நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-5
அத்தியாயம் – 5
சுடராய் தான் மிளிரும்…அதன் மென் தீண்டலில் மெழுகாய் கரையச் செய்யும். பின் விலக இயலா தழலாகி,
வேறொரு நிழலும் சேராதபடி முழுதாய் விழுங்கும் செந்தீ….. காதல்.
அன்றவள் தெய்வத்தின் முன் “ என் காதலை காணிக்கை ஆக்குகிறேன், அவனை முழுதாய் திரும்பத்தா” என நின்றாள். அந்நாட்களை இப்பொழுதும் நினைத்தால் கதறும் மனம். கோவிலே கதியென்று கிடந்தாள். பிறப்பால் ஒரு ஹிந்து எனினும் ஆதிரைக்கு அவள் படித்த கிறித்துவ பள்ளி, கல்லூரியின் தாக்கத்தில் இயேசுகிறிஸ்துவின் பால் அலாதி பிரியம் ஒன்று இருந்தது. இருகரம் விரித்த கர்த்தரின் முன்,கொழுத்திய மெழுகு திரியும் கையுமாய் முழங்கால்களில் நின்றாள் “என்னவனை காத்திடு” என்று..இரு வாரங்களுக்கு பிறகு ஒரு முற்பகல் வேளையில் அவன் குரல் கேட்டாள். அவன் கொஞ்சம் தேற த்துவங்கியிருந்தான். இவளும் !
பின் என்ன? இந்தியாவையும் பேரிடியாக தாக்கி இவளையும் அத்தம்மாவையும் படுத்தி எடுத்திருந்தது கொரோனா. அந்த காய்ச்சல் கிழமைகளில் தன்னவனின் அண்மைக்கு ஏங்கியது மனம். அவனுடனான நற்பொழுதுகளின் நினைவு ஒரு போர்வை போல அவளை கதகதத்து சூழ்ந்திருந்தது. மித்ரன் தன் நண்பர்களை அழைத்து தக்க மருத்துவ சிகிச்சைக்கு அங்கிருந்தே ஏற்பாடுகள் செய்திட ஒருவழியாய் கடந்திருந்தது அந்த ஆறுமாத காலம்.
Advertisement
ஆனாலும், மித்ரன் உடனே இந்தியா திரும்ப முடியவில்லை.அப்போது உலகமே நின்றது போலிருந்தது. கோவிட்-19 பாண்டமிக் காரணமாக, நாடுகள் எல்லைகளை மூடியிருந்தன.வானூர்தி சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, சர்வதேசப் பயணங்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.. ஜெர்மனியிலிருந்து அவன் வர முயன்றபோதெல்லாம்,ஒரு தடையாக விதிகள்…
மற்றொன்று பயணத் தடை…இன்னொன்று உறுதியற்ற அட்டவணைகள்.
நாட்கள் வாரங்களானது.
வாரங்கள் மாதங்களானது. மெல்ல மெல்ல உலகம் மீண்டும் மூச்சு விடத் தொடங்கியது. வானம் மீண்டும் திறந்தது. “ஏர் பபிள் அக்ரீமென்ட்ஸ்” மூலம் குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம் பெற்றன.பின்னர் 2021ல், ஆர்.டி-பிசிஆர் சோதனை, [(Reverse Transcription Polymerase Chain Reaction) என்பது வைரஸின் மரபணு (RNA) இருப்பதை கண்டறியும் மிகத் துல்லியமான ஆய்வகச் சோதனை], தடுப்பூசி சான்றிதழ், கட்டாய தனிமைப்படுத்தல் ஆகிய கட்டுப்பாடுகளுடன் சர்வதேசப் பயணங்கள் மீண்டும் சாத்தியமானது. அந்த நீண்ட காத்திருப்பின் முடிவாக செப்டம்பர் 20, 2021, அவன் தாய் மண்ணை மிதிக்கச் சாத்தியமான நாளாகியது.
