நன்னிலவு நீ… தண்நிழல் நான்…4
அத்தியாயம் -4
இருக்கிறாயா என்ற கேள்விக்கு உன்னுள் தானே சுவாசமென
கலந்திருக்கிறேன் என்றெல்லாம் விதண்டாவாதம் புரிவதில்லை. தலை கலைத்தேனும் உணர்த்தி விட்டு போகத் தெரிந்திருக்கிற காற்று…. அன்பு.
Advertisement
ஆராய்ச்சியின் நிமித்தம் ஒருவருடம் பிரிவாகத்தான் மித்ரன் சென்றிருக்கிறான் என ஆதிரைக்கு இன்னும் மனம் நம்ப மறுத்தது. இத்தனைக்கும் மித்ரன் தான் ஜெர்மனி செல்வதாக ஆதிரையிடம் கூறிய அந்த தினத்துக்கு பின் கிட்டிய இறுதினங்களுக்குள் ஒரு மெகா ஷாப்பிங்காக மூன்று மாத க்ரோசரீஸ் வாங்கி ஸ்டோர் செய்தவன் ஊரிலிருந்து அவன் அத்தம்மா என விளிக்கிற அவன் அத்தையை ஆதிரைக்கும் கண்மணிக்கும் துணையாய் வருவித்தான். அந்த இருதினங்களும் கண்மணியை ஒரு தோளிலும் ஆதிரையை மற்றொண்டிலுமாய் இறுக அணைத்து உறங்கினான் . கிளம்பும் அன்று காலை அவள் முன்நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து “போய்ட்டு வரேன் பாத்துக்கோ” என்றான். எல்லாம் சரி தான் ஆனாலும் அவன் இவள் விழி பாராது பேசியதும், ஏர்போர்ட்டில் அவள் பற்றியிருந்த கரத்தை விரல்கள் ஒவ்வொன்றாய் விலக்கிய அந்த அழுத்தமும் அவளுக்கு வேறு ஏதோ கதை சொல்லியது .
ஏனோ ஆதிரைக்கு இந்த பிரிவு மித்ரனின் பணி நிமித்தமாய் வந்ததாய் மனம் உணர மறுத்தது.
எப்படியோ வீடு வந்து மித்ரன் இல்லாத வாழ்வை புதிய உறவாக வந்த அத்தம்மாவின் துணையுடன் துவக்கினாள். அத்தம்மா மித்ரனின் தகப்பனாரின் சகோதரி. அவர் மணம் முடிந்த இரு மாதங்களுக்குள் கைம்பெண் ஆனவர். மித்ரனை தூக்கி வளர்த்தவர். அவ்வளவு அன்பாய் இருப்பார். ஆதிரை மித்ரன் திருமணம் முடிந்த அன்று மாலை ஆதிரையை அழைத்து அருகில் இருத்தி உச்சி முகர்ந்தார் . “ வகிடு எடுக்க மாட்டியாமா?” என்ற படி தலை வாரி சரமாக மல்லி வைத்து அழகு பார்த்து “இனி உனக்கு அவன், அவனுக்கு நீ மா” என்றார் ஆதிரைக்கு மித்ரனின் தாயாரை விடவும் அத்தம்மாவை ஏனோ மிக பிடிக்கும். அதை உணர்ந்து தானோ என்னவோ மித்ரன் அத்தமாவை அழைத்திருந்தான்.
Advertisement
மித்ரன் ஜெர்மனி சென்று சேர்ந்ததும் அழைத்திருந்தான். “வந்துட்டேன், குட்டி என்ன சொல்றா?” என்றபடி வெகு பார்மலாக பேசி “சிக்னல் இல்ல போல, கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டான்.
Advertisement
மித்ரனை பிரிந்த இரு வாரங்களாகியிருந்தது . தினமும் இரவு SKYPE ல் குட்டியுடனும் இவளுடனும் பேசுவான். விடியும் நாட்கள் அனைத்தும் மேலோட்டமாக எவர் கண்ணுக்கும் எல்லாம் சரியாக போவதாக தான் தோன்றும்படியாக தான் சென்றது.
