Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

75. இந்த்ரவாணி - நாயகியின் நாயகன்

நாயகியின் நாயகன்- 2

விடியலின் சப்தங்கள் வேறு வேறாக இருப்பது போலவே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வெவ்வேறாகவே விடியும். 

தோட்டத்தில் மலர்ச்செடிகளுக்கு நடுவே வைத்திருந்த அகலமான மண் தட்டில் பறவைகளுக்கு தானியங்களும், மற்றொரு தட்டில் நீரும் வைத்து விட்டு, கை நிறைய பூக்களை பறித்துக் கொண்டு வீட்டுக்குள் திரும்ப யத்தனித்தவளுக்கு காரின் ஹார்ன் சத்தம் கேட்டது‌.



Advertisement

பார்த்தவுடனே அது ராமச்சந்திரனின் கார் என்று தெரிந்தது. 

பதட்டத்துடன் ஓடிப்போய் அவளின் தந்தையை அழைத்தாள். 

Advertisement

Advertisement

விஸ்வமும் வாசலுக்கு வர, ராமச்சந்திரனும் காஞ்சனாவும் உள்ளே வர சரியாக இருந்தது.

“வாங்க வாங்க” பதட்டத்தில் வேறு வார்த்தைகள் எழவில்லை விஸ்வத்திற்கு. 

Advertisement

ராமச்சந்திரனின் முகம் அஷ்டகோணலாக ஆனது. அவர்களின் வீட்டிற்கு ஏற்கனவே வந்திருப்பவர் தான். ஆனால் இப்போது தனக்கு சரிக்கு சரியாக நிற்கப் போகும் சம்பந்தி வீட்டினை பார்க்க பார்க்க அவருக்கு கடுப்பாக வந்தது.

மூத்த மருமகள் ரேணுவின் வீட்டை நினைத்துப் பார்த்தார். மார்பிளாலேயே இழைத்த அரண்மனை அது‌. இருபது வருடங்களாக ஆட்சி மாறினாலும் ரேணுவின் அப்பா இதுவரையில் தோற்றதேயில்லை. அந்த செழிப்பு வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் தெரியும். 

இருவரும் பால்ய கால நண்பர்கள் என்பதாலேயே இந்த சம்பந்தம் நடைப்பெற்றது. இப்பொழுது ரேணுவின் அப்பா பக்கத்தில் விஸ்வத்தை நிறுத்திப் பார்க்க கூட ராமச்சந்திரனுக்கு பிடிக்கவில்லை. 

உள்ளே நுழைந்ததுமே, காஞ்சனா, 

“காலையிலேயே குளிச்சு வீட்டை இவ்வளவு சுத்தமா வச்சிருக்கியே..  படிச்ச பொண்ணாச்சேன்னு யோசிச்சேன். பரவால்ல வீட்டுப்பழக்கத்தெல்லாம் விடாம செய்யறியே..” பாராட்டியபடியே ரதியின் அருகில் வந்து நின்றார். 

“என்னங்கய்யா இவ்வளவு காலையில் நீங்களே வந்திருக்கீங்க? தம்பி மருதன் தான் வரேன்னு சொல்லிட்டு போனாரு.” விஸ்வம் கேட்டதும், 

“உம்மக தான் கல்யாணத்தில விருப்பமில்லன்னு சொன்னான்னு மருதன் வந்து சொன்னான். அதை கேட்டு மாதவன் நைட்டு முழுக்க ரகளை பண்ணிட்டான். ஏற்கனவே இவளைத்தான் கட்டுவேன்னு ராப்பகலா குடிச்சிட்டு அமர்க்களம் பண்ணினான். இப்ப விஷத்தை குடிச்சிடுவேன்னு ஒரே வம்பு. அவனை சமாதானமாக்கி உட்கார வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. அதான் எப்படா விடியும்னு காத்திருந்து நாங்க வந்துட்டோம். “ 

அவர் சொல்லும் போதே தகப்பனை பார்த்தாள் ரதி. அவர் தலைக்குனிந்துக் கொண்டார். 

ராமச்சந்திரனே தொடர்ந்தார்.

