Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

27. MTB. Varsha - என் காதலும் என்னாகுமோ

NKN-1

“மல்லு வேட்டி கட்டி இருக்கு

அது மேல மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு

முத்தழகி கட்டி புடிச்சி

முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு

மார்கழி மாசம் பார்த்து

மாருல குளிராச்சு

ஹ்ம்ம்… ஏதுடா வம்பா போச்சு

ரவுக்கையும் கிடையாது

சக்கம்பட்டி சேலை கட்டி

பூத்திருக்கு பூஞ்சோலை

பூவு ஒன்னு கண்ணடிச்சா

வண்டு வரும் பின்னால

எக்கு தப்பு வேண்டாம் ஹ்ம்ம்… ம்ம்ம்…”

 

 என்ற பாடல் ஒலிக்க அந்தி சாயும் மாலை பொழுதில் நெடுந்தூர ஒரு பேருந்து பயணம் ஜன்னலோர இருக்கையில் அவள் அமர்ந்திருக்க அவளுக்கு அருகில் மிக நெருக்கமாக அவளின் மூச்சுக்காற்றை சுவாசித்துக் கொண்டு, ஜன்னல் வழியே தென்றல் அவளிடம் செய்யும் சில்மிசத்திற்குப் போட்டியாக அவனும் அவளிடம் சில்மிசம் செய்து கொண்டிருந்தான். அவளும் அவன் சில்மிஷத்தை மறுப்பது போல் பொய்யாக கோபப்பட்டு அதனை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் உறுதியில்லாத மறுப்பில் சற்று தைரியம் கொண்ட அவனை மேலும் தூண்டுவது போல் பேருந்தின் பாடல் ஒலிக்க 50 பேர் பயணம் செய்யும் அந்த பேருந்தில் அவளும் அவனும் மட்டும் தனியாக ஒரு உலகத்தில் இருப்பது போல அவனுக்கு தோன்றியதோ என்னவோ அதுவரை அவளின் கைகளை மட்டும் தீண்டிக்கொண்டிருந்த அவனின் கரங்கள் சற்று மேலே ஏறி அவளின் கன்னத்தை தீண்டி அவள் இதழின் சுவை அறிவதற்காக அவளின் முகத்தை தனக்கு நேராகக் கொண்டு வந்து அவளின் இதழ்களை நெருங்க, “யம்மா ஏய் பொண்ணு யம்மா உன்ன தான் மா” என்ற சத்தத்தில் திடுக்கிட்டு கண் விழித்தாள் அவள்.

 

“என்னமா இந்த முழி முழிக்கிற நீ சொன்ன ஸ்டாப் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருமா. என்ன பொண்ணா போ காலம் எப்படி கெட்டு கிடக்கு இதுல வயசு பொண்ணு இப்படி கனவு கண்டிட்டு உக்காந்து இருக்கு. என்னத்த சொல்ல இப்போ உள்ள பொண்ணுங்களும் அப்படி தான் இருக்காங்க பசங்களும் அப்படித்தான் இருக்காங்க” என்று புலம்பி கொண்டு சென்றார் அந்த பஸ்ஸின் கண்டக்டர்.



Advertisement

 

அவரின் அழைப்பில் திடுக்கிட்டு எழுந்த விழிக்கு முதலில் தன்னை சுற்றி நடக்கும் ஒன்றும் புரியவில்லை. கண்டக்டரின் பேச்சில்தான் தான் இருக்கும் இடமும் உரைத்தது. உடனே தனது பக்கத்து சீட்டை திரும்பிப் பார்க்க அது வெற்றிடமாக இருந்தது.

 

Advertisement

 அப்போதுதான் அவளுக்கு இதுவரை தனக்கு வந்த கனவை இல்லை இல்லை இதற்கு முன் இதே போன்று பேருந்து இருக்கையில் அமர்ந்து தன்னிடம் இப்படி சில்மிஷங்கள் செய்தவனின் நினைவு இன்னும் தனது நெஞ்சில் இருப்பது புரிந்தது.

