல்கலை வளாகமும் புதியதாக இருக்க விழிவிரித்தே திரிந்தாள் ஆரம்ப நாட்களில். அங்கெங்கென நின்றிந்த பன்னீர் மரங்கள் அவளுக்குள் அத்தனை மலர்வை தந்தன. அதிலும் சுற்றி முற்றி யாரும் இல்லையெனில் தரையில் கிடக்கும் வெள்ளி பூக்களை கை கொள்ளாமல் அள்ளி அள்ளி தன் சைக்கிள் கூடையை நிரப்பி கொள்வாள். அன்றும் அப்படி நிரப்பி மனம் நிறைய மணமாய் தன் விடுதிச்சாலைக்கான வழியில் சைக்கிளுடன் திரும்பி நடக்க துவங்கியிருந்தாள். அந்த பின்மாலையும் முன்னிரவும் கலக்கும் பொன் அந்தி பொழுதும் அதில் குளித்து வதனம் மெல்ல காட்டும் நன்னிலவின் ஒளிச்சாரலிலும் அச்சாலை பூம்பொழிலாய் மாறி இருந்தது.
உள்ளூர இனம்புரியா ஒரு இதம் உணர்ந்தபடி மென்நடையில் அவள் இருக்க அவளின் அருகே வந்து ஒரு பைக் பிரேக்கிட்டது. திடுக்கிட்டு விழியுயர்த்தியவளின் இத்தனை அருகில் வேற்றுமனிதன் ஒருவன் நெடு நெடுவென வந்து நிற்க இன்னும் மிரண்டு போனாள் ஆதிரை. அவளின் மிக அருகில், இன்னும் அருகில் வந்து “சொல்லவேயில்லை” என்றான் அவன். அவள் விழித்து கொண்டிருக்கும் போதே தொடர்ந்தான்.
“ரோடை விலைக்கு வாங்கிட்டிங்களா” ? அவளுக்கு மெதுவாக மிகமெதுவாக தான் புரிந்தது. சாலையின் நடுவில் நடந்து வந்ததையும் அதை தான் அவன் சுட்டி காட்டிச்சென்றான் எனவும் உணர்ந்தாள். மெல்ல நகைத்து நடை தொடர்ந்தவளுக்குள் அவன் உள்நுழைந்திருந்தான் அவள் உணர்ந்தாள் இல்லை என்றபோதெனினும்!
ஆராய்ச்சி துறையில் தன் சீனியர் மித்ரன் அவனெனவும், இன்னும் இரு மாதங்களில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து, அவன் பிடிஎப் க்கு என சான்பிரான்ஸிஸ்கோ பறக்க இருப்பதையும் அறிந்தாள். அந்த இரு மாதங்கள் அவள் வாழ்வின் பொக்கிஷ மாதங்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் ஒரு ஆராய்ச்சியாளர்கள் கூடுகை. அதில் துறை சார்ந்த அத்தனை அறிவு ஜீவி பேராசிரியர்களின் முன்னிலையில் ஆராய்ச்சி மாணவர்கள் அவரவர் தலைப்புகளில் செமினார் எடுத்த வண்ணம் இருப்பர். முதல் முறை அந்த செமினார் கூடுகையில் சரியாய் அவன் பின்வரிசையில் அமர்ந்திருந்தாள் . அன்று கருந்துளை தொடர்பான செமினார் அதில் காலம் வெளி ஈர்ப்பு என அந்த மாணவன் எடுத்து முடிந்ததும் கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன . அதில் ஒன்று “காலத்தில் ஏன் முன்னோக்கி மட்டும் செல்லலாம் ? பின்னால் முடியாது ?” என்பதாக வந்தது. அந்த மாணவன் திகைத்து நிற்க பார்வையாளனாக அமர்ந்திருந்த மித்ரன் எழுந்தான். “காலத்தில் பின்னோக்கி நகரும் ஒவ்வொரு முறையும் இடமும் பின்னோக்கி நகரும். இடம் என்று சொல்லும்போது அதனுடன் தொடர்புபட்டிருந்த எல்லாத் திணிவுகளும் நகரும்..” என அவன் விளக்கத்துவங்க அரங்கம் முழுதும் எதிரொலித்த அவன் குரலில் பின் வந்த அரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை.அவன் தந்த விளக்கமும் அந்த உதாரணமும் இன்றும் நினைவில் நிழலாடியது.
