Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 10

“அண்ணிக்குப் பூ வெச்சுவிடு”  என்றதின் மூலம் தனக்கும் இந்தத் திருமணத்தில் சம்மதம் என்று மறைமுகமாகக் கூறியவன் மற்றதை நீங்கள் பேசிக்கொள்ளுங்கள் என்று கிளம்பிவிட்டான்.

 



Advertisement

திருமணத்தை இரண்டு மாதத்திற்குள்ளாகவே நடத்திவிட முடிவு செய்திருந்தனர் நாள் பார்த்து முடிவும் செய்தாகிவிட்டது மகளுக்கு என்ன கொடுக்கப் போகிறார்கள் என்பதை சபையிலே சொல்லிவிட்டார் மகேந்திரன்.

 

Advertisement

Advertisement

“எங்களோடது எல்லாமே எங்க பெண்ணுக்குத்தான்  இப்போ இருக்குற  வீடு எங்க காலத்துக்கு அப்புறம் மகளுக்கு,  பட்டுக்கோட்டையில் இருக்குற  கடை,  எண்பது சவரன்  நகை,  அத்திவெட்டியில் இருக்கும் அஞ்சு ஏக்கர் தென்னந்தோப்பு”   என்றவர்.

Advertisement

 

“பக்கத்துத்தெருவுல இருக்குற மாடி வீடு வாடகைக்கு விட்டிருக்கு அதோட வாடகை இப்போ எங்களுக்கு வருது அதுவும் எங்க மகளுக்குத்தான் ஆனா இந்த வீடும் அந்த வீடும் எங்க காலத்துக்கு அப்புறம் ப்ரியாவுக்கு வரமாதிரிதான் எழுதியிருக்கோம்”.

 

“இது என் பொண்ணோட முடிவு நானே கேட்டாலும் எனக்கு நீங்க வீட்டை இப்போ குடுக்கக்கூடாதுன்னு பிடிவாதமா நின்னுட்டா” என்றார்.

 

ஷர்மிக்கு விழிகள் பிதுங்கியது பவுனுத்தாயிகூட கொஞ்சம் அசந்து தான் போனார் கவிதாவுக்கு குடுக்குறதை விட இவளுக்கு அதிகம் வருதோ இந்தப் பயலுக்கு இவ்ளோ சொத்தோட பொண்ணா என்று பார்த்தார்.

 

அரசு உத்தியோகத்தில் அதுவும் நல்ல பதவியில் இருந்தவர் பென்சனே   நல்ல ஒரு தொகை வரும் நாளை அதுவும் மகளுக்குத்தானே அதோடு அவளும் பார்லர் வைத்துக் கொஞ்சமாகவா சம்பாதிக்கிறாள் கடையின் கீழே வாடகைவேறு அது இபோழுதே அவளுடைய வங்கிகணக்குக்குத்தான் சென்றுகொண்டிருந்தது.

 

“ஐயோ ஐயோ”   என்று வயிற்றில் அடித்துக்கொள்ளாத குறைதான் கவிதா மெல்ல தாயின் காதைக் கடித்தாள்   “சொத்துதானே இருந்திட்டு போகட்டும் நாளைக்கு வயித்துல பிள்ளையோட வாழாம வந்து நிக்கும்போது வேணும்ல”   என்றாள் நக்கலாக அதில் கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டார் பவுனுதாயி.

*****************************************************************************************************

 

 

“இப்போ என்ன குழப்பம் உனக்கு”   என்றான் முத்து அவளிடம்.

 

“எல்லாமே குழப்பம்தான் எப்படி உங்க அண்ணா ஒத்துக்கிட்டாங்க அதும் இவ்ளோ சீக்கிரமா பரிசம் போட்டுக் கல்யாணத்துக்கு நாளும் குறிச்சுட்டாங்க,   உண்மையா சொல்லுங்க முத்து ப்ரோ ரொம்ப கொடைச்சில் குடுக்குறேன்னு உங்க அண்ணா என்னய கல்யாணம் பண்ணி டார்ச்சர் செய்யப் போறாரோ”   என்றாள் தீவிரமாக.

