Skip to content
Post Views: 959
அத்தியாயம் 2
நீண்ட பகலும் ஒளி இழந்து மெல்ல இருள் கவிழ்ந்து இரவாகி இருந்தது. பகலின் வெப்பம் இரவில் இல்லை என்றாலும் அந்தக் குளுமை அவளை இம்மியும் குளிர்விக்கவில்லை. பூவினிக்கு அவளின் சாளரத்தின் வழி தெரியும் இந்த அடர்ந்த இருள் கூட அவளின் வாழ்க்கை போலவே ஒரு பிரமை.
Advertisement
தூக்கம் தூரமாய் இருக்க எழுந்து வந்தவள் அந்தப் பிறை நிலவைப் பார்க்க அதன் மறைந்த இன்னொரு பாகம் போலக் கணவன் மட்டுமே நினைவில் நின்றான். என்னை முழுமையாக்கியவன் மறைந்து போனானே எனும் சிந்தனை அவளை மேலும் சிதைத்தது.
பூவினி அந்தப் பால் நிலவைக் கண்களைச் சுருக்கி சற்றே உற்றுநோக்க பார்வையின் ஓரத்தில் மாடியில் நடந்து கொண்டிருந்தவனின் நிழல் உருவம் தெரிந்தது. அவ்வளவுதான் தீயைத் தொட்டவள் போல பட்டெனத் திரும்பி வந்துப் படுக்கையில் சுருண்டு கொண்டாள்.
Advertisement
Advertisement
இன்று நடந்தவைகளெல்லாம் அவளின் மனதில் படமாய் ஓட, மிடறில் இடறி நிற்கும் சிறு கசப்பு போல, கண்கள் மூடி முகம் கசங்க மூச்சை இழுத்து எச்சில் விழுங்கினாள் பூவினி.
அடுத்தது என்ன என அங்கு பேசியவர்கள் பேசியதெல்லாம் பூவினியை சுற்றிய முள் வேலி போல பிம்பத்தையே கொடுத்தது.
Advertisement
“என் தம்பி மகனுக்கு பூவினிய கட்டிக்கொடுங்க.” என இவனின் பெரியப்பா கேட்டது தான் தாமதம். சபையில் இருந்த அனைவரின் கண்களும் அவனைத்தான் துளைத்தது. அவன் கருணாகரனின் சித்தப்பா மகன் குமரன்.
ஆனால் கதிர்வேலனின் பார்வையோ எதிர்பார்ப்பாய் அருகிருந்த அவரின் அப்பா முருகய்யாவையும், சுவரோரம் தனியே நின்றிருந்த பேரன் குமாரனையுமே நோக்கியது.
அவர் சொன்னதை அவர்கள் ஏற்க வேண்டுமே எனும் எதிர் பார்ப்பு அவனின் நெற்றியில் வியர்வையாய் பூத்து நின்றது.
சட்டென அவர் இப்படி ஒரு பதிலை சொல்லவும் அங்கிருந்த ஒருவருக்கும் என்ன பதில் சொல்வது என்று புரியாத நிலை. ஆனாலும் கதிர்வேலனின் கண்கள் தீர்க்கமாய் அவரின் அப்பாவின் மேலும் தம்பி மகனின் மேலுமே நிலைத்திருந்தது.
“குமரா, பேசுப்பா. நீ என்ன நினைக்கிற. மனசுல பட்டத்தை சொல்லு.” கூட்டத்தில் ஒருவர் கேட்க, குமாரனோ அவன் கவனம் மொத்தத்தையும் அவனின் தாத்தா முருகய்யாவின் மேல் நிலைக்கவிட்டான்.
இருவரின் பார்வையும் ஒன்றாய் இணைய, குமரன் மறுகணமே மறுப்பாய் தலையசைத்தாலும் தாத்தாக்கு மட்டும் புரியுமாறு கண்ணால் சைகை செய்தாலும் அவர் எதையுமே கண்டு கொள்ளவில்லை. அதேசமயம் அவர் அப்படி எல்லாம் எதுவும் உடனே சொல்லிவிடவுமில்லை.
“அப்பா, நீங்க என்ன நெனைக்கிறீங்க? பூவினிய நம்ம குமரனுக்கு…ம்ம்ம், அவ நம்ம வீட்டுக்கு வந்த மருமகப்பா. என் பேரன் எனக்குக் கூட வேணும்ப்பா.” என்ற கதிர்வேலன் தன் அப்பாவைப் பார்த்தார்.
மெல்ல கூட்டத்தை தன் கண்களால் ஒருமுறை வலம் வந்த முருகைய்யா, சில நொடிகள் யோசனையில் தயங்கி, பெருமூச்சொன்றை விட்டபடி பேசத் தொடங்கினார்.
“வேலு, நீ சொல்றதும் சரித்தே. வாழ வந்த மகாராசியையும், என் கொள்ளு பேரனையு அவுகளோட திருப்பி அனுப்ப வேணா. எம்பேரே குமரே உம் மருமவள கட்டிக்குவான்“ என்று சொன்னதுமே பலருக்கு பெரும் மகிழ்வுதான்.
அவர் பேசி முடிக்கவுமே அதை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாத தன் நிலையை நொந்தவன் வேகமாக அந்த இடத்தைவிட்டு அகன்றிருந்தான். அவன் நடையின் வேகத்தில் சிக்கிய வெள்ளை வேஷ்டி கத்திக் கூச்சலிட்ட அந்த ‘சரசர‘ சத்தம் சொல்லியது அவன் கோவத்தை.