ஆனால் ஆதிரை உள்ளுக்குள் அழுதாள். “தன் உணர்வுகள் சரியானதா? தான் எங்கு தவறிழைத்தோம்?” என எண்ணி எண்ணி மருகினாள். மித்ரனுடனான தன் நாட்களை சீர் தூக்கி பார்த்தாள். “மித்ரன் அவளுக்கு யாராக இருந்தான்? தனக்கு அவன் பால் வந்த அந்த அன்பு எத்தகையது?” என நினைக்க நினைக்க ஊற்றாய் இன்னும் இன்னும் விழி நீர் பெருகியது .
நதியோரத்து படித்துறையில் நின்று இரு கரம் குவித்து நீர் அள்ளி நிற்கையில் அந்நீரில் வந்து தெளியும் முகம் போல அவள் மனதுள் வந்து பதிந்த ஒரு வதனம். அவன் சொல் வன்மையை அவள் போல கொண்டாட யாரால் முடியும்? எப்பொழுதும் அவன் நன்மையை மாத்திரம் சிந்திக்கும் மனம். அவளுக்கு அவன் பால் அவளின் பிரியம் குறித்த பெருங்கர்வமே உண்டு . அவன் மேல் வந்த எந்த சிறு கோபமும் வருத்தமும் ஒரு அரை மணி நேரம் கூட நீடிக்காது . அலை போல நுரைத்து வெளிவந்து புரளும் அவன் மேல் அவள் கொண்ட பிரேமை.
Advertisement
அவளுக்கு மனதோரம் எப்பொழுதும் ஒரு சிறு ஐயம் திடும் திடுமென முளைக்கும். தனக்கு அவன் மேலான பித்தை போல அவனுக்கு துளியேனும் தன மேல் இருக்குமா என ..தன்னை ஏதேனும் ஒரு கணம் அவன் தன்னவளாய் உணர்வானோ என. அவர்களுக்குள் நடக்கும் ஒரு தினப்படி அழகியல் என்னவெனில் அவள் கல்லூரி விட்டு வரும்போதோ இல்லை பாத்திரங்கள் துலக்கும்போதோ கேட்கிற பாடல்களின் ரம்மியமான வரிகளை அவனுக்கு வாட்ஸாப்ப் ல் மெசேஜ் செய்வாள். அவன் அதை பார்த்து விட்டு வேறென்ன ஒரு ஹார்ட் விடுவான். அன்று அவள் முதற்கனவே பாடலே சிலாகித்து கேட்டு “அந்த தாமரையே தாமரையே .. ..மனதுக்குள் விளக்கடித்து… தூங்கும் காதல் எழுப்புவாய்” வரியை அனுப்பி வைத்து …”இதெல்லாம் செம கற்பனைன்னலங்க, முன்னெல்லாம் பெருசா இந்த பாட்டு பிடிக்காது…இப்போ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப ரசிக்கிறேன்” என அதை பார்த்த மித்ரன் “ நானுன்” என அனுப்பினான் . இவள் ஒரு கணம் சிலிர்த்து பறந்தாள். அந்த பாடலில் வரும் “கண்மணி, நானுன் நிஜமல்லவா” வை கேட்டு மூழ்கியிருந்த அதே நேரம் வந்த அந்த நானுன் அவளை அப்படி அசைத்து பார்த்தது…ஆனாலும் அவளுக்கு தெரியும் அவன் அப்பாடலை நானும் ரசித்துள்ளேன் என்பதை தான் நானும் என்பதற்கு பதில் ஒரு டைபோ வாக நானுன் என அனுப்பியிருந்தான் என. ஆனாலும் உன்மத்தம் என்பது யாதெனில் அவள் உணர்ந்த அந்த நானுன் தான் அவளுக்கு!.
எப்படி எப்படி எல்லாமோ அவள் அவனை தான் காண்கிற தான் உணர்கிற அனைத்திலும் கண்டாள்.
இன்று அவளால் தாங்க இயலாதது, அப்படி இடக்கரத்தால் புறந்தள்ளியது போல, தன்னை பிரிவது ஒரு பொருட்டே இல்லாதது போல, அவன் அவளை விட்டு வெகு தூரம் சென்றது தான் .