 

“நிறைய சைக்கோ படமா பாப்பியோ”   என்றவன்   “அண்ணா ஒன்னும் அப்படிப்பட்ட ஆள் இல்ல”   என்றான் ரோஷமாக.

 

“என்னால இப்போவும் நம்மமுடியல என்ன சொல்லியிருப்பார் எங்க அப்பாகிட்ட எப்படி அப்பா ஒத்துக்கிட்டார்,  அங்க அவர் வீட்ல என்ன சொல்லியிருப்பார் அவங்க எல்லாரும் எப்படி ஒத்துக்கிட்டாங்க”   என்று நகத்தைக் கடித்தாள்.

 

“அடிப்பாவி அவர் கூடக் கல்யாணம் ஆகப்போவுதேன்னு சந்தோசம் படாம எவ்ளோ ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்குற நீ,   இப்போ உனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாமா”   என்றான்.

 

விழிகள் கலங்க அவனைப் பார்த்தவள்   “அவர்தான் என் வாழ்க்கைனு இருக்கேன்,  என் மனசுல இருக்குற பயம் உங்களுக்குப் புரியல என்னால  முழுசா சந்தோஷப்பட முடியல அவருக்கு உண்மையிலே பிடிச்சுதான் கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டாரா”.

 

“அப்போ ஏன் என்கிட்டே ஒத்தவார்த்தைக்கூட அவர் பேசல அவரை யாரும் கட்டாயப்படுத்தி எதையும் செய்யவைக்க முடியாது எனக்கே தெரியும் இருந்தாலும் என்னமோ மனசுல ஒரு சஞ்சலம்” என்றாள் மெல்ல.

அவள் தலையை வருடியது ஒரு கரம் வேறு யாராகா இருக்கும் அவள் தந்தையைத்தவிர   “என்ன பயம் என் பொண்ணுக்கு”   என்று அவள் அருகில் அமர்ந்தார் மகேந்திரன் தந்தையின் தோள் சாய்ந்தாள் சக்திப்ரியா.

 

 

“நீ ஆசைப்பட்ட வாழ்க்கைடா அதிகமா யோசிச்சு குழப்பிக்காத எனக்கு அவரைப் பிடிச்சிருக்குப்பான்னு என்கிட்டே தைரியமா சொன்ன என் பொண்ணு சக்திப்ரியாதான் எனக்கு வேணும்”.

 

“அதே தைரியத்தோடு போய் உன் வாழ்க்கையை வாழு அவரை மறந்து உன்னால போக முடியுமா பிரியாமா”   என்ற தந்தையை அதிர்வோடு பார்த்தவள்.

 

“நோப்பா”   என்றாள்.

 

“அவ்ளோதான் அதுக்கு மேல யோசிக்க ஒண்ணுமில்ல கிளம்பு வேலைக்குப் போ”   என்று அனுப்பிவிட்டார்.

 

அவளின் மனநிலை நன்றாகவே புரிந்தது மகேந்திரனுக்கு தன் காதலுக்கான எந்த எதிர்வினையும் அவன் பக்கமிருந்து இல்லை என்று சிறு சுணக்கம் சரியாகிவிடும் என்று எண்ணிக்கொண்டார்.

 

 “அண்ணா”   என்றுவந்து நின்ற சித்ராவின் பின்னே அவளை ஒட்டிக்கொண்டு நின்ற சௌமியாவை பார்த்தவன் விழிகள் ஒருநொடி இடுங்கியது,   இவனும் யாருடனும் பேசுவதில்லை அவர்களும் இவனோடு ஒட்டுவதில்லை.

 

சுந்தரேசன் இருந்தவரை மகளை இவன் கைகளில் கொடுப்பார் இவன் தயக்கமாக அவரைப் பார்க்கும்போது     “நீயும் தாய் மாமன்தான் மத்தவங்ககிட்டத்தான் ஒதுங்கி நிக்குற பிள்ளைக்கிட்ட என்னடா”   என்பார்.

 

அதிகம் இல்லையென்றாலும் அவருடன் இருக்கும்போது சௌமியாவை தூக்கி வைத்துக்கொள்வான் சுந்தரேசனின் மறைவுக்குப் பிறகு அதெல்லாம் நின்றுவிட்டது.