“இந்தாம்மா பொண்ணு… என் பையன் ஆசைப்பட்டா அதை நிறைவேத்தி வக்கறது தான் என் பழக்கம். அது வேணும் இது வேணும்னு அடம் பிடிச்சவன், இப்ப நீ வேணும்னு அடம் பிடிக்கிறான். ஊரைத் தாண்டி நாலு இடத்துக்கு போய் வந்தா தானே உன்னை விட பேரழகிலாம் இந்த உலகத்துல இருக்கான்னு தெரியும். என்னமோ காணாதத கண்டவன் மாதிரி இப்படி அமர்க்களம் பண்ணிட்டு இருக்கான். சரி அதை விடு. உனக்கு உங்கப்பாவை பத்தி தான் கவலைன்னு மருதன் சொன்னான். 

அதைப்பத்திலாம் யோசிக்காத. நகை, நட்டுன்னு நானே போட்டுடறேன். என் கௌரவத்துக்கு எந்த குறையும் வந்திடக் கூடாதுல்ல. 

கல்யாண செலவும் அப்படித்தான். நானே பார்த்துக்கறேன். வேற என்ன பிரச்சினை உனக்கு.?” 

ரதி பதில் சொல்ல வாயெடுக்கும் முன்,

“கடனை பத்தி யோசிக்கறியா..? இருபத்தெட்டு லட்சம் அசல் மட்டுமே. வட்டி அப்படி இப்படின்னு உங்கப்பா தந்துட்டு தான் இருக்கார். ஆனா முழுசா செட்டில் பண்ணனும்னா எங்க போவார்? அதுவுமில்லாம நான் யாருக்கும் இரண்டு வருஷத்துக்கு மேல கடனை அடைக்க டைம் கொடுத்ததில்லை. உங்கம்மா உடம்பு சரியில்லன்னு வாங்கின கடன். அதான் நானும் கட்டாயப்படுத்தல. ஆனா இப்ப இந்த கல்யாணம் நடந்துட்டா நான் அதை காலத்துக்கும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நான் வரதட்சணை கொடுத்து பொண்ணு எடுத்ததா நினைச்சுக்கறேன். என்ன சொல்ற? “ 

மீண்டும் ரதியை கேட்டவர், 

அவள் பதிலை யோசிக்கும் முன், 

“என்னய்யா விஸ்வம்? நீ வேறெதுவும் எதிர்ப்பார்க்கிறியா? கடனை இப்ப வேணாம்னு சொல்லிட்டு நாளைக்கு கல்யாணம் ஆனதும் கேட்பேன்னு பயம் வேணாம். இந்தா கொஞ்ச நேரத்தில் ஊர்‌ப்பெரிய மனுஷங்களை வரச் சொல்லியிருக்கேன். அவங்க வந்ததும் நீ கையெழுத்துப் போட்டிருக்க பாண்ட் பேப்பரெல்லாம் உன்கிட்டயே கொடுத்துடறேன். வேற என்ன பிரச்சினை உன் மவளுக்கு?” 

ராமச்சந்திரன் அதிகாரத் தோரணையில் சொல்ல, விஸ்வம்,

“இவ்ளோ நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஒரு பிரச்சினையும் இல்லைய்யா. அவ சின்ன பொண்ணு இல்ல. அவ்ளோ பெரிய வீட்ல வந்து வாழனும்னு நினைச்சு பயப்படறா.. நான் சமாதானப்படுத்தறேன்”

விஸ்வம் சொல்லும்போதே ரதிக்கு ஆத்திரம் ஒரு பக்கம், தன் மேலேயே வந்த கோபம் மறு பக்கம் என அவளின் முகம் பாவனைகளை வெளிப்படையாக காண்பித்தது. 

“ரதி. நீ ஒன்னும் பயப்படாத. நான் வாழ வரப்ப கூட நாங்க ஒன்னும் பெரிய பணம், வசதின்னு வாழ்ந்தவங்க இல்ல.. பெரியவங்க என்ன சொன்னாங்களோ அதை அப்படியே கேட்டுக்கிட்டதால தான் நாங்க நல்லா இருக்கோம். நல்லதை உடனே செஞ்சிடனும்னு சொல்வாங்க. சட்டு புட்டுன்னு சரின்னு முடிவை சொல்லு.இன்னிக்கே கூட ஒப்புத்தாம்பூலம் வச்சிக்கலாம்.” 

