Skip to content
Post Views: 967
“கொஞ்சம் பொறு சந்தா.. எதுவானாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.!” வாத்சல்யன் அவளை அமைதிப்படுத்த முயன்றான்.
“இ..இல்ல..! இவங்க யாருமே நம்மளை மதிக்கல.. ஒரு குழந்தைதான் மனுஷங்களுக்கான அங்கீகாரத்தை தருதுன்னா.. குழந்தை பிறந்தால்தான் மரியாதை கிடைக்கும்னா.. நாம எதுக்கு வாத்சா நல்லவங்களா இருந்து மத்தவங்களுக்காக அக்கறைப்படணும்.”
“சந்தா..! நீ நினைக்கற மாதிரி இது சாதாரண பிரச்சனை இல்ல.. அந்த குழந்தையோட உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். இதுல ரிஸ்க் எடுக்க நான் தயாரா இல்லை.”
“அப்ப என் உயிர் போனா பரவாயில்லையா..?”
Advertisement
“சந்தா..!” காரை பிரேக் போட்டு நிறுத்தினான் வாத்சல்யன்.
“என்னடி பேசற? உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா..! இந்த மாதிரி நூறு பேர் ஆயிரம் பேர் பேசத்தான் செய்வாங்க. நாமதான் திடமா இருக்கணும். மனுஷன்னா வாழ்க்கையில் கஷ்டநஷ்டம் வரத்தான் செய்யும். இங்க ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை. குழந்தை இருக்கிறவங்களுக்கு மட்டும் வாழ்க்கையில எந்த கஷ்டமும் இல்லைன்னு நினைக்கிறியா..?”
“எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லை. எங்க வீட்ல என் அக்கா தங்கச்சிக்கு மத்தியிலேயே நான் அந்நியமா தள்ளி நிறுத்தப்பட்டுருக்கேன். எனக்கொரு குழந்தை இல்லன்னு ஆச்சி என்ன ஒதுக்கி வச்சுட்டாங்களா.. எப்படி வாத்சா..? அவ்வளவுதானா?” அலை பாய்ந்த விழிகள் அதற்கான விடை கிடைக்காமல் கண்ணீரை சிந்தின.. “அன்பு பாசம் உறவு இதுக்கெல்லாம் மதிப்பே இல்லையா..?”
Advertisement
வாத்சல்யன் மௌனமாக காரை எடுத்தான்.
Advertisement
“இந்த உலகமே நம்மளை ஒதுக்கி வச்சாலும் நாம அப்படி ஒரு முடிவை எடுக்க போறதில்லை..! ஒரு குழந்தை மரணிச்சுதான் நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்னா..” அவன் முடிப்பதற்குள்..
“எனக்கு வேணும்..! எனக்கு குழந்தை வேணும். என்னால இனிமே போராட முடியாது வாத்சா.! இவங்க அத்தனை பேர் முகத்திலயும் கரிய பூசணும்னு எனக்குள்ள ஒரு வெறி உருவாகுது.!”
“அதுக்காக ஒரு சின்ன உயிரை பலி கொடுக்க போறோமா..?”
Advertisement
“நீங்கதான சொன்னீங்க..! ஆற்றல் ஆவதுமில்லை அழிவதும் இல்லை..! ஒன்னு இன்னொன்னா கன்வெர்ட் ஆகுதுன்னு.! அப்படின்னா.. அந்த குழந்தை சாகறதா எப்படி அர்த்தமாகும்.! அவன் நம்மகிட்ட வரப்போறா..! அப்படி நினைச்சுக்கோங்களேன்.”
“ஆனா அந்த குழந்தையோட பெத்தவங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பு..! அந்த துயரம்.. புத்ர சோகம் பொல்லாதது சந்தா..!”
“நமக்கு சோகம் இல்லையா..? குழந்தை இல்லாம நாம அனுபவிக்கற மனக்காயங்களுக்கு யார் பொறுப்பேத்துக்கறது..?”
“உணர்ச்சிவசப்பட்டு நாம இப்படி ஒரு தப்பை பண்ணிட்டா காலம் முழுக்க நமக்கு மன்னிப்பே கிடையாது..”
“யார் நம்மள மன்னிக்கணும்..!”
“உன்னை நீயே மன்னிக்க முடியுமா..?” அவன் பார்வை அனலாக லக்ஷ்மியின் பக்கம் திரும்ப.. அவளிடம் பதில் இல்லை.
“இது தப்புனா கடவுள் ஏன் நமக்கு இப்படி ஒரு வரத்தை கொடுக்கணும்.?”
