நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-3
அத்தியாயம் -3

“தழுவும் காற்றில் தவழும் மேகம்,
வான் தொடலாம் வா எனும் போதும்,
வேர் பற்றிய மணல் உதறா பாதங்களில்,
மனம் இருத்திய உயரம்… மலை..எனும் போல அன்பு.”
அன்றும் என்றும் போல தான் விடிந்தது. மித்ரனும் ஆதிரையும் பரபரவென அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். அதிகாலை 5.30 க்கு எழுந்தார்கள் என்றால் ஒரு அரை மணி நேரம் கோபீ டைம் இருவருக்குமாய் கிட்டும். பின் காலை மதியம் என பிரேக் பாஸ்ட் லஞ்ச் என செயது சின்னக்குட்டியை கிளப்பி இவர்களும் தயாராகி 8 மணிக்குள் வீடு விட்டு கிளம்பியாக வேண்டும். குட்டியை கிண்டர் கர்டென்ல் விட்டு இவள் கல்லூரிக்கும் அவன் ஆராய்ச்சிக்கழகத்தும் பறக்க வேண்டும். அன்றும் அதுபோல் ஆதிரை ஒருபுறம் சப்பாத்திக்கு பிசைந்த மாவை ஒவ்வொன்றாய் தேய்த்தபடி இடை இடையில் சன்னா மசாலாவுக்கு அடுப்பில் ஏற்றியிருந்தவைகளை கிளறியபடி இருந்தாள். மித்ரன் ஹாலில் அமர்ந்து ஓட்ஸ் ஒம்லெட்ட்க்கு தேவையான முட்டை கோஸ் கேரட் வகையறாக்களை பூவாய் துருவி கொண்டிருந்தான் . “என்னங்க பாப்பாக்கு ஜூஸ் வேண்டாம், சூடா ஹார்லிக்ஸ் வெச்சிடலாம்” என்று உரக்க கூறினாள்.
Advertisement
பதில் ஒன்றும் கிட்டாததில் என்ன ஆயிற்று என்று கிச்சனில் இருந்து வெளி வந்து எட்டி பார்த்தாள். அங்கு மித்ரன் அவள் அலைபேசியை கையில் வைத்திருந்தான்
அவளை ஏறிட்டபடி “என்ன இது என்றான்? “
“என்னது?” என்றபடி ஆவலுடன் வேகமாக வந்து செல்போன் பிடுங்கி பார்க்க பணிபுரியும் சக பேராசிரியர் மாதவனிடம் இருந்து மெசேஜ் . ”.சக்ஸஸ் Our project proposal got accepted” என வந்திருந்தது . இந்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் கீழ் பல்கலை கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவியல், பொறியியல் மற்றும் அளவு சமூக அறிவியலின் எல்லைப் பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொள்ள பல்வேறு திட்டங்களில் ஆராய்ச்சி ஆதரவை வழங்குகிறது. அதில் ஒரு திட்டத்திற்காக ஆதிரையும் அவள் சக பேராசிரியர்கள் இருவர் ஆக மூவராய் சேர்ந்து சமர்பித்திருந்த திட்ட முன்மொழிவுக்கு தான் ஒப்புதலும் வருடத்திற்கு ௫ பதினைந்து லட்சமென மூன்று வருடத்திற்கான நிதி ஆதரவும் கிட்டியிருந்தது.
Advertisement
“ஹை “ என்று முகம் மலர்ந்து உள்ளம் குதிபோட மித்ரனை ஏறிட்டாள் . அங்கு அவன் முகம் பாறையாய் இருகியதை கண்டு திகைத்து “என்னாச்சுங்க” என்றாள்.
Advertisement
“எப்போ சப்மிட் பண்ண? சொல்லவே இல்ல ? இல்லங்க அன்னிக்கு கூட நாம டிஸ்கஸ் பண்ணோம் இல்ல அந்த ஸ்மார்ட் சென்சார் ஒர்க் பற்றி அது தாங்க” என்றாள் ..”இல்ல இதை சப்மிட் பண்ணப்போ என்கிட்ட சொல்லணும்னு தோணலயா?” என்றான் அவளை தீர்க்கமாய் பார்த்தபடி.
ஆதிரைக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை அவள் ஏதோ கூற வருவதற்குள் “சரி விடு” என்று சென்று விட்டான்.