‘இதென்ன எல்லாரும் என் வாழ்க்கைக்கு அவர்களின் முடிவை சொல்கிறார்கள். சரி என்று சொல்லி விட்டு நாளை வாழப்போவது நான் தானே. எல்லாவற்றையும் கடந்து செல்லப் போவது நான் தானே. இவர் மகன் ஆசைப்பட்டால் நான் கழுத்தை நீட்ட வேண்டுமா என்ன? எனக்கு அவரைப் பிடிக்க வேண்டுமே!’ 

பல சிந்தனைகள் மின்னல் வேகத்தில் ஓடின. 

“இல்ல. நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா நான் இன்னும் முழுசா என் கல்யாணத்துக்கு தயாராகல. அதுவுமில்லாம எங்க கடனை நாங்க எப்படியாவது அடைச்சு தானே ஆகனும். இந்த கல்யாணத்தை காரணம் வச்சு அதை கழிச்சுக்க எனக்கு விருப்பமில்ல. கொஞ்சம் டைம் கொடுங்க, நான் எல்லாத்தையும் அடைச்சிடறேன்” தலை நிமிர்ந்து அவள் சொல்லும் போதே எரிச்சல் மண்டியது ராமச்சந்திரனுக்கு.

“விஸ்வம்…” அவர் கத்தியதில் அந்த சின்ன வீடு அதிர்ந்தது. விஸ்வமும், ரதியும் உள்ளுக்குள் பயந்தனர். 

“இவ்ளோ சொல்லியும் உன் பொண்ணுக்கு புரியல இல்ல. ஏன்மா, கடனை அடைக்கிறேன்னு சொல்றியே அது எத்தனை வருஷத்து கடன் தெரியுமா? அதுக்கு உங்கப்பா எவ்ளோ வட்டி கொடுத்திருக்கார்னு எதாவது தெரியுமா? போனாப்போவுது, என் மவன் ஆசைப்பட்டுட்டானேன்னு இறங்கி வந்து பேசுனேன் பாரு, என்ன சொல்லனும். இங்க பாரு விஸ்வம், கல்யாணம் வேணான்னா என் பையன் நாலஞ்சு நாள் கிடந்து கூத்தடிப்பான். அப்புறம் நான் பாத்து ஒரு கழுதையா கட்டறான்னா வழிக்கு வந்து தான் ஆவனும். இன்னும் ஒரு வாரத்துல உன் கடனை பைசல் பண்ணு. இல்லன்னா, இந்த இரண்டு தறியோட உன் குருவிக்கூடு வீட்டையும் என் பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணிக்குடு. அதுக்கப்புறம் இரண்டு பேரும் உழைச்சு மாசம் மாசம் எனக்கு கப்பம் கட்டுங்க. அதுக்கே உன் பொண்ணுக்கு முப்பதுக்கு மேல ஆயிரும். அப்ப எவன் அவளை கட்டுறான்னு நான் பாக்கிறேன். ஏய் வாடி போலாம். எவனையும் வர வேணாம்னு சொல்லிடறேன்” என்று விருட்டென்று எழுந்து வெளியே சென்றார் ராமச்சந்திரன்‌.

ரதியை திரும்பித் திரும்பி பார்த்தபடி வெளியே வந்தார் காஞ்சனாவும். 

ராமச்சந்திரன் ஊர்ப்பெரியவர்களுக்கு அழைத்து வர வேண்டாம் என சொல்லலாம் என முடிவெடுத்து அலைபேசியை எடுத்தவருக்கு, பதில் அழைப்பு மருதனிடம் இருந்து வந்தது. அவனிடம்  நடந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தார். 

அதற்குள் விஸ்வம் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். 

“அப்பா.‌ விடுங்கப்பா. எல்லாத்தையும் கடந்து வந்துட்டோம். இதையும் கடந்திடலாம்ப்பா. என்ன இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும். எனக்கு காலத்துக்கும் கல்யாணமே ஆகலைன்னாலும் பரவால்லப்பா” என்று அவரின் கைகளை பிடித்துக் கொண்டு ரதி கூறினாள். 