இன்னும் பத்து நாட்களே எஞ்சியிருந்தது மித்ரன் நாடு திரும்ப. எல்லாம் மறந்து உள்ளம் துள்ளி துள்ளி பறந்தது. அவன் வரவும் சின்ன சின்னதாய் நிறைய ஆச்சர்யங்கள் தர நினைத்தாள். கண்மணிக்குட்டிக்கு முன்னாள் பாங்ஸ் வைத்து முடி வெட்ட செய்தாள். என்றோ மித்ரன் அவளிடம் கூறியிருந்தான் “சிறுபிள்ளைகளுக்கு ஒரு பட்டாம் பூச்சித்தனம் வந்துவிடும் பாங்ஸ் வைத்தால்” என்று.
Advertisement
முன் லானில் அடர் ஊதாவும் இளம் சிவப்பும் கலந்த காகிதப்பூ ரக போன்சாய் தொட்டிச்செடிகளாக வாங்கி வைத்தாள். அவனுக்கு மிகவும் பிடித்த பூ எதுவென கேட்டால் “பளீர் சுளீர் வெயில் தின்றும் துவழாது, தலை சரியாது சிரிக்கும் பாரேன் என் காகிதப்பூ” என்பான். அவர்களின் நடை பொழுதுகளில் அவன் வந்ததும் கட்டி பிடித்து கதறி தீர்க்க வேண்டும் இந்த காகித பூக்களினூடே என நினைத்திருந்தாள்.
Advertisement
அவனுக்கு பிடித்த ஆலன் அண்ட் சொலி யில் அடர் ஊதா நிறம் , வெளீர் நீலம் , அலை கடலின் நிறம், வான் நீலம், என நீல நிறங்களில் வித விதமாய முழுக்கை சட்டைகள் வாங்கினாள். அவளுக்கு மித்ரனை நீல நிற சட்டைகளில் காண்பதற்கு அத்தனை பிடிக்கும். முழங்கை அளவு ஸ்லீவ்ஸ் மடக்கி கரம் உயர்த்தி உயர்த்தி அவன் கதைக்கையில் எல்லாம் மைக்ரோ செகண்ட் இடைவெளிகளில் மனதுள் பிளாஷ் அடித்து கொண்டேயிருப்பாள் ஆதிரை. ஏனோ அவளுக்கு நீல நிறம் மித்ரனை அத்தனை பாந்தமாய் காட்டுவதாக தோன்றும். வேலை முடிந்து வீட்டினுள்நுழைந்த மறுநொடி சோபாவில் தொப்பென்று விழுந்து முன்னிரு பட்டன் அவிழ்த்து ஸ்லீவ்ஸ் மடக்கி “ஆதி…” என்கையில் அவள் “ஹொவ் வாஸ் தி டே?” என்றபடியே ஓட்டமாய் சென்று அவன் அருகில் அமர்வாள். அதிலும் அவன் நீல நிற சட்டையை அணிந்திருந்தானெனில் அவன் நெஞ்சில் இன்னும் வாகாய் சாய்ந்து கொள்வாள் என்பது சொல்லாமலும் கேளாமலும் இருவருக்கும் புரிந்த ஒரு இதம்! இருவரின் ஊடல் பொழுதுகளில் சமாதான தூது செல்வதே இந்த நீல நிற சட்டைகள் தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வளர்ந்து ஆறாம் வகுப்பிற்கு வந்திருந்த கண்மணிக்குட்டியும் ஆவலாய் இருந்தாள்.
‘அப்பா… அப்பா…’ என்று கழுத்தை கட்டிக்கொண்டு திரிந்த வயதில்,பிரிந்த தந்தையின் வரவிற்காக,
அந்தச் சிறு பிள்ளையின் மனதிலும் அவ்வளவு ஏக்கம் நிரம்பியிருந்தது.
நாளை அவன் வந்து விடுவான் அதிகாலை மூன்று மணிக்கு பிளைட் . கண்மணிக்குட்டியை உறங்க வைத்து விட்டு அவன் போட்டோ இருந்த அந்த புத்தக அலமாரியின் அருகில் சென்று அவனை பார்த்திருந்தாள். ஏனோ அவன் சிகை கலைக்க தோன்றிற்று . “என்னவனே..” என்றபடியே அந்த புகைப்படத்தில் கரம் பதிக்க செல்கையில் அறியாது எங்கோ தட்டி விட ஒரு புத்தகம் தொப்பென முன் வந்து விழுந்தது. அதனூடே ஒரு கவரும்! என்னவாயிருக்கும் என்றபடியே அதை எடுத்து திறந்தாள். ஒரு அட்ரஸ் . அதன் கீழே “டியர்.. காண்ட் வெயிட் எனி மோர்” என்றபடி சந்தியா என்று கையெழுத்திருந்த ஒரு கடிதம் அல்லது ஒரு நோட் அல்லது ஒரு இன்போ ஸ்லிப் …என்னவெல்லாமாகவோ அது இருந்தது.