அன்று முச்சூடும் அவள் மனதுள் சிந்தித்தபடியே இருந்தாள். அவள் கூறவில்லை சரி தான். கூறவேண்டாம் என்றெல்லாம் இல்லை மித்ரன் வீடு வந்து சேர்வதற்கு எப்படியும் இரவு எட்டு தாண்டுகையில் அவன் வந்து கொஞ்சம் குட்டியுடன் விளையாண்டுவிட்டு இவர்கள் படுக்கைக்கு மணி பத்திற்குள் செல்லவேண்டியதாக இருக்கிறது. சக்கரத்தை கட்டி கொண்டு வாழ்வை கடத்தும் பணிச்சூழல். இதில் மூன்று மாதங்களுக்கு முன்னாள் எப்படி ஆதிரை இதை கூறாது விட்டாள் ? மறந்து போனாளா ? இல்லை 27 லட்சம் , 40 லட்சம் என இரு வேறு ஆராய்ச்சி திட்டங்களை முன்மொழிந்து அதற்கான நிதிஆதரவை பெற்று வெற்றிகரமாக அத்திட்டங்களை நிறைவேற்றி ஆராய்ச்சி மாணவர்களை கொண்டிருப்பவனுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைத்தாளா ? ஆனாலும் என்ன கூறினாலும் ஏன் அவள் கூறவில்லை என்பதற்கான எந்த விளக்கமும்அவளுக்கு ஒப்பாததில் 3 மாதத்திற்கு முன்னர் அந்த திட்ட முன்மொழிவை ஒன்லைனில் சப்மிட் செய்த அந்த தினத்தை கண் முன்னே கொண்டு வந்தாள்.
Advertisement
அன்று மித்ரன் வீடு வந்து சேர்ந்த பின் இரவு உணவுக்கு அவன் லேப்டப்ல் மூழ்கி இருக்க அவள் கிச்சனை ஒழித்து விட்டு வந்து அவன் அருகில் அமர்ந்தாள். அவள் வர காத்திருந்தார் போல் அவன் அலைபேசியில் தொடர்ச்சியாய் மெசேஜ் வருகிற தொனி கேட்க அவள் எடுத்து பார்த்தாள் “ஏதேதோ வாட்ஸாப் போர்வேர்ட்ஸ், மாலினி ங்க” என்றபடி அலைபேசியை தந்தாள். மாலினி அவனுடன் ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரிபவள். ஒத்த அலைவரிசையில் கிடைத்த நண்பி என்றும் கூறலாம். கண்மணி குட்டியின் பிறந்த நாளுக்கு தவறாமல் வீடு வருபவள். ஆதிரையிடமும் நன்றாக பேசக்கூடியவள்.
மித்ரன் அலைபேசியை வெகுவேகமாக வாங்கி பார்த்து விட்டு ஒரு ஹார்ட் எமோஜியை தட்டி விட்டு அவன் வேலையில் மூழ்கினான். ஆதிரை வெகு இயல்பாக “இந்த எமோஜி எல்லாம் கண்டுபிடித்தது யாருங்க? எவ்வளவு சாதாரணமா ஒரு லைக் க்கு இந்த ஹார்ட் எமோஜியை பயன்படுத்தறாங்க ? எனக்கெல்லாம் அந்த எமோஜியை உங்களை தவிர யாருக்கும் பயன்படுத்தவே தோணாது தெரியுமா” என்றாள். அவள் மிக இயல்பாக தான் கூறினாள். படீரென்று மித்ரன் அவள் புறம் திரும்பி “ஆமாமா ஒவ்வொரு எமோஜியிலும் ஓராயிரம் உள்ளர்த்தம் கண்டுபிடித்து திரிய எனக்கு உன்னைபோல இன்னும் பைத்தியம் பிடிக்கல. ஒரு நாள் இல்ல ஒரு நாள் , பாரு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு எதையாவது யோசிச்சு சட்டையை கிழிச்சிட்டு திரியப்போற” என்று நகைத்தவாறே கூறினான்.
அவளுக்கு எங்கோ உள்ளே பலமாய் வலித்தது . தன்னுடைய உணர்வுகள் இத்தனை சீக்கிரம் கேலிக்கு உள்ளாகும் அதிலும் மித்ரன் அதை செய்வான் என்பதே ஏதோ போல வலித்தது
“தூக்கம் வருது” என்று எழுந்து உடனே போய்விட்டாள் ஆதிரை அன்று. முழு போர்வையை தலை வரை போர்த்தி அழுதவாறே தூங்கியும் போனாள். பின் வந்த இரு தினங்களில் கண்மணிக்கு ஏதோ உடல் நிலை சரியில்லாது போக அப்படியே போய்விட்டது அந்த தினங்கள்.