கூடியிருந்த அனைவரின் கவனமும் அவனின் கோவத்தில் தாத்தாவின் புறம் திரும்ப, “டேய், குமரா, பெரியப்பா என்ன இவன் போறானே? கூப்புடுங்க? கோவிச்சுட்டு போறான் போல.” இவர்கள் உறவுமுறை பெரியவர் ஒருவர் கிட்டத்தட்ட கத்தினார்.
“அவன விடுப்பா. நம்ம பெரியவுக பேசுவம். திடீர்னுன்னு கல்யாண பேச்சு வரவு அப்படி போறான். நீங்க யாருஞ் சங்கடப் படாதிய. கண்டிப்பா இந்தக் கல்யாணம் நடக்கும்” முருகைய்யா உறுதியாய் சொல்வது குமரனின் காதுகளையும் எட்டியது.
குமரன் திரும்பி தன் பெரியப்பாவின் வீட்டைப் பார்த்து, தன் பின்னால் யாரும் வரவில்லை என்று உறுதிபடுத்திக் கொண்டவன் வேகமாக தன் வீட்டை நோக்கி நடந்தான்.
பக்கத்து அறையில் பிள்ளையைத் தோளில் போட்டு நடந்தபடி தட்டிக் கொண்டிருந்தாள் பூவினி. அவளைப் பார்த்தபடி ‘என் வாழ்க்கை எப்பவும் இவங்க இஷ்டமா?’ என்ற வலியோடு பெருமூச்சொன்றை விட்டபடி அப்பத்தாவின் வீட்டை நோக்கி நடந்தான்.
இங்கோ மற்றவர்கள் தாத்தாவின் உறுதியில் அமைதியானாலும் பூவினியின் அப்பா கதிரேசனின் முகத்தில் தெளிவில்லை. அவருக்கு அவர்களின் முடிவில் சம்மதம் சொல்வதற்கு சம்மதம் என்றாலும் மகளை நினைக்கவும் மனம் பிசைந்தது.
ஒற்றை மகள், நடுத்தர குடும்பம் என்றாலும் இளவரசியாய் வளர்த்த மகளை இன்று விதவையாக்கியது காலம். பள்ளி ஆசிரியரான அவருக்கு மறுமணம் என்பதில் நிச்சயம் சம்மதம்தான். அதிலும் அவரைப் போலவே ஆசிரியனான குமரன் எனும் போது மறுக்கக் காரணங்கள் கூட இருக்காது. ஆனால் இப்படியான சூழ்நிலையைக் கடப்பது மட்டுமே கடினமாக தோன்றியது.
குறிப்பாக குமரன் வேகமாக வெளியேறவும் தானாகவே ஒரு பயம் வந்து சூழ்ந்து கொள்ள, அது அப்பட்டமாக அவரின் முகத்திலும் தெரிந்தது.
அவரையே கவனித்த முருகைய்யா, “மருமயனே, கோச்சுக்குடாதிய. குமரனுக்கு திடீருன்னு அவேன் பெரியப்பே கலியாணம் பேசவும் போயிருப்பான். அவனே வந்து உங்கட்ட பேசுவான்யா.” என சமாதானம் சொன்னார்.
“அய்யோ மாமா. அதெல்லா ஒன்னுமில்ல. சம்மந்தி கேட்டதே எனக்கு சந்தோசமாத்தே இருக்கு. நாங்கும்புட்ற தெய்வந்தே இனி எம்பொண்ணுக்கு வழிகாட்டணும்ன்னு வேண்டுதல வச்சுட்டுத்தே நானும் மல்லிகாலும் இன்னைக்கி இங்குன வந்தோம். இது எம் பொண்ணு வாழ்க்க. நல்லபடியா அவ வாழணும்னுதே இருக்கு.
எதுக்கும் நீங்களும் சின்ன மருமயங்கிட்ட ஒருவாட்டி கலந்துகிட்டு கூட சொல்லுங்க. சபையிலே எல்லாரும் இருக்கையில பதில் சொல்லலன்னு தப்பா நெனக்காதிய. நானும் ஒருத்தரம் வீட்டுல மல்லியாட்ட கலந்துக்குட்டு சொல்லுறே.“ உள்ளத்தின் படபடப்பு வார்த்தைகளையும் சுற்றிக்கொள்ள தயக்கத்துடனே அனைவருக்கும் பொதுவாய் பேசினார் பூவினியின் அப்பா கதிரேசன்.
“மாமா, சட்டுன்னு பேசி முடிவுக்கு வந்து நாளைக்கு பிள்ளையளுக்கு விருப்பமில்லையின்னா நம்ம ஒறவுக்குள்ளயும் சங்கடம். ரெண்டு நாள் செல்லட்டும் வீட்டு பொம்பளயாளுகக்கிட்டயும் கலந்து பேசிகிட்டு சொல்லுறோம்.” என பூவினியின் பெரியப்பா சுப்பிரமணியன் சொல்ல மீண்டும் சலசலத்தது சபை.
அடுத்த ஒருமணி நேரத்தில் எல்லோரும் சேர்ந்து ஒருமனதாக முடிவுக்கு வந்தனர். இருவீட்டிலும் சம்மதம் பெற்று எல்லாம் கூடி வந்தால் இன்னும் மூன்று மாதத்தில் தை மாத முகூர்த்தத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துக் கலைந்து சென்றது உறவினர் சபை.
error: Content is protected !!