இவள் மருகியதை உணர்ந்த அத்தம்மா அவளை அன்று அழைத்திருந்தார் . அருகில் அமர்த்தி “என்னமா மித்ரன் இல்லாம முடியலையா” என வினவ அத்தம்மாவின் மடியில் கதறி தீர்த்தாள். “என்னாச்சு மா”, என “இல்லமா, எங்களுக்குள்ள ஏதோ விட்டு போனது போல…அவர் ஏதும் மனசு விட்டு பேசாதது போல, என்ன தவிர்ப்பது போல இருக்குமா” என, அத்தம்மா ஒரு நிமிஷம் போல அமைதி காத்து தொடர்ந்தாள் “இல்லடா இது மிகப்பொருந்திய மனங்களிடையே தோன்றும் ஒருவித டேக்கன் ஃபார் கிரான்டெட் ஆடிட்யூட், என்னவள் தானே என்னவன் தானே ..என்பதாகவோ அல்லது ஒருவித மிட்லைஃப் கிரைசிஸ்ன் துவக்கம் …..
சில நேரங்களில் காதல் …
ஒரே பாடலை இருவரும் வேறு வேறு நேரத்தில் கேட்பது போல.
ஒருவர் இன்னும் அந்த ராகத்தில் மூழ்கியிருக்க,
மற்றவர் அடுத்த பாடலுக்கு நகர்ந்துவிடுவார்.
பாடல் மாறிவிட்டதாலே காதல் மாறிவிடவில்லை…
ஒரே அலைவரிசையில் மீண்டும் திரும்பி சேர்ந்தால் போதும்” என்றார்.
அத்தம்மாவின் வயதும் அனுபவமும் கூறியவைகளை ஆதிரை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
துடிக்கும் இதயம் கையில் தந்து உருட்டி பார்க்கத்தரும், பின் குத்தூசி ஒன்றின் பதம் பார்க்கவென அதிலே உதிரம் சொட்ட ச்சொட்டசெய்வது தானே காதல்! ஆதிரைக்கும் இது ரணம் கசியும் காலம் போலும்.
மித்ரன் ஜெர்மனி சென்று ஒரு ஐந்து மாதங்கள் இருக்கும் வழக்கம் போல கண்மணி குட்டியை பற்றிய பேச்சுகளும் நலம் விசாரிப்புகளுமாய் ஒரு அணுக்கமுமற்று நகர்ந்தன நாட்கள்.
ஆதிரையும் மித்ரனுமாய் கட்டிய அவர்களின் சிறிய அந்த டுப்லெக்ஸ் வீடு அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். அவளும் மித்ரனுமாய் பார்த்து பார்த்து சில விஷயங்கள் செய்திருந்தனர் . வீட்டின் முன்புறம் ஊஞ்சலுடன் கூடிய லானும் அதன் ஓரமாய் செஞ்சிவப்பில் நாட்டு செம்பருத்தியும் வெளீரென இளஞ்சிவப்பில் முஸ்ஸாய்ண்டாவும் வீட்டினுள்ளே அடுக்களைக்கும் டைனிங்க்குமான இடைச்சுவரில் பதிப்பித்த பற்றுக்கொடிகள் சூழ்ந்த மலர்களிலான டைல்ஸ் ஒர்க்கும் புத்தகங்களுக்கென சுழல் மேஜை அமைப்பை போன்ற மினி லைப்ரரியும் முதல் தள படுக்கை அறைக்கு வெளியே பிரெஞ்சு விண்டோ அமைப்பில் ஒரு சிட்அவுட்டும் அவளுக்கு அவளின் அச்சிறு இல்லம் ரொம்பவே ஸ்பெஷல். அதே ஆதிரைக்கு இப்பொழுது அந்த வீடு உயிரற்றதாய் தோன்றிற்று. “Home is where he is….My home is He “…என மெல்ல தன்னுள்ளே சொல்லிக்கொண்டாள். இருவருமாய் சேர்ந்து நகைத்து கழித்த பொழுதுகள் சுவர்ச்சித்திரங்கள் போல மனதில் நிழலாடி கடந்தது . ஒருநாள் கண்மணிக்குட்டி உறங்கியபின் “இங்க வா” என்று அந்த சிட் அவுட்க்கு அழைத்து சென்றான் . அங்கு மேஜையில் ஒற்றை மெழுகு திரியின் ஒளியில் “சர்ப்ரைஸ்” என்று கரம்பிடித்து அமர்த்திவிட்டு ஐஸ் க்யூப்ஸ் நிறைந்து மிதந்த ஒரு கோப்பையை தந்தான். “என்னங்க இது?” என்றாள்… “சும்மா ..வோட்கா” என கண்சிமிட்டினான் .