“கடவுள் நம்மள சோதிக்கறார் சந்தா..! உயிர் போற நிலையில கூட இந்த பாவத்தை பண்ணிடவே கூடாது. சுயநலம் வேண்டாம் லஷ்மி.! குழந்தையை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாரு.”
“யார் மேலேயும் எனக்கு எந்த அக்கறையும் இல்லை.! என்ன பத்தி யாரும் கவலைப்படாத போது நான் எதுக்காக மத்தவங்கள பத்தி யோசிக்கணும்.! எனக்கு மனசு இருக்கு.. எனக்கும் வலிக்கும்னு யாராவது நினைச்சு பார்த்தாங்களா..? வார்த்தைகளால.. உதாசீனங்களால குத்தி குத்தி மனசெல்லாம் ரணமாகி சீழ் வடியுது. நான் செத்துட்டு இருக்கேன். உங்களுக்கு என் வேதனை புரியவே புரியாது.!” லஷ்மி ஆக்ரோஷமானாள்.
“கடவுள் இப்படி ஒரு வரத்தை நமக்கு கொடுக்கலைன்னு நினைச்சுக்கோ சந்தா.! ஆப்ஷன் இருக்குன்னு யோசிக்கறதுனால தான்.. வலியும் வேதனையும் உன் கண் முன்னாடி பூதாகரமா உருவமெடுத்து நிக்குது.”
என்ன பேசியும் புரிந்து கொள்ளாதவனை வெறுப்பாக பார்த்தவள்.. “ச்சே! நான் இவ்வளவு சொல்லியும் என் வேதனை உங்களுக்கு புரியலைன்னா.. அப்ப நீங்களும் மத்தவங்க மாதிரிதான் வாத்சல்யன்.!” உதடுகள் துடிக்க சொல்லிவிட்டு மறுபக்கம் திரும்பி கொண்டாள் சந்தான லஷ்மி..!
பேசப்பேச வாக்குவாதம் பெரிதாகும்.. தீர்வு கிடைக்காது அவளுக்கு புரிய வைக்க முடியாது.! நிதானமாகட்டும். கோபம் தீரட்டும்.. பிறகு பேசிக் கொள்ளலாம்..! என்ற நினைப்போடு மேற்கொண்டு அவளோடு வாதிடாமல் மௌனமாக காரோட்டிக் கொண்டிருந்தான் வாத்சா.!
ஆனாலும் அங்கு நடந்த சம்பவம், அவள் பேசிய வார்த்தைகளின் ஆற்றாமையிலிருந்து வெளிவர முடியாமல் தவித்தான் வாத்சல்யன்..
“என்ன பேச்சு பேசறா..! அவமானப்பட்டுட்டாளாம்.. அந்த பாதிப்பு எனக்கு இல்லையா..? உன் வேதனை என்னை தாக்காதா..! நானும் நீயும் வேறா சந்தா..! உன்னை விட அதிகமா எனக்கு மனசு வலிக்குதுடி.. அதை நான் வெளிக்காட்டிக்க முடியுமா..! நாம என்னதான் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் ஒரு குழந்தை உயிரோடு விளையாடுவது எந்த விதத்தில் நியாயமாகும்.! சாரி சந்தா..! இந்த விஷயத்துல ஐ காண்ட் ஹெல்ப் யூ..! நீ என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை..” என மனதுக்குள் நினைத்துக் கொண்டு.. மறுபக்கம் திரும்பி கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்த மனைவியை கருணையோடு பார்த்தான் வாத்சல்யன்.
வாசலில் கார் நின்ற நேரம்.. எதிர் வீட்டில் அழுகையும் பேரிரைச்சலும் அவர்கள் செவிகளையும் கவனத்தையும் ஈர்க்க இருவரின் பார்வையும் ஒருசேர அந்த பக்கம் திரும்பியது.
வாசலில் நின்று இப்படியா சண்டை போட்டுக் கொள்வார்கள்..! குழந்தைகள் அழ அழ அவர்களை சுற்றி வந்து கொண்டிருந்தன.
அந்த வீட்டின் குடும்பத் தலைவனாகப்பட்டவன் மனைவி ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் சீறிக்கொண்டு அவளை அடிக்க பாய்ந்தான். இரண்டு பெரிய குழந்தைகளும் பயந்து அம்மாவின் சேலையை இறுக பற்றிக்கொள்ள.. மூன்றாமவள் தீப்தி அந்த டெடிபேரை கையில் வைத்துக்கொண்டு.. லேசாக விசித்து அழுவதும் பிறகு நிமிர்ந்து அவர்கள் முகம் பார்ப்பதுமாய் நின்றிருந்தாள்.
