Skip to content
Post Views: 5,107
*1*
இரு நாட்களாய் நசநசவென்று பெய்து தன் இருப்பை காட்டிக்கொண்டிருந்தாலும் அன்று எதிர்பாராத விதமாய் குறைந்த நேரத்தில் தன் மொத்த பலத்தையும் காட்டிச் சென்றிருந்தது பருவமழை. தார் சாலையெங்கும் பாய்ந்தோடிய வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் சகதியோடு தன் தள்ளுவண்டியும் இழுபட்டு செல்வதை ஆற்றாமையோடு பார்த்திருந்தார் ராமைய்யன். கடனில் வாங்கிய வண்டி. மூன்று வேலை உணவுக்கு முகாந்திரமான தன் நம்பிக்கை இன்று கைவிட்டு சென்றதில் நெஞ்சம் விம்மியது. இயற்கையின் முன் எதுவும் செய்ய முடியாத தன் நிலை எண்ணி கழிவிரக்கம் பிறக்க, கண்ணீர் வரும் போல் இருந்தது.
‘கொஞ்சம் மேல வந்துற கூடாது உடனே தலையில தட்டி உக்கார வச்சிடும் இந்த விதி. என்னத்த சொல்ல?’ உடன் நின்றவர்கள் சிலரின் புலம்பல் இதுவாகத்தான் இருந்தது.
“எவ்ளோ நேரம் இப்படியே நிப்ப ராமு? வீட்டுக்கு கிளம்பு மழை வுட்டு தண்ணி வடிஞ்சாத்தான் அடுத்து என்னனு பாக்க முடியும்.” என்றவரின் கடை முன்பு தான் ராமைய்யனின் தள்ளுவண்டி நிற்கும்.
Advertisement
“இப்போ தான் ஏதோ கொஞ்சம் கையில காசு தங்குச்சு. என் புள்ளைக்கு பொன்னுல சங்கிலி வாங்கிடலாம்னு நினைச்சேனே…” அத்தனை நேரம் தொண்டையில் அணையிட்டு நிறுத்தப்பட்டிருந்த வார்த்தைகள் ஆதங்கத்துடன் வெளிவந்தது.
“மொதோ புள்ளையில?” என்று அவர் பேச்சை வளர்த்தார் ராமைய்யனிடம்.
“ஆமாங்க. சம்சாரம் அவங்க அம்மா வீட்டுல இருக்கு. எப்போ வேணா பிரசவம் ஆவலாம்னு சேதி வந்துச்சு.” எனும்போதே முகத்தினில் ஆயிரம் மத்தாப்புகளின் மினுமினுப்பு.
Advertisement
“இவ்வளவு நேரம் அழுது வடிஞ்சிட்டு இருந்தது என்ன இப்போ புள்ளையை பத்தி பேசுனதும் இருக்குற இருப்பு என்ன. பொறக்குறதுக்கு முன்னவே தலைமேல வச்சி ஆடாத குறைதான்.”
Advertisement
“இல்லையா பின்ன? ராசா கணக்கா என் மவராசன் வந்ததுட்டா அப்புறம் துருப்புடிச்ச இந்த தள்ளுவண்டிக்கு என்ன வேலைங்குறேன்? ஜம்முனு கடையை புடிச்சி உக்காந்துடுவேன்ல.”
“திட்டம் எல்லாம் பெருசாதான் இருக்கு.”
“தலைச்சன் தகப்பனை உச்சிக்கு கொண்டு போயிடுவானாம்.”
Advertisement
“இதென்ன கேள்விப்படாததா இருக்கே ராமு.” யோசனையில் அவர் கண் இமைகள் சுருங்க, ராமைய்யனின் கண்கள் கனவுகளில் மின்னியது.
“அது என் அம்மா எங்கேயோ ஜோசியம் பாத்துச்சாம், அங்க சொன்னது. தலைச்சன் புள்ளை தான் என் குலத்தையே முன்னுக்கு தூக்கி விடப்போறானாம். என் வண்டி கூட அதான் அடிச்சிட்டு போயிடுச்சோ என்னவோ. திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கணும். புதுசா பெருசா ஒரு ஆரம்பம் என் புள்ளை பேருல… எங்கேயோ கூட்டிட்டு போகப்போறான் என் ராஜா.”
“சரிதான். ராஜா ராஜான்னு நீயே சொல்லிக்கிட்டா ஆச்சா? வரப் போறது ராணியா இருந்தா?” என்று கேட்டு வைத்த மனிதரின் வாய் முகூர்த்தம் பலித்துவிட, அவரோடான சகவாசத்தை அடியோடு முறித்துக்கொண்டார் ராமைய்யன்.
