Skip to content
Post Views: 5,935
அன்பரசி சக்திப்ரியாவின் அருகில் கூடச் செல்லமுடியாமல் அதிர்ந்து நின்றிருந்தார் அருகில் போய் மட்டும் இப்பொழுது தன்னால் என்ன சொல்லிவிட முடியும், ரங்கசாமியும் அதே நிலையில் தான் நின்றிருந்தார்.
செல்வராஜ் வனஜாவை அர்த்தமாகப் பார்த்தார், வனஜா அருகில் நின்ற மகள் நிர்மலாவின் கையில் வலிக்கக் கிள்ளினார் “ஆஹ்ஹ்” என்று வலியில் கத்திவிட்டாள் நிம்மி.
Advertisement
“ஏன்மா” என்றாள் தாயைப்பார்த்து.
Advertisement
Advertisement
“நல்லா பாத்துக்கோ அப்பன் ஆத்தா பாத்து செஞ்சு வைக்காத எல்லாமே இப்படி தான் உறுபடாம போகும், இதெல்லாம் இவளுக்குத் தேவையா அவங்க அப்பா இருந்த பதவிக்கும் இருக்குற சொத்துக்கும் அந்தச் சந்தோஷ் பையனைக் கட்டிக்கிட்டு போயிருக்கலாம் எவ்ளோ நல்லா வாழ்ந்திருக்கலாம்”.
Advertisement
“காதலாம் காதல் அதும் அந்தக் காட்டுப்பய மேல நாளைக்குத்தாலி கட்ட கூட வருவானோ இல்லையோ இவனை நம்பி இவ வாழ்க்கையை குடுக்குறா கூறுகெட்டவ மக போடுற தாளத்துக்குத் துள்ளிக்கிட்டு திரியிறாங்க உன் பெரியப்பனும் பெரியம்மாவும்”.
“இங்கப்பாருடி உனக்கு அந்த மாதிரி ஏதாவது நினைவு இருந்துச்சு இப்போவே மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திப்புடு இல்ல பெத்த பிள்ளைன்னுலாம் நாங்க பாக்கமாட்டோம் சோத்துல வெஷம் வெச்சுருவோம் இப்படி மானங்கெட்டுலாம் எங்களால நிக்க முடியாது” என்றார்.
நிர்மலாவின் விழிகள் சக்திப்பிரியாவின் மீதுதான், மகேந்திரன் என்ற தந்தை அவளைச் சிறு வயது முதலே மிகவும் கவர்ந்தவர் மகள்தான் அவர் உலகம் அவள் விரும்பியதை படிக்கவைத்து விரும்பிய வேலைபார்க்க அனைத்தையும் செய்துகொடுத்து தைரியத்தை கொடுத்துச் சுதந்திரம் கொடுத்து ஒரு உற்ற தோழனைப் போல உடன் நிற்பவர்.
இல்லையேல் ஒரு பெண் பிள்ளையால் தந்தையின் முகம் பார்த்து எனக்கு அவரைப் பிடிச்சிருக்குபா என்று கூற முடியுமா அப்படிப்பட்ட தந்தை மகளுக்கு எப்படிப்பட்ட ராஜகுமாரனை கொண்டுவந்திருப்பார் நிம்மதியான நிறைவான வாழ்வை மகளை வாழ வைத்திருப்பர் ஆனால் இந்தக் காதல்… இது என்ன செய்திருக்கிறது அவளை.
தனக்கு வாழ்வில் கிட்டிய அத்தனை அன்பையும் அவன் ஒருவனுக்கு கொடுக்கத் தவம் இருக்கிறாள், என்ன காதல் இது என்ன விதமான நேசம் இது சரிதான் போ என்று தூசியாக அனைத்தையும் தட்டிவிட்டுச் செல்லும் சக்திப்பிரியா எங்கே.
சிவபாலன் என்ற ஒற்றை மனிதன் அவளை என்ன செய்திருக்கிறான், சக்திப்ரியாவுக்கு அழத் தெரியும் என்பதே இந்தக் காதல் அவளுள் வந்தபிறகுதான் அவள் வீட்டினருக்கே தெரிகிறது கடல் அளவு இவள் கொட்டிக்கொடுக்கும் இந்த நேசத்திற்கு ஒரு துளி அளவு நேசமாவது அவனிடமிருந்து இவளுக்குக் கிடைக்குமா என்ற சிந்தனையில் நின்றவளின் கையை மீண்டும் கிள்ளினார் வனஜா.