போவோர் வருவோர் நின்று வேடிக்கை பார்த்து செல்வது கூட தெரியாமல் அப்படி ஒரு குடும்பச் சண்டை.
“எல்லாரும் பாக்கறாங்க முதல்ல உள்ள வாங்க..!” அந்த பெண்மணி சுதாரித்து கணவனை உள்ளே அழைக்க அவனோ இறங்கி வருவதாய் இல்லை.
பேச்சுக்கு பேச்சு பதிலுக்கு பதில்..! அடிக்க வந்தவனை தடுக்க வந்த மகனை தள்ளிவிட்டான் அவன்.
“என்னங்க.. போய் என்னன்னு பாருங்க..!” லக்ஷ்மி கண்களில் கலவரம் கொண்டு சொல்ல..
“அவங்க குடும்ப விவகாரம்டி! நாம எப்படி தலையிட முடியும்.!” என்றான் வாத்சா..!
“குடும்பத்துக்குள்ள பிரச்சனைனா வீட்டுக்குள்ள வச்சுக்கணும்.. இப்படி வெளியே வந்து சண்டை போட்டா அக்கம் பக்கத்து ஆளுங்க தலையிடத்தான் செய்வாங்க.!”
“யாருமே தலையிடலையே.! சும்மா வேடிக்கை பார்த்துட்டு போறாங்க.. நாம மட்டும் எதுக்காக தேவையில்லாம உள்ளே புகுந்து அசிங்கப்படணும்.”
“அய்யோ! அந்த ஆளு அந்த பொண்ண கண்ணு மண்ணு தெரியாம அடிக்கறான்.. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட போகுது வாத்சா..! போய் என்னன்னு கேளுங்க..!” என்றபடியே கதவை திறந்து கொண்டு வெளியே இறங்கினாள் சந்தான லஷ்மி.
மத்தவங்க பிரச்சினை நமக்கு எதுக்கு? என்று ஒதுங்கி நின்ற வாத்சல்யனுக்கும் கூட.. அந்த ஆண் மனைவியை அடிக்க ஆரம்பித்த கணம் கோபம் வெகுண்டெழ கதவை திறந்து கொண்டு வேகமாக அந்த பக்கம் போனவன் மீண்டும் அடிக்கப் பாய்ந்தவனின் கையை தடுத்து பின்னுக்கு நகர்த்திக் கொண்டு போனான்.
“என்னை விடுங்க சார்..! இன்னிக்கு இவளை கொன்னுடறேன்..!” அவன் திமிறி கொண்டு போக..
“இருங்க சார்..! கைநீட்டி அடிக்கறது ரொம்ப தப்பு..! அமைதியா இருங்க.. ம்மா.. குழந்தைகளை கூட்டிட்டு வீட்டுக்குள்ள போங்க..! தெருவுல நின்னு சண்டை போடறீங்க..! எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்க.. பிள்ளைங்க அழறாங்க பாருங்க..! போங்க.. பிள்ளைங்கள முதல்ல சமாதானப்படுத்துங்க..!” அவன் கையை இறுக பற்றியிருந்த வாத்சல்யன் அந்த பெண்ணிடம் அதட்டலாக சொல்ல..
“ஆமா..! இதுங்கள சமாதானப்படுத்தறது ஒன்னுதான் குறைச்சல்.. எல்லா பிரச்சினையும் இதுங்களாலதான்..!” தன்னிடம் ஓடி வந்த பிள்ளைகளை தள்ளிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே போனாள் அந்த பெண்.
“என்ன சார் படிச்சவர்தானே நீங்க..! எல்லாரும் பாக்கறபடி நீங்களே இப்படி நடந்துக்கலாமா..! பாருங்க குழந்தைங்க எப்படி பயந்து போய் நிக்கறாங்கன்னு..” வாத்சல்யன் தன்மையான குரலில் கேட்க அவன் கையை உதறிவிட்டு..
“அட போங்க சார்..! வீட்டுக்கு வரவே எரிச்சலா இருக்கு..! மனுஷனுக்கு கொஞ்சங்கூட நிம்மதியே இல்ல சார்.! எந்நேரமும் ஏதாவது ஒன்னு சொல்லி நை.. நைன்னு புடுங்கிக்கிட்டே இருக்கா..! உலகத்திலேயே நான் செஞ்ச பெரிய தப்பு கல்யாணம் பண்ணி இந்த சனியனுங்கள பெத்துக்கிட்டது. பேசாம எல்லாத்தையும் தலைமுழுக்கிட்டு துறவறம் போலாமான்னு இருக்கு.!” கண்களை உருட்டிக்கொண்டு அவன் பைக்கில் ஏறி அங்கிருந்து சென்றுவிட.. அழுது கொண்டிருந்த பிள்ளைகளோடு வாத்சல்யனும் சந்தான லஷ்மியும் தனியாக நின்றிருந்தனர்.