Advertisement
அதிர்ந்து “இந்த பெயரை எஙகோ பார்த்திருக்கிறோமே” என நினைத்து மனம் உழல்கையில் சட்டென உரைத்தது சந்தியா அவன் கல்லூரி கால தோழி என. வெகு வேகமாய் இதயம் துடிக்க மித்ரனின் ஆட்டோகிராப் டைரி கப்போர்டு ல் தேடி எடுத்தாள். அதில் அத்தனை நண்பர்களும் நண்பியரும் எழுதிய பின்னான ஒரு கடைசி பக்கத்தில் “டேய்… மிஸ் யூ டா…” என்றும், பின் ஒரே ஒரு இதயம் ஈமோஜி மட்டும் 💙. அதற்குக் கீழே,‘சந்தியா’ என்று சாய்ந்து சாய்ந்து எழுதிய அழகான ஒரு கைஒப்பம். ஒன்றும் புரியாது அவன் facebook பக்கம் சென்று ஓரிரு அலசல்களில் சந்தியாவை கண்டடைந்தாள். ரோஜா நிறத்தில் அலை அலையாக கேசம் புரள தேவதைப்பெண்ணாக சந்தியா நின்றிருந்தாள். லொகேஷன் பார்க்க ஆப்டிக்ஸ் அண்ட் பியோசென்சிங் லேப், மாஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் போர் இன்டெலிஜெண்ட் சிஸ்டம்ஸ் என்றது. அப்படியே மித்ரன் சென்றிருந்த அதே முகவரி.
ஏனோ ஏதோ சரியில்லாத ஒரு உணர்வு. எங்கோ ஏதோ இடிப்பதாக தோன்ற அந்த இன்ஸ்டிடியூட் இணையதளத்தில் சென்று மித்ரன் கூட்டு ஆய்வு என அழைத்ததாக கூறிய அந்த ஷிவாவை தேடினாள். எங்கும் எதிலும் அந்த பெயரில் யாரும் இல்லாது போக மித்ரன் ஏன் தன்னிடம் பொய் உரைத்தான் எனும் மில்லியன் டாலர் கேள்வி வந்து பூதகரமாய் நிற்க துவண்டு தரையில் அமர்ந்தாள் ஆதிரை. வெகு வேகமான தேடலுக்கு பின் அவளுக்கு கிட்டிய சேதி ஒன்றே. மித்ரன் குறிப்பிட்ட ரெசிடென்ட்ஷியல் முகவரியும் சந்தியாவின் முகவரியும் ஒன்றே!. எனில் ….அந்த காண்ட் வெயிட் எனி மோரும் அந்த இதழ் வரியும் எதை எதையோ நினைக்க வைக்க தாழாமல் கேவல் ஒன்றில் அடைக்கலம் புகுந்தாள் ஆதிரை. உற்றார் உறவினரெல்லாம் யார்? துன்பமும் துயரமும் சூழ்கையில் கண்ணீர் போல கூட இருப்பவர் யார்.?
இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட இந்த சந்தியாவை பற்றி தன்னிடம் கூறாத மித்ரன் சட்டென யாரோவாகிவிட்டிருந்தான். யோசிக்க யோசிக்க, அவளுக்கு எல்லாம் விளங்கத் தொடங்கியது…அந்த தேவதைப் பெண்…அவளின் கல்லூரி தோழி சந்தியா…
அவள்தான் அவனை அழைத்திருக்க வேண்டும்… அவன் ஜெர்மனிக்கே சென்றிருக்கிறான்.இங்கு, அவள் ஒவ்வொரு நொடியும் அவனை நினைத்து உருகிக் கழித்திருக்கையில், அவன் ஒரு கணமாவது அவளை நினைத்திருப்பானா என்ற கேள்வி
மனதில் முள் போல குத்தியது.