Advertisement

 

 அவள் அதனை கடந்த காலம் என்று மறந்து இருக்க இல்லை இன்னும் உன் மனதில் பசுமரத்தாணி போல  இந்த நினைவுகள் இதயத்தில் ஆழ பதிந்திருப்பது புரிந்தது. ஒரு காலத்தில் இந்த நினைவுகளை நினைத்து சந்தோசப்பட்ட அவளின் மனது இப்போது அதனை நினைத்து சங்கடப்பட்டு கொண்டது. ஏனென்றால் அவளின் கடந்த காலத்தில் அவளுடன் அத்தனை சில்மிஷம் செய்தவன் இன்று வேறொருத்தின் கணவன் இல்லை இல்லை வேறொருத்தியின் மாஜி கணவன். அதனால் தானோ என்னவோ இப்போது இந்த நினைவுகள் அவளுக்கு ஞாபகம் வருகிறதோ அப்படி என்றால் இன்னும் அவன் தனது மனதில் இருக்கின்றானா என்று நினைக்க அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடந்த ஐந்து வருட காலமாக அவள் மறந்து விட்டதாக நினைத்த அவளின் கடந்தக் கால காதலனை இன்னும் அவள் மனதில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான் என்று சொல்லி சென்று விட்டது இந்த கனவு.

 

Advertisement

 இந்த பஸ்ஸில் ஏறியதில் இருந்து ஆயிரம் முறையாவது யோசித்து இருப்பாள் இப்போது தான் செய்யப் போகும் காரியம் சரிதானா… அவனை சந்திக்கப் போவது சரிதானா…. அவளின் ஆருயிர் தோழி கிளம்பும்போதே சொல்லி இருந்தால் இப்போது நீ செய்யப் போகும் காரியத்தால் கண்டிப்பாக நீ காயப்படுவாய் என்று. இவளை பற்றி நன்கு அறிந்ததால் தான் அப்படி சொன்னாளோ என்னவோ இவள் தான் அவளிடம் அப்படி எல்லாம் இல்லை அவனை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அவன் எனது வாழ்க்கையில் இல்லவே இல்லை என்னால் அவனை பேஸ் பண்ண முடியும் என்று சவடால் பேசிவிட்டு வந்தாள்.

 

 ஆனால் அவள் அவன் ஊரில் இறங்குவதற்கு முன்னே இதோ நான் உன் மனதில் ஆள புதைந்து விட்டேன் என்று சொல்லிவிட்டது இந்த கனவு. பேசாமல் மறுபடியும் திரும்பி சென்று விடலாமா என்று அவள் நினைக்கும் நேரம்.

 

“எம்மா நீ கேட்ட ஸ்டாப் இதுதான் இறங்குமா” என்றார் கண்டக்டர்.

 

 அவர் அப்படி சொன்னதும் இதற்கு மேல் இறங்காமல் இருந்தால் அவ்வளவுதான் இந்த ஆள் பேசியே கொன்று விடுவான் என்று நினைத்து, “அப்பா முருகா ஏதோ உன் மேல இருக்கிற நம்பிக்கைதான் இந்த காரியத்தை பண்ண போறேன். இதனால இப்ப இருக்கிற என் லைஃப்க்கு எந்த பிரச்சனையும் வராம நீ தான் பார்த்துக்கணும்” என்று ஒரு வேண்டுதலை முருகனுக்கு பார்சல் செய்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் தனது கையில் இருந்த லக்கேஜ் தூக்கிக்கொண்டு இறங்கினாள் விழி என்ற இமைவிழி.

 

 இவளின் பெயரைக் கேட்டவுடன் என்ன பேரு இது இமைவிழி என்று கிண்டல் செய்பவர்கள் அதிகம். ஆனால் இந்தப் பெயர் அவளின் தந்தை அவளுக்காக சூடிவிட்டு சென்றார். ஆம் அவளுக்கு அவளின் தந்தை செய்த ஒரே ஒரு விஷயம் என்றால் இந்தப் பெயரை அவளுக்கு வைத்தது மட்டும்தான். இந்தப் பெயரை அவளுக்கு ஆசையாக சூடி விட்டு ஐந்து வருட காலம் அவளைக் கையில் வைத்து மகாராணி போல் தாங்கி விட்டு தனது கடமை முடிந்தது என விண்ணுலகை நோக்கி சென்று விட்டார் முத்து மாணிக்கம்.

