NKN-2
“யப்பா ஏய் இங்க சாம்பார் கொண்டு வாங்கப்பா பொண்ணுங்கள பார்த்தா போதும் எல்லா பயல்களும் அங்கேயே எல்லாத்தையும் தூக்கிட்டு போவானுங்க இந்த பக்கமும் கொண்டு வாங்கல” என்று அந்த கல்யாண வீட்டு சாப்பாடு பந்தியில் அமர்ந்தயிருந்த ஒரு பெரியவர் கத்த
“யோவ் பெருசு எதுக்கு இப்ப கத்துற முதல் பந்தி ஆரம்பிக்கும் போது நீ இந்த இடத்தில் உட்கார்ந்த இப்ப கடைசி பந்தி போய்கிட்டு இருக்கு இன்னும் எந்திரிக்காம சோறு சோறு குழம்பு குழம்பு ரசம் ரசம் சாப்பிட்டுக்கிட்டே இருக்க. உனக்கு வச்சி வச்சி அங்க சோறு முடிஞ்சு போச்சி தயவு செஞ்சி எடத்த காலி பண்ணு. உனக்கு பின்னாடி இன்னும் எத்தனை பேர் வெயிட் பண்றாங்க தெரியுமா”என்றான் அலுப்பாக
Advertisement
“ஏய் என்னப்பா சாப்பிடறது எல்லாம் இப்படி கணக்கு வைக்கிறீங்க. என்னத்த டா நீங்க எல்லாம் கல்யாணத்த நடத்துறீங்க. இந்த மாதிரி சின்ன பயலுகக் கிட்ட சாப்பாட்டு பாத்திரத்தை கொடுத்தா இப்படித்தான் சின்ன தனமா பேசுவாங்க. எங்க பொண்ணு வீட்டு ஆளுங்க அவங்கள கூப்பிடு முதல்ல இந்த மாதிரி மட்டும் மரியாதை தெரியாதவன எல்லாம் பந்தி பரிமாற உட்டு இருக்காங்க பாரு அவங்கள சொல்லணும் ஃபர்ஸ்ட். உன்கிட்ட எனக்கு என்ன பேச்சி கூப்பிடு அவங்கள அவங்க கிட்ட நான் யார்னு சொன்னாதான் மாப்பிள்ளைக்கு நான் யாரு தெரியும்..” என்று அந்த பெரியவர் தனது வயதையும் மறந்து பந்தி பரிமாறும் அந்த பையனிடம் சண்டைக்கு போக
“யோவ் நீ சாப்பிடுறத சொன்னா உடனே நீ சின்ன பசங்கள பத்தி பேசுவியா. பொண்ணு வீட்டுக்காரன் நான் தான் இப்ப சொல்லு நீ மாப்பிள்ளைக்கு யாரு இப்ப சொல்லு” என்று அவரிடம் சரிசமாக சண்டைக்கு போனவனின் பின்னத்தலையில் படார் என்று ஒரு அடி விழ, “டேய் யாருடா அவன் பின்னாடி அடிக்கிறவன்” என்று கோபமாக திரும்பி பார்க்க
Advertisement
Advertisement
அங்கே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் ஐந்தடி உயரத்தில் உழைப்பின் மகிமை தெரிந்த சிறிதளவு தொப்பை கூட இல்லாத தேகம் மற்றும் நெற்றியில் எப்போதும் பூசி இருக்கும் விபூதி மற்றும் உதட்டில் நிரந்தரமாக தங்கி விட்ட அந்த புன்சிரிப்பு இவை அனைத்தும் அவனின் அந்த கருமை நிறத்தை எடுப்பாக காட்டியது. மொத்தத்தில் சினிமா ஹீரோ போல் அல்லாமல் நமது பக்கத்து வீட்டு பையன் போல் தெரிவான் அவன் அன்பரசன்.
