Skip to content
Post Views: 3,149
*4*
கலவரத்துடன் வண்டியை நிறுத்திவிட்டு எதிரே விழுந்திருந்தவளுக்கு உதவச் சென்றான் வேந்தன். முகிலன் அவளது வண்டியை தூக்கி நிறுத்தினான்.
“சாரி சாரி மேம்…”
குனிந்து தன் உடையைப் பார்த்தவள் தன் உடலை உரசும் எண்ணெய் பிசுக்கில் முகம் சுழித்தாள்.
Advertisement
“இந்த கல்லு சரிஞ்சிட்டு வந்து வண்டியை சரிச்சிவிடும்னு எதிர்பாக்கல. அடி ஒன்னும் இல்லையே? ஹாஸ்பிடல் போலாமா?” படபடத்தான் வேந்தன்.
கையில் ஒட்டியிருந்த பிசுக்கை துப்பட்டா கொண்டு துடைத்தவளோ அங்கு சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணலையும் கப்பிக்கற்களையும் கவனித்து சுற்றும் முற்றும் பார்த்தாள். காலை நேரம் என்பதால் பெரிதாக கூட்டமில்லை. ஓரிருவர் இவர்களை கடந்து சென்றனர்.
“இப்படி வளைவுல கல்லும் மண்ணும் கொட்டுறோமேன்னு சென்ஸ் இல்லை இந்த வீடு கட்டுறவங்களுக்கு… நீங்க என்ன பண்ணுவீங்க. ஸ்கூல் காலேஜ் பீக் டைமிங்கில இந்த வழியா அவ்ளோ பேர் போவாங்க இந்த கல்லுல இடறி விழுந்தா என்ன ஆகுறது?” என்று சொல்லிக்கொண்டே கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்குள் நுழைந்தாள்.
Advertisement
என்னடா இந்த பெண் இப்படி உள்ளே செல்கிறதே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு பின்னோடு தொடர்ந்த வேலனும் முகிலனும் அவளுக்கு பத்திரம் சொல்லிக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பாதி முடிக்கப்பட்ட கட்டடத்தில் ஆள் அரவம் இல்லை. சுற்றி முற்றி அவர்கள் பார்க்கும் போதே அவ்வழியாய் கடந்து சென்ற அத்தெரு வாசிகள் சிலர் வந்து விசாரித்தனர்.
Advertisement
“இவ்ளோ கவனக்குறைவா மெட்டீரியல்ஸை ரோட்ல போடலாமாங்க. இன்னைக்கு நான் விழுந்த மாதிரி சின்ன பசங்க விழுந்தா என்ன ஆகும். கொஞ்சம் அசந்தா லைப் த்ரெடனிங்க. இந்த ஓனர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க.” என்று அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு வேலனை பார்த்தவள், “கேர்புல்லா வண்டி ஓட்டுங்க. நம்ம சரியா இருந்தாலும் சூழ்நிலை சரியா இருக்குறதில்லை.” என்றவள் சிறிய தலையசைப்புடன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
“யார்ரா இந்த பொண்ணு. இடிச்ச வேகத்துக்கு இன்னைக்கு ஒரு பெரிய சீன் இருக்குனு நினைச்சேன். பரவாயில்லை நல்ல பொண்ணு.” என்றான் முகிலன்.
“பொறுப்பா இருக்காங்க. நான்கூட நம்மள ஊரே சேர்ந்து மொத்த போகுதுன்னு நினைச்சேன்.” என்று சொல்லிக்கொண்டே வேந்தன் வண்டியை எடுக்க, வடை போச்சே என்ற ரீதியில் சாலையில் உடைந்து கிடந்த ஊறுகாய் பாட்டில் மூடியை எடுத்து அதன் துணையோடு பொறுத்தி அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டான் முகிலன்.