 

 அதன் பிறகு அவளை ஐந்து வயதிலிருந்து தனது கண்ணின் மணி போல் காப்பாற்றி வருபவர் அவள் தாய் தாமரை செல்வி மட்டுமே.அவளின் தாய் என்னதான் தாங்கினாலும் அவளுக்கு கிடைக்காத தந்தை பாசத்தின் மீது ஒரு ஏக்கம். அவளின் அந்த ஏக்கம் தான் தனது தந்தை சாயலில் இருந்த அன்பரசன் மீது காதல் கொள்ள வைத்தது. அவனும் இவள் அருகில் இருக்கும் வரை அதாவது கல்லூரியில் இருவரும் ஒன்றாக படிக்கும் வரை அவளின் தந்தை போலவே கையில் வைத்து தாங்கினான். அவள் கேட்கும் அனைத்தையும் வாங்கித்தந்து அவளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றினான்.

 

 இவளும் அவன் அன்பில் கரைந்து தன் தந்தை போல ஒருவன் கிடைத்து விட்டான் என்று சந்தோஷத்தில் இருக்கும்போது அவளின் தந்தை போலவே அவள் வாழ்க்கையில் இருந்து மறைந்தும் சென்று விட்டான்.

 

 அவன் சென்றுவிட்டதை உணராமலே இரண்டு வருடங்கள் அவன் வந்து தன்னைக் கூட்டி செல்வான் என்று நம்பிக்கையில் இருந்தவளுக்கு இடியாக வந்து விழுந்தது அவனின் திருமணம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏழு மாதத்தில் வந்த அவன் குழந்தையின் வருகை. அப்படி ஒன்றும் பல வருட காதல் இல்லை இவர்களின் காதல். கல்லூரியின் கடைசி வருடம் தொடங்கிய காதல் ஆயுசு என்னவோ ஒரு வருடம் மட்டும்தான். ஆனாலும் அவன் தந்து சென்ற துரோகத்தை தாங்க முடியாமல் சுக்கு நூறாக உடைந்து நின்றவளை அவள் தாய்க்கு தெரியாமல் தேத்தி எடுப்பதற்குள் ஒருவழியாகி போனாள் அவள் தோழியும் உடன்பிறவா சகோதரியுமான சைந்தவி.

 

 கடந்த மூன்று வருடமாக எல்லாவற்றையும் மறந்து இப்போதுதான் தனது முதல் அடியை எடுத்து வைத்த தனது தோழியின் வாழ்க்கையில் மீண்டும் அவன் வந்தது சைந்தவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக இவளை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முயற்சிக்காத அவன் திடீரென தனது தங்கையின் திருமணத்திற்கு அழைப்பிதழ் விடுத்தது சைந்தவிக்கு சந்தேகமாக இருந்தது. அதனால் தனது நண்பர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது அவனின் திருமண முறிவு. இத்தனை நாட்கள் இல்லாமல் அவனின் விவாகரத்துக்கு பிறகு மீண்டும் தனது தோழியை அழைத்தது மீண்டும் இவளின் வாழ்க்கைக்குள் வர முயற்சிக்கானா என்ற சந்தேகத்தை கொடுத்தது. அதனால் விழியை இந்த திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி தடுத்துப் பார்த்தாள். அதற்கும் காரணம் இருந்தது இவ்வளவு நாட்கள் திருமணமே வேண்டாம் என்று இருந்தவள் தற்போது அவளின் வாழ்க்கையில் அவள் தாய் மூலம் அவளை பெண் பார்க்க வந்து அறிமுகமான செலினை பார்த்து பேசிய பிறகு திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் நிலையில் வந்தவளை மீண்டும் தனது நினைவுகளால் துரத்தி வந்த அன்பரசனை அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவர்களின் இந்த சந்திப்பு எங்கே தனது தோழியின் வாழ்க்கையை திசை திருப்பி விடுமோ என்ற பதட்டம் அவளுக்கு அதிகமாக உள்ளது.

 

 அவளின் மனதில் உள்ள பதட்டத்தை புரிந்து கொண்ட விழி தோழிக்கு ஆயிரம் சமாதானங்கள் சொல்லி விட்டு தான் இந்த திருமணத்திற்கு வந்தாள்.

 

 அப்படி வந்தவளை அவன் முகத்தையே பார்க்காமல் உன் மனதில் நான் இன்னும் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டான் அந்தக் கள்ளன்.

 இவளுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது தனது மனதின் ஓட்டத்தை நினைத்து ஆனால் இவனை சந்திப்பதற்கு முக்கிய காரணம் அவன் செலின் கண்மணி. எல்லாம் நன்றாக சென்றால் இன்னும் ஆறு மாதத்தில் இமைவிழி முத்து மாணிக்கத்தை இமைவிழி செலின் கண்மணியாக மாற்றயிருப்பவன்.