“ஏன்ம்மா. தறியையும், வீட்டையும் அவர் பேருக்கு எழுதிக் கொடுத்துட்டு நான் எப்படிம்மா உன்னை கரை சேர்ப்பேன்? கையாலாகாதவனுக்கு மகளா பொறந்திட்டியே? அவங்களை எதுத்தும் நிக்க முடியல. வாங்கின கடனை எடுத்து மூஞ்சில வீசவும் முடியல. உங்கம்மாவோட நானும் போய் சேர்ந்திருக்கனும். இன்னும் என்னலாம் பாக்க வேண்டி இருக்குமோ? அந்த பெரிய நாயகிக்கு காது தான் கேட்காதுன்னு நினைச்சேன். கண்ணும் தெரியாது போல! இன்னும் நம்மளை எவ்ளோ தான் சோதிப்பா?” 

இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக அழுதுக் கொண்டு இருந்தனர். 

மருதன் என்னவோ சமாதானப்படுத்த தலையை ஆட்டிக் கொண்டு ராமச்சந்திரன் கிளம்பினார். அவருடன் காஞ்சனாவும் கிளம்பி ஓடினார். 

கார் சத்தம் காதிலிருந்து தொலைவில் சென்றதும் ஒரு தற்காலிக நிம்மதி வந்து அமர்ந்தது ரதியின் முகத்தில். 

‘எவ்வளவோ இழப்பை பார்த்து விட்டோம். இனி எது வந்தாலும் சமாளிப்போம்’ வைராக்கிய மனது உரைத்தாலும் கடனை அடைக்கவில்லையென்றால்  இந்த வீடும், தறிகளும், கூடவே அப்பாவின் மானமும், போகப்போவதை நினைத்து உள்ளுக்குள் குமைந்துப் போனாள். 

எதிரே தெரிந்த தாத்தாவின் புகைப்படம், ‘ஒரு நொடியில் கூட அற்புதம் நடந்து விடும் செல்லம்.. கவலைப்படாத. உனக்குத்துணையா பெரிய நாயகி இருக்கா. ஒரு குறையும் வராது’ என்று அசரீரி போல் சொல்வதாகத் தோன்றியது ரதிக்கு. கூடவே ஒரு விரக்தி சிரிப்பும் தோன்றியது. 

*****

ஆயிற்று, இதோ நாளை ராமச்சந்திரன் கொடுத்த கெடு முடியப்போகிறது. அவளின் தந்தையை ஏறெடுத்தும் பார்க்க அவளுக்குத் தோன்றவில்லை. 

‘இன்று இந்த புடவைகள் விலைப் போனால் இந்த மாதத்தின் தவணையை கொடுத்து விட்டு, ராமச்சந்திரனிடம் இன்னும் கொஞ்ச அவகாசம் கேட்கலாம். இல்லையென்றால், மருதன் ஓரளவு தன்மையாக தானே பேசினார். அவரிடம் பேசிப் பார்க்கலாம்’ சிந்தனைகள் பலவாறாக ஓடியது உள்ளுக்குள். 

அதற்குள் படப்படப்பாக மருதன் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தான். கும்பிட போன தெய்வம் நேரே வந்து கதவை தட்டியது போல் தோன்றியது ரதிக்கு. அனிச்சையாக தாத்தாவின் படத்தை பார்த்தன அவளின் கண்கள். 

கூடவே ஊர்ப்பெரியவர்கள் சிலரும், ராமச்ந்திரனும் அவன் பின்னே உள்ளே நுழைய, ஒரு நொடிக்குள் அவளின் நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்தது. 

மறுபடியும் தாத்தாவின் படத்தை பார்த்தாள். உதடுகள் உள்ளுக்குள் துடித்தன. 