“அண்ணே எதுக்கு என்ன அடிச்ச இங்க என்ன நடக்குது தெரியுமா இது பெருசு ஓவரா பேசுகிறான் தெரியுமா. நீ அந்த ஆள விட்டுட்டு என்ன அடிக்க” என்று கோபமாக பொங்கி எழுந்தவனை
Advertisement
“டேய் உன்ன பந்தி பரிமாற சொன்னா இங்க நின்னு என்ன பண்ற”என்று அதட்டவும்
“அது அண்ணா இவரு தான்”என்று பம்மிக்கொண்டு அந்த பெரியவரை பத்தி குறை சொல்ல வந்தவனை தடுத்து நிறுத்தியவன், “போ போய் அங்க சாம்பார் கேக்காங்க பாரு. அங்க போய் பரிமாறு இங்க நான் பாத்துக்கிறேன்”என அவனை அனுப்பிவிட்டு அந்த பெரியவரிடம் திரும்பி சிரித்த முகமாய், “சொல்லுங்க அண்ணா என்ன வேணும் கொஞ்சம் சாப்பாடு வைக்கவா”என்றான் பணிவாக
அவனின் இந்த அணுகுமுறையில் அதுவரை கோவமாக இருந்தவர், “இல்ல தம்பி எனக்கு போதும்”என்று எழ போனவரை தடுத்து நிறுத்தி, “அண்ணா இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க”என்று சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், ரசம் என அனைத்தையும் பரிமாறி அவரை வயிறும் மனமும் நிறைய வைத்த பிறகு விட்டான்.
“தம்பி உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப. உன் பொண்டாட்டி பிள்ளை எல்லாம் எந்தவித நோய் நொடியும் இல்லாமல் நூறு வருஷம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நல்லா வாழுவீங்க”என்று வாழ்த்தினார் அவர்.
அவரின் இந்த வாழ்த்தினை கேட்ட அன்பரசன் மனது ஒரு நொடி, ” மாமா ப்ளீஸ் மாமா எல்லாத்தையும் விட்டுட்டு எங்க கூட வந்துரு நீ நான் நம்ம புள்ள எல்லாரும் ஒண்ணு சேர்ந்து வாழ்வோம் மாமா. இங்கே நம்மளால நிம்மதியா வாழ முடியாது. எங்களோட வந்துரு மாமா” என்று கதறியவளின் ஞாபகம் ஒரு நொடி மனதில் வந்து சென்றது.
அதனை முயன்று ஒதுக்கிவிட்டு அவரைப் பார்த்து புன்னகைத்தவன், “அண்ணா நான் ஒன்னும் பெருசா செய்யல என் தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டு உங்களோட வயிறு மனசும் நிறைந்து அவளை வாழ்த்திட்டு போனா அவ வாழ்க்கை நல்லா இருக்கும் அதுக்காக தான் நான் இப்படி பாடுபடுறேன்” என்றான் அடக்கமாக
“என்னவோ பா உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப. இந்த காலத்துல உன்ன மாதிரி வெள்ளந்தியான மனசு படைச்சவன பார்க்க முடியாது. உன் மனசு போல நீ நினைக்கிற காரியம் எல்லாம் நடக்கும். உனக்காகவே உன் தங்கச்சி போற வீட்ல நல்லா இருப்பாப்பா” என்று அவனின் முதுகில் தட்டி விட்டு சென்றார்.