‘ராணியாம்ல ராணி. பொட்டப்புள்ளையை பெத்து சாகுற வரைக்கும் அதுக்கு உழைச்சி கொட்டவா?’ என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தவருக்கு அந்த வாரத்தின் இறுதியில் மனைவியின் பிரசவ வலி குறித்து தகவல் வர அவர் மருத்துவமனை சென்று சேரும்முன் பிறந்திருந்தாள் அவரின் சீமந்த புத்திரி.
பஞ்சுப்பொதியென இளஞ்சிவப்பு நிறத்தில் மகனை எதிர்பார்த்து சென்றிருந்தவர் கரத்தினில் எலும்பும் தோலுமாய் மகள் வந்து சேரவும் சோர்வும் விருப்பமின்மையும் ஒருங்கே வந்தது. என்னவோ மனைவி தான் வேண்டுமென்றே பெண் பிள்ளை பெற்றுக்கொடுத்தது போல் அவரை கண்டுகொள்ள கூட இல்லை. சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டார்.
“புள்ளை நோஞ்சானா இருக்கு. பொறந்த வீட்டுக்கு போய் ஒழுங்கா சாப்பிட கூட இல்லை போல உன் பொண்டாட்டி.” என்று தன் பங்கிற்கு மகனிடம் முகம் சுருக்கினார் ராமைய்யனின் அம்மா.
“ப்ச்… சாப்பிட்டா மட்டும் ஆம்புள பிள்ளையா பெத்திருக்க போறா? பொறக்குறதுக்கு முன்னாடியே என் சோலிக்கு வேட்டு வச்சிட்டு பொறந்திருக்கு உன் பேத்தி.”
“அட என்ன பேச்சிது? மூத்தது பொண்ணுனா மகாலக்ஷ்மின்னு சொல்லுவாங்க. எடுத்தெறிஞ்சி பேசாதடா.”
“ம்ம்க்கும் எடுத்து எரியுறாங்க. எல்லாம் மழையில அடிச்சிட்டு போயிடுச்சு. திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்.” சில நாட்களுக்கு முன் வேறுமாதிரி பேசிய வாய் இன்று வேறு உணர்வில் பேசி வைத்தது.
“லக்ஷ்மி வந்திருக்கா எல்லாம் நல்லதா நடக்கும்.”
‘அப்படியும் நடக்குமோ?’ என்று நம்பியவர் பிள்ளையை தூக்கி கொஞ்சி என இளக்கம் கொடுக்க, அதுவும் சில நாட்கள் தான். நலிந்த கடை உயிர்பெற்றாலும் முன்பளவுக்கு இலாபம் ஈர்க்காமல் போக, மகளின் ராசி பலியாக்கப்பட்டது அங்கு. பேத்திக்கு பரிந்து பேசிய பாட்டியும் பின்னாளில் மடை மாறினார்.
மணமான மாதமே கருப்பையில் கரு தங்கிவிட, மகன் பிறப்பான் என்ற கனவில் மனைவியை தாங்கினார் ராமைய்யன். கவனிப்பு அதிகமிருந்தாலும் அப்படியொன்றும் புரிதல் இல்லை இருவருக்குள்ளும். வளை பூட்டி பிறந்தகம் சென்ற பின் மாதம் ஒருமுறை சென்று பார்ப்பார். பிரசவத்திற்கு பிறகோ எல்லாம் தலைகீழ்.
பெண் பிள்ளை பிறந்து அவளுக்கு பெயர் தெரிவு செய்து காப்பு போடும் விழா துவங்கி மொட்டையடித்து காது குத்தும் வரையிலுமே ஒட்டாத தன்மையுடன் வலம் வந்த கணவனைப் பார்த்த மனைவி பிரபாவிற்கு மனக்கிலேசம். பிறக்கும் போதே எடை குறைவாக சற்று மெலிவாக பிறந்த மகளை தேற்றுவதிலேயே வருடம் ஓடியிருக்க, அள்ளிக்கொஞ்ச தோன்றும் விதமாய் தத்தித் தாவி நடக்கும் மகளை கொஞ்சமும் பொருட்படுத்தாது உர்ரென்று இருக்கும் கணவனைப் பார்த்து இப்போதெல்லாம் பயம் வேறு நெஞ்சை கவ்வுகிறது.
நேரமே வேலைக்குச் சென்று தாமதமாய் வீடு வரும் கணவனிடம் மனம் விட்டு பேசி என்ன பிரச்சனை என்று கேட்கக்கூட தயக்கம். அதற்காக அப்படியே இருந்துவிட முடியாதே. தைரியத்தை திரட்டிக்கொண்டு அன்றைய இரவு உணவை பரிமாறிபடியே, “குழலியோட கொலுசு லேசா விட்டுப்போச்சுங்க. பத்த வைக்கணும்.”