உதாரணமாக நீங்கள் இன்று 8 மணிக்கு காலையில் வீட்டில் இருந்து 8.30 க்கு கோவிலுக்கு போகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். மீண்டும் காலத்தில் பின்னோக்கி நகர்ந்து வீட்டை அடைய நினைக்கிறீர்கள். நீங்கள் பின்னால் சென்று 8 மணிக்கு வீட்டை அடைந்து விட்டீர்கள். ஆனால் வீட்டுக்கு பின்னோக்கி காலப்பயணம் செய்யும் போது உங்களுடைய இன்னொரு பிம்பம் முன்னோக்கி நடந்து வரும். இப்போது வீட்டுக்கு வந்து விட்டீர்கள். மீண்டும் கடைக்கு நடக்கப் போகின்றீர்கள். மறுபடி நேரம் மணி 8–8.30 என வைத்துக்கொள்வோம்.
ஆனால் நீங்கள் மீண்டும் கடைக்குப் போகும் வழியில் முதலாவதாக கோவிலுக்கு சென்ற நீங்கள், காலத்தில் பின்னோக்கி வந்த நீங்கள், மீண்டும் தற்போது செல்லும் நீங்கள் என 3 உங்களை , நீங்களே காண்பீர்கள். இது சாத்தியமில்லை தானே?…
இந்த நா வன்மை மிக்க ஆளுமைகளிடம் யாருக்கு தான் ஒரு தனி பிரேமை வராது போகும் ? அதிலும் மித்ரன் வெறும் வாய் சவடால் போல் அல்லாது ஒரு கோட்பாடை கண்ட கோணமும் அதை விளக்கிய விதமும் ஆஹா ஓஹோ என்பதாக ஆவென வாய்பிளந்து பார்த்திருந்தாள் ஆதிரை.
பின் ஒவ்வொரு வாரமும் அந்த கூடுகைக்கு ஆர்வமாய் செல்லச்செல்ல அவன் பதில்களில், அதிலும் அதை விட யாராலும் விடை கூற இயலா அசாத்தியமாய் அவன் தொடுக்கும் கேள்விக்கணைகளிலும் அவன் அறிவின் தீட்சண்யத்தை கண்டுகொண்டாள். எல்லாவற்றையும் விட அவனும் அவன் நண்பர் இருவருமாய் செமினரின் இடைஇடையே அடிக்கும் ஜோக்குகள் இந்த 2K யுக மீம் ரகம், அத்தனையும் இயற்பியல் ஜோக்குகள் வேறு. அதிலும் ஒவ்வொரு கூடுகைக்கு பின்னரும் அவனிடம் அனைத்து ஆராய்ச்சி மாணவர்களும் ஆலோசனைகள் விளக்கங்கள் என கேட்பர். அவன் முகமலர்ந்து அவர்களுடன் கலந்துரையாடுவதையும் பேராசிரியர்கள் அவன் தோளில் கைபோட்டு நட்பு பாராட்டுவதும் ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் பார்க்க பார்க்க… மொத்தமுமாய் என்றெல்லாம் இல்லை தலை குப்புற அவனின் அறிவில் முதலில் வீழ்ந்தாள். பின் அவன் அத்தனையும் ரசிக்க ஆரம்பித்தாள். அவள் இப்படி காதலாகி கசிந்துருகும்பொழுது அவன் கிளம்பும் நாளும் வந்தது.
அன்றும் ஒரு வெள்ளிக்கிழமை . அவள் அந்த பன்னீர் மரத்தின் அடியில் தன் லேடி பேர்ட்சைக்கிள் ஐ சார்த்தி விட்டு வானம் இத்தனை வெறுமை தருமா என விழி நீர் உகுத்தபடி அமர்ந்திருக்க ஒரு கூட்டம் தன்னை கடப்பதை உணர்ந்தாள் . “டேய் முடிச்சுட்டு பின்னாடியே வந்திரப்போறோம், மஜா பண்றோமேன” சகா தோழர் குழாமும், “ அங்க போனதும் பீரும் போர்க்குமா ஆளே மாறிடாத” என நண்பிகள் குழாமும் “சீனியர் எங்களை மறந்திராதீங்க” என ஜூனியர் பட்டாளமுமாக நடந்து பொய் கொண்டிருந்தது மித்ரன் தான் . அவன் பழ்கலைக்கழக வாழ்வின் நிறைவு நாள் அது. “ஒரு முறை, ஒரே ஒரு முறை,திரும்பி பார்” என நெஞ்சம் கேட்பது கேட்டபடி அவள் நின்றிருக்க மிகச் சரியாய் அந்த தேவகணத்தில் மித்ரன் அவளை திரும்பி பார்த்தான்.
error: Content is protected !!