 

அவன் தலையில் பொறுப்புகள் விழுந்தது கடமை அவனை அனைத்திலிருந்தும் தள்ளி நிறுத்தியது அவனை இந்தக் குடும்பத்தோடு பிடித்து நிறுத்தி வைத்திருந்த அந்த ஒற்றை மனிதனும் இல்லாமல் போக வெறும் கடமை நன்றிக்கடன் என்று நின்றுகொண்டான்.

 

பேசவில்லையென்றாலும் அனைவரின் நடவடிக்கையும் அவன் செவிகளுக்கு வந்து சேர்ந்துவிடும் படிப்பு,  செல்லும் இடங்கள் நண்பர்கள் என்று தெரிந்துகொள்வான் இன்று தன் முன் நிற்கும் இருவரையும் கேள்வியாய் பார்த்தான்.

 

“சொல்லு”   என்று சித்ரா ஊக்க   “மாட்டேன்”   என்று தலையசைத்து அவள் பின்னால் ஒளிந்துகொண்டு   “நீ சொல்லு” 

 என்றாள் சௌமியா.

“இங்க வா”   என்றான் சௌமியாவிடம்,  அவள் உடல் நடுங்க தொடங்கியது அழுத்தமாகச் சித்ராவை பிடித்துகொண்டாள்.

 

“உன்னை இதுக்குமுன்ன  திட்டியிருக்கேனா”   என்றான்.

 

“இல்லை”   என்று தலையை ஆட்டினாள்.

 

“அடிச்சிருக்கேனா”   என்க.

 

வேகமாக   “இல்லை”   என்றாள்.

 

“அப்புறம் என்ன பயம் என்ன வேணும் சொல்லு”   என்றான் கொஞ்சம் பொறுமையாகவே.

 

“எனக்கு டான்ஸ் போகணும்”   என்றாள் மென்று விழுங்கி.

 

“என்ன டான்ஸ்”.

 

“பரதநாட்டியம்”   என்றாள்.

“சரி போ அதைக் கேக்க ஏன் இவ்ளோ பயம்”   என்றான் புரியாமல்.

 

“அம்மாவும் பாட்டியும் போகக்கூடாதுனு சொல்றாங்க இன்னும் மூணு வருஷத்துல கல்யாணம் செஞ்சு அனுப்பிடுவேன் ஆட்டக்காரி  ஆகப்போறியான்னு பாட்டி திட்டறாங்க”   என்றாள் தேம்பிக்கொண்டே.

 

பவுனுத்தாயிக்கு பெண் பிள்ளை அதிகம் படிப்பதே பிடிக்காது பதினெட்டு  ஆனவுடன் இவளையும் திருமணம் செய்து அனுப்பிவிட வேண்டும் என்பது தான் அவரின் திட்டம்.

 

“ஸ்கூல்ல சொல்லிக்குடுத்தாங்க அங்க படிச்சேன் இப்போ தனியா போய்ப் படிச்சா இன்னும் நல்லதுன்னு அத்தை தான் சொன்னாங்க”   என்றாள் சௌமியா.

 

அவனுக்குத் தெரியும் பள்ளியில் இவள் நாட்டியம் பயின்றாள் சித்ராவுக்கு அதில் நாட்டம் இல்லை அவள் படிக்கவில்லை.

 

“அத்தயா…”   என்றான் யோசனையாக.

 

“ஹ்ம்ம் ப்ரியா அத்தை அவங்கதான் நமக்குப் பிடிச்சதை செய்யணும் இதுக்காக இன்னொருதடவை பொறந்தா வர முடியும் நம்ம கடைக்குக் கீழவே அந்த மிஸ் நல்லா சொல்லித்தரங்க அங்கேயே படிச்சிக்கோ”.

 

“வீட்ல பெர்மிஷன் வாங்குறதெல்லாம் ஒரு விஷயமா அதெல்லாம் என் அத்தான் பாத்துப்பாரு அவர்கிட்ட சொல்லிடுங்க அப்படின்னு சொன்னாங்க”   என்று ஒப்புவித்தாள்.