“ரதி. மாதவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான் மா. காலைல அவன் உரக்கடையில மருந்து எடுத்து குடிச்சிட்டுருக்கான். நாங்க போய் பாக்கறப்ப நுரைத்தள்ளிக் கிடந்தான் மா. துடிச்சிட்டோம் நாங்க.” பதட்டம் அவனின் முகத்தை சிவக்க வைத்திருந்தது. வார்த்தைகள் தடுமாறி வந்தன. அவனின் கால்கள் வியர்வையில் நனைந்ததை உடலோடு ஒட்டியிருந்த அவனது கால்சட்டை தெரிய வைத்தது. இத்தனையும் கவனித்தவளுக்கு அவன் உண்மையை தான் சொல்கிறான் என்று புரிந்தது. லேசாக அவளுள்ளும் பதட்டம் வந்தது. ‘தனக்காக ஒருவன் விஷத்தை குடிப்பானா? அந்த அளவுக்கு காதலா தன் மேல்..!’ ரதியின் முகம் வியர்வையில் நனையத்தொடங்கியது. ராமச்சந்திரனை பார்த்தாள்‌.

அவர் முகம் இறுகி, நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தார். 

“ஏன்ப்பா விஸ்வம். இவங்க வீட்ல தான் போன வாரமே வந்து பொண்ணு கேட்டுருக்காங்களே. நீ அப்பவே சரின்னு சொல்லியிருக்கலாம் இல்ல. அந்த பையனுக்கு ஒன்னுக்கிடக்க ஒன்னாயிருச்சுன்னா நீயா பதில் சொல்லுவ?” ஊர்ப்பெரியவர் விஸ்வத்திடம் தன் நாட்டாமைத்தனத்தை கேள்வி கேட்டுத் தொடங்கி வைத்தார். 

ரதிக்கு ‘இது என்ன ஒரு பக்க சார்பாக இவர்கள் பேசுகிறார்கள்’ என்று ஆயாசமாக இருந்தது. 

அதற்குள் இன்னொருவர், 

“விஸ்வம் ஊருக்குள்ள தேடினாலும் இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்குமா? எந்த தைரியத்தில் நீ வேணாம்னு சொன்ன? நாளைக்கு இப்பேர்பட்ட சம்பந்தத்தை உன்னால் கொண்டு வந்து நகை நட்டுன்னு எதுவும் போடாம கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா? அவருதான் உன் கடனை கூட திருப்பி குடுக்க வேணாம்னு சொன்னாராமே..இன்னும் என்னய்யா பிரச்சினை?” அவர் பாட்டுக்கு அடுத்த அஸ்திரத்தை எய்து விட்டு அவர்களை பார்த்தார். 

விஸ்வத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 

“அது.. அது வந்துங்க. என் பொண்ணு இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுச்சு. அதான் இப்ப பேச வேணாம்னு பாத்தேன்” எப்படியோ தட்டுத் தடுமாறி விஸ்வம் சொல்லி விட்டார். 

“அட அறிவிருந்தா சின்ன பிள்ளை பேச்சை கேட்டுட்டு வேணாம்னு சொல்லுவியா? அவங்க மூத்த சம்பந்தி எம்.எல்.ஏ. அப்படியிருக்கப்ப உன் கூட சம்பந்தம் பண்ண இறங்கி வந்திருக்கார். உன்னால அவர்ட்ட வாங்கின கடனை உடனே அடைச்சிட முடியுமா? ராமச்சந்திர ஐயா. நீங்க விஸ்வம் வாங்கின கடன் பத்திரத்தை எல்லாம் குடுங்க. எங்க முன்னாடி கிழிச்சு போடுங்க. விஸ்வத்துக்கு நல்லது கெட்டது எதுவும் யோசிக்க தெரியல. அவங்கப்பாவுக்காக நாங்க அவன் கூட இருந்து, நல்லது கெட்டதை நாங்க தலையிட்டு பாத்துக்கறோம். நீங்க ஆக வேண்டியதை கவனிங்க.” அடுத்த நாட்டாமை தீர்ப்பு சொல்லி முடித்து வைத்தார். 

விஸ்வம் கைகளை பிசைந்துக் கொண்டு ராமச்சந்திரனையும், ரதியையும் மாற்றி மாற்றி பார்த்தார். 

ரதி என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்தாள்‌.