கண்ணாடி முன் சென்று நின்றாள்.அந்த சந்தியாவின் பொன் வதனத்துடன் தன் உப்பிய கன்னங்களை ஒப்பிட்டாள்…
அந்த அலையாடும் கூந்தலும் நினைவில் வந்து சென்றது. டாலடிக்கும் சந்தியா எங்கே…தான் எங்கே…? ஒரு கணம்,
தன் முகமே புகை படிந்த கண்ணாடி போல மங்கலாகத் தோன்றியது. மலர்ந்த நினைவுகள், பசும் கண்ணோட்டங்கள், சிரிப்பின் ஓசை…
அவை அனைத்தும் இப்போது துயரின் அடியில் அழிந்து போனது போல உணர்ந்தாள்.
தள்ளாடி நடந்து, மெதுவாக சோஃபாவில் அமர்ந்தாள்…
எதிரில் கருணை உருவாகி, கரங்கள் விரித்து நிற்கும் இயேசுவின் திருவருவம்.
விழி நீர் தடையற்று பொங்கி தீர்க்கத்_திடுமென தோன்றியது. அந்த கோரோனா காலத்தில், அவள் எடுத்த பிரார்த்தனை…
“என் கணவரை திரும்பத் தா…என் காதலை காணிக்கை ஆக்குகிறேன்”. அவள் எடுத்த அந்த விபரீதமான பிரார்த்தனை தான், இப்படி சூழலை உருவாக்கியது போலும் என மனதுள் குமைந்து, அப்படியே கண்ணீர் வற்றும்அளவு அழுது தீர்த்தாள்…… எழுந்தாள்.
மடமடவென தனக்கும் பாப்பாவுக்குமான தேவையான எல்லாவற்றையும் எடுத்தே வைத்தாள். உறங்கியிருந்த கண்மணிக்குட்டியை உலுக்கி எழுப்பி, ‘வா மா… டிரிப் கிளம்புறோம்’ என , உறக்க மயக்கத்தில் கண்களை அரைத்தபடி,
எதுவும் புரியாத குழப்பத்தில் அவளை நோக்கினாள் அந்த கண்மணிக்குட்டி. அவளை கிளப்பி, ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தாள்.
பின் ஏதோ தோன்ற மீண்டும் படுக்கையறைக்குள் வந்தாள். அவள் படுக்கை அருகிலிருந்த அந்த மேசையின் இழுப்பறையைத் திறந்து, தான் தினசரி குறிப்புகள் எழுதும் நோட்டைப் எடுத்தாள். எழுதத் தொடங்கினாள்…
“அன்புள்ள…” என்று ஆரம்பித்து, அதையும் கோடிட்டு அழித்துவிட்டு மறுபடியும் எழுதினாள்: “மித்ரன், நான் தான்… நம் உறவில், எனக்கு ஒரு இடைவெளி தேவைப்படுகிறது. நான் செல்கிறேன்… தயவு செய்து என்னைத் தேட வேண்டாம்.” அத்தம்மா எழுந்து வந்தார்… “என்னமா…? அவர் கண்களைத் பார்க்காமல் தவிர்த்து “இல்லமா” அவர் ஏர்போர்ட்லிருந்து அப்படியே ஒரு ட்ரிப் கூட்டிட்டு போறார்” என அத்தம்மா காலில் விழுந்து எழுந்தாள், வீட்டை விட்டு கிளம்பினாள்!
அப்படி கிளம்பி தன்னவனைப் பிரிந்து, பெங்களூரிலிருந்து
கண்காணா தென் தமிழகக் கடற்கரையோரக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தாள்…சின்னச் சிறுவயதில், அவள் தாய் மாமனின் வீடு அங்கிருந்ததால்,விடுமுறைகளில் வந்து குதூகலமாகக் கழித்த அந்தக் குக்கிராமத்தில்,
கண்மணியும் அவளுமாய் வந்து சேர்ந்து, வாழ்வின் இரு ஆண்டுகள் கடந்திருந்தன…காதலை காணிக்கையாக்கி மித்ரனைத் துறந்ததும், தனிமையைத் தழுவியதும்,
இன்று, அந்தக் கவிதையின் வரிகளில் காவியமாய் உயிர்பெற்று
கண்முன் நிழலாடின!
அங்கு மைல்களுக்கு அப்பால்,
அவள் முகம் ஒளிரும் அலைபேசி திரையை
வெறித்திருந்தான் மித்ரன்!