 

“அத்தானா… கொழுப்பெடுத்தவ”   என்றவன் இதழ்களை மடக்கிக்கொள்ள  மீசையும் தாடியும் அவன் உணர்வுகளை மறைத்துவிட்டது.

 

“நான் பேசிக்குறேன் நல்ல நாள் பாத்து கதிர் கூடப் போய்ச் சேர்ந்துக்கோ”   என்றான்.

 

“தேங்க்ஸ் மாமா”   என்ற சௌமியா சித்ராவை இழுத்துக்கொண்டு ஓடினாள் துள்ளலோடு.

 

அன்று ஏற்பட்ட நஷ்டத்திற்குப் பிறகு கதிரின் கவனம் முழுமூச்சாகத் தொழில் பக்கம் திரும்பியது வேகமாகவும் பொறுப்பாகவும் அண்ணனிடம் கற்றுக்கொண்டான்.

 

தொழில் தவிர்த்துத் தனிப்பட்ட எந்த விஷயத்தையும் சிவபாலன் கதிரிடம் பேசுவதில்லை,  அவனாகவே   “ஹனிமூன் போகலையான்னு எல்லாரும் கேக்குறாங்கண்ணா ஷர்மியும் ஆசைப்படுறா சிம்லா போலாம்னு யோசிக்குறோம் பத்துநாள்”   என்றான்.

 

மடிக்கணினியில் கவனமாக இருந்தவன்   “ஹ்ம்ம்”   என்றான்.

 

“இங்க எப்படி”   என்றவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவன்   “உன் மேனேஜருக்கு எல்லாம் தெளிவா சொல்லிட்டு கிளம்பு வேற எதும்னா  உனக்கு ஓகேன்னா நான் பாக்குறேன்”   என்றான்.

 

“அண்ணா என்னண்ணா நீங்க வளர்த்த தொழில்”   என்றான் கதிர்  பதட்டத்தோடு.

 

“ஜஸ்ட் பாத்துக்குறேன் எதுலயும் தலையிடமாட்டேன்  தேவைன்னா சரி தப்பு சொல்லுவேன் உன்னோட தொழில் முடிவு நீதான் எடுக்கணும்”   என்றுவிட்டான் பட்டும் படாமலும்.

 

இன்னும் இன்னும் விலகிச் செல்பவனை இயலாமையோடு பார்த்திருந்தான் கதிர்,  ஷர்மியை தூண்டிவிட்டு  இந்த நேரம் கதிரை ஹனிமூன் செல்ல மறைமுகமாகச் செயல் பட்டதே பவுனுத்தாயிதான்.

 

அண்ணன் திருமணம் என்று இவன் பேச   “நீ என்ன அவனுக்கு வேலைக்காரனா அதெல்லாம் அவன் மாமனார் பாத்துப்பார்”   என்று பவுனுத்தாயி நெருக்க,  இந்தப் பக்கம் ஷர்மி கண்ணைக் கசக்கினாள்.

 

சந்தோஷ் வேறு டிக்கெட் போட்டுவிட்டு வந்து நின்றான் தன்னை வேண்டாம் என்று சொன்னவள் சிவபாலனை கட்டிக்கொள்ளப்போகும் கடுப்பு அவனுக்கு.

 

இவன் கலயாணத்துக்கு என் தங்கை கணவன் வேலை செய்யவேண்டுமா என்று  யாருக்காகப் பார்க்க என்று யோசித்த கதிர் அண்ணனுக்கு இதெல்லாம் பெரிய  விஷயமே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான் எப்பொழுதும்போல.

 

என் பேரன் உன் திருமணத்திற்கு வேலை செய்ய வேண்டுமா என்ற குறுகிய எண்ணம் வன்மம் ஆகையால் திருமணத்திற்கு இரண்டு வாரம் இருக்கையில் அவனை அனுப்பிவிட்டார் பவுனுத்தாயி,  அவர் திட்டம் தேவையே இல்லாதது என்பதாக மகேந்திரன் மகள் திருமணத்திற்கு கச்சிதமாகத் திட்டம் வகுத்து ஆட்களை வைத்து வேலை வாங்கினார் உடன் முத்துப்பாண்டி வேறு.