இருவருக்குமே அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. பிள்ளைகள் இரண்டும் அங்கிருந்த சிமெண்ட் திண்டின் மீது விசும்பலோடு அமர்ந்துகொள்ள.. லக்ஷ்மியோ கையில் டெடிபேருடன் இருவரையும் பார்த்து கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்த தீப்தியிடம் போனாள்.
அவள் ஆசையோடு மெல்ல குனிந்து தனது கரத்தை தீப்தியின் கன்னத்தில் பதிக்கும் நேரம்.. கையை தட்டிவிட்டு அவளை கடந்து ஓடிப்போய் தனது அண்ணன் அக்காவுடன் அமர்ந்து கொண்டது சின்னது.
திரும்பி குழந்தையை முறைத்தவள் பெருமூச்செடுத்து.. “போகலாம் வாத்சா..!” என கணவனை அழைத்துவிட்டு அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்தாள்.
இதோ ஊரிலிருந்து வந்து இரண்டு நாட்களாகிப் போனது..
சந்தான லஷ்மி தன் கணவனிடம் பேசுவதே இல்லை.. அவள் விலகலும் புறக்கணிப்பும் வாத்சல்யனை தாங்கவே இயலாத கொடுமையான நிலைக்கு இட்டுச் சென்றது.
சுவாசம் தடைப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை போல் தவித்துப் போகிறான்.
“இப்படி பேசாம இருக்காதடி.. வேணும்னா திட்டிக்கோ அடிச்சுக்கோ..! ஆனா இது பெரிய தண்டனை..!” என்றான் அவள் பின்னாலயே சுற்றி வந்து..
“நான் எதுக்காக உங்களுக்கு தண்டனை கொடுக்கணும்..! அதான் அந்த கடவுளும் இந்த உலகமும் சேர்ந்து என்னை தண்டிச்சிருச்சே!”
“விரக்தியா பேசாதடி..! கடவுள் நல்ல வழி காட்டுவார்.”
“கடவுள் காட்டிய வழி கண் முன்னே இருந்தும் அதை நிறைவேத்திக்க முடியலைன்னா.. அப்புறம் இதைத் தான்டி வேற என்ன வழி இருக்க போகுது.!”
“மத்தவங்க உனக்கு கொடுக்கற காயங்களை விட.. நீ எனக்கு மிகப்பெரிய வலியை தர்ற லஷ்மி..! எனக்கு உன்னை விட்டா யாரடி இருக்காங்க.. எல்லா நேரத்திலும் உன் கூட நான் இருந்திருக்கேன். ஆனா நீதான் என்னை புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்தற.!”
“நீங்கதான் என்னை புரிஞ்சுக்கல..! என்னை இரக்கமே இல்லாத ராட்சசின்னு நினைக்கறீங்க.! எனக்கு ஒரு விஷயம் புரியல..! இந்த உலகத்துல குழந்தை பாக்கியம் இருக்கிற எல்லாரும் ரொம்ப நல்லவங்களா..! நாமதான் பாவிகளா..? யார் மனசையும் காயப்படுத்தக் கூடாது ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சுப் பேசணும்னு நினைக்கற எனக்கு தான் இந்த பிரச்சனையெல்லாம்! ரொம்ப ஈசியா அடுத்தவங்களோட குறையை சுட்டிக்காட்டி புண்படுத்திட்டு போறவங்க நல்லாத்தானே இருக்காங்க.. அப்புறம் நான் எதுக்காக நல்லது கெட்டது யோசிக்கணும்.. எனக்கு எது வேணுமோ அதைத்தான் நான் கேட்பேன். சில நேரங்கள்ல சுயநலமா இருக்க வேண்டியது அவசியமா போகுது வாத்சா.!”
“அந்த குழந்தை..?” அவன் கண்களில் சோகம் மின்னியது.
“அந்த சண்டையை பாத்திங்களே! பெத்த குழந்தைகள அம்மாவும் அப்பாவும் சனியனுங்கன்னு சொல்றாங்க..! பிள்ளைகளோட அருமை தெரியாத அவங்க கிட்ட தீப்தி வளர்றதை விட.. அவன் நமக்கு மகளா பொறந்து இளவரசியா வாழறது எவ்வளவோ மேல் இல்லையா..!”
