Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்- எபிலாக்

                 எபிலாக்

வீட்டிலிருந்து ஃபோன் வந்ததுமே  வசீகரன் பரபரத்துவிட்டான்.. உடலெல்லாம் குளிர் பரவ நடுங்குவது போல் ஆனது.. கார் பார்கிங்கை நோக்கி வேகமாக நடந்தான்.. அவனால் கார்  ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை.. ஆனால் பறக்கமுடியுமானால் உடனே பறந்து அவளிடம் போய் சேர்ந்துவிடுவான் அப்படி ஒரு அவசரத்தில் இருந்தான்..

பாதி வழியில் அவனைப்பார்த்த சிவசந்திரன்



Advertisement

“வசி நீ கார் ஓட்டாத டிரைவரை ஓட்ட சொல்லலாம்..” என்றுவிட்டு அவரும் அவனுடன் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டார்..

டென்ஷனில் அவன் கால்கள் நிற்காமல் ஆடிக்கொண்டே இருப்பதைப் பார்த்தவர் அவன் கைமீது தன் கையை வைத்து அழுத்தி “கவலப்படாதடா ஒன்னும் இல்ல..”

என்றார் தைரியமூட்டும் விதமாக..

Advertisement

அந்த குரலில் சற்று நிதானமானவனுக்கு மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது.. அவளை கண்ணால் காணும் வரை அவன் மனம் அமைதி கொள்ளாது என்று புரிந்தது.

Advertisement

காலையில் அவன் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பும் போது நன்றாகத்தான் இருந்தாள். அதற்குள் இந்த இரண்டு மணி நேரத்திற்குள் எப்படி இப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை.

அதிதி வசீகரனிடம் தன் காதலை வெளிப்படுத்தியதிலிருந்து நான்கு வருடங்கள் உருண்டோடி இருந்தது..

வசீகரனும் அதிதியும் கொஞ்சம் ஊடல் நிறைய காதல் என்று ஒரு வருடம் ஓட்டிவிட்டு பின் தங்கள் காதலை இருவீட்டிலும் அறிவித்தனர்..

Advertisement

ஏற்கனவே இந்த விஷயத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் தானே இருவீட்டாரும்.. பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் பச்சைக்கொடி காட்டிவிட்டனர்..

அதிதியின் அப்பா மட்டும்

‘அவ்ளோ பெரிய இடம் தங்களுக்கு சரி வருமா? தங்கள் பெண்ணை சரியாக நடத்துவார்களா..?’ என்று கொஞ்சம் கவலைப்பட்டார்

ஆனால் முதல்முறை சிவ சந்திரனைப் பார்த்ததுமே அந்த கவலை தண்ணீரில் உப்பாக கரைந்து காணாமல் போனது..

இருவரும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பகிரும் அளவுக்கு தோஸ்த் ஆகிவிட்டனர்..

வேலைக் காரணமாக அதிதி பாதி நாள் கோயம்புத்தூரில் தான் இருந்தாள்..

லிங்கா மெஷினரீசில் அவர்களது ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிய.. இப்போது அங்கே இருந்த பல முன்னணி தொழிற்சாலைகளும் இவர்களின் சேவையை நாட.. அங்கேயே ஒரு புதிய இன்ஃபி டெக் கிளை உருவாகியது.. அதற்கு முழுப் பொறுப்பும் அதிதியிடமே கொடுக்கப்பட.. அதிதி அவள் கனவான சொந்த கம்பெனி ஆரம்பிக்கும் ஆசையும் நிறைவேறியது..

தான் எங்கு கல்லூரி மாணவியாக இருந்து  விக்ரமின் உரையைக்கேட்டு உத்வேகம் கொண்டாளோ.. அதே இடத்தில் அவள் சென்று உரையாற்றியது மட்டுமில்லாமல் அங்கே படித்த மாணவர்களை தனது நிறுவனத்திற்காக வேலைக்கு தேர்வு செய்தபோது வாழ்க்கை முழுமை அடைந்ததாக உணர்ந்தாள்..