 

அன்புக்கரசி கேட்டபோது  நகை எடுக்கப் புடவை எடுக்க எதற்கும் என்னை அழைக்காதீர்கள் என்றுவிட்டான் சிவபாலன்,  சக்திப்ரியாவிற்கு சிறு எதிர்பார்ப்பு இருந்தது முகூர்த்தப்புடவை எடுக்கவாவது வருவானா என்று எங்கே அவன் நிழலைக் கூடக் காணவில்லை.

 

மகேந்திரனுக்குமே சிறு வருத்தம் இருந்தது கதிரின் செயல்,  உடன் பிறக்கவில்லை என்றாலும் அண்ணன் என்ற ஸ்தானத்தில் நின்று பார்த்துப் பார்த்து என்னவெல்லாம் செய்திருக்கிறான்,   மனைவி ஆசைப்படுகிறாள் அம்மாச்சி கட்டாயப்படுத்துகிறார் என்று ஆயிரம் காரணம் சொன்னாலும் அண்ணனின் திருமணத்திற்கு இவன்தான் முன் நின்றிக்க வேண்டும் என்ன மனிதர்கள் என்று வெறுப்பானது.

 

எப்படி இத்தனை உதாசீனங்களை தாங்கி நின்றான் நிற்கிறான் இவன் என்று மருமகனை எண்ணி வருந்தினார்,  சக்திப்ரியாவுக்குமே நெஞ்சம் நிறைய அந்த வருத்தம் நின்றது அவனுக்கென்று நிற்க யாருமில்லையே என்று.

 

புடவை எடுக்கக் கூட அன்புக்கரசி மட்டுமே வந்திருந்தார் பவுனுத்தாயிக்கு உடல்நலமில்லை ஆகையால் கவிதா உடன் இருப்பதாகச் சொல்லிக்கொண்டனர்.

 

பூரணிக்கு மிகுந்த வருத்தமே அப்படி என்ன எங்கள் பெண் குறைந்துபோய்விட்டாள் இவர்களுக்கென்று.

 

நன்றாகயிருப்பதாகத் தோன்றிய ஐந்து புடவைகளை எடுத்துவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் சக்திப்ரியா ஒன்றையும் தேர்வுசெய்ய முடியவில்லை அவளால், அவன் தேர்ந்தெடுக்கும் புடவையைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று மனம் அத்தனை ஆசை கொண்டது வராதவனிடம் எப்படி கேட்கத் தலை வலிப்பதை போல இருக்க அப்படியே அமர்ந்துவிட்டாள்.

 

பூரணியால் பொறுக்கமுடியவில்லை   “இதுக்குதான் சொன்னேன் இதெல்லாம் தேவையா… அவருக்கு உண்மையிலே இந்தக் கல்யாணம் பிடிச்சிருக்கா? அவர் சொன்னாருன்னு நீங்கதான் சொல்றீங்க அவர் செய்ற எதுவும் அப்படித்தெரியல”.

 

“இதுவே நாம பாத்து செய்ற கல்யாணமா இருந்தா ஏன் வரல என்னன்னு கேள்வி கேக்கலாம் இது நீயே தேடிகிட்டது நம்மால ஏதாவது கேக்க முடியுதா அவர்தான் அப்படின்னா அவர் வீட்டில யாரவது நம்மள மரியாதையா நடத்துறாங்களா அப்படி என்ன அந்த மனுஷனைத்தான் கட்டிக்கணும்னு உனக்கு”.

 

“பெத்தவங்க பாத்து பிடிச்சு கட்டிக்கிட்டு போறவங்களே ஆயிரம் பிரச்சனைல தவிக்குறாங்க,  அதையாவது நாம கேள்வி கேக்கலாம் இவரை ஏதாவது கேள்வி கேக்க முடியுமா பார்வையாலே பத்தடி தள்ளி நிறுத்துறாரு மாப்பிள்ளைன்னு உரிமையா கூப்பிடகூட முடியல கிட்ட போகவே பயமா இருக்கு”.