“இங்க என் பொழப்பே கையை விட்டுப்போயிடும் போல இருக்கு. இப்போ கொலுசு தான் முக்கியம்ல?”
கணவரின் பேச்சில் அதிர்ந்த பிரபா, “எதுவும் பிரச்சனையாங்க? கடையில வியாபாரம் நல்லா போகுதுல?”
“எவடி இவ… வீட்டுல உக்காந்துட்டு என்னை விசாரணை பண்ணிட்டு கிடக்க. மனுஷன் நிம்மதியா தொழில் பண்ணலாம்னா பெத்து போட்டிருக்காளே ஒருத்தியை. அவ வந்த நேரம் எல்லாம் மூழ்கிடுச்சி. கடனை வாங்கி நானே ஓட்டிட்டு இருக்கேன் இப்போதான் அடுப்பை பத்த வை கொலுசை பத்த வைன்னு வந்துட்டா.” என்று கத்திவிட்டு சென்றார் ராமைய்யன்.
வரவு செலவு அனைத்தும் கணவன் மற்றும் மாமியார் கையினில் என்பதால் பெரிதாக கணவரின் கடன், வருமானம் பற்றியெல்லாம் பிரபாவிற்கு தெரியவில்லை. கேட்டாலும் சொல்ல விரும்பியதில்லை ராமைய்யன். அதுவும் மகள் பிறந்தது முதல் இன்னுமே ஒதுக்கம்.
“அவன் ஏதோ அசதியில பேசிட்டு போறான். நாளைக்கு நாம போய் பத்த வச்சிக்கலாம்.” மருமகளை சமாதானம் செய்தபடி பேத்தியை தூக்கிக்கொண்டு நகர்ந்த அவரின் மாமியாரோ நாட்கள் செல்ல செல்ல வீட்டில் நடக்கும் பிணக்குகளைப் பார்த்து, “ஒரு ஆம்பளை புள்ளையை பெத்து கையில கொடுத்துட்டீன்னா தானா அடங்கிடுவான்.” என்று மருமகளை நச்சரிக்க ஆரம்பித்தார்.
இளமையின் அறியாமையில் கணவனின் பாராமுகத்தில் மாமியாரின் வழிகாட்டல் தன் வாழ்க்கையை செம்மைப்படுத்திவிடும் என்ற எண்ணத்தில் உதாசீனங்கள், அதட்டல்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு அடுத்த பிள்ளையையும் கருவில் வாங்கிக்கொண்டார். இம்முறையும் ராமைய்யனின் எதிர்பார்ப்பு மலையளவு உயர்ந்து நின்றது. முதல் போல தாங்கவில்லை என்றாலும் கவனிப்பு இருந்தது. கரிசனம் இருந்தது. தினம் இரவு மனைவிக்கு ஏதேனும் வாங்கி வருவதை வாடிக்கையாக்கி இருந்தார். உடன் மகளுக்கும் சலுகை கிடைத்தது. பலன் அத்தனை தினங்கள் தந்தையை கண்டு தயங்கி ஒதுங்கி நிற்கும் மூத்தவள் குழலி தந்தையை எதிர்பார்த்து அவர் முகம் தென்படவும் குதூகலித்து அவரை கட்டிக்கொள்ளும் நிலைக்கு வந்திருந்தாள்.
வேலையிலும் கொஞ்சம் கொஞ்சமாய் கடன்கள் அடைபட்டு வர லாபம் இல்லையென்றாலும் இழப்பும் இல்லை என்ற நிலையில் வண்டி ஓடியது. அடுத்தது ஆண்பிள்ளை தான், அதனால் தான் தன் துயரங்கள் குறைந்து வருகிறது. குழந்தை பிறந்துவிட்டால் தன் சிரமங்களுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்று காத்திருந்தவருக்கு இடியாய் இறங்கியது அச்செய்தி. மூத்தவள் மூன்றை தொட்டிருக்க, இரண்டாமானவள் இவ்வலுகில் ஜனித்தாள்.
மனித எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட அறிவியலில் குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது பெண் மட்டுமல்ல என்ற உண்மையை உரக்க சொல்லுமளவுக்கு அப்போது யாருக்கும் விவரம் கொண்டு சேர்க்கப்படவில்லையோ… ஆடித் தீர்த்து விட்டார் மனிதர். ஓய்ந்துவிட்டார் பிரபா. முத்தாய் இரண்டு பெண் பிள்ளைகள். கணவனின் பாராமுகத்தில் எப்படி அவர்களை கரை சேர்க்கப் போறேனோ என்ற கவலை அரிக்கத் துவங்கியது பிரபாவை.