இப்படியாக முதல் இரு வருடங்கள் ஓடிய பின்..

அதிதி-வசீகரன் திருமணம் நெருங்கிய வட்டம் மட்டுமே பங்கேற்ற ஒரு சிறிய ஆனால் நிறைவான நிகழ்வாக நடந்தது..

விக்ரம்- பவித்ரா இருவரும் புது மணத் தம்பதியினராக முகத்தில் பொலிவுடன் வலம் வந்தனர்.

கல்யாணம் முடிந்து அடுத்த வருடம் அதிதி கர்பமுற..

தம்பதியினர் இருவரும் தங்கள் இரண்டாவது திருமணநாளை அதிதி நிறைமாத கர்பமாக இருக்க போன வாரம் தான் கொண்டாடி முடித்திருந்தனர்..

அதிதி பிரசவநாள் நெருக்கியதால் வீட்டிலிருந்தே வேலை செய்து கொண்டிருந்தாள். ஊரிலிருந்து அவள் அம்மாவும் அவளைப் பார்த்துக்கொள்ள  வந்திருந்தார். இன்று காலை வசீகரன் கம்பெனிக்கு போய் இரண்டு மணி நேரத்தில் அதிதிக்கு பிரசவவலி வந்து மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக ஃபோன் வர இப்போது மருத்துவனைக்கு விரைந்துகொண்டிருந்தனர் மகனும் அப்பாவும்..

அவசரமாக ஆஸ்பிட்டல் ரிசப்ஷனில் விசாரித்து இவர்கள் போய் சேரும் போது

அதிதியின் அம்மா சுதாஷினியும் இவர்கள் வீட்டு காரியதரிசி பாபுவும் வார்டுக்கு வெளியே நின்றிருந்தனர்..

வசீகரனைப்பார்த்ததும்

“மாப்பிள்ள..” என்றவரின் அருகில் சென்று

“என்னாச்சு அத்த.. அதி எப்படி இருக்கா?” என்றான் கவலையுடன்

“டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க.. நல்லாதான் இருந்தா திடீர்ன்னு வலிக்குதுன்னு சொன்னா.. அதான் கூட்டிட்டு வந்தோம்.. இங்க வந்தா பனிக்குடம் உடஞ்சிடுச்சின்னு உடனே ஆட்மின் பண்ணசொல்லிட்டாங்க..” என்றவர் முகமும் பதற்றத்தைக் காட்டியது..

அப்போது டாக்டர் வெளியே வர எல்லோரையும் முந்திக்கொண்டு வசீகரன் அவர் முன் சென்று நின்று

“டாக்டர் அதிதி எப்படி இருக்கா..?” என்றான் அவசரமாக

“பார்த்துட்டு இருக்கோம்.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சி ஆனா வலி இன்னும் கொஞ்சம் வரணும்.. இன்ஜெக்‌ஷன் போட சொல்லியிருக்கேன்.. அவங்க கோஆப்ரேட் பண்றத பொறுத்துதான் எவ்ளோ நேரம் ஆகும்ன்னு சொல்ல முடியும்..” என்றவர் நர்சிடம் எதோ கூறிக்கொண்டே போக..

“அதிதிய பார்க்கலாமா டாக்டர்” என்றான் கவலைஅப்பிய முகத்துடன்..

“பார்க்கலாம்.. முடிஞ்ச வரைக்கும் நார்மல் டெலிவரிக்குதான் ட்ரை பண்ணபோறோம்.. ஃபேமிலில யாராவது ஒருத்தர் கூட இருக்கலாம்.. யார் இருக்கப்போறீங்க?” என்று கேட்க

ஒரு கணம் தயங்காமல் வசீகரன்

“நான் இருக்கேன்..” என்றான்.