Advertisement
‘அப்போவே ஊறுகாய், எண்ணெய்ன்னு அம்மா பொறுமுச்சு. அது நினைச்ச மாதிரியே ஆகிப்போச்சு.’ என்று நினைத்துக்கொண்டான் தன் கால்சட்டையில் லேசாக படிந்திருந்த எண்ணெய் பிசுக்கை பார்த்ததும்.
“என்னடி ட்ரெஸ் எல்லாம் அழுக்கா இருக்கு?” பேத்திக்கு பிடிக்குமென பழம் வாங்கச் சென்றவள் கரையுடன் வந்து நிற்க, மகளை ஆராய்ந்தார் பிரபா. அவள் நடந்ததை விளக்க, “இவ்ளோ அவசரமா போ வேண்டாம்னு அப்போவே சொன்னேன் கேட்டியா நீ? அடி படலையே?” அடியெல்லாம் இல்லை என்பது போல் தலையசைத்தவள்,
“இதென்ன வம்பா இருக்கு சுட்டுடும்னு நீ சமைக்காம இருக்கியா என்ன? அதுமாதிரிதான் இதுவும்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “குளிலி குளிலி” என்ற அழைப்பில் திரும்பினாள் குழலி.
உறக்கம் கலையாது சோர்ந்திருந்த விழிகளை லேசாக கசக்கியபடி வந்த அவ்வீட்டின் இளவரசியை தூக்கிக் கொஞ்சினாள் குழலி.
“பனானா வேணும்.” இரவு உறங்கும் முன் கதை சொல்லிய பெரியம்மாவிடம் அக்கதையில் வந்த பழம் வேண்டும் என்று கேட்டதை மறக்காமல் நினைவு வைத்து காலையே கேட்க,
“எல்லாத்தையும் நியாபகம் வச்சிருக்கா இந்த குட்டி. நீ கேட்டேன்னு உன் பெரியம்மா நேரமே அலைஞ்சி வாங்கிட்டு வந்துட்டா. போய் பல் தேய்ச்சிட்டு வந்து சாப்பிடலாம்.” குழலி வாங்கி வந்த பழத்தை காட்டிய பிரபா பேத்தியை தூக்கிக்கொண்டு சென்றார். செல்லும் முன் மகளை குளிக்கச் சொல்லவும் தவறவில்லை.
சிறிது நேரத்தில் குழலி குளித்து வந்து ஆத்யாவுக்கு உணவு செய்ய, பல் துலக்க சேட்டை செய்த பேத்தியை அதட்டி, மிரட்டி கொஞ்சி தூக்கி வந்தார் பிரபா.
குழலியிடம் ஈ என்று பல்லைக்காட்டி பல் தேய்த்துவிட்டதை காண்பித்தவள், “பனானா…” அழகாக கை நீட்டிக் கேட்க, அவளின் மூக்கோடு மூக்கு உரசியவள் ஏதோ சொல்லி கொஞ்சிக்கொண்டே காலை உணவையும் வாழைப்பழத்தையும் எடுத்துச் சென்றாள் குழலி.
இனி அவள் பார்த்துக்கொள்வாள் என்று பிரபா ஏனையோருக்கு உணவு தயாரிப்பில் இறங்க, கலைந்த தலையும் உறக்க கலக்கமுமாக வந்தாள் சந்தியா.
“ஏன்டி சீக்கிரம் எழுந்துட்ட? தூங்கலாம்ல இன்னும் கொஞ்ச நேரம்.” என்ற பிரபாவை கட்டிக்கொள்ள வேண்டும் போல் தோன்ற அவர் மீது சாய்ந்த சந்தியா,
“இங்க வந்தாலே தனிதான்… நிதானமா எழுந்தோமா சோம்பல் முறிச்சோமா கைக்கே வர்ற சாப்பாடை ஒரு கட்டு கட்டுறோமா… ப்பப்பா… உன் அருமை கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தான் தெரியுது அம்மா…” என்று கொஞ்சிக்கொண்டாள்.