 

 பெண் பார்க்க வந்த அன்று இருவரும் பேசிக் கொண்டு இருக்கும்போது தான் வந்தது அன்பரசனிடம் இருந்து அந்த குறுஞ்செய்தி. தன்னிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்த பெண் அந்த குறுஞ்செய்தியை பார்த்தது முதல் அவள் முகத்தில் வந்து போன கலவை உணர்வை பார்த்தவுடன் கண்டு கொண்டான். உடனே என்னவென்று விசாரிக்க அவளும் ஒன்றையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி அவனிடம் தெரிவித்து விட்டாள்.

 அத்தனையும் கேட்டு முடித்தவன், “ஷீ இமை” என்று அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

 இந்த “இமை” என்ற அழைப்பு தான் அவனை அவளுக்கு கொஞ்சமாக பிடிக்க வைத்தது. எல்லோரும் அவளை விழி என்று அழைக்க இவன் மட்டும் பார்த்தது முதல் இமை என்றான். அதுதான் அவளை அவனிடம் திரும்பி பார்க்க வைத்தது.

 

அவளின் கண்களை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டு, “நீங்க ஏன் அந்த மெசேஜ் பார்த்தவுடனே அப்செட் ஆகுறீங்க. அவரை ஏன் ஃபர்ஸ்ட் உங்களோட எக்ஸா பாக்குறீங்க. அவர் உங்களோட பழகும்போது முதல்ல பிரண்டா தான பழகுனீங்க. அதுக்கு பிறகு தானே காதல் வந்துச்சி முதல்ல நீங்க அவரை ஒரு நண்பனா பாருங்க. இப்ப அந்த மெசேஜ் படிச்சு பாருங்க உங்களுக்கு ஏதாவது தப்பா தெரியுதா ஒரு பிரண்டு அவனோட சிஸ்டர் மேரேஜ்க்கு அவனோட தோழிய இன்வைட் பண்ணி இருக்கான். சோ நீங்க உங்க தோழனோட சிஸ்டர் மேரேஜ்க்கு போறீங்க” என்று அழுத்தமாக கூறியவன் பிறகு கொஞ்சம் யோசனையாக அவளைப் பார்த்துக் கொண்டு, “இப்போதைக்கு நம்மளோட மேரேஜ் பத்தி எதையும் பேசிக்க வேண்டாம் நீங்க போயிட்டு வந்த பிறகு உங்க மனநிலை பொறுத்து எதுனாலும் முடிவு பண்ணிக்கலாம். எனக்கு என்னவோ உங்க காதலோட மிச்சம் சொச்சம் உங்க மனசுல இருக்குனு தோணுது. அத முழுசா முடிச்சிட்டு வாங்க அதுக்கப்புறம் எதுனாலும் நம்ம பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவள் மறுப்பாக ஏதோ சொல்ல வந்ததை தனது கைகளை நீட்டி நிறுத்தியவன், “ஷீ இமை நீங்க ஆயிரம் சொல்லலாம் நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். இப்போ என் மனசுல எதுவும் இல்லன்னு ஆனா நீங்க சொல்றதெல்லாம் நம்பி என்னால என் வாழ்க்கையை ரிஸ்க் எடுக்க முடியாது. என்ன அப்படி பாக்கறீங்க நான் எங்க அம்மாவுக்கு ஒரே பையன் மா எங்க அம்மாவுக்கு என் வாழ்க்கை பத்தி நிறைய கனவு இருக்கும் மா.என்னோட மேரேஜ்க்கு அப்புறம் எங்க அம்மா எதிர்பார்க்கிறது அவங்களோட பேரப்பிள்ளையை மட்டும் தான். இப்ப இருக்கிற உங்க தடுமாடுற மனசோட உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு டைம் கொடுத்து.. உங்க மனசுல இருக்க காயத்தை ஆத்தி.. உங்க மனசுல இடம் பிடிச்சு… அதுக்கப்புறம் தான் என்னோட வாழ்க்கையை தொடங்க முடியும். இதுல ரொம்ப பெரிய ப்ராஸஸ் (process) மா அது என்னால கண்டிப்பா பண்ண முடியாது. ஏன்னா ஃபேஸிக்கலி நான் கொஞ்சம் சோம்பேறி. சோ நீங்க தெளிவாகிட்டு வாங்க அதுக்கப்புறம் நம்ம என்னனாலும் பேசிக்கலாம்” என்று அவளை பேசவிடாமல் குழப்பி விட்டு சென்று விட்டான் அவன்.