“மறுபடியும் என்னம்மா” என்றாள் வலியோடு.
“என்ன அப்படியே அவளை ரசிச்சு பாக்குற உனக்கு அந்த மாதிரி ஏதும் நினைப்பிருக்கா” என்றார் அவரின் முட்டைக்கண்களை உருட்டி.
‘அடப்பாவிங்களா காதலிச்சவ அங்க புடவைத்தேட ஆரம்பிச்சுட்டா கூட நின்ன குத்ததுக்கா இப்படி கொமட்டுல குத்துறீங்க’ என்று மனதில் புலம்பிக் கொண்டு “இல்லம்மா நீங்கச் சொன்னா காவிக்கூட கட்டிக்கிறேன்மா” என்றாள் பவ்யமாக.
மகேந்திரன் மகளைச் சமாதானப்படுத்தி அன்புக்கரசியை கண் காண்பித்தார் தன்னை கொஞ்சம் தேற்றிக்கொண்டவள் “சாரி அத்த ஏதோ… அதை விடுங்க எல்லார்க்கும் துணி எடுத்தாச்சுல்ல என்னோடது நான் அப்புறமா எடுத்துக்கவா” என்றாள்.
அவரால் என்ன சொல்ல முடியும் “சரி” என்பதாகத் தலை அசைத்தார்.
எடுத்ததற்கு மட்டும் பணம் செலுத்தினர், முத்து சக்திப்ரியாவின் அருகில் வந்தவன் “நீயும் வா அம்மாவையும் அய்யாவையும் வீட்ல விட்டுட்டு ஆபிஸ் போலாம் அண்ணா கிட்ட நேராவே கேளு” என்க திரும்பித் தந்தையை பார்த்தாள் அவள்.
“புடவைய கொடுத்து விடுவாங்களா என்ன சொல்லுவாங்க தெரியலையே” என்க.
“அட நம்ம வீட்டுப் பிள்ளைக்கு இல்லன்னு சொல்லிடுவாரா அண்ணாச்சி” என்றவன் நேரே சென்று கடை முதலாளியிடம் பேசினான்.
சில நொடிகளில் வெளியில் வந்தவர் மகேந்திரன் நேரே கையைக் கூப்பி “வாங்க வாங்க நம்ம பாலன் தம்பிக்கு மாமனாரா தம்பி சொல்லவேயில்லை இல்லனா முன்னாடியே கவனிச்சிருப்பேன்” என்றவர் பூர்ணிமாவிடமும் பேசிவிட்டு.
அன்புக்கரசியிடம் “என்னம்மா நீங்களும் சொல்லல” என்றார்.
முத்து கண்காண்பிக்க “உங்களுக்குப் பிடிச்ச புடவையை எடுத்துட்டு போய்த் தம்பிகிட்ட காட்டுங்க அவர் முடிவு செஞ்சதும் சொல்லுங்கம்மா பில் போட்டுக்கலாம் எடுத்துட்டு போங்க” என்றார்.
“நான் வரவா” என்றார் மகேந்திரன்.
“வேண்டாம்ப்பா நான் கூட்டிட்டு போறேன்” என்ற முத்து அன்புக்கரசி ரங்கசாமியை வீட்டில் விட்டுவிட்டு இவளைச் சிவபாலனிடம் அழைத்துச்சென்றான்.
தன் முன்னில் அமர்ந்திருந்தவளை பார்க்கப் பார்க்க அப்படியே அள்ளிக்கொள்ளத் தோன்றியது அந்த முரடனுக்கு, அழுததில் இமைகள் வீங்கி மூக்கின் நுனி சிவந்து காற்றில் அலைபாயும் முடிக்கற்றைகளோடு அவனை நேர் பார்வை பார்த்து அமர்ந்திருந்தாள்.
“என்னாச்சு ஜலதோஷமா” என்றான் சிவபாலன்.
“ஆத்தீ” என்று முத்துப்பாண்டி வாயில் கையை வைக்க அவனை நிமிர்ந்து அழுத்தமாகப் பார்த்தான் சிவபாலன் சத்தம்காட்டாமல் வெளியேறினான் முத்து.
“ஆமா” என்றாள் மூக்கை சுருக்கி.
“என்ன வேணும்” என்றான் வேலையில் கவனமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு.