“அப்புறம் ஏன் சீக்கிரம் எழுந்தியாம்?”
“ப்ச்… பழக்க தோஷம். பாப்பா எழுந்ததும் எனக்கும் தூக்கம் கலைஞ்சிடுச்சு… ஞாயிறுனு கூட பார்க்காம இதுவே இந்நேரம் அங்க இருந்திருந்தா பரபரன்னு எழுந்து பேருக்கு பல் விலக்கி, பால் வாங்கி எனக்கு காய்ச்சி அதை குடிக்க மறந்து பாப்பாவை பார்த்து அப்புறம் அது ஆடை விழுந்து கடனேனு வீணாக்க மனசில்லாம குடிச்சி மாமியாருக்கு புள்ளைக்கு புருஷனுக்குனு பாத்து கிட்சனை பொறட்டிட்டு இருந்திருப்பேன். அதுலயும் பாத்திரம் கீழ விழற சத்தமோ மிக்ஸி சத்தமோ கேட்டுட்டா போதும் உன் பேத்தி எழுந்துடுவா. அவளையும் பார்த்து ஸ்கூல் டேஸ்ல லன்ச் பேக் பண்ணி அப்பப்பா… சொல்லும்போதே மூச்சு வாங்குது… நேரத்தோட சேர்த்து நானும் ஓடிட்டு இருப்பேன். அம்மா வீடுன்னா அம்மா வீடுதான்… பாப்பாவை பத்தி கவலை இல்லாம இருக்க இங்கதான் முடியுது.” என்றவளை கவலையுடன் பார்த்தார் பிரபா.
“வீட்டு வேலைக்கு ஆள் போட்டுக்கலாம்லடி. எல்லாத்தையும் இழுத்து போட்டு ஏன் உடம்பை கெடுத்துக்குற?”
“நீ வேற ஏம்மா… இதுக்கே பட்ஜெட் நாக்கு தள்ளுது. இதுல ஆளுக்கு வேற சம்பளம் கொடுத்தா கட்டுப்படி ஆகாது.” என்றதும் இன்னும் கவலையாகிப்போனது பெற்றவளுக்கு.
“ம்மாவ் ரொம்ப வருத்தப்படாத. உன்கிட்ட செல்லம் கொஞ்ச எக்ஸ்டரா பிட் போட்டுட்டு இருக்கா இவ… அங்க மாமாவை ட்ரில் எடுக்குறது எங்க வீடு வரைக்கும் கேக்குதுன்னா பாரேன். இவ இங்க வந்ததும்தான் மனுஷன் நிம்மதியா இருப்பாரா இருக்கும்.” என்று வம்பிழுக்க வந்துவிட்டாள் வந்தனா.
“இவளுக்கு என்ன மாசத்துல பாதி நாள் இங்கேயே டேரா போட்டு உன்னை கொஞ்சிக்குறா. எனக்கு அப்படியா?” என உரிமைக்குரல் எழுப்பினாள் சந்தியா.
“ஆமாடி நான் சீராட வரேன் நீ வந்து பங்கு கேளு.” பேச்சில் சலிப்பு தட்டினாலும் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை வந்தனா.
“அம்மாவை சமைக்க விடாம என்னடி பஞ்சாயத்து வைக்குறீங்க ரெண்டு பேரும்?” சத்தம் கேட்டு ஆத்யாவுடன் வந்துவிட்ட குழலி அவர்களின் பேச்சினை தடை செய்திட, அதன்பின் நேரம் போனதே தெரியவில்லை பேச்சு சுவாரசியத்தில்.
மகள்கள் ஓய்ந்துபோய் ஓய்வுக்கு சென்றுவிட்ட பின் குழலியுடன் தனியாய் அமர்ந்திருந்த பிரபா சந்தியாவின் பேச்சினை பகிர்ந்துகொண்டார்.