இப்படி பெயரில் மட்டும் இல்லாமல் மற்றவர்கள் மேல் அன்பு வைப்பதிலும் இவன் அரசனே. ஆனால் என்ன இவனின் இந்த தூய்மையான அன்பை மற்றவர்கள் புரிந்து கொண்டார்களா என்று தான் தெரியவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இட்ட மொழி என்னும் சிறிய கிராமத்தில் ராஜேந்திரன் மற்றும் செல்வி ஆகியோரின் முதலாவது மகனாக பிறந்தவன் அன்பரசன். அவனுக்கு பிறகு மூன்று தங்கைகள் மற்றும் ஒரு தம்பியும் உள்ளனர். மொத்தத்தில் தனக்கு பிறந்த ஐந்து குழந்தைகள் மீதும் ராஜேந்திரன் தனது உயிரையே வைத்து இருந்தார். அவர் இருந்தவரை அவரின் குழந்தைகளுக்குள் எந்த பாகுப்பாடும் பார்க்கவில்லை. அவரிடம் இருந்தவற்றை வைத்து தனது ஐந்து குழந்தைகளையும் பொக்கிஷமாக வளர்த்து வந்தார். ராஜேந்திரன் மிகவும் நல்ல மனிதர் சிறந்த விவசாயியும் கூட மற்றவர்களின் சொத்துக்களுக்கு ஆசைப்படாமல் தன்னிடம் உள்ளவற்றை வைத்து வாழ தெரிந்தவர். அவர் மனைவி செல்வியும் கணவருக்கு தப்பாமல் பிறர் மீது பொறமை போடாமல் தங்களிடம் உள்ளவற்றை வைத்து வாழ தெரிந்தவர். ஆனால் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் இரவு குடும்பமாக அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு விட்டு கதை பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென நெஞ்சில் கை வைத்துக்கொண்டு சரிந்து விழுந்தவர் தான் எழவே இல்லை. பயந்து போய் அவரை தூக்கிக்கொண்டு செல்ல அங்கே இருந்த டாக்டர் எல்லாம் முடிந்தது என கையை விரித்து விட்டார். அத்துடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டு அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் நிம்மதி சந்தோசம் வெள்ளந்தியான அந்த மனது அனைத்தையும் எடுத்து சென்று விட்டார்.
அவரின் இறப்பை தாங்க முடியாது அனைவரும் கதறி அழ ஒருவனுக்கு மட்டும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது சம்பித்த நிலை மற்றவர்களை போல் அவனால் அழ முடியவில்லை என்பதை விட அவனுக்கு அழ யாரும் நேரம் தரவில்லை என்று சொல்லலாம்.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை தங்களுடன் இருந்து சிரித்து பேசிக்கொண்டு இருந்த தந்தையின் மறைவு அவன் மூளையை செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தியது. ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் நின்றவனை, “யப்பா நீ தான் இந்த வீட்டுக்கு முத்தப் புள்ள நீயே இப்படி நின்னா எப்படி போப்பா போய் உங்க அம்மாவையும் கூட பிறந்தவங்களையும் சமாதானப்படுத்தி, உங்க அப்பன காடு சேக்கப் பாரு. மகராசன் வாழுற வரைக்கும் உங்கள கஷ்டம் தெரியாம வளர்த்துட்டான். இனிதான் என்ன செய்யப் போறீங்களோ தெரியல. ஒத்த புள்ளய கல்யாணம் முடிச்சு குடுத்துட்டு அவன் போய் இருக்கலாம். இப்ப இந்த மூணு பிள்ளையோட கல்யாணம் அந்த பையனோட படிப்பு எல்லாம் உன் தலையில விழுந்துட்டே தம்பி என்ன செய்ய போறீயோ” என்று சென்ற அந்த பெரியவரின் வார்த்தையில் தான் நிதர்சனம் புரிந்தது.
அவனே இப்போதுதான் கல்லூரி முடித்து ஒரு வருடமாக ஒரு தனியா கம்பெனியில் வேலைக்கு செல்கிறான். இவனுக்கே இப்போது தான் 21 வயது ஆகிறது. இதில் இவன் முதல் தங்கை அன்பரசி காலேஜ் ஃபைனல் இயரும், அடுத்த தங்கை தமிழரசி பனிரெண்டாம் வகுப்பும், அவளுக்கு அடுத்த தங்கை பிரியா பத்தாம் வகுப்பும், எல்லோருக்கும் கடைசி கடைக்குட்டி ஜெய் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். இனி இவர்கள் நாலு பேரின் பொறுப்பும் சத்தம் இல்லாமல் இவன் தோளில் ஏறிக்கொண்டது.