“சரி உள்ளபோங்க.. சிஸ்டர் சொல்றமாறி கேட்டுக்கோங்க..” என்றவர் “சிஸ்டர் இவர கூட்டிட்டுப்போங்க..” என்றுவிட்டு செல்ல அவன்  நர்சுடன் சென்று அவர் சொன்னது போல  வார்டுக்குள் செல்லும் முன் அணியும் மேலடை, தலையுறை, மாஸ்க், சப்பல் எல்லாம் அணிந்து கொண்டு, அந்த டெட்டால் வாசம் வீசும் பிரசவ வார்டுக்குள் நுழையும் போதே அதிதியின் “அம்மா..” என்ற கதறலில் அவன் குலை நடுங்கியது.. வேகமாக அவள் அருகில் சென்றவன் “அதி..” என்ற போது அவன் கண்களில் நீர் முட்டியிருந்தது அவள் முகம் தெரியவில்லை என்று இமைகளை அழுந்த மூடி கண்ணீரை வடித்தான்..

அவனைப்பார்த்ததும் உயிர் பெற்றவள் போல் “வசீ..”என்று அவன் கையை இறுகப்பற்றிக்கொண்டாள்.

“ரொம்ப வலிக்குதுடா..” என்றாள்.

அவள் லேபர் பெட்டில் படுத்திருக்க அவளது இடுப்பு வரை திரையிட்டு மறைத்திருந்தனர்.. அவளை சுற்றி நான்கைந்து நர்ஸ்கள் இருந்தனர்..கையில் ட்ரிப்ஸ் இறங்கிக்கொண்டிருந்தது.. பீப் பீப் என்று கத்தும் மானிட்டரில் எதேதோ எண்கள் மாறி மாறி கண்சிமிட்டிக்கொண்டிருந்தது..

நெற்றியில் வியர்த்திருக்க வலியில் சிவந்த முகத்துடன் களைத்துப்போய் இருந்தவளை பார்க்கவே தாங்கவில்லை அவனுக்கு..

“நான் வந்துட்டேன் பயப்படாத..” என்றான் அவனுக்கே இல்லாத தைரியத்தை அவளுக்கு தந்தபடி..

கொஞ்சம் பொறுத்து அடுத்த வலியில் அவள் பெருங்குரலெடுத்து கத்த.. இவனுக்கு பதறியது..

அவள் நெற்றியின் வியர்வையைத் துடைத்தபடி.. “இட்ஸ் ஓகேடா.. ப்ரீத்..ப்ரீத்..” என்றான்..

“என்னால முடியல வசி..” என்றவள் அழுதுவிட்டாள்

அப்போது டாக்டர் உள்ளே வர இவன் “டாக்டர் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்..?” என்று கேட்டான்.

“இது என்ன அடுப்புல வச்சி கிண்டி இறக்குற சமையல் விஷயமா உடனே நடக்க..? குழந்தைப் பிறப்புங்க… அவங்க இடுப்பு இன்னும் கொஞ்சம் விரியனும்..” என்றவர்

“வலிக்கு நடுவுல நல்லா ப்ரீத் அவுட் பண்ணுங்க.. மேல மட்டும் மூச்ச இழுக்காதீங்க..” என்றார்.

இப்படியே இன்னும் அரைமணி நேரம் கழிய..

அவள் அவதிப்படுவதைத் தாங்க முடியாமல்..

“டாக்டர் வேண்டாம் டாக்டர்.. சிசேரியன் பண்ணிடுங்க..” என்றான்.. பதற்றத்தில் குரல் நடுங்க..

அதிதி வலிதாங்காமல் அரை மயக்க நிலையில் இருந்தாள்..

“அப்படிலாம் நம்ம இஷ்டத்துக்கு சிசேரியன் பண்ணமுடியாது சார்.. உங்க ஒயிஃப்க்கு நார்மல் டெலிவரி ஆகிடும் கவலைப்படாதீங்க..

என்றார் டாக்டர்..