மருதன், “ரதி டாக்டர் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு அப்சர்வேஷன்ல தான் இருக்கனும்னு சொல்லிட்டார் மா. நீ கொஞ்சம் யோசிச்சு பாரு. நாங்க உனக்கு கெட்டதை நினைக்கல. உன்னை ஒரு மகளா, எங்க வீட்ல பாத்துப்போம். கொஞ்சம் மனசு வச்சு மாதவனுக்காக சரின்னு சொல்லு. என் தம்பியை இந்த நிலைமையில் பாக்க எங்க யாராலயும் முடியல.” மருதன் சொல்லும்‌போதே ரதிக்கு விக்கல் வந்தது. 

அவளின் முகம் வெளிறியது. விஸ்வம் ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அவளுக்கு அவசரமாக தந்து, அவளின் முதுகை தடவிக் கொடுத்தார். 

“அது பாப்பா ரொம்ப பயந்தா, அதிர்ச்சியானா அப்படித்தான் விக்கல் வரும்யா. அதை அபப்டியே விட்டுட்டா அவளுக்கு மயக்கம் வந்திடும்” விஸ்வம் அவசரமாக சொல்ல, 

“பாத்தியா.. ஏற்கனவே உன் பொண்டாட்டிக்கு வைத்தியம் பாத்தே இந்த நிலைக்கு வந்திட்ட, இப்ப உன் மவளுக்கு வேற இந்த வியாதியா? ராமச்சந்திரன் ஐயா.. இதை பத்தி உங்களுக்கு தெரியுமா..? இந்த பொண்ணுக்கு…” வந்தவரில் ஒருவர் இழுக்க, விஸ்வத்திற்கு தலை சுற்றியது. 

‘நாளை ரதிக்கு ஏதோ தீராத வியாதி இருப்பதாக கதை கட்டி விட்டால் அவளை திருமணம் செய்ய யார் வருவார்கள்’ பதட்டம் அவரின் நெஞ்சுக் குழியை காயச்செய்தது. 

“அய்யோ என்னங்க இப்படி சொல்றீங்க.? இது வியாதி இல்ல. அவ பதட்டப்பட்டா விக்கல் தான் வரும். தண்ணி குடிக்க டைமானா மயங்குவா, அவ்ளோதான்.. இப்படி எதாவது சொல்லி என் பிள்ளை வாழ்க்கைல மண்ணை அள்ளி போட்றாதீங்கய்யா..” 

“அப்புறம் எதுக்கு இன்னும் இழுத்துட்டு இருக்க. சட்டுனு கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லு. உன் மகளை கூட்டிட்டு போய் மாதவன் தம்பியை பாத்துட்டு வந்துடு. அவர் பிழைச்சு எழுந்ததும் கல்யாணத்தை வச்சுக்கலாம். ராம்ச்சந்திரன் ஐயா, நாள பின்ன நீங்க விஸ்வத்திட்ட காசு எதுவும் கேட்க கூடாது. அவன் பணத்துக்கு என்ன கையெழுத்து வாங்கினிங்களோ அது எதுவும் செல்லாது. நாங்க தலையிட்டு சொல்லியிருக்கோம் நாளைக்கு பிரச்சினை எதுவும் வந்திடக்கூடாது. முதல்ல ஹாஸ்பிட்டல் போய்ட்டு இந்த பொண்ணு வாயாலேயே அவர்ட்ட சம்மதம் சொல்ல சொல்லுங்க. தம்பி தைரியமா எழுந்து உட்காந்துடுவாப்ல. என்ன விஸ்வம் சரியா. மருதா, அந்த பாண்ட் பேப்பர்லாம் கொண்டாந்தியா. அதை எங்க முன்னாடியே கிழிச்சு போட்டுரு. “ பஞ்சாயத்து அந்த நிமிடமே முடிந்தது. 

“கார்ல இருக்கு. நான் போய் எடுத்துட்டு வரேன்.” மருதன் அவசரமாக சென்று அத்தனை காகிதங்களையும் எடுத்து வந்து சரிபார்த்து கிழித்து போட்டான். 

நடப்பது என்ன கனவா, நினைவா என்று தெரியாமல் ரதி அத்தனை பேரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!