 

 

“என் வேதனை உனக்குப் புரியாது பாப்பா ஒத்த பிள்ளையைப் பெத்து வெச்சிருக்கோம் உன் எதிர்காலத்தை நினச்சா தூக்கமே வரமாட்டது”   என்றவர் தளர்ந்து அமர்ந்தார்.

 

தாயின் வேதனை நன்றாகவே புரிந்தது அவரின் தவிப்பு ஞாயமானதுகூட   “அம்மா”   என்று அவர் கையைப் பற்றியவள்   “அவர் தப்பானவர் இல்லம்மா எனக்காக அவர்கிட்ட நீங்க நியாயம் கேக்குற நிலைமை வராது நிச்சயமா வராது”.

 

“இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அவருக்கு யாருமே…. அவரை யாருமே சேர்த்துக்கிட்டதில்லைமா,  அவர் வராம புடவை எடுக்கப் பிடிக்காம நான் உக்காந்திருக்கறது உங்களுக்குக் கஷ்டமாத்தான் இருக்கும் எனக்கும் அவர் வந்து அவர் கையால எனக்கு எடுத்துத் தரணும்னு நெஞ்சு  முட்ட  ஆசை இருக்கு”.

 

“இந்த நேர என்னோட தனிமையே நமக்கு இத்தனை வலிக்குதே இதைதான்மா அவருக்கு இத்தனை வருஷமும் எல்லாரும் குடுத்திருக்காங்க,  அந்த வலி பெருசுக் காயம் பெருசு அதைத்தான் நான் மாத்த நினைக்குறேன் அவர் தனிமைக்கு துணையா நிக்க நினைக்குறேன்”.

 

“யாருக்குமே கொடுக்காத யாருமே வாங்கிக்க முயற்சி செய்யாத பெரும் அன்பு அவர் மனசுல கொட்டிக்கிடக்குதும்மா அதை எனக்கே எனக்காக மட்டுமே வெச்சுக்க நினைக்குறேன்,  சில நேரம் எதிர்பார்த்து தடுமாறுறேன் உண்மைதான்”.

 

“அவர்கிட்ட யாருமே காட்டாத ஒரு விஷயத்தை அவர் மத்தவங்களுக்கு செய்யணும்னு எப்படி எதிர்பார்க்க முடியும் ஆனா நடக்கும் நிச்சயமா நடக்கும் கொஞ்சம் காலம் எடுக்கும் ஆறாமல் இருக்குற காயங்கள் முதல்ல ஆறனும்”.

 

“அவரைத் தப்பா நினைக்காதீங்கம்மா நீங்களும் அவரைத் தள்ளி வைக்காதீங்க அவர்கிட்ட பேசுங்கம்மா எனக்காக”   என்று கூறிவிட்டு தேம்பி தேம்பி அழுத மகளைத் தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டார் மகேந்திரன்.

 

“பாப்பா”   என்று மகளைப் பின்னோடு கட்டிக்கொண்டார் பூரணி.

“ஏண்ணா புடவை எடுக்க வரல பிரியாமா பாவம் எதை எடுக்கன்னு தெரியாம உக்காந்திருக்கு சும்மா ஒரே ஒரு தடவைப்பாத்து எந்தப் புடவை நல்லா இருக்குனு மட்டும் சொல்லுங்க போதும்”   என்று காணொளி அழைப்பில் சிவபாலனை வைத்துக்கொண்டு வந்த முத்துப்பாண்டி இவர்கள் பேச்சில் அப்படியே நிற்க.

 

அனைத்தையும் பார்த்தவன் தனக்காக அவள் சிந்தும் கண்ணீரை காணமுடியாமல் அழைப்பைத் துண்டித்தான்,  நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டான் சிவபாலன்   “எதுக்குடி அழற”   என்று அவளைப் போட்டு உலுக்க வேண்டும் போலத் தோன்றியது.

 

அதுவும் எனக்காக என் தனிமைக்காக என் வலிகளுக்காக ஒருத்தி அழுகிறாள் என்ன செய்தேன் நான் உனக்கு ஏன் என்னை இப்படி நேசத்தில் மூச்சுமுட்ட வைக்கிறாய் என்று தலையைத் தாங்கி அமர்ந்துவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!