இவ்வளவு வேதனை அனுபவிக்கிறாளே.. இதை எப்படி சுகப்பிரசவம் என்கின்றனர் என்று சத்தியமாக அவனுக்குப் புரியவில்லை..

ஒவ்வொரு முறையும் இந்த நரகவதையை அனுபவிப்போம் என்று தெரிந்தும் எதற்காக மீண்டும் குழந்தைப் பெற்று கொள்கிறார்கள் என்றும் வியந்தான்..

அவனுக்கு இதே போதும் என்று இருந்தது.

“அதி இந்த ஒரு குழந்தைப்போதும்டி.. எப்படியாவது கஷ்டபட்டு பெத்துடுடி..” என்று மன்றாடினான்..

“உனக்கு இன்னொரு குழந்தை ஆசை வேற இருக்கா.. இனிமே என்கிட்ட வந்த அவ்ளோதான்..” என்று கடித்தப்பற்களுக்கிடையே அவள் சொல்ல..

அங்கே இருந்த இளம்வயது நர்ஸ் இதைக்கேட்டு நமுட்டு சிரிப்பு சிரிக்க..

“ஏய் என்ன சிரிப்பு.. பல்ஸ் ட்ராப் ஆவுது பாரு. வைட்டல்ஸ் செக் பண்ணு.” என்று அவளைக் கடிந்தார் சீனியர் நர்ஸ் ஒருவர்..

“சார் அவங்க மயங்கிடப்போறாங்க.. அவங்ககிட்ட பேச்சுக் குடுத்துக்கிட்டே இருங்க.. வலி வரும்போது புஷ் பண்ண சொல்லுங்க..” என்றார்  அந்த சீனியர் நர்ஸ்..

இவன் அவள் அருகில் நெருங்கி.. நெற்றியில் விழுந்த அவள் முடியை விலக்கிவிட்டு..

“இங்க பாரு கண்ணம்மா.. இன்னும் கொஞ்சம்தான் நம்ம பாப்பா நம்ம கையில வரப்போகுது.. இன்னும் கொஞ்சம் புஷ் பண்ணுடா..” என்று கெஞ்சினான்..

பளார் என்று அவன் கன்னத்தில் அறை விழுந்தது..

“என்னால முடியலடா.. நீ இங்க வந்து புஷ் பண்ணிப்பாரு தெரியும்..” என்று கத்த.. வசீகரன் செய்வதறியாது விழித்தான்.

அவனைப்பார்த்து பரிதாபப்பட்ட.. அந்த சீனியர் நர்ஸ்

“வலியில அவங்க இப்படி ரியாக்ட் பண்றதெல்லாம் சகஜம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க..” என்றார் ஆறுதலாக..

“அது பரவால்ல சிஸ்டர்.. இவ இப்படித் தவிக்கிறாளே அததான் என்னால  தாங்கமுடியல..” என்றவனின் குரல் உடைந்தது..

“சார் நீங்க கொஞ்சம் வெளிய இருங்க..வேற யாராவது பெரியவங்க இருந்தா வர சொல்லுங்க..” என்று அந்த நர்ஸ் சொல்ல

அவன் போலாமா என்று யோசிப்பதற்குள்..

“வெளிய போன கொன்றுவன்டா உன்ன..” என்றாள் அந்த வலிலும் பல்லைக்கடித்துக்கொண்டு..

“இல்லடா இல்ல.. நான் போல உன்ன விட்டு நான் போகமாட்டேன் கிட்டி..” என்று மீண்டும் அவள் கையைப்பற்றினான்..

அப்போது எலுப்பு முறிந்துவிடுவது போன்ற வலியில் அதிதி அந்த “ஆஆ..” வென்று கத்த..

அந்த டெலிவரி வார்டே அதிர பெருங்குரலெடுத்து அழுதபடி பிறந்தாள் அவர்களின் குட்டி தேவதை..

பெண் குழந்தை என்று அறிவித்தார் டாக்டர்..

