நடையில் தன் கோபத்தை எல்லாம் கூட்டி தாம் தாம் என நடந்து சபை நடுவே நின்று ‘எனக்கு இதில இஷ்டமில்ல. எல்லாரும் எந்திருச்சு போங்க’ எனக் கூச்சலிடுவதெல்லாம் இவளால் முடியாது. அதெல்லாம் நடைமுறை இல்லையே.
நிஜத்தில் இவளால், மறுப்பைக் கூட மற்றவர் விரும்பும் நேரம்தான் சொல்லமுடியும். அவளும் அதற்கான நேரத்திற்காக காத்திருக்கத் தொடங்கினாள். இன்றுதான் கணவனுக்கு கருமாதி முடிந்திருக்க வீடு நிறைய சொந்தங்களை வைத்துக் கொண்டு எதிர்வினை என்ன, மறுத்து ஒரு பார்வைகூட இவளிடம் இல்லை.
Advertisement
Advertisement
மதியம் கரைந்து மாலையும் மறைந்து பிறை நிலவும் வந்த பின்னே உறவுகளின் சத்தம் அவலமெல்லாம் அமைதியாய் அடங்கி இருந்தது. பூவினியின் அம்மா மல்லிகா கிளம்பும் முன்னே தனியே தன் மகளுடன் பேச அவளின் அறைக்கு வந்தார்.
“ஹ்ம்ம், சரிம்மா. ஆனா… ம்மா, நானும் நாளைக்கு வரவா? எனக்கு ரஞ்சித்த பாக்கணும்மா.” தயக்கமாய் அம்மாவின் முகம் பார்த்து சொன்னாள் பூவினி.
கண்கள் கலங்க பேசும் இவள்தான் புன்னகை வாடாத மலராக வளர்ந்த மகள்.
மல்லிகாக்குமே சொல்லி அழுகக் கூட முடியாத நிலைதான். மகள் கணவனை இழந்து நிற்க, மகனை உயிருக்குப் போராட வைத்துவிட்டது ஒற்றை விபத்து.
இதுபோல் விபத்துகளில் யாரை குற்றம் சொல்வது? தெருவில் குறுக்கே வரும் ஆதரவற்ற ஜீவன்களான நாய்களையா? அல்லது சரியான வேகத்தில் வந்தும் பேருந்தை நிறுத்த முடியாமல் விபத்தில் போன ஓட்டுநரையா?
இல்லை நாய் உயிர் முக்கியம் என வண்டியைத் திருப்ப முயன்று உயிர்விட்டவனையா? இல்லை, மந்திரிகள் வருவதற்காக சாலையின் எல்லா வேகத் தடைகளையும் அகற்ற நிர்பந்திக்கப்படும் ஆட்சிப் பொறுப்பாளர்களையா?
யாரையும் குறை சொல்ல முடிவதில்லை விதியைத் தவிர. அதிகாரமற்றவன், அதிகாரமாய் ஆக்ரோஷமாய் குறை சொல்வது என்றுமே விதியையும் அந்தக் கடவுளையும் மட்டுமே. இவர்களுக்கும் இன்று அப்படியான நிலைதான்.
“நீ உங்க வீட்ல கேட்டுக்குட்டு வரலாம்டா. நாளைக்கு வேணாம். அம்மாவும் நாளைக்கு வரமுடியாது. நாளைசெண்டு வந்துன்னா கூட்டிகிட்டு போறேன்த்தா. நீயும் உன் மாமனாரு சொன்னத யோசித்தா. ஒனக்கும்…” அடுத்து அவர் சொல்வதற்கு முன்பே பூவினி பேசியிருந்தாள்.
“மூச்சுவிட நேரங்குடுங்க ம்மா எனக்கு.” ஒற்றை வரிதான். ஆனாலும் அதன் உண்மை மல்லிகாவையும் சுட்டது. அவரும் வேறு என்ன செய்வார்? மகளின் வாழ்க்கையை மீண்டும் மலர வைக்க கடவுள் கொடுத்த வாய்ப்பை வீணாக்க விருப்பமில்லை.