 

 செல்லும் அவனை குழம்பிய மனதோடு பார்த்துக்கொண்டு நின்ற இமை அதுவரை அவனை மீண்டும் சந்திக்கக் கூடாது என நினைத்துக் கொண்டு இருந்தவள் இவனின் பேச்சைக் கேட்ட பிறகு அவளின் ஈகோ விழித்துக் கொள்ள கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்ற உறுதி மனதில் வந்தது. அதனைக் கொண்டு தனது தோழியிடம் ஆயிரம் சத்தியங்கள் செய்து விட்டு இதோ அவனைப் பார்க்க அவனின் ஊருக்கு வந்து விட்டாள்.

 

 ஆனால் இப்போது அவளுக்கு தோன்றி விட்டது அவனின் பேச்சைக் கேட்டிருக்கக் கூடாது என்று, “உனக்கு இதெல்லாம் தேவையா டி விழி அந்த மெண்டல் பேச்சைக் கேட்டு இங்க வந்திருக்கவே கூடாது. டேய் கண்மணி உனக்கு இருக்குடா என்ன இப்படி சிக்க வச்சிட்ட இல்ல” என்று தனது கண்களை இறுக்க மூடிக் கொண்டு யாரை திட்டிக் கொண்டு இருந்தாளோ அவளின் எண்ணத்தின் நாயகனே, “என்ன இமை மேடம் பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சி” என்ற நக்கலுடன் அவளின் முன்னே வந்து காட்சி தந்தான் அவன் செலின் கண்மணி.

 அவனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் அவள் நிற்க அவளைப் பார்த்து கண்ணை சிமிட்டியவன், “என்ன இமை மா இந்த கண்மணிய உன் இமைக்குள்ள மூடி வச்சுக்க போறீயா” என்றான் ஒருமையில் அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டு

 அதில் அதிர்ச்சியில் இருந்து மீண்டும், “என்ன சொன்னீங்க” என்று முறைக்க

 

“அப்பா என்னா பயர்” என்று மெதுவாக சொன்னவன், “உங்க கண்ணுக்குள்ள தூசி விழுந்தூர போகுது. அப்படி பாக்காதீங்கன்னு சொன்னேன் மா போதுமா” என்று பன்மையில் பேசி மீண்டும் அவளை குழப்பிவிட்டு, “சரி சரி வாங்க இமை மேடம் வீட்டுக்கு போலாம்” என்று அவள் லக்கேஜை தூக்கிக்கொண்டு தனது காரை நோக்கி சென்றான்.

 

 அவள் தான் இவன் செய்கையை புரியாமல், “ஐயோ கடவுளே படுத்துகிறானே” என்ற புலம்பலோடு அவளின் பின்னே சென்றாள்.

 

 இதில் அவன் எப்படி இந்த ஊருக்கு வந்தான் என்பதை விசாரிக்க மறந்து விட்டாள்.அந்த அளவிற்கு அவளின் வாழ்க்கைக்கு வந்தது முதல் அவளை ஒரு நிலையாக யோசிக்க விடாமல் குழப்பமாகவே வைத்துக் கொண்டு இருக்கிறான் செலின் கண்மணி. குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும் என்று அவன் நினைத்து செய்யப் போகும் காரியம் எல்லாம் அவளின் உள்ளே புதைத்து வைத்திருக்கும் காதலும் அதன் நினைவுகளும் சேர்ந்து அல்லவா வெளியே வரும் என்று அவன் அறிந்திருந்தால் இதனை செய்திருக்க மாட்டானோ…

 

 அவள் ஆழ்மனதில் ஒருத்தன் நங்கூரமிட்டு உட்கார்ந்திருக்க அவனை அகற்றி விட்டு தனது இமையை சிறைபிடிப்பானோ இந்த கண்மணி…..

 

 இல்லை தனது வாழ்க்கையில் நடந்த மர்மங்களை சொல்லி மனதில் உள்ள அவள் காயங்களை அகற்றி தனது அன்பால் விழி மலர ஆட்சி செய்வானா அந்த அரசன்…

 

 நீங்க சொல்லுங்க மக்களே இமை கண்மணிக்கா? இல்ல விழி அரசனுக்கா?..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!