சற்று முன் வரை அவ்வளவுதான் தான் பிழைக்கமாட்டோம் என்றே நினைத்துவிட்டாள் அதிதி… அப்படி இருந்த வலியெல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லை.. அவர்களின் செல்ல மகளின் அழுகையைக்கேட்டதும்..

அவள் அம்மா என்று சந்தோஷப்பெருமூச்சுவிட..

பிறந்த மணம் மாறாத பச்சிளம் குழந்தையின் முகம் பார்த்ததும் வசீகரனுக்கு கதறி அழவேண்டும் போல இருந்தது.. இதற்கு இணையான  சந்தோஷ தருணம் வேறு இருக்கமுடியும் என்று தோன்றவில்லை..

அப்படியே குழந்தையை ஒரு துணியில் சுற்றி அன்னையின் முதல் ஸ்பரிசத்திற்காக அப்படியே அவள் மேல் அணைத்தவாறு கிடத்த அந்த கதகதப்பில் அவள் பூரித்துபோனாள்.

இப்பதெரியுது ஏன் குழந்தைப் பெற்றுகொள்கிறார்கள் என்று  என்று நினைத்தான் தன் செல்வமகளின் ரோஜாப்பூ கன்னத்தை வருடியபடி..

வெளியே காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் இளவரசியின் ஜனன செய்தி அறிவிக்கப்பட.. அங்கேயும் ஒரே குதூகலம்தான்…

அதிதியும் குழந்தையும் ரூமுக்கு மாற்றப்பட்டனர்

அதிதியின் அப்பா தம்பி இருவரும் தகவல் கிடைத்ததும் உடனே கிளம்பி வந்திருந்தனர்..

வசீகரனின் பாட்டியும் தனது வீல் சேரிலே வந்திருந்தார்.

வசீகரன் குழந்தையை கொண்டு வந்து தன் தந்தையின் கைகளில் கொடுக்க…

அவர் நடுங்கும் விரல்களில் அந்த பூக்குவியலை கையில் ஏந்தினார்.. அப்படியே அச்சு அசலாக வசீகரனையே உரித்துவைத்தார் போல் இருந்த அந்த குட்டி அதிசயத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப்போனார்..

“சந்த்ரா… நம்ம குலதெய்வம் நம்மவிட்டு போன குலவிளக்கையே திரும்ப குடுத்திருக்குப்பா.. வசீ கண்ணு உங்க அம்மாவே உனக்கு பொண்ணா வந்து பிறந்துருக்கா..” என்றார் கண்கள் கலங்கியபடி..

அதைக்கேட்ட சிவசந்திரன் குமுறி குமுறி அழுதுவிட்டார்..

அப்பாவைப்பார்த்து மகனும் விம்மியழ.. அங்கே ஒரே உணர்ச்சிப் பிரவாகமாக இருந்தது..

அவர்கள் சற்று தேறியதும் அங்கு சூழலை கொஞ்சம் இலகுவாக்குவது போல்..

“மாமா பாப்பாவுக்கு என்ன பேரு வைக்கப்போறீங்க..” என்று கேட்டான் தாய்மாமா அனிருத்.. அவன் இப்போது என்பிபிஎஸ் டாக்டர் ஆகிவிட்டான்.. அடுத்து மேல்படிப்பிற்காக எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தவன்..அக்காமகள் தன் குட்டிப் பஞ்சுப்பொதி விரல்களைக் கொண்டு அவன் ஆள்காட்டிவிரலை கெட்டியாக பற்றிக்கொள்ள அந்த மென் ஸ்பரிசத்தில் மனம் நெகிழ்ந்துபோய்.. குழந்தை நல மருத்துவர் ஆவது என்று முடிவெடுத்திருந்தான்..

“பேருலாம் நட்சத்திரப்படி எழுத்து பார்த்துதானே வைக்கனும்..” என்றார் சுதாஷினி..