“முகூர்த்த புடவை நீங்க… உங்களுக்குப் பிடிச்சதை சொல்லுங்க” என்றாள் திட்டுவானோ என்று உள்ளுக்குள் கொஞ்சம் பயமும் இருந்தது.
“கட்டப்போறது நீ நான் என்ன சொல்ல” என்றவனை வேகமாக நிமிர்ந்து பார்த்தவள் “பாக்க போறது நீங்கதானே அப்போ நீங்கதான் சொல்லணும்” என்றாள்.
“அப்படியா” என்றவன் விழிகள் அவளைக் கூர்மையாய் அளவிட்டது “எப்போ பாக்கலாம்” என்றான் மீசையை முறுக்கிக்கொண்டே.
விழி விரித்து அவனைப் பார்த்தவள் “நான் புடவையைச் சொன்னேன்” என்றாள்.
“எனக்கு புடவையைப் பாக்கவேண்டாம்” என்றவன் கண்களில் முழுதும் விஷமம் சக்திப்ரியாவின் மேனியே சிவந்ததை போல அவளால் அங்கே அமர முடியவில்லை சட்டென்று எழுந்துகொண்டாள்.
“என்ன சொல்லவேண்டாமா” என்றான்.
“சொல்லுங்க” என்றாள் தலையைக் குனிந்துகொண்டு.
“புடவை உனக்குத்தான் தேவை எனக்குத்தேவையில்ல அதான் எனக்குப் பாக்கவேண்டாம்னு சொன்னேன்” என்க சேரை அழுத்தமாகப் பற்றினாள் முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை அந்தக் குரல் கூட ஏதோ புதிதாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அத்தனை ஆர்ப்பரித்தது உள்ளம் ஆனால் முடியவில்லை.
“நான் சொல்ற எதையும் கட்டிப்பியா” என்றான் அவளைத் தீர்க்கமாகப் பார்த்து, நிமிர்ந்து அவனை நன்றாகப் பார்த்தவள் “கண்டிப்பா” என்றாள்.
“ஒருவேளை மோசமான துணியைக் குடுத்து உன்னைக் கட்டச்சொல்லிட்டா என்ன செய்வ இவ்ளோ நம்பிக்கை நல்லதில்லை” என்றான் சூழல் நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து.
“எனக்குத் தெரிஞ்ச சிவபாலன் பெண்களை மதிக்கிறவர் தன் வீட்டு பெண்களை மட்டுமில்ல தான் பாக்குற எல்லா பெண்களையும், அப்படிப்பட்ட சிவன் தன்னோட சரிபாதியான சக்தியை எங்கேயும் தலைகுனிய விடமாட்டார் அது என் நம்பிக்கை மட்டுமில்ல எனக்கான கர்வம் கூட” என்றவளை அமைதியாகப் பார்த்திருந்தான்.
உள்ளுக்குள் அப்படியொரு நிறைவு அவனுக்கு உணர்வுகளை வெளிக்காட்டி பழக்கம் இல்லாதவனால் இப்பொழுதும் அதை வெளிக்காட்ட முடியவில்லை வெளியில் அமைதியாக அமர்ந்திருந்தவன் உள்ளம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.
“அந்தப் பிங்க் எடுத்துக்கோ ஆனா அது முகூர்த்த புடவை இல்ல முகூர்த்த புடவை நாளைக்கு உன்னைத் தேடி வரும்” என்றான் அதே அமைதியான குரலில்.
அவன் சொல்லியதை உள்வாங்கியவள் முகத்தில் நிறைவான புன்னகை மலர்ந்து சிரித்தாள் வந்தபோது சுருங்கியிருந்த முகம் பளபளத்தது, முகம் கொள்ளா புன்னகையோடு வந்தவளை விழி விரித்துப் பார்த்தான் முத்துப்பாண்டி.
“என்ன” என்றவளிடம் “யாரோ ஒருத்தவங்க உங்க அண்ணனுக்குப் பிடிச்சுதான் ஒத்துக்கிட்டாரா டார்ச்சர் பண்ண போறாரான்னு என் மண்டையை போட்டு உருட்டிட்டு இருந்தாங்க அவங்களை பாத்தீங்களா” என்க அவள் முகத்தை வேறு பக்கம் திரும்பினாள்.
“அட அட இதுதான் வெக்கமா” என்றவன் “அண்ணா ரூம்ல இருந்து இப்படி சிரிச்சுக்கிட்டு வர மொத மனுஷ ஜீவி நீதான்” என்றான் அதே ஆச்சர்யத்தோடு.