“கஷ்டப்படுறா போலடி. இதுல இந்த குட்டி வேற சேட்டை பண்ணுவா…”
“அவ வீட்டுக்காரர் பாக்க கறாரா இருந்தாலும் அவளுக்கு ஹெல்ப் பண்றாரு ம்மா. என்ன பெருசா சேமிக்க முடியுற மாதிரி தெரியல. வர்றது செலவுக்கே சரியா இருக்கும் போல. அவ மாமியார் வைத்தியத்துக்கு கணிசமா செலவு பண்ண வேண்டியதிருக்குல. இன்சூரன்ஸ் போட சொல்லி இருக்கேன். பாப்பாக்கு தனியா போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் போட்டிருக்காங்க. அவ வீட்டுக்காரர் டியூஷன் எடுக்குறாரு. தேவையில்லாத செலவையெல்லாம் தானாவே குறைச்சிக்கிட்டாங்க. இப்போ டைட்டா இருந்தாலும் போக போக சமாளிச்சுடுவாங்க. முடியலைன்னா என்ன பண்ணலாம்னு பாக்கலாம் ம்மா…”
பிரபாவின் பார்வை மகளிடம் இருந்தாலும் சிந்தை எங்கேயோ இருக்கக் கண்டவள் அவரை உலுக்கி, “என்ன ம்மா?”
“ஒரு சீட்டு இந்த மாசம் முடியுது. அதை எடுத்து சந்தியாவுக்கு கொடுத்திடவா?”
“கொடுக்கலாம். ஆனா அதுக்கு இப்போ அவசியமில்லை. அவசியமில்லாத நேரத்துல பண்ற உதவி கூட பின்னாடி நமக்கு தடங்களா வந்துடக்கூடாது. நான் சொல்றேன்.” என்றவள் பேச்சினை மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டார் பிரபா.
குடும்பத்தின் வரவு செலவுகள் அனைத்தையும் இருவரும் சேர்த்துப் பார்த்தாலும் இறுதி முடிவென்பதோ குழலியுடையது தான். கட்டுசிட்டாய் இல்லையென்றாலும் பிடிக்க வேண்டியதில் பிடித்து, போட வேண்டியதில் போட்டு கணிசனமான அளவு பணத்தை பெருக்குவதில் குழலியின் பங்கு பெரிது. அதனை கொண்டுதான் மற்ற இருவரின் திருமணமும் குறையின்றி பெரிதான சிக்கல்கள் தட்டுப்பாடுகள் இன்றி நடத்த முடிந்தது. இதுதான் எங்கள் நிலை இவ்வளவுதான் எங்களால் முடியும் என்று அவள் திடமாய் இருந்ததும் அவர்களுக்கு சிக்கலை இழுத்து விடவில்லை. அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு தடங்கல்களை சமாளிப்பவளுக்கு தன் வாழ்வு குறித்த திட்டமில்லையே என்று எப்போதும் போல் கவலை கொண்டார் பிரபா.
மாலை போல காபி குடித்து இலகுவாய் அமர்ந்திருக்கும் நேரம் வந்திறங்கினான் ரிஷி, சந்தியாவின் கணவன். வரவேற்பு படலம் முடிந்து ஆளுக்கு ஒரு இடத்தில் அமைதியாய் அமர்ந்துவிட, ஆத்யாவின் குரல் மட்டும் ஒலித்தது.
மகளிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே மனைவியை பார்த்தவன் கிளம்பலாமா என்பது போல் லேசாக தலையாட்ட, சந்தியாவின் முகம் சுருங்கிப் போனது. கவனித்த வந்தனா, “அடுத்த வீகென்ட் மூவி எதுவும் பிளான் பண்ணலாமா மாமா. ஃப்ரீயா நீங்க?” என்று ரிஷியிடம் கேட்க,
“அக்கா முகம் சுருங்குனதும் இன்ஸ்டன்ட் பிளானா? அமுதன் வர்றாரா?” என வந்தனாவின் கணவனை கேட்டான்.