“ஏத்தா பூவினி, மூச்சு விடறது என்ன தனி வேலையா? நீ தனியா நேரமேடுத்துச் செய்ய? என்ன வேல செஞ்சாலும் மூச்சுவிடுவோந்தானே. மனுஷ மனசு எப்பவும் புதுசா ஒன்னுல கவனம் வச்சா பழசத்தானா மறந்துரும்த்தா.“ என்ற மல்லிகா மேலும்,
”அவரப் பெத்த அம்மாவே இந்தா பதினஞ்சு நாள்ல எப்பவும் போல சாதாரணமா இருக்க ஆரம்பிச்சுருச்சு. நாளைக்கு கொழம்புல உப்புல்லாம உங்கத்தைக்கு ஊத்து பாப்போம். நாக்கு ருசி தெரிஞ்சுரு அவுங்களுக்கு. அதுக்காக அவுங்களுக்கு கவலையில்லையா என்ன? ஆனா அதையே நெனச்சுக்கிட்டு இருந்து என்ன செய்ய முடியும்? அடுத்து என்னன்னு பாக்கணும் பூவினி. இம்புட்டுத்தே இந்த மனுச வாழ்க்க.“ என்றார்.
மொத்தத்தில் இழப்புகள் இயல்பானது, ஏற்கப் பழகு என்றார். பதிலின்றி பதுமையாய் நின்ற மகளை அணைத்து ஆதரவாய் தட்டிக் கொடுத்துவிட்டு வீடு சென்றனர் பெற்றவர்கள்.
வேலைகளெல்லாம் எல்லாம் முடிந்தது இரவு மகனைத் தூங்க வைத்துவிட்டுத் தன் படுக்கைக்கு வந்தவளுக்கு படுக்கையில் விழுந்ததும் தானாகவே கண்கள் கரைந்து வந்த கண்ணீர் காதுகளையும் தாண்டி தலையணை நனைத்தது.
இந்த அழுகை மட்டுமே அவளுக்கு ஆறுதல் தருமா? இயல்பாய் அவள் வாழ்க்கை மீண்டும் பயணிக்காதா? அவளின் கேள்விகளுக்கு பதில் யார் சொல்வார்?
இதே கட்டிலில் என்னைக் கட்டிக் கொண்டு இருந்தவன் இன்று இல்லை எனும் போது அதெப்படி இயல்பானதாக ஆகும்? அதிலும் என் கணவன் மரணம் எனும்போது? அதுவும் மூன்றே மாதக் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அதே கேள்வியில் உழன்றாலும் அம்மா பேசுவது நிதர்சனம் என்பதும் புரிந்தது.
தினமும் எதோ ஒன்று நம் மனத்திலிருந்து அழிந்துபோகிறது. மறப்பதென்பது சுவாசிப்பது போல இயல்பானதுதான். ஆனால் இயல்பான சுவாசம் போல இதையும் எப்படிக் கடப்பது?
“என்னால முடியாது. அதுவும் இப்ப கல்யாணம் முடியவே முடியாது.” உறுதி எடுத்த பின்பு தான் கணைகள் மூடவே முடிந்தது பூவினிக்கு.
அங்கே அவனது மொட்டை மாடியில் தனியே நடந்து கொண்டிருந்தவனும் அதே சிந்தனைகள் தான்.
நேற்றைய இரவில் அவன் பார்த்த நிலவு இது இல்லை. இன்று எல்லாமே மாறி இருந்தது. ஆனால் மாற்றியது யார்? விடை தெரிந்தாலும் அதை மனம் ஏற்கவில்லை.
இன்று பிறை நிலவாக இருக்கலாம். நாளை வளர்ந்து முழு நிலவாகும். மீண்டும் ஒரு நாள் கண்ணுக்குத் தெரியாமலும் மறையும். இந்த நிலையற்ற நிலவு போலவே இன்று என் மனமும் நிலையற்று நிற்கிறது.
நாளை தன் தாத்தாவிடம் பேசினால் மட்டுமே தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என மனம் ஒரு முடிவுக்கு வரும். குமரனுக்கு ஒரு பெண்ணை மறுமணம் செய்வதோ அல்லது அவளின் குழந்தைக்குத் தான் தகப்பனாக மாறுவதோ ஒருபோதும் குறையாகவோ அல்லது பெருமையாகவோ இல்லை.
ஆனாலும், “ஆனா பூவினி, என் அண்ணேம் பொண்டாட்டி. இதெல்லாஞ் சரி வருமா?” வருங்காலத்தில் தன்னை அவளோடு பொருத்தி ஒப்புக்கொடுக்கும் வாழ்வு தனக்கு வசப்படுமா?
“வேணாம்” என அவனுக்கே சொல்லி முடித்துக் கொண்டான்.
ஏகாந்தமான இந்த இரவில் அவள் பார்ப்பதும் அவன் பார்ப்பதும் ஒரே நிலவுதான்!
குளக்கரையில் பார்க்கும் நிலவும் குதித்து ஓடும் ஆற்றில் அமிழ்ந்து எழும் நிலவுக்கும் தோற்றம் வேறல்லவா!
அதுபோலத்தான் குமரனின் நினைவும் பூவினியின் நிலையும் இன்று வேறுபட்டு நிற்கிறது.