அதற்குள் நெட்டில் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரத்தைப் பார்த்திருந்த தனசேகர்

“பாப்பா சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரத்துல பிறந்துருக்கா..” என்றார் பெருமிதத்துடன்..

“அப்பா நீங்க பாப்பான்னதும் என்னை சொல்றீங்கன்னு நினைச்சேன்..” என்றாள் அதிதி பொய்யாக கோபம் காட்டி..

“இனிமே இந்த செல்லம்தான் எனக்கு பாப்பா..” என்று அவர் தனது பேத்தியை

“என் தங்க பாப்பா..” என்று கொஞ்சத் தொடங்கிவிட்டார்..

“சரி நட்சத்திர எழுத்து பார்த்து பேர் வச்சிடலாம்..” என்று சுதாஷினி கூற..

“அம்மா நாங்க பேரு ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்…” என்றாள் அதிதி..

“அதெப்படி நட்சத்திரம் எழுத்துல்லாம் பார்க்க வேண்டாமா?” என்றார் அப்போதும் விடாமல்

“இல்லம்மா நாங்க குடும்ப பேர் வைக்கப்போறோம் அதனால முதல் எழுத்து எஸ்ல தான் வரும்..”

“குடும்பப்பேர் குலதெய்வப் பேர் வைக்கறதுன்னா அப்போ ஜாதகம் பார்க்கத்தேவையில்லை..” என்றார் மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்து..

“என்ன பேரு பாப்பா..?” என்றார் அப்பா

அதிதி ஒருமுறை வசிகரனைப்பார்த்துவிட்டு

“சிவன்யா..” என்றாள்..

சிவன்யா என்று எல்லோரும் ஒருமுறை சொல்லிப்பார்க்க..

“நல்லாதான் இருக்கு..” என்று ஒப்புதல் அளித்தான் அனிருத்..

“அது என்ன பேரு சிவன்யா..?” என்றார் பாட்டி

“நம்ம சாமி சிவனோட ஒரு பாகம்ன்னு அர்த்தம் அப்பாயி” என்றான் பேரன்.

“அன்யா.. அன்னு.. ன்னு கூப்பிடலாம்..” என்று வசீகரன் சொல்ல..

சிவசந்திரன் மட்டும் ‘அனு’ என்று மனதில் உருப்போட்டார்..

சிவன்யா பிறந்து ஒரு வருடம் ஆகிறது இப்பொழுது கொஞ்சம் நடக்க கற்றுக் கொண்டிருக்கிறாள்.

வசீகரனின் ஸ்டடி டேபிளில்  இருந்து  பைல்களை எல்லாம் எடுத்து பிரித்துப் போட்டு விடுகிறாள் என்று பக்கத்து அறையை அலுவலக அறையாக மாற்றியிருந்தான்.

அன்றும் ஒரு மீட்டிங்கை முடித்துவிட்டு அறைக்குள் வந்தவன் அதிதி மட்டும் தனியாக பெட்டில் சாய்ந்து அமர்ந்து ஃபோனை நோண்டிக்கொண்டிருப்பதைப்பார்த்து..

“ஹே பாப்பா எங்கடி..” என்றபடியே உள்ளே வந்தான்.

“உங்கப்பாக்கிட்ட இருக்கா..”என்றாள் மொபைலிலிருந்து பார்வையை விலக்காமல்..

அவள் அருகில் வந்து அமர்ந்தவன்..

“உனக்கென்னப்பா எங்கப்பாட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நீ ஜாலியா இருக்க…எனக்கு தான் இங்க வேலை வச்சி செய்யுது.. இவரு ஆஃபீசுக்கும் வர மாட்டேங்குறாரு.. எல்லாம் நானே பார்க்க வேண்டியதா இருக்கு.. என்று புலம்பினான்.