வாத்சல்யன் மௌனமாக அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொள்ள..
“நான் சொல்லல..! உங்களுக்கு என் வலி புரியாது. யார் என்னை என்ன பேசினா என்ன.. நீங்க கௌரவமா கம்பீரமா ஆம்பளையா நெஞ்ச நிமித்திக்கிட்டு தானே வலம் வர்றீங்க..! உங்களை யாரும் மலட்டு மாடு மலட்டு முண்டம்ன்னு திட்டலையே..! சாவுக்கு நிகரான மன உளைச்சலை நீங்க அனுபவிக்கலையே..! சந்தோஷமாத்தானே இருக்கீங்க. நான் இல்லேன்னா கூட இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களால சந்தோஷமா வாழ முடியும்..”
பேசாமல் படுத்துக் கொண்டிருந்தவன் விருட்டென எழுந்து அடிப்பதற்காக கையை ஓங்கி விட்டான்.
“நான் அவமானப்படலையா..! என்னை யாரும் குறை சொல்லி பேசலையா..! உனக்கு தெரியுமா.. குழந்தை இல்லைனா பொம்பளைய மட்டும் இல்ல.. ஆம்பளைய கூட இந்த உலகம் சும்மா விட்டு வைக்கிறதில்ல..! வெளியே சொல்ல முடியாத அளவுக்கு தினம் தினம் யாராவது ஒருத்தன் என்னை அசிங்கப்படுத்திட்டுத்தான் இருக்கான். ஆனா அதையெல்லாம் சொல்லி உன் மனச மென்மேலும் நான் வேதனைப்படுத்த விரும்பறதில்ல..! நானும் தினம் தினம் வந்து உன் மடியில படுத்து அழுது புலம்பியிருந்தா என் கஷ்டம் உனக்கு புரிஞ்சிருக்கும்.!” கண்ணீர் திரை கட்டிய அவன் கண்களை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் லஷ்மி.
“வாத்சா..!”
“இப்ப என்ன..! உனக்கு குழந்தை வேணும் அவ்வளவு தானே..! எடுத்துக்கலாம்.” வாத்சல்யன் இப்படி சொல்ல சந்தான லஷ்மியின் கண்கள் விரிந்தன.
“ஆனா ஒன்னு எல்லாம் முடிஞ்ச பிறகு.. குற்ற உணர்ச்சியா இருக்கு அந்த குழந்தையோட முகத்தை பார்க்கவே பாவமா இருக்குன்னு என்கிட்ட வந்து அழுத..!” பற்களை கடித்துக் கொண்டு கண்களை உருட்டியவன்.. மெல்ல இமைகளை மூடித் திறந்து.. “உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன். நல்லா யோசி.. அப்புறமும் நீ அந்த முடிவுல ஸ்ட்ராங்கா இருந்தா.. என்கிட்ட வந்து சொல்லு..! நீ என்ன சொன்னாலும் நான் உன் பக்கம் நிப்பேன். உனக்கு துணையா இருப்பேன்.” சொல்லி முடித்துவிட்டு மீண்டும் முதுகு காட்டி படுத்துக் கொண்டான் வாத்சல்யன்
தொடரும்.
error: Content is protected !!
Unmai tha…. Intha mari responsibility eduthukatha kumutaigaluku ethuku kolanthainga… Ithugalukulla set agaleanna pillaigala thitungala…
Antha sanniyasam pora dashhhhuuuu munadiea poi tholaiya vendi thana …. Family nu vantha selavu iruka tha seium
But Santhu konjam nala yosichu nala mudiva edu 💗
Ippadi oru stiuation yaarukumae vara kudathu
Irukkavanuku arumai teriyala
Illadhavangala ulagam kuttram solludhu 🙄🙄🙄🙄🙄
அடக்கொடுமைய உங்க ரெண்டு பேருக்கும் இடையே நடக்கும் சண்டைல பாவம் அந்த பச்சை குழந்தைகள் என்ன பாவம் பண்ணிச்சு பெத்தவங்க ரெண்டு பேரும் இப்படியா பேசுவிங்க 😠😠😠
சாந்தா நீ ரொம்ப emotional la முடிவு பண்ற கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு வாத்சாவும் ரொம்ப பாவம் அவனுக்கும் கஷ்டம் இருக்கு உன்னோட வேதனை புரியுது அவசரப்பட்டு எதாவது பண்ணிடாத 😔😔😔
இந்த சின்ன வாண்டு ஏன் சாந்தா வை பார்த்தாலே இவ்வளவு கடுப்பாகுது 🙄🙄🙄