மென் காற்றில் அந்த குளிர் இரவில் அந்த ஹஸ்கி குரலில் அவன் அப்படி கூறுவதே கவிதை போலிருக்க, இவள் ஏறிட, “ உன் பக்கெட் லிஸ்ட் ல கடைசியா இருந்ததே அதான் “ என்றான் ..இவளுக்கு அந்த ஒரு கோப்பை தீர்க்கவே பெரும்பாடாக போயிற்று…ஆனாலும் அவன் கண்சிமிட்டிய அந்த கணமும் அந்த இரவும் … “போதவில்லையே போதவில்லையே உன்னை போல போதை ஏதும் இல்லையே” என உள்ளே பாடல் ஒலித்ததை இன்றும் நினைத்து பார்க்கிறாள்.
அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாதமிருக்கும். பிரியத்தின் பித்து தலைக்கேறியிருந்த நாட்கள். மித்ரனும் அவளுமாய் வீட்டினுள் வளைந்தேறி செல்லும் அந்த மாடிப்படியில் அமர்ந்திருந்தனர். அவளிடம் அந்த இரவில் “ஐ லவ் யூ” என்றான் . இவள் அவன் முகம் பார்த்து கிடந்தாள். ஏனோ விழி நீர் தழும்பிற்று. “ஐ பீல் லைக் சேயிங் இட் டூ” என்றாள். “சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது, சொல்லுடி” என்றான் அவன் மார்பில் முகம் புதைத்து “ஐ லவ் யூ” என உச்சரித்த கிடந்தது ஒரு கோட்டோவியம் போல நினைவில் கடக்கும்.
ஆதிரையை பொறுத்தவரை ஒரு நல்ல பிரியம் எதுவெனில் எவ்வளவு பெரிய பிரச்சினையோ ஐயமோ சண்டையோ சச்சரவோ அந்த தினம் தீர்ந்து போவதற்குள் பேசி தீர்த்தாக வேண்டும். ஒரு நாள் நீடித்தாலும் தலை வெடிக்கும் போல ஒரு மன அழுத்தம் உருவாகும். அவள் மனநிலை நன்றாக புரிந்து தெளிந்த மித்ரன் தான் இன்று நாடு விட்டு நாடு சென்று பட்டும் படாமலும் பேசி இருக்கிறான் என்பதே அவளுக்கு பயங்கரமாய் வலித்தது.