அதற்கும் புன்னகையை பதிலாகக் கொடுத்தவள் “கடைல போய் இதைக் கொடுத்துட்டு வீட்டுக்குப் போகணும் வாங்க வாங்க” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.
மறுநாள் காலைப் பத்துமணிபோலப் பார்லர் வந்திருந்தான் சிவபாலன் முத்து அழைத்துக் கீழே நிற்கிறோம் என்றபோது முத்துவிடம் கொடுத்துவிட்டிருக்கிறான் என்றுதான் எண்ணினாள்.
“மேலே வாங்கண்ணா” என்றவளிடம் “அண்ணா வந்திருக்கார் நீ கீழ வா” என்றான் மெல்லிய குரலில்.
கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தாள் அவனின் தார் நின்றிருந்தது அப்படியொரு உற்சாகம் அவளுள், இனி பத்து நாட்களுக்கு அவள் பார்லர் வரப்போவதில்லை ஆகையால் சில முக்கிய வேலைகளை முடித்துவைக்கவும் மற்றவர்களுக்குப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் வந்திருந்தாள்.
பார்லர் வைத்திருக்கிறாள் அதைப் பற்றிப் படித்திருக்கிறாள் ஆனால் அவளுக்கென்று பெரிதாக எதுவும் செய்துகொள்ளமாட்டாள் இப்பொழுது திருமணத்திற்கு பேஷியல் செய்திருந்தாள் மெஹந்தி அவளுக்குப் பிடித்தமில்லை மருதாணிதான் வைத்துக்கொள்வாள் ஆகையால் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வைத்துக்கொள்ளலாம் என்று அதையும் செய்யவில்லை.
கண்ணாடியில் ஒருமுறை தன்னை பார்த்துக்கொண்டாள் வேகமாகத் துள்ளிக்கொண்டு ஓடினாள், அவளைப் பார்த்தவன் ஜீப்பிலிருந்து இறங்கி அவள் பக்கம் வந்தான் கையில் ஒரு பை அதை அவள் கையில் கொடுத்தான்.
ஆசையாக வாங்கி திறந்து பார்த்தாள் மஞ்சள் நிறத்தில் அடர் நீல நிற பார்டர் வைத்த கோர்வை பட்டுப் பருத்தி புடவை ஆடம்பரம் எதுவும் இல்லை தங்க இழைகள் இல்லை வேலைப்பாடு எதுவும் இல்லை அவள் அதை ஆசையாகத் தடவி பார்க்க அவன் விழிகள் அவளில்தான் படிந்திருந்தது.
முகத்தில் பிடித்தமின்மை தெரிகிறதா இதுவா என்ற ஏளனம் வருகிறதா என்று அப்படி எதையும் காணமுடியவில்லை.
“கட்ட முடிஞ்சா இதைக் கட்டு இல்லனா உங்க வீட்ல சொல்றதை கட்டு” என்று சொல்லிச்சென்றுவிட்டான்.
நிச்சயமாக இதைக் கட்ட அனுமதிக்க மாட்டார்கள், சபையில் பெருமையாக இருக்காது என்று அவளைப் பேசிச் சரிக்கட்ட பார்ப்பார்கள் அவனுக்கே தெரியும்.
‘ஏன் இந்தப் புடவை என்று அவன் காரணம் ஏதும் சொல்லவில்லையென்றாலும் அவளுக்கு ஒரு யூகம் இருந்தது, அவனின் பாட்டி செங்கமலம்… அவரின் தேர்வாகத்தான் இருக்கும் அவரின் நினைவிவாக வைத்திருக்கிறானா இல்லை அவர் எடுத்துக் கொடுத்ததா தெரியவில்லை”.
பார்த்ததுமே அவளுக்குத் தெரிந்தது பல வருடங்களாக அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது என்று, புதிய புடவைதான் இன்னும் யாரும் உடுத்தவில்லை ஏன் விரித்துக்கூட பார்க்கவில்லை.
அவன் சென்றபிறகும் அங்கேயேதான் நின்றிருந்தாள் அவன்தான் வேண்டும் என்று அவனிடமே சண்டைக்கு நின்றவள் முதன் முதலாக அவன் கொடுத்த ஒன்றை வேண்டாம் என்று சொல்லுவாளா.
error: Content is protected !!