“நாங்க மட்டும் என்ன சும்மாவா இருக்கோம்.. நாங்களும் ஒரு கம்பெனிய ரன் பண்ணிட்டுதான் இருக்கோம்..” என்று அவள்

சண்டைக்கு தயாராகவும்..

“அம்மாடி நான் சண்டைக்கெல்லாம் ரெடி இல்லைம்மா..”என்று கையெடுத்துக் கும்பிட்டவன்..

“இரு நான் அன்னுவ கூட்டிட்டு வரேன்.. என்று அவன் எழ..

“ கூப்ப்டு.. கூப்ட்டு பாரு..” என்று சந்தரமுகி ரஜினி போல் அதிதி சொல்ல..

“என் பொண்ணு  என்கிட்ட வருவாடி..” என்று காலரை தூக்கிவிட்டுப்போனவன்.. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டுத் திரும்பி வந்தான்..

“என்ன வந்தாளா உன் பொண்ணு..” என்று அவள் ஏளனமாக வினவ

“அவ என்ன திரும்பி கூட பார்க்கல.. தாத்து கூட தான் தூங்குவாளாம்..”

“ஆனாலும் உங்க அப்பா ரொம்ப ஓவரா பண்றாருடா..புதுசா நடை பழகற குழந்தை கீழ விழத்தானே செய்யும்..? இன்னிக்கு அன்யா நடக்கும் போது கீழ விழுந்துட்டாளாம்.. வீடு முழுக்க குஷன் மேட்டிங் போடலாமான்னு கேக்குறாருடா..”

“இது கூட பரவால்ல அதி.. இன்னிக்கு மதியம் ஆஃபீஸ்ல ஒரு ஹை லெவல் மீட்டிங் இருந்தது.. அப்பா வீட்ல இருந்தே ஜாயின் பண்ணாரு.. மீட்டிங் முடிஞ்சதுக்கப்புறம் திரும்ப ஃபோன் பண்ணி

“யப்பா.. எல்லாரும் திரும்ப ஜாயின் பண்ணுங்கப்பா..”ன்னு சொல்றாரு..

ஏன்னு கேட்டா அவரு பேத்தி மீட்டிங் பேசனும்ன்னு சொல்றாளாம்..

நம்ம ஜிஎம், சீனியர் மேனேஜர்லாம் உம்பொண்ணுக்கு ரிப்போட் பண்றாங்கடி..” என்றான் தலையில் அடித்துக்கொண்டு..

“எனக்கு அப்படியே ‘அபியும் நானும்’ படம் பார்க்கற மாதிரி இருக்கு… என்ன இங்க அப்பாவுக்கு பதில தாத்தா..” என்று அலுத்துக்கொண்டாள் அதிதி..

“ஆனா அப்பா இவ்ளோ ஹேப்பியா இருந்து நான் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சி அதி..” என்றான் வசி சீரியஸான குரலில்

“ம்ம் புரியுது.. நானும் அதனாலதான் ஒன்னும் சொல்றதில்ல..” என்றாள் அதிதி.

“நீ கவலப்படாத செல்லம், இந்த பிரச்சனைக்கு ஒரு சொல்யூஷன் இருக்கு.. நமக்கு இன்னொரு பாப்பா வந்தா எல்லாம் சரி ஆகிடும்..” என்றான்.

“வாய்ப்பே இல்ல வசி.. என்னாலல்லாம் இன்னொரு தடவை அந்த வலிய அனுபவிக்க முடியாது..” என்றாள் தீர்மானமாக..

“அடிப்பாவி.. இப்படி சொன்னா எப்படி.. அப்புறம் என் கொள்ளு தாத்தா பேரை நான் யாருக்கு வைக்கறது..?”

“நீயே வேணா உன் பேர மாத்தி வச்சிக்கோ..என்னை ஆளைவிடு..” என்றவள்

அந்தப்பக்கம் திரும்பி படுத்துக்கொள்ள..

இவன் கையைக்கட்டிகொண்டு முகத்தைத் தூக்கிவைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.