அவளுக்கும் மித்ரனுக்கும் ஒரு முறை வந்த ஒரு வாக்குவாதம் நினைவில் வந்தது . எதையோ பேசி சிரித்திருந்த பொழுது மித்ரன் கூறினான் “உன்னை இத்தனை காலம் உன் யூஜி பீஜி டேஸ்ல எல்லாம் எப்படி மிஸ் பண்ணினேன்?” மிக எதேச்சையாக இவள் கூறினாள் “ ஒருவேளை நான் உங்க batch ஆகவே இருந்து உங்களுடனே உங்க ஆராய்ச்சி லாப்ல இருந்திருந்தா நல்லார்ந்திருக்கும்ல…இப்போ மாதிரி எட்டாத உயரத்துல வானத்துல நட்சத்திரம் பார்க்கிறது மாதிரி ஆ.. னு வாய் பிளந்து பார்க்காம கூடவே சேர்ந்து படித்து, சொல்லமுடியாது நம்ம ஆராய்ச்சில உங்கள காலி பண்ணிருப்பேனோ என்னவோ” என்று சிரித்தாள். உண்மையில் அந்த வாக்கியத்தை சொன்னபின்பு தான் அவனை ஏறிட்டாள். அவன் முகம் வெகுவாக மாறியிருந்தது . “எதே காலி பண்ணிருவியா” என்று ஒரு பார்வை தந்துவிட்டு போய்விட்டான். பின் ஒரு வாரம் போல முகம் கொடுக்காமல் திரிந்தான். பின்பு தான் ஒரு கணமும் அவனை குறைவாய் மதிப்பிடவில்லை, உண்மையில்அவன் அவள் அவனுடைய தீர்க்கமான நுண்ணறிவையும், அவனுடைய புரிதலையும், அவன் ஒரு காரியத்தில் இறங்குகிறான் எனில் அதில் எவ்வளவு தீர்க்கமாய் இருப்பான், என அவள் ஒவ்வொன்றாய் அவள் அவனிடத்தில் வியந்ததோதியை எப்படியோ பேசி தெளிந்தபின் “இவள் இப்படி நீங்க முகம் பாராது திரிவது வலிக்குதுங்க” என “அதெல்லாம் அப்படி தான் ஒரு இளைப்பாறுதல் போல தான உறவுகள் எல்லாம்..பறவை அமர்ந்து எழுந்து பறந்து பின் தோன்றும்போது வந்து மீண்டும் கிளையில் அமரும் ? எங்கு போய் விட போகிறோமென்றான் “. அவளுக்கு தோன்றிற்று பறவைக்கென்ன ? மரத்திற்கு தான் தெரியும் காத்திருத்தல் ஒரு யுகத்திற்கான வலி என்று.
அவனுடன் வாழ்ந்த அவளுக்கு மிக நன்றாக புரிந்தது இனி அந்த பழைய அணுக்கமும் நெருக்கமும் அவனாக நினைக்காத வரை கிட்டாது என. சரி காத்திருப்போம் இன்னும் சில மாதங்களில் வந்துவிடுவானென இருந்த பொழுது வந்தது அந்த பேரிடர் பெரும்பிணி கொரோனா காலம்! கொடுமையான காலகட்டம் அது! இத்தாலியில் சடலங்களின் குவியல் , அம்மக்களின் கையறு நிலை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்தியாவில் கொரோனா தலைக்காட்ட துவங்கிய காலம். ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்து தன் உறவுகள் அத்தனை பேரின் பெயர் சொல்லி இறைவனிடம் மண்டியிடுவாள். வான் வழி போக்குவரத்தும் தடைபட அவன் ப்ரொஜெக்ட்ம் தடைபட எல்லாமுமாய் சேர்ந்து அவன் அந்த ஒரு வருட முடிவில் தாய் நாடு திரும்ப இயலாது போயிற்று . அன்றொரு நாள் அவன் அழைத்திருந்தான். குரல் கமறி எங்கோ கிணற்றுக்கு உள்ளிருந்து கதைத்ததாக ஜீவனற்று தெரிந்தான் மித்ரன். அவள் உயிர் வரை விதிர்விதிர்த்து போனாள். “என்னாச்சுங்க” என “ இங்க லேப்ல ரெண்டு பேருக்கு கொரோனா . எனக்கும் ஏதோ சரியில்ல” என இந்நிலையில் . கண்காணாத எங்கோ அவன் இருப்பதை சகிக்கவே முடியாது எப்படியேனும் எப்பாடு பட்டேனும் வந்து விடுங்கள் என கதறினாள். மித்ரனை ஆதிரை காண்பது எப்பொழுது? அவன் திரும்ப வருவது எப்பொழுது? என்றது போய் அவன் நல்லபடியாக குணமானால் போதும் என்றொரு நிலை. அன்றவள் .தெய்வத்தின் முன் ” என் காதலை காணிக்கை ஆக்குகிறேன் அவனை முழுதாய் திரும்பத்தா” என நின்றாள்.