இன்று இவற்றை எல்லாம் நினைத்தவாறு இருந்த ஆதிரைக்கு எங்கோ தனக்கும் மித்ரனுக்கும் இடையில் திரை விழுந்ததாக தோன்றிற்று . எதையேனும் பேசி உரையாடி உள்ளம் நிறைய நகைத்து கிடந்த காலங்கள் கனவில் கடந்தது போல் இருந்தது . முன்பெல்லாம் மித்ரன் எப்பொழுதும் கூறுவான் “எனக்கு நல்லதோ கெட்டதோ இல்லை ஒரு சின்ன நிகழ்வின் உணர்வெழுச்சியோ உன்னிடம் கூறத்தான் தோன்றும்” என்று . இப்பொழுது சின்னவள் குறித்த பேச்சுக்கள் மட்டுமே அவர்களிடையே மிகுந்திருப்பதை உணர்ந்தாள். மித்ரனிடம் இன்றே இவற்றை குறித்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள்.
அன்று மாலை அவன் களைத்து போய் வீடு திரும்ப இவள் எப்படி துவங்குவது என்று ஒன்றும் தோன்றாது அவன் முகம் பார்த்திருக்க “ஆதி, உன்கிட்ட ஒன்னு சொல்லணும் நம்ம ஷிவா ஜெர்மனி ல இருக்கார்ல ..He has invited me for a one year colloborative research.. with fellowship”( அவர் என்னை ஒரு ஆண்டு கால கூட்டு ஆய்வுக்காக உதவித்தொகையுடன் அழைத்திருக்கிறார்)
“வாவ் சூப்பர்ங்க எப்போ கிளம்பனும்” என “இன்னும் ரெண்டு நாள்ல” என்றான் .
“ரெண்டு நாள்லயா..?, ஒரு வருடமா” என்றபடி அவள் விழிக்க “நிறைய வேலை இருக்கு” என்றபடியே கடந்தான்..
பின் வந்த இருதினங்களும் மின்னல் போல கடக்க ஏர்போர்ட் ல் அவளும் கண்மணியுமாய் கையசைத்து விடை தந்திருந்தனர்.
அவன் செல்லவும் அவள் விக்கித்து அங்கேயே அமர்ந்து தாங்க மாட்டாமல் அழுது தீர்த்தாள் ஆனாலும் ஏதோ இங்கு தான் எங்கோ அவன் சென்றதாய் மனம் கதை பேசியது. அவன் திருமுகம் காண விழியெங்கும் சுழன்றது. ஒரே கணத்தில் அவளின் அத்தனையும், வானம் நீலம் மேகம் மழை காற்று, ஒன்றும் ஒன்றும் போறாது போய்விட்டதாக சுவாசம் தடைபடுகிறதை உணர்தாள். மெல்ல மெல்ல கண்மணியின் பிஞ்சு கரங்களில் கரங்கள் கோர்த்து நடந்து வீடு வந்தவள் தான்.
அந்த இரவு வீடு முழுவதும் ஏதோ வெறுமையின் ஒலி மட்டுமே ஒலித்தது. மித்ரன் இல்லாத இடைவெளி, ஒரு நாற்காலி காலியாக இருப்பதல்ல, அவள் தினமும் பேசிக்கொண்டிருந்த உள்ளத்தின் ஓர் பகுதி திடீரென அமைதியாகி விட்டதுபோல ஒரு வெறுமை. . பேசாமல் விட்ட அந்த சிறிய விஷயங்கள் தான் இப்போது ஒரு பெருங்கல்லாய் கனந்து உள்ளத்தை நெரித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த நினைவுகளுக்குள் கூட, அவன் சிரிப்பும், ஆதீ…என அவள் பெயரை அழைக்கும் அவன் குரலும் மெல்ல வந்து சேர்ந்தது. அந்த நினைவுகள் தான் அவளுக்கு வலியும், அதே நேரத்தில் வாழ வைத்த ஆறுதலும்.
சூழல் என்ன சதி செய்வது ? ஆதியின் மித்ரன் அவளிடமே என கங்கணம் கட்டி கண்ணயர வைத்தது காதல்!