அவன் அமைதியாக இருப்பது சந்தேகத்தைக் கிளப்ப..

மெல்ல திரும்பிப்பார்தவள் சட்டென்று சிரித்துவிட்டாள்..

“அச்சோ..என் செல்லதுக்கு கோபம் வந்துடுச்சா..” என்று அவன் தாடையைப்பிடித்து கொஞ்ச.. அவள் கையைத் தட்டிவிட்டான்.

“ உன் பொண்ணுக்கும் உனக்கும் வித்தியாசமே தெரியலடா..” என்றவள்..

கொஞ்சம் யோசிப்பது போல் நடித்துவிட்டு..

“யோசிச்சிப் பார்த்தா இதுவும் ஒரு நல்ல ஐடியாவாதான் இருக்கு.. நம்ம வீட்ல எனக்கு மெஜாரிட்டியே இல்ல.. உன் பொண்ணு என்னை மதிக்கவே மாட்டேங்குறா.. அதனால என் சப்போட்டுக்கு ஒரு ஆள் இருந்தா நல்லாதான் இருக்கும்” என்றாள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடி..

“என்னடி கூட்டணிக்கு ஆள் சேர்க்குற அரசியல்வாதி மாதிரி பேசுற..?”

“என்ன பண்றது குடும்பத்துலயும் அரசியல் பண்ண வேண்டியதா இருக்கே..”

அவளை அருகே இழுத்து அணைத்தபடி..

“எனக்காகல்லாம் சொல்லாத.. உனக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம் கிட்டி..” என்றான்.

“அப்படி இல்ல.. ஆனா இப்ப வேணாம்.. இன்னும் கொஞ்ச நாள் அன்யா மேலதான் முழு கவனமும் இருக்கனும்ன்னு தோணுது.. அவ ஸ்கூல் போகட்டும்..” என்றாள்.

“தங்கள் சித்தம் என் பாக்கியம் தேவி..”

என்று அவன் நாடகபாணியில் சொல்ல..

“போடா லூசு..” என்று அவள் சிரிக்க..அவன் பார்வை மாறியது.. அதன் பொருள் அவளுக்குத் தெரியாதா.. அவள் முகம் குங்கும நிறம் கொள்ள..அவன் மயக்கும் புன்னகையுடன் அவள் முகம் நோக்கி குனிய..

கதவு தட்டப்படும் ஓசையும் அதைத் தொடர்ந்து

“ப்பா..” என்ற மழலைக்குரலும் கேட்டது..

“வந்துட்டா..” என்றவன் எழுந்து போய் கதவைத்திறக்க..

தாத்தாவின் தோளில் சாய்ந்திருந்த குட்டி தேவதை அப்பாவைப்பார்த்ததும்

“ பா..” என்று அவனிடம் தாவினாள்..

“ தூங்கிட்டா திடீர்ன்னு பாதி தூக்காத்துல எந்திரிச்சி அம்மான்னு அழறா.” என்றார் சிவசந்திரன்..

அதைக்கேட்டதும் அதிதி விரைந்து வர.. “ம்மா..” என்று அவளிடம் உடனே தாவி அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் மகள்..

“என்னாச்சி அன்னுக்குட்டிக்கு..” என்று சிணுங்கும் குழந்தையை அணைத்து தட்டிக்கொடுத்து  சமாதானப்படுத்தினாள்..

உடனே குழந்தை சிணுங்கலை நிறுத்திவிட..

“சரிப்பா பார்த்துக்கோங்க” என்றுவிட்டு அவர் செல்ல..

“யார் இருந்தாலும் அவளுக்கு கடைசில அம்மாதான் வேணும்..” என்றவன் குழந்தையின் முதுகை வருடி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அப்படியே தன்னவளைத் தோளோடு அணைக்க..

அதிதி அவள் உலகமே கையில் இருக்க தன் உயிரின் தோளில் தலைசாய்த்துக்கொண்டாள்.

                     முற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!