“நீங்களே சொல்லிட்டீங்களே இன்ஸ்டன்ட்னு. இனி தான் கேக்கணும்.” மெல்லிய சிரிப்போடு சொன்னாள் வந்தனா.
“கேட்டுட்டு சொல்லு. நான் ஃப்ரீ பண்ணிக்குறேன்.” என்றவன் பிரபாவிடம் திரும்பினான்.
“நான் கொண்டு வந்த வரனை வேண்டாம்னுட்டீங்க. வேற எதுவும் அமைஞ்ச மாதிரி தெரியலையே. நான் புடிச்ச பிடியிலிருந்து இறங்க மாட்டேன்னா எதுவும் நடக்காது.” மறைமுகமாக குழலிக்கு கொட்டு வைக்க, அவள் கண்டுகொண்டது போல் காட்டிக்கொள்ளவில்லை.
பிரபாதான் தயக்கத்துடன் மாப்பிள்ளையை பார்த்து வைத்தார், “சின்ன மாப்பிள்ளையும் ஒருத்தரோட விவரம் சொல்லியிருக்காரு. பாக்கலாம் மாப்பிள்ளை.”
“என்ன பாக்குறீங்களோ அப்புறம் வீட்டுக்கு ரெண்டு மாப்பிள்ளைங்க இருந்தும் விட்டுட்டோம்னு பேச்சு வாங்க வைக்காம இருந்தா சரி.” என்றவன் அலட்டாமல் சந்தியாவை பார்க்க, இதற்கு மேல் இவனை பேசவிடாமல் இருப்பதே நலம் என்று உடனே கிளம்பிவிட்டாள்.
ஆத்யாவை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு அவளின் பையை அவனிடம் கொடுக்க, வீட்டு வாயில் தாண்டி வண்டி நிறுத்தியிருந்த இடத்தை நெருங்கி இருந்தார்கள்.
“உன் தங்கச்சி கதை என்ன? ஆறு மாசமா டாக்டர்ட்ட போற மாதிரி இருக்கு. ஒன்னும் ரிசல்ட் இல்லையே?” என்று மனைவியிடம் கேட்டுவைக்க, பின்னோடே ஆத்யாவுக்கென வாங்கி வைத்திருந்ததை கொடுக்க வந்த வந்தனா கேட்டுவிட்டாள். உடன் வந்த குழலி அவள் கையை அழுந்த பற்றிக்கொள்ள, வலியுடனான சிரிப்புடன் அவளது கையை விலக்கிவிட்டு ஆத்யாவிடம் சென்றாள் வந்தனா.
கணவன் கேட்டது தங்கை காதில் விழுந்திருக்கும் என்று புரிந்த சந்தியா பதட்டமாய் பார்க்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்த வந்தனா, “அத்தை பாப்பா கூட ரன்னிங் ரேஸ் விளையாடுறளவுக்கு தெம்பாகிட்டாங்கனு சொன்னா. இனி என் அக்காவை அடிக்கடி இங்க அனுப்பி வைப்பீங்கள்ல?” என ரிஷியிடம் கேட்க, லேசாக முறுவலித்தான்.
“இப்படி சிரிச்சு மழுப்ப கூடாது மாமா. அப்புறம் நான் வந்து அத்தைகிட்டேயே கேப்பேன்.”
“வந்து கேளேன். நீங்க யாரும் தான் வர்றதே இல்லை அங்க.” என்றான் அவனும் குறையாய்.
“வரக்கூடாதுன்னு இல்லை. வேலை சரியா இருக்கு மாமா.” என்றதும் மெளனமாய் தலையசைத்தானே ஒழிய அவர்களை வருந்தி அழைக்கவெல்லாம் இல்லை. சந்தியா விடைபெறுவது போல் தலையசைத்து ரிஷி கையைப் பிடிக்க வண்டியை கிளப்பினான். மூவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப வீட்டினுள் வந்தனர் சகோதரிகள்.
error: Content is protected !!