“எனக்கெல்லாம் மொதோவே ராமு பொறந்துட்டான். அடுத்ததும் பையன் தான் நாலு தாண்டலை சாமி கூப்ட்டுக்குச்சு. நீ என்ன ரெண்டாவதும் பொம்பளை புள்ளையே பெத்து வச்சிருக்கியே. முன்னாடியே தெரிஞ்சாலாவது ஏதாவது பண்ணி இருக்கலாம்.” என்று மாமியார் சடைத்துக்கொண்டதில் அதிர்ந்தவராய் பிள்ளைகள் இரண்டையும் மார்போடு அணைத்துக்கொண்டார் பிரபா. அந்த வயதிலேயே மூத்தவளுக்கு என்ன புரிந்ததோ ஐயத்தில் இருந்த அன்னையை தன் தளிர் கரம் கொண்டு அணைத்து விடுவித்தாள். சின்ன சிட்டும் ஓசை எழுப்பி அன்னைக்கு துணையாக இருந்தது.
“புள்ளைக்கு காப்பு போட்டு பேர் வைக்க வேணாமா? இன்னும் அமைதியாவே இருந்தா என்ன பிரபா. மாப்பிள்ளைக்கிட்ட பேசுனியா இல்லையா? உன் மாமியாரும் கண்டுக்குற மாதிரி தெரியலையே.” அந்த வாரமே பிரபாவின் பிறந்த வீட்டினர் வந்து பேசிய பிறகுதான் பிரபாவின் மாமியார் இரண்டாமவளுக்கு சந்தியா என்று பெயர் சூட்டி செய்ய வேண்டியதையே செய்தார். மூத்தவளுக்கு எல்லாம் பிறந்தகத்தகதில் பார்த்துவிட்டனர். பெயர் கூட அவர்களின் தேர்வுதான்.
புகுந்தகத்தில் நிலவும் அசாதாரண நிலையை பிறந்த வீட்டினரிடம் காட்டிக்கொள்ளாத பிரபா ராமைய்யனின் குத்தல் பேச்சுக்களை உதறித்தள்ளி வாழ பழகிய நேரம் மீண்டுமொரு பிரசவம் ஆண்பிள்ளை வேண்டி. பிறந்தது என்னவோ சந்தியாவிற்கு ஒத்தாய் வந்தனா.
இதுவும் பெண் பிள்ளையாக பிறந்துவிட்டால் இதற்கு மேல் என்னால் முடியாது. குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடுங்கள் என்று மருத்துவரிடம் முன்னமே கூறியிருக்க, அவரின் பிறந்தகத்தின் ஒப்புதலுடன் அறுவை சிகிச்சை செய்துகொண்டுவிட்டார் பிரபா.
“யாரை கேட்டு இப்படி ஒரு ஆப்ரேஷன் பண்ணிகிட்ட?” மூன்றாவது சிசுவை ஈன்று மறுபிறவி எடுத்து வந்திருக்கும் மனைவி மருத்துவமனை கட்டிலில் கிடப்பதையும் பொருட்படுத்தாது கடுகடுத்த கணவரிடம், “ஆம்பிளை பிள்ளை வெறி புடிச்சிருக்கு உங்களுக்கு. இதுக்கு மேலையும் மெஷின் மாதிரி பெத்துப்போட்டு அவங்களை கஷ்டப்படுத்த என்னால முடியாது.” முதல் முறையாய் கணவரை எதிர்த்து நின்றார் பிரபா.
“அவ்வளவு தைரியம் ஆகிடுச்சா? பெத்தது எல்லாம் பொட்ட புள்ளை. இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று எகிறியவரை எரிச்சலுடன் பார்த்த பிரபா முகத்தை திருப்பிக்கொண்டார். பெற்ற மகள்களை உச்சி முகர்ந்து அந்த பிஞ்சுகளை அள்ளிக்கொஞ்ச லாயக்கில்லாதவர் எங்களுக்கு தேவையில்லை என்று அவரால் ஒதுக்க முடியவில்லை. அந்த மனிதருடன் சேர்ந்து மூன்று பெண்களை இந்த உலகிற்கு கொண்டுவந்திருக்கிறாரே. அவர்களின் பாதுகாப்பு, அடையாளம், கல்வி, எதிர்காலம் போன்ற சமூக கோட்பாடுகளை கருத்தில் கொண்டு பிறந்தகத்தில் தங்கி உடல்நிலை தேறியதும் புகுந்தகம் வந்துவிட்டார் பிரபா.
error: Content is protected !!