தந்தை இருக்கும் வரை தெரியாத பயம் எல்லாம் இப்போது தெரிந்தது. அது மட்டுமா தெரிந்தது சுற்றியுள்ள உறவுகளின் உண்மையான முகத்திரையும் அல்லவா தெரிந்தது. ஒன்னும் தெரியாமல் தடுமாறி நின்றபோது நான் இருக்கிறேன் என்று தோல் கொடுத்தவர் அவன் தாய்மாமன் ஆறுமுகம். அவர் தான் அவனுக்கு ஒரு ஆசானாய் இருந்து வாழ்க்கை பாடத்தை கற்றுத் தந்தவர். அவரிடம் இருந்து விவசாயம் கற்று தந்தை விட்டுச் சென்ற நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறான். ராஜேந்திரன் இறந்த புதிதில் உனக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் எங்களிடம் உனது நிலத்தை விற்று விடு என வந்தவர்களே இவனை அண்டாமல் விரட்டிவிட்டு கூடவே இருந்து இவனுக்கு விவசாயம் கற்றுக் கொடுத்து, அவனின் தங்கைக்கும் நல்ல மாப்பிள்ளைகளை தேர்வு செய்து கொண்டு வந்தார்.
அவரால் தான் தனது முதல் தங்கைக்கு நல்ல முறையில் பக்கத்து ஊரை சேர்ந்த சரவணுக்கு திருமணம் செய்து வைக்க முடிந்தது.அவர்களுக்கு இப்போது இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதோ இப்போது அடுத்த தங்கைக்கு நடக்கும் திருமணத்திற்கும் அவர் தான் அவனுக்கு உறுதுணையாக இருக்கிறார். இப்படி எல்லாம் காரியங்களும் தனக்கு உதவியாக இருக்கும் மாமன் மேல் அவனுக்கு அளவு கடந்த நன்றி உணர்வு உள்ளது. அந்த நன்றிக்காக அவன் செய்த கைமாறு அவன் வாழ்க்கையை திசை மாற காரணமாகும் என்று அவன் கனவிலும் நினைத்து இருக்கமாட்டான்.
என்னதான் நமக்கு ஒருவர் உதவி செய்தாலும் அதற்கு கைமாறாக தனது வாழ்க்கையை கொடுப்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பது அவனுக்கு கடந்த சில மாதங்களாக வாழ்க்கை வலிக்க வலிக்க சொல்லி தந்து கொண்டிருக்கிறது. என்னதான் மற்றவர்கள் மீது அன்பு வைத்தாலும் தான், தனது, தனது வாழ்க்கை என்று சிறிதளவு சுயநலம் கண்டிப்பாக தேவை என்பது அவனுக்கு இன்னும் புரியவில்லை. தனது அன்னை தங்கை தம்பி என அனைவர் மீதும் உயிராய் இருப்பவனுக்கு தெரியவில்லை. அவர்களும் தன் மீது அதே அளவு அன்பு வைத்திருக்கிறார்களா என்று. தந்தை இல்லாத கஷ்டம் தனது உடன்பிறப்புகளுக்கு தெரியக்கூடாது என்று அனைத்து சுமைகளையும் தன் மீது சுமந்து கொண்டிருப்பவனுக்கு தெரியவில்லை. இங்கே கஷ்டப்படாமல் கிடைக்கும் பொருள்களின் மதிப்பு பூஜ்ஜியம் தான் என்று. தந்தை இருக்கும் வரை தனது உடன் பிறந்தவர்கள் கேட்கும் பொருளை எப்படி வாங்கி கொடுத்தாரோ அதேபோல் அவர்கள் கேட்கும் அனைத்தையும் அவன் அவர்களுக்காக வாங்கி கொடுத்தான். கஷ்டப்படாமல் கிடைத்ததால் என்னவோ அதற்கு பின்னால் உள்ள இவனின் வியர்வை துளிகள் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது உள்ள காலத்தில் தந்தையின் கஷ்டமே பிள்ளைகளுக்கு தெரிவதில்லை இதில் அண்ணனின் கஷ்டம் மட்டும் அவர்களுக்கு தெரியவா போகிறது.
அன்பரசன் அவனின் தாய்க்கு நல்ல மகன்., அவனின் உடன் பிறந்தவர்களுக்கு நல்ல அண்ணன்., அவனின் மாமனுக்கு நல்ல மருமகன்., ஆனால் அவனை நம்பி வந்தவளுக்கு நல்ல கணவனா என்றால் அது கேள்விக்குறியே.,
அவன் குழந்தைக்கு நல்ல தகப்பனா என்றால் அதற